தில்லியில் உலக கழிவறை வசதி மாநாடு துவங்கியது
உலக மக்களுக்கு சுகாதாரமான கழிவறை வசதி வழங்கும் சவாலை எப்படி எதிர்கொள்வது, 2015-ம் ஆண்டில் அனைவருக்கும் சுகாதாரமான கழிவறை வசதி செய்து கொடுப்பது என்று ஐ. நா. மன்றம் நிர்ணயித்துள்ள புத்தாயிரமாண்டின் வளர்ச்சி இலக்கை அடைவது எப்படி என்பது குறித்து விவாதிப்பதற்காக, உலக கழிவறை வசதி மாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் புதன்கிழமை துவங்கியது.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், சீனா, ரஷ்யா, இலங்கை, இந்தியா உள்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன், புதுடெல்லியை மையமாகக் கொண்ட, சுலாப் இண்டர்நேஷனல் என்ற தன்னார்வ அமைப்பு இந்த மாநாட்டை நடத்துகிறது.
உலக அளவில், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது எவ்வளவு பெரிய சவாலாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அனைவருக்கும் சுகாதாரமான கழிப்பறை வசதி செய்து கொடுப்பதும் பெரிய சவாலாக உள்ளது.
உலக மக்கள் தொகையில் 40 சதவீதம், அதாவது 2.6 பில்லியன் மக்கள், கழிவறை வசதி இல்லாமல், திறந்த வெளிகளிலும் சுகாதாரமற்ற இடங்களிலும் தங்கள் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில் மட்டும் 700 மில்லியன் மக்கள் முறையான கழிவறை வசதி இல்லாமல் இருக்கிறார்கள்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ போதிய கழிவறை வசதி உள்ள நிலையில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில்தான் சுகாதாரமான கழிவறை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளன. ஆனால், வளரும் நாடுகளில் அனைவருக்கும் கழிவறை வசதி செய்து தருவதற்கு போதிய தொழில்நுட்பமும், நிதி ஆதாரமும் பெரும் பிரச்சினையாக உள்ளது.