“பருத்தி வீரன்’ பட கலைஞர்களுக்கு தேசிய விருது நிச்சயம்- அமீர்
தரமான படம் என்று பல தரப்பாலும் பாராட்டப்பட்ட “ராம்’ படத்தையடுத்து டீம் ஒர்க் பேனரில் இயக்குநர் அமீர் தயாரித்து இயக்கும் படம் “பருத்தி வீரன்’. இதில் நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனும் சூர்யாவின் சகோதரருமான கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். ப்ரியாமணி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் அமீரிடம் கேட்ட போது… “”இது வழக்கமான சினிமா அல்ல; முழுக்க முழுக்க தேனி, மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுத்திருக்கிறோம். கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மிக யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. படத்தில் இடம்பெறும் கிராமத்துத் திருவிழா பாடல்கள், இதுவரை எந்தத் தமிழ் சினிமாவும் காட்டாத ஒன்று. இதற்காக 2000 கிராமியப் பாடல் கேசட்டுகளை வாங்கி பாடல்களைக் கேட்டு அவற்றின் சாயல் இல்லாமல் பாடல்களை அமைத்திருக்கிறோம். இளையராஜா கூட இந்த அளவு இசையமைத்திருப்பாரா என்று எண்ணும் வகையில் இசையமைத்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா.
இந்தக் கதைக்கு கார்த்தியும், ப்ரியாமணியும் பொருந்துவார்களா என்ற பேச்சுக்கு படம் பதில் சொல்லும். இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 60 புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். தேசிய விருது பெற வேண்டும் என்பதற்காகவே அனைவரையும் சொந்தக் குரலில் பேச வைத்திருக்கிறோம். ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்… இந்தப் படத்துக்காக கார்த்தி, ப்ரியாமணி, ஒளிப்பதிவாளர் ராம்ஜி உள்பட இன்னும் சிலருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார் அமீர்.
பருத்திவீரனுக்கு குறவர் சமுதாயம் எதிர்ப்பு
‘பருத்திவீரன்’ படத்தில் குறவர் சமுதாயத்தை மிகவும் கேவலாமாக காண்பித்துள்ளதால் எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பேரணி நடத்த இருப்பதாக குறவர் பழங்குடி மக்கள் சங்க பொதுச் செயலாளர் கேப்டன் துரை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
‘பருத்திவீரன்’ பல தடைகளை கடந்து சென்ற வாரம் திரைக்கு வந்தது. மக்கள் மத்தியில் படம் நன்றாக இருப்பதாக பேச்சும் அடிபடுகிறது.
இந்நிலையில், படத்தில் ஒரு சமூகத்தை உயர்வாக காட்டும் நோக்கத்தில் குறவர் இனத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த படம் தமிழகத்திலுள்ள அனைத்து குறவர் இன மக்களையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கி இருப்பதாகவும் குறவர் இன மக்கள் கூறியுள்ளார்.
படத்தை தணிக்கை குழு அனுமதித்திருப்பது குறவர் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி என்றும் பருத்திவீரன் படத்தை முதலில் தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும், எங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் இன்றும், வரும் 9ஆம் தேதி தர்மபுரியிலும் கண்டன பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிக்கையில் கூறியுள்ளார் கேப்டன் துரை.
பருத்தி வீரன் படத்துக்கு தடை கோரி வழக்கு
சென்னை, மார்ச் 7:கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மலைக்குறவர் மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ஜி. ராமசாமி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
மலைக்குறவர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பருத்திவீரன் படத்தில் வசனங்களும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அப்படத்தின் காட்சிகள், இரு சாதியினரிடையே மோதலை தூண்டும் வகையில் உள்ளது. எனவே அந்தக் காட்சிகளையும், வசனங்களையும் நீக்குமாறு படத்தின் தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வழக்கு முடியும் வரை பருத்தி வீரன் திரைப்படத்தைத் திரையிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வரும்.
—————————————————————————————————
“பணத்தை தராமல் அவதூறு பரப்புகிறார்”
டைரக்டர் அமீர் மீது சட்டப்படி நடவடிக்கை
`பருத்தி வீரன்’ பட அதிபர் அறிக்கை
சென்னை, ஆக.8-
“பணத்தை திருப்பி தராமல், அவதூறு பரப்பி வரும் டைரக்டர் அமீர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது” என்று `பருத்தி வீரன்’ பட அதிபர் பிரகாஷ் பாபு கூறியிருக்கிறார்.
`பருத்தி வீரன்’ பட விவகாரம்
நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி கதாநாயகனாக நடித்து, அமீர் டைரக்டு செய்த படம், `பருத்தி வீரன்.’ இந்த படத்தின் தயாரிப்பு செலவு தொடர்பாக டைரக்டர் அமீருக்கும், பட அதிபர்கள் ஞானவேல், பிரகாஷ் பாபு ஆகியோருக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.
இதுதொடர்பாக பட அதிபர்களில் ஒருவரான பிரகாஷ் பாபு நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-
“பருத்தி வீரன் படத்தை இரண்டு கோடியே 75 லட்சம் ரூபாயில் முதல் பிரதி எடுத்துக்கொடுப்பதாக டைரக்டர் அமீர் சொன்னார். இரண்டு கட்டமாக 100 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் 2 கோடி ரூபாய் வாங்கியிருந்தார். இன்னும் ஒரு வாரத்தில் படத்தை முடித்து விடலாம் என்று சொன்னார். கூடவே 3 கோடியே 50 லட்சம் பட்ஜெட்டில்தான் படத்தை முடிக்க முடியும் என்று குண்டை தூக்கி எறிந்தார். அதிர்ச்சி அடைந்தோம்.
நாங்களே தயாரிப்பு நிர்வாகத்தை பார்த்துக்கொள்கிறோம். உங்களுக்கு ஒரு சம்பளம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினோம். “அப்படியா, அப்ப ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுங்க” என்று இடியை இறக்கினார். ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடியும் என்று சொன்னவர், அதன்பிறகு 64 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்.
ஆடியோ ரிலீஸ்
“ஆடியோ ரிலீஸ் நடத்தினால் ஏரியாக்கள் விற்க முடியும். என்னிடம் பணம் இல்லை. நீங்கள் தந்து உதவினால், ஏரியா விற்று பணம் செட்டில் செய்கிறேன்” என்றார். வேறு வழியின்றி ஆடியோ ரிலீசுக்கு பணம் கொடுத்தோம். அவர் கூறியது போலவே ஏரியாவும் விற்று பணமும் வந்தது. ஆனால், பணம் தராமல் ஏமாற்றி விட்டார்.
படத்தின் தயாரிப்பு செலவு மூன்றரை கோடி என்று சொன்னவர், திடீரென்று 5 கோடி செலவாகிவிட்டது என்றார். பொறுக்கவே முடியாமல், தயாரிப்பாளர் சங்கத்திடம் பிரச்சினையை கொண்டு சென்றேன்.
சட்டப்படி நடவடிக்கை
பருத்தி வீரன் படம் ரிலீஸாகி 200 நாட்கள் நெருங்கிய நிலையிலும், தயாரிப்பாளர் சங்கத்தில் உறுதியளித்தபடி, இன்னும் கணக்கு வழக்குகளை அமீர் ஒப்படைக்கவே இல்லை. அப்படி முறையாக கணக்கு ஒப்படைத்தால், அமீர்தான் எங்கள் நிறுவனத்துக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தர வேண்டியிருக்கும்.
நாங்கள் கணக்கு கேட்டு அவரை தொடர்பு கொள்ளும்போதெல்லாம் பதில் சொல்லாமல் தலைமறைவாகி விடுகிறார். ஆனால், வாரத்துக்கு ஒருமுறை பத்திரிகைகளில், “தயாரிப்பாளர் தனக்கு பல லட்ச ரூபாய் பணம் தரவேண்டும்” என்று சொல்லி அவதூறு பரப்பிக்கொண்டே இருக்கிறார். பணத்தையும் திருப்பித் தராமல், அவதூறு பரப்பி வரும் அமீர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் பிரகாஷ் பாபு கூறியிருக்கிறார்.