“சர்க்கரை உற்பத்தி 260 லட்சம் டன்களாக உயரும்’
புது தில்லி, மார்ச் 28: 2006-07-ம் ஆண்டுக்கான கரும்பு அரைவைப் பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 260 லட்சம் டன்களைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் சர்க்கரை உற்பத்தி 193 லட்சம் டன்களாக இருந்தது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் உற்பத்தி அதிரித்துள்ளதாக சர்க்கரை ஆலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்க்கரை உற்பத்தி நடப்பாண்டில் 250 லட்சம் டன்களைத் தாண்டும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு ஆகியவை அரசுக்கு அறிக்கை அளித்திருப்பதாக மத்திய அமைச்சர் சரத்பவார் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் தற்போது கரும்பு அரைவைப் பருவமாகும். எனவே சர்க்கரை உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என கரும்பு ஆலை அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மாநில சர்க்கரை ஆலைகள் ஆணையரின் அறிக்கைப்படி நடப்பு அரைவைப் பருவத்தில் சர்க்கரை உற்பத்தி, 238.34 லட்சம் டன்களை எட்டும் என அரசு மதிப்பீடு செய்திருந்தது.
============================================================================================
சர்க்கரை ஏற்றுமதிக்கு ரூ.850 கோடி ஊக்கத்தொகை
புனே, மார்ச் 28: சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்காக மத்திய அரசு ரூ.850 கோடி ஊக்கத் தொகை அனுமதித்துள்ளது. நடப்பாண்டில் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கும் என்பதால் கடந்த ஜனவரி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் புனேயில் தெரிவித்தார்.
நடப்பாண்டில் சர்க்கரை உற்பத்தி 250 லட்சம் டன்களை எட்டும் என்றும், ஏற்கெனவே 40 லட்சம் டன் உபரியாக கையிருப்பு உள்ளது என்றும், ஆண்டுக்கு நமது உள்ளூர் தேவை 190 லட்சம் டன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்க்கரை ஏற்றுமதிக்கு, துறைமுகம் உள்ள மாநிலங்களில் டன் ஒன்றுக்கு 1300-ம் பிற இடங்களில் ரூ.1400-ம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றார்.
கோதுமை உற்பத்தி நடப்பாண்டில் 72 லட்சம் டன்களாக இருக்கும். கோதுமை ஏற்றுமதிக்கு அரசு அனுமதிக்காது. தேவையைப் பொறுத்து தரமுள்ள 30 லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.