Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Suspension’ Category

Convict to MLAs – State of BJP and Gujarat Police & Politics nexus

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2007

தினமலர்

காக்கி சட்டையிலிருந்து கதருக்கு மாறும் குஜராத் மாஜி போலீசார்

ஆமதாபாத் :குஜராத்தில், காக்கி சீருடையில் இருந்து அரசியலுக்கு தாவுவது சாதாரணமாக நடந்து வருகிறது. பணியில் இருந்து சஸ்பெண்ட் செய் யப்படும் போலீசார், அரசியலில் வெகு கைத் தேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

தற்போதைய நிலையில், லிம்டி தொகுதியின் காங்., எம்.எல்.ஏ., பவன் பர்வாத், ஆரம்பத்தில் ஆமதாபாத் நகரில் ஏட்டாக பணியாற்றியவர். ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட் டார். இந்த போலீஸ் வேலை யே வேண்டாம் என்று அரசியலுக்கு வந்தவர், எம்.எல். ஏ.,வாகிவிட்டார்.

இவர் மட்டுமின்றி, இவர் போல ஏராளமானோர், போலீஸ் துறையில் இருந்து அரசியலுக்கு தாவி உள்ளனர்.கடந்த 1990ம் ஆண்டுகளின் துவக்கத்தில், ஆமதாபாத் நகர் சோலா சாலையில் பா.ஜ., தொண்டர் ஒருவர் கொலை வழக்கில் சிக்கினார் பர்வாத்.

இதற்கு நேரடி சாட்சி பா.ஜ.,வின் இன்னொரு இளம் தொண்டர் அமித் ஷா. ஆனால், கோர்ட்டில் சாட்சியத்தை மாற்றி கூறியதால், பர்வாத் இன்னொரு தண்டனையில் இருந்து தப்பினார்.

இப்போது அமித் ஷாவின் நிலை என்ன தெரியுமா?

அவர் தான் மாநிலத்தின் உள் துறை இணை அமைச்சர்.ஆமதாபாத்தை சேர்ந்த இன்னொரு கான்ஸ்டபிள், ஜெதா பர்வாத்தும், சிறை உடைப்பு குற்றத்துக்காக, கைதியை தப்ப விட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட் டார். இப்போது தோடா மாவட்டம், ஷெகிரா தொகுதியின் பா.ஜ., எம்.எல்.ஏ., இவர். இப்போது, இந்த பட்டியலில் இன்னும் பலர் சேர்ந்துள்ளனர்.

சூரத் மாவட்டம் கொரியாசி தொகுதியில் பா.ஜ., டிக்கெட் கேட்டிருப்பவர் சி.ஆர்.பட்டேல். சூரத் நகரில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்தவர் இவர். இவர் மீதும் ஏராளமான ஊழல் புகார்கள் குவிந்ததால், 1991ம் ஆண்டில் அரசியலுக்கு தாவிவிட்டார். நாளிதழ் நடத்தி பிரபலமடைந்தார். வைரவிழா கூட்டுறவு வங்கியில் ரூ. 58 கோடி கடன் வாங்கி, அதை திரும்ப செலுத்தாததால், ஒன்பது மாதம் சிறை தண்டனையும் அனுபவித்த சி.ஆர்.பட்டேல், இப்போது பா.ஜ.,வில் ஒரு முக்கியப் பிரமுகர்.

இவர் முதல்வர் நரேந்திரமோடி தீவிர ஆதரவாளர். அவரை இன்னொரு சத்திரபதி சிவாஜியாக வர்ணிப்பவர். மோடிக்காக பல இயக்கங்களை நடத்தியவர். சமீபத்தில் கூட ஜென்மாஷ்டமியின் போது, மோடியை கடவுள் கிருஷ்ணர் போல சித்தரித்து இளைஞர்களுக்கு 12 ஆயிரம் டி ஷர்ட்கள் வழங்கியவர். இதனால், தனக்கு உறுதியாக, “சீட்’ கிடைக்கும் என்று சி.ஆர்.பட்டேல் நம்புகிறார்.

குட்ச் தொகுதிக்கு பா.ஜ.,வில் சீட் கேட்டு இருப்பவர் ஜயேஷ் காத்வி. இவரும் முன்னாள் கான்ஸ்டபிள் தான். சூரத்தில் வேலை பார்த்துவிட்டு, சாராய வழக்கு காரணமாக, குட்ச்சுக்கு தண்டனை இடம் மாற்றம் பெற்றவர். அரசியலுக்கு தாவிவிட்டதால், இனி போலீஸ் வேலையில் நீடிக்க அவர் விரும்பவில்லை.

ஆமதாபாத் கிரைம் பிராஞ்சில் வேலை பார்த்த பி.கே.ஜடேஜாவும் குட்ச் தொகுதி, “சீட்’டுக்கு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால், இவர் தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்ற அடிப்படையிலும், குஜராத் பூகம்பத்தின் போது, புதையுண்ட பகுதிகளில் பொருட்களை திருட முயன்ற பலரையும் கைது செய்து சிறையில் அடைத்தவர் இவர்.

இதேபோல, எந்த தண்டனையும் பெறாத, சூரத் நகர உதவி போலீஸ் கமிஷனர் எம்.கே.பும்படியாவும், சபர்காந்தா மாவட்டத்தில் பா.ஜ.,வில், “சீட்’ கேட்டிருக்கிறார். தனக்கு எப்படியும், “சீட்’ கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தனது போலீஸ் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டார்.

மறைந்த சிமன்பாய் பட்டேலின் நம்பிக்கைக்குரிய ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.எம்.ஷா, தனது சொந்த தொகுதியான தான்துகாவில் காங்., “சீட்’டுக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

Posted in Ahmedabad, Allegations, Arrest, Belief, BJP, Bribe, Bribery, Campaign, Congress, Convict, Correctional Forces, Corrupt, Corruption, crimes, Elections, Employment, escape, Exploit, Finance, God, Gujarat, Hinduism, Hindutva, inmates, Jail, job, Justice, kickbacks, Kutch, Law, Loans, MLA, Modi, MP, Narendhra Modi, Narendra Modi, Narenthira Modi, Narenthra Modi, nexus, Order, Police, Politics, Polls, Power, Prison, Prisoners, Religion, resign, resignation, Retired, Scams, State, Surat, Suspend, Suspension, Vote, voters | Leave a Comment »

SriKrishna Commission Report – Pay Commission suggests Firing over Suspension

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 17, 2007

ஆபத்துக்கு அச்சாரம்!

மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கும் ஒரு பிரச்னை நிர்வாகத்தையும், நாட்டின் வருங்காலத்தையும் பெரிய அளவில் பாதிக்கும் தன்மையது என்பதால், தவறான முடிவு எடுக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் எழுகிறது. இந்த விஷயம் ஊடகங்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை என்பது அதைவிட வருத்தமாக இருக்கிறது.

முன்னாள் நீதிபதி பி.எஸ். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆறாவது ஊதிய கமிஷன் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது மே மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது. இந்த அறிக்கையை அரசு அப்படியே ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்றாலும், அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் வருங்காலத்தில் அரசு ஊழியர்களின் பணி நியமனங்கள் மற்றும் அவர்களது ஊதியங்கள் தீர்மானிக்கப்படும்.

தான் சமர்ப்பிக்க இருக்கும் ஆறாவது ஊதிய கமிஷன் பற்றி சமீபத்தில் பேசும்போது, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.

இனிமேல், மூத்த அரசு அதிகாரிகளின் நியமனத்தில் வேலை உத்தரவாதப் பிரிவு அகற்றப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் அவர்கள் பணியிலிருந்து அகற்றப்படும் வகையில் திருத்தங்கள் செய்ய சிபாரிசு செய்யப்போவதாக அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

தற்போதைய அரசு ஊழியர்களுக்கான சேவை விதிகளின்படி, ஓர் அரசு ஊழியர் தவறிழைத்திருக்கிறார் என்று நிரூபிக்கப்படாதவரை அவரை வேலையிலிருந்து அகற்ற முடியாது. அதாவது, திறமையின்மை ஒருவரைப் பதவியிலிருந்து நீக்க சரியான காரணமாக இருக்காது.

நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கருத்துப்படி, அரசு ஊழியர்கள் தங்களுடைய பணி நிரந்தரமானது என்கிற காரணத்தால் அலட்சிய மனப்போக்குடன் செயல்படுகிறார்கள் என்பதுடன் பொதுமக்களையும் அவர்களது கோரிக்கைகளையும் பொருள்படுத்துவதில்லை. ஒருவகையில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கூற்றில் உண்மை இருக்கிறது. ஆனால், அவர் மறந்துவிடும் மற்றொரு பக்கமும் இருக்கிறது.

அரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளும் மேலதிகாரிகளும் இடமாற்றம் செய்ய முடியுமே தவிர பணியிலிருந்து அகற்ற முடியாது என்பதால்தான், இன்னமும் பல அதிகாரிகள் நேர்மையாகவும் பயமின்றியும் செயல்பட முடிகிறது.

ஆட்சியில் இருப்பவர்களிடம் பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை அளித்துவிட்டால், தங்களுக்கு அடிபணிந்து நடக்காத அதிகாரிகளை அகற்றிவிட்டு, குற்றேவல் புரியத் தயாராக இருக்கும் அதிகாரிகளை மட்டும்தான் வைத்துக் கொள்வார்கள். இதுவே, நிர்வாகம் சீர்கெடவும், அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யவும், ஊழல்கள் அதிகரிக்கவும் வழிகோலிவிடும் என்பது ஏனோ நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவுக்குத் தெரியாமல் போய்விட்டது.

தனியார் வர்த்தக நிறுவனங்களிலுள்ள திறமையும் சுறுசுறுப்பும் ஏன் அரசு நிர்வாகத்தில் இல்லை என்பதற்கு, அரசு ஊழியர்களின் சேவை விதிகள்தான் காரணம் என்பது நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கருத்து. முதலாவதாக, அரசு இயந்திரத்தை, வியாபார நிறுவனங்களுடன் ஒப்பிடும் போக்கு அபத்தமானது. மக்களின் சேவைக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசு நிர்வாகமும், வியாபார லாபத்துக்காக நடத்தப்படும் தொழில் நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. எந்தவிதத்திலும் ஒப்பிடத்தக்கவை அல்ல.

அரசு நிர்வாகம் செம்மையாக இல்லாமல் இருப்பதற்கும், மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்காமல் இருப்பதற்கும், சுறுசுறுப்பாகவும் பொறுப்புணர்வுடனும் இயங்காமல் இருப்பதற்கும் காரணம், அந்த நிர்வாகத்தை நடத்துகின்ற நமது அரசியல் தலைவர்கள்தான் மிக முக்கியமான காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. நமது அரசியல்வாதிகளின் தரத்திலும், அவர்களது செயல்பாடுகளிலும், கண்ணோட்டத்திலும் மாறுதல் ஏற்படாத வரையில் நிர்வாகச் சீர்திருத்தம் என்பது வெறும் கானல்நீராகத்தான் இருக்க முடியும். ஆட்சியாளர்கள் திறமைசாலிகளாகவும், தூய்மையானவர்களாகவும் இருப்பார்களேயானால், அரசு நிர்வாகமும் அதற்குத் தகுந்தாற்போல மாறும் தன்மையது என்பதுதான் உண்மை.

அரசு ஊழியர்களுக்கான சேவை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, அவர்களை எப்போது வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்யும் அதிகாரம் ஆட்சியாளர்கள் கையில் கொடுக்கப்படுவது ஆபத்துக்கு அச்சாரம் போடும் விஷயம். இதனால் பாதிக்கப்படப் போவது திறமையற்றவர்களும் ஊழல் பேர்வழிகளுமல்ல. மாறாக, திறமைசாலிகளும் நேர்மையானவர்களும்தான். விபரீதத்தை விலை கொடுத்து வாங்கிவிடக் கூடாது!

Posted in Appeals, Commission, Compensation, Corruption, employees, Fired, Government, Govt, job, Justice, kickbacks, Krishna, Law, Mull, Order, Pay, Report, Salary, Security, Sri Krishna, SriKrishna, Suggestions, Suspend, Suspension, Work | Leave a Comment »

State of the Justice System in India (BMW case: NDTV exposes prosecution-defence nexus)

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

வழக்கறிஞர்களுக்கு “தண்டனையே’ கிடையாதா?

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

ஒரு சாலை விபத்து (பி.எம்.டபிள்யூ.) வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரும், எதிரியின் வழக்கறிஞரும் சேர்ந்து சாட்சியத்தைக் குலைப்பது பற்றி பேசிக்கொண்டதை என்.டி.டி.வி. சில வாரங்களுக்குமுன் அம்பலப்படுத்தியதைப் பார்த்திருப்பீர்கள்.

அந்த வழக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னால் தில்லியில் நடந்த சாலை விபத்து பற்றியது. கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் குடிபோதையில் காரை ஓட்டி, பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த சிலரைக்கொன்றது பற்றியது அந்த வழக்கு. அவர் ஓட்டிய கார் பி.எம்.டபிள்யூ. என்ற வெளிநாட்டுக் கார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சி குல்கர்னி என்பவர். அரசுத் தரப்பு ஏதோ காரணத்துக்காக அவரை சாட்சிக் கூண்டில் ஏற்றவே இல்லை!

எதிரியின் வழக்கறிஞர் (பிரபலமான வழக்கறிஞர், காங்கிரஸ்காரரும் கூட), அரசுத் தரப்பு வழக்கறிஞர் (இவரும் பிரபலமான வழக்கறிஞர்தான். ஒரு ரூபாய் கட்டணம் மட்டுமே போதும், குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவேன் என்று தானாக முன்வந்தவர்) இருவரும், முக்கிய சாட்சியுடன் ஏதோ அன்னியோன்னியமாகப் பேசிக்கொண்டிருந்ததை என்.டி.டி.வி.யின் ரகசிய கேமரா படம் பிடித்துக் காட்டியது. அரசுத் தரப்பு வழக்கறிஞர், சாட்சியாக இருப்பவருக்கு “”புளூ லேபிள்” ஸ்காட்ச் விஸ்கியைக் காட்டி, குடிக்கிறீர்களா என்று கேலியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். எதிரியின் வழக்கறிஞரோ, அந்த சாட்சியை ரகசியமாகச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

இந்தக் காட்சிகள் பல வட்டாரங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. வழக்கறிஞர்கள், பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்பதை அவை உணர்த்தின. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொலைக்காட்சியின் கலந்துரையாடலில் கலந்து கொண்ட தில்லி பார் கவுன்சில் தலைவர் மனான் அறிவித்தார். அதெல்லாம் நடக்காது, இரண்டு வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை இருக்காது, எல்லாவற்றையும் பூசி மெழுகிவிடுவார்கள் என்று அதே நிகழ்ச்சியில் நான் முடிவுரையாகத் தெரிவித்தேன். அந்த இருவரையும் சில நாள்களுக்கு மட்டும் “சஸ்பெண்ட்’ செய்து, மீண்டும் பணிக்குச் செல்ல அனுமதித்துவிட்டனர்.

அந்த வழக்கின் முழு விவரமும் என்னிடம் கிடையாது – இரு வழக்கறிஞர்களும் அவர்களுடைய பதவிக்குப் பொருந்தாத எதையும் செய்தார்களா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எதிர்காலத்தில் இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் வரக்கூடும். இப்போது நம்முடைய கவலை இந்த வழக்கு எப்படிப் போகிறது என்பதல்ல.

நம் நாட்டில் எந்தத் தொழில் செய்கிறவர் ஆனாலும் அவர் மக்களால் அலசப்படுகிறார். அரசு அதிகாரிகள், டாக்டர்கள், பொறியாளர்கள் என்று அனைத்து தரப்பாரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மக்களால் விமர்சிக்கப்படுகிறார்கள். அதே போல வழக்கறிஞர்கள் சமூகத்தை யாரும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதில்லை. வழக்கறிஞர்களின் குணாதிசயங்கள், தொழில்நடத்தும் விதம், பொதுவாக அவர்கள் நடந்துகொள்ளும் முறை ஆகியவை குறித்து ஊடகங்களும், பொதுவிஷயங்களில் அக்கறை உள்ள அமைப்புகளும் வெகு நெருக்கத்திலிருந்து ஆராய வேண்டும்; அந்த ஆய்வு முடிவை மக்கள் அறிய வெளியிட வேண்டும்.

என்னுடைய இளவயதில் மாவட்டங்களில் மாஜிஸ்திரேட்டுகளுடன் எனக்கு முதல் பரிச்சயம் ஏற்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் கிராமங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள மக்கள் வழக்கறிஞர்கள் பற்றிச் சொன்னதன்மூலம் பல விஷயங்கள் தெரிந்தன. வட இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் வீடு, நிலம் தொடர்பாக ஏதாவது ஒரு வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. ராணுவத்திலோ, நகரில் கிடைக்கும் சிறு வேலைகளிலோ கிடைத்த சொற்ப வருவாயை மக்கள் இந்த வழக்குகளுக்காகச் செலவிட்டனர். அதாவது அவை வழக்கறிஞர்களின் பைகளை நிரப்பின.

சாதாரண வழக்குகூட ஆண்டுக்கணக்கில் நீடித்தன, அல்லது நீட்டிக்கப்பட்டன. சில வழக்குகளில் வாதி, பிரதிவாதியின் மறைவுக்குப் பிறகு கூட வழக்குகள் பைசலாகாமல் நீடித்தன. உள்ளூர் போலீஸôர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இவற்றில் பங்கு இருந்தது. நம் ஜனநாயகத்தில் எல்லா துறைகளுக்கும், நடைமுறைகளுக்கும் உள்ள சாபக்கேடு இதற்கும் வந்து சேர்ந்தது, அதாவது பணக்காரர்களுக்குச் சாதகமாகவே நீதிமன்ற நடவடிக்கைகள் அமைந்துவிடுகின்றன.

வழக்குகளில் வாய்தா வாங்குவதிலேயே திறமைசாலியான ஒரு வழக்கறிஞர் குறித்து, வழக்கு விசாரணையின்போது நீதிபதியே சுட்டிக்காட்டினாராம்; அதையே அவர் தனக்கு அளித்த சான்றிதழாகக் கருதி பிற வழக்கு விசாரணையின்போதும் குறிப்பிட்டு வாய்தா வாங்கிவிடுவாராம். இதை அந்த தொலைக்காட்சி கலந்துரையாடலில் பேசிய தில்லி பார் கவுன்சில் தலைவர் குறிப்பிட்டார்.

நம் நாட்டு நீதிமுறை குறித்து எழுதிய புத்தகத்திலும் இதைப்பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். வழக்கறிஞர்கள், நீதிமன்றம் ஆகியவற்றுக்குத் தரப்படும் முக்கியத்துவம் வழக்கில் சம்பந்தப்படும் ஏழைகளுக்குத் தரப்படுவதில்லை.

தில்லி தந்தூர் வழக்கில், முக்கிய எதிரிக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியபோது மக்களிடம் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. கொலை நடந்து 8 அல்லது 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஒரே சாட்சி ஒரு போலீஸ்காரர்தான். அவருக்கு சம்பளம்கூட அதிகம் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு எவ்வளவோ பணத்தாசை காட்டியிருக்க முடியும், அல்லது தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றிவிடுவோம் என்று மிரட்டியிருக்க முடியும். எது எப்படி இருந்தாலும் நீதிக்காக நிலைகுலையாமல் நின்ற அந்த ஒரே சாட்சி காரணமாகத்தான் எதிரிக்கு தண்டனை விதிக்க முடிந்தது. இதில் கேள்வி என்னவென்றால், எப்படி ஒரு சாதாரணமான வழக்கு இத்தனை ஆண்டுகளுக்கு இழுத்துக் கொண்டே போகிறது என்பதுதான்.

அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன் நகரங்கள் மீது பயங்கரவாதிகளின் விமானத் தாக்குதல் நடந்தவுடன் அரிசோனா மாநிலத்தில் இந்திய சீக்கியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை நடந்து முடிந்து தாக்கியவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது. நம் நாட்டிலும் இப்படி ஏன் விரைந்து வழக்குகளை முடிக்கக் கூடாது? கொலைவழக்காக இருந்தால் ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை ஏற்கிறீர்களா இல்லையா? மூத்த அரசியல்வாதி அல்லது அதிகாரி என்றால் அவர் மீதான லஞ்ச, ஊழல் வழக்கையும் ஓராண்டுக்குள் விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என்பதை ஏற்பீர்களா?

வழக்கறிஞர்களை மேற்பார்வையிடவோ, கண்காணிக்கவோ யாரும் இல்லை என்ற எண்ணமே சில வேளைகளில் தோன்றுகிறது. பார் அசோசியேஷன் என்பது வழக்கறிஞர்களுடன் தோழமை உள்ள அமைப்பு. பார் கவுன்சில் என்பது வழக்கறிஞர்கள் பணி சட்டத்துடன் தொடர்புள்ளது. அது வழக்கறிஞர்களின் வேலையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கொண்டுவர எப்போதாவது முயற்சி செய்துள்ளதா? வழக்கறிஞர்களைக் கண்காணிப்பதை நீதிமன்றங்கள் செய்ய முடியும், ஆனால் அவையும் அப்படி எதையும் செய்வதில்லை.

1960கள் வரை நீதித்துறையும் நிர்வாகத்துறையும் தனித்தனியே பிரிக்கப்படவில்லை. அப்போது மாவட்ட நிர்வாகம் வழக்குகளைக் கண்காணித்து வந்தது. எத்தனை வழக்குகள் தாக்கலாகின, எத்தனை விசாரிக்கப்பட்டன, எத்தனையில் இறுதித் தீர்ப்பு வந்தது என்று தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட்டவுடன் நிர்வாகம், கண்காணிப்பு வேலையை விட்டுவிட்டது.

டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தியாவில் நீதித்துறையின் கீழ் நிலையில் ஊழல் இருக்கிறது, இதன் மதிப்பு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி என்று தெரிவித்தது.

வழக்கறிஞர் தொழிலில் என்ன நடக்கிறது என்று அக்கறை காட்டப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது. இது வழக்கறிஞர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் நல்லது. சூரிய வெளிச்சம் எங்கு பாயவில்லையோ அங்கு பாச்சைகளும் கரப்பான்களும் பெருகி வளர்கின்றன. சூரிய ஒளி பட்டால் இவையெல்லாம் விலகி அங்கே தூய்மை நிலவும்.

(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)

——————————————————————————————–

தேவை, நீதித்துறை சீர்திருத்தம்

உ .ரா. வரதராசன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் தெரிவித்துள்ள கருத்து ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று.

“”தரக்குறைவாகவும், அவமதிக்கும் வகையிலும் நீதிபதிகளை வசைபாடுவது, சிலரது பொழுதுபோக்காக உள்ளது. இத்தகைய அறிக்கைகள் நீதிமன்றங்களை அவதூறுக்கு உள்ளாக்கி, அவற்றின் எதிர்காலத்தை மதிப்பிழக்கச் செய்ய முற்படுகின்றன; இவற்றை அனுமதிக்கவே முடியாது”, என்று கூறி, சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிமன்ற அவமதிப்பைச் செய்த நபருக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனையை அந்த நீதிபதிகள் வழங்கினர். அதே தீர்ப்பில், கண்ணியமான வார்த்தைகளில் ஒரு நீதிமன்றத்தின் கருத்தை நியாயமான முறையில் விமர்சிப்பதைப் பற்றி கேள்வி கேட்க முடியாது என்றும் தெளிவுபடச் சொல்லப்பட்டது.

இந்தத் தீர்ப்பு, நாளிதழ்களில் வெளியான அதே நாளில், உலக ஊழல் அறிக்கை – 2007 என்ற ஓர் ஆவணத்தை இணையதளத்தில் காண நேரிட்டது. சர்வதேச ஊடுநோக்கி ( பழ்ஹய்ள்ல்ஹழ்ங்ய்ஸ்ரீஹ் ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப்) என்ற அமைப்பின் அறிக்கை நீதித்துறையில் உள்ள ஊழலைப் பற்றியது.

உலகில் இன்று நிலவும் ஊழலின் பரிமாணம் மலைக்க வைப்பதாக உள்ளது. உலகம் முழுவதிலும் ஊழலில் கசிந்து விரயமாகும் நிதியைக் கணக்கிட்டால் அது ஆண்டொன்றுக்கு 30 லட்சம் கோடி டாலர்கள் என்ற வரம்பைத் தாண்டுகிறது என்று ஒரு கணிப்பு தெரிவிக்கிறது. இது ஒருவேளை மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடாக இருக்கலாம். ஆனால் உலக நாடுகள் அனைத்திலும் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, நீதி ஆகிய அனைத்துத் துறைகளையும் இந்த ஊழல் கரையான் செல்லரித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை கசப்பானதும் கவலைக்குரியதுமாகும்.

இதில் நீதித்துறையில் ஊழல் என்பது, மற்ற அனைத்துத் துறைகளையும்விட அபாயகரமானது. மற்ற துறைகளில் நிலவும் ஊழலால் பாதிக்கப்படுகிற எவரும், அவற்றுக்கு எதிராக நீதித்துறையின் தலையீட்டையே நாடுவது இயல்பானது. ஆனால், பரிகாரம் தேடிப் போகும் நீதி தேவதையின் சன்னிதானமே ஊழல் கறை படிந்து காணுமானால், வேறு புகலிடம் ஏது?

ஒருவர் தமக்களிக்கப்படும் அதிகாரத்தைத் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தும் எந்த நடவடிக்கையும் ஊழலேயாகும். அந்த ஆதாயங்கள் பணமாகவோ, பொருளாகவோ, வேறுவகைப்பட்டதாகவோ இருக்கலாம். நீதித்துறை ஊழல் என்பது நீதி பரிபாலன முறைமைக்கு உள்ளிட்டு செயல்படும் எவரும், அதன் பாரபட்சமற்ற செயல்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் செல்வாக்கு செலுத்துவதன் சகல அம்சங்களையும் உள்ளடக்கியதே! இதை அளவிட்டு அறிவதற்காக 62 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளே இந்த உலக ஊழல் அறிக்கையில் விரிவாக இடம் பெற்றுள்ளன.

நீதித்துறையில் ஊழல் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று, நீதித்துறையின் செயல்பாட்டில் அரசியல் தலையீடுகளால் நிகழ்வது; மற்றது, நீதித்துறையின் பல மட்டங்களில் புகுந்துவிடும் லஞ்ச லாவண்யம் காரணமாக நடைபெறுவது. நீதித்துறையை அணுகும்போது, நியாயமான பாரபட்சமற்ற தீர்ப்பைப் பெறுகிற அடிப்படை மனித உரிமையை இந்த இருவகை ஊழலும் மறுக்கிறது. எந்த ஒரு நாட்டிலும் நீதித்துறையில் ஊழல் மலிந்தால், அங்கே ஆட்சி அதிகாரத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுவது தவிர்க்க முடியாததாகி விடும். “”ஊழலா, அது எங்கள் நாட்டில் வாடிக்கையாகிப் போய்விட்ட விவகாரம்” என்று மக்கள் சகித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும்.

தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறவில்லையானால், அங்கே நீதித்துறையில் நாணல்போல் வளைந்து, ஊழலுக்கு இடமளிக்கும் நீதிபதிகள் இடம்பெறுவது இயல்பாகிவிடும்.

நீதிபதிகளுக்கான சம்பளம், ஊதிய நிலைமைகள், பாதுகாப்பற்ற சூழல், இடமாற்றல் அச்சுறுத்தல் போன்றவையும் நீதிபதிகளையும் நீதிமன்ற அலுவலர்களையும் ஊழல் நடைமுறைகளுக்கு இட்டுச் செல்லும்.

தவறிழைக்கும் நீதிபதிகளைத் தண்டனைக்கு உட்படுத்தவோ, பதவிநீக்கம் செய்யவோ உரிய ஏற்பாடுகள் இல்லையென்றாலும், நீதித்துறை ஊழலுக்கு உறைவிடமாகி விடும்; நேர்மையாகச் செயல்படும் நீதிபதிகளை ஆட்சியாளர்கள் விருப்பம்போல் பந்தாடும் சூழலும் அதே நிலைமைக்கே இட்டுச் செல்லும்.

நீதிமன்ற நடவடிக்கைகள் ஒளிவு மறைவு அற்றதாகவும், ஊழல் நடைமுறைகளைக் கண்காணிக்கிற ஏற்பாட்டுக்கு இடமில்லாமலும் அமையும் நிலை, நீதித்துறையை ஊழல் அரிப்பதற்கு வாய்ப்பாகி விடும்.

இந்த நான்கு அம்சங்களிலும், நீதித்துறையில் ஊழல் பரவாமல் தடுக்க, பல்வேறு பரிந்துரைகளை உலக ஊழல் அறிக்கை பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் நீதித்துறை ஊழல் பற்றிய ஓர் ஆய்வும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 2005ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கருத்தாய்வில் வெளிவந்த சில விவரங்களை இந்த அறிக்கை தொகுத்தளிக்கிறது.

“நீதித்துறை ஊழலின்றி செயல்படுகிறதா?’ என்ற கேள்விக்கு “இல்லை’ என்று பதிலளித்தவர்கள் 85 சதவிகிதம் பேர்! நீதித்துறை ஊழல் காரணமாகக் கைமாறும் தொகை ஆண்டுக்கு ரூ. 2,360 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீதித்துறை ஊழலுக்குப் பிரதான காரணங்களாக அமைவது, வழக்கு விசாரணையில் நேரிடும் காலதாமதம், நீதிபதிகளின் எண்ணிக்கைக் குறைவு, சிக்கலான நீதிமன்ற நடைமுறைகளேயாகும்.

2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் 33,635 வழக்குகள்; உயர் நீதிமன்றங்களில் 33,41,040 வழக்குகள்; நீதிமன்றங்களில் 2,53,06,458 வழக்குகள் நிலுவையில் இருந்தன. 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து – “”இனி புதிதாக ஒரு வழக்குகூடப் பதிவு செய்யப்படவில்லை என்றாலும்கூட, நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 350 ஆண்டுகள் பிடிக்கும்” என்பதாகும்!

இந்த நிலைமையில் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துவதற்கான குறுக்கு வழியாக ஊழல் இடம்பெற்று வருகிறது.

இந்தியாவில் சராசரியாக பத்து லட்சம் நபர்களுக்கு 12 அல்லது 13 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையிலேயே, நீதித்துறை நியமனங்கள் உள்ளன. இதே பத்து லட்சம் நபர்களுக்கு, அமெரிக்காவில் 107 நீதிபதிகள்; கனடாவில் 75; பிரிட்டனில் 51 என்ற அளவில் உள்ளனர். இதனால் தீர்ப்புகள் தாமதமடைகின்றன. நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

“தாமதித்து வழங்கிடும் நீதி, மறுக்கப்படும் நீதி’. ஆனால், சட்டத்தை மீறுகிறவர்களுக்கும், குற்றங்களைத் தொழிலாகக் கொண்டு செயல்படுபவர்களுக்கும், வழக்குகளின் தாமதம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விடுகிறது! நீதிபதிகளுக்கான “நீதித்துறை நன்னடத்தைக் கோட்பாடுகள்’ சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டது இந்தியாவில்தான்! 2002ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் உருவான இந்தக் கோட்பாடுகள்தான், பின்னர் 2006ஆம் ஆண்டில் ஐ.நா. சபை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், இந்தக் கோட்பாடுகள் நீதிபதிகளின் சுயவிருப்பத்திற்கிணங்கப் பின்பற்றப்பட வேண்டியவை மட்டுமே.

இதுமட்டுமல்ல, நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான குழு அறிக்கைக்கும், நீண்ட நெடிய விவாதங்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு அறிகுறியே தென்படவில்லை!

நீதிமன்ற அவமதிப்பு அனுமதிக்கப்பட முடியாததுதான்; ஆனால், நீதித்துறையின் மதிப்பை உயர்த்துவது எப்படி, எப்போது?

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ)

————————————————————————————————–

நீதிதேவன் மயக்கம்
Dinamani – Op-ed (September 05 2007)

“”மக்களுக்கு நீதித்துறையின் மீது அதிருப்தி அதிகரித்து வருகிறது என்பது மட்டுமல்ல, தீர்வு காணப்படாமல் தேங்கிக் கிடக்கும் வழக்குகளால் நீதித்துறை மீதான நம்பிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மக்களுக்கு நீதிபதிகள் மீதும் நீதித்துறையின் மீதும் மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமானால், வழக்குகள் அதிக காலதாமதம் இன்றி விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்”~இப்படி சொல்லியிருப்பது அரசியல்வாதியோ, சமூக ஆர்வலரோ, பத்திரிகையாளரோ அல்ல; நீதிபதிகள்.

வித்தியாசமான, அதேசமயம் மக்களின் மனஓட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு வழங்குவதில் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு நிகர் அவர்தான். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தீர்ப்பு வழங்குபவர் என்கிற பெயர் அவருக்கு எப்போதுமே உண்டு. 1957ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து மேல் முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் மாத்தூரின் முன் விவாதத்துக்கு வந்தபோதுதான் மேற்கண்ட கருத்தை அவர்கள் தெரிவித்தனர்.

அரை நூற்றாண்டு காலம் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தேங்கிக் கிடப்பது என்பது, நமக்கே எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தும்போது, சம்பந்தப்பட்டவர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

நாட்டிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் சுமார் 30 லட்சம் வழக்குகள் தீர்ப்பளிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இரண்டரைக் கோடிக்கும் அதிகமான வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. மிக அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்தான் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உச்ச நீதிமன்றத்திலும் சரி, நிலைமையில் பெரிய அளவில் மாற்றமில்லை. சுமார் 39,780 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக 2006-ம் ஆண்டு புள்ளிவிவரம் கூறுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 4,06,958. கடந்த ஆண்டு கடைசியில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் இது. தமிழக விசாரணை நீதிமன்றங்களில் சுமார் மூன்றரை லட்சம் கிரிமினல் வழக்குகள் 31 மார்ச், 2007 நிலவரப்படி விசாரணையில் இருப்பதாகவும், இவற்றில் 26,800 வழக்குகள் சிறு குற்றங்கள் தொடர்பானவை என்றும் தெரிகிறது.

வழக்குகள் தேங்கிக் கிடப்பதால் இரண்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குற்றவாளிகள் பலர் தங்களுக்குப் பாதகமான தீர்ப்பு வராமல் வழக்கைத் தள்ளிப்போட்டுத் தப்பிக்க முயல்வது சகஜமாகிவிட்டது. சில வழக்குகளில் குற்றவாளிகள் மரணம்வரை தீர்ப்பு வழங்கப்படாமல் தப்பித்த சரித்திரங்கள் ஏராளம். இதனால், நீதியின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் அவநம்பிக்கை ஏற்படுகிறது.

அதேபோல, நிரபராதிகள் விடுவிக்கப்படாமல், அடிக்கடி நீதிமன்றங்களால் அலைக்கழிக்கப்படும்போது அது தர்மத்துக்கும் நியாயத்துக்கும் எதிரான செயல்பாடு என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. செய்யாத தவறுக்குத் தண்டனை பெறும் அவலநிலைக்கு நிகரானதுதான் இதுபோன்ற அலைக்கழிப்பு. நிரபராதி, தீர்ப்பு வழங்கப்படாமல் குற்றவாளி என்கிற களங்கத்துடன் காலவரையறையின்றித் தொடர்வது என்பது நீதிதேவனுக்கே அவமானம்.

உடனடி நீதி கிடைக்குமேயானால், லஞ்சமும் ஊழலும்கூடப் பெரிய அளவில் குறைய வாய்ப்பிருக்கிறது. ஒரு சராசரிக் குடிமகனுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் மறுக்கப்படும்போது, அவன் நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கேட்க முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டால், காலதாமதமின்றி அதுபோன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் பரிசீலித்துத் தீர்ப்பளிக்குமேயானால், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் பயமும் பொறுப்புணர்வும் ஏற்படும்.

தாமதமாகக் கிடைக்கும் நீதி என்பது கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம் செய்கிற கதையைப் போன்றதுதான். பொதுமக்களை மட்டும் வருத்திக் கொண்டிருந்த இந்தப் பிரச்னை இப்போது நீதிபதிகளையும் சிந்திக்கவும் செயல்படவும் வைத்திருக்கிறது என்பது ஆறுதலைத் தருகிறது. நீதிதேவன், மயக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது!

——————————————————————————————————————–
நாட்டின் தேவை 5 ஆயிரம் புதிய கோர்ட் : தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தகவல்

சென்னை : “நாடு முழுவதும் ஐந்தாயிரம் புதிய கோர்ட்டுகளை துவக்கினால் தான் வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும்’ என்று இந்திய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை ஜுடிசியல் அகடமி நடத்திய, “உரிய நேரத்தில் நீதி வழங்குவதற்கான தொழில்நுட்பம் மற்றும் கருவிகள்’ குறித்த மூன்று நாள் கருத்தரங்கின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.

தலைமை நீதிபதிபேசியதாவது :

நீதிபதிகள் தங்களுக்கு முன்பாக எந்த மாதிரியான வழக்குகள் வந்துள்ளன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடக்காமல், அது போன்றவற்றில் நீதிபதிகளே ஆர்வம் எடுத்து விரைவாக தீர்வு காண வேண்டும். மிகச் சாதாரணமான வழக்குகளை விரைவாக தீர்த்து விட வேண்டும்.

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநில நீதிபதிகள் மிகவும் மதிக்கப்படுவதோடு, தனித்தன்மையுடன் செயல்படுகின்றனர். சமுதாயத்துடன் நாம் செல்ல வேண்டும். வழக்கு தொடருபவர் நேரடியாக நம்மிடம் வருகிறார். அவர்களது பிரச்னையை நாம் அணுக வேண்டும். எவ்வளவு விரைவாக பிரச்னையை தீர்த்து வைக்கிறோமோ, அதற்கேற்ப அவர்கள் மகிழ்ச்சியடைவர். வழக்கு

மூலம் தங்களுக்கு ஏதாவது நிவாரணம் கிடைத்தால் அவர்கள் மகிழ்வர். எனவே, பிரச்னைகளை அறியும் கலையை நாம் தெரிந்திருக்க வேண்டும். இது போன்ற கருத்தரங்குகளால் நீதிபதிகள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறவும், அனுபவங்களை பற்றி பேசிக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கிறது. நமக்கு தெரியாமலேயே இதனால் நாம் பயனடைகிறோம்.

தமிழக அரசு 72 புதிய கோர்ட்டுகளை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. பல மாநில அரசுகளிடம் கோர்ட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சில முதல்வர்கள் உறுதியளிப்பர், ஆனால், விரைவில் நடைமுறைக்கு வராது.

புதிய கோர்ட்கள் :

வழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பிரச்னையை தீர்க்க வேண்டுமானால் புதிய கோர்ட்டுகளை ஆரம்பிக்க வேண்டும். வேறு எந்த வழியிலும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. இந்தியாவில் 14 ஆயிரத்து 600 கோர்ட்டுகள் உள்ளன. மேலும் ஐந்தாயிரம் புதிய கோர்ட்டுகளை நாடு முழுவதும் அமைத்தால் தான், வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் வழக்குகள் குவிந்து கொண்டு தான் இருக்கும். மக்கள், நீதிபதிகள் மீது தான் குற்றம் சாட்டுவர். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.
மாதத்துக்கு நுõறு வழக்குகள் நீதிபதிகள் உத்தரவாதம் : சென்னை:

“மாதத்துக்கு நுõறு வழக்குகளை முடிப்பதாக நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்’ என்று, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கூறினார்.

நீதிபதிகளுக்கான பயிற்சி கருத்தரங்கில் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பேசியதாவது: நீதிபதிகளுக்கான கற்பித்தல் பணிமனைகளை மாவட்ட வாரியாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். சிறு விவகாரங்களுக்கான நீதிபதிகள் மற்றும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சென்னையில் உள்ள விரைவு நீதிமன்ற நீதிபதிகளிடம், வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் சராசரியாக எடுக்கப்படும் கால அளவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. எவ்வாறு இவற்றை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீதிபதிகளிடம் எந்தளவு தங்களது செயல்பாட்டை மேம்படுத்த முடியும் என்று கேட்ட போது, மாதத்துக்கு தற்போது 50 வழக்குகளை முடித்து வருவதற்கு பதிலாக நுõறு வழக்குகளை முடிப்பதாக உறுதியளித்துள்ளனர். ஐகோர்ட்டில் இரண்டு நிரந்தர, “லோக் அதாலத்’கள் அமைக்கப்படும். இதுதவிர, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்க மாதத்துக்கு இரண்டு, “லோக் அதாலத்’கள் தனியாக நடத்தப்படுகின்றன.

கோவை மற்றும் திருப்பூரில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட குறை தீர்ப்பு கூட்டத்தில், 143 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.1.54 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது; இது ஒரு சாதனை. கடந்த ஜூலை 5ம் தேதியில் இருந்து மாலைநேர கோர்ட்டுகள் செயல்படத் துவங்கிய பின், ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஒன்பதாயிரத்து 245 வழக்குகள் முடிக்கப்பட்டன.

ஐகோர்ட்டின் மத்தியஸ்தம் மற்றும் நிவாரண மையம் கடந்த ஜூன் முதல் மிக தீவிரமாக செயல்படுகிறது. இந்த மையத்தில் சென்னையில் 140 மத்தியஸ்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. “ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ்’ வழக்கை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்து முடித்ததற்காக கடந்த ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இரண்டாயிரத்து 196 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ரூ.70 கோடி மதிப்பிலான இந்த வழக்கு தான் இந்தியாவிலேயே மத்தியஸ்தம் மூலம் தீர்க்கப்பட்ட மிகப் பெரிய வழக்கு. இவ்வாறு ஏ.பி.ஷா பேசினார்.

Posted in 5000, AA, abuse, Accident, Alcoholism, Arms, Attorney, Balakrishnan, Blood, BMW, Bribery, Bribes, Capital, case, Congress, Corruption, Courts, dead, Delhi, Driver, Driving, Drunk, DUI, escape, Expose, Free, Guilty, HC, Hit, I U Khan, industrialist, Jail, Jethmalani, Judges, Justice, Launch, Law, Lawyer, legal, MP, Nanda, Nandha, NDTV, New, Order, Party, Police, Politics, Poor, Power, Prison, Prosecution, Punishment, R K Anand, Rich, Sanjeev, Sanjeev Nanda, Sanjiv, SC, Sentence, Sunil Kulkarni, Suspension, testimony, Wealthy, Witness | 1 Comment »

How to ensure quality participation & responsibility from MLAs and MPs?

Posted by Snapjudge மேல் மே 31, 2007

தேவை திரும்ப அழைக்கும் உரிமை!

பி. சக்திவேல்

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய பதவிக் காலத்தில் தவறிழைத்தாலோ அல்லது அவர்களது கடமையில் தவறினாலோ அவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி சமீபத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கூறியுள்ளார்.

இது மக்களாட்சி சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று எண்ணுகின்ற அனைவராலும் வரவேற்கக்கூடிய கருத்தாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமையானது ஒரு சில மக்களாட்சியின் சிறப்பு அம்சமாகும். மக்கள் பிரதிநிதிகள் சரிவரச் செயல்படவில்லை என்றால் அவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமை அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிரேக்க காலத்திலிருந்து இன்றுவரை பல நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது.

நம் நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. தேர்தல் நேரத்தில் வாக்குக் கேட்டு வரும் பிரதிநிதிகளை மீண்டும் அடுத்த தேர்தலில்தான் நம்மால் பார்க்க முடிகிறது!

இந்த ஐந்து ஆண்டுகள் அவர்கள் சரிவரச் செயல்படவில்லை என்றாலும், லஞ்சம் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டாலும் நாம் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைதான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். மேலும் நாடாளுமன்ற ஜனநாயகம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் திரும்ப அழைக்கும் உரிமையானது அவசியமானது. அத்துடன்அத்தியாவசியமான உரிமையும் ஆகும்.

மேலைநாடுகளில் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள சில மாகாணங்களிலும் சுவிட்சர்லாந்து, ஜமைக்கா, வெனிசுலா போன்ற நாடுகளிலும் இந்த உரிமையானது வாக்காளர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

2003-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு மாநில ஆளுநர் சரியாகச் செயல்படவில்லை என்கிற காரணத்திற்காக பதவியிலிருந்து மக்களால் திரும்ப அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்

இந்தியாவில் சமீபகாலமாக இந்தக் கோரிக்கை எழுவதற்கான காரணங்கள்:

நம் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லாதது; இந்த ஆண்டு தொடக்கத்தில் கேள்வி கேட்பதற்காக லஞ்சம் வாங்கியதற்காக 11 எம்.பி.க்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டது; போலி பாஸ்போர்ட் மோசடியில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது; அதிக அளவு குற்றப்பின்னணி உள்ள உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும் சில மாநில சட்டப்பேரவைகளில் இடம்பெற்ற சம்பவங்கள்.

தற்போதைய நாடாளுமன்றத்தில் கிரிமினல் மற்றும் குற்றப்பின்னணி உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 136. இவர்களில் சுமார் 26 பேர் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இந்தச் சூழ்நிலையில்தான் சரிவர செயல்படாத மற்றும் குற்றம்புரிந்த பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையானது மேலும் வலுப்பெற்றுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை நடவடிக்கைகள் 73 மணி நேரம் அலுவல் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. தனிநபர் விமர்சனம் மற்றும் முக்கியமில்லாத பிரச்னைகளுக்காக அமளியை உருவாக்குவதால் மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகள் விவாதிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

பட்டினியை எவ்வாறு நம் நாட்டிலிருந்து நீக்குவது என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் மே 5-ஆம் தேதி நடைபெற்றது. ஆரம்பத்தில் 6 உறுப்பினர்களோடு விவாதம் தொடங்கி மொத்தம் 12 உறுப்பினர்களோடு விவாதம் முடிவடைந்தது. இது மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் இரண்டு சதவீதம் மட்டுமே ஆகும். கலந்து கொண்ட உறுப்பினர்களில் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் ஆவர்.

அதேசமயம் மற்ற நேரங்களில் தங்களது கட்சித் தலைவரை கைது செய்தாலோ அல்லது அரசியல் லாபத்திற்காக ஏதேனும் பிரச்னைகளை எழுப்ப வேண்டும் எனில் அனைத்து உறுப்பினர்களும் ஆஜராகி விடுகின்றனர்.

எதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து தேர்தல் நடத்தி நாம் நம்முடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றோம்? மக்களுக்காக, மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடக்கூடிய உறுப்பினர்கள்தான் இன்றைய காலகட்டத்தில் நமக்குத் தேவை. அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் திரும்ப அழைக்கும் உரிமையானது மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் மூலமாக இந்திய குடிமக்களுக்கு வாக்குரிமையும் அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் சரிவர செயல்படாத மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடிய பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் அதிகாரத்தையும் அடிப்படை உரிமையாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு இதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இந்த உரிமை வழங்கப்படுவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புகள் உருவாகும். பிரதிநிதிகள் மக்களுக்குக் கட்டுப்பட்டவராகவும் மக்களுக்குப் பொறுப்பானவர்களாகவும் மாறக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளின் கண்ணியமும் பாதுகாக்கப்படும்.

இதன் மூலம் மக்களுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை மற்றும் அதிக அளவில் பங்கேற்கக்கூடிய நிலை உருவாகும். பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்பது நிரந்தரமல்ல; சிறப்பாகச் செயல்பட்டால்தான் பதவியில் நீடிக்க முடியும் என்ற சூழ்நிலையும் உருவாகும். இது நிச்சயமாக இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்தும்; மேலும் வலுப்படுத்தும்.

(கட்டுரையாளர்: இணைப்பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.)

Posted in Assembly, Attendance, Carrot, Corruption, Courts, Criminal, Democracy, discussion, Elections, Fire, Governor, Impeach, Impeachment, Incentives, Judge, Justice, kickbacks, Law, Lok Saba, Lok Sabha, LokSaba, LokSabha, Member, Minister, MLA, MP, Order, Performance, Politics, Polls, Quality, Removal, Representation, Stick, Suspension, Vote, voter | 1 Comment »