முதுமையும் ரத்த அழுத்த நோயும்
கு.கணேசன்
உயர் ரத்த அழுத்த நோய்க்கு நவீன சிகிச்சைகள் பல இருந்தாலும் ஆரோக்கிய உணவின் மூலம் சரியான அளவில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதைப் பொதுமக்களுக்குப் புரிய வைப்பதே மருத்துவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று “உலக நலவாழ்வு நிறுவனம்’ வலியுறுத்தி வருகிறது.
ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இளைஞரானாலும் சரி, முதியவரானாலும் சரி, ஒருவருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை ரத்த அழுத்தம் இருந்தால் பாதிப்பு வராது. இதற்கு மேல் அளவு அதிகரித்தால் அதை “உயர் ரத்த அழுத்தம்’ என்கிறோம். இந்நோயைத் தொடக்கத்திலேயே கவனிக்கத் தவறினால் இதயம், மூளை, சிறுநீரகம், கண்கள் ஆகியவற்றுக்கு எமனாக அமைந்துவிடும்.
மாரடைப்புக்கு உயர் ரத்த அழுத்தம் ஒரு முக்கியக் காரணம். இது தவிர, இதயம் வீங்கிச் செயலிழத்தல், கண்களின் விழித்திரையில் ரத்தம் கசிந்து பார்வை இழத்தல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு. ஆகவே உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதுமானது. சிறுநீரக நோய் உள்ளவர்கள் 3 கிராம் வரை சேர்த்துக் கொள்ளலாம். உப்பு மிகுந்த உணவுப் பொருள்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், வடாம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப் பருப்பு, புளித்த மோர் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
கொழுப்பு அதிகமுள்ள இறைச்சி, முட்டை, இறால், தயிர், நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம், சாஸ் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. பூரி, வடை, சமோசா, முறுக்கு, பஜ்ஜி, வறுவல் போன்ற எண்ணெயில் பொரித்த வறுத்த, ஊறிய உணவுகள் மற்றும் சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகள் வேண்டாம்.
தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைக்கூட குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகப்படுத்தினால் நல்லது. நார்ச்சத்து, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், கொய்யா, தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள், பீன்ஸ், பட்டாணி, கொண்டைக்கடலை போன்ற பயறுகள், வெந்தயம், பாகற்காய் போன்ற காய்கள், புதினா, கொத்துமல்லி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம்.
பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய தாதுச் சத்துககளுக்கு உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. பழங்கள், காய்கறிகள், கீரைகள் குறிப்பாக காரட், தக்காளி, உருளைக்கிழங்கு, பட்டாணி, அன்னாசி, அவரை போன்றவற்றில் இச்சத்துகள் அதிகம்.
உடலின் உயரத்துக்கு ஏற்ப உடல் எடையைக் பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். தினமும் 40 நிமிடங்கள் நடப்பது ரத்த அழுத்தம் சீராக இருக்க மட்டுமல்ல, மாரடைப்பையும் தடுக்கவல்லது.
சிகரெட், பீடி, சுருட்டு போன்றவற்றைப் புகைக்கும் பழக்கத்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது. உடனே இப்பழக்கத்தை நிறத்துங்கள். மதுவுக்கும் விடை கொடுங்கள். யோகாசனம், தியானம் போன்றவை மன அழுத்தத்தைக் குறைத்து மனதுக்கு அமைதியைத் தரக்கூடியவை.
முதுமையில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படும் மற்றொரு முக்கியப் பிரச்னை “நிலை மயக்கம்’ முதுமை காரணமாக இவர்களுக்கு ரத்தக் குழாய்களின் உட்சுவர் கடினமாகி சுருங்கி விரியும் தன்மையை இழந்துவிடும். உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து மேல்பகுதிக்கு ரத்தம் செல்ல சிரமப்படும். இதனால் திடீரென ரத்த அழுத்தம் குறைந்து, மூளைக்கு செல்லும் ரத்தம் குறையும். அப்போது மயக்கம் வரும்.
இதனைத் தவிர்க்க கட்டிலின் தலைப் பகுதியை அரை அடி உயர்த்திக் கொள்ளலாம். தொடர்ந்து நீண்ட நேரம் படுப்பதையும் ஒரே இடத்தில் உட்காருவதையும் தவிர்ப்பது நல்லது. சட்டென்று நேராக எழுந்திருக்காமல் தலையைப் பக்கவாட்டில் திருப்பிக்கொண்டு மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்த அழுத்த மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
உலக அளவில் 100 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய் உள்ளது. இந்தியாவில் 100-ல் 20 பேருக்கு இந்த நோய் உள்ளது. அதிலும் 60 வயதைக் கடந்தவர்களிடம் பாதிப் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
முதுமை என்பது இயற்கையான விஷயம். தாழ்வு மனப்பான்மை மற்றும் முதுமையின் காரணமாக ஏற்படும் இயலாமையை வெற்றி காண்பதுதான் ரத்த அழுத்தத்தை எதிர்கொள்ள முக்கியமான வழி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
(கட்டுரையாளர், பொதுமருத்துவர்).