Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Taiwan’ Category

Worldwide tentacles of the nexus between Politics, Bribery & Corruption

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2007

லஞ்சத்தில் சிக்கிய தலைவர்கள்

டி. புருஷோத்தமன்
“மக்கள் பணியே மகேசன் பணி’ என்கின்ற நிலைமாறி “பணம் குவிப்பதே குறிக்கோள்’ என்ற பேராசைக்கு அடிமையாகிவிட்டனர் பெரும்பாலான அரசியல்வாதிகள்.

கட்சியை வழிநடத்தவும் அபரிமிதமான தேர்தல் செலவை ஈடுகட்டவும் பதவிபோனாலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவும் கோடிக்கணக்கில் பணம் தேவை என்பதில் அரசியல் தலைவர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த பேராசைதான் லஞ்சஊழலுக்கு அடித்தளமாக அமைகிறது.

சாதாரண அரசியல்வாதிகளில் இருந்து கட்சித் தலைவர்கள் வரை இருந்த லஞ்சஊழல் படிப்படியாக அமைச்சர்கள் அளவிலும் பின்னர் முதல்வர்கள் என்ற நிலைக்கும் முன்னேறியது.

இதன் உச்சகட்டமாக பிரதமர், அதிபர் போன்றோரும் லஞ்சலாவண்யத்தில் சிக்குவது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. லஞ்சமும் ஊழலும் செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளில்தான் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களை முன்னேற்ற வேண்டிய அந்நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் சொந்த நலனில் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிடுகின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம்.

பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. நாடு சுபிட்சம் அடைந்து நாமும் வளம் பெறுவோம் என வங்கதேச மக்கள் கண்ட கனவு பொய்யாகிவிட்டது.

அந்நாட்டின் அதிபராக இருந்த எர்ஷாத் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஊழல் விவகாரங்களிலும் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலத்தில் இரு சரக்கு முனையங்களைக் கட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் அளிக்க கோடிக்கணக்கில் அவர் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக அவருடைய இரு மகன்கள் அராபத் ரஹ்மானும் தாரிக் ரஹ்மானும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காலிதா ஜியாவின் குடும்பமே ஊழலில் சிக்கித் திளைத்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வங்கதேசத்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் லஞ்ச விவகாத்தில் சளைத்தவர் அல்ல என்பதை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அறிந்துகொள்ளலாம். இரு தொழில் அதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதற்காக அவர் பெற்ற லஞ்சம் ரூ. 6 கோடி.

ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் அரசியல் எதிரிகளை கொலைசெய்யவும் அவர் தயங்கவில்லை. நான்கு எதிரிகளை அவர் படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வங்கதேச உள்துறை அமைச்சராக இருந்த முகம்மது நசீம் என்பவர் தனது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வருமானத்துக்கு முரணான வகையில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தையும் அந்நாட்டு அரசு பறிமுதல் செய்துவிட்டது.

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷிண் சினவத்ராவும் அவர் மனைவியும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். நிலபேர விவகாரத்தில் அவர்கள் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு முறைகேடாக அவர்கள் வாங்கியிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள 14 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என அந்நாட்டு அரசுக்கு அட்டார்னி ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.

தைவான் நாட்டின் முன்னாள் அதிபர் சென்னும் அவருடைய மனைவியும் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை அவர்கள் சூறையாடியதாக தைவான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நான்கு தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் என்ற பெயரில் பணத்தை தனது கட்சிக்கு லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மற்றும் அவருடைய கணவர் ஜர்தாரி ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான். சுவிஸ் வங்களில் கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தை மறைத்து வைத்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜர்தானி மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு லஞ்ச வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் நாடு கடத்தப்பட்டார். பலமுறை முயன்றும் அவர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்லை. இறுதியாக தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.

இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்தோ ஊழலில் திளைத்தவர். ஏழை நாடு என்ற சிந்தனை ஏதுமில்லாமல் மக்களைச் சுரண்டி, சுகபோக வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை சூறையாடினார்.

பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஊழல் புரிவதில் சாதனை படைத்தவர். 20 ஆண்டு பதவிக்காலத்தில் அவர் சுருட்டிய பணத்தின் மதிப்பு ரூ. 4,000 கோடியாகும். என்னே அவருடைய மக்கள் சேவை! அவர் மனைவி இமெல்டா விலைமதிப்புள்ள மூவாயிரம் ஜோடி செருப்புகளை வைத்திருந்தவர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெர்டினண்ட் மார்க்கோஸýக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர்களும் பிரதமர்களும்தான் இப்படி என்றால் ராணுவ ஆட்சியாளர்களின் செயல்பாடு அதைவிட மோசம் என்றே கூறலாம். மியான்மர் நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் கோரி கிளர்ச்சி நடத்திய மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினர்.

இராக் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் எண்ணெய்க்கு உணவு பேரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.

மக்கள் நலனை மறந்து ஆடம்பர மாளிகையில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த சதாமை அமெரிக்கா தூக்கிலிட்டு கொன்றுவிட்டது.

எனவே, மன்னராட்சி, மக்களாட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என எந்த ஆட்சியானாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமும் ஊழலும் என்ற நிலை உருவாகி விட்டது.

மக்களைக் காக்க வேண்டிய மன்னர்களும், அதிபர்களும், பிரதமர்களும், சர்வாதிகாரிகளும் லஞ்ச ஊழலில் திளைத்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.

—————————————————————————————————————————–
லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?

இரா. சோமசுந்தரம்

திருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே, திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் என்ற செய்தி!

இந்த நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, இதற்கெல்லாம் மேலான ஓர் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதாவது: “”அட, எல்லாரும்தான் வாங்குறாங்க. இவங்க, வாங்கினத நியாயமா பங்குபோட்டு மேல கொடுக்காம அமுக்கப் பாத்திருப்பாங்க, ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க” என்பதுதான் அந்த விழிப்புணர்வு.

இந்த மனநிலைக்குக் காரணம் அரசு அலுவலகங்களில் இன்று நிலவும் சூழ்நிலைதான்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டுமானால், உண்மைக்கு மாறாக வருமானத்தைக் காட்ட விரும்புபவர் மட்டுமே அரசு அலுவலர்களைக் “கவனிக்க’ வேண்டியிருக்கும். ஏழைகள் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கப்படுவார்களே தவிர, சான்றிதழ் இலவசமாகக் கிடைத்துவிடும். ஆனால் இப்போது இலவசம்கூட இலவசமாகக் கிடைப்பதில்லை. தகுதி இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதுதான் மக்களின் இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம்.

அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம் ஆகியவற்றில் காணப்படாத பிரமாண்டம், தமிழக அரசு விழாக்களில் மட்டும் இருக்கிறது. வரம்புக்கு மீறிய, சட்டம் அனுமதிக்காத செலவுகள் நிறைய!

பல அரசு உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் பெயரில் “ரூம்’ மட்டும் போடப்படும். ஆனால் அவர்கள் தங்குவது நட்சத்திர ஓட்டலில். அத்துடன் வேறுசில சொல்லப்படாத செலவுகளும் உண்டு, அந்தச் செலவை உள்ளூர் அதிகாரிகள் ஏற்க வேண்டும்!

சட்டத்தை மீறிய செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு துறையிலும்- வருவாய்த் துறை என்றால் கிராம நிர்வாக அலுவலர் வரை-ஒரு வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.

தேன் எடுத்தவன் புறங்கையை சுவைக்காமல் விடுவானா? ருசி பார்த்த பூனைகளுக்கு சூடு மறத்துப் போகிறது. மனிதம் மறைகிறது.

ஆதலால், வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்தாலும் “டிரைவிங் ஸ்கூல்’ மூலம்தான் உரிமம் பெற்றாக வேண்டும். அதே ஜாதி, அதே சம்பளத்துக்காக சான்றிதழ் கேட்டாலும் “கொடுத்து’தான் பெற முடியும்.

அரசு நிர்ணயிக்கும் நில மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைப்பட்ட ஒரு மதிப்பை தீர்மானிக்கும் அதிகாரம் ஒருவரிடம் இருக்கும்போது, குறைக்கப்படும் பெருந்தொகைக்கு ஏற்ப ஒரு சிறுதொகையை இழக்க வேண்டும்.

விபத்துக்காக முதல் தகவல் அறிக்கை எழுதவேண்டுமானால், காவல்நிலையம் சொல்லும் வழக்கறிஞரை ஏற்று, காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம், 30 சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.

இலவச கலர் டிவி பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற ரூ.100 வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பல நாளிதழ்களில் வந்தாகிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.

அரசு அறிவிக்கும் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு பொருளோ, வங்கி வரைவோலையோ தயாராக இருந்தாலும், “ரொக்கத்தை’ கொடுத்தால்தான் அவை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

பொதுமக்களிடம் பெறும் லஞ்சத்தைவிட அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் பல மடங்காக இருக்கிறது.

பல ஏழை விவசாயிகளின் நிலங்களில் மானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பெழுதி, கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய் மானியம் ஆண்டுதோறும் “முளை’ காட்டாமல் மறைந்து விடுகிறது.

ஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அவர்களது செலவுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால், தணிக்கைத் துறை அலுவலர்களையே ஏமாற்றுகிற அளவுக்கு பொய் ரசீதுகளும் சட்டத்தின் ஓட்டைகளும் சரிபார்ப்பவரை சரிகட்டுவதும் தாராளமாக இருக்கின்றன.

லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுத்தாலும் எத்தனை வழக்குகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்?

இவை யாவும் மக்கள் ஏற்படுத்திய பழக்கம் என்றும், அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் என்றும் சொல்லப்படும் பொதுவான கருத்து ஏற்புடையதாக இல்லை.

முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, அரசு அலுவலகங்களில் பரவியுள்ள ஊழலை அரசு அலுவலர்களால்தான் தடுக்க முடியும்.

எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்தத் துறை மற்றும் எந்தெந்த அலுவலர் மூலமாக எவ்வளவு தொகை போகிறது என்ற கணக்கெல்லாம்கூட பொதுவாகப் பேசும்போது ஊழியர் சங்கங்கள் வெளிப்படையாகப் பேசுகின்றன. ஆனால் அதை ஓர் அறிக்கையாகக்கூட இச் சங்கங்கள் வெளியிட்டதில்லை.

“”அரசு விழாக்களுக்கு செலவாகும் கூடுதல் தொகைக்காக எங்கள் ஊழியரை வசூல் வேட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று எந்த தொழிற்சங்கமும் போர்க்கொடி தூக்கியதில்லை. ஊழல் செய்யும் அமைச்சரின் முகமூடியைக் கிழிப்பதில்லை.

எந்தெந்த அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பது சக ஊழியருக்குத் தெரியும். ஊழியர் சங்கத்துக்கும் தெரியும். தெரிந்திருந்தும், லஞ்சம் வாங்கும் ஊழியரை இடைநீக்கம் செய்தாலோ, பதவியிறக்கம் செய்தாலோகூட சங்கம் கொதித்தெழுகிறது. அவரைப் பாதுகாக்கிறது. அதே சமயம், அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. சங்கத்தைவிட்டு அவரை வெளியேற்றியதும் இல்லை.

எத்தனை அறிவார்ந்த தத்துவம் பேசும் அரசியல் கட்சியைச் சார்ந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஊழல் அலுவலரை உறுப்பினராக வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதில்லை.

இப்போது சொல்லுங்கள்…

லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?

Posted in abuse, Allegations, America, Assassinations, Bangladesh, Biz, Blair, Bribery, Bribes, British, Burma, Bush, Business, Cabinet, Campaign, China, Commonwealth, Contribution, Corruption, crimes, Democracy, Dictators, Dictatorship, Dubya, Elections, England, English, Ferdinand, Finance, Food, Freedom, GWB, Haseena, Hasina, Imelda, Independence, India, Indonesia, Iraq, Khaled, Kingdom, Kings, Laundering, Law, Leaders, Lokpal, London, Luxury, Marcos, Military, Minister, MLA, Money, MP, Murder, Mynamar, Nawaz, Needy, nexus, oil, Order, Pakistan, Party, Phillipines, PM, Politics, Polls, Poor, Power, President, Prince, Princes, Princess, Princesses, Queens, Rich, Saddam, Sharif, Sheikh, Shoes, Suhartho, Suharto, Taiwan, Tamil, Thailand, Tony, UK, US, USA, Wealth, Zia | Leave a Comment »

Facts: How Hong Kong has and hasn’t changed – Progress Report under China

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2007

டிராகன் புகுந்த நாடு!

எம். மணிகண்டன்

பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதையொட்டி ஹாங்காங்கில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சிகளில், பிரிட்டன் மற்றும் சீனாவைச் சேர்ந்த விஐபிகள் கலந்து கொண்டு பொருளாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் விரிவாகப் பேசினர், ஒன்றைத் தவிர. அந்த ஒன்று, ஜனநாயகம். ஹாங்காங் மக்கள் கேட்கும் முழுமையான “மக்கள் ஆட்சி’.

1997-ல் ஹாங்காங்கின் இறையாண்மையை சீனாவின் கையில் ஒப்படைத்தபோது, அடிப்படை அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. முழுமையான மக்கள் ஆட்சி படிப்படியாக ஏற்படுத்தப்படும் என்பதே அதில் கூறப்பட்டிருக்கும் முக்கிய அம்சம்.

ஹாங்காங்கின் பாதுகாப்பு, அயல்நாட்டு விவகாரம் தவிர வேறு எந்தப் பிரச்னையிலும் சீனா தலையிடக் கூடாது என்ற அடிப்படையில்தான் பிரிட்டிஷ் அரசு ஆட்சியை ஒப்படைத்தது. ஹாங்காங்கின் கலாசாரம், நாகரிகம், பொருளாதார அமைப்பு உள்ளிட்ட அடையாளங்கள் அழிக்கப்படக் கூடாது என்பதே இந்த உடன்பாட்டுக்கு முக்கியக் காரணம்.

ஆனால் இந்த எல்லையைக் கடந்து ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் சீனா மூக்கை நுழைக்கிறது என்பதுதான் மக்களாட்சிக்கு ஆதரவானவர்கள் கூறும் குற்றச்சாட்டு. எடுத்துக்காட்டாக அடிப்படை அரசமைப்புச் சட்டப்படி, ஹாங்காங் அரசின் செயல் தலைவர் (பிரதமர்) மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் சீனா நியமிக்கும் ஹாங்காங்கைச் சேர்ந்த 800 பேர் கொண்ட தேர்தல் செயற்குழுதான் செயல் தலைவரைத் தேர்ந்தெடுத்து வருகிறது.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் யாருக்கு ஆதரவாகச் செயல்படுவார் என்பதைக் கண்டுபிடிக்க உளவுத்துறையின் உதவியை நாட வேண்டியதில்லை. இது தவிர ஹாங்காங்கின் 60 உறுப்பினர் சட்டப்பேரவையில் 30 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே மக்களிடம் உள்ளது. மீதி 30 பேருக்கு மறைமுக வாக்கெடுப்பு. இப்படிப் பல்வேறு வழிகளிலும் ஹாங்காங் மீதான பிடியை சீனா இறுக்கியிருக்கிறது.

“ஒரு நாடு, இரு அமைப்பு’ என்ற கொள்கையின் அடிப்படையில்தான் சீனா-ஹாங்காங் இடையேயான உறவுப்பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரு அமைப்புகளும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை. ஒன்று பொதுவுடைமைக் கொள்கைகளைக் கொண்டது. மற்றொன்று முதலாளித்துவ தத்துவத்தை செயல்படுத்தி வருவது. “மக்காவோ’ பகுதியைப் போல ஹாங்காங்குக்கும் சிறப்பு நிர்வாகப் பகுதி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவையனைத்தும் எழுத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பதுதான் இப்போதைய பிரச்னை.

உலகின் மிகச்சிறந்த விமான நிலையம், பொருளாதாரச் சுதந்திரத்தில் முதலிடம், முதல்தர சரக்குக் கப்பல் தளம் என்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது ஹாங்காங். சீனாவின் தற்போதைய படுவேகமான பொருளாதார வளர்ச்சிக்கு சோதனைக் களமாகப் பயன்பட்டது ஹாங்காங்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சீனாவின் ஷென்சென் நகரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் பேர் வசித்த குக்கிராமமாக இருந்தது. தற்போது அங்கு மக்கள்தொகை 1 கோடியே 30 லட்சம். பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஹாங்காங் தொழிலதிபர்களின் முதலீடுகளால் இன்று அந் நகரத்தின் அபார வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. ஹாங்காங் மீதான பிடியைத் தளர்த்த சீனா யோசிப்பதற்கு இவைதான் முக்கியக் காரணங்கள்.

சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்த 10 ஆண்டுகளில் ஹாங்காங் சில சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டியதாகி விட்டது. ஹாங்காங் பகுதிக்குப் போட்டியாக ஷாங்காய் நகரை சீனா வளர்த்து வருகிறது.

பல்வேறு புதிய நிறுவனங்களை ஷாங்காய் நகருக்குக் கொண்டுபோய், கிட்டத்தட்ட சீனாவின் வர்த்தகத் தலைநகராகவே அதை மாற்றிவிட்டது.

ஹாங்காங்கை விட சீனாவில் தயாரிப்புச் செலவு குறைவு என்பதால் ஹாங்காங் நிறுவனங்கள்கூட தங்கள் கடைகளை சீன நகரங்களில் பரப்பியிருக்கின்றன. பாதி நிறுவனங்கள் சிங்கப்பூரை நோக்கிப் படையெடுத்து வருகின்றன.

இதனால் ஹாங்காங்கின் சிறு தொழில் அதிபர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதால் ஹாங்காங் மக்கள் இதுபோன்ற செயல்களை நேரடியாகக் குறைகூற முடியாது என்றாலும், தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதை எப்போதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

இவை ஒருபுறம் இருக்க, சீனாவுடன் இணைந்திருப்பதால் ஹாங்காங் பகுதிக்கும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. 2003-ல் ஹாங்காங்கில் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோது, சீனாவின் உதவி இல்லாமல் போயிருந்தால் ஹாங்காங் மீண்டு வந்திருக்க முடியாது. சீனாவின் சரக்குகளைக் கையாளுவதால் ஹாங்காங் துறைமுகம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இது தவிர, 1997-க்கு முந்தைய கணக்கை ஒப்பிட்டால் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்காகி இருக்கிறது. சீனாவிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ஹாங்காங் மாறிவிட்டது என்பதை இவை உணர்த்துகின்றன.

சீனாவின் எரிச்சல்களுள் ஒன்றாகக் கருதப்படும் தைவான், சீனாவுடன் சேர்வதற்குத் தயக்கம் காட்டுவதற்குக் கூறப்படும் காரணங்களுள் ஒன்று முழுமையான மக்களாட்சி மறுக்கப்படும் என்பதுதான். எனினும், முன்புபோல் அல்லாமல் மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டங்களை சீனா சகித்துக் கொண்டிருப்பதே மிகப்பெரிய மாற்றம்தான்.

பொருளாதாரத்தில் ஹாங்காங்கை சோதனைக் களமாகப் பயன்படுத்தி நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்திய சீனா, ஹாங்காங்கில் முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவந்து, அதையும் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாமே. செய்வீர்களா தோழர்களே?

Posted in AP, Arts, Arunachal, Autocracy, Beijing, Bejing, Biz, Blair, Britain, Brown, Business, Cabinet, Casinos, Cathay Pacific, CathayPacific, Censor, China, Commerce, Communism, Communist, Communists, Country, defence, Defense, Democracy, Economy, England, Federal, Finance, Freedom, Gordon, Govt, Hongkong, HSBC, Independence, Industry, London, Macau, Manufacturing, Market, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Peking, PM, Politics, Power, Regime, Republic, Ruler, Shangai, Shanghai, Shares, Stocks, Taiwan, Tianamen, Tiananmen, Tianmen, Tibet, UK, World | Leave a Comment »

Foreign Instituitional Investors – Lucrative opportunities in Emerging Indian markets & sectors

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

முதலீடுகளுக்கு காத்திருக்கும் தொழில்கள்

எஸ். கோபாலகிருஷ்ணன்

சமீபகாலத்தில், பங்குச்சந்தை ஏறினாலும் இறங்கினாலும் எஃப்.ஐ.ஐ.கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இவர்கள் யார்? “ஃபாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்டார்ஸ்’ என்பதன் சுருக்கம்தான் ஊஐஐ. அதாவது அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்.

இந்த நிறுவன முதலீட்டாளர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் நாட்டில் உள்ளவர்களிடமிருந்து பணம் திரட்டி, அதை எந்த நாட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தேடித் திரிபவர்கள்.

அந்தவகையில், இந்திய பங்குச் சந்தையில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் பங்குகளை வாங்கினால், விலை ஏறுகிறது. விற்றால் விலை குறைகிறது.

இந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதன்முதலாக 1994-ல் தான் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. அது முதல் 2005-ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்து, எழுபது ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு மேலும் அதிகம் என்று சொல்லத் தேவையில்லை.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரிய 500 இந்திய நிறுவனங்களில் அன்னிய நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இது மும்பை பங்குச் சந்தையின் பெரிய 500 நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 35 சதவீதம். அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கு மேல் எஃப்.ஐ.ஐ.களிடம் உள்ளது!

ஜனவரி 2007 வரையிலான கணக்குப்படி, 1059 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. எனினும், எச்.எஸ்.பி.சி. மார்கன் ஸ்டான்லி, மெரில் விஞ்ச், கோல்ட்மென் சாக்ஸ், சிட்டி வங்கி போன்றவை தான் முதலீடு செய்வதில் முன்னணியில் உள்ளன. உலகநாடுகள் என்று பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்நிறுவனங்கள் ஏன் இந்தியாவைத் தேடி வருகின்றன? மேலை நாடுகளின் பொருளாதாரம் ஏற்கெனவே நன்கு வளர்ந்துவிட்டது. அதனால், அங்கு முதலீடு செய்யும் பணம், மேலும் பெரிய வளர்ச்சி காண முடியாது. அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்த வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு வந்து கடை விரிக்கின்றன.

அவர்கள் முதலீடு செய்வது பங்குச் சந்தையில்தான். ஆகஸ்ட் 2005-ல் பங்குச் சந்தை குறியீடு எண் (சென்செக்ஸ்) 7816 ஆக இருந்தது. டிசம்பர் 2005-ல் 9020 புள்ளிகளாக உயர்ந்தது. இது 17 சதவீத வளர்ச்சி. மே 2006-ல் 12 ஆயிரம் என்னும் மகத்தான உயரத்தை எட்டியது. இப்போது – அதாவது ஓர் ஆண்டில் – 14,500க்குப் பக்கத்தில் மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த வெற்றிக்கதை தொடர்ந்தால் அந்நிறுவனங்கள் இங்கு நிலைகொண்டிருக்கும். தொடராதபட்சத்தில், “”அற்ற குளத்து அருநீர் பறவை” போல் பறந்து போய்விடும். ஆக, இந்த முதலீடுகளால், நம் நாட்டு தொழில்களுக்குக் கிடைத்தது என்ன? எத்தனை ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்தது?

இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம், வேறு ஒரு தளத்தில் அன்னிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஏராளமான அன்னிய நேரடி முதலீடுகள் செய்கிறார்கள். சுருக்கமாக எஃப்.டி.ஐ. என்கிறோம். பல்வேறு தொழில் துறைகளில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள். இவர்கள் கதை என்ன?

அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில், ஆதஐஇ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உலக அளவில் மிகப்பெரிய நாடுகளாக வளர்ந்து விடும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவின் பல்வேறு தொழில்களுக்கு வரத் தொடங்கியுள்ளன.

அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு சில நியதிகளையும், உச்ச வரம்புகளையும் விதித்துள்ளது. உதாரணமாக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகபட்சம் இவ்வளவு சதவீதம்தான் முதலீடு செய்யலாம் என்று உள்ளது. சில துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை.

கடந்த 16 ஆண்டுகளாக, அதாவது பொருளாதார சீர்திருத்தம் அறிமுகமானது முதல், அன்னிய நேரடி முதலீடு வரத் தொடங்கியுள்ளது. நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், எந்தத் தொழிலில் முதலீடு வந்தால் நமது தொழில் வளம் பெறுமோ, நமக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிட்டுமோ அந்தத் துறைகளில் அன்னிய முதலீடுகள் கணிசமான அளவில் வருவதில்லை.

மாறாக, எந்தத் துறைகளில் முதலீடு செய்தால், உள்நாட்டில் விற்பனை அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பெருகி உடனடி லாபம் காண முடியுமோ அந்தத் துறைகளில்தான் அன்னிய நேரடி முதலீடு வருகிறது.

உதாரணமாக, மோட்டார் வாகனத் தொழில், தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவை. 1991 முதல் 2007 மார்ச் வரை இந்தியா பெற்றுள்ள அன்னிய நேரடி முதலீடு 55 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இதில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 பில்லியன் டாலர் இந்தியாவுக்குள் எப்.டி.ஐ. ஆக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல, பெருமிதம் கொள்ளத்தக்கதும்கூட.

ஆனால், கவலையளிப்பது என்னவெனில், இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிலுக்கு இத்தனை ஆண்டுகளில் கிடைத்த அன்னிய நேரடி முதலீடு வெறும் ஆறு கோடி டாலர்தான். இது ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 0.12 சதவீதம்தான். இந்த தோல் தொழிலை நம்பி 20 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன.

இந்தியாவின் இன்னொரு முக்கியமான பாரம்பரியத் தொழில் ஜவுளி. எட்டு கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் இத் தொழிலை நம்பி உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் ஜவுளியே. இந்த மாபெரும் தொழில் ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 57 கோடியே 50 லட்சம் டாலர்தான். அதாவது மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 1.22 சதவீதமே.

சரி, அப்படியானால் இதுவரை வந்துள்ள அன்னிய முதலீடுகள் எங்கே போகின்றன? மின்சாரக் கருவிகள் சார்ந்த தொழிலுக்கு 800 கோடி 27 லட்சம் டாலர்கள். அதாவது மொத்த முதலீட்டில் 15 சதவீதம்.

அடுத்து, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட சேவைத்துறைக்கு 700 கோடி, 84 லட்சம் டாலர் (14 சதவீதம்); மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தொலைத்தொடர்பு 3 கோடி, 89 லட்சம் டாலர். (7.12 சதவீதம்).

ஆக, தொழில் நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள துறைகளுக்கு மட்டுமே அன்னிய நேரடி முதலீடு கணிசமாகக் கிடைத்துள்ளது. சீனாவும், தைவானும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் துறைகளான ஜவுளி போன்றவற்றில் அதிக முதலீட்டின் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி செய்து, சந்தையில் போட்டியிட்டு இந்தியாவை ஓரம் கட்ட முடிகிறது.

இன்னொருபக்கம், வங்கதேசம் தங்கள் நாட்டில் ஊழியர்களுக்கான ஊதியம் மிகக் குறைவு என்று பறைசாற்றி, இதே ஜவுளி மற்றும் தோல்துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டியுள்ளது.

இந்நிலையில் கோட்டா முறை ஒழிந்த பின்னரும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா தனது நியாயமான பங்கைப் பெற இயலவில்லை. இந்தியாவின் இதர துறைகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது ஜவுளித்துறை ஏற்றுமதி குறைவே.

தற்போது ஜவுளித்துறையில் கிடைக்கும் உள்நாட்டு முதலீடுகள் கூட “சிறப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி’ என்னும் மத்திய அரசின் திட்டத்தின் வாயிலாகவே என்றால் மிகை ஆகாது.

இந்நிலையில், நடப்பாண்டில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டுவதற்கான இலக்கு 30 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இலக்கை கடந்த ஆண்டைப்போல் இரண்டு மடங்காக உயர்த்தினால் மட்டும் போதாது.

கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஜவுளி மற்றும் தோல் தொழில்களில் கூடுதல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அதிகபட்ச முனைப்பு காட்டி, முதலீடுகளுக்காக காத்திருக்கும் – தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள – இத் துறைகளுக்கு புத்துயிர் அளிப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது

மேலாளர்.)

Posted in Analysis, Auto, Backgrounders, Bonds, Brazil, BRIC, BSE, Bus, Cars, China, Defaltion, Deflation, Diversify, ECE, Economy, EEE, Electrical, Electronics, Emerging, Employment, Exchanges, Exports, FDI, FEMA, FERA, FII, Finance, Funds, GDP, Globalization, Growth, Imports, Index, Industry, Inflation, InfoTech, Instrumentation, investments, job, Leather, Luxury, Manufacturing, markets, Metro, MNC, Model, Motors, NIFTY, NSE, Op-Ed, Opportunities, Options, Outsourcing, pension, Primers, Recession, Retirement, revenue, Risk, Russia, sectors, service, Shares, Stagflation, Stats, Stocks, Taiwan, Tech, Technology, Telecom, Textiles, Trucks | Leave a Comment »