நுகேகொட குண்டுவெடிப்பில் 16 பேர் பலி
![]() |
![]() |
குண்டு வெடித்த இடம் |
இலங்கையின் தலைநகர் கொழும்பின் தென்புறமாக நுகேகொட பகுதியில் இன்று பிற்பகல் சனநடமாட்டம் மிக்க இடத்தில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் முப்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
சனக்கூட்டம் நிறைந்த புடவைக் கடையொன்றில் இருந்தே இந்தப் பாரிய குண்டு வெடித்துள்ளது.
குண்டு வெடித்ததை அடுத்து அப்பகுதியில் இருந்த வாகனங்கள் சிலவும், கடைகளும் தீப்பற்றிக்கொண்டுள்ளன.
வர்த்தக நிறுவனம் ஒன்றில் காணப்பட்ட சந்தேகத்துக்குரிய பொதி ஒன்றை பாதுகாவலர்கள் அகற்ற முயன்ற போதே அந்தப் பொதி வெடித்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 37 பேர் காயமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகள் மீதே அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த குண்டுத் தாக்குதல்களை அடுத்து கொழும்பு உள்ளடங்கலாக மேல்மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடங்களை திங்கட்கிழமை வரை இலங்கை அரசு மூடியுள்ளது.
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சி
![]() |
![]() |
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா |
கொழும்பு நாரஹேன்பிட்டி இசப்பத்தான மாவத்தையில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின், சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சகவளாகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினைச் சேர்ந்ததாகக் கருத்தப்படும் பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் இன்று காலை நடாத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.
ஈ.பி.டி.பி கட்சி வட்டாரங்களின்படி இன்று புதன்கிழமை அமைச்சர் தேவானந்தா வழமையாக பொதுமக்களைச் சந்திக்கும் தினமாகையால், அங்கு வரும் பொதுமக்களை பாதுகாப்புக் கடமையிலிருந்த அதிகாரிகள் அவர்களைச் சோதனையிடுவது வழக்கம் என்றும், இவ்வாறு அங்கு வந்திருந்த நடுத்தரவயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தியபோது அந்தப் பெண் தான் அணிந்திருந்த தற்கொலை குண்டு அங்கியினை வெடிக்கவைத்ததாகத் தெரியவருகிறது.
![]() |
![]() |
சம்பவம் இடம்பெற்ற அறை |
ஆனாலும், அமைச்சர் தேவானந்தா எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியிருப்பதாகவும், விடுதலைப் புலிகள் அமைப்பினர் அவரைக் கொல்லுவதற்கு எடுத்த மற்றுமொரு முயற்சி பயனின்றித் தோல்வியில் முடிவடைந்திருக்கிறது என்றும் அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்த்தன.
இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புத்துறை வட்டாரங்கள், இந்தச் சம்பவத்தில் இறந்த தற்கொலைப்பெண் ஒரு போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட அங்கவீனமுற்றவர் என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவருவதாகவும், குண்டுவெடிப்பினால் அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி ஸ்டீபன் பீரிஸ் என்பவர் படுகாயமைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் அங்கு மரணமாகியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தரினதும், அமைச்சர் தேவனாந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்பு உறுப்பினர் ஒருவரும் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2004 ஆம் ஆண்டு இதேபோன்றதொரு பாணியிலான பெண் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் முயற்சியிலிருந்து அமைச்சர் தேவானந்த தப்பியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கை நேயர்கள் கவனத்திற்கு
நேயர்களே, நேற்றைய தமிழோசை ஒலிபரப்பில் இலங்கை நேயர்களுக்கு நேரிட்ட சில பிரச்சினைகள் குறித்து விளக்க விரும்புகிறோம்.
நேற்று நவம்பர் 27 ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வலையமைப்பு மூலமாக இலங்கை நேயர்கள் கேட்ட எமது நிகழ்ச்சி, எமது முழுமையான நிகழ்ச்சி அல்ல.
இலங்கை நேயர்கள் கேட்ட அந்த நிகழ்ச்சி, காலதாமதமாக மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது, அது மட்டுமல்லாமல், எங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படாமலும், எமது அனுமதியைப் பெறாமலும், நிகழ்ச்சியின் சில பகுதிகள் வெட்டப்பட்டன. அந்த நிகழ்ச்சி எங்களால் வெட்டப்படவில்லை என்பதை நேயர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
சிற்றலை ஒலிபரப்பு மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் கேட்கும் நேயர்கள் முழுமையாக இந்த நிகழ்ச்சியை கேட்டிருப்பார்கள்.