சென்னையில் 2007-க்குள் மேலும் 3 ஆடை வடிவமைப்பு பயிற்சி மையம்
சென்னை, மார்ச் 14: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இந்த ஆண்டுக்குள் மேலும் 3 ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் (ஏ.இ.பி.சி), ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையம் (ஏ.டி.டீ.சி) தலைவர் விஜய் அகர்வால் தெரிவித்தார்.
ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு தொழில்நுட்ப அறிவை அதிகரிக்கும் வகையில் ஏ.இ.பி.சி. நாட்டின் பல்வேறு இடங்களில் ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையங்களை அமைத்துள்ளது. சென்னை கிண்டியில் 1996-ல் முதல் பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது.
இதுதவிர தில்லி, குர்கான், நொய்டா, லூதியானா, ஜெய்ப்பூர், கோல்கத்தா, ஐதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், திருப்பூர், மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 21 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் மேலும் ஒரு பயிற்சி மையத்தை ஏ.இ.பி.சி. தற்போது அமைத்துள்ளது. இதைத் திறந்துவைத்த விஜய் அகர்வால் பேசியது:
தகவல் தொழில் நுட்பத்துறை, ஆயத்த ஆடை தயாரிப்புத் துறை ஆகிய இரு துறைகளும் இந்தியாவில் சிறந்து விளங்கும் துறைகளாகும். இவை இரண்டும் அதிக வேலைவாய்ப்பையும், வருவாயையும் ஈட்டித் தரக்கூடிய துறைகளாக உள்ளன.
2006-07-ம் ஆண்டில் ரூ.42 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டியுள்ளது. இதில் 25 சதவீதம் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
2010-11 ஆம் ஆண்டில் ரூ.113 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட 15 லட்சம் கூடுதல் பணியாளர்கள் இத்துறைக்கு தேவைப்படுவர். இதன் மூலம் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
இதற்காக ஏ.இ.பி.சி. இந்த ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் கூடுதலாக 27 ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. மேலும் நடமாடும் பயிற்சி மையங்கள் மூலம் கிராமப்புற மக்களுக்கு ஆடை தயாரிப்பு குறித்த அடிப்படை பயிற்சிகளை இக்கவுன்சில் அளித்து வருகிறது என்றார் விஜய் அகர்வால்.
தொடக்க விழாவில் ஏ.இ.பி.சி. மூத்த உறுப்பினர் ரஞ்சித் ஷா, கிண்டி ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கே.கே.அகர்வால், முகப்பேர் ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.