தமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்க முடிவு
தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் உடமைகளை முடக்க முடிவெடுத்துள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.
அந்த அமைப்பு, அமெரிக்காவில் 1997 முதல் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி ஆதரவு மற்றும் இதர கொள்வனவு செய்வதில் ஈடுபட்டதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை முடக்குவதாக அமெரிக்க திறைசேரி அறிவித்ததாக கொழும்பில் அமெரிக்கத் தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
![]() |
![]() |
ரொபர்ட் ஓ பிளேக் |
தமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்கள் அமெரிக்காவில் முடக்கப்பட்டது குறித்து கொழும்பு அமெரிக்கத் தூதர் விளக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பாக செயல்பட்டு அதற்கு ஆதரவாக நிதி சேகரித்ததாக் கூறி அமெரிக்க அரசின் கருவூலத் துறை நேற்று வியாழனன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்காவில் முடக்கி வைப்பதாக அறிவித்தது.
இது தொடர்பில் வெள்ளிக்கிழமையன்று கொழுபிலுள்ள அமெரிக்கத் தூதர் ரொபர்ட் ஓ பிளேக் விரிவான விளக்கத்தினை அளித்துள்ளார்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம், அறக்கட்டளை என்கிற பெயரில் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, அவர்களுக்கு நிதி மற்றும் ஆயுதங்கள் உட்பட இதர கொள்வனவுகளை மேற்கொண்டு வந்தது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என்று கூறினார்.
மேலும் இந்த நடவடிக்கை விடுதலைப் புலிகளுக்கு எதிரானதுதான் என்றும் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்கா, இலங்கையில் தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூக மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய வகையில் முன்னெடுக்கப்படும் நியாயமான சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வுக்கு அனைத்து ஆதரவையும் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இராணுவ வழிமுறைகள் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும் அமெரிக்க திடமாக நம்புகிறது என்றும் கொழுபிலுள்ள அமெரிக்கத் தூதர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்தார்.
இதனிடையே இது குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் திட்ட இயக்குநர் ஜான் கிறிஸ்டி, அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
தமது அமைப்பின் நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படையாகவும், அனைவருக்கும் திருப்தியளிக்கக் கூடிய வகையிலும் உள்ளன என்றும் அவர் கூறினார்.
விடுதலைப்புலிகள் மீது அழுத்தம் கொடுக்கவே தமிழர் புனர்வாழ்வுக்கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது – ஆய்வாளர் கருத்து
![]() |
![]() |
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் |
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது அரசியல், ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியிலான அழுத்தங்களை அதிகரிக்கும் நோக்கிலேயே, தமிழர் புனர்வாழ்வுக்கழக சொத்துக்களை அமெரிக்க அரசு முடக்கியிருப்பதாக கூறுகிறார், இந்திய தலைநகர் புதுதில்லியிலிருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசியவியல் துறை பேராசிரியர் சஹாதேவன் அவர்கள்.
தமிழோசைக்கு அவர் அளித்த ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியில், விடுதலைப்புலிகளை அனைத்து வகைகளிலும் பலவீனப்படுத்தி, பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க வைப்பது என்பதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
அதே வேளை, இலங்கை அரசுக்கான தனது ராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்கும் அமெரிக்க அரசின் அணுகுமுறை என்பது, இலங்கை இனப்பிரச்சினையில் அதன் சமச்சீரற்ற அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகவும் சகாதேவன் கூறினார்.
இதன் காரணமாக, எதிர்காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா உள்ளிட்ட சரவதேச நாடுகளின் சமாதான முன்னெடுப்புகளை விடுதலைப்புலிகள் புறக்கணிக்ககூடிய ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்பாக கட்சித் தாவல்கள் தீவிரமடைகின்றன
![]() |
![]() |
தீவிரமடையும் கட்சித்தாவல்கள் |
இலங்கைப் நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட 2008 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மீது தற்போது நடைபெற்றுவரும் விவாதத்தினைத் தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்காக அது விடப்படவிருக்கிறது.
இதனை எப்படியாவது நிறைவேற்றிவிடவேண்டுமென்று ஆளும் கூட்டணியும், இந்த வரவுசெலவுத்திட்டத்தினை எப்படியாவது தோற்கடித்து அதனூடாக இந்த அரசினை பதவிநீக்கம் செய்யவேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியும், முன்னாள் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவும் தற்போது பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருகின்றார்கள்.
இதன் ஒரு அங்கமாக புதன்கிழமை ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்ஷ சபையில் எதிர்க்கட்சிவரிசையில் வந்து அமர்ந்து, இந்த வரவுசெலவுத்திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, எதிராக வாக்களிக்கப் போவதாகக் கூறியிருக்கின்றார். அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ரட்ணதிலக்க அரசதரப்புக்குத் தாவியிருக்கிறார்.
இவை தொடர்பாக கட்சித்தாவல்களை மேற்கொண்டோர், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களடங்கிய விரிவான செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
வட இலங்கை மோதல்களில் 20 பேர் பலி
![]() |
![]() |
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப்பிரதேசத்தில் உள்ள இராணுவ முன்னரங்க பகுதிகளில், இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் இரு தரப்பிலும் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் முகமாலை முன்னரங்க பகுதியில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை நோக்கி இன்று காலை 5 மணியளவில் முன்னேறிய படையினர், விடுதலைப் புலிகளின் 5 பதுங்கு குழிகளைத் தாக்கி அழித்துள்ளதாகவும், இதன்போது ஏற்பட்ட மோதலில் 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது.
இப்பகுதியில் இராணுவத்தினரின் முன்னரங்க பகுதிக்குள் ஊடுருவ முயன்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
![]() |
![]() |
விடுதலைப்புலிகள் |
வவுனியா, மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப் பிரதேசத்தின் இராணுவ முன்னரங்க பகுதிகளாகிய கள்ளிக்குளம், நரிக்குளம், விளாத்திக்குளம் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
கள்ளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். கண்ணாட்டி என்னுமிடத்தில் விடுதலைப புலிகள் வைத்திருந்த மிதிவெடிகளில் சிக்கிய 4 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டிருக்கிறது.
ஆயினும் இந்த மோதல்கள் மற்றும் இழப்புக்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
வான்வழித் தாக்குதலில் புலிகளின் படகு கட்டுமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது: இலங்கை இராணுவம்
![]() |
![]() |
அழிக்கப்பட்ட முறிகண்டி படகுக் கட்டுமான தளம் |
இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தின் மீது இன்று வெள்ளிக்கழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படகு கட்டுமான நிலையம் அழிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவுக்கு மேற்கே முறிகண்டி பகுதியில் நேர்த்தியான மறைவிடம் ஒன்றில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் படகுக் கட்டுமான தளத்தின் மீதே இந்த விமான குண்டுத் தாக்குதல் காலை 6.30 மணியளவில் நடத்தப்பட்டதாகவும், இங்கு விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினர் படகு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகள், ஏ9 வீதியில் அமைந்துள்ள திருமுறிகண்டி சிற்றூரில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான படகு கட்டுமாண தொழிலகத்தின் மீது இன்று காலை 6.20 மணியளவில் இரண்டு தடவைகள் விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் குண்டுத் தாக்குதல்களை நடத்தி அந்தத் தொழிலகத்தை அழித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், மன்னார் துவரங்கேணி காட்டுப்பகுதியில் மறைந்திருந்த இளைஞன், அப்பகுதியில் தேடுதல் நடத்திய படையினர் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்த முற்பட்டபோது, இன்று காலை 9.30 மணியளவில் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மன்னார் கட்டையடம்பன், தம்பனை, மற்றும் மணலாறு, வடக்கே நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இராணுவ முன்னரங்க பகுதிகளில் வியாழனன்றும் வெள்ளியன்றும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 22 நவம்பர், 2007
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினை தடை செய்தது இலங்கை அரசு
![]() |
![]() |
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு இலங்கையில் தடை |
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருக்கிறார்கள் எனக் குற்றஞ்சாட்டி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினை இலங்கையில் தடை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகம முன்வைத்த ஒரு பிரேரணையின்படியே, அமைச்சரவை இந்த முடிவை எடுத்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
அறக்கட்டளை என்கிற பெயரில் வெளிநாடுகளில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு, அதை புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு போன்ற நடவடிக்கைகளுக்காக அளித்தது தெரியவந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்கிய இலங்கை அரசு, கடந்த வாரம் அமெரிக்கா இந்த அமைப்பின் சொத்துக்களை முடக்க எடுத்த நடவடிக்கையை அடுத்தே அந்த முடிவினை எடுத்துள்ளது.
இந்தத் தடையானது விடுதலைப் புலிகளுக்கு பெரிய பின்னடைவு என்று இலங்கை அரசின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஹுசைன் பைலா அவர்கள் கூறியுள்ளார். மேலும், விடுதலைப் புலிகளுக்கு எந்த அமைப்பாவது எந்த பெயரிலாவது நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அவற்றையும் தடை செய்யுமாறு சர்வதேச சமூகத்திடம் அரசு கோரவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.