சிங்குரில் போராட்டத்தைத் தூண்டிவிடும் போட்டி நிறுவனத்தின் பெயரை வெளியிடத் தயாரா?: டாடாவுக்கு மாருதி சவால்
புது தில்லி, ஜன. 25: மேற்கு வங்க மாநிலம் சிங்குரில், டாடா கார் தொழிற்சாலைக்கு விளைநிலங்களை கையகப்படுத்தியதற்கு எதிரான போராட்டத்தை, எந்த போட்டி நிறுவனம் தூண்டி விடுகிறது என பெயரை வெளியிடத் தயாரா என்று டாடா நிறுவனத்துக்கு மாருதி கார் நிறுவனம் சவால் விடுத்துள்ளது.
டாடா நிறுவனஅதிபர் ரத்தன் டாடா எழுப்பிய இந்தப் புகார் குறித்து, மாருதி உத்யோக் நிறுவன நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜகதீஷ் கத்தர் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
டாடா எந்தப் போட்டி நிறுவனத்தைக் குறிப்பிடுகிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவருக்குத் தெரிந்திருப்பதால், அதை அவர் வெளியில் சொல்ல வேண்டும்.
போட்டியாளர்களின் திட்டங்களைக் குலைக்கும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபடுவது இல்லை. ஆரோக்கியமான போட்டியில்தான் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் என்றார்.
சிங்குர் ஆலையில் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ரூ.1 லட்சம் விலையிலான மக்கள் கார் சந்தைக்கு வந்தால் அது மாருதி நிறுவனத்தின் எம்-800 கார் விற்பனையை பாதிக்கும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஏனெனில், எம்-800 கார்தான் தற்போது நாட்டிலேயே மிகவும் விலை குறைவாக சுமார் ரூ.2 லட்சத்துக்குக் கிடைக்கிறது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜகதீஷ் கத்தார் கூறியதாவது: எம்-800 விற்பனைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இரு சக்கர வாகனங்களுக்கும் கார்களுக்கும் உள்ள இடைவெளியை, ரூ.1 லட்சம் விலையிலான கார், குறைக்கும் என்பதால், எம்-800-க்கு அது உதவிகரமாகவே இருக்கும் என்றார்