தமிழ் மென்பொருள்: தேவை உறுதியான நடவடிக்கை
ஜீ.முருகன்
எல்லாத் துறைகளும் கணினி மயமாகிக் கொண்டிருக்கிற இன்றைய சூழ்நிலையிலும் தமிழ் மென்பொருள் குறித்துத் தெளிவான முடிவுகள் எட்டப்படாதது பெரும் பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் இதனால் காலவிரயமும் பணவிரயமும் ஏற்படுகின்றன. கோப்புப் பரிமாற்றங்களில் குழப்பங்கள் நிலவுகின்றன.
எல்லா அரசு அலுவலகங்களும் ஒரே மென்பொருளைப் பயன்படுத்தினால் இப்படிப்பட்ட குழப்பங்கள் ஏற்படாது. ஆனால் அரசு இதுவரை இந்த விஷயத்தில் உறுதியான முடிவுகள் எதையும் எடுக்காதது வியப்பாக உள்ளது.
10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தமிழ் மென்பொருள்கள் இன்று புழக்கத்தில் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களுகென்று தனிவகையான எழுத்துருக்களையும் (Fonts) உருவாக்கி வைத்திருக்கின்றன. ஒன்றை ஒன்று பதிலீடு செய்ய முடியாத வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. Old Typewriter, New Typewriter, Phonetic, Translitration, Tamil 99 என 5 வகையான தட்டச்சு முறைகள் பயன்பாட்டில் உள்ளன.
தமிழ் மென்பொருள் ஆர்வலர்களும் அரசும் பல மாநாடுகளை நடத்தி சில முடிவுகள் எட்டப்பட்டிருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதில் பொதுத்தன்மை இன்னும் உருவாகவில்லை. TAM, TAB வகை எழுத்துருக்கள் இந்த முயற்சியில் உருவானவைதான்.
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள “தமிழ் மென்பொருள் கருவிகள்’ என்ற இலவச சிடியில் இதற்கான முயற்சி தெரிந்தாலும் தெளிவான அணுகுமுறை இதில் பின்பற்றப்படவில்லை. சில நிறுவனங்கள் கொடுத்த மென்பொருள்கள் கலவையாகச் சேர்த்து நிரப்பப்பட்டுள்ளன, அவ்வளவுதான்.
- இந்தத் துறையில் சிறந்த நிபுணர்களை வைத்து அதை எளிமையாக ஒழுங்குபடுத்தியிருக்கலாம்.
- தரமான சில எழுத்துருக்களை மட்டும் தேர்ந்தெடுத்து எல்லா அரசு அலுவலகங்களும் இவற்றையே பயன்படுத்தவேண்டும் என்று கட்டாயமாக்கியிருக்கலாம்.
இந்த முயற்சிகளை எடுக்காததால் அது வெளியிடப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறாமலேயே போய்விட்டது.
இணையதளங்களில் தமிழைப் பயன்படுத்தும் முயற்சிகள் இதுபோன்றே இன்னும் குழப்ப நிலையில் உள்ளன. சமீபத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எல்லா பல்கலைக்கழகங்களையும் இணையதளத்தில் இணைக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் இதை எப்படி நிறைவேற்றுவது?
“கன்வர்ட்டர்’ என்ற முறை இப்போது இந்தப் பிரச்சினைகளை தீர்த்து வைத்தாலும் இது தலையைச் சுற்றி காதைத் தொடுவதற்கு ஒப்பானதே. காலவிரயத்திற்கே இட்டுச்செல்லக்கூடியவை. மேலும் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இப்போது அரசாங்க அலுவலகங்களில் ஒரு நிறுவனத்தின் எழுத்துருவை மட்டும் பயன்படுத்தும் முறை வழக்கத்தில் உள்ளது. இதற்காக ஒவ்வோர் அலுவலகமும் அந்த நிறுவனத்திடம் சில ஆயிரங்களைக் கொடுத்து அந்த மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன. அரசாங்கமே இலவசமாக இப்படிப்பட்ட மென்பொருளை உருவாக்கித் தந்தால் இப்பிரச்சினையை தீர்த்துவிட முடியும். ஆங்கில எழுத்துருக்கள் இலவசமாகக் கிடைக்கும்போது தமிழ் எழுத்துருக்களை மட்டும் ஏன் விலைகொடுத்து மக்கள் வாங்கவேண்டும்? அதிலும் அரசாங்க அலுவலகங்கள்!
Windows, linux, Unix போன்ற ஆப்ரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கக்கூடிய வகையில் ஒரு மென்பொருளை அரசாங்கமே தயாரித்து ஏன் இலவசமாகவே தரக்கூடாது? அதை எல்லா அரசாங்க அலுவலகங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்று ஏன் ஆணை பிறபிக்கக்கூடாது?
சமீபத்தில் நடந்த ஒரு மாநாட்டில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இன்றைய கணினி யுகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் 16 bit தமிழ் மென்பொருள் ஒன்றை உருவாக்கும் முயற்சி நடப்பதாக அறிவித்திருக்கிறார். அதைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரும்போது அது பெரும்பாலான மக்களுக்குப் போய்சேரும்படியும், அரசு அலுவலகங்களில் கோப்புப் பரிமாற்றங்களை எளிதாக்கும்படியும் பார்த்துக்கொள்வது நல்லது.