வாசலில் ஒரு டெம்போ வந்து நிற்க, அதிலிருந்து ஃப்ரிஜ்ஜும் டி.வி.யும் இறக்கப்பட்டதை ப்ருந்தா வேடிக்கை பார்த்தாள். யார் வீட்டிலேயோ புதுப் பணம் வந்திருக்கிறது போலும் என்று எண்ணினாள்.
காதில் பென்சில் வைத்துக் கொண்டிருந்தவன், அவளிடம் வந்து ‘‘மிஸ்டர், ராஜாராம்ங்கறவரு ஃப்ளாட் எதுங்க?’’
‘‘எங்க வீட்டுக்காரர் பேரு ராஜாராம். எதுக்கு கேக்கறீங்க?’’
‘‘ப்ரமிளா ஏஜென்சிஸ்லிருந்து டெலிவரி பண்ண வந்திருக்கோம்.’’
‘‘தப்பா வந்திருக்கிங்க. நாங்க எதும் ஆர்டர் பண்ணலைப்பா.’’
அவன் தன் டெலிவரி சலானை மறுபடி பார்த்தான். செல்போனில் எண்களை ஒத்தினான்.
‘‘பார்ட்டி ஆர்டர் இல்லைங்கறாங்க. கருமாதிங்களா விலாசம் தப்பா?’
‘‘….’’
‘‘பேசுங்க’’ என்று அவளிடம் கொடுத்தான்.
‘‘அம்மா நான் ப்ரமிளா ஏஜென்சிஸ்லிருந்து மேனேஜர் முத்துராகவன் பேசறேன். மிஸ்டர் ராஜாராமன் ஒரு டீலக்ஸ் ஃபேமிலி மாடல் ப்ரிஜ்ஜும், ஒரு 28 இன்ச் டிவியும் ஆர்டர் செய்திருக்கார். நீங்க டெலிவரி நோட்ல கையெழுத்துப் போட்டு பொருளை வாங்கிட்டா போதும். கேயரண்டி கார்டுங்களும் மேன்யுவலும் கொடுப்பாங்க.’’
‘‘இத பாருப்பா! எங்கயோ தப்பு நேர்ந்திருக்கு. நாங்க யாரும் எதும் ஆர்டர் செய்யலை.’’
இதற்குள் ராஜு டூவீலரில் வந்து இறங்கினான். ‘‘இங்க பாருங்க என்னவோ சொல்றான். ஃப்ரிஜ்ஜாம் டி.வி.யாம்’’.
ராஜு அவளைக் கவனிக்காமல், ‘‘ஓ வந்தாச்சா! இந்த வீடுதாம்பா உள்ள கொண்டு போங்க.’’
ப்ருந்தாவுக்குத் திக்கென்றது.
இரண்டு சாதனங்களும் ரொம்ப பெரிசாக இருந்தது.
‘‘பழைய டி.வி.யை இப்பவே எடுத்துக்கிட்டு போயிர்றிங்களா, இடம் இல்லை.’’
அந்தப் பத்துக்குப் பன்னிரண்டு அறையில் ப்ளாஸ்டிக் உறைகளும் தர்மகோல் அட்டைப்பெட்டி எல்லாம் நிறைந்து உட்கார இடம் இல்லாமல் ப்ருந்தாவுக்கு எதும் புரியவில்லை. ஏது காசு இவருக்கு? மாசம் பதினெட்டாயிரத்தில் இருபதாம் தேதி தாண்டவே சிங்கியடிக்கிறதே.
‘‘ஏ.சி எப்பப்பா வரும்?’’
‘‘கோடவுன்ல சொல்லிருக்குங்க.’’
‘‘இதுக்கெல்லாம் பணம் எப்படி வந்தது?’’
‘‘இவாளை முதல்ல கையெழுத்து போட்டுட்டு அனுப்பிச்சுர்றேன்.’’ தாங்கஸ்ப்பா…
‘‘நலுங்காம நசுங்காம கொண்டாந்திருக்கோம். ஏதாவது போட்டுக் கொடுங்க, ரெண்டுபேர் இருக்கோம்.’’
அவளை அடுத்த அறைக்கு அழைத்தான். ‘‘ப்ரு! அம்பது ரூபா இருக்கா?’’
‘‘பத்து ரூபாதான் இருக்கு. காப்பி பொடி வாங்கணும்.’’
‘‘சரி அதைக் குடுத்துடு.’’
‘‘இந்தாங்க காப்பி சாப்பிடுங்க.’’
அவன் ஒரு மாதிரி பார்த்துவிட்டு முகம் இறுகி முணுமுணுத்துக் கொண்டே, ‘‘லட்ச ரூபாய்க்கு பொருள் வாங்குவீங்க. பத்துரூபா தருவீங்களாம்மா…. வச்சுக்கங்க. எச்சக்கையால காக்கா ஓட்டமாட்டீங்க’’ என்று புறப்பட்டான்.
றீ றீ றீ
‘‘என்னங்க இதெல்லாம்?’’
‘‘பாத்தா தெரியலை ஃப்ரிஜ், டீ.வி…’’
‘‘ஏது காசு?’’
‘‘காசா? லோன்மேளா, ப்ரமிளா ஏஜென்சி கூவிக்கூவி, கூப்ட்டு கூப்ட்டு குடுக்கறான். ஒரே ஒரு டோக்கன் பேமெண்ட் வாங்கிண்டு சாலரி சர்டிஃபிகேட் காட்டினா போதும். மாசா மாசம் கட்டி கழிச்சுக் கட்டிருவேன்.’’
‘‘மாசம் எத்தனை?’’
‘‘ஆறாயிரம்… அந்த டிடெய்ல்ஸ் எல்லாம் உனக்கு எதுக்கு?’’
‘‘எப்படிங்க நம்ம சம்பளத்தில் இதெல்லாம் நமக்குத் தேவைதானா? மது ஸ்கூல் பீஸ் கட்டியாகணும்’’
‘‘உனக்கு எதுவுமே தேவையில்லை. தினம் தேங்கா தொவையலும் சீராமிளகு ரசமும் போறும்.’’
‘‘ஆறாயிரம் சம்பளத்தில கழிச்சுட்டா… எப்படி நான் குடித்தனம் நடத்தறது?’’
‘‘பயப்படாதே உனக்கு மாசாமாசம் கொடுக்கற எட்டாயிரத்தைக் குறைக்கமாட்டேன்.’’
‘‘எட்டாயிரமா, பன்னண்டாயிரங்க.’’
‘‘கவலையை விடு. எனக்கு அரியர்ஸ் வரவேண்டியிருக்கு. அப்புறம் உத்தண்டி ப்ராபர்ட்டிக்கு பஞ்சாயத்துல என்ஓசி வந்துட்டா, சுளையா நம்ம ஷேர் முப்பது லட்சமாவது வரும். நம்ம ஸ்டேட்டஸ் எங்கயோ போய்டும்.’’
‘‘ஆமாம். பதினெட்டு வருஷமா வராதது…’’
அவன் முகம் சுருங்கி ‘‘எல்லாத்தையும் நெகட்டிவ்வாவே பார்க்காதே… லைஃப்ல பாசிட்டிவ்வா யோசி. இங்கிலீஷ்ல கில்ஜாய்ம்பா. அது நீதான். எதுக்கெடுத்தாலும் நொள்ளை…’’
அவள் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.
அவன் தொடர்ந்து, ‘‘மனுசனுக்கு மனைவி உற்சாகம் தரணும். நம்பிக்கை தரணும். எல்லாத்தையும் கலைக்கிறதில கெட்டிக்காரி நீ!’’
‘‘இல்லை, கூட்டிக் கழிச்சு பாத்தா கணக்கு சரியாவே வரலையே. எனக்கு நீங்க செய்யற காரியம் வயத்தைக் கலக்கறது.’’
‘‘நாளைக்கு ஏ.சி.காரன் வருவான் க்ரில் போட.’’
மது மரக்கட்டை பேட்டுடன் உள்ளே வந்து ‘‘ஐ! டீ.வி. ஏதுப்பா? அவ்வளவு காசு நம்ம கிட்ட?’’ என்றான்.
‘‘அப்படியே அம்மாவைக் கொண்டிருக்கியேடா. மதுக்கண்ணா உங்கப்பா ஒண்ணும் அத்தனை புவர் இல்லை. முதல்ல இந்த லோகிளாஸ் லொகாலிட்டியை விட்டு ஓடணும். எம்.ஆர்.சி. நகர்ல பெரிய வீடு பாத்துண்டிருக்கேன்.’’
றீ றீ றீ
ராஜாராமன் ஆபிஸ் போயிருந்தான். பெரிய டி.வி.க்கும் குளிர்பெட்டிக்கும் இடம் பண்ணிக் கொடுத்து மிச்சமிருந்த இடத்தில் பிரம்பு நாற்காலி போட்டு மத்யானம் அணில்கள் ஓய்ந்துவிட்ட வேளையில், நடிகை பார்த்துக் கொண்டிருக்க… நாட்டுக்கோழி பிரியாணி செய்வது பற்றி ஒரு கிராம மாது விளக்கிக் கொண்டிருந்தாள்.
மது ‘‘கோழிக்கு வலிக்காதாம்மா?’’ என்று கேட்டான்.
‘‘வலிக்காம கழுத்தை திருகுவா உங்கப்பா மாதிரி.’’ பால்கனியிலிருந்து விளையாடி விட்டு வந்தான். ‘‘அம்மா அந்தாளு இங்கயே பாத்துண்டிருக்கான்ம்மா. அப்பாவைக் கூப்பிடறார்.’’
‘‘யாருப்பா’’ என்றாள் பால்கனியிலிருந்து.
வாட்டசாட்டமாக இருந்தான். காலர் இல்லா சட்டையை மீறி புலிநகம் போட்ட சங்கிலி தெரிந்தது. முழங்கைவரை முறுக்கிவிட்ட புஜத்தில் தாயத்து கட்டிய இடத்தில் தசைநார்கள் பீறிட்டன. மீசை கன்னம்வரை வழிந்திருந்தது. ஜிம்மிலிருந்து வந்தவன் போலத் தோன்றினான்.
‘‘ப்ரமிளா ஏஜென்சிலருந்து வர்றன். உன் புருசன் ராஜாராமனைப் பார்க்கணும்.’’
‘‘ஆபீஸ் போயிருக்காரே!’’
‘‘ஆபீஸ்ல வீட்டுக்குப் போயிருக்கறதா சொன்னாங்க…’’
‘‘இல்லையே ஒரு வேளை வருவாரா இருக்கும்.’’
‘‘சரி காத்துட்டிருக்கேன்.’’
‘‘என்ன விஷயம்?’’
‘‘உன் புருசன் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகியிருக்கு. அதை அவர்கிட்ட காட்டி உடனே ஆபீசுக்கு வந்து கேஷ் கட்டு. இல்லை பொருளை எடுத்துட்டுப் போயிருவோம்னு சொல்லு.’’
‘‘சரிப்பா, அவர் வந்த உடனே சொல்றேன்.’’
‘‘ஒண்ணும் பிரச்னை இல்லை. அரை மணியில மறுபடி வரேன் சொல்லிவை.’’
அவன் போனதும் ராஜு பெட்ரூமிலிருந்து வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டு வந்தான். ‘‘போய்ட்டானா?’’
‘‘நீங்க எப்ப வந்தீங்க? ஆபீஸ் போகலை?’’
‘‘அப்பவே வந்துட்டேனே. கிச்சன்ல பிசியா இருந்தே.’’
‘‘என்னவோ செக்குங்கறான்… பவுன்ஸ்ங்கறான். ஒண்ணும் புரியலை. வேண்டாம் வேண்டாம்னு அடிச்சுண்டேன்’’
‘‘அது ஒண்ணுமில்லை கண்ணு. பன்னண்டு போஸ்ட் டேடட் செக் பன்னண்டாம் தேதி போடுறான்னா, பத்தாம் தேதியே போட்டிருக்கான். பேங்க்ல ஆனர் பண்ணலை போல இருக்கு. இத்தனைக்கும் சேஷாத்ரிகிட்ட சொல்லியிருந்தேன். ஒருவேளை சிக்னேச்சர் மேட்ச் ஆகலையோ என்னவோ… நான் உடனே பேங்க் போய் அதைச் சரி பண்ணிடுவேன். நீ ஒண்ணும் கவலைப்படாதே.’’
ப்ருந்தா அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
றீ றீ றீ
ராஜு மத்யானம் திரும்ப வந்தபோது ‘‘எல்லாம் சரியாய்டுத்து. அவன்கிட்ட போய் சத்தம் போட்டுட்டு வந்தேன். படவா ராஸ்கல்! ரவுடிகளைல்லாம் அனுப்பறயே… என்ன கம்பெனி நீ, கன்சூமர் கோர்ட்ல கேஸ் போட்டுருவேன்னு. அவன் பயந்துண்டு மன்னிப்பு கேட்டு, இனி அந்த மாதிரி நடக்காதுன்னான். ஜாக்கிரதை, ஆர்.ஏ.புரத்தைவிட்டே உன் கடை இல்லாம பண்ணிடுவேன். கபர்தார் என்னை என்னன்னு நினைச்சிண்டிருக்கே பத்மாஷ்னு…’’
‘‘பணம் கொடுத்தாச்சா?’’
‘‘கட்டியாச்சுடி மூதேவி சனியனே!’’
‘‘நவம்பர் 14.
வைதேகியின் பெண் சீமந்தத்துக்கு தங்க வளையலும் ரெட்டை வடசங்கிலியும் எடுத்துக்கொள்ள பீரோவைத் திறந்தபோது, சங்கிலியைக் காணோம். வேலைக்காரியைக் கூப்பிட்டு ‘‘செவலா! நீ வீடு பெருக்கி துடைக்கறப்ப பீரோ திறந்திருந்தது. எதையாவது தெரியாம எடுத்தேன்னா சொல்லிடு’’ என்றாள்.
அவள் தரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள், இத்தனை வருசம் உங்கிட்ட வேலை செய்யறேன். இப்படி ஒரு கேள்வி கேட்டுட்ட பத்தியா? நாங்க ஏளைங்கதாம்மா, திருடங்க இல்லை.’’
‘‘இப்ப நான் என்ன கேட்டுட்டேன். எடுக்கலைன்னா எடுக்கலைன்னு சொல்லிட்டுப் போயேன்.’’
நவம்பர் 15
வேலைக்காரி நின்று விட்டாள்.
ராஜுவிடம் சொன்னபோது, அவளை அப்படி கேட்டிருக்கக் கூடாது, ‘‘நான் ஆர்.ஏ.புரம் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்துர்றேன். சாவியை வேலைக்காரி பார்க்கறமாதிரி கண்ட கண்ட இடத்தில வெக்கக்கூடாது. இது ஒரு பாடம். போனாப் போறது… நா உனக்குப் புதுசு வாங்கித்தரேன்’’ என்றான்.
சாயங்காலம் மது ‘‘அப்பா பீரோ சாவியை அம்மா எங்க வெப்பான்னு கேட்டிண்டிருந்தாம்மா. தலைகாணிக்கு அடிலன்னு சொன்னேன்’’
டிசம்பர் 12
சாயங்காலம் டெலிபோன் ஒலித்தபோதே அதில் மிரட்டல் இருந்தமாதிரி தோன்றியது, ப்ருந்தாவுக்கு. எடுக்கலாமா வேணாமா என்று யோசித்தாள். ராஜு வேறு இல்லை. அடித்து நின்றுவிட்டு உடனே மறுபடி அடிக்கத் தொடங்கியது.
‘‘அலோ.’’
குரலே கன்னத்தில் அறைந்தது. ‘‘என்ன மாதிரி டுபாக்கூர் பார்ட்டிம்மா நீங்க… உன் வீட்டுக்காரரு… இந்த முறையும் செக் பவுன்ஸ் ஆய்டுச்சாம். நீங்க சோறு திங்கறீங்களா, வேற எதாவதா… மானம், வெக்கம், சூடு, சுரணை வேண்டாம்? ஆபீஸ§க்கு போன் போட்டா எடுக்கறதே இல்லை. தபாரு டி.வியையும் ப்ரிஜ்ஜையும் எடுத்துட்டு வரும்படி முதலாளி ஆர்டர். அரைமணியில டெம்போ வரும். ஒயரை எல்லாம் புடுங்கி தயாரா வச்சிரு. காசில்லைன்னா ஏன் பொருள் வாங்கறீங்க? வாயையும்… பொத்திகிட்டு தயிர் சாதம் தின்னுகிட்டு, படுத்துக் கிடக்கிறதுதானே உங்க மாதிரி ஆளுங்கள்ளாம்..’’ ‘சரி உட்டுரு துரைராஜ்’ என்ற மற்றொரு குரல் கேட்க… ‘‘வந்துகிட்டே இருக்கோம்’’ என்று முடித்தான்.
உடம்பெல்லாம் வியர்த்தது. நாக்கு வறண்டு நடுங்கும் விரல்களுடன் ராஜுவுக்குப் போன் செய்தாள்.
‘‘எங்க போய்த் தொலைஞ்சிட்டீங்க..? அவன் பாட்டுக்குப் போன்ல கண்டகண்டபடி திட்டறான். அப்படியே உடம்பெல்லாம் கூசறது. அரைமணில டெம்போ எடுத்துண்டு வரானாம்.’’
‘‘அப்டியா? நீ என்ன பண்றே.. அவா வரதுக்குள்ள கதவைப் பூட்டிண்டு உங்க அக்காவாத்துக்கு போய்டு. நான் அந்த முட்டாள் பசங்களைப் போய் பாத்து ஒண்ணுல ஒண்ணு தீர்த்துட்டுத்தான் மறுகாரியம்.’’
‘‘உடனே வாங்க… எனக்குப் பதர்றது, பயத்தில புடவைல…’’
‘‘எல்லாம் வரேன். நீ கதவைப் பூட்டிண்டு வைதேகி வீட்டுக்குப் போயிடு. என்ன அசடு அசடு! நீ ஒண்ணுத்துக்கும் கவலைப்படாதே. அவனுக்கு ஒரு லாயர் நோட்டீஸ் அனுப்பிருக்கேன். ஃப்ரிஜ் சரியா வேலை செய்யலை. ஐஸ் க்யுப் பார்ம் ஆறதில்லை. டி.வி. க்ளாரிட்டி இல்லை. அதனால பேமெண்டடை நிறுத்தி வச்சிருக்கேன்னு… அப்படியே கதிகலங்கிப் போய்டுவான். ஒரு மசுத்தையும் பிடுங்க முடியாது. என்னன்னு நினைச்சிண்டிருக்கான். ஸ்கவுண்ட்ரல்.’’
‘‘எப்ப வர்றீங்க?’’
‘‘எம்.ஆர்.சி. நகர் போய்ட்டு வந்துர்றேன்.’’
‘‘எம்.ஆர்.சி. நகர்ல என்ன?’’
‘‘சொன்னனே ஒரு புது ஃப்ளாட் பாத்துண்டிருக்கேன். அப்படியே உண்டாய் கம்பெனி ஷோ ரூமுக்குப் போய்ட்டு மத்யானம் உங்கக்கா வீட்டுக்குச் சாப்பிட வந்துர்றேன். பருப்பு உசிலி பண்ணி வைக்கச் சொல்லு. உங்கக்கா நன்னா பண்ணுவா.’’
‘‘உண்டாய் கம்பெனியா?’’
‘‘ஆமாம்… டூவீலர் நம்ம ஸ்டேட்டஸ்க்குச் சரியில்லை. ஒரு கார் வாங்கப் போறேன்’’ என்றான்.