Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Status’ Category

Ven Kushtam? Disorder Awareness – Melanin deficiency

Posted by Snapjudge மேல் நவம்பர் 18, 2007

விழிப்புணர்வு: வெண்குஷ்டம் அல்ல… வெண்புள்ளிகள்

ரவிக்குமார்


“”எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை மனிதாபிமானத்தோடு எப்படி நடத்தவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் தற்போது அதிகரித்துள்ளது. ஆனால் நீண்ட காலமாக சருமத்தில் வெண்புள்ளிகளுடன் இருப்பவர்களை, இன்னமும் இந்தச் சமூகம் “வெண்குஷ்டம்’ வந்தவர்கள் என்ற தவறான கண்ணோட்டத்துடன்தான் பார்க்கிறது. இதை வெண்புள்ளிகள் என்று அழைப்பதுதான் சரி. நோயே இல்லாத இதை தொழுநோய் என்று அழைப்பது தவறு.” என்று தன்னுடைய ஆதங்கத்தை நம்மிடம் வெளிப்படுத்தினார், கே.உமாபதி. இவர், “வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்- இந்தியா’ என்னும் அமைப்பின் பொதுச் செயலாளர். இவரும் இந்தப் பாதிப்போடு இருப்பவர்தான். வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் ஏற்படுத்துவதுடன், வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தகுந்த சிகிச்சை முறைகளை அறிவுறுத்தி வருகிறார் கே.உமாபதி. வெண்புள்ளிகள் இயக்கத்தின் செயல்பாடுகளைக் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

“”நம் உடலின் மிகப் பெரிய உறுப்பே தோல்தான். தோலில் உள்ள “மெலனின்’ என்ற நிறமி இழப்பினால் சருமத்தில் உண்டாவதுதான் இந்த வெண்புள்ளிகள். இந்த மெலனினை நம் உடலில் உற்பத்தி செய்வது தோலில் உள்ள “மெலனோûஸட்’ என்ற பெயருடைய அணுக்களின் வேலை.

நம் உடலில் கிருமிகளின் பாதிப்பு வரும்போது, அதை எதிர்ப்பது ரத்த வெள்ளை அணுக்களின் வேலை. இதனால் இந்தச் செல்களை “மிலிட்டரி செல்கள்’ என்று அழைப்பர். இந்த மிலிட்டரி செல்கள், கிருமி என நினைத்து “மெலானோûஸட்டை’ அழிக்கின்றன. அவ்வாறு மெலனோûஸட் செல்கள் அழிக்கப்படும் இடங்களில் வெண்புள்ளிகள் தோன்றி அது அப்படியே பரவத் தொடங்கும்.

இந்த வெண்புள்ளிகள் பாதிப்பு எந்த வயதிலும், யாருக்கும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் வெண்புள்ளிகள் பாதிப்புக்கு உள்ளானோர்கள் 18 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பார்கள். இந்தியா முழுவதும் சுமார் 4 கோடி பேருக்கு இருக்கும். உலக மக்கள் தொகையில் இரண்டு சதவிகிதம் பேருக்கு வெண்புள்ளிகள் பாதிப்பு இருக்கின்றது.

வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்களே வித்தியாசமாக நடத்தும் நிலை மாறவேண்டும். குறிப்பாக இந்தப் பாதிப்புடன் இருக்கும் பெண்களை குடும்பத்தின் விசேஷங்களில் பங்கேற்காமல் ஒதுக்கி வைப்பது, தொற்றிக் கொள்ளுமோ என்ற பயத்தால் அவர்களிடமிருந்து விலகி இருப்பது போன்ற செயல்களால், உளவியல்ரீதியாகப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வெண்புள்ளிகள் தொற்றக்கூடியதோ, பரம்பரையாகத் தொடரும் பிரச்சினையோ இல்லை என்பதை மக்கள் கூடும் பொதுஇடங்களிலும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் விழிப்புணர்வுப் பிரசாரங்களைச் செய்துவருகிறோம். வெண்புள்ளிகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துகளை விளக்கும் வகையில், சமீபத்தில் கூட, பள்ளி மாணவர்களைக் கொண்டு 9 கி.மீ. தூரத்துக்கு மனிதச் சங்கிலி அமைத்தோம்.

ஓர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அதிகாரிக்கு இந்த வெண்புள்ளிகள் பாதிப்பு இருந்தது. ஆனால் அவரது மனைவிக்கோ, அவரின் இரண்டு பெண்களுக்கோ இந்தப் பாதிப்பு இல்லை. ஒரு பெண் எம்.பி.ஏ.வும், இன்னொரு பெண் எம்.சி.ஏ.வும் படித்திருந்தனர். அப்பாவுக்கு வெண்புள்ளிகள் பாதிப்பு இருப்பதால் அவரின் பெண்களுக்கு பல வருடங்களாகத் திருமணம் ஆகாமலேயே இருந்தது. மனம் வெறுத்துப் போன அந்தப் பெண்களின் தந்தை, “”உங்கள் திருமணம் தடைபடுவதற்குக் காரணமாக நானே இருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்பா இறந்துவிட்டார் என்று சொல்லி திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். இப்படி வெண்புள்ளிகளின் பாதிப்பால் விளைந்த வேதனையான நிஜச் சம்பவங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆண்களுக்கு இந்தப் பிரச்சினை இருந்தால் பெண்கள் அவர்களை அனுசரித்துப் போவதைப் பரவலாகப் பார்க்கமுடிகிறது. அதுவே பெண்ணுக்கு இந்தப் பிரச்சினை இருந்தால், அந்தப் பெண்ணின் வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடுகிறது. வேலை வாய்ப்பில் தொடங்கி, திருமணம் ஆவதற்கே கூட தடையாக இருக்கிறது. இதனால் நாங்கள் வெண்புள்ளிகள் பாதிப்பு இருப்பவர்களுக்குள்ளாகவே பேசி, இதுவரை எட்டு திருமணங்களை நடத்தியிருக்கிறோம். வெண்புள்ளி பாதிப்பு இருந்தாலும் இந்த சாதியில்தான் பெண் வேண்டும், பையன் வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பவர்களுக்கு நாங்கள் உதவமுடியாதுதான். வெண்புள்ளிகளை விடவும் சமூகத்தில் புரையோடிப் போயிருப்பது சாதிதானே!

வெண்புள்ளி பாதிப்பிற்கு என்னைப் பொறுத்தவரையில் அலோபதி மருத்துவம் சரிப்படாது. சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை வைத்தியம் போன்ற வைத்திய முறைகளில் இதை பரவாமல் தடுப்பதற்கு வழியிருக்கிறது. அதிலும் பஸ்பம் (மெட்டல்) கலக்காத மருந்தைப் பயன்படுத்த வேண்டியது முக்கியம். சித்தா மற்றும் பரம்பரையாக மருத்துவம் பார்க்கும் நிபுணர்களை ஒன்றிணைத்து உருவாக்கியிருக்கும் மருத்துவக் குழுவினரின் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளை எங்களிடம் ஆலோசனைக்கு வருபவர்களுக்குப் (தொலைபேசி எண்: 044-65381157) பரிந்துரைக்கிறோம்.

பல நிறுவனங்களோடு பேசி வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களின் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருகிறோம். வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் யாரிடமும் நன்கொடை பெறக்கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. எங்களுக்கு எந்த வகையிலாவது உதவவேண்டும் என்று நினைப்பவர்கள், வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்துகளை, இந்த பாதிப்பு இருப்பவர்களிடமும், இல்லாதவர்களிடமும் கூட கூறுங்கள். விழிப்புணர்வு- பாதிப்பு இருப்பவர்களுக்கும் தேவை. இல்லாதவர்களுக்கும் தேவைதானே!” என்றார் உமாபதி.

Posted in Advice, AIDS, albinism, Awareness, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Bias, Blood, cancer, Cells, Color, Colour, cure, Deficiency, disadvantage, Discoloration, Disease, Disorder, Dots, genes, Genetic, Hereditary, HIV, hypomelanism, hypomelanosis, inferiority, Kushtam, Leper, Leprosy, medical, Melanin, melanocytes, Oppression, pigment, privilege, Race, racialism, racism, Racist, RBC, Skin, Society, Status, superiority, unaani, Unani, Venkushtam, Vennkushtam, WBC, White, Yunaani, Yunani | 20 Comments »

Sri Lanka government vs LTTE – Eezham Conflict: Updates, current developments

Posted by Snapjudge மேல் மே 21, 2007

இலங்கை மோதல்கள் – ஒரு அலசல்

யாழ்ப்பாணத்தில் மோதலின் போது டாங்கிகள்
யாழ்ப்பாணத்தில் மோதலின் போது

இலங்கையின் வடபகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைச் சுற்றவரவுள்ள இடங்களில் கடந்த 4 மாதங்களில் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் ஐந்நூறுக்கும் அதிகமான விடுதலைப்புலிகளைத் தாம் கொன்றதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

இந்த எண்ணிக்கையுடன் முரண்படும் விடுதலைப்புலிகள், சிங்களப் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில், இந்தப் போரில் தாம் வெல்வதாகக் காட்டிக்கொள்ள அரசாங்கம் முனைகிறது என்று கூறுகிறார்கள்.

இன்று திங்கட்கிழமை இரு வேறு சம்பவங்களில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகக் கூறும் இலங்கை இராணுவம், அந்தப் பகுதியில் தமது தரப்பில் இது வரையில் 48 பேர் கொல்லப்பட்டதாக ஒப்புக்கொள்கிறார்கள்.

கிழக்கில் தமது கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளில் இருந்து விடுதலைப்புலிகள் விரட்டப்பட்டதை அடுத்து, பெரும்பாலான மோதல்கள் தற்போது வடக்குக்கு நகர்ந்துள்ளன.

அரசாங்க மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு முன்னரங்கப் பகுதிகளுக்கு இடையேயான பகுதி எங்கிலும், சிறு மோதல்களும், பெரும் சண்டைகளும் தொடர்ந்து வருகின்றன.

2002 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், புறக்கணிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகள்
தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகள்

அவர்களது நிலைகளை நோக்கி தாக்குதல் நடவடிக்கைகள் ஜனவரி மாத நடுப்பகுதியில் ஆரம்பித்தது முதல், விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 541 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் இது மிகவும் தீவிரமான மிகைப்படுத்தல் என்று கூறும் விடுதலைப்புலிகள் தரப்பு பேச்சாளரான இராசையா இளந்திரையன், உண்மையான எண்ணிக்கை 60 க்கு சமீபமாக இருக்கும் என்று கூறுகிறார்.

விடுதலைப்புலிகள் வான் வழித்தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர், பெரும்பான்மை சிங்கள மக்களைச் சமாளிக்க அரசாங்கம் முயல்கிறது என்று அவர் கூறுகிறார்.

சிறிய விமானங்களைப் பயன்படுத்தி தலைநகருக்கு அருகாக உள்ள இலக்குகள் மீது இரு தடவை குண்டுகளை வீசிய விடுதலைப்புலிகள், ஒரு இராணுவ தளத்தையும் தாக்கிவிட்டு பாதுகாப்புடன் தமது தளத்துக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

இழப்புகள் பற்றிய எண்ணிக்கையைப் பொறுத்தவரை இலங்கையில் போரில் ஈடுபடுகின்ற தரப்பினரும் மிகவும் மும்முரமாக அதில் முரண்படுகின்றனர்.

தாமே வெற்றிபெறுவதாக இரு தரப்பும் காண்பிக்க முனைகின்றன. ஆனால் எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

தமிழர்களுக்கு ஒரு தாயகம் கோரி விடுதலைப்புலிகள் போராடுகிறார்கள்.

அவர்களை இரண்டு மூன்று வருடங்களில் தோற்கடித்துவிடுவோம் என்று உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இன்று திங்களன்று துப்பாக்கி மோதல் ஒன்றில் இரண்டு இலங்கைச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். வடபகுதியில் இடம்பெற்ற வீதியோரக் குண்டு வெடிப்பொன்றில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.

கடந்த 4 மாதங்களில் தாம் 48 சிப்பாய்களை இழந்ததாக இப்போது இலங்கை இராணுவம் கூறுகிறது.


அம்னெஸ்டி நிறுவனத்தின் ஆண்டறிக்கை வெளியாகியது
அம்னெஸ்டி நிறுவனத்தின் ஆண்டறிக்கை வெளியாகியது

இலங்கையில் மனித உரிமை நிலமைகள் மோசமடைந்துள்ளது எனக் கூறுகிறது சர்வதேச அபய நிறுவனம்

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்து வருவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பான் கொலைகள், சிறுவர்களை படையணிகளில் சேர்ப்பது, ஆட்கடத்தல்கள் உட்பட பல மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் அங்கு அதிகரித்து வருவதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் இந்த இருதரப்பாலும் தாக்கப்படுகின்றனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

அம்னெஸ்டி அமைப்பின் கருத்துப் படம்
அம்னெஸ்டியின் கருத்துப் படம் ஒன்று

2006 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையை இருதரப்பினரும் கடைபிடிப்பதாகக் கூறினாலும், 2006 ஆம் ஆண்டின் மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தம் செயற்பாட்டளவில் கைவிடப்பட்ட நிலை அடைந்துள்ளது எனவும், 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமல்படுத்தப்பட்ட, அவசரகால நிலையை இன்னமும் தொடர்ந்து அங்கு நடைமுறையில் உள்ளது எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அங்கு அதிகரித்து வரும் கொலைகள், ஆட்கடத்தல்களை தடுக்க போதுமான நடவடிக்கையோ அல்லது வழிமுறைகளோ இல்லை என்றும் அந்த அமைப்பின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அங்கு சர்வதேச மனித உரிமைகள் சமூகத்தின் பிரசன்னம் தேவைப்படுகிறது என்றும் அந்த அறிக்கை கருத்து வெளியிட்டுள்ளது.


Posted in AI, Air Force, Airforce, Amnesty, Arms, Army, battle, BBC, dead, defence, Defense, Developments, Eelam, Eezam, Eezham, Fatality, Fisherman, fishermen, Freedom, guns, HR, Human Rights, Independence, India, Infantry, LTTE, Media, Murder, Navy, Refugees, rights, Sri lanka, Srilanka, Status, Tamils, Updates, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal, Weapons | 1 Comment »

Tamil Actor Srikanth’s Wedding imbroglio – Engagement canceled?

Posted by Snapjudge மேல் மே 20, 2007

நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூன் 18-ல் திருமணம்

சென்னை, மே 13: நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூன் 18-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

srikanth Wedding pictures vandhana issueரோஜாக் கூட்டம் என்ற தமிழ்ப் படம் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த், அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில், கனா கண்டேன், பார்த்தீபன் கனவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது இயக்குநர் சசி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கும் புதுச்சேரியில் பிறந்து சென்னையில் குடியேறிய, சாரங்கபாணி மற்றும் ஷாலினி ஆகியோரது மகள் வந்தனா என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 18-ம் தேதி இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற உள்ளது.

வந்தனா

  • ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ. படிப்பையும்,
  • ஸ்விட்சர்லாந்தில் ஹோட்டல் மேலாண்மைப் படிப்பையும் முடித்துள்ளார்.

———————————————————————————————

நடிகர் ஸ்ரீகாந்த் திருமணம் ரத்து

சென்னை, மே 20: நடிகர் ஸ்ரீகாந்த் மணமுடிக்கவிருந்த வந்தனாவின் குடும்பத்தினர் மோசடிப் புகாரில் சிக்கியதையடுத்து இந்தத் திருமணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம்:

“ரோஜாக்கூட்டம்’ படத்தில் அறிமுகமாகி “ஏப்ரல் மாதத்தில்’, “பார்த்திபன் கனவு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாரங்கபாணி என்பவரின் மகள் வந்தனாவுக்கும் வரும் ஜூன் 18-ம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.

கடந்த வாரம் முதல் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் வந்தனாவின் சகோதரர் ஹர்ஷவர்தன், தந்தை சாரங்கபாணி ஆகியோர் மீது பல மோசடிப் புகார்கள் வெளிவந்துள்ளன.

சென்னையில் உள்ள காலி மனைகள் மீது போலி ஆவணங்கள் தயாரித்து அவற்றை விற்கவும், அந்த சொத்துக்களின் மீது கடன் பெற்று ஏமாற்றியதாகவும் ஹர்ஷவர்தன் மீது வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வேளச்சேரி, வள்ளுவர் கோட்டம், தி.நகர், கோட்டூர்புரம் போன்ற இடங்களில் நில மோசடி செய்ததற்காக ஏற்கெனவே கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் ஹர்ஷவர்தன்.

மேலும் உதகையில் “மெரிட் இண்டர்நேஷனல் எஜுகேஷனல் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் வந்தனா குடும்பத்துக்கு ஒரு கல்லூரி இருக்கிறது. வந்தனாதான் இக்கல்லூரியின் செயல் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்தக் கல்லூரியை விரிவுபடுத்த சென்னையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சுமார் 12 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர். அதற்கான தவணையும் சில மாதங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அதற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இவற்றையெல்லாம் மறைத்த வந்தனாவின் குடும்பத்தினர் தங்களுடைய மகளை ஸ்ரீகாந்துக்கு திருமணம் செய்ய நிச்சயித்துள்ளனர். இதுபற்றி தெரிந்தவுடன் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் மணமகள் வீட்டாரிடம் விசாரித்துள்ளனர். ஆனால் மணமகள் குடும்பத்தாரின் சமரச பேச்சுவார்த்தை எதுவும் பலனளிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதுகுறித்து ஸ்ரீகாந்தின் தந்தையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

திருமண வேலைகள் வேகமாக நடந்துவந்தன. இந்தச் சமயத்தில் அவர்களைப் பற்றி வெளிவரும் செய்திகள் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வந்தன. அதையும் நிறுத்த சொல்லிவிட்டோம். என் மகனின் எதிர்காலம்தான் முக்கியம் என தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைகளால் ஸ்ரீகாந்த்-வந்தனா திருமணம் நடைபெறுவது சாத்தியமில்லை என்றே ஸ்ரீகாந்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

—————————————————————————————-

ஸ்ரீகாந்தையே மணப்பேன்:வந்தனா சபதம்

சென்னை, மே 21: என் மீதான களங்கத்தைப் போக்கி குற்றமற்றவள் என நிரூபித்து, ஸ்ரீகாந்தை மணம் முடிப்பேன் என்று வந்தனா நம்பிக்கையுடன் கூறினார்.

இந்நிலையில் நிருபர்களிடம் வந்தனா ஞாயிற்றுக்கிழமை கூறியது:

கடந்த சில நாள்களாக, என் குடும்பத்தினர் பற்றி வெளிவரும் செய்திகளால் அதிர்ச்சி அடைந்துள்ளேன். மணப்பெண் என்ற முறையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என் மீது எந்த வழக்கும் இல்லை. என்னிடம் போலீஸôர் விசாரணை நடத்தவில்லை.

நான் எந்தவொரு வங்கியிலும் கடன் பெறவில்லை. யார் வாங்கிய கடனுக்கு ஒப்புதலோ, உத்தரவாதமோ கொடுக்கவில்லை. கடன் பத்திரத்தில் கையெழுத்து கூட போடவில்லை. அப்படியிருக்கும்போது எப்படி என் மீது வழக்குத் தொடர முடியும்.

எனக்கும், ஸ்ரீகாந்துக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தைத் தடுத்து நிறுத்த யாரோ திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புகிறார்கள் என நினைக்கின்றேன்.

சகோதரருடன் தொடர்பில்லை: எனது சகோதரர் ஹர்ஷவர்தன், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக எங்களைப் பிரிந்து தனியாக வாழ்கிறார். எனது நிச்சயதார்த்தத்துக்குகூட அவர் வரவில்லை. அவரோடு எனக்கோ, எங்கள் குடும்பத்துக்கோ எந்தவித தொடர்பும் இல்லை. அப்படி இருக்கும்போது அவரது செயல்பாடுகளை எங்களோடு இணைத்து பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

எனது குடும்பமும், ஸ்ரீகாந்த் குடும்பமும் ஒன்றாக உட்கார்ந்து பேசித்தான் திருமணத்தை முடிவு செய்தோம். அதேபோன்று இப்போது புதிதாக தோன்றியுள்ள பிரச்சினைகளையும் இரண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசி முடிவு செய்வோம்.

என் மீது இப்போது ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கி, குற்றமற்றவள் என்பதை நிரூபித்து, ஸ்ரீகாந்த்தை மணப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஸ்ரீகாந்த் புத்தி கூர்மை உள்ளவர். இப்போதுள்ள சூழ்நிலையை அவர் நன்கு புரிந்து கொண்டு, என்னையும் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன் என்றார் வந்தனா.

———————————————————————————————

நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும்: போலீஸ் அதிகாரி தகவல்

சென்னை, ஜுன். 15-

நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும் என்று ஒரு போலீஸ் உயர் அதிகாரி கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

நடிகர் ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.

அப்போது தங்கள் காதலுக்கு அடையாளமாக இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோக்கள் எடுத்துள்ளனர். அந்த போட்டோக்கள் அனைத்தையும் வந்தனா பத்திரமாக வைத்துள்ளார்.

இடையில் ஏற்பட்ட சிறு, சிறு குழப்பங்களால் எங்கே ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர்கள் பிரிய நேரிட்டது.

ஆனால் நடிகர் ஸ்ரீகாந்த்தை பிரிந்து இருக்க வந்தனாவால் முடியவில்லை. எனவே நேற்று முன்தினம் (13-ந்தேதி) காலை பெட்டி, படுக்கைகளுடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தனா வந்து விட்டார்.

இதை ஸ்ரீகாந்த் பெற்றோர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வந்தனாவிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி உள்ளனர். அப்போது நடிகர் ஸ்ரீகாந்தும் வீட்டில்தான் இருந்துள்ளார்.

காதலியின் இந்த திடீர் நடவடிக்கையால் நடிகர் ஸ்ரீகாந்த் கடும் அதிர்ச்சி அடைந் தார். அவர் வந்தனாவிடம் சமரசம் செய்துள்ளார்.

“இப்போது எந்த பிரச்சினையும் செய்யாதே, எல்லா வற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் சென்று விடு” என்று கெஞ்சி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வந்தனா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தான் தயாராக வைத்து இருந்த போட்டோக்களை எடுத்து ஸ்ரீகாந்த் பெற்றோரிடம் காட்டி உள்ளார்.

அப்போது அவர், “ஸ்ரீகாந் துக்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. ஊர் அறிய திருமணம் செய்யத்தான் நான் காத்து இருந்தேன். எங்களைப் பிரித்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்” என்று மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்.

இதனால் பயந்து போன ஸ்ரீகாந்த் வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறி உள்ளார். அவர் தற்போது திருப்பதியிலோ அல்லது ஐதராபாத்திலோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

வந்தனா சொல்வது போல ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்துள்ளதாக என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும். எனவே அவர் இருக்கும் இடைத்தை தேடி கண்டுபிடித்து அவரிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளோம்.

அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
———————————————————————————————
பேசி தீர்க்க வேண்டியதை தெருவுக்கு இழுத்து விட்டனர்: ஸ்ரீகாந்த் சித்தப்பா பேட்டி

சென்னை, ஜுன். 15-

வந்தனாவின் அதிரடி வருகையால் ஸ்ரீகாந்தும் அவர் பெற்றொரும் வீட்டை காலி செய்து விட்டு வெளியேறி விட்டனர். தற்போது அங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் சித்தப்பா நரசிம்மன் மட்டுமே உள்ளார்.

அவர் கூறியதாவது:-

எங்களது சொந்த ஊர் திருப்பதி. நாங்கள் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்கள் குடும்பத்தில் யாராவது இறந்தால் கூட திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான மரியாதையுடன் தான் இறுதிச் சடங்குகள் நடைபெறும். அந்த அளவுக்கு எங்கள் குடும்பம் ஆச்சாரமானது.

ஸ்ரீகாந்த் வந்தனாவை மிகவும் விரும்பினான். எனவேதான் நாங்கள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். பிறகுதான் வந்தனா குடும்பத்தினர் மீது வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வந்தனாவிடம் கேட்டபோது, “எனக்கு எதுவும் தெரியாது” என்று மறைத்து விட்டார். திருமணத்துக்கு முன்பே இப்படி உண்மைகளை மறைப்பவர் திருமணத்துக்குப் பிறகு எப்படி இருப்பாரோ என்ற பயம் எங்களுக்கு ஏற்பட்டது. எனவேதான் திருமணத்தை தடை செய்தோம்.

நேற்று முன்தினம் வந்தனா திடீரென்று எங்கள் வீட்டுக்குள் புகுந்து விட்டார். பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினையை தெருவுக்கு கொண்டு வந்து விட்டார். நாங்கள் அவமானத்தால் தலைகுனிந்து நிற்கிறோம்.

இவ்வாறு நரசிம்மன் வேதனையுடன் கூறினார்.

மனித உரிமைகள் கழக மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் கல்பனா கூறியதாவது:-

வந்தனா எங்களிடம் நடந்த சம்பவங்கள் குறித்து ஏற்கனவே புகார் கூறி இருந்தார். திடீரென அவர் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்றதை இன்று காலை பத்திரிகைகளில் பார்த்து அறிந்தோம். இன்று காலை அவரை சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் தனக்கும் ஸ்ரீகாந்துக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறினார். ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணத்துக்கு ஆதாரம் உள்ளது.

எனவே நாங்கள் ஸ்ரீகாந்துடன் வந்தனாவை சேர்த்து வைப்போம். போலீஸ் இதில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை அறிய காத்து இருக்கிறோம்.

இவ்வாறு கல்பனா கூறினார்.
——————————————————————————————-
கோவிலில் தாலி கட்டினார்: நடிகர் ஸ்ரீகாந்த் திருமண படங்கள் வந்தனா வெளியிட்டார்- பரபரப்பு பேட்டி

சென்னை, ஜுன். 15-

ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த்.

இவர் வடபழனி குமரன் காலனியில் தந்தை கிருஷ்ணமாச்சாரி, தாயார் ஜெயந்தி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

நடிகர் ஸ்ரீகாந்த் சென்னை அண்ணாநகர் `கே’ பிளாக்கில் வசித்து வரும் சாரங்கபாணியின் மகள் வந்தனா (வயது24)-வை காதலித்து வந்தார். முதலில் இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. பிறகு சமரசம் ஏற்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் வந்தனாவின் பெற்றோர் சாரங்கபாணி- ஷாலினி, அண்ணன் ஹர்ஷவர்த்தன் மீது சி.பி.ஐ. போலீசில் மோசடி வழக்குகள் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதனால் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடக்காது என்று ஸ்ரீகாந்த் பெற்றோர் அறிவித்தனர்.

திருமண முறிவு ஏற்பட்டதால் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி அடைந்தார். காதலி வந்தனாவுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார். வந்தனா எவ்வளவோ முயன்றும் ஸ்ரீகாந்த் பேசவில்லை. என்றாலும் மனம் தளராத வந்தனா “ஸ்ரீகாந்தை திருமணம் செய்தே தீருவேன். நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று சபதம் செய்தார்.

கடந்த சில தினங்களாக அவர் நிறுபூத்த நெருப்பு போல மனம் குமுறியபடி இருந்தார். நேற்று முன்தினம் பெட்டி படுக்கைகளுடன் அதிரடியாக ஸ்ரீகாந்த் வீட்டுக்குள் புகுந்து விட்டார்.

ஸ்ரீகாந்துக்கும் தனக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறிய அவர் இனி இந்த வீட்டில்தான் இருப்பேன் என்றார். ஸ்ரீகாந்த் மனைவி போல அந்த வீட்டில் சுற்றி வந்தார். அதோடு ஸ்ரீகாந்த் பெற்றோரையும் மிரட்டும் வகையில் பேசினார்.

வந்தனா இந்த ரகளையில் ஸ்ரீகாந்த் மட்டுமின்றி அவர் பெற்றோரும் ஆடி போய் விட்டனர். இது தொடர்பாக அவர்கள் வடபழனி போலீசில் நேற்று புகார் செய்தனர்.

பெண் இன்ஸ்பெக்டர் வயோலாபாய் மனுவை ஏற்றுக்கொண்டு விசாரித்தார். நேற்றிரவு நேரமாகி விட்டதால் இன்று காலை அவர்கள் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.

வந்தனாவிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து வெளியேற வந்தனா மறுத்து விட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இது தொடர்பாக ஒரு போலீஸ் உயர்அதிகாரி கூறியதாவது:-

நடிகர் ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.

அப்போது தங்கள் காதலுக்கு அடையாளமாக இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோக்கள் எடுத்துள்ளனர். அந்த போட்டோக்கள் அனைத்தையும் வந்தனா பத்திரமாக வைத் துள்ளார்.

இடையில் ஏற்பட்ட சிறு, சிறு குழப்பங்களால் எங்கே ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர்கள் பிரிய நேரிட்டது.

ஆனால் நடிகர் ஸ்ரீகாந்த்தை பிரிந்து இருக்க வந்தனாவால் முடியவில்லை. எனவே நேற்று முன்தினம் (13-ந்தேதி) காலை பெட்டி, படுக்கைகளுடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தனா வந்து விட்டார்.

இதை ஸ்ரீகாந்த் பெற்றோர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வந்தனாவிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி உள்ளனர். அப்போது நடிகர் ஸ்ரீகாந்தும் வீட்டில்தான் இருந்துள்ளார்.

காதலியின் இந்த திடீர் நடவடிக்கையால் நடிகர் ஸ்ரீகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் வந்தனாவிடம் சமரசம் செய்துள்ளார். “இப்போது எந்த பிரச்சினையும் செய்யாதே, எல்லா வற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் சென்று விடு” என்று கெஞ்சி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வந்தனா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தான் தயாராக வைத்து இருந்த போட்டோக்களை எடுத்து ஸ்ரீகாந்த் பெற்றோரிடம் காட்டி உள்ளார்.

அப்போது அவர், “ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. ஊர் அறிய திருமணம் செய்யத்தான் நான் காத்து இருந்தேன். எங்களைப் பிரித்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்” என்று மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்.

இதனால் பயந்து போன ஸ்ரீகாந்த் வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறி உள்ளார். அவர் தற்போது திருப்பதியிலோ அல்லது ஐதராபாத்திலோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

வந்தனா சொல்வது போல ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்துள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும். எனவே அவர் இருக்கும் இடைத்தை தேடி கண்டுபிடித்து அவரிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளோம்.

அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

இந்நிலையில் வந்தனாவின் தாய் ஷாலினி வடபழனி போலீசில் புகார் செய்துள்ளார். அதில் எனது மகளை ஸ்ரீகாந்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், வந்தனாவின் பெற்றோர் ரூ. 10 லட்சம் பணம் கேட்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்த புகார் மனு மீது இன்று மதியம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வயோலாபாய் விசாரணை நடத்தினார். ஸ்ரீகாந்தின் வீட்டுக்கு சென்ற அவர் அங்கு தங்கிருந்த வந்தனாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

ஸ்ரீகாந்தின் பெற்றோர் ரூ. 10 லட்சம் பணம் கேட்டனர் என்று கூறியிருப்பதால் அவர்கள் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது. எனவே ஸ்ரீகாந்தின் பெற்றோர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.srikanth marriage pictures vandhana issue

கணவன்- மனைவியாக வாழ்ந்தனர் வந்தனா தாயார் பேட்டி

ஸ்ரீகாந்தும் வந்தனாவும் கணவன்- மனைவியாக வாழ்ந்தனர் என்று வந்தனாவின் தாய் கூறினார்.

ஸ்ரீகாந்தின் வீட்டில் வைத்து வந்தனாவின் தாய் ஷாலினி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருமணம் முடிந்த பிறகு ஸ்ரீகாந்த் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து தங்கினார். அப்படி தங்கும் நாட்களில் ஸ்ரீகாந்தும், வந்தனாவும் கணவன்- மனைவி போலவே வாழ்ந்து வந்தனர்.

எங்களை பொறுத்தவரை ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணம் முடிந்து விட்டது. எனவே இதில் நாங்கள் மறுப்பு எதுவும் சொல்ல முடியாது. எங்கள் குடும்பத்தினர் மீது வழக்கு இருப்பதாக குற்றச்சாட்டு கூறி உள்ளனர். ஆனால் ஸ்ரீகாந்த், அக்கா என்று அழைக்கும் கீதாவின் மீதும் வழக்கு உள்ளது.

எனவே ஸ்ரீகாந்தின் பெற்றோர் எனது மகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது எனது மகளிடம் இருந்து ஸ்ரீகாந்தை பிரித்து விவாகரத்து வாங்கும் முயற்சி நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
———————————————————————————————-

Posted in abuse, Affair, Alimony, Annul, Annulment, Apartments, April Mathathil, Assets, bank, Bride, Bridegroom, Charangabani, Charankabani, Cheat, Cinema, Divorce, Dowry, Engagement, family, Female, Finance, Flat, Harshavardhan, Housing, HR, Human Rights, Images, Justice, Kid, Kisukisu, Kotturpuram, Law, Loan, Love, Marriage, Merit International, Movies, Order, Photos, Pictures, Police, Prathiban Kanavu, Proof, Puthucherry, Real Estate, Relation, Roja koottam, Rojakoottam, Rumour, Sarangabani, Scandal, Shaalini, Shalini, Shrikant, Shrikanth, Snaps, Srikant, Srikanth, Status, T nagar, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Thirumala, Thirupathi, Thirupathy, TTD, Valluvar Kottam, Vandana, Vandhana, Velachery, Vows, Wedding | 6 Comments »

Vidharbha Farmers Suicides – Plight of Indian Agriculture

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2006

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது

வியர்வை சிந்தும் இந்திய விவசாயிகள்
வியர்வை சிந்தும் இந்திய விவசாயிகள்

இந்தியாவில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய அரசு கூறியுள்ளது.

இந்தியாவின் மத்திய மற்றும் தென் மாநிலங்களில் உள்ள பருத்தி விவசாயிகள் பலர் கடந்த பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

பஞ்சம், விவசாயத்துக்கான அரசின் மானியம் குறைக்கப்பட்டது, சந்தை பொருளாதார கொள்கைகள் காரணமாக இறக்குமதி அதிகரிப்பதால் ஏற்படும் விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் விவசாயிகளின் பொருளாதாரப் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.

வேளான் இடுபொருட்களை வாங்க பல விவசாயிகள் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால் இது விவசாயிகளை கடன் சுமையில் வீழ்த்திவிடுகிறது. சிலர் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியாரை நாடுகின்றனர். இவர்கள் அதிக அளவு வட்டி வசூலித்து விவசாயிகளை பெரும் கடன் சுமையில் ஆழ்த்திவிடுகின்றனர்.

Posted in Agriculture, bank, Commerce, Cotton, Economy, Farmers, India, Loans, peasant, SNEHA, Status, subsidies, Suicide, Vidharbha | 1 Comment »

Sujatha – Thoondil Kathaigal : Status

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

வாசலில் ஒரு டெம்போ வந்து நிற்க, அதிலிருந்து ஃப்ரிஜ்ஜும் டி.வி.யும் இறக்கப்பட்டதை ப்ருந்தா வேடிக்கை பார்த்தாள். யார் வீட்டிலேயோ புதுப் பணம் வந்திருக்கிறது போலும் என்று எண்ணினாள்.

காதில் பென்சில் வைத்துக் கொண்டிருந்தவன், அவளிடம் வந்து ‘‘மிஸ்டர், ராஜாராம்ங்கறவரு ஃப்ளாட் எதுங்க?’’

‘‘எங்க வீட்டுக்காரர் பேரு ராஜாராம். எதுக்கு கேக்கறீங்க?’’

‘‘ப்ரமிளா ஏஜென்சிஸ்லிருந்து டெலிவரி பண்ண வந்திருக்கோம்.’’

‘‘தப்பா வந்திருக்கிங்க. நாங்க எதும் ஆர்டர் பண்ணலைப்பா.’’

அவன் தன் டெலிவரி சலானை மறுபடி பார்த்தான். செல்போனில் எண்களை ஒத்தினான்.

‘‘பார்ட்டி ஆர்டர் இல்லைங்கறாங்க. கருமாதிங்களா விலாசம் தப்பா?’

‘‘….’’

‘‘பேசுங்க’’ என்று அவளிடம் கொடுத்தான்.

‘‘அம்மா நான் ப்ரமிளா ஏஜென்சிஸ்லிருந்து மேனேஜர் முத்துராகவன் பேசறேன். மிஸ்டர் ராஜாராமன் ஒரு டீலக்ஸ் ஃபேமிலி மாடல் ப்ரிஜ்ஜும், ஒரு 28 இன்ச் டிவியும் ஆர்டர் செய்திருக்கார். நீங்க டெலிவரி நோட்ல கையெழுத்துப் போட்டு பொருளை வாங்கிட்டா போதும். கேயரண்டி கார்டுங்களும் மேன்யுவலும் கொடுப்பாங்க.’’

‘‘இத பாருப்பா! எங்கயோ தப்பு நேர்ந்திருக்கு. நாங்க யாரும் எதும் ஆர்டர் செய்யலை.’’

இதற்குள் ராஜு டூவீலரில் வந்து இறங்கினான். ‘‘இங்க பாருங்க என்னவோ சொல்றான். ஃப்ரிஜ்ஜாம் டி.வி.யாம்’’.

ராஜு அவளைக் கவனிக்காமல், ‘‘ஓ வந்தாச்சா! இந்த வீடுதாம்பா உள்ள கொண்டு போங்க.’’

ப்ருந்தாவுக்குத் திக்கென்றது.

இரண்டு சாதனங்களும் ரொம்ப பெரிசாக இருந்தது.

‘‘பழைய டி.வி.யை இப்பவே எடுத்துக்கிட்டு போயிர்றிங்களா, இடம் இல்லை.’’

அந்தப் பத்துக்குப் பன்னிரண்டு அறையில் ப்ளாஸ்டிக் உறைகளும் தர்மகோல் அட்டைப்பெட்டி எல்லாம் நிறைந்து உட்கார இடம் இல்லாமல் ப்ருந்தாவுக்கு எதும் புரியவில்லை. ஏது காசு இவருக்கு? மாசம் பதினெட்டாயிரத்தில் இருபதாம் தேதி தாண்டவே சிங்கியடிக்கிறதே.

‘‘ஏ.சி எப்பப்பா வரும்?’’

‘‘கோடவுன்ல சொல்லிருக்குங்க.’’

‘‘இதுக்கெல்லாம் பணம் எப்படி வந்தது?’’

‘‘இவாளை முதல்ல கையெழுத்து போட்டுட்டு அனுப்பிச்சுர்றேன்.’’ தாங்கஸ்ப்பா…

‘‘நலுங்காம நசுங்காம கொண்டாந்திருக்கோம். ஏதாவது போட்டுக் கொடுங்க, ரெண்டுபேர் இருக்கோம்.’’

அவளை அடுத்த அறைக்கு அழைத்தான். ‘‘ப்ரு! அம்பது ரூபா இருக்கா?’’

‘‘பத்து ரூபாதான் இருக்கு. காப்பி பொடி வாங்கணும்.’’

‘‘சரி அதைக் குடுத்துடு.’’

‘‘இந்தாங்க காப்பி சாப்பிடுங்க.’’

அவன் ஒரு மாதிரி பார்த்துவிட்டு முகம் இறுகி முணுமுணுத்துக் கொண்டே, ‘‘லட்ச ரூபாய்க்கு பொருள் வாங்குவீங்க. பத்துரூபா தருவீங்களாம்மா…. வச்சுக்கங்க. எச்சக்கையால காக்கா ஓட்டமாட்டீங்க’’ என்று புறப்பட்டான்.

றீ றீ றீ

‘‘என்னங்க இதெல்லாம்?’’

‘‘பாத்தா தெரியலை ஃப்ரிஜ், டீ.வி…’’

‘‘ஏது காசு?’’

‘‘காசா? லோன்மேளா, ப்ரமிளா ஏஜென்சி கூவிக்கூவி, கூப்ட்டு கூப்ட்டு குடுக்கறான். ஒரே ஒரு டோக்கன் பேமெண்ட் வாங்கிண்டு சாலரி சர்டிஃபிகேட் காட்டினா போதும். மாசா மாசம் கட்டி கழிச்சுக் கட்டிருவேன்.’’

‘‘மாசம் எத்தனை?’’

‘‘ஆறாயிரம்… அந்த டிடெய்ல்ஸ் எல்லாம் உனக்கு எதுக்கு?’’

‘‘எப்படிங்க நம்ம சம்பளத்தில் இதெல்லாம் நமக்குத் தேவைதானா? மது ஸ்கூல் பீஸ் கட்டியாகணும்’’

‘‘உனக்கு எதுவுமே தேவையில்லை. தினம் தேங்கா தொவையலும் சீராமிளகு ரசமும் போறும்.’’

‘‘ஆறாயிரம் சம்பளத்தில கழிச்சுட்டா… எப்படி நான் குடித்தனம் நடத்தறது?’’

‘‘பயப்படாதே உனக்கு மாசாமாசம் கொடுக்கற எட்டாயிரத்தைக் குறைக்கமாட்டேன்.’’

‘‘எட்டாயிரமா, பன்னண்டாயிரங்க.’’

‘‘கவலையை விடு. எனக்கு அரியர்ஸ் வரவேண்டியிருக்கு. அப்புறம் உத்தண்டி ப்ராபர்ட்டிக்கு பஞ்சாயத்துல என்ஓசி வந்துட்டா, சுளையா நம்ம ஷேர் முப்பது லட்சமாவது வரும். நம்ம ஸ்டேட்டஸ் எங்கயோ போய்டும்.’’

‘‘ஆமாம். பதினெட்டு வருஷமா வராதது…’’

அவன் முகம் சுருங்கி ‘‘எல்லாத்தையும் நெகட்டிவ்வாவே பார்க்காதே… லைஃப்ல பாசிட்டிவ்வா யோசி. இங்கிலீஷ்ல கில்ஜாய்ம்பா. அது நீதான். எதுக்கெடுத்தாலும் நொள்ளை…’’

அவள் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.

அவன் தொடர்ந்து, ‘‘மனுசனுக்கு மனைவி உற்சாகம் தரணும். நம்பிக்கை தரணும். எல்லாத்தையும் கலைக்கிறதில கெட்டிக்காரி நீ!’’

‘‘இல்லை, கூட்டிக் கழிச்சு பாத்தா கணக்கு சரியாவே வரலையே. எனக்கு நீங்க செய்யற காரியம் வயத்தைக் கலக்கறது.’’

‘‘நாளைக்கு ஏ.சி.காரன் வருவான் க்ரில் போட.’’

மது மரக்கட்டை பேட்டுடன் உள்ளே வந்து ‘‘ஐ! டீ.வி. ஏதுப்பா? அவ்வளவு காசு நம்ம கிட்ட?’’ என்றான்.

‘‘அப்படியே அம்மாவைக் கொண்டிருக்கியேடா. மதுக்கண்ணா உங்கப்பா ஒண்ணும் அத்தனை புவர் இல்லை. முதல்ல இந்த லோகிளாஸ் லொகாலிட்டியை விட்டு ஓடணும். எம்.ஆர்.சி. நகர்ல பெரிய வீடு பாத்துண்டிருக்கேன்.’’

றீ றீ றீ

ராஜாராமன் ஆபிஸ் போயிருந்தான். பெரிய டி.வி.க்கும் குளிர்பெட்டிக்கும் இடம் பண்ணிக் கொடுத்து மிச்சமிருந்த இடத்தில் பிரம்பு நாற்காலி போட்டு மத்யானம் அணில்கள் ஓய்ந்துவிட்ட வேளையில், நடிகை பார்த்துக் கொண்டிருக்க… நாட்டுக்கோழி பிரியாணி செய்வது பற்றி ஒரு கிராம மாது விளக்கிக் கொண்டிருந்தாள்.

மது ‘‘கோழிக்கு வலிக்காதாம்மா?’’ என்று கேட்டான்.

‘‘வலிக்காம கழுத்தை திருகுவா உங்கப்பா மாதிரி.’’ பால்கனியிலிருந்து விளையாடி விட்டு வந்தான். ‘‘அம்மா அந்தாளு இங்கயே பாத்துண்டிருக்கான்ம்மா. அப்பாவைக் கூப்பிடறார்.’’

‘‘யாருப்பா’’ என்றாள் பால்கனியிலிருந்து.

வாட்டசாட்டமாக இருந்தான். காலர் இல்லா சட்டையை மீறி புலிநகம் போட்ட சங்கிலி தெரிந்தது. முழங்கைவரை முறுக்கிவிட்ட புஜத்தில் தாயத்து கட்டிய இடத்தில் தசைநார்கள் பீறிட்டன. மீசை கன்னம்வரை வழிந்திருந்தது. ஜிம்மிலிருந்து வந்தவன் போலத் தோன்றினான்.

‘‘ப்ரமிளா ஏஜென்சிலருந்து வர்றன். உன் புருசன் ராஜாராமனைப் பார்க்கணும்.’’

‘‘ஆபீஸ் போயிருக்காரே!’’

‘‘ஆபீஸ்ல வீட்டுக்குப் போயிருக்கறதா சொன்னாங்க…’’

‘‘இல்லையே ஒரு வேளை வருவாரா இருக்கும்.’’

‘‘சரி காத்துட்டிருக்கேன்.’’

‘‘என்ன விஷயம்?’’

‘‘உன் புருசன் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகியிருக்கு. அதை அவர்கிட்ட காட்டி உடனே ஆபீசுக்கு வந்து கேஷ் கட்டு. இல்லை பொருளை எடுத்துட்டுப் போயிருவோம்னு சொல்லு.’’

‘‘சரிப்பா, அவர் வந்த உடனே சொல்றேன்.’’

‘‘ஒண்ணும் பிரச்னை இல்லை. அரை மணியில மறுபடி வரேன் சொல்லிவை.’’

அவன் போனதும் ராஜு பெட்ரூமிலிருந்து வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டு வந்தான். ‘‘போய்ட்டானா?’’

‘‘நீங்க எப்ப வந்தீங்க? ஆபீஸ் போகலை?’’

‘‘அப்பவே வந்துட்டேனே. கிச்சன்ல பிசியா இருந்தே.’’

‘‘என்னவோ செக்குங்கறான்… பவுன்ஸ்ங்கறான். ஒண்ணும் புரியலை. வேண்டாம் வேண்டாம்னு அடிச்சுண்டேன்’’

‘‘அது ஒண்ணுமில்லை கண்ணு. பன்னண்டு போஸ்ட் டேடட் செக் பன்னண்டாம் தேதி போடுறான்னா, பத்தாம் தேதியே போட்டிருக்கான். பேங்க்ல ஆனர் பண்ணலை போல இருக்கு. இத்தனைக்கும் சேஷாத்ரிகிட்ட சொல்லியிருந்தேன். ஒருவேளை சிக்னேச்சர் மேட்ச் ஆகலையோ என்னவோ… நான் உடனே பேங்க் போய் அதைச் சரி பண்ணிடுவேன். நீ ஒண்ணும் கவலைப்படாதே.’’

ப்ருந்தா அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

றீ றீ றீ

ராஜு மத்யானம் திரும்ப வந்தபோது ‘‘எல்லாம் சரியாய்டுத்து. அவன்கிட்ட போய் சத்தம் போட்டுட்டு வந்தேன். படவா ராஸ்கல்! ரவுடிகளைல்லாம் அனுப்பறயே… என்ன கம்பெனி நீ, கன்சூமர் கோர்ட்ல கேஸ் போட்டுருவேன்னு. அவன் பயந்துண்டு மன்னிப்பு கேட்டு, இனி அந்த மாதிரி நடக்காதுன்னான். ஜாக்கிரதை, ஆர்.ஏ.புரத்தைவிட்டே உன் கடை இல்லாம பண்ணிடுவேன். கபர்தார் என்னை என்னன்னு நினைச்சிண்டிருக்கே பத்மாஷ்னு…’’

‘‘பணம் கொடுத்தாச்சா?’’

‘‘கட்டியாச்சுடி மூதேவி சனியனே!’’

‘‘நவம்பர் 14.

வைதேகியின் பெண் சீமந்தத்துக்கு தங்க வளையலும் ரெட்டை வடசங்கிலியும் எடுத்துக்கொள்ள பீரோவைத் திறந்தபோது, சங்கிலியைக் காணோம். வேலைக்காரியைக் கூப்பிட்டு ‘‘செவலா! நீ வீடு பெருக்கி துடைக்கறப்ப பீரோ திறந்திருந்தது. எதையாவது தெரியாம எடுத்தேன்னா சொல்லிடு’’ என்றாள்.

அவள் தரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள், இத்தனை வருசம் உங்கிட்ட வேலை செய்யறேன். இப்படி ஒரு கேள்வி கேட்டுட்ட பத்தியா? நாங்க ஏளைங்கதாம்மா, திருடங்க இல்லை.’’

‘‘இப்ப நான் என்ன கேட்டுட்டேன். எடுக்கலைன்னா எடுக்கலைன்னு சொல்லிட்டுப் போயேன்.’’

நவம்பர் 15

வேலைக்காரி நின்று விட்டாள்.

ராஜுவிடம் சொன்னபோது, அவளை அப்படி கேட்டிருக்கக் கூடாது, ‘‘நான் ஆர்.ஏ.புரம் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்துர்றேன். சாவியை வேலைக்காரி பார்க்கறமாதிரி கண்ட கண்ட இடத்தில வெக்கக்கூடாது. இது ஒரு பாடம். போனாப் போறது… நா உனக்குப் புதுசு வாங்கித்தரேன்’’ என்றான்.

சாயங்காலம் மது ‘‘அப்பா பீரோ சாவியை அம்மா எங்க வெப்பான்னு கேட்டிண்டிருந்தாம்மா. தலைகாணிக்கு அடிலன்னு சொன்னேன்’’

டிசம்பர் 12

சாயங்காலம் டெலிபோன் ஒலித்தபோதே அதில் மிரட்டல் இருந்தமாதிரி தோன்றியது, ப்ருந்தாவுக்கு. எடுக்கலாமா வேணாமா என்று யோசித்தாள். ராஜு வேறு இல்லை. அடித்து நின்றுவிட்டு உடனே மறுபடி அடிக்கத் தொடங்கியது.

‘‘அலோ.’’

குரலே கன்னத்தில் அறைந்தது. ‘‘என்ன மாதிரி டுபாக்கூர் பார்ட்டிம்மா நீங்க… உன் வீட்டுக்காரரு… இந்த முறையும் செக் பவுன்ஸ் ஆய்டுச்சாம். நீங்க சோறு திங்கறீங்களா, வேற எதாவதா… மானம், வெக்கம், சூடு, சுரணை வேண்டாம்? ஆபீஸ§க்கு போன் போட்டா எடுக்கறதே இல்லை. தபாரு டி.வியையும் ப்ரிஜ்ஜையும் எடுத்துட்டு வரும்படி முதலாளி ஆர்டர். அரைமணியில டெம்போ வரும். ஒயரை எல்லாம் புடுங்கி தயாரா வச்சிரு. காசில்லைன்னா ஏன் பொருள் வாங்கறீங்க? வாயையும்… பொத்திகிட்டு தயிர் சாதம் தின்னுகிட்டு, படுத்துக் கிடக்கிறதுதானே உங்க மாதிரி ஆளுங்கள்ளாம்..’’ ‘சரி உட்டுரு துரைராஜ்’ என்ற மற்றொரு குரல் கேட்க… ‘‘வந்துகிட்டே இருக்கோம்’’ என்று முடித்தான்.

உடம்பெல்லாம் வியர்த்தது. நாக்கு வறண்டு நடுங்கும் விரல்களுடன் ராஜுவுக்குப் போன் செய்தாள்.

‘‘எங்க போய்த் தொலைஞ்சிட்டீங்க..? அவன் பாட்டுக்குப் போன்ல கண்டகண்டபடி திட்டறான். அப்படியே உடம்பெல்லாம் கூசறது. அரைமணில டெம்போ எடுத்துண்டு வரானாம்.’’

‘‘அப்டியா? நீ என்ன பண்றே.. அவா வரதுக்குள்ள கதவைப் பூட்டிண்டு உங்க அக்காவாத்துக்கு போய்டு. நான் அந்த முட்டாள் பசங்களைப் போய் பாத்து ஒண்ணுல ஒண்ணு தீர்த்துட்டுத்தான் மறுகாரியம்.’’

‘‘உடனே வாங்க… எனக்குப் பதர்றது, பயத்தில புடவைல…’’

‘‘எல்லாம் வரேன். நீ கதவைப் பூட்டிண்டு வைதேகி வீட்டுக்குப் போயிடு. என்ன அசடு அசடு! நீ ஒண்ணுத்துக்கும் கவலைப்படாதே. அவனுக்கு ஒரு லாயர் நோட்டீஸ் அனுப்பிருக்கேன். ஃப்ரிஜ் சரியா வேலை செய்யலை. ஐஸ் க்யுப் பார்ம் ஆறதில்லை. டி.வி. க்ளாரிட்டி இல்லை. அதனால பேமெண்டடை நிறுத்தி வச்சிருக்கேன்னு… அப்படியே கதிகலங்கிப் போய்டுவான். ஒரு மசுத்தையும் பிடுங்க முடியாது. என்னன்னு நினைச்சிண்டிருக்கான். ஸ்கவுண்ட்ரல்.’’

‘‘எப்ப வர்றீங்க?’’

‘‘எம்.ஆர்.சி. நகர் போய்ட்டு வந்துர்றேன்.’’

‘‘எம்.ஆர்.சி. நகர்ல என்ன?’’

‘‘சொன்னனே ஒரு புது ஃப்ளாட் பாத்துண்டிருக்கேன். அப்படியே உண்டாய் கம்பெனி ஷோ ரூமுக்குப் போய்ட்டு மத்யானம் உங்கக்கா வீட்டுக்குச் சாப்பிட வந்துர்றேன். பருப்பு உசிலி பண்ணி வைக்கச் சொல்லு. உங்கக்கா நன்னா பண்ணுவா.’’

‘‘உண்டாய் கம்பெனியா?’’

‘‘ஆமாம்… டூவீலர் நம்ம ஸ்டேட்டஸ்க்குச் சரியில்லை. ஒரு கார் வாங்கப் போறேன்’’ என்றான்.

Posted in Kumudam, Status, Sujatha, Tamil, Tamil Story, Thoondil Kathaigal | 14 Comments »