டி.ஆர். பாலுவின் மகன் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்: சுப்பிரமணியன் சுவாமி திடீர் புகார்
சென்னை, டிச. 6: சேது சமுத்திரத் திட்டத்தில் மண் அள்ளும் பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகனால் நடத்தப்படும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது:
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும், தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படும்.
இந்த திட்டத்தில் கடலில் மண் எடுத்து ஆழப்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தம் டி.ஆர்.பி. செல்வம் & கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் மகனுக்கு சொந்தமானது. எனவே, தனது மகனின் நிறுவனத்துக்கு லாபம் கிடைப்பதற்காக அரசின் ரூ. 2,500 கோடியை வீணாக்க அனுமதிக்க முடியாது.
சேது திட்டம் கைவிடப்பட வேண்டும் என மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு 1999-ல் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
ஆனால், 2005-ல் இதே அமைச்சகம் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த கருத்து மாற்றத்துக்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை, நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.
இதேபோல 2002-ல் ராமர் பாலம் குறித்து மத்திய அரசின் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஆனால், இது தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து பொய்யான விவரங்களை மத்திய அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்திருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
சட்டம் ஒழுங்கு: தமிழகத்தில் கூலிப்படைகள் அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இந்த பிரச்னையில் மத்திய அரசு இனியும் மெüனமாக இருக்காமல் விரைந்து செயல்பட வேண்டும் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
சேது சமுத்திர திட்டத்தினால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து இந்தியக் கடலோர காவல்படை ஆய்வு.
![]() |
![]() |
இந்தியா இலங்கையிடையேயான பாக் ஜலசந்தி |
சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது ஏற்படும்
பாதுகாப்பு ஆபத்து தொடர்பான விளைவுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் ஆர். எஃப். கான்ட்ராக்டர் தெரிவித்தார்.
இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இத் தகவலை வெளியிட்டார்.
சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் வருமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த வைஸ் அட்மிரல் ஆர்.எப். கான்ட்ராக்டர்,
“பெரிய அளவில் இந்தத் திட்டம் உருவாகி வருவது உங்களுக்குத் தெரியும். இது, கடல்சார் பிரச்சினைகளைக் கொண்டதால், கடற்படை மற்றும் கடல்சார் அமைப்புக்களின் கருத்துக்களை அரசு கேட்டது. திட்டம் செயல்படுத்தப்படும்போது, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடலோரப் பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்லும்போது, அங்கு ஏதாவது நடக்கலாம். அதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கும். இதுபற்றி நாங்கள் விவாதித்தோம். இதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம்” என்றார் வைஸ் அட்மிரல் ஆர்.எப். கான்ட்ராக்டர்.
சேது கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைமுறைக்கு வரும். பனாமா, மலாக்கா மற்றும் சூயஸ் கால்வாய்களிலும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று கான்ட்ராக்டர் தெரிவித்தார்.
இலங்கையில் நிலவும் சூழ்நிலையை அடுத்து, இந்தியாவுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலையை கவனத்தில் கொண்டிருப்பதாகவும் இந்தியக் கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் கான்ட்ராக்டர் தெரிவித்துள்ளார்.