சஞ்சய் சுப்ரமணியத்தின் ‘உள்ளடக்கப்பட்ட மோதல்களும் இணைப்புண்ட வரலாறுகளும்’ :: அ மார்க்ஸ்
01.07.07
குமுதம் தீராநதி
வேறெந்த அறிவுத்துறையையும் போல வரலாற்றுத்துறையை மட்டும் அதன் துறை சார்ந்த கல்வியாளர்களிடம் விட்டுவிட்டு நாம் வாளாவிருக்க இயலாது. இதன் பொருள் நாம் அதில் மூக்கை நுழைக்க வேண்டுமென்பதல்ல. ஆனால், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்கிற அறிதலும் பிரக்ஞையும் சமூகப் பிரச்சினைகளில் அக்கறையுள்ளவர்களுக்குத் தேவை. காலம், இடம் என்கிற இரு அம்சங்களிலும் வேறெப்போதைக் காட்டிலும், வேறெங்கைக் காட்டிலும் இன்று, இங்கு இது முக்கியமாவதை விரிவாக விளக்க வேண்டியதில்லை.
சென்ற நூற்றாண்டின் நடுப் பகுதியில் மார்க்சீய அணுகல் முறை எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. ஆசிய உற்பத்தி முறை குறித்த விவாதங்கள், சோழர்கால மற்றும் முகலாயர் கால நிலவுடைமை பற்றிய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கன. சென்ற நூற்றாண்டின் இறுதிக் கால் பகுதியில் ‘அடித்தள மக்கள் ஆய்வுகள்’ (Subaltern Studies), ‘பின் காலனிய ஆய்வுகள் (Post Colonial Studies) ஆகியன மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தன. இவை இரண்டும் இந்திய வரலாற்றாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவற்றோடு Segmentary State’ என்கிற மாதிரியைப் பயன்படுத்தி சோழ, விஜயநகரப் பேரரசுகளை ஆய்வு செய்த பர்ட்டன் ஸ்டெய்னின் புகழ்பெற்ற நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
அடித்தள மற்றும் பின் காலனிய ஆய்வுகள் இன்று ஒரு தேக்கத்தை எட்டியுள்ளதை யாரும் உணர இயலும். இந்தப் பின்னணியில், இன்று உலக அளவில் முக்கிய வரலாற்றாசிரியர்களில் ஒருவராக அறியப்படும் சஞ்சய் சுப்ரமண்யத்தின் ‘உள்ளடக்கப்பட்ட மோதல்கள்’ (Contained Conflicts) மற்றும் ‘இணைப்புண்ட வரலாறுகள்’ (Connected Histories) ஆகியன, நாம் அவசியம் பரிச்சயப்படுத்திக் கொள்ளத்தக்கவையாக உள்ளன.
சீனம் மற்றும் மத்திய ஆசியாவின் வரலாறுகளை எழுதிய ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோசப் ஃப்ளெட்சரின் ஒருங்கிணைக்கப்பட்ட வரலாறு
(Integrative History) என்கிற கருத்தாக்கத்திலிருந்து தனது இணைப்புண்ட வரலாறு எழுதியலை உருவாக்கியுள்ளார் சஞ்சய். ‘Early Modern Period’ எனப்படும் நவீனத்துவத்தின் தொடக்க காலத்திய (அதாவது பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னதான மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகள், இந்திய வரலாறு இவரது ஆய்வுப் பொருள். ‘இந்தியா’, ‘இந்தியக் கலாச்சாரம்’, ‘முகலாயப் பேரரசு’ என்கிற நெகிழ்ச்சியற்ற இறுக்கமான கருத்தாக்கங்களின் அடிப்படையில் அன்றைய உலக நிகழ்வுகளிலிருந்து பிரித்துத் தனியே இக்கால கட்டத்தின் வரலாற்றை எழுதுவது சாத்தியமில்லை. இத்தகைய எழுதுமுறையே பல்வேறு அபத்தமான இருமை எதிர்வுகளுக்கும் (எ.டு: கீழைத்தேயம் x மேலைத்தேயம்), அச்சுப் பதிவுகளுக்கும் (Stereo Types எ.டு. கீழைத்தேய எதேச்சாதிகாரம், மாற்றமற்ற மரபு வழிப்பட்ட இந்தியா, கிராம சமுதாயம், Homo Hiirarchicus, மேலைத் தேயத்தின் கொடையாக நவீனத்துவத்தின் வடுகை) இட்டுச் சென்றன.
‘பிராந்திய ஆய்வுகள் area studies) மற்றும் ‘கலாச்சார ஆய்வுகள்’ என்கிற பிரசித்தமான பல்கலைக்கழக ஆய்வு நெறிகள் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவா. தேசங்கள், கலாச்சாரங்கள் என்பதெல்லாம் இணைக்க இயலாத பாழ்களால் பிரிக்கப்பட்டவை அல்ல. ஏதோ நவீனமான தொழில் நுட்பங்களும், தொடர்புச் சாதனங்களும்தான் இந்தப் பிளவை அழித்தொழிப்பதாக நாம் கருத வேண்டியதில்லை. நுண் நிகழ்வுகளை, தொடர்புடைய உலகளாவிய செயற்பாடுகளுடன் இணைத்து ஒரு அகன்ற திரையில் நாம் வரலாற்றைத் தீட்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ‘‘இந்தியாவின் வரலாற்றை இந்தியாவுக்கு வெளியே செல்லாமல் நம்மால் புரிந்து கொள்ளவோ விளக்கவோ இயலாது’’ என்கிற அஷிம் தாஸ் குப்தாவின் கருத்தைச் சுட்டிக் காட்டுவார் சஞ்சய். இதன் பொருள், எல்லோரும் கடந்து செல்ல வேண்டுமென்பதல்ல. மாறாகப் பிற வரலாறுகள், சமூக மாற்றத் திசை வழிகள் (societal trajectoria) குறித்த ஒரு திறப்பு வரலாற்றாசிரியனுக்குத் தேவை. வங்கத்தின் வரலாற்றை குஜராத்துடன் இணைத்துப் புரிந்து கொள்வதைக் காட்டிலும், பர்மியக் கடற்கரையுடனும் தாய்லாந்துடனும் பிணைத்துப் பார்ப்பது சில கணங்களில் அவசியமாக இருக்கலாம். முகலாயர்களின் வரலாற்றை ஐபீரியாவின் இந்திய ஆளுகை (Estat de India), ஆட்டோமான் மற்றும் சஃபாவித் பேரரசுகள், தக்காண சுல்தான்களின் ஆட்சி ஆகியவற்றிலிருந்து தனித்துப் பிரித்துப் பார்க்க இயலாது.
வழக்கமான காலப்பாகுபாடு (periodization), தேச எல்லை ஆகிய எல்லாவற்றையுமே நாம் ஒதுக்கித் தள்ளுதல் தவிர்க்க இயலாததாகிறது. இந்தியாவுக்கான தனித்துவமான வரையறைகளை வற்புறுத்துவது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொருத்தமாக இராது. இத்தகைய தனித்துவங்களை அதிகபட்சமாக வற்புறுத்திய பாஷம் (இந்தியா என்கிற வியப்பு’) போன்றோரின் கட்டமைப்புகள் வேதப் பொற்கால அரசியலை முன்னெடுப்பவர்களுக்கு வேண்டுமானால் உதவலாம். நமது ‘இந்திய வரலாற்றுப் பேராயத்தை (Indian History Congress) எடுத்துக் கொள்ளுங்கள். ‘மத்திய காலம்’ என்றே வரையறையில் 1757 வரை அது அடக்குவதை என்ன சொல்வது? பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின் இங்கு உருவான கடல்வழித் தொடர்புகள் ஆட்சிமுறையிலும், கருத்தியலிலும், பார்வைக் கோணங்களிலும் ஏற்படுத்திய மாற்றங்களை எப்படிப் புறந்தள்ளுவது? வேறுபட்ட பல மனிதர்கள் (பாதிரிகள், தூதுவர்கள், வணிகர்கள், படைத் தலைவர்கள், ஆளுநர்கள் மருத்துவர்கள், வரலாற்றுப் பதிவாளர்கள் பயணிகள்…), வணிகப் பொருட்கள், கருத்தியல்கள், ஆயுதங்கள், மொழிகள் எழுதுமுறைகள் இவற்றின் இடையறாத பயணங்களுக்கு வாய்ப்பளித்த ஒரு ‘குறுக்குச் சாலை’யாக இந்தியா மாறவில்லையா? ‘நவீனம்’ அல்லது ‘தொடக்க நவீனம்’ முதலான கருத்தாக்கங்களில் எவ்வளவுதான் பிரச்சினை இருந்த போதிலும், ‘மத்திய காலம்’ ‘முஸ்லிம் இந்தியா’ என்பவற்றைக் காட்டிலும் உலகளாவிய சில மாற்றங்களுடன் இவை தொடர்புடையதாக அமைவது கவனிக்கத் தக்கது.
‘இந்தியா’, ‘இந்து’ என்கிற வரையறைகளும் பிரச்சினைக்குரியவைதான். ‘அல்_ஹிந்த்’ என்கிற இடைக்கால அராபியச் சொல்லிலிருந்து உருவானது அது. ‘சிந்து’ என்கிற முந்தைய, மேலும் குறுகிய வரையறையிலிருந்து இந்த அல்_ஹிந்த் உருவாகியது. அராபியத் தகவல் களஞ்சிய ஆசிரியர்கள் மற்றும் புவியியலாளர்களின் எழுத்துக்களில் இவ் வரையறை பல வகைப்பட்டதாக அமைகிறது. எல்லோரும் இந்தோ கங்கைச் சமவெளியை (பஞ்சாப் முதல் வங்கம் வரை) உள்ளடக்குகின்றனர். ஆனால் தென்னிந்தியத் தீபகற்பகம் உள்ளடக்கப்படுத்துவதில் தெளிவில்லை. ‘ஹிந்த்’. ‘ஹிந்துஸ்தான்’ என்பன பல நேரங்களில் தக்காணத்தையும் நர்மதைக்குத் தென் பகுதிகளையும் உள்ளடக்குவதில்லை. இன்னொரு பக்கம் ‘ஹிந்த்’ என்பதற்குள் தென் ஆசியா முழுவதையும் (கம்போடியா, தாய்லாந்து), ஏன் ஏமன் (தெற்கு அரேபியா) வரைக்கும் உள்ளடக்கும் போக்கும் இருந்தது. அராபிய நூற்களில் மூன்று புவியியற் பகுதிகள் காணக் கிடைக்கின்றன. (ஹிந்தி, சின் (சீனா), அஜம் (பெர்சிய மொழிப் பகுதி). இவற்றின் எல்லைகள் எப்போதும் ஒன்றே போல வரையறுக்கப்பட்டதில்லை. சில நேரங்களில் ‘அஜம்’ காணாமற் போய் விடுகிறது.
பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த ‘அக்பர் அங் சின் வால் ஹிந்த்’ எனும் அரபுப் பிரதி அராபியர், சீன அரசு, ரூம் அரசு, காதுகளைத் துளையிட்டுக் கொள்ளும் வழக்கமுடையவர்களின் பல்லஹா_ராய் அரசு ஆகியவற்றைக் குறிக்கிறது. பல்லஹா ராயின் ஆட்சியிலுள்ள, ‘ஹிந்த்’தின் சமூக அமைப்பைச் சொல்ல வரும்போது, ‘‘இங்கே புலவர்களும், மருத்துவர்களும் குடும்பங்களுக்குரியவர்களாக உள்ளனர். அக் குடும்பங்களே அத் தொழில்களைச் செய்ய முடியும்’’ என்கிறது. ‘ஹ¨தூத் அல் அலம்’ என்கிற பெர்சியப் பிரதி (10ம் நூ.) ‘‘ஹிந்துஸ்தான் முழுவதும் மத சட்டவிரோதமானதாகவும், முறை தவறிய பாலுறவு (adultary) சட்டபூர்வமானதாகவும் உள்ளது… எல்லோரும் சிலை வணக்கத்தை ஏற்பவர்கள். தங்கம், வெள்ளியில் செய்யப்பட்ட ஏராளமான சிலைகள் பிராமணர்கள் மற்றும் சாமியார்களால் பாதுகாப்பில் உள்ளன… ஒரே ஒரு நகரத்திலாவது தலைவன் சாகும்போது அவனுக்குக் கீழே உள்ள கீழ்மக்கள் எல்லோரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்’’ என்று பதிவு செய்கிறது. இந்நூல் வரையறுக்கும் ‘ஹிந்த்’ லாகூர், முல்தான், காஷ்மீர், கன்னோஜ் பகுதிகளை மட்டுமின்றி காமரூபம் (அஸ்ஸாம்), சம்பா, கேமர் (கம்போடியா), ஃபன்சூர் (சுமத்ரா) ஆகியவற்றையும் உள்ளடக்குகிறது.
இப்படி நிறையச் சொல்லலாம். சமஸ்கிருத வரலாற்றைக் குதூகலமாக எழுதும் ஷெல்டன் பொல்லாக் சமஸ்கிருதமொழி ஆளுகையின் எல்லைக்குள் கம்போடியா, சம்பா வரை கொண்டு செல்வதும் குறிப்பிடத் தக்கது. ‘அகண்ட இந்தியா’ கோட்பாட்டாளர்கள் இவை குறித்து மகிழ்ச்சி சொள்ளத் தேவையில்லை. மேற்கண்ட வரையறைகளில் தென்னிந்தியா உள்ளடக்கப்படாதது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் 16_ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆட்டோமன் வரலாற்றுப் பதியரான (Chronicler) செய்ஃபி செலபி ‘ஹிந்த்’ மன்னர்களைப் பட்டியலிடும்போது, மொகலாயப் பேரரசர் ஜலாலுதீன், அக்பரை விட்டுவிடுவதும் தக்காண அரசர்களில் தொடங்கி ‘பெகு’ (பர்மா), ‘செரன்தீப’ (ஸ்ரீலங்கா) அரசர்களையும் ‘அசோஹ்’ சுல்தான்களையும் (இந்தோனேஷியா) உள்ளடக்குவதும் அகண்ட பாரதக்காரர்களுக்கு எந்த அளவு உவப்பளிக்கும் என்பது தெரியவில்லை.
வெளியிலிருந்து பார்த்தவர்கள் இருக்கட்டும், உள்ளிருந்தவர்கள் எந்த அளவிற்கு ‘ஹிந்த்’ என்கிற வரையறையில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்? யார் ‘உள்நாட்டவர்’? யார் ‘அந்நியர்’? 13,14,15 நூற்றாண்டுகளில் இந்திய வரம்பு குறித்த கருத்துக்கள் புறவயமான வரையறைகளாகத்தான் இருந்தனவேயழிய உள்ளிருந்து உரிமை கோரப்பட்டவையாக இல்லை என்கிறார் சஞ்சய்.
‘‘நாகரிகம்’’ என்கிற கருத்தாக்கம் (இந்திய நாகரிகம், ஐரோப்பிய நாகரிகம்,) இத்தகைய பரந்துபட்ட அளவிலான இணைப்புண்ட வரலாறு எழுதியலுக்குப் பெருந்தடையாக உள்ளது. அச்சுப் பதிவான இக் கட்டமைப்புகளை உருவாக்கியவர்கள் தென்கிழக்கு ஆசியா (கம்போடியா, இந்தோனேசியா, ஜாவா, சுமத்திரா முதலான இந்தியப் பெருங்கடற் தீவுகள்)வுக்கு இந்தத் தகுதியை வழங்கியதில்லை. தொடக்கத்தில் இந்திய நாகரிகம், பின்னாளில் இஸ்லாமிய நாகரிகம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகவே தென்கிழக்கு ஆசியா கருதப்பட்டது. ஆனால் பிரம்பணான், போரோபோதூர் ஆகியவற்றின் மகத்தான கலை வெளிப்பாடுகள் தென்னிந்தியாவில் கோயிற் கலை உருவாக்கத்திற்கு முன்னதாகவே தோன்றியவை என்பதை யாரும் சிந்திப்பதில்லை.
பல்வேறு கலாச்சாரங்கள் பயணிக்கும் குறுக்குச் சாலையாக இந்தியா அமைந்ததை ஏற்காததன் விளைவுதான், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி முதலானோர் விஜயநகரப் பேரரசை தக்காண சுல்தான்கள், டில்லி முகலாயர்கள் ஆகியோரின் கலாச்சார அரசியல் விரிவாக்கத்திலிருந்து தன்னைக் காத்துக் கொண்ட வீரமிக்க இந்துப் பேரரசாக உருவகிப்பது. பர்ட்டன் ஸ்டெய்ன், பிலிப் வாகோனர் முதலான இன்றைய விஜயநகர வரலாற்றாசிரியர்கள் இந்தக் கருத்துப் பிழையை வெளிப்படுத்துகின்றனர். விஜயநகரக் கலை வடிவங்கள் மட்டுமின்றி, பாசனமுறை, இராணுவ மற்றும் நிதி நிர்வாகம், பெயர் சூட்டிக் கொள்ளும் முறை வரை புறவயச் செல்வாக்குகளுக்கு ஆட்பட்டவையாகவே இருந்தன. வட இந்தியா, தக்காணம், ஹ¨ர்முஸ், பெர்சிய வளைகுடா ஆகிய பகுதியிலிருந்து விஜய நகரத்தின் மீது இத் தாக்கங்கள் அமைந்தன. ‘இந்து விஜயநகரம்’ ‘முஸ்லிம் எதிரிகள்’ என்கிற கட்டமைவு ரொம்பச் சிக்கலானது. போர்த்துக்கீசியத் தலையீட்டைக் கணக்கில் கொள்ளாது இதைப் புரிந்து கொள்ள இயலாது. பிரிட்டிஷ் வருகைக்கு முந்திய போர்த்துக்கீசிய ஆசியாவில் போர்த்துக்கீசியர்களுக்கும் முகலாயர்களுக்குமிடையிலான ஒத்துழைப்பு அல்லது உறவு என்பது ஒருவரை ஒருவர் பல்வேறு தந்திரங்கள், ஒப்பந்தங்கள், நடைமுறைகளினூடாக மடக்கிப் போடுகிற முயற்சியாகவே இருந்தது? நேரடியான போர்கள் இல்லை என்பதற்காக உள்ளடக்கப்பட்ட மோதல்களை நாம் புறக்கணித்துவிட இயலாது.
1572_3 ஆண்டுகளில் அக்பர் குஜராத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தபோது, கோவா மற்றும் டையூவில் உறுதியாகக் கால் பதித்திருந்த போர்த்துக்கீசியர் துணுக்குற்றனர். அக்பரது ஆளுநரின் ஆட்சியில் குஜராத் இருந்த போதும் சூரத்திலும் கம்பயாத்திலும் போர்த்துக்கீசியர் சுதந்திரமாக வணிகம் செய்யவும் டையூ துறைமுகத்திற்கு வந்து சேரும் கப்பல்களிடம் சுங்கம் வசூலிக்கவும் அனுமதிக்கப்பட்டனர். பதிலாக, செங்கடல் வழியாக சூரத்திலிருந்து செல்லும் ‘ஹஜ்’ யாத்ரீகர்களுக்கு கடலாதிக்கத்தில் வலுவாக இருந்த போர்த்துக்கீசியர் பாதுகாப்பு அளித்தனர். இந்தப் பாதுகாப்பிற்காக முகலாயர்கள் ஏராளமான இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. அக்பரின் அத்தை (சித்தி?) குல்பதன் பேகம் 1575_ல் ஹஜ் யாத்திரை செல்வதற்குத் திட்டமிட்டபோது சுமார் ஓராண்டுக் காலம் சூரத்திலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு, டாமனுக்கு அருகிலுள்ள புல்சார் என்னும் பிரதேசத்தை விட்டுக் கொடுத்த பின்னரே 1576 அக்டோபரில் அவர் கப்பலேற அனுமதிக்கப்பட்டார். ஆட்டோமன் பேரரசுக்கும் முகலாயர்களுக்குமிருந்த பகையை போர்த்துக்கீசியர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர். ஹஜ் பயணிகளின் கடற்பயணப் பாதுகாப்பிற்கு போர்த்துக்கீசியர்களையே அவர்கள் சார்ந்திருக்க வேண்டி இருந்தது. ஆட்டோமன்கள் தம்மை ‘கலீஃபா’ என்கிற உயர் அந்தஸ்துடையவர்களாக உரிமை கோரியதை எதிர்த்தே அக்பர் ‘தீன் இலாஹி’ என்கிற புதிய மரபை (லீமீtக்ஷீணீறீஷீஜ் sமீஸீt) உருவாக்கித் தன்னை ஒரு ‘மெனஸா’ நிலையில் ‘பாத்ஷா_இ_இஸ்லாம்’ ஆக அறிவித்துக் கொண்டார். இதனால் சன்னி முஸ்லிம்களின் எதிர்ப்புகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
பதேபூர் சிக்ரியில் சேசு சபைப் பிரிவை ஏற்படுத்த அனுமதி அளிக்க நேர்ந்தது எனக் கதை நீள்கிறது.
இத்தகைய ‘உள்ளடக்கப்பட்ட மோதல்’ என்கிற பின்னணியில்தான் விஜய நகரப் பேரரசின் முஸ்லிம் எதிர்ப்பைப் பார்க்க வேண்டும். முகலாயர்களுக்கு (மோர்கள்) எதிரான மாற்று வம்ச (ரீமீஸீtவீநீ) அரசு ஒன்றை போர்த்துக்கீசியர் ஊக்குவித்தனர். இந்த அரசியல் நோக்கத்தின்பாற்பட்டதே விஜயநகரத்தின் எதிர்ப்பு. இந்து ஙீ முஸ்லிம்; சிலுவை ஙீ பிறை என்கிற இருமை எதிர்வுகளெல்லாம் எந்த அளவிற்கு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொருத்தமானவை என்பது கேள்விக்குறியே. கிறிஸ்தவ வணிக நலன்களுக்கு இடையேயும் முஸ்லிம் அரசுகளுக்கு இடையேயும் இருந்த வேறுபாடுகள் கிறிஸ்தவ ஙீ முஸ்லிம் வேறுபாடுகளைக் காட்டிலும் கூர்மையாக இருந்த தருணங்கள் உண்டு.
பேரரசுகளின் விரிவாக்கம், காலனிய நடவடிக்கைகள், தேசிய உருவாக்கம் ஆகியன குறித்த இறுக்கமான ஒற்றை மாதிரிகளுக்கும் இணைப்புண்ட வரலாற்றில் இடமில்லை. ஐரோப்பாவை மையமாகவும் (Center), இந்தியா முதலானவற்றை விளிம்பாகவும் (Periphery) கொண்டு உருவாக்கப்படும் ‘உலக அமைப்புக் கொள்கை’ (World System Theroy்)யும் கூட பிரச்சினைக்குரியதே. இத்தகைய அணுகல் முறையில் மூன்று விதப் பிழைகள் சாத்தியமாகின்றன என்கிறார் சஞ்சய்.
1. கால வழு: ஒரே காலகட்டத்தில் பேரரசுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இருந்த உறவும், பேரரசுக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இருந்த உறவும் வேறுபட்டவையாக இருந்தன. 15_ம் நூற்றாண்டின் முற்பகுதியில், லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து ஹேப்ஸ்பர்க் பேரரசிற்குப் பெரிய அளவில் கப்பம் சென்றது. விலை உயர்ந்த உலோகங்கள் கொண்டு செல்லப்பட்டதோடு கட்டாய உழைப்பு, அடிமைச் சேவகம் ஆகிய வடிவங்களில் உபரியும் கொள்ளை கொண்டு செல்லப்பட்டது. எனினும் இவை அனைத்தும் மையத்தை வளப்படுத்த மட்டுமே பயன்பட்டதாகவும் கருத வேண்டியதில்லை. பணவீக்கத்திற்கும் ஏற்றத்தாழ்வான பொருளாதார அமைப்பிற்கும் இவை காரணமாயின. இதே நேரத்தில், ஐபீரிய மையத்திற்கும் (போர்த்துக்கீசிய & ஸ்பெய்ன்) ஆகிய நாடுகளுக்குமான கேப் (‘நன்னம்பிக்கை முனை’) வழியிலான வணிகம் இத்தகைய சுரண்டல் தன்மை உடையதாக இல்லை. மையத்திலிருந்து தங்கம், வெள்ளி இறக்குமதியாகி, ஈடாக மிளகு, இன்டிகோ முதலான பொருட்கள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டன. முதற்கட்டத்தில் பெரிய அளவு உபரி கொள்ளையிடப்பட்டதில்லை.
2. இட வழு.: ஒரே இடத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் பேரரசு மையத்திற்கும் வெளியிலுள்ள நாடுகளுக்குமான உறவு ஒரே மாதிரியாக இருந்ததில்லை. ஆசிய நாடுகளுக்கும் ஐபீரியப் பேரரசிற்குமிடையே தொடக்க நவீன காலத்தில் (1450_1750) இருந்த உறவு பெரிய அளவில் சுரண்டல் அடிப்படையில் இல்லை என்றோம். ஆனால், பின்னால் உருவான பிரிட்டன்/பிரான்சுப் பேரரசுகளுக்கும் இந்தியாவிற்குமான உறவு அப்படியானதல்ல. முந்தைய கட்டத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் (புதிய ஸ்பெய்ன் மற்றும் பெரு முதலியன) இருந்த கொடுமையான சுரண்டல் உறவுக்குச் சமமானது இது. எனவே ஒரு இடத்தில் நிலவிய ஏகாதிபத்திய உறவையும் நாம் ஒரே மாதிரிப் பார்க்க வேண்டியதில்லை.
பின் காலனியக் கோட்பாட்டாளர்கள் இங்குதான் பிரச்சினைக்குள்ளாகின்றனர். பின் காலனியம் என்கிற வரையறையை, இந்தியாவையும் லத்தீன் அமெரிக்காவையும் ஒன்றே போல இவர்கள் உள்ளடக்குகின்றனர். லத்தீன் அமெரிக்காவில் பின் காலனியம் என்பது 19_ம் நுற்றாண்டின் பிற்பகுதி. இந்தியாவிற்கு இது பொருந்தாது. இங்கே அது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய நிகழ்வுகளையே குறிக்கும் எல்லாப் பேரரசுகளும் காலனியப் பேரரசுகளல்ல, எல்லாம் ஒரே மாதிரியான பொருளாதார, கலாச்சார தர்க்கத்திற்குள் அடங்கா. காலனிகளுக்கும் பேரரசுகளுக்கும் இடையிலுள்ள பொருளாதாரச் சுரண்டல் ஒன்றே இவற்றுக்கிடையிலான மொத்த உறவுகளையும் குறித்து விடாது. பல்வேறு வகைப்பட்ட உள் சுரண்டல்கள், மோதல்கள் ஆகியவற்றிற்கு மேற்குறிப்பிட்ட வரையறை இடமளிக்காது. இதன் பொருள் ஏகாதிபத்தியம், விளிம்புகளிலிருந்து மையங்களை நோக்கி உபரி செல்லுதல் முதலான கருத்தாக்கங்களைக் கைவிட வேண்டுமென்பதல்ல. மிகுந்த எச்சரிக்கையுடன் இவற்றைக் கையாள வேண்டும் என்பதே.
3. ஐபீரியப் பேரரசும், பிரிட்டிஷ் பேரரசும் வேறு வேறு; அல்லது ஐபீரியப் பேரரசின் முதற்கட்டமும் அடுத்தடுத்த கட்டங்களும் வேறு வேறு என்கிற ரீதியில் இதற்கு விளக்கமளித்துவிட முடியாது. அய்ரோப்பாவை மையமாகக் கொள்ளும் பின் காலனிய அணுகல் முறை ‘நவீனத்துவம்’ குறித்த அருதப் பழசான ஒரு விளக்கத்தை அளிக்கிறது. நவீனத்துவம் என்பது ஐரோப்பாவின் ஏகபோகம். இங்கிருந்தே விளிம்புகளுக்கு நவீனத்துவமும் அதன் அரசியல் வெளிப்பாடான தேசிய அரசும் ஏற்றுமதியாகிறது என்கிறது பின் காலனிய அணுகல்முறை. ஆனால் தேசிய உருவாக்கம் நான்கு வழிகளில் ஏற்படுகிறது.
1. அருகருகே உள்ள அரசமைவுகள் ஒருங்கிணைந்து தேசம் உருவாதல் (19_ம் நூ. இத்தாலி, ஜெர்மனி).
2.பெரிய அரசுகள் உடைந்து, இன, மொழி அடிப்படையில் தேசங்கள் உருவாதல் (அயர்லாந்து, மலேசியா முதலியவை இனம் என்பதைத் தேச உருவாக்கத்தின் சாராம்சமான காரணியாகக் கருத வேண்டாம் என எச்சரிக்கிறார் சஞ்சய்)
3. தேச அரசே ஒரு ஏகாதிபத்திய மையமாக உருவாதல் (பிரிட்டன், ஸ்பெய்ன், போர்த்துகல், நெதர்லான்ட்) 4. தேச அரசு பேரரசுப் பண்புடன் தொடர்தல் (சோவியத் யூனியன், சீனா, இந்தியா _ பேரரசுப் பண்பு என்பது அளவில் பெரிதாகவும் பல்வேறு மொழி, இன அடையாளங்களையும் உள்ளடக்குவதாகவும், ஓரளவிற்கு காப்புத் தன்மை உடையதாகவும் அமைவது).
சுருக்கமாகச் சொல்வதானால் தொடக்க நவீன காலத்திற்குமான ஒற்றை ஏகாதிபத்திய மாதிரி எதுவும் கிடையாது. தேச அரசு உருவாக்கத்திற்கான வழிகளும் ஒற்றைத் தன்மையானதல்ல.
ஒரே நிகழ்வு குறித்த ஐரோப்பிய வரலாற்றுப் பதிவுகளும் அராபிய, பெர்சிய மற்றும் உள்ளூர் வரலாற்றுப் பதிவுகளும் வேறுபட்டு நிற்கும் தன்மைகள் சுவாரசியமானவை. இவை ஒவ்வொன்றும் தத்தம் பக்கத்து அரசியல் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் இருப்பதாகச் சுருக்கிப் பார்த்துவிட இயலாது. நிகழ்வுகளைப் பொருத்து இப் பிரதிகளின் நிலைபாடுகள் வேறுபடுகின்றன. சில நிகழ்வுகளில் ஐரோப்பியப் பதிவுகள் நம்பிக்கைக்குரியனவாகவும், சில நேரங்களில் உள்ளூர்ப் பதிவுகள் கூடுதலாக உண்மையைப் பேசுபவையாகவுமுள்ளன. ஏகாதிபத்திய விரிவாக்கக் கொடுமைகளை அதிக அளவு பட்டியலிடும் ஐரோப்பியப் பிரதிகளுமுண்டு. பேரரசின் கருணையைப் பதிவு செய்யும் உள்ளூர்ப் பிரதிகளும் உண்டு. நவீனமான பிரதியியல் அணுகல் முறைகள், ஒப்பீடு, இதர சான்றுகள் மற்றும் நிகழ்வுகளுடன் தொடர்புறுத்திப் பார்த்தல் ஆகியவற்றின் மூலமாகவே ஒரு சுமாரான வரலாற்றுச் சித்திரத்தை நாம் வரைய முடியும். அப்படியும் கூட வரலாற்றின் சில பக்கங்களை நாம் நிரப்ப முடியாமலே போகலாம். சில கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாமலேயே முடியலாம். அதை ஏற்றுக் கொள்ளும் தைரியமும் நேர்மையும் ஒரு வரலாற்றாசிரியனுக்குத் தேவை.
ஆக, தேசத்திலிருந்து வரலாற்றைத் தப்புவிப்பது நமது உடனடிக் கடமையாகிறது.
விட்டுப் போனவை: 1. சஞ்சய் தனது நூலுக்கு மகுடமாக ஏற்கும் எஸ்ரா பவுண்டின் எட்டாவது கேன்டோ:
குங் சொன்னான், ‘‘வாங் பொறுத்துக் கொள்ளக் கூடிய ஆட்சியைத் தந்தான். அவனது காலத்தில் அரசு நன்றாகக் காக்கப்பட்டிருந்தது.
எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு நாள் வரலாற்றாசிரியர்கள் தமது எழுத்துக்களில் நிரப்பப்படாத பகுதிகளை விட்டுச் சென்றனர். நான் என்ன சொல்கிறேன் என்றால் அவர்களுக்குத் தெரியாதவற்றை நிரப்பாமல் சென்றனர். ஆனால், அந்தக் காலம் இப்போது மறைந்து வருவதாகத் தோன்றுகிறது. ஒரு நாள் வரலாற்றாசிரியர்கள் தமது எழுத்துக்களில் நிரப்பப்படாத பகுதிகளை விட்டுச் சென்றனர். ஆனால் அந்தக் காலம் இப்போது மறைந்து வருவதாகத் தோன்றுகிறது.’’
2. சஞ்சய் சுப்ரமண்யத்தின் இரு நூற்கள் Explonations in connected History (i) Tagus to the Ganger (ii) Mughals and .…. ஆக்ஸ்போர்டு வெளியீடுகளாகக் கிடைக்கின்றன.றீ