தேடல்: புத்தரைத் தேடி..!
எந்தக் காரியத்தையும் ஆதாய நோக்கத்தோடே பார்த்துப் பழகிய நம் சமூகத்தில் ஓர் ஆய்வாளராக இருப்பது பெரிய பாடுதான். அதுவும் வயல்களிலும் மரத்தடிகளிலும் தலை தனியாக முண்டம் தனியாக அடையாளம் சிதைந்து புதைத்துக் கிடக்கும் சிலைகளைப் பற்றியும் அதை ஆய்வு செய்துகொண்டிருப்பவரைப் பற்றியும் அரசுக்கோ சமூகத்துக்கோ என்ன அக்கறை இருக்கிறது; ஆதாயம் இருக்கிறது?!
தமிழ்நாட்டில் பழங்கால சிலைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. யாரோ ஓர் ஆய்வாளர் சிலையைக் கண்டறிகிறார்; குறிப்பெடுக்கிறார். நம் ஆள்கள், அட அப்படியா! என வாய் பிளந்துவிட்டு வேறு வேலையைப் பார்க்க சென்றுவிடும்போதும் ஆய்வாளர்கள் தன் வேலையைத் தொடருகிறார்கள்.
முனைவர் பா. ஜம்புலிங்கமும் அப்படிதான். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்கிறார். கண்காணித்தோமா போனோமா என “சாமர்த்தியமாக’ இல்லாமல் சோழ நாட்டில் பெüத்த சமயம் வேரூன்றியது குறித்து ஆய்வு செய்திருக்கிறார். இதுவரைக்கும் 64 புத்தர் சிலைகளை அவர் கண்டறிந்திருக்கிறார்.
ஜம்புலிங்கத்துக்குப் பூர்வீகம் கும்பகோணம். சின்ன வயதிலிருந்தே வரலாற்றில் ஆர்வமாக இருந்திருக்கிறார். ஏதோ ஓர் ஆய்வு செய்வோம் என்றிருந்த அவரிடம் எங்கிருந்தோ வந்து புத்தர் ஒட்டிக்கொள்ளவும் இப்போது புத்தரைத் தேடி ஊர் ஊராக அலைந்துகொண்டிருக்கிறார் அவர்.
ஜம்புலிங்கம் சொல்கிறார்: “”என்ன தகவல் கிடைத்தாலும் குறித்து வைத்துக்கொள்வேன். வார விடுமுறை நாள்களில் கிளம்புவேன். பஸ்ஸில், சைக்கிளில், நடையில் எனத் தொடரும் பயணம். புத்தர் சிலைகள் பெரும்பாலும் ஊரை ஒட்டியுள்ள வயல்களிலும் மரத்தடியிலும்தான் கிடைக்கின்றன. சிலை சேதமடைந்திருந்தாலும் உச்சிக்கொண்டை, நீள செவிகள், ஆடை, தியான நிலை, நெற்றித் திலகம் என ஏதாவது ஓர் அடையாளம் புத்தரைக் கண்டறிவித்துவிடும்.
சில இடங்களில் புத்தர் எனத் தெரிந்து வழிபடுகிறார்கள். சில இடங்களில் இன்ன சிலை என்றே தெரியாமல் வழிபடுகிறார்கள். மங்கலம் என்ற ஊரில் மீசை உள்ள புத்தரைக் கண்டறிந்தோம். உள்ளூர் மக்கள் அதை செட்டியார் என்ற பெயரில் வழிபட்டு வந்தனர். இதேபோல் முனிசுவரர், அம்மணசாமி என்ற பெயர்களில் வணங்கப்படும் புத்தர் சிலைகளும் உண்டு. இங்குள்ள சிலைகள் பெரும்பாலும் கி.பி. 10, 11-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாக உள்ளன.
தமிழகத்தில் சங்கக் காலத்தில்தான் புத்த சமயம் வேரூன்றியதாகக் கருதப்படுகிறது; ஆனால், மயிலை சீனி. வேங்கடசாமி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டதாகக் குறிப்பிடுகிறார். கி.பி. 6-ம் நூற்றாண்டில் செழித்தோங்கிய புத்த மதத்தின் தாக்கம் 16-ம் நூற்றாண்டு வரை இங்கு இருந்திருக்கிறது. எனவே, இன்னும் நிறைய சிலைகள் இருக்கக் கூடும். அவையெல்லாம் கண்டறியப்பட்டால் பெüத்த சமய வரலாற்றுக்குப் புதிய தகவல்கள் கிடைக்கும்” என்கிறார் ஜம்புலிங்கம்.
ஜம்புலிங்கத்தின் ஆய்வுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. தமிழகத்திலேயே காவிரி கரையோர – கடலோரப் பகுதிகளில்தான் பெüத்த மதம் செழித்திருந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, அப்பகுதியில் இவர் ஆய்வு மேற்கொண்டிருப்பது தமிழக பெüத்த வரலாற்றுக்கு நல்ல பங்களிப்பாகும்.
சிலைகள் மதம் சார்ந்தவை மட்டுமல்ல; கலை, பண்பாடு, கலாசாரம் எனக் காலம் உறைந்த – புதையுண்டுக் கிடக்கும் வரலாறுகள். ஜம்புலிங்கம் போல் தனித்தனியே வெவ்வேறு ஆய்வாளர்கள் கண்டறிந்த சிலைகள், அவை தொடர்புடைய செய்திகள் எல்லாம் ஒன்றாக தொகுக்கப்பட்டு பெரியளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் தமிழகப் பெüத்த வரலாற்றில் புதிய கோணம் புலப்படலாம். நம் சமூகத்தில் இதெல்லாம் பெரிய கனவுதான். புத்தரை வேண்டிக்கொள்வோம்!