இலங்கை கைதுகள் குறித்து அரசாங்கம் விளக்கம்
கொழும்பில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களில் பெரும்பாலானோரை விடுவித்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழர்களை இலக்கு வைத்து இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவதையும் அரசு மறுத்திருக்கிறது.
இலங்கையில் தலைநகர் கொழும்பிலும், புறநகர்ப் பகுதியிலும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து கொழும்பிலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கடுமையான சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினரும் பொலிஸாரும் பலநூற்றுக்கணக்கான தமிழர்களை கைது செய்திருந்தனர்.
இவர்களில் பலர் அந்தந்தப்பகுதி பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அதேவேளை, மேலும் பலர் காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்புச் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
![]() |
![]() |
அமைச்சர் பெர்ணாண்டோ புள்ளே |
தமிழர்கள் வகை தொகையின்றி கைதுசெய்யப்பட்டு ஆங்காங்கே அடிப்படை உணவு, உடை மற்றும் மலசலகூட வசதிகளின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக கூறும் தமிழ்க் கட்சிகள் பலவும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அது குறித்து குரல் எழுப்பியிருந்தன.
இதனைவிட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்ணணி எனப்படும் ஜே.வி.பியும் அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்திருந்தன.
அத்துடன் அவர்களை விடுவிப்பதற்கு உதவக்கோரி ஜனாதிபதியிடமும், சர்வதேச சமூகத்திடமும் முறையீடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஊடகங்களிற்கு தெரியப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் பிரதான கொறடாவும், அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே இன்றுமாலை கொழும்பிலுள்ள பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஊடக மத்திய நிலையத்தில் விசேட பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடாத்தினார்.
அங்கு எதிர்க்கட்சிகளும், தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை மறுத்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே நாட்டினதும், சகல சமூகங்களினதும் பாதுகாப்பினை உறுதிசெய்யும் ஒரே நோக்குடனேயே இந்த நடவடிக்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டது என்றும், பொலிஸாரினாலும் பாதுகாப்புப் படையினராலும் வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது சிங்கள இனத்தவர்கள் சிலரும், முஸ்லிம் இனத்தவர் ஒருசிலரும்கூட விசாரணைகளிற்காக கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் 202 பேர் தவிர ஏனைய அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தமிழோசைக்குத் தெரிவித்தார்.
தமிழர்கள் இலக்குவைத்து பாரியளவில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை மறுத்தலித்துப் பேசிய அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே தேவையேற்படும் போதெல்லாம் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
வடபகுதிக்கான போக்குவரத்து நிலைமைகளில் முன்னேற்றம் இல்லை
![]() |
![]() |
பெரும் சிரமங்களுடனான வடபகுதிப் பயணங்கள் |
இலங்கையின் தலைநகரப்பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களையடுத்து, மட்டுப்படுத்தப்பட்ட வடபகுதிக்கான போக்குவரத்து நடைமுறைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதிக்கும் இடையே ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான தபால் விநியோக சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை முதல் பாதிக்கப்பட்டிருந்த இந்த சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக வன்னிப்பிராந்திய இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடத்தி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.
எனினும் நோயாளர்களின் போக்குவரத்து மற்றும் வன்னிப்பிரதேசத்திலிருந்து பொதுமக்கள் வவுனியா பகுதிக்குள் வருவது போன்ற விடயங்களில் நிலவும் கட்டுப்பாடுகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான போக்குவரத்து நிலைமைகள், மற்றும், வடபகுதிக்கான ரயில் சேவை அநுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதனால் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகச் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை என்பன குறித்து வவுனியா மேலதிக அரச அதிபர் திருமதி சாள்ஸ் அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.