Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Tamil Literature’ Category

Request to collectors of Kothamangalam Subbu’s works

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2007

கொத்தமங்கலம் சுப்பு படைப்புகளை வெளியிட குடும்பத்தினர் கோரிக்கை

சென்னை, ஜன. 18: “தில்லானா மோகனாம்பாள்’ உள்ளிட்ட நாவல்களைப் படைத்த கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கவிதைகள், கதைகளைப் புத்தகங்களாகக் கொண்டு வர அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

“”அவரது படைப்புகள் பல கிடைக்கப் பெறாமையால், அப்படைப்புகளைக் கைவசம் வைத்திருப்போர் அனுப்பி உதவ வேண்டும்” என்று கொத்தமங்கலம் சுப்புவின் மகன் கொத்தமங்கலம் விசுவநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

படைப்புகளைத் திரும்பப் பெற விரும்பினால், நகல் எடுத்து திருப்பி அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புகொள்ள:

கொத்தமங்கலம் விசுவநாதன், ஏ2, இரண்டாவது மாடி, கொத்தமங்கலம் சுப்பு இல்லம், புதிய எண் 185 (பழைய எண்: 107), அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 004.

தொலைபேசி: 044- 2811 5817, 2811 6938, செல்பேசி: 98846 61758.

Posted in Ilakkiyam, Kothamangalam Subbu, Kothamankalam Subbu, Request, Tamil Literature, Tamil Story, Tamil Writer, Thillaana Mohanambaal, Thillaana Mohanmbal, Thillana Mohanambal | Leave a Comment »

Kalam opens Kaalachuvadu Literary meet

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

மனித சமூகத்தை மகிழ வைக்கும் அறிவுக் களஞ்சியம் “தமிழ்’- இலக்கிய கருத்தரங்கில் கலாம்

கோவை, டிச. 19: மனித சமுதாயத்தைச் சிறப்புடன் மகிழ வைக்கும் அறிவுக் களஞ்சியம் என்று தமிழுக்குப் புகழாரம் சூட்டினார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

கோவையில் காலச்சுவடு அறக்கட்டளை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் உலகத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் திங்கள்கிழமை தொடக்கி வைத்து அவர் பேசியது:

பாரதியார் 125 ஆண்டுகளாக நம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எழுத்தாளர் புதுமைப்பித்தன் 100 ஆண்டுகளாகவும், சுந்தரராமசாமி 75 ஆண்டுகளாவும் நமது நினைவில் இருக்கின்றனர்.

1910-ல் பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில் “இடையின்றி அணுக்களெலாஞ் சுழலுமென…’ என்ற கவிதையை சரஸ்வதி வந்தனமாகப் பாடுகிறார். இதன் அறிவியல் கருத்து என்னவெனில், “பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. அதேபோல சூரியன், பூமி அனைத்தும் சுழற்சியின் இயக்கத்தில் அண்டசராசரத்தில் சுழன்று கொண்டே இருக்கின்றன. ஓயாது, ஒழியாது இச் சுற்றல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதைப்போல நாமும் ஓயாது, துவளாது முயற்சி செய்தால் இறையருளால் நம்நாடு மிக விரைவில் வளர்ந்த நாடாக உயரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை’ என்பதாகும். ஒரு விஞ்ஞானியைப் போல கவிதை பாடியுள்ளார் பாரதியார்.

பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து பரவிய தமிழ்மொழி இன்னும் புதுமையாக, இளமையாக இருக்கிறது. பல நாடுகளில் தமிழ் மொழி கொழிக்கிறது; பல்வேறு துறைகளில் தமிழர்கள் சிறப்பு பெறுகிறார்கள்; அவர்களின் மொழியன்பு தமிழை மேலும் மேலும் ஜொலிக்க வைக்கிறது.

சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள் என்று இணையதளங்களில் தமிழ் பரிமாணிப்பது புது மகிழ்ச்சியைத் தருகிறது.

தமிழ் ஒரு பிரதேச மக்களின் மொழி மட்டுமில்லை. மனித வாழ்வை மேம்படுத்தி மனித சமுதாயத்தை சிறப்புடன் மகிழ வைக்கும் அறிவுக் களஞ்சியம். இதை நினைவுகூர்ந்து படைப்பாளிகள் தங்களது படைப்புகளைச் செய்தால் உலகுக்கு மிகவும் நன்மை கிடைக்கும் என்றார் கலாம்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறப்புரையாற்றினார். ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, விஞ்ஞானி ஒய்.எஸ்.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Posted in A P J Abdul Kalam, APJ Abdul Kalaam, Coimbatore, Jeyaganthan, Jeyakanthan, Kaalachuvadu, Kalachuvadu, Kovai, Krishna Sweets, Literary, Puthumaipithan, S Kannan, Subhramanya Bharati, Sundara Ramasamy, Tamil, Tamil Literature, Thamizh, YS Rajan | Leave a Comment »

Chief Minister Karunanidhi’s Poem on Murasoli Maran & VaiKo

Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2006

முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கவிதை…

சென்னை, நவ. 28:முதல்வர் கருணாநிதி நேற்று எழுதியுள்ள கவிதை வருமாறு:

மாபெரும் திராவிட இயக்கத் தலைவன் என்பதை மறந்து விடுகிறேன், சிறிது நேரம்! மாண்புமிகு முதலமைச்சர் பதவியையும் துறந்து விடுகிறேன்: இதை எழுதுவது குற்றமென்றால்-எழுதாமல் என்னால் எப்படி இருக்க முடியும்?

விழுதாக வந்தவன் விவேகியாகத் தோன்றியவன்:
பழுதான சொல் ஒன்றும் பகர்ந்திடாத பண்பாளன்- மாறன்!

தொழுதேத்தும் பெரியார், அண்ணா, ராஜாஜி போற்றிய மதிவாணன்!
தோஹா மாநாட்டில் அவன் தொலைநோக்குப் பார்வைதனை
தொல்புவி பாராட்டத் தொடங்கியதை இன்னும் நிறுத்தவில்லை!

என் மடியில் வளர்ந்த பிள்ளை மனத்தில் நிலைத்த கிள்ளை! மாறன்! மாறன்!அந்த வீரனுக்கு இணையாக வருவாய் என்று தான் விழலுக்கு நீர் இறைத்தேன் – வீணாகக் கெட்டொழிந்தாய்- விசுவாசம், அன்பு, நட்பு, நன்றியெல்லாம் வீசை என்ன விலை எனக் கேட்டுத் தாழ்ந்து விட்டாய்!

‘‘மாநிலங்களவை ஆசான்” என்று மாபெரும் அவைதனிலே மாலையிட்டு நீ வணங்கியதெல்லாம் மாய் மாலந்தானா?

மாறனுக்கு ஏன் சிலையென்று மமதையுடன் கேட்கின்றாய்- உன் மண்டையோட்டுக்குள் நன்றியை வைத்துப் படைக்கவில்லையா இயற்கை?

மனப்பாடம் பண்ணி நீ மன்றத்தில் பேசியதெல்லாம் மாறன்
எழுதிக் கொடுத்ததென்று மாநிலங்களவைத் தூண்கள் கூடச் சொல்லுமே!மறந்து போயிற்றா:

மாறனின் கால் பிடித்து, கை பிடித்து, கண்ணீர் வடித்து மாநிலங்களவைக்குச் சென்ற பழைய கதையெல்லாம்? என்ன தகுதி மாறனுக்கு சிலை எழுப்ப என்றா கேட்கின்றாய்?

‘‘மாறன் என்றால் சாமான்யமா?‘‘ எனக் கேட்டாரே அண்ணா – அந்த ஒவ்வொரு எழுத்தும் சொல்லுமப்பா: அவன் பெருமை!

இடத்துக்கு இடம் தவ்விப் பாய்ந்திடும் தவளைக் குணம் உனக்கு:
அவனோ தங்கக் குணம் படைத்தவன் -அதனால் இப்போது கூட உன்னை மன்னித்து விடுவான்

அவன் உனக்கு மாநிலங்களவை ஆசான் அல்லவா? அதனால்!

நன்றி : தினகரன்

Posted in abuse, Dinakaran, Dog, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kavidhai, Kavithai, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maaran, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Murasoli Maran, parliament, Statue, Tamil Literature, Thamizh Kavidhai, Thamizh Poem, VaiGo, VaiKo | Leave a Comment »

Ira Murukan – Kensington Gardens, Indian Kidnappers, Sangitha Kalanidhy

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006

லண்டன் டைரி: லண்டன் இசைவிழா!

இரா. முருகன்

ஒரு பத்து வருடம் முன்னால், நம் ஊரில் பரபரப்பான பகுதியில் ஒரு கிரவுண்ட் இடம் சும்மா கிடந்தால் என்ன நடந்திருக்கும்? சடசடவென்று ஒரு நாலு மாடிக் கட்டடம் உயரும். கேபிள் டிவியின் விளம்பர நச்சரிப்புத் தாங்காமல் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் பந்து மித்திரர்களோடு அங்கே படையெடுப்போம். இருபது சதவிகித வட்டிக்கு பிக்செட் டெபாசிட். மாதம் ரெண்டாயிரம் ரூபாய்க்கு நகைச்சீட்டு என்று ஆரம்பித்துவிட்டு வெள்ளி முலாம் பூசிய வெங்கடாஜலபதி டாலர், காமாட்சி விளக்கு என்று எதையாவது பரிசாகப் பெற்று பெருமையோடு தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேருவோம். அப்புறம் மூன்று வருடம் கழித்து பனகல் பார்க் பெஞ்சில் கூட்டம் போட்டு, போட்ட பணத்தில் முப்பத்திரண்டு சதவீதமாவது கிடைக்க என்ன செய்யலாம் என்று ஆலோசிப்போம். ஒரு கிரவுண்ட் இல்லாமல் இருநூற்றெழுபத்தைந்து ஏக்கர் இப்படிச் சும்மா கிடந்திருந்தால்? அந்த மீட்டிங்கை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடத்த வேண்டியிருக்கும் என்பதைத் தவிர வேறே வித்தியாசம் இருந்திருக்காது.

லண்டனில் ஓர் இருநூற்றெழுப்பத்தைந்து ஏக்கர் செல்வச் செழிப்பு மிகுந்த கென்சிங்டன் பகுதியில் இருநூறு வருடத்துக்கு முன்னால் சும்மா கிடந்தது. அப்போது டிவியும் அதில் விளம்பரமும் இல்லாததாலும், பிரிட்டீஷ் அரச வம்சத்துக்கு இலவச காமாட்சி விளக்கு ஆசை இல்லாத காரணத்தாலும், கென்சிங்டனில் அந்தப் பெரிய நிலப்பரப்பை கொப்பும் குழையும் புல்தரையும் பூச்செடியுமாக மாற்றி, கென்சிங்டன் தோட்டம் என்று பெயர் சூட்டிவிட்டார்கள். ஒரு காலத்தில் இந்தியாவையும் சேர்த்த சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை ஆண்ட விக்டோரியா மகாராணி இந்தத் தோட்டத்தை அடுத்த கென்சிங்டன் அரண்மனையில்தான் பிறந்து வளர்ந்ததாக அறிவிப்புப் பலகை தெரிவிக்கிறது.

கென்சிங்டன் பூங்காவில் இப்படி ஓர் அறிவிப்புப் பலகை கூட விடாமல் படித்துக்கொண்டு நடந்துகொண்டிருக்கிறேன். ஓர் அரை டஜன் மோட்டா சர்தார்ஜிகள் உற்சாகமாகப் பேசிக்கொண்டு, அவ்வப்போது புல்தரையில் குட்டிக்கரணம் அடித்து எழுந்து நின்று முன்னால் நகர்ந்தபடி இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளும் ஒரு பெரிய நாயுமாக வந்த வெள்ளைக்காரத் தம்பதி குழந்தைகளை ஓடக்கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிடுகிறது. அவர்கள் சர்தார்ஜிகளையும் என்னையும் பார்க்கிற பார்வையில் நாங்கள் எல்லோரும் பிள்ளை பிடிக்கிறவர்கள் என்ற பலமான சந்தேகம் தெரிகிறது. குழந்தைகள் அடக்கமாக பூங்கா சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்து சாண்ட்விச் சாப்பிட ஆரம்பிக்க கட்டவிழ்த்து விட்ட அவர்களுடைய நாய் மண்ணில் புரண்டுவிட்டு எதிரில் கால்வாய்க்குள் புகுந்து ஒரு நிமிடம் நீந்தி, திரும்ப ஈரத்தோடு மண்ணில் புரள ஓடிவருகிறது. மேலே விழுந்து பிடுங்குவதுபோல் பாய்ந்த அந்த இங்கிலீஷ் நாயின் பரம்பரையை பஞ்சாப் பாஷையில் திட்டியபடி ஒரு சர்தார்ஜி, நாய்க்கார தம்பதியிடம் நல்ல இங்கிலீஷில் புகார் சொல்கிறார். “நீங்கதான் பாத்து நடக்கணும்’ அந்தம்மா சாண்ட்விச்சில் பாதியை விண்டு நாய்க்குக் கொடுத்துவிட்டு மீதியை வாயில் போட்டுக் கொள்கிறார்.

கென்சிங்டன் பூங்காவில் இருந்து வெளியே வரும்போது பிரம்மாண்டமாக முன்னால் நிற்கிறது ராயல் ஆல்பர்ட் அரங்கம். இறந்துபோன தன் கணவர் ஆல்பர்ட் இளவரசர் நினைவாக விக்டோரியா மகாராணி கட்டியது. இந்திரா காந்தி சர்க்கார் தில்லியில் கவிழ்ந்து அல்பாயுசாக ஜனதா அரசு ஆட்சிக்கு வந்து குஷியாக உள்குத்து நடத்திக் கொண்டிருந்த 1977-ல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய இந்த ராயல் ஆல்பர்ட் ஹாலில் மேற்கத்திய சாஸ்தீரிய சங்கீத நிகழ்ச்சியிலிருந்து, ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட விழா, அரசியல்வாதிகள், அறிவியல் துறை அறிஞர்களின் சொற்பொழிவு என்று எத்தனையோ இந்த நூற்று முப்பது வருடத்தில் நடந்திருக்கிறது. தற்போது வருடா வருடம் பிரிட்டீஷ் ஒலி, ஒளிபரப்பு நிறுவனமான பி.பி.சி கோடைகால இசைவிழாவான ப்ராம் என்ற ப்ரொமனேட் விழா நடத்துகிறது இங்கேதான்.

ப்ரொமனேட் என்றால் நடந்துகொண்டே இசை கேட்கிறது என்று பொருளாம். ஆல்பர்ட் ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடக்கமுடியாது. ஆனாலும் அரங்கத்தில் நின்றபடிக்கு இசை நிகழ்ச்சியை ரசிக்கலாம். ஒருத்தருக்கு ஒரு டிக்கெட்டுக்கு மேல் கண்டிப்பாக வழங்கப்படமாட்டாது.

நீண்ட க்யூவில் நின்று அன்றைய ப்ராம் நிகழச்சிக்கான நுழைவுச்சீட்டுக்காகக் காத்திருக்கிறேன். பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த இசைக்குழு மேற்கத்திய இசைமேதை மோசர்ட்டின் இருநூற்றைம்பதாவது பிறந்த ஆண்டு நிறைவை ஒட்டி முழுக்க மோசர்ட் இசையமைத்த படைப்புகளை வழங்கும் நிகழ்ச்சி. நாலைந்து வெள்ளைக்காரர்கள் சுறுசுறுப்பாக பிளாக்கில் டிக்கெட் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். சாஸ்திரீய சங்கீதத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்பதை முதன்முதலாக ஆச்சரியத்தோடு பார்க்கிறேன்.

பிளாக்கில் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஒயிட்டிலேயே கிடைத்துவிடுகிறது டிக்கெட். ஐந்தே பவுண்ட்தான் செலவு. மூவாயிரம் பேர் நிற்கிற பெரிய அரங்கத்தில் புகுந்து நானும் நின்றபடி மேடையைக் கவனிக்கிறேன். பிபிசி டெலிவிஷன் காமிராக்கள் அவை பக்கம் திரும்பி அழகான வெள்ளைக்காரப் பெண்களைத் தேடிக்கொண்டிருக்க, நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. சாவு நிகழ்ந்தபோது வாசிக்க ஏதுவாக மோசர்ட் எழுதிய மேசானிக் ப்யூனரல் மற்றும் ரெக்யூம் என்ற இரண்டு படைப்புகள் மேடையேற்றப்படும் என்று அறிவிப்பு தொடர்கிறது.

இருபது வயலின், ஏழெட்டு புல்லாங்குழல், டிரம்பெட், வெள்ளைச் சீருடை அணிந்த பத்து பாடகர்கள், அக்கார்டியன், பியானோ என்று மேடை நிறைந்து சோகமயமான இழவு இசையைப் பொழிய இசைக்குழு நடத்துனர் ஆவேசமாகக் கையை இப்படியும் அப்படியும் அசைத்து இன்னும் உற்சாகமோ சோகமோ படுத்துகிறார். என் பக்கத்தில் ரெக்சின் பையைப் காலடியில் வைத்துவிட்டு ஒரு வெள்ளைக்கார முதியவர் இசைக்குறிப்பு எழுதிய புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு இசைக்குழு கூடவே மெல்ல வாய்க்குள் பாடியபடி சங்கீதத்தில் முழ்கியிருக்கிறார்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது, “”தனிப்பாடல் பாடகிகள்லே ரெண்டு பேர் ஸ்ருதி சேராமக் கஷ்டப்படுத்திட்டாங்க. பின்வரிசை ரொம்ப சுமார்தான்” என்றபடி பக்கத்தில் நடந்தவரிடம் சொன்னபடி வந்தவர் கூறியது அட்சரம் பிசகாமல் அடுத்த நாள் கார்டியன் பத்திரிகை இசை விமர்சனத்தில் வந்திருந்தது.

“”போன மாதம் ப்ராம் நிகழ்ச்சிக்கு லண்டனில் கச்சேரி செய்ய வந்திருந்த கர்னாடக சங்கீத வித்துவான் மணக்கால் ரங்கராஜனைக் கூட்டிப் போனேன்” என்று நண்பர் லண்டன் பத்மநாப ஐயர் சொல்கிறார். சென்னை சங்கீத சீசனில் சபா எதிலும் தட்டுப்படாத மணக்கால் லண்டனில் அண்மையில் அவை நிறைந்த இரண்டு கச்சேரி நடத்தி இருக்கிறார் என்பதை அறிந்து இன்னொரு தடவை ஆச்சரியப்படுகிறேன்.

அடுத்த ஆண்டு டிசம்பர் சங்கீத விழாவில் மேலும் ஆச்சரியகரமாக, லண்டன் ப்ராம் போல் பிரெஞ்சி இசைக்குழு சென்னை மியூசிக் அகாதமியில் மோசர்ட் இசை நிகழ்ச்சி நடத்தலாம். அல்லது லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் நித்யஸ்ரீ கச்சேரிக்கு வெள்ளைக்காரர்கள் ப்ளாக்கில் டிக்கெட் விற்கலாம். இது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் ஆச்சரியமாக, அகாதமிக்காரர்கள் மணக்கால் ரங்கராஜனுக்கு சங்கீத கலாநிதி பட்டம் வழங்க முடிவெடுக்கலாம்.

Posted in BBC, Era Murugan, Humor, Ira Murukan, Iraa Murugan, Kensington Gardens, London Diary, London Iyer, Mathalarayar, Mozart, music, Orchestra, Padmanabha Iyer, Performance, Raayarkaapiklub, Sangeetha Kalanithi, Sangitha Kalanidhi, Summer, Symphony, Tamil Literature, Travel Notes, UK | 1 Comment »

Vallikkannan Memoirs – Anjali

Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2006

“நவீன இலக்கிய ரிஷி’

சு. நயினார்

எண்ணத்தையும் எழுத்தையும் உயர்வாகப் போற்றிய வல்லிக்கண்ணன் எழுதுவதும் சொல்வதும் போலவே இறுதிவரை வாழ்ந்தவர். இன்றைய ஆரவாரமிக்க உலகில் ஆடாமல் அமைதியான முறையில் ஓர் எழுத்துப் புரட்சியைத் தோற்றுவித்த படிப்பாளியும் படைப்பாளியுமாவார். இவர் சிரிக்காமல் சிந்தித்து தரமிக்க இலக்கியங்களைத் தமிழுலகிற்கு வழங்கியவர். வல்லிக்கண்ணன் தமிழ் இலக்கிய வகைமைகள் பலவற்றினுள் – வசனகவிதை, புதுக்கவிதை, நாடகம், சிறுகதை, புதினம், வாழ்க்கை, இலக்கிய வரலாறு, இதழியல், மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம், கட்டுரை – தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தடம் பதித்தவர்.

கொள்கை – கோட்பாட்டிலிருந்து விலகாத வல்லிக்கண்ணன் எழுபத்தைந்து ஆண்டுகளாக இலக்கிய வாழ்வை மேற்கொண்ட “நவீன இலக்கியரிஷி’. இவர் மண்ணின் மனத்தைப் படைப்புகளாக்கினார். புதுக்கவிதை முன்னோடிகள் நால்வருள் ஒருவரான வல்லிக்கண்ணன், அறிவாளிகள் எதிர்பார்க்கும் உன்னதமான படைப்புகள் பலப்பல படைத்தவர். பணத்தையும் புகழையும் விரும்பாதவர். பாரதியின் பாடல்களை நாட்டுடைமையாக்குவதில் சமூகப் பொறுப்பாளியாகச் செயல்பட்ட இவரை எந்த இயக்கமும் ஒதுக்கியதில்லை எனலாம்.

இருபதாம் நூற்றாண்டு இலக்கிய மேம்பாட்டிற்கு இவர் செய்திருக்கும் பணி வரலாற்றில் சுட்டத்தக்கன. சாதி, மத, இன உணர்ச்சிக்கு அப்பாற்பட்ட வல்லிக்கண்ணன் எந்தவொரு நச்சு – நசிவு இயக்கத்திற்காக நின்று இயங்கியதும் – இயக்கியதும் இல்லை. இவர் எழுத்துச் செல்வராக இலக்கிய ரிஷியாக, கவிஞராக, சிறுகதை – புதின ஆசிரியராக, கட்டுரையாளராக, விமர்சகராக, இதழாசிரியராக, வரலாற்றாய்வாளராக, ஒப்பீட்டாளராக, மொழி பெயர்ப்பாளராக… பன்முகத் தன்மையில் தமிழ் இலக்கியப் போக்கினை உணர்த்திய விடிவெள்ளி! பேராண்மை மிக்கவர்! நல்ல நினைவாற்றல் மிக்க இவர் சிறு பத்திரிகைகளின் “தகவல் களஞ்சியம்’ எனில் மிகையன்று! ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு எழுதினாரில்லை! நடப்பியல் உண்மைகளை நயமாக எடுத்துக்காட்டவும் இவர் தயங்கினாரில்லை. நான்கு தலைமுறை எழுத்தாளர்களின் நிலைப்பாடுகளுள் “”வல்லிக்கண்ணனின் ஆளுமை வெளிப்பாடும் விலகல் மனோபாவமும்’ பலருக்கு வியப்பளிக்கும்.

இவருக்கு எவற்றினுள் பற்று ஏற்பட்டதோ அவை இவரது வெளிப்பாடாக மலர்ந்தன. புதுமை இலக்கியம் படைக்கும் எழுத்து, இளம் எழுத்தாளர்களை அரவணைப்பது, வரலாற்று நோக்கு (புதுக்கவிதை, சிற்றிதழ், வாசகர், விமர்சகர்கள் உரைநடை), மறுமலர்ச்சிப்போக்கு, எளிமையை விரும்புதல் போல்வனவற்றுடன் மிகுதியான பற்றுக் கொண்டவர்.

வல்லிக்கண்ணனின் பற்றின்மை: விளம்பரப்புகழ், பணம், மது, குடும்பவாழ்வு, அரசியல் சார்பு, மதம், திரையுலக வாழ்வு, ஜனரஞ்சகப் பத்திரிகை போன்றவற்றில் பற்றில்லாமல் விலகி இருந்த நிலை எண்ணற்குரியது; எவரிடத்தும் இத்தனைப் பற்றின்மைகளைக் காண்பதரிது!

பள்ளியிறுதி வகுப்பை முடித்து 1937-ஆம் ஆண்டில் அரசுப் பணியில் சேர்ந்த இவருக்கு எழுத முடியாத சூழல். அவ்வேலையை உதறித் தள்ளிவிட்டு எழுத்தையே வாழ்க்கையாக்கிக் கொண்ட வல்லிக்கண்ணன் ஒருபோதும் பிற்போக்கு இலக்கியவாதிகளின் தாக்கங்களுக்குட்பட்டு பணம் சம்பாதிக்க வேண்டும்; புகழ் பெற வேண்டும்; வசதியாக வாழ வேண்டும் என்று எண்ணியதோ – செயல்பட்டதோ இல்லை. தனிமரமாக நின்ற வல்லிக்கண்ணன் வறுமையிலே உழன்றாலும் செம்மையாக வாழ்ந்தார். இவர் யாரிடமும் கையேந்தாமல் கொள்கைப் பிடிப்புடன் – வைராக்கியத்துடன் வாழ்ந்த இலக்கியப்பித்தன். பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் இவரும் இடம் பெறத்தக்கவராவார். இவரது முதல் பாகச் சுயசரிதம் பலருக்குப் பயனளிக்கும். இராசவல்லிபுரத்தில் 12-11-1920-இல் பிறந்த வல்லிக்கண்ணன் 10-11-2006-இல் இறந்துவிட்டார். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டி, அவரிட்டுச் சென்ற பணியினைத் தொடருவோமாக.

Posted in Anjali, Biosketch, Lifesketch, Memoirs, Tamil Literature, Vallikkannan | Leave a Comment »

‘Oli’ Yuga Chirpi passes away – Anjali

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

காலமானார் கவிஞர் யுகசிற்பி

நாகப்பட்டினம், நவ. 20: கவிஞர் யுகசிற்பி (சுரேந்திரன்) (53) நாகப்பட்டினத்தில் மாரடைப்பால் சனிக்கிழமை இரவு காலமானார்.

  • மின்னல் விதைகள்,
  • ரதி சம்ஹாரம்,
  • எழுதாச் சிலம்பு,
  • காலச்சிறகுகள் ஆகிய கவிதை நூல்களும்
  • உயிர்வேலி சிறுகதை நூலும்,
  • இனி ஒரு விதி செய்வோம்,
  • இந்திய வாழ்க்கையும் ஆன்மிகமும்,
  • தியான பூமி ஆகிய கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் புலமைமிக்கவர். ஆன்மிகப் பொதுவுடைமை சார்ந்த கருத்தியல் கொண்ட “ஒளி‘ என்னும் இதழை நடத்தி வந்தார்.

இவருக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Posted in Anjali, Biosketch, Lifesketch, Memoirs, Oli, Surendiran, Tamil Literature, Thamizh, Yugachirpi | Leave a Comment »

AIADMK presidium chairman Kalimuthu passes away – Biosketch

Posted by Snapjudge மேல் நவம்பர் 8, 2006

முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மரணம்

அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் காளிமுத்து.

அண்ணா காலத்தில் திராவிட இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட இவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியதும் அந்த கட்சியில் இணைந்தார். அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து பணியாற்றி உள்ளார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது இவர் சபாநாயகராக இருந்தார். 2001-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை அவர் இந்த பதவியில் இருந்தார். கடந்த ஆண்டு அவருக்கு திடீரென இருதய கோளாறு ஏற்பட்டது.

இதனால் அவர் இருதய ஆபரேசன் செய்து கொண்டார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு பக்கவாத நோயும் தாக்கியது. இதனால் அவர் கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை.

உடல்நலக்குறைவு காரணமாக அவரால் கட்சிப் பணிகளில் ஈடுபட இயலவில்லை. இதனால் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடவில்லை. சமீபத்தில் அவர் மீது தமிழக அரசு 2 வழக்குகளை தொடர்ந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி காளிமுத்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இன்று அதிகாலை அவர் உடல் நிலை மோசமானது. சிறிது நேரத்தில் காளிமுத்து உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 64.

காளிமுத்துவுக்கு 2 மனைவி, 4 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர்.

காளிமுத்து மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க.வினர் மருத்துவமனைக்குபபபவிரைந்த னர். காலை 9 மணி அளவில் காளிமுத்து உடல் தேனாம் பேட்டையில் உள்ள செனடாப் ரோட்டில் உள்ள வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவர் உடலுக்கு ஏராளமான அ.தி.மு.க.வினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் காளிமுத்து உடல் அண்ணாநகரில் உள்ள வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அவர் மறைவுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெய லலிதா இரங்கல் தெரிவித்துள் ளார்.

ஜெயலலிதா அஞ்சலி

பகல் 12.10 மணிக்கு அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்று காளி முத்து உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஜெய லலிதாவைப்பார்த்ததும் காளிமுத்துவின் மனைவி மனோகரி, மகன்,மகள்கள் கதறி அழுதனர். அவர்களுக்கு ஜெயலலிதா ஆறுதல் கூறினார்.

பின்னர் அங்கிருந்து 12.17 மணிக்கு புறப்பட்டுச் சென்றார். காளிமுத்து உடலுக்கு அஞ்சலி செலுத் தியவர்கள் விவரம் வருமாறு:-

முன்னாள் அமைச்சர் கள்

  • முத்துசாமி,
  • செங்கோட்டை யன்,
  • தம்பித்துரை,
  • ஜெயக் குமார்,
  • தளவாய் சுந்தரம்,
  • செ.ம.வேலுச்சாமி,
  • மது சூதனன்,
  • செம்மலை,
  • கே.பி.அன்பழகன்,
  • சோமசுந்தரம்,
  • முன் னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்,
  • டி.டி. வி.தினகரன் எம்.பி.,
  • சுலோசனாசம்பத்,
  • ஜோதி எம்.பி,
  • கோகுல இந்திரா எம்.பி.,
  • துணைசபாநாயகர், வரகூர் அருணாசலம்,
  • முன்னாள் எம்.பி.க்கள் அன்பழகன்
  • பெரம்பலூர் ராஜரத்தினம்,
  • அ.தி.மு.க. தேர்தல் பிரிவு இணை செயலாளர் பாலகங்கா,
  • எம்.எல்.ஏ.க்கள் எஸ்.வி.சேகர்,
  • திருத்தணி அரி,
  • முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமி,
  • சுகுமார்பாபு,
  • வி.என். சிதம்பரம்,
  • வி.ஜி.சந்தோஷம்,
  • வேட்டவலம் மணிகண்டன்,
  • ஆதிராஜாராம்,
  • நடிகை சி.ஆர்.சரஸ்வதி,
  • நடிகர் குண்டு கல்யாணம்,
  • முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் வை.பழனிச்சாமி,
  • மல்லை சத்யா,
  • கலைப்புலி எஸ்.தாணு
  • வேளச்சேரி மணிமாறன்,
  • மல்லிகா தயாளன்,
  • பட அதிபர் கே.டி.குஞ்சுமோன்,
  • அவ்வை நடராஜன் மற்றும் ஏராளமான அ.தி. மு.க. பிரமுகர்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னதாக தேனாம் பேட்டை வீட்டில் காளிமுத்து உடலுக்கு

  • எம்.எல்.ஏ.க்கள் பதர்சயீத்,
  • கலைராஜன்,
  • செந்த மிழன்,
  • முள்ளான் துணை மேயர் கராத்தே தியாகராஜன்,
  • பழ.நெடுமாறன், ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பகல் 12.45 மணிக்கு காளிமுத்து உடல் ஆம்புலன்ஸ் வேனில் மதுரைக்குகொண்டு செல்லப்பட்டது.

`சிறந்த இலக்கிய- அரசியல் பேச்சாளர்’ காளிமுத்து வாழ்க்கை குறிப்பு

1942-ம் ஆண்டுபபசிவகாசி அருகே உள்ள ராமுதேவன் பட்டியில் காளிமுத்து பிறந்தார். இவரது தந்தை பெயர் காளிமுத்து. தாயார் பெயர் வெள்ளையம்மாள். எம்.ஏ. பி.எச்.டி. வரை படித்து உள்ளார். தனது 13-வது வயதிலேயே காளிமுத்து மேடை பேச்சாளர் ஆனார். பசும் பொன்முத்துராமலிங்க தேவர் இவரது மேடை பேச்சை கேட்டு வியந்ததுடன் இவரை `மேடை மணி’ என்றும் பாராட்டி உள்ளார்.

தமிழக அரசியல் தலைவர்களில் மிகச் சிறந்த இலக் கிய-அரசியல் பேச்சாளர் களில் இவர் தனித்துவம் பெற்றவராக திகழ்ந்தார்.

100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 10-க்கும் மேற் பட்ட புத்தகங்களையும் காளிமுத்து எழுதி உள்ளார். 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியல் சட்ட நகலை எரித்த தால் கைதானார். மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை சிறைகளில் இருந்தார்.

1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுஎம்.எல்.ஏ. ஆனார். 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவை தொடங்கியபோது காளிமுத்துவும் அதி.மு.க.வில்பபசேர்ந்தார்.

1977, 1980 ஆகிய ஆண்டு களில் நடந்த தேர்தலில் திருப் பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984-ம் ஆண்டு மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆனார். 1989-ம் ஆண்டு சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

அமைச்சர்

1977 முதல் 1980 வரை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சராகவும், 1980 முதல் 1984 வரை விவசாய துறை அமைச்சராகவும், 1984 முதல் 1987 வரை விவசாயம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகவும் இருந்தார்.

அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராகவும் பதவி வகித்த காளிமுத்து கடந்த 2001-ம் ஆண்டு திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.

இதையடுத்து அவர் சபா நயாகராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது அவர் வகித்து வந்த கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 2006 சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதி யில் அ.தி.மு.க. வேட்பாள ராக காளிமுத்து அறிவிக்கப் பட்டார். ஆனால் உடல் நலக்குறைவு காரண மாக அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.பின்னர் அ.தி.மு.க. அவைத் தலைவ ராக காளிமுத்து இருந்து வந்தார்.

காளிமுத்துவுக்கு பொன் பாண்டி, குமாரவேல், ரவிச்சந்திரன், நல்லதம்பி, வீரபாண்டி என்ற 5 சகோதரர்களும், வாணி என்ற சகோதரியும் உள்ளனர்.

காளிமுத்துவின் முதல் மனைவி நிர்மலா. அவர்களுக்கு டேவிட் அண்ணாத்துரை, ராஜன் என்ற மகன்களும், புனிதா, ரோஷி, வேதா என்ற மகள்களும் உள்ளனர்.

2-வது மனைவி மனோகரி. இவர்களுக்கு மணிகண்டன், அருள்மொழிதேவன் என்ற மகன்களும், அருணா, கயல் விழி என்ற மகள்களும் உள் ளனர். கயல்விழிக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது.

Posted in ADMK, AIADMK, Apollo hospital, Assembly, Biosketch, chairman, general secretary, Jayalalitha, K Kalimuthu, Lok Sabha, Madurai Central, MGR, Sivakasi, Speaker, Tamil Literature, Tamil Nadu, Thirupparankunram | 2 Comments »

Jeyamohan’s Kaadu – Review by Re Karthigesu in Marathadi

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2006

காடு

தமிழ்ப் புத்திலக்கிய வரலாற்றில் ஜெயமோகனின் பெயர் நின்று நிலைக்கும் என்பதை இந்தக் கட்டுரையின் ஆதியிலேயே நான் சொல்லிவிட விரும்புகிறேன். “காடு” என்ற அவரின் நாவலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் வேதசகாய குமார் அவரை “தமிழில் ராட்சசக் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது” என வருணித்திருக்கிறார். இது ஒப்புக்கொள்ளக் கூடியதே.

இதன் முதல் காரணம் 2003இல் மட்டுமே தீவிர இலக்கியத்தில் தீவிரமாக இருக்கும் இந்த எழுத்தாளாரின் முக்கிய நாவல்கள் இரண்டு வெளியாகியுள்ளன. இரண்டும் மிகுந்த உழைப்பைக் கொண்டு, தங்கள் கருப்பொருளுக்கேற்ப விவரணைகளை அள்ளிக் கொடுக்கின்றன. அதே ஆண்டில் 5 திறனாய்வு நூல்களையும் பதிப்பித்துள்ளார். இளைஞரான இவர்பைதுவரை ரப்பர் என்னும் நாவல் தொடங்கி, விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல்கள், கன்னியாகுமரி, காடு, ஏழாம் உலகம் ஆகிய நாவல்களை எழுதியிருப்பதுடன் கொற்றவை என்ற காப்பிய வடிவிலான நாவல் ஒன்றையும் எழுதியுள்ளார். இவை அனைத்துமே புதுத்தமிழ் இலக்கிய இதழ்களாலும் விமர்சகர்களாலும் அணுக்கமாக விமர்சிக்கப்பட்ட நாவல்கள்.

இப்படி எழுதிக் குவிப்பதினாலேயே இவர் சிறந்த எழுத்தாளர் என்று அர்த்தமாகி விடாது. மாத நாவல்கள் எழுதுவோரும், கால வாரி இதழ்களுக்கு எழுதுவோரும் இவரை விட அதிகமாக எழுதிக் குவிக்கிறார்கள். ஆனால் ஜெயமோகனின் எழுத்துக்கள் வணிக லாப நோக்கம் சற்றும் இல்லாத, வாசகனைப் பற்றி அநேகமாக கவலைப் படாத தூய இலக்கிய வடிவங்கள். அதோடு புதிய, தரமான இலக்கியம் என்பது பற்றிய பிரக்ஞை அவருக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. எழுத்தாளன் என்பதில் பெருமிதமும் விமர்சனங்களைப் பற்றிக் கவலை கொள்ளாத  கர்வமும் உண்டு. இதனாலேயே இவருடைய விமர்சனங்களிலும் மூர்க்கத்தனம் தெரிந்து எழுத்தாளர்களைப் பெரிதும் எரிச்சல் படுத்தியிருக்கிறது. அண்மையில் மலேசியாவில் இவரைக் கண்டவர்கள் இதனை நேரில் அறிந்திருப்பார்கள்.

காடு 474 பக்கங்கள் கொண்ட பெரும் நாவல். காடுகள் பற்றி சில நாவல்கள் தமிழில் உண்டு. காட்டை அழிப்பதைப்பற்றிய சா. கந்தசாமியின் சாயாவனம் அதில் முக்கியமானது. அதில் கத்தநாயகன் காட்டை வெல்கிறான். ஆனால் ஜெயமோகனின் இந்த நாவலில் காடே கதாநாயக அந்தஸ்து பெற்று அனைத்தையும் வெல்கிறது.

நாவலின் எல்லாப் பக்கங்களிலும் நாம் காட்டைச் சந்திக்கிறோம். அதன் மரங்கள், பூச்சிகள், விலங்குகள், மழை, நீரோடைகள், காய்ந்த சருகுகள், மலைகள், பள்ளங்கள், காடுவாழ் மக்கள், அவர்களின் தெய்வங்கள் என அனைத்தும் பார்க்கிறோம். மொத்ததில் காடு அதன் மர்மம், கொடுமை, ஆக்கினை, வீரியம் ஆகிய அனைத்துடனும் சித்தரிக்கப் படுகிறது.

இந்தக் காடு தமிழ்நாட்டு மலையாள எல்லையில் உள்ளது. அதன் மக்கள் அதிக மலையாளம் கலந்த ஒரு மொழி பேசுகிறார்கள். அதில் ஒரு 30 முதல் 40 விழுக்காட்டுச் சொற்கள் எனக்குப் புரியவில்லை. இருந்தும் வாசகப் பயணத்தை அது தடை செய்யவில்லை. கிரிதரன் என்ற ஒரு நாயகன் இருக்கிறான். காட்டில் சாலை அமைக்கும் காண்டிராக்டரிடம் வேலை செய்கிறான். காட்டிலேயே முகாம் அடித்து வாழ்கிறான். அந்த மக்களோடு பழகி ஒரு மலைப் பெண்ணைக் காதலிக்கவும் செய்கிறான்.

ஆனால் ஜெயமோகன் தனது எந்த நாவலிலும் தனது தலைமைப் பாத்திரங்கள் மேல் கருணை உள்ளவர் அல்ல. ஆகவே அந்தக் காதல் ஒன்றுமில்லாமல் போவது மட்டுமன்றி கிரியின் இறுதி நாளில் அவன் பெண்டாட்டியை அடித்து, பிள்ளையால் ஒதுக்கப்பட்டு, சுருட்டுப் பிடித்துக்கொண்டு தனிமையில் வாழும் இயலாமையில்தான் முடிக்கிறார்.

கதையின் செறிவான நிகழ்வுகள் வாசகன் முன்னறிந்து சொல்ல முடியாத திசைகளுக்குள் செல்கின்றன. எப்படி நமது அன்றாட வாழ்விலும் அடுத்து என்ன நடக்கும் என்று சொல்ல முடியாமல் இருக்கிறதோ, அப்படியே இவர் கற்பித்துக் கொண்ட கதயையும் செலுத்துகிறார். இதனால் கதையில் எப்பொழுதும் சோர்வில்லாத திருப்பங்கள் தோன்றிக்கொண்டே உள்ளன.

ஆனாலும் இந்த நாவலில் அவனுடைய இந்த வாழ்வு என்பது முக்கியமானது போல் நமக்குத் தோன்றவில்லை. நாவல் கிரிதரன் பற்றியதல்ல. அவனைச் சுற்றியும் அவன் மனசுக்குள்ளும் காடு நடத்தும் விளையாட்டுக்களே இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

காடு பற்றிய இவ்வளவு விவரணைகளைத் தான் தர முடிந்ததற்கு காட்டுத் துறை வல்லுநர் தியோடோர் பாஸ்கரன் தந்த விளக்கங்கள் உதவியதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் கொஞ்சம் சொந்த அனுபவமில்லாமல் இவ்வளவு எழுதி வாசகனையும் அந்தக் காட்டின் அனுபவங்களில் தோய்த்தெடுப்பது முடியாது.

இந்தக் கதையில் ஒரு சிறப்பு அம்சமாக ஒரு காட்டுத் துறை மேலாளரைப் படைத்து அவரை சங்க இலக்கியங்களில் விருப்பமுள்ளவராக்கி சங்க இலக்கிய விருந்தையும் படைத்திருக்கிறார். இடையிடையே கூடுதல் சுவை கூட்டுவனவாகவை அமைகின்றன.

இந்த நாவலைக் கையிலெடுக்கும் வாசகர்கள் இன்னும் இரு சுவைகளுக்கும் தயாராக இருக்க வேண்டும். அதில் ஒன்று காமம். மற்றொன்று நகைச்சுவை. இரண்டும் வலிந்து தரப்படாமல் கதையோடு இணைந்து ஒத்திசைவாகவே வருகின்றன.

காடு தமிழுக்குத் தரப்பட்ட அரிய கொடைதான். புத்திலக்கியம் படைக்க தமிழ் மொழியை எப்படி மிகுந்த நெகிழ்ச்சியோடு கையாளலாம் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

Posted in Ilakkiyam, Jeyamohan, Kaadu, Kadu, Marathadi, Maraththadi, Novel, Re Karthigesu, ReKa, review, Tamil, Tamil Literature, Yahoo Group | 2 Comments »