ஏ.சி.சண்முகம் கல்வி நிறுவனம் ரூ.80 லட்சம் செலுத்த உத்தரவு
சென்னை: புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ரூ. 80 லட்சம் வாடகை பாக்கியை செலுத்தினால், வீட்டு வசதி வாரிய வீடுகளில் இருக்கும் மாணவர்களை காலி செய்யக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சென்னையை அடுத்த மதுரவாயலில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு சொந்தமான டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இதன் சார்பில் பொறியியல் கல்லுõரி, கலை மற்றும் அறிவியல் கல்லுõரி என சில கல்லுõரிகள் செயல்பட்டு வருகின்றன.
2005ம் ஆண்டு டிசம்பரில் பெய்த அடை மழையினால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரவாயலில் உள்ள இந்த கல்லுõரி விடுதியை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மாணவர்களை அங்கிருந்து காலி செய்து முகப்பேரில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர். கல்லுõரி கட்டடங்களில் சில பகுதிகள் ஆக்கிரமிப்பில் இருப்பதை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அதனை இடித்தனர்.
தற்போது எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
கூவம் ஏரி படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விதமாக எங்கள் கல்லுõரியின் சோதனைக் கூடம், விடுதி கட்டடங்கள் இடிக்கப்பட்டன. விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு மாற்று இடத்தை அளிக்க அப்போதைய முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி முகப்பேர் ஏரி திட்டத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளில் மாணவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 250 நடுத்தர குடியிருப்புகள் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டன.
மாணவர்கள் தங்கியிருந்த வீடுகளில் 158 குடியிருப்புகளை விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்து வீட்டு வசதி வாரியத்துக்கு கடிதம் எழுதினோம். விற்கும் வரை நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என்றும், 200708ம் கல்வியாண்டு முடியும் வரை மாணவர்கள் அங்கேயே தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினோம். 152 குடியிருப்புகளுக்கும் மாதம் வாடகையாக 12 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் என்றும், மொத்த பாக்கித் தொகை ஒரு கோடியே 54 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று, வீட்டு வசதி வாரியம் எங்களுக்கு கடிதம் அனுப்பியது.
தற்போது மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு வீட்டு வசதி வாரியம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம். வாரியத்தின் உத்தரவு தன்னிச்சையானது. அதனை ரத்து செய்ய வேண்டும். காலி செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. வழக்கை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார்.
நான்கு வாரங்களுக்குள் ரூ.80 லட்சத்தை வீட்டு வசதி வாரியத்துக்கு மனுதாரர் செலுத்தினால், வீடுகளை காலி செய்ய தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார். மனுவுக்கு டிசம்பர் மூன்றாம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வீட்டு வசதி வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.