பாலுமகேந்திராவின் புதிய திரைப்படக் கல்லூரி: செப்டம்பர் முதல் சென்னையில் தொடக்கம்
சென்னை, பிப். 24: பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா சென்னையில் புதிய திரைப்படக் கல்லூரியைத் தொடங்குகிறார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பாலுமகேந்திரா கூறியதாவது:
சினிமா மீது எனக்கு ஏற்பட்ட வெறி காரணமாக நான் தேடித் தேடிச் சேகரித்த அறிவு, பணியாற்றத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை எனக்குக் கிடைத்த அனுபவம் போன்றவற்றை இளைய தலைமுறையினருக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தத் திரைப்படக் கல்லூரியைத் துவக்குகிறேன்.
பண லாபம் கருதி இக்கல்லூரியைத் துவக்கவில்லை. தற்போது என்னிடம் போதிய பண வசதி கிடையாது. ஆனாலும் தைரியத்தோடு களமிறங்கியிருக்கிறேன்.
என் நண்பர்களும், உறவினர்களும், சினிமாவை நேசிக்கும் நல்ல உள்ளங்களும், என்னோடு பணியாற்றியவர்களும் எனக்குக் கைகொடுப்பார்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இக்கல்லூரி வரும் செப். 7-ம் தேதி முதல் சாலிகிராமத்தில் செயல்படும். இதில் பட்டயப் படிப்பு (டிப்ளமோ கோர்ஸ்) 12 மாதங்கள் கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு ஆகிய துறைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
படத்தொகுப்பு மற்றும் ஒலிப்பதிவு ஆகிய துறைகளுக்கு அடுத்த ஆண்டில் இருந்து பயிற்சியளிக்கப்படும்.
இயக்கம், ஒளிப்பதிவு ஆகிய துறைகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் உள்ள 12 இடங்களில் 4 இடங்கள் வெளிநாட்டுத் தமிழ் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். இக்கல்லூரியில் சிறுகதை, கவிதை, புதினம் ஆகியவற்றை உள்ளடக்கிய தற்கால இலக்கியமும் ஒரு பாடத்திட்டமாக இருக்கும்.
அனைத்துத் துறைகளிலும் அத்தியாவசிய தொழில்நுடப்க் கோட்பாடுகள், அதிக எண்ணிக்கையிலான செய்முறைப் பயிற்சிகள் இடம்பெறும். ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றை மாணவர்களுக்கு நானே நேரடியாகக் கற்றுக்கொடுக்கிறேன்.
தேசிய நாடகக் கல்லூரியைச் சேர்ந்த மூத்த கலைஞர் கோபாலி நடிப்புத்துறையின் முக்கிய ஆசிரியராக இருப்பார். கே. பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், மகேந்திரன், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் சிறப்பு ஆசிரியர்களாக வருகை தந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்துவர் என்றார் பாலுமகேந்திரா.
1966 முதல் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத்துறையில் இருக்கும் பாலுமகேந்திரா 5 தேசிய விருதுகள், 8 மாநில விருதுகள் உள்பட பல விருதுகளை வென்றவர்.
இந்திய மற்றும் சர்வதேச அளவில் திரைப்படத்துறையின் முக்கியமான பல அமைப்புகளுக்கு தலைவராகவும், ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.