Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Tablets’ Category

Spurious Drugs – Health of the common citizen: Dinamani Editorial

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

மருந்துகளில்கூட போலியா?

மருந்துகளில்கூட போலியா என்று, விவரம் தெரிந்தவர்கள் கேட்க மாட்டார்கள்; ஆனால் எந்த அளவுக்குப் போலி என்று யாருக்கும் தெரியாது.

உலக சுகாதார ஸ்தாபனம் என்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு (டபிள்யு.எச்.ஓ.) இந்தியாவில் புழங்கும் மருந்துகளில் 35% போலி என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது. இது உண்மைதானா என்று ஆராய மத்திய அரசு தீவிர முடிவெடுத்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருப்பது வயிற்றில் பாலை வார்க்கிறது.

இத்தகைய குற்றச்சாட்டுகளை ஆராயாமல் விடக்கூடாது என்று தீர்மானித்துள்ள அன்புமணி, அதற்காக 5 கோடி ரூபாயைத் தனியே ஒதுக்கியிருக்கிறார். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் தயாரிக்கப்படும், விற்கப்படும் மருந்துகளின் 3 லட்சம் மாதிரிகளை எடுத்து மத்திய, மாநில ஆய்வுக்கூடங்களில் சோதித்துப் பார்க்க உத்தரவிட்டிருக்கிறார்.

மருந்துகளின் தரம், விலை ஆகியவற்றை நிர்ணயிக்கவும் கண்காணிக்கவும், “மத்திய மருந்து ஆணையம்’ என்ற அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற மசோதா தயாராகிவிட்டது. இது இப்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் இருக்கிறது. இதை நாடாளுமன்றம் ஏற்று சட்டமாகிவிட்டால், எல்லா மருந்து, மாத்திரைகளும் மத்திய, மாநில அரசுகளின் ஆய்வகங்களில் தொடர்ந்து சோதிக்கப்படும்.

கலப்படமோ, தரக்குறைவோ கண்டுபிடிக்கப்பட்டால் மருந்து உற்பத்தியாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். புகாரின்பேரில் போலீஸ்காரரே வழக்குப் பதிவு செய்து மருந்து உற்பத்தியாளர் மீது நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றங்களை நிறுவவும் அரசு உத்தேசித்துள்ளது.

இதற்காக மத்திய, மாநில அரசுகளின் ஆய்வகங்களை நவீனப்படுத்தி விரிவுபடுத்தவும், ஆய்வக ஊழியர்களுக்கு நவீன பயிற்சிகளை அளித்து, அதிக எண்ணிக்கையில் பணியில் அமர்த்தவும், மருந்து-மாத்திரைகளைக் கடைகளில் சோதிக்க அதிக எண்ணிக்கையில் மருந்து ஆய்வாளர்களை நியமிக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆர்.ஏ. மஷேல்கர் தலைமையிலான நிபுணர் குழு ஏற்கெனவே இந்த விஷயத்தை ஆராய்ந்தது. இந்தியாவில் உற்பத்தியாகும் மருந்து-மாத்திரைகளில் 10% தரக்குறைவானவை, 1% கலப்படமானவை என்று அந்தக்குழு அறிக்கை அளித்திருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.3,500 கோடிக்கு மருந்து மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

டாக்டர்கள், நுகர்வோர், அதிகாரிகள், மருந்து விற்பனையாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் இணைந்து அக்கறையுடன் செயல்பட்டால், வெறும் லாப நோக்கத்துக்காக மருந்து தயாரிப்பில் ஈடுபடும் போலி நிறுவனங்களை விரட்டி விடலாம்.

விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கையின் கீழ் இப்போது 74 மருந்துகள் உள்ளன. இந்த வகையில் மேலும் 354 மருந்துகளைக் கொண்டுவர உரம், ரசாயனங்கள் துறை அமைச்சகம் உத்தேசித்துள்ளது. ஆனால் இதை மத்திய திட்டக்குழுவின் ஓர் பிரிவு எதிர்க்கிறது. இப்படிச் செய்தால் தொழில்முனைவோர் இத்துறையில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள் என்று எச்சரிக்கிறது. எந்த வியாபாரியும் சமுதாய நோக்கிலோ, சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவோ மருந்துகளைத் தயாரிப்பதில்லை என்பது உண்மைதான் என்றாலும், வெறும் லாப நோக்கு மட்டுமே உள்ளவர்களை இந்தத் துறையில் அனுமதிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.

எந்தக் காலத்திலும் ஏழைகளால் வைத்தியச் செலவைத் தாங்க முடியாது என்பதைக் குறிக்க, “”ஏழைக் குடும்பம்-ராஜ வைத்தியம்” என்ற பழமொழியே உண்டு. எனவே தரம், விலை ஆகியவை தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைள் வரவேற்கத்தக்கவை. அதற்கு மக்களுடைய ஆதரவு என்றும் உண்டு.

Posted in Brand, Citizen, City, Criminal, dead, Disease, Doc, Doctor, druggists, Drugs, Duplicate, Fake, Fatal, godowns, Health, Healthcare, Hospital, ingredients, IT, Lab, Law, Manufacturing, Medicine, Metro, Needy, Operation, Order, Overdose, Patient, Pharma, Pharmaceuticals, Pharmacy, Poor, Rich, Rural, Sick, Spurious, Sting, Suburban, Tablets, Today, Village, Wealthy, WHO | Leave a Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy – Nochi for Asthma

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

மூலிகை மூலை: ஆஸ்துமாவுக்கு நொச்சி!

விஜயராஜன்

மூன்று அல்லது ஐந்து கூட்டு இலைகளை எதிர் அடுக்கில் பெற்ற சிறுமர வகையைச் சேர்ந்தது. இலைகள் வெகுட்டல் மணம் உடையவை. இலை சிறு நீர் பெருகுவதற்கும் நோய் நீக்கி உடலைத் தேற்றுவதற்கும் மாதவிலக்கை ஒழுங்கு செய்வதற்கும் நுண் புழுக்களைக் கொல்லுவதற்கும் பயன்படுகிறது. பட்டை, காய்ச்சல் போக்கும். தமிழகம் முழுவதும் தானாகவே வளரும்.

வேறு பெயர்கள்: அக்கினி, அதிக நாரி, அணிஞ்சில், அதிகனசி, அதி கற்றாதி, அதியூங்கி, அரி, கொடிவேலி, சிற்றாமுட்டி, செங்கோடு வேலி, முள்ளி.

வகைகள் : கருநொச்சி, வெறி நொச்சி.

கருநொச்சி : இலைகள், பட்டைகள் கருப்பு நிறமாக அமைந்து இருக்கும். இதன் இலைகள் உள்ளங்கையளவு நீள அகலத்தில் இருக்கும்.

ஆங்கிலத்தில் : vitex negundo, liss; Verbenaceae.

மருத்துவ குணங்கள்:

நொச்சி, நுனா, வேம்பு, பொடுதலை வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் மிளகு 4, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு 3 வேளை 3 நாளுக்குக் கொடுக்க மாந்தம் குணமாகும்.

நொச்சியிலை 1 கைப்பிடியளவு, மூக்கிரட்டை வேர், காக்கரட்டானி வேர் வகைக்கு 1/2 கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் சுக்கு 1, மிளகும், சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து 1/2 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு தினமும் 2 வேளையாக, 1 வாரம் குடித்துவர தொடக்க நிலையில் உள்ள இளம் பிள்ளை வாதம் (போலியோ) குணமாகும்.

நொச்சி இலை 2, மிளகு 4, இலவங்கம் 1, சிறிய பூண்டுப் பல் 4 சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கினால் இரைப்பிருமல் (ஆஸ்துமா), மூச்சுத் திணறல் குணமாகும். தொடர்ந்து இப்படிச் செய்ய வேண்டும்.

நொச்சி இலைச்சாறு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, மிளகுத்தூள் 1 கிராம், சிறிது நெய்யும் சேர்த்து கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்து, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்க மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும். (இச்சா பத்தியத்துடன், பாகற்காய், அகத்தி, மீன், கருவாடு நீக்கி உணவு உட்கொண்டு தீவிர ஆசையைத் தவிர்க்க வேண்டும்).

நொச்சி, வேம்பு, தழுதாழை, தும்பை, குப்பை மேனி, ஆடா தொடை, நாயுருவி வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து, முக்கால் அளவு நீருள்ள வாய் அகன்ற மண் கலத்தில் கொதிக்க வைத்துச் சூடு செய்த செங்கல்லைப் போட்டு வேது பிடிக்க வாதம் அனைத்தும் குணமாகும். வாரத்துக்கு 2 முறை செய்யலாம்.

நொச்சியிலையைத் தலையணையாகப் பயன்படுத்த மண்டை இடி, கழுத்து வீக்கம், கழுத்து நரம்புவலி, சன்னி, இழுப்பு, கழுத்து வாதம், மூக்கடைப்பு (பீனிசம்) குணமாகும்.

நொச்சி இலைச் சாறு 5 மில்லியளவு எடுத்து பசுங் கோமியம் 5 மில்லியளவுடன் கலந்து 2 வேளை குடித்து வர கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் வீக்கம் குணமாகும்.

நொச்சி இலைச் சாறை கட்டிகளின் மீது இரவில் பற்றுப் போட்டுவர கட்டிகள் கரைந்துவிடும்.

நொச்சிச் சாற்றை நரம்புப் பிடிப்பு, தலைநோய், இடுப்புவலிக்குத் தேய்த்துவர குணமாகும்.

Posted in Alternate, Asthma, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Doc, Doctor, Health, Healthcare, Herbs, Medicine, Mooligai, Naturotherapy, Nochi, Tablets | Leave a Comment »

Gastro-Oesophagal Reflux Disease – GORD (Unmai Online)

Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2007

மருத்துவமும், மூடநம்பிக்கைகளும்

நெஞ்சு எரிச்சல்

மரு. இரா. கவுதமன் MDS
முக அறுவை மருத்துவர்

சாதாரணமாக நாம் ‘வயிற்றெரிச்சலை’ பற்றிதான் அதிகம் நினைக்கிறோம், பேசுகி-றோம். வயிற்றெரிச்சல் என்று நோயைப் பற்றி பேசுவதைக் காட்டிலும், மற்றவர்கள் நம்மீது கொண்டுள்ள ‘பொறாமை’யையே நாம் பெரும்-பாலும் வயிற்றெரிச்சல் என்று சொல்கி-றோம் ‘என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்-டாய், நீ உருப்படமாட்டாய்’ என சொல்-வது மிகவும் சாதாரண ஒரு செய்தி, அந்த வயிற்-றெரிச்சலை பற்றி சொல்லாமல், இது என்ன ‘நெஞ்சு எரிச்சல்’ என நீங்கள் எண்ணக் கூடும்.

உளவியல் ரீதியான வயிற்றெரிச்சலை மறந்து உடலியல் ரீதியான வயிற்றெரிச்சலைப் பற்றி காண்போம். பல நேரங்களில் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்ற கோளாறே நெஞ்-செரிச்சலாக வெளிப்படுவதால் இந்த கோளாறை “நெஞ்சு எரிச்சல் ‘நோய்’ (Gastro Oesophagal Syndrome) என குறிப்பிடுகிறோம். இதில் Gastro என்பது வயிற்றையும், Oesopha gas என்பது உணவுக் குழாயையும் குறிக்கும். வயிற்றில் சேரும் உணவுக் குழாய், தொண்-டையிலிருந்து தொடங்கும் அமைப்பு வயிற்றில் உருவாகும் அமிலச் சுரப்பிகள் உணவுக்குழாய் மூலம் தொண்டை வரை பரவும் நிலை உள்ளதால் இந்நோய்க்கு ‘நெஞ்சு எரிச்சல் நோய்’ (Gastro-Oesophagal Disease) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நோயைப் பற்றி நோக்குவோம்.

நோய் கூற்றியல்: நாம் உண்ணும் உணவு செரிக்க வேண்டும். செரித்த உணவில் உள்ள சத்துப் பொருள்கள்தான் நம் உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்தற்கும் அடிப்படை தேவையான பொருள்கள். உணவு செரிமானம் வாயிலிருந்தே துவங்கி விடும். வாயில் உள்ள உமிழ் நீர் (Sauva) மாவுச்சத்தை செரிக்கத் துவங்கும். அதேபோல் வயிற்றில் சுரக்கும் வயிற்று நீர் (Gastric Juice) மாவுச் சத்து, புரதச் சத் ஆகியவற்றை செரிக்க வைக்கும். வயிற்று நீரில், ஹைட்ரோ குளோரிக் அமிலம், பெப்சின் (Pepsin) இன்ட்ரின்சிக் ஃபேக்டர் (Intrinsic Factor) மியூக° (Mucus) ஆகியவை உள்ளன.

இதில் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் பெப்சினும், நரம்பு தூண்டுதலால் சுரப்பவை. நம் உடலில் மாவுச் சத்து (Carbohydrates) குறையும் பொழுது, சர்க்கரையின் அளவு குறையும். இதை ‘ஹைப்போ கிளை-சிமியா (Hypoglycaemia) என்று சொல்லுவோம். இந்த நிலை ஏற்பட்டால் ‘வேக°’ (Vagus) என்ற நரம்பு தூண்டப்படும். இந்த நரம்புதான் வயிற்றிற்கு செல்லும் நரம்பு. உணவின் வாசனை, உணவைப் பார்த்தல் ஆகிய செயல்-பாடுகளும் இந்த நரம்பை தூண்டிவிடும்.

இதனால் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பு உண்டாகும். இதுவே பசி உணர்வாக நமக்கு வெளிப்படும்.

சாதாரணமாக இந்த அமிலச் சுரப்பு பசி எடுக்கும் நிலையை உண்டாக்கினாலும், உணவு உட்கொண்ட பின் நின்று விடும். நெஞ்சு எரிச்சல் நோய் (Gastro-Oesophagal Reflux Disease- GORD) உள்ளவர்களுக்கு இந்த அமிலச் சுரப்பு அடிக்கடி ஏற்பட்டு, உணவுக் குழல் புண்ணாகி, சுருங்கி விடும் (Ulcer and Stonosis) நிலைகூட ஏற்படும். பெரும்பாலான நேரங்களில் நெஞ்சு எரிச்சல், இதய எரிச்சல் (Heart Burn) என குழப்பத்தை ஏற்படுத்தும். இதயத் தமனி (Coronard artery) சுருக்கம் (Ischaemia) சில நேரங்களில் இதேபோன்ற அறிகுறியை தோற்றுவிக்கும். உடனே மார-டைப்பு என நினைத்து சிலர் அதற்கு மருத்து-வம் செய்யும் நிலை ஏற்படும். ‘ஆ°பிரின்’ (Aspirin) மருந்து மாரடைப்புக்கு கொடுக்கும் மருந்தாகும்.

ஆனால் இதே மருந்து நெஞ்சு எரிச்சல் நோய்க்குக் கொடுத்தால், நெஞ்சு எரிச்சல் நோய் மிகவும் அதிகமாகி விடும். அதேபோல் இதயநோயை, நெஞ்சு எரிச்சல்-தான் என்று அசட்டையாக நினைத்து சரியான மருத்துவம் செய்யாமல் விட்டு விட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே சரியான ஆய்வுகள் மூலம் இதயநோயா அல்லது நெஞ்சு எரிச்சல் நோயா எனக் கண்டுபிடித்து மருத்து-வம் செய்தல் அவசியம்.

நோய் காரணீயம்: நெங்சு எரிச்சல் நோய் சாதாரணமாக அடிக்கடி வாந்தி எடுக்கும் சில நோயாளிகளுக்கு இந்நோய் அடிக்கடி ஏற்படும். வயிய்றழற்சி (Gastritis) போன்ற நோயுள்ளவர்-களுக்கு இந்நோய் அடிக்கடி ஏற்டும். வயிற்றழற்சி உள்ளவர்களின் உணவுக் குழயில் உள்ள சுருக்குத் தசைகள் (Sphincter) சரியாக வேலை செய்யாததால் அமிலச் சுரப்பு மேல் நோக்கி செல்லும் நிலை ஏற்படும். சாதாரண நிலையில் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில், உணவும் மற்ற சுரப்பிகளும் கீழ்-நோக்கியே செல்லும்.

ஆனால் நெங்சு எரிச்சல் நோயில் சுருக்குத் தசை செயல்பாடு குறைப்-பாட்டால் அமிலச் சுரப்பு மேல் நோக்கிச் சென்று எரிச்சலை ஏற்படுத்தும்.

நோயின் அறிகுறிகள்:

நெஞ்சு எரிச்சல் நோயில் அடிப்படை அறிகுறியே நெஞ்சில் எரிச்-சல் ஏற்படுவதுதான். நெஞ்சு எலும்புக்கு பின்-புறம் நெஞ்சு கரிப்பாகத் தோன்றும் இந்நோய் நாளடைவில் எரிச்சலாக மாறும். சிலருக்கு உணவுக்கு பின் அதிகளவில் எரிச்சல் ஏற்படும். வயிறு நிறைய உணவு உண்டாலும் அதிகளவு உண்டாகும். வயிறு முட்ட உணவு உண்டு-விட்டு, உடனே படுக்கைக்குச் சென்றால் எரிச்-சல் நெஞ்சுப் பகுதியில் ஏற்படும்.

மசாலா கலந்த மாமிச உணவு, மது, பீடி, சிகரெட் போன்றவை இந்நோயை அதிக அளவு உண்டாக்கும். படுத்திருக்கும் நிலை, வயிற்றை அழுக்கிக் கொண்டு குனிந்து வேலை செய்வர்களுக்கு அதிக அளவு ஏற்படும் வாய்ப்பு உண்டு. உணவு உண்டபின் எரிச்சல் ஏற்படுவதோடு அன்றி புளி ஏப்பம் உண்டாகும். அடிக்கடி ஏப்பம் விடுதல் போன்றவை உண்டாகும். சில சமயங்களில் தூங்கும் பொழுது புரை ஏறுதல், இருமல் உண்டாதல் ஆகிய நிலைகளோடு சேர்ந்து நெஞ்சு எரிச்சலும் ஏற்படும்.

இந்நோயுள்ளோர் படுக்கைக்கு அருகிலேயே தண்ணீர், பால் வைத்திருந்து, அதை குடித்தால், எரிச்சல் குறையும். முறையான மருத்துவம் செய்து கொள்ளாமல் விட்டால், நாளடைவில் உணவு நெஞ்சிலேயே நிற்பது போன்ற உணர்வு ஏற்படும். தொண்டை அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படும். நெஞ்சுப் பகுதியில் ஏற்படும் எரிச்சல் தொண்டை வரை பரவும். அதனால் கழுத்துப் பகுதியில் எரிச்சல் உள்ள உணர்வு தோன்றும். உணவுக் குழலின் பகுதிகளில் புண்ணாகி (Ulcer) சுழற்சி ஏற்படும். சில நேரங்களில் இரத்தக் கசிவும் ஏற்படும்.

நோயறிதல்:

நோயின் அறிகுறிகளை வைத்தே இந்நோயை எளிதில் கண்டு பிடிக்-கலாம். இதய நோயா இல்லையா என்பதை இதய மின் பதிவில் (ECG) கண்டு பிடிக்கலாம். ‘உள்நோக்கி’ (endoscopy) முறை-யில் எளிதாக அறியலாம். சாதாரணமாக உணவுக் குழலை உள்நோக்கி வழியாகப் பார்த்தால் அது உலர்ந்த நிலையில் இருக்கும். அதுவே நெஞ்சு எரிச்சல் நோயுள்ளவர்-களுக்கோ, மூச்சு விடும் பொழுதெல்லாம் (ஏற்படும் நெஞ்சு சதைப் பகுதி அழுத்தப்-படுவதால்) வயிற்றில் உள்ள பொருள்கள் மேலும் கீழும் வந்த வண்ணம் இருக்கும். சிலருக்கு உணவுக் குழாயில் உள்ள புண்-களையும் உள்நோக்கி வழியே, தெளிவாக காண முடியும். உணவுக் குழாய் சுருக்கம், அழற்சி ஆகியவற்றையும் உள்நோக்கி வழியே காணலாம்.

மருத்துவம்:

உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும். இந்நோயை கட்டுப்படுத்த நல்ல மருந்துகளும் உள்ளன. அதிக அளவு வயிறு முட்ட உண்-ணாமல் அளவோடு உண்ண வேண்டும். மசாலா, எண்ணெய், கொழுப்பு உணவுகள், சாக்லெட்டுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். காபி, டீ அதிகம் குடிப்பவர்-களுக்கும் இந்நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதை தவிர்த்தல் நலம்.

பீடி, சிகரெட், மது போன்றவை இந்நோயை அதிகமாக்குவதால் அதை அடியோடு நிறுத்துவது நலம் பயக்கும். உணவு உண்ட உடனே படுக்கைக்குச் செல்-லாமல் கொஞ்ச நேரம் நடத்தல் அல்லது அமர்ந்-திருத்தல் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும். அமில அதிர்ப்பான்காள (Antacid) ‘டைஜின்’ ‘ஜெலுசில்’ போன்ற மருந்துகள் நல்ல பலனைத் தரும்.

நரம்புத் தூண்டுதலை குறைகின்றதன் மூலம் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் தற்போது அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. நேரத்-திற்கு உணவு உண்ணுதல், அமிலச் சுரப்பைத் துண்டாத உணவுப் பழக்கங்கள் உணவு உண்டதும் லேசான நடைப்பயிற்சி. உடனே உறங்கச் செல்லாமை ஆகியவை நம்மை இந்நோயிலிருந்து காக்க உதவும். ஆரம்ப நிலையில் சரியான மருத்துவம் செய்து-கொள்ளாத நோயாளிகளுக்கு நோயின் கடுமை அதிகரிக்கும்.

அவர்களுக்குக் கூட உள்நோக்கி வழியாகவே மாறிவரும் மருத்துவ அறிவியலில் உள்நோக்கி வழியாகக் செய்யும் இம்மருத்துவம் மிகவும் எளிமையானதாகும். மருத்துவ-மனையில் ஓரிரு நாள் இருந்தால் போதும். நெஞ்சு எரிச்சல் நோய்க் கூறுகளை இந்த இதழில் கண்டோம். மனவியல் ரீதியான வயிற்றெரிச்சலைத் தவிர்த்து உடலியல் ரீதியான வயிற்றெரிச்சலை வரும் இதழில் காண்போம்.

Posted in Acid, Acidity, Antacids, Artery, Aspirin, Base, Care, coronary, cure, Digene, Disease, Disorder, Doc, Doctor, ECG, endoscopy, Gastric, Gastritis, Gastro, Gelusil, glycemia, Health, Healthcare, HeartBurn, Hypoglycaemia, Hypoglycemia, medical, Medicine, Neutral, Operation, Options, pH, Pizza, Reflux, Research, Sauva, solutions, Suggestions, surgery, Tablets | 2 Comments »

N Vittal – How to bring new synergy into current Agriculture practices: Marketing

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

வேளாண்மையும் “பெருந்தொழிலாக’ வேண்டிய நேரம்!

என். விட்டல்

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “”ரிலையன்ஸ்”, தகவல் தொடர்புத் துறையில் ஜாம்பவானாக உருவெடுத்துவரும் சுநீல் மித்தலின் “ஏர்-டெல்’ போன்ற நிறுவனங்கள் இப்போது வேளாண்மைத் துறையில் பெரும் அக்கறை எடுத்துவருகின்றன.

மிகப் பிரம்மாண்டமான அளவில் உற்பத்தி, விநியோகம், விற்பனை என்ற தங்களுடைய தொழில்துறை வெற்றி உத்தியை, வேளாண்மைத்துறையிலும் புகுத்த முயல்கின்றன.

“மனிதர்கள் காலில் போட்டுக்கொள்ளும் செருப்புகளும் பூட்ஸ்களும் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன; வேளாண்துறையில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவை மண்டிகளிலும், வெயிலும் தூசும் நிரம்பிய சந்தைகளிலும், வீதிகளிலும் கோணியைப் பரப்பி விற்கப்படுகின்றன’ என்று ஆமதாபாதில் இந்திய நிர்வாகவியல் மாணவர்களிடையே உரை நிகழ்த்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கவலையோடு குறிப்பிட்டிருந்தார்.

மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மூலம், பெருநகரங்களில் உள்ள அங்காடி வளாகங்களில் வேளாண் விளைபொருள்கள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு, “”பேக்” செய்யப்பட்டு, எடை, தரம், விலை குறியீடுகளுடன் விற்கப்படுமானால் லாலு சுட்டிக்காட்டிய முரண்பாடு மறைந்துவிடும். இது மட்டும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேறினால், இந்திய வேளாண்மைத்துறையில் “”மூன்றாவது புரட்சி” ஏற்பட்டுவிடும்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது கைக்கும் வாய்க்கும் எட்டுகிற நிலைமையில்தான் நமது உணவு தானிய உற்பத்தி இருந்தது. உணவு தானியத் தேவையில் தன்னிறைவு பெற்றவர்களாகக் கூட இல்லை. 1970-களில் அறிமுகப்படுத்தப்பட்ட “”பசுமைப் புரட்சி”யின் விளைவாக நிலைமை தலைகீழாக மாறியது. அதில் பங்கேற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் போன்றவர்கள் “”இரண்டாவது பசுமைப் புரட்சி” இப்போது அவசியம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

வறுமைக் கோட்டுக்குக்கீழே வாழும் ஏழைகளுக்காக இப்போது மீண்டும் கோதுமை, அரிசி போன்றவற்றை இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கிறோம்.

கிராமப்புறங்களில் ஏற்பட்ட இரண்டாவது புரட்சி, பால் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக நம்மை இடம் பெறச் செய்த “”வெண்மைப் புரட்சி”யாகும். அமுல் நிறுவனத்தின் தந்தையும் தலைசிறந்த நிர்வாகியுமான டாக்டர் வர்கீஸ் குரியனும், சிறந்த காந்தியவாதியும் கைதேர்ந்த கூட்டுறவு இயக்க நிபுணருமான டாக்டர் திரிபுவன்தாஸ் படேலும் இந்தப்புரட்சிக்கு முழுமுதல் காரணகர்த்தாக்கள். குஜராத்தில் மட்டும் எல்லா மாநிலங்களிலுமே பால் பண்ணைகள் பெருக இவர்களின் நடவடிக்கைகள் முன்னோடியாகத் திகழ்ந்தன.

பசுமைப்புரட்சி காலத்தில் உரிய நேரத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருள்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்தது. பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. வீரிய விதைகள் விநியோகிக்கப்பட்டன.

விவசாயிகள் சாகுபடி செய்யும் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது, சந்தையில் அந்த விலைக்குக் குறைவாக விற்கும் நிலைமை ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் திட்டத்தை இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலம் அமல்படுத்தியது, நெல், கோதுமை, சர்க்கரை போன்றவற்றை போதிய அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்ள கிடங்கு வசதிகளும், அவற்றுக்கு ரயில் பாதை இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.

இப்போது இந்திய வேளாண்மை பற்றிப் பேசினாலே முதலில் நினைவுக்கு வருவது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதுதான். பருத்தி சாகுபடியில் இறங்கியவர்களும், அதிக பொருள் செலவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி வயலுக்கு அடித்தவர்களும்தான் அதிகம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதைத் தடுக்க, முதலில் விவசாயிகளை அழைத்து அவர்களின் மனத்தளர்ச்சி, விரக்தி மனப்பான்மை நீங்க, நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேச வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து மிகுந்த நம்பிக்கையோடு இறக்குமதி செய்யப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளும், அதிக விலைக்கு வாங்கப்பட்ட பூச்சிக் கொல்லிகளும் பலன் தராமல் பருவமழை பொய்த்ததால் கடன் சுமை அதிகரித்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அப்படி இறக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ஒரு லட்ச ரூபாயை உதவித்தொகையாகத் தருகிறது.

வறுமை தாளாமல் விவசாயக் கூலிகள் தவிக்கும்போது அவர்களுக்கு அரசின் உதவி உரிய முறையில் கிடைக்காமல் போவதால், நக்சல்களின் நெருப்புப் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு நக்சல்களாக மாறுகின்றனர்.

தற்கொலைக்கு அடுத்தபடியாக இந்திய வேளாண்மையை மிகவும் பாதிக்கும் அம்சம் உற்பத்தித் திறன் ஆகும். நம்மைவிடக் குறைந்த சாகுபடி பரப்பைக் கொண்டுள்ள சீனா, நம்மைவிட அதிக அளவு தானிய விளைச்சலைத் தருகிறது.

நிலத்திலிருந்து விளைவது குறைவாக இருப்பது ஒருபகுதி என்றால், விளைந்த தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையும் அறுவடை செய்து எடுத்து வரும்போது சேதாரப்படுத்துவதன் மூலம் 10 சதவீத உற்பத்தியை வீணாக்குகிறோம்.

எல்லா பருவகாலத்திலும் பூச்சி அரிக்காமல், பறவைகள், எலிகள் பாழ்படுத்தாமல் தானியங்களையும் இதர விளைபொருள்களையும் சேமித்து வைக்க கலன்கள், குதிர்கள், கிடங்குகள், குளிர்பதன வசதி இல்லாமல் 40 சதவீதம் வரை வேளாண் சாகுபடி வீணாகிறது.

ஓராண்டு சாகுபடி பற்றாக்குறையாக இருப்பதும் அடுத்த ஆண்டு உபரியாவதும் தொடர்கிறது. பற்றாக்குறையின்போது பணமே கிடைக்காமல் ஏழ்மையில் மூழ்க நேரிடுகிறது என்றால், உபரியின்போது கொள்முதல் விலை சரிந்து, போட்ட அசலைக்கூட எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 60 சதவீத பங்கைப் பிடிக்கின்றனர்.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தில் நேரடியாக ஈடுபட்டு, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீத அளவுக்கு மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.

இந் நிலையில் பெரிய தொழில்நிறுவனங்கள் இத் தொழிலில் ஈடுபட்டால் நிலங்களை வளப்படுத்துவது, பாசன வசதி அளிப்பது ஆகியவை விரிவான அளவில் நடைபெறும். அடுத்து தரமான விதைகள், விலைகுறைந்த இயற்கை உரங்கள், நவீன சாகுபடி உத்தி ஆகியவற்றைப் பின்பற்ற முடியும்.

திசு வளர்ப்பு மூலம் செடிகளையும் கொடிகளையும் வளர்ப்பது, ஒட்டுச் செடிகளைப் பயன்படுத்துவது என்று வேளாண்மையில் லாப நோக்குடன் புதியவை புகுத்தப்படும். அடுத்தபடியாக விளைபொருள்களைச் சேதம் இன்றி அறுவடை செய்வதும் கிடங்குகளுக்கும் விற்பனை நிலையங்களுக்கும் கொண்டு செல்வது சாத்தியம்.

இடைத்தரகர் இன்றி, உற்பத்தியாளருக்கும் கணிசமான தொகை கிடைக்கும் நுகர்வோருக்கும் கட்டுப்படியாகும் விலையில் பண்டங்கள் கிடைக்கும். கூட்டுறவுத்துறை வலுப்பெறும். உற்பத்தி, விநியோகம், விற்பனை போன்றவை விவசாயிகளுக்குச் சாதகமாக மாறும்.

அதன் பிறகு தொழில் நிறுவனங்களின் தலையீட்டால் ஏற்படும் மூன்றாவது வேளாண்மைப் புரட்சியானது “”விவசாயியைச் சார்ந்த வேளாண்மை” என்ற நிலைமையை மாற்றி, “”வேளாண்-வர்த்தகம் சார்ந்த வேளாண் தொழில்” என்ற நிலைமைக்குக் கொண்டு செல்லும்.

(கட்டுரையாளர்: முன்னாள் ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு ஆணையர்.)

——————————————————————————————-

காலச்சுழலில் கழனியும் உழவரும்

 

தமிழக விவசாயி காசி
தமிழக விவசாயி காசி

 

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அறுபது விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் விவசாயத்தையும் அதனைச் சார்ந்த தொழில்களையும் சார்ந்தே வாழ்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும் இப்போது பற்றாக்குறையைப் போக்க உணவு இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், தமிழகத்தில் மாறிவரும் விவசாயச்சூழல் மற்றும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பலவிதமான பிரச்சனைகள் குறித்து அன்பரசன் தயாரித்து வழங்கும் சிறப்புத் தொடர்.

———————————————————————————-

ரிலையன்ஸ் கடைகளுக்கு நிபந்தனை விதிக்க ராமதாஸ் யோசனை
சென்னை, ஜூலை 7: சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்களை விற்கக் கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

ரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட போன்ற பன்நாட்டு நிறுவனங்களும் சில்லறை வணிகத்தில் ஈடுபடத் தொடங்கி இருக்கின்றன. நகரங்கள் தோறும் கடைகளைத் திறந்து வைத்துள்ளன.

இதனால் பாரம்பரியமிக்க சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களும், சில்லறை வணிகக் கடைகளால் வேலை வாய்ப்பு பெற்று வரும் பல லட்சம் தொழிலாளர்களும் நடுத் தெருவுக்கு வரும் ஆபத்து உருவாகி வருகிறது.

இந்த ஆபத்தான நிலைமையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் சென்னை போன்ற நகரங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தாராள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் இந்த கடைகளால் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள பல லட்சம் பேர் வேலை இழக்கும் ஆபத்து ஏற்படப் போகிறது.

கேரளத்தில் அனுமதி இல்லை: இந்நிலையில் பக்கத்து மாநிலமான கேரளத்தில் ரிலையன்ஸ் கடைகளுக்கு இனிமேல் அனுமதி வழங்குவது இல்லை என்றும் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அவற்றை ரத்து செய்வது என்றும் அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

மேற்கு வங்கத்தில் ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்று மிகக் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

கேரளத்தைப் போன்று தமிழகத்திலும் ரிலையன்ஸ் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். இனிமேல் அனுமதி வழங்கக் கூடாது என்று உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்கு ஆணையிட வேண்டும். அல்லது மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனையைப் போன்று உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்ற நிபந்தனையாவது விதிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

———————————————————————————————————————————–

உதட்டளவு அக்கறை கூடாது…!

“விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு’ என்று தனது சுதந்திர தின உரையில் பிரதமர் வலியுறுத்தி இருப்பதும், விவசாயிகளுக்குப் பல சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டிய விஷயங்கள்.

உலகமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம், தாராளமயமாக்கல் போன்ற கோஷங்களுடன் இன்றைய பிரதமர், நிதியமைச்சராக இருந்தபோது இந்தியாவுக்கு ஒரு புதிய பொருளாதாரத் திட்டத்தை வகுத்ததுமுதல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ விவசாயிகளும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களும்தான்.

கடந்த 15 ஆண்டுகளில் விவசாயம் மிகக் குறைந்த ஊக்கத்தையும், வளர்ச்சியையும்தான் காண நேர்ந்தது என்பதைப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. கிராமப்புறங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை, நமது பொருளாதாரப் பத்திரிகைகளும் புதிய பொருளாதாரத் திட்ட விற்பனையாளர்களும் உருவாக்க முற்பட்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், விவசாயமும், விவசாயிகளும் இதுவரை சந்தித்திராத ஒரு சோதனையான கட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான்.

சமீபத்தில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கமிஷன் ஒன்றின் அறிக்கையின்படி, கடனால் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. ஆந்திரத்தில் 82 சதவிகிதம், தமிழகத்தில் 75 சதவிகிதம், பஞ்சாபில் 65 சதவிகிதம் விவசாயிகள், விவசாயத்திற்காக வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் தவிக்கின்றனர் என்கிறது இந்த அறிக்கை. சராசரியாக, இந்திய விவசாயி ஒவ்வொருவரின் கடன் சுமையும் ஏறத்தாழ ரூ. 25,985 என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இப்படிக் கடன் சுமையில் சிக்கிக்கொள்ளும் விவசாயிகளில் பலரும், தனியாரிடம் கடன் வாங்கியவர்களாக இருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

லாபகரமாக இல்லாவிட்டால், ஏன் விவசாயம் செய்ய வேண்டும்? அந்த விளைநிலங்களைப் “ப்ளாட்’ போட்டு வீடு கட்டவோ, தொழிற்சாலை அமைக்கவோ பயன்படுத்திவிட்டு, நமக்குத் தேவையான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாமே? இப்படியொரு யோசனையை முன்வைக்கிறார்கள், புதிய பொருளாதாரக் கொள்கையின் விற்பனைப் பிரதிநிதிகள்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விவசாயிகளுக்கு ஏகப்பட்ட மானியங்களை அந்த அரசுகள் வழங்குகின்றன. தங்களது தேவைக்கு அதிகமாக உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கின்றன. நச்சுப் புகையால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை, இந்தியா போன்ற நாடுகளில் நிறுவ ஊக்குவிப்பதும், அவர்களது தேவைக்கான உணவுப் பொருள்களைத் தாங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதும் இந்த நாடுகளின் நோக்கம் என்று நாம் கூறவில்லை. ஆனால், அந்த நாடுகள் விவசாயத்துக்கு அளிக்கும் ஊக்கத்திற்கு என்ன காரணம் என்று யோசிக்கச் சொல்கிறோம்.

நமது விவசாயிகளுக்குத் தரும் விலையைவிட அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யும் போக்கு சமீபகாலமாகக் காணப்படுகிறது. வேண்டுமென்றே இந்திய விவசாயிகளை விவசாயத்தைப் புறக்கணிக்கச் செய்யும் முயற்சி நடைபெறுகிறதோ என்கிற சந்தேகம்கூட எழுகிறது. அது ஆபத்தை விலைகொடுத்து வாங்கும் செயல்.

ஒரு தேசத்தின் பாதுகாப்பு என்பது எல்லைகளைக் காக்கும் ராணுவத்திடம் மட்டும் இல்லை. தனது நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் தன்னிறைவிலும் இருக்கிறது. அடுத்த வேளைக் கஞ்சிக்கு அயல்நாட்டுக் கப்பலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுமானால், அதைவிட பலவீனமான நாடு எதுவும் இருக்க முடியாது. இதை எழுபதுகளிலேயே புரிந்து கொண்டிருந்ததால்தான், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி “பசுமைப்புரட்சி’ என்கிற கோஷத்துடன் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வழி வகுத்தார்.

இந்திரா காந்தியின் மருமகள் தயவால் பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங்கின், விவசாயிகள் மீதான அக்கறை உதட்டளவில் நின்றுவிடாமல் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று நம்புவோம். விவசாயம் சார்ந்த பொருளாதாரமாகத் தொடர்வதுதான் இந்தியாவின் வருங்காலத்துக்கு நன்மை பயக்கும்!

——————————————————————————————————————

இது புதுசு: நலம், நலமறிய ஆவல்!

வயதிலும் இளைமையாய் ஜொலிக்க வேண்டும் என்பது மக்களின் ஆசையாக இருக்கிறது. ஆனால் உலர்ந்த தலைமுடியைப் பராமரிப்பது எப்படி?, எண்ணெய் பிசுக்கான முகத்தைச் சரி செய்வது எப்படி?, சத்தான உணவு எது?…. என்பது போன்ற பல்வேறு தகவல்களையும் ஒரே இடத்தில் பெறுவது எப்படி என்ற கவலையும் கூடவே தொற்றிக் கொள்கிறது.

மக்களின் எந்தத் தேவையையும் உடனுக்குடன் தெரிந்து கொண்டு அதைப் பணமாக்கத் தெரிந்திருப்பதுதான் பிசினஸýக்கு அழகு. இதற்கு உதாரணமாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் மக்களின் இந்த ஆசையையும் பூர்த்தி செய்ய களமிறங்கியிருக்கிறது. ரிலையன்ஸ் வெல்னஸ் என்ற பெயரில் “ஆரோக்கிய வணிக’த்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

பரீட்சார்த்தமாக முதலில் ஆரம்பித்திருக்கும் இடம் ஹைதராபாத். விரைவில் பெங்களூர், சென்னை, மும்பை நகரங்களில் துவங்க இருக்கிறார்கள்.

இது குறித்து ரிலையன்ஸ் வெல்னஸ் நிர்வாக இயக்குநர் நினு கண்ணாவிடம் பேசினோம்.

“”மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஆனால் ஆரோக்கியம் என்பது ஆரோக்கிய உணவு, ஆரோக்கியம் குறித்த மருந்துகள், அது குறித்த புத்தகங்கள்- சி.டி.கள், உடற்பயிற்சி கருவிகள், யோகா பயிற்சி என பலதுறைச் சம்பந்தமுடையதாக இருக்கிறது. அதை ஒருங்கிணைப்பதற்குத்தான் இந்தத் திட்டம்” என்றார்.

இந்தியா முழுதும் 51 நகரங்களில் இப்படி 1200 நிலையங்களை ஆரம்பிக்க இருக்கிறார்கள். 1500 சதுர அடியில் இருந்து 3,500 சதுர அடி பரப்பில் இது அமையும். காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இயங்கும் இந் நிலையத்தில் இலவசமாக ஆரோக்கியம் குறித்த ஆலோசனை வழங்குவதற்கான மருத்துவர் ஒருவரும், கண் பரிசோதனை செய்வதற்கான மருத்துவரும் இருப்பார்கள். “”தோல் பொலிவு, தலைமுடி பராமரிப்பு, உயரம்- உடல் எடைக்கான விகிதம், சர்க்கரை அளவு போன்றவற்றுக்கான டிப்ஸ் தருவது மட்டும்தான் இந் நிலையத்தில் மருத்துவர் இருப்பதற்கான பிரதான நோக்கம். இது கிளினிக் போலவோ, அல்லது மருந்து கடை போலவோ நோயாளிகளைக் குணப்படுத்தும் இடமாக இல்லாமல், நோய் வராமல் தடுப்பதற்கான ஆரோக்கிய கூடமாகச் செயல்படும். இதற்காக மாதந்தோறும் ஹெல்த் புரோக்ராம்கள் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் அவர்.

அதே போல இங்கு பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் உடல்நிலை குறித்த தகவல்களையும் வெப்சைட்டில் தனிப்பக்கம் ஏற்படுத்திப் பதிவு செய்து வைத்திருப்போம். அதற்கான குறிப்பு அட்டை ஒன்றையும் அவர்களுக்கு வழங்குவோம். திடீர் விபத்து நேரங்களில் அவரைப் பரிசோதிக்கும் மருத்துவர், இந்தக் குறிப்பு அட்டை மட்டும் இருந்தால் அவருடைய ரத்த வகை என்ன, எந்த மாதிரியான அலர்ஜி உள்ளவர், முகவரி என்ன போன்ற தகவல்களை அந்த வெப்சைட்டில் சுலபமாகப் பெறமுடியும்” என்கிறார் நினு கண்ணா.

ரிலையன்ஸ் ஃப்ரஸ்ஸýக்கு சில இடங்களில் எதிர்ப்பு ஏற்பட்டது போல இதற்கு எதிர்ப்புகள் ஏற்பட்டதா? என்றோம். சிரித்துக் கொண்டே சொன்னார்.

“”இந்த நிமிடம் வரை எங்கள் நிலையம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது” .

Posted in Advice, Agriculture, Air-tel, Airtel, Ambani, Analysis, BBC, BigBox, BMI, Boom, Channels, Chat, Consultation, Consulting, Consumers, Cultivation, Customers, Diet, Distribution, Doc, Doctor, Drinks, Eat, Economy, Farmer, Farming, Fat, Fertilizer, Free, Freight, Goods, Growth, Health, Herbs, Ideas, Industry, Interviews, Investment, Lalloo, LalooY, Lalu, Luxury, Malls, Management, Manufacturing, Marketing, medical, milk, Mittal, Mktg, Necessity, Need, Nutrition, Op-Ed, Operations, Paddy, PMK, Podcast, Production, Protein, Ramadas, Ramadoss, Reliance, Reliance Fresh, Reliance Industries Limited, retail, Sell, service, Shopping, Shops, Snippets, solutions, Specials, Suggestions, support, Swaminathan, Tablets, Telecom, Tummy, Vendors, Vitamins, Wal-Mart, Walmart, weight, Wellness, Yadav | Leave a Comment »

Diarrhea – Solutions by Ayurvedha

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்றுக் கடுப்புக்கு முடிவு!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி வயிற்றுக் கடுப்பு அத்துடன் வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது. ஆங்கில மருந்துகள் தற்காலிக நிவாரணம் மட்டுமே தருகின்றன. IRRITABLE BOWEL SYNDROME என ஆங்கில மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த உபாதை நீங்க ஆயுர்வேத மருத்துவம் கூறவும்.

கே.இராசேந்திரன், வாலாட்டியூர், வேலூர்.

வயிற்றுக் கடுப்புடன் சிறிது சிறிதாக வெண்மையான கொழகொழப்பு திரவக் கசிவுடன் வயிற்றுபோக்கு காணும் இந்த உபாதைக்கான முக்கிய காரணங்களாக மைதா மாவினால் செய்யப்படும் பரோட்டா, எண்ணெய்யும் காரமும் கலந்து அதற்கு சைடு டிஷ்ஷாகக் குருமா சாப்பிடுவது, அதன் மேல் சூடான காபி குடிப்பது, அடிக்கடி குளிர்பானங்களைக் குடிப்பது, ஒவ்வாமை உணவுப்பொருட்களாகிய பாலுடன் உப்பையும், முள்ளங்கியுடன் உளுத்தம்பருப்பையும், வாழைப்பழத்தை தயிர், மோருடனும் மணத்தக்காளிக் கீரையுடன் மிளகையும், வெண்கலப் பாத்திரத்தில் பத்து இரவுகள் வைத்த நெய்யையும் சூடான தண்ணீரில் தேனைக் கலந்து பருகுவதும், பசலைக் கீரையுடன் எள்ளுப் பொடியும், வெயிலில் அலைந்துவிட்டு வந்தபின் திடீரென்று குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது, குடிப்பது போன்றவற்றாலும் இந்த உபாதை ஏற்படுகின்றது.

இதுபோன்ற உணவு மற்றும் செய்கைகளால் நம் உடலிலுள்ள நீர்மயமான வஸ்துக்கள் அனைத்தும் சீற்றமடைகின்றன. குடலில் பசியை மந்தப்படுத்தி மலத்துடன் இந்தக் கெட்டுப்போன நீர் கலந்து குடல் வாயுவினால் கீழ் நோக்கித் தள்ளப்பட்டு, நீங்கள் குறிப்பிடும் வயிற்றுக் கடுப்பையும், வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்துகின்றது. இதில் மலம் சொற்பம் சொற்பமாக அடிக்கடி, முக்கலுடனும், முனகலுடனும் வெளியேறும்.

மேற்குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்த்து காலையில் ஒரு டீஸ்பூன் தேயிலை ஒரு கப் நீரில் போட்டு நன்றாக வெந்ததும் எடுத்து வடிகட்டி சிறிது சர்க்கரை கலந்து பருகலாம். சிறந்த தேயிலையில் காஃபின் ஒரு பங்கும் துவர்ப்பு மூன்று பங்கும் உள்ளன. துவர்ப்பு வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும், சிறுநீரைப் பெருக்கும் செய்கை கொண்டது.

காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாக வில்வக்காயின் உள்ளேயிருக்கும் பிசின் போன்ற சுளைப்பகுதி 1/2 ஸ்பூன் (2 1/2 கிராம்) + வெல்லம் 1/4 ஸ்பூன் + நல்லெண்ணெய் 1/2 ஸ்பூன் + அரிசித் திப்பிலித்தூள் 1/4 ஸ்பூன் + சுக்குப் பொடி 1/4 ஸ்பூன். இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் குழைத்து நக்கிச் சாப்பிடவும்.

காலை உணவாக சூடான புழுங்கலரிசி சாதத்தில் புதினாக்கீரையைச் சட்னியாகச் சேர்த்து சிறிது நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். புதினாக்கீரை ஜீரணமாகாமல் வரும் பெருமலப் போக்கைக் கட்டுப்படுத்தும் குணம் வாய்ந்தது. காலை உணவிற்குப் பிறகு ஆயுர்வேத மருந்தாகிய முஸ்தாரிஷ்டம் 15 மிலி + ஜீரகாரிஷ்டம் 15 மிலி + 1 வில்வாதி மாத்திரையை அரைத்துச் சேர்த்துச் சாப்பிடவும்.

மதிய உணவிற்கு ஒரு மணிநேரம் முன்பாக தாடிமாஷ்டகம் எனும் சூரணத்தை 1/2 ஸ்பூன் (2.5 கிராம்) அளவில் எடுத்து, ஒரு ஸ்பூன் சுத்தமான தேனில் குழைத்து நக்கிச் சாப்பிடவும். மதிய உணவின் முன் பாதியில் மிளகு சீரகப்பொடி அல்லது பருப்புப்பொடி, ஐங்காயப்பொடி போன்றவற்றில் ஒன்றை சூடான புழுங்கலரிசி சாதத்துடன் சிறிது ஆயுர்வேத மருந்தாகிய தாடிமாதி கிருதம் எனும் நெய் மருந்துடன் பிசைந்து சாப்பிடவும். மாங்காய் விற்பனைக்கு வந்துள்ள இந்த நேரத்தில் அதனுள்ளே இருக்கும் மாம்பருப்பை உலர்த்தி அத்துடன் கறிவேப்பிலையையும் சிறிது மிளகும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துச் சூடாக்கித் தாளித்து சிறிது உப்பு கலந்து கடைசியில் சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும். வயிற்றுக்

கடுப்பு, வயிற்றோட்டத்தைக் குறைக்கும்.

மாலையில் டீ ஒரு கப்பும், இரவு உணவிற்கு ஒரு மணிநேரம் முன்பாக வில்வாதி லேஹ்யத்தை 5 கிராம் (ஒரு ஸ்பூன்) நக்கிச் சாப்பிடவும். இரவில் கூவைக்கிழங்கு எனும் ஆரோரூட் மாவுக்கஞ்சி சிறிது மோர் கலந்து சாப்பிடவும். அதன்பிறகு காலை உணவிற்குப் பிறகு குறிப்பிட்ட மருந்தை மறுபடியும் 30 மிலி 1 வில்வாதி மாத்திரையுடன் சாப்பிடவும். இந்த உணவுமுறைகளையும் மருந்துகளையும் தொடர்ந்து 48 நாட்களாவது சாப்பிட வேண்டும்.

Posted in Alternate, Ayurvedha, Ayurvetha, Crap, Diarrhea, Food, IRRITABLE BOWEL SYNDROME, Liver, Loose Motion, medical, Medicine, Shit, solutions, Stomach, Tablets, Ulcer | Leave a Comment »

Mooligai Corner – Aamanakku

Posted by Snapjudge மேல் திசெம்பர் 16, 2006

மூலிகை மூலை: ஆமணக்கு!

விஜயராஜன்

ஆமணக்கு இலையைச் சுத்தம் செய்து நிழலில் உலர்த்திக் காய வைத்துக் கொளுத்தி, சாம்பலை எடுத்து சுத்தமான தண்ணீரில் கலக்க வேண்டும். கலக்கிய நீரை மட்டும் வடிகட்ட வேண்டும். வடிகட்டிய தண்ணீரைக் காய்ச்சினால் இதில் உப்பு கிடைக்கும். இந்த உப்பை கண்ணாடிப் புட்டியில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த உப்பை ஒரு தேக்கரண்டியளவு எடுத்து நொய்க் கஞ்சியில் கலந்து சிறிது பெருங்காயத்தையும் சேர்த்துக் குடித்து வர உடம்பு இளைத்து மெலிய ஆரம்பிக்கும். அல்லது இதே உப்பு, பார்லி, நெல்லி முள் சூரணம் வகைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர உடல் பருமன் குறைந்து வரும்.

தாய்மார்கள் ஆமணக்கு இலையில் நெய் தடவி அனலில் வாட்டி மார்புக் காம்பில் வைத்துக் கட்டி வரத் தாய்ப்பால் அதிகரிக்கும்.

ஆமணக்கு இலையைச் சின்னதாக அரிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்து கட்டி வர மூலக் கடுப்பு, கீல் வாதம், வாத வீக்கம் குணமாகும்.

ஆமணக்குத் துளிரை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கித் தொப்புளில் வைத்து கட்ட, தீராத வயிற்று வலி குணமாகும்.

ஆமணக்கு இலையுடன் கீழாநெல்லி இலையைச் சேர்த்து அரைத்து 30 கிராம் காலையில் மட்டும் 3 நாள் சாப்பிட்டு நான்காம் நாள் பேதிக்குச் சாப்பிட காமாலை குணமாகும்.

ஆமணக்கின் வேரை லேசாக நசுக்கி சிறிது தேனுடன் பிசைந்து கொஞ்சம் நீரில் 12 மணி நேரம் ஊற வைத்து மறுநாள் காலையில் இதைப் பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு நீரை மட்டும் 100 மில்லியளவு தினமும் காலையில் குடித்துவர வயிற்றின் பளுவும், உடல் பருமனும் வீக்கமும் குறையும்.

விளக்கெண்ணெய் 30 மில்லியளவு எடுத்து ஒரு டம்ளர் பசும்பாலிலோ அல்லது இஞ்சிச்சாறு கலந்தோ குடிக்க நான்கைந்து முறை பேதியாகும். பசியின்மை, வயிற்று வலி குணமாகும்.

விளக்கெண்ணெய் 1/2 தேக்கரண்டியளவு குழந்தைகளுக்கு உள்ளுக்குக் கொடுத்தால் மலம் கட்டியுள்ளது இளக்கமாகி குடலை விட்டு வெளியேறும்.

குழந்தைகளுக்கு ஆமணக்கு எண்ணெய்யுடன் பேயன் வாழைப்பழத்தைத் துண்டு துண்டாக அரிந்து ஊறப் போட்டு கற்கண்டைப் பொடி செய்து கலந்து தினமும் காலையில் 2 துண்டு வாழைப்பழமும் சிறிது எண்ணெய்யும் கொடுத்து வர சகல சூடும் தணிந்து ஆரோக்கியமாக வளரும்.

Posted in Aamanakku, Allopathy, Alternate, Corner, cure, Cures, Dhinamani Kathir, Dinamani, Eastern, Herbs, Homeopathy, Kadir, Medicine, Mooligai, Paatti Vaithiyam, Practices, Research, Tablets, Tamil, Traditional, unaani, Vijayarajan | Leave a Comment »