தில்லியில் உள்துறை அமைச்சகத்தின் 2 கார்கள் திருட்டு
புதுதில்லி, அக். 21: மத்திய உள்துறை அமைச்சகத்துக்குச் சொந்தமான 2 கார்கள் தில்லியில் கடந்த 2 நாள்களில் காணாமல் போயுள்ளன.
இந்த 2 கார்களிலும் உள்துறை அமைச்சகத்தின் எம்எச்ஏ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதால், தீபாவளி மற்றும் ரம்ஜான் பண்டிகையின் போது அவற்றைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவதற்காக பயங்கரவாதிகள் திருடியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இதையடுத்து, தில்லி போலீஸôர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் லோதி கார்டனுக்கு வெளியில் வியாழக்கிழமை காலை மாருதி காரை (எண்: டிஎல்-4சிஜி-4911) விட்டு விட்டு வாக்கிங் சென்றார். அப்போது அந்தக் கார் திருடப்பட்டுள்ளது.
அதேபோல் தெற்கு தில்லியில் கோட்லா முபாரக்பூர் பகுதியில் அதிகாரியின் டிரைவர் வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா பொலீரோ காரும் (எண்: டிஎல்-2சிஎம்-7361) வியாழக்கிழமை திருடுபோயுள்ளது.
இது தொடர்பாக போலீஸôர் திருட்டு வழக்குப் பதிவு செய்து தில்லியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்துறை அமைச்சகத்தின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் இந்தக் கார்கள் அதிகபட்ச பாதுகாப்பு உள்ள பகுதிகளுக்கும் எளிதில் சென்று விட முடியும் என்பதால் போலீஸôர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.