Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘States’ Category

The case for Mixed member Proportional Representation: Voting and Democracy

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2008

விகிதாசாரப் பிரதிநிதித்துவம்: விவாதம் தேவை

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

ஜனநாயகத்தில் அதிக வாக்குகள் பெற்றவர்தான் மக்கள் பிரதிநிதியாக விளங்க முடியும் என்ற ஒரு கருத்து இருப்பினும், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ அங்கீகாரத்துடன் செல்ல முடியாத நிலை இன்றைக்கு இருக்கிறது. இது ஓர் அரசியல் சூதாட்டம்போல் கருதாமல், மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடக்கின்ற தேர்தலில் ஆளும் முறைமையையும், தேசிய, பன்னாட்டு அளவில் கடமை ஆற்றவும் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதுதான் அரசியல் நடைமுறை ஆகும்.

தொகுதி நலன்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், நாட்டின் முக்கியப் பிரச்னைகள், கொள்கைகள்தான் நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் ஒலிக்கின்றன. தொகுதிகள் என்பது மக்கள் வாக்குகள் அளிக்கும் வசதிக்காக அமைக்கப்பட்டது.

தற்போதுள்ள நடைமுறையில் ஊரில் செல்வாக்கு உள்ள மனிதர் எளிதாக உருவாக்கப்படலாம். பணபலம், ஆள்பலத்தைக் கையில் வைத்து எளிதில் தேர்தலில் வெற்றி பெறலாம். அரசியலில் தனிநபர் செல்வாக்கையும், புகழ்ச்சியையும் விகிதாசார வாக்கு உரிமை மூலம் களையலாம்.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகளைத் தேர்தல் அறிக்கையின் முன் வைத்து விகிதாசார வாக்குரிமை முறையில் தேர்தலில் போட்டியிடலாம்.

மாநில அளவில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாத் தொகுதிகளுக்கும் நிற்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள்தான் வாக்குச்சீட்டில் இருக்கும். இதில் அந்த தனி நபருடைய பெயரோ, முகமோ இல்லாமல், தேர்தல் காலத்தில் சுவரொட்டியில் கட்சிக் கொள்கை, கட்சியின் தலைமையின் பெயர் மட்டுமே பிரசாரத்தில் இருக்கும். அத்தேர்தலில் போடப்படுகின்ற மக்களுடைய ஓட்டு கொள்கை அடிப்படையில் நிச்சயம் இருக்கும்.

அத்தேர்தலில் மக்கள் அளித்த ஓட்டுகளை மொத்தமாக எண்ணி ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டாகக் கருதி விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். உதாரணத்திற்கு ஒரு கட்சிக்கு 10 நாடாளுமன்றத்திற்கும் 100 சட்டமன்றத்திற்கும் விகிதாசார அடிப்படையில் இடங்கள் கிடைக்கின்றது என்றால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு முறையாக 10:100 என்ற விகிதாசாரத்தின்படி உறுப்பினர்களை கட்சித் தலைமை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி தாக்கீது அனுப்பும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட கட்சி தலைமை உண்மையான மக்களுடைய பிரதிநிதியாகக் கருதப்படும் நேர்மையானவர்களை 10:100 என்ற அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுத்த பட்டியலை அனுப்ப வேண்டும். அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியுடையவர் ஆவார்கள்.

பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்ற பெயர்களை கட்சியின் மேலிடம் முற்றிலும் விவாதித்து, நன்கு பரிசீலனை செய்து அனுப்பப்படும்போது பதவிக்குச் செல்கின்றவர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்கின்ற வகையிலும், தவறு செய்யும் எந்தப் பிரதிநிதியும் கட்சித் தலைமை உடன் அழைக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

திரும்ப அழைப்பவர்களுக்குப் பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவரை அனுப்புகின்ற வாய்ப்புகள் இருக்க வேண்டும். உறுப்பினர் பதவிக்காலத்தில் காலமானாலும் வீணாக இடைத்தேர்தல் நடத்தாமல் குறிப்பிட்ட கட்சியிலிருந்து வேறு ஒருவரை அனுப்பலாம்.

இதனால் அரசியல் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் பொறுப்புக்கு வருவதை எளிதாகத் தடுக்கலாம். அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் கலந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு மிகவும் பலமாக இருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட வோரா கமிஷன் அறிக்கையும் இந்திய அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளால் நாடு புரையோடிவிட்டதென்ற நிலையையும் எடுத்துக் கூறியிருக்கிறது. கட்சி மாறும் தடுப்புச் சட்டத்தைவிட விகிதாசார வாக்குமுறை வந்தால் கட்சி மாறுவதை அறவே ஒழித்துவிட முடியும். தேர்தலில் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் எளிதாக நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்குச் செல்ல இந்த முறையில் வாய்ப்புகள் இருக்கின்றன.

கட்சிகளின் தேர்தல் காலச் செலவினங்கள், அவசியமற்ற, ஆர்ப்பாட்ட தேர்தல் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தி, தேர்தல் பிரசாரத்தை எளிமைப்படுத்தலாம். ஓட்டுக்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது. தேர்தல் காலத்தில் கலவரங்கள், மக்களுக்கு ஏற்படும் பீதிகள் இந்த முறையால் தடுக்கப்படலாம்.

1930-ம் ஆண்டு லண்டனில் கூடிய தேர்தல் சீர்திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் விகிதாசார வாக்குரிமை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாசார வாக்குரிமை நடைமுறையில் இருக்கிறது. விகிதாசார வாக்குரிமை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, சுவீடன், இத்தாலி, டாஸ்மேனியா, மால்டர், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.

சுவீடன் நாட்டில் ரிக்ஸ்டேக் தேர்தல் சட்டம் 1920-ன் அடிப்படையில் முனிசிபல் தேர்தல் சட்டம் 1930}ன் அடிப்படையில் விகிதாசார வாக்குரிமை முறை நடைமுறையில் இருக்கிறது.

சுவிட்சர்லாந்தில் பல்வேறு மொழி, தேசிய இனங்கள் இருப்பினும், விகிதாசார வாக்குமுறை அந்நாட்டில் சிறப்பாக 1882-லிருந்து செயல்பட்டு வருகிறது.

விகிதாசார வாக்குரிமை என்பது கணித முறைப்படி வகுப்பதாகும். விகிதாசார வாக்குரிமை ஜனநாயகத்தில் சரியாக இருக்காது என்ற வாதங்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும் இதனால் அமைச்சரவையில் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

1961-ம் ஆண்டு டிசம்பர் 16}ல் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு 17-ம் தேதி கோவை தேர்தல் சிறப்பு மாநாட்டில் அண்ணாவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராம் மனோகர் லோகியாவும் இதையே வலியுறுத்தினார்.

இந்திய சட்டக்கமிஷன் (அளவில்) விகிதாசார முறையைப் பின்பற்றுவதற்கு யோசனை கூறியுள்ளது. ஆயினும், மக்களவைக்கும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கும் முற்றிலுமாகப் பட்டியல் முறையில் தேர்தல் நடத்துவதே மிகச் சிறந்தது என்று சட்ட ஆணையம் கருதுகிறது.

ஆனால் நம் நாட்டில் பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வெற்றிக்குத் திட்டங்களையும், கொள்கைகளையும் மட்டுமன்றி, வேட்பாளர்களுக்கு உள்ள செல்வாக்கையும் முக்கியமாகக் கருதுவதால் இந்த முறையை ஏற்க மாட்டா. எனவேதான் சட்டக் கமிஷன் நேரடித் தேர்தல் முறை, விகிதாசார முறையை யோசனையாகக் கூறியுள்ளது.

மக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் இப்போதுள்ள தேர்தல் முறையை அப்படியே வைத்துக்கொண்டு, இவற்றில் கூடுதலாக 25 சதவீத இடங்களை உருவாக்கி இந்த இடங்களை பொதுத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது ஆணையத்தின் யோசனை. பொதுத் தேர்தலின்போது இந்தக் கூடுதல் இடங்களுக்குத் தங்கள் வேட்பாளர்களை அரசியல் கட்சிகளின் தனித்தனிப் பட்டியல்களில் அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

ஜெர்மனியில் இருப்பதுபோல 4 சதவீதம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெறும் கட்சியைச் சட்டமன்றத்தில் இடம் பெறத் தகுதியற்றதாக அறிவிக்கலாம். இதனால் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை வரம்பின்றிப் பெருகுவதை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தடுக்கலாம். படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்சி முறை உருவாகும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் பங்கெடுப்பு முழுமையாக இருக்கும். ஒரு ஓட்டுகூட சிதறாது. மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.

Posted in abuse, Admin, Administration, Advices, Citizens, Constituency, Cronies, Crony, Democracy, Election, Elections, Electorate, Europe, Federal, Freedom, Govt, Independence, Manifesto, minority, MLA, Money, MP, National, parliament, Party, people, Politics, Polls, Power, Proportion, reforms, Representation, Representatives, Republic, seats, States, Voice, Vote, voters, Votes | Leave a Comment »

Thanks to Nandhigram – Dinamani op-ed

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

நந்திகிராமுக்கு நன்றி!

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில், ஏற்றுமதியை மட்டும் கருத்தில்கொண்டு தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு சில சிறப்பு சலுகைகளை வழங்குவது என்கிற மத்திய வணிகம் மற்றும் தொழில்துறையின் முடிவுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்புகள் இருந்து வந்தன. வரிச்சலுகை, குறைந்த கட்டணத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள், தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமான தொழிலாளர் நலச் சட்டங்கள் என்று பல்வேறு சலுகைகளை இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அளிப்பது தேவைதானா என்கிற கேள்வி பரவலாகவே காணப்பட்டது.

ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொழில் சார்ந்த அத்தனை தொழிற்சாலைகளும் ஒரே இடத்தில் நிறுவப்படுகிற ஏற்பாடுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். அதாவது, ஜவுளித்துறை சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில், பஞ்சில் தொடங்கி ரெடிமேட் ஆடைகள் வரை ஜவுளி சம்பந்தப்பட்ட எல்லா தொழிற்சாலைகளும் இருக்கும். இதனால், மதிப்புக் கூட்டுவரியிலிருந்து விலக்குக் கிடைக்கும். வரி பளு மற்றும் போக்குவரத்துச் செலவு இல்லாமல் இருப்பதால் தயாரிக்கப்படும் பொருள்களின் விலை குறைவாக இருக்கும்.

சீனாவில் ஏற்றுமதியை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் வேறுவிதமாக உருவாக்கப்பட்டன. மொத்த நிலப்பரப்பில் நாற்பது சதவிகிதம் தொழிற்சாலைகளும், இருபது சதவிகிதம் சிறப்புப் பொருளாதார மண்டல ஊழியர்களின் வசதிக்காக அமைந்த வணிக வளாகங்களும் அமைவது பற்றி யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், மீதமுள்ள நாற்பது சதவிகித இடத்தில் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டி விற்பனை செய்யும் திட்டம்தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சந்தேகப்பட வைத்துவிட்டது.

தனிநபரின் விளைநிலங்களையும், பரம்பரை பரம்பரையாக இருந்துவந்த இடங்களையும் குறைந்தவிலைக்கு அரசு கையகப்படுத்தி, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் தனியாருக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? ஏற்றுமதியின் மூலம் அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பார்களே என்பதுகூட வருத்தமான விஷயமல்ல. அப்பாவி மக்களின் விளைநிலங்களைக் குறைந்தவிலைக்கு வாங்கி, அடுக்குமாடி வீடுகள் கட்டி அதில் கொள்ளை லாபம் அடிக்க விரும்புகிறார்களே என்பதுதான் எதிர்ப்புக்கான அடிப்படைக் காரணம்.

மேற்கு வங்கம் நந்திகிராமில் நடந்த கலவரமும் துப்பாக்கிச் சூடும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியின் விளைவாக, ஒரு கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் இப்போது சில பரிந்துரைகளையும் செய்திருக்கின்றனர்.

அதன்படி, முன்பு திட்டமிட்டதுபோல வளர்ச்சித்துறை இயக்குநரின் முழுப்பொறுப்பில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கும் என்றாலும், தொழிலாளர் நலச் சட்டங்களைப் பொருத்தவரை மாநில அரசின் தொழிலாளர் துறையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மட்டும்தான் எதையும் செய்ய முடியும்.

நாடாளுமன்றக் கமிட்டியின் இன்னொரு பரிந்துரை உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் சுமார் 1,254 சிறுதொழில்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் எழுபது அரசு நிறுவனங்கள் பல்வேறு பிரச்னைகளால் மூடிக் கிடக்கின்றன. செயல்படாத பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும் இடங்களையும், தொழிற்பேட்டைகளையும் சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றுவது குறித்துப் பரிசீலனை செய்ய விழைகிறது நாடாளுமன்றக் கமிட்டியின் பரிந்துரை.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இடமும் கிடைத்துவிட்டது. தொழிலாளர் நலச் சட்டங்களில் எந்தவித மாற்றங்களையும் செய்ய வேண்டாம். நந்திகிராமில் தங்களது உரிமைக்காகப் போராடியதன் விளைவுதான் இப்போது இந்தப் பிரச்னைக்கு நல்லதொரு முடிவைத் தந்திருக்கிறது. நிச்சயமாக, நன்றி நந்திகிராமத்து ஏழை விவசாயிகளுக்குத்தான்!

————————————————————————————————————————————-

முரண்பாடு தேவையில்லை


சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிலைப்பாட்டை, காங்கிரஸ் கட்சியிலேயே பலர் ஆதரிக்கத் தயாராக இல்லை என்பது தெரிகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் கோவா மாநிலத்தின் தற்போதைய முதல்வரான திகம்பர் காமத், முந்தைய பிரதாப் சிங் ரானே தலைமையிலான காங்கிரஸ் அரசு அனுமதி அளித்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கலைப்பது என்று முடிவெடுத்திருப்பது அதைத் தெளிவுபடுத்துகிறது.

கோவா மாநிலத்தில் 15 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் ஒத்துழைப்புடன் மூன்று மண்டலங்களில் பணிகளும் தொடங்கிவிட்டன. சுமார் 500 கோடி ரூபாய் மூலதனம் வர இருப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றனர். 12 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் அனுமதி இன்னும் பெறப்படவில்லை என்றாலும் இடம் ஒதுக்கப்பட்டு விட்டது.

ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம், மருந்து தயாரிப்புக்காக உருவாக்கப்படுகிறது. இந்த மண்டலத்தில் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளுக்கான அதிநவீன இயந்திரங்களையும் இறக்குமதி செய்து விட்டோம் என்று பரிதாபக் குரல் கொடுக்கின்றன. சட்டப்படி, அனுமதி பெற்ற மூன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் நிராகரிக்கும் உரிமை மாநில அரசுக்குக் கிடையாது என்கிறார்கள் இந்த உரிமையாளர்கள்.

மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கோவா என்று பல மாநிலங்களில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் பொதுமக்களே போர்க்கொடி தூக்குகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பெரிய அளவில் தனியாரிடம் இடங்களை வாங்கி இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவது என்பது இயலாத விஷயம். காரணம், ஒரே இடத்தில் 1000 ஏக்கர் இடம் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் அரசின் தலையீடு நிச்சயம் தேவைப்படுகிறது.

அதேநேரத்தில், தனியார் லாபம் சம்பாதிக்க ஏழை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரங்களை ஏன் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்ல, இதற்கு ஏன் நிலத்தைக் குறைந்த விலைக்கு அரசு கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இல்லாமல், சிறப்புச் சலுகைகள் பெறாமல், இந்தத் தயாரிப்பாளர்கள் ஏன் உலகச் சந்தையில் போட்டிபோட முடியாது என்கிற கேள்விக்கும் அவர்கள் தரப்பில் சரியான பதில் தரப்படுவதில்லை. சீனாவுடன் போட்டி போட வேண்டும் என்று பயமுறுத்துகிறார்களே தவிர அதற்குச் சரியான காரணங்கள் தருவதில்லை.

போதிய மகசூல் தராத விளைநிலங்களும், தண்ணீர் இல்லாத விவசாய நிலங்களும் தொழில் மண்டலங்களாக மாறுவது தவறு என்று சொல்லிவிட முடியாது. நமது உணவு உற்பத்தி பாதிக்கப்படாத வரையில், தன்னிறைவுக்குப் பங்கம் ஏற்படாதவகையில் இந்த விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்கள் தொழில் மண்டலங்களாகவோ, அறுபதுகளில் செய்ததுபோலத் தொழிற்பேட்டைகளாகவோ மாற்றப்படுவதில் தவறில்லை. ஆனால், அந்தத் தொழில் மண்டலங்கள் தனியாருடையதாக இல்லாமல், அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அதில் தங்களது வாழ்வாதாரங்களை இழந்த நிலத்தின் சொந்தக்காரர்களுக்கும், அந்த நிலத்தை நம்பி வாழ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் அங்கே நிறுவப்படும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிப்பது அரசின் கடமை.

தெளிவான கொள்கையோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லாத நிலைமை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை தொடர்வது நல்லதல்ல. ஆளும் கூட்டணிக்குள்ளும், காங்கிரஸ் கட்சிக்குள்ளும் காணப்படும் முரண்பாடும், தெளிவின்மையும் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், தேவையற்ற பயத்தையும் ஏற்படுத்துவதுதான் மிச்சம். தொழில் வளமும், பொருளாதார முன்னேற்றமும் அடிப்படை இந்தியனின் வயிற்றில் அடிப்பதாக அமைந்தால் அதனால் என்ன பயன்?

சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை, தேவை தெளிவும், தொலைநோக்குப் பார்வையும், மக்களின் உணர்வுகளை மதிக்கும் மனோபாவமும். அரசிடம் இவை காணப்படவில்லை என்பதற்கு உதாரணம்தான் கோவாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பம்!

Posted in Agriculture, Assets, Bengal, China, Clothes, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Concessions, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Economy, Employment, Exports, Farmer, Farmers, Farming, Garments, Goa, HR, Industry, IT, Jobs, Knit, Knitwear, Land, maharashtra, Mamta, Mamtha, Manufacturing, Nandhigram, Nandigram, Nanthigram, Op-Ed, peasant, peasants, Property, Resources, Sale, Sector, SEZ, States, Tariffs, Tax, Textiles, VAT, WB, workers | Leave a Comment »

State of India – Public Policy, Planning commission goals, Regional Development: N Vittal

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2007

மக்களுக்காகவே நிர்வாகம்!

என். விட்டல்

இந்தியா என்ற ஒரு தேசத்தை இணைப்பது எது என்று கேட்டு தொடர்ச்சியாக சில கட்டுரைகளை வெளியிட்டது ஒரு பத்திரிகை. இந்தியச் சுதந்திர தினத்தின் வைர விழாவையொட்டி இக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்தியாவை இணைப்பது அதன் கலையா, கலாசாரமா, பண்பாடா, வரலாறா என்று பல கேள்விக் கணைகளை எழுப்பின அக்கட்டுரைகள்.

சுதந்திரம் அடைந்த பிறகு நாம் ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்புச் சட்டம் நமது நாட்டை, மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் அழைக்கிறது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் இந்தியா 3 வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை 1. பிரிட்டிஷ் மகாராணியாரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதி. 2. பிரிட்டிஷ் மகாராணியைத் தங்களுடைய தலைவராக ஏற்றுக்கொண்டு, சுயமாக ஆட்சி நடத்திய 600 சுதேச சமஸ்தானங்கள். 3. வட-மேற்கு எல்லைப்புற மாகாணம், வட-கிழக்கு மாநிலங்கள். இங்கு பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி கிடையாது. ஒரு ஏஜெண்ட் மட்டும் இருந்தார். வட-மேற்கும் வட-கிழக்கும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

மாகாணங்கள் என்ற அமைப்பு பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்டதே சுவையான வரலாறு. வட இந்தியாவில் வசித்தவர்கள், விந்திய மலைக்குத் தெற்கில் வசித்த அனைவரையும் மதறாசி என்ற ஒரே பெயரில் அழைத்தனர். மதறாஸ் மாகாணம் என்பதில் தமிழ்நாடு, ஆந்திரத்தின் சில பகுதிகள், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் சில பகுதிகள் சேர்ந்திருந்தன. எனவே மலையாளி, தெலுங்கர், கன்னடியரைக்கூட மதறாசி என்றே வட இந்தியர்கள் அழைத்தனர்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. தங்களுடைய தாய்மொழி மீது கொண்ட பற்றினால் மக்கள் இப்படி மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிப்பதை விரும்பினர். அப்படிப் பிரித்ததே சில இடங்களில் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அது, கலாசார ரீதியாகக் குறுகிய மனப்பான்மையையும் மக்களிடையே ஏற்படுத்தியது. இன, பிராந்திய அடையாளங்கள் புதிதாக உருவாயின.

தனி நாடு கோரிய திமுக, சீனப்படையெடுப்புக்குப் பிறகு “திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டது. அதே சமயம், “மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி’ என்ற தத்துவத்தை முன்னே வைத்தது. இப்போது மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சியான காங்கிரஸýடன் இணைந்து மத்தியில் கூட்டணி அரசு அமைத்துள்ளன. திமுகவின் கோரிக்கை நிறைவேறியிருப்பதாகக் கூட இதைக் கருதலாம்.

தேசப் பாதுகாப்பு, தனி மனிதப் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய மூன்றும் சுதந்திர இந்தியாவில் எப்படி இருக்கிறது என்று ஆராய்வோம். பொருளாதார வளர்ச்சி அவசியம் என்பதை எல்லா அரசுகளும் எல்லா தனி மனிதர்களும் ஏற்றுக்கொள்வார்கள். 1991-க்குப் பிறகு பொருளாதார தாராளமயம் அவசியம் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளக் கட்டமைப்பு மிகவும் அவசியம். இவற்றை அளிக்க வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் அரசுக்குத்தான் இருக்கிறது.

அடித்தளக் கட்டமைப்பு என்றவுடன் தொலைத்தொடர்புத் துறைதான் முதலில் நினைவுக்கு வருகிறது. அது எப்படி வளர்ந்து பரவிவிட்டது! அடுத்தது ரயில்வே துறை. சரக்குகளைக் கையாள்வதில் திறமையும் வருவாய் ஈட்டுவதில் சாமர்த்தியமும் காட்டி, உபரி வருவாயைப் பெற்றுள்ளது ரயில்வேதுறை.

ரயில்வேயும் தொலைத்தொடர்புத் துறையும் மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பவை. இப்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வராத பல துறைகளில் வளர்ச்சி திருப்திகரமாகவும் சீராகவும் இல்லை. மின்சாரத்துறையையே எடுத்துக் கொள்வோம். என்.டி.பி.சி., பவர் கிரிட் என்ற இரு மத்திய நிறுவனங்களும் திறமையான செயல்பாடு, குறித்த நேரத்தில் திட்டங்களை முடிப்பது ஆகிய சிறப்புகளுக்காகப் புகழ் பெற்றவை. பெரும்பாலான மாநிலங்களில் மின்சார வாரியங்கள் நிதி நிலைமையில் மிகவும் பின்தங்கியும், ஏராளமான கடன் சுமையிலும் தள்ளாடுகின்றன. இதற்குக் காரணம் அந்த மின்வாரியங்கள் அல்ல. இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களால் அவற்றின் நிதி நிலைமை மிகவும் பலவீனமாகிவிட்டன.

வாக்குவங்கியைக் குறிவைத்துச் செயல்படும் மாநில அரசியல்கட்சிகளால் மின்சார வாரியங்கள் பலிகடாவாகிவிட்டன. மிக முக்கியமான மின்னுற்பத்தித் துறையை இப்படி விடுவது சரிதானா? ரயில்வே, தொலைத் தொடர்பு போல மின்சாரத்துறையையும் மத்திய அரசே தன் பொறுப்பில் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடுவதற்காகக் கூறப்படும் யோசனை அல்ல. பொருளாதார வளர்ச்சிக்காகவே கூறப்படுகிறது. மின்சாரம் மற்றும் தண்ணீர்வளத்துறையை மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் காவிரி நிதிநீர்ப் பகிர்வு போன்ற பிரச்னைகளில் மத்திய அரசு வலுவாகத் தலையிட முடியும்.

வளர்ச்சிக்கு அடுத்தபடியாக ஆனால் வளர்ச்சியைவிட முக்கியத்துவம் வாய்ந்தது மனிதனின் உயிருக்குப் பாதுகாப்பு தருவது. கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைப் பார்க்கிறோம். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் விவகாரம் அல்லது குற்றச்செயல் என்றால் உடனே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவது வழக்கமாகிவருகிறது. சி.பி.ஐ. என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தல் என்று வந்துவிட்டால் மாநிலப் போலீஸôர் மீது நம்பிக்கை இல்லை, மத்திய துணை நிலை ராணுவப் படைகளை அனுப்பி வையுங்கள் என்று கேட்கின்றனர். அப்படி இருக்க, மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை விசாரிக்க, ஃபெடரல் போலீஸ் படை இருந்தால் நன்றாக இருக்குமே?

மாநில உணர்வு, சொந்த அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைப் பற்றி மட்டும் கவலை கொள்ளாமல் மாநிலத்துக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் என்று தெரிந்தால் அந்த மாற்றங்களைச் செய்யத் தயங்கக் கூடாது. நன்மை செய்யும் என்று நினைத்து மேற்கொள்ளப்படும் மாற்றங்களால் தீமை அதிகம் வந்தால், எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளவும் தயங்கக்கூடாது. நிர்வாகம் என்பது மக்களுக்காகத்தானே தவிர, நிர்வாகத்துக்காக மக்கள் இல்லை.

சாலை வசதி, மின்னுற்பத்தி, தண்ணீர் வளம் ஆகிய முக்கிய பிரச்னைகளில் மாநிலங்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய அதிகாரத்தை மத்திய அரசுக்கு ஒப்புக்கொடுத்து வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். மாநில அரசுகளின் ஒப்புதலுக்காகக் காத்திராமல், மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை சி.பி.ஐ. விசாரிக்க புது ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அரசு நிர்வாகம் என்பது தனி மனித பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் மாற்றம் பெற வேண்டும்.

(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத் துறை முன்னாள் ஆணையர்)

Posted in 50, 60+, 75, Andhra, AP, Bengal, Budget, Caste, Center, Centre, China, Commerce, Common, Communication, Community, Consruction, Country, Courts, Culture, Democracy, Development, Districts, Division, DMK, Economy, Electricity, Federal, Finance, Freedom, GDP, Govt, Growth, Heritage, Hinduism, Independence, India, infrastructure, Justice, Language, Law, Linguistics, National, North East, Northeast, Order, Pakistan, Patel, Planning, Power, Private, Province, Provinces, Public, Railways, Region, Religion, Resources, River, Roads, Sardar, Security, Sharing, Speak, Speech, States, TamilNadu, Telecom, Terrorism, Terrorists, TN, Tradition, Transport, Transportation, Water | Leave a Comment »

North vs South India – Regional development: Growth Indices & Indicators

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

பலே தென்னிந்தியா!

“”வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்றது அந்தக் காலம். “”வடக்கு வாடுகிறது, தெற்கு ஓடுகிறது” என்பதே இந்தக் காலம்.

இந்தியத் தொழிலகங்களின் இணையம் (சி.ஐ.ஐ.) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் காணப்படும் பொருளாதார, சமூக அளவீடுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்கள் கல்வி, வருமானம், நபர்வாரி மின்சாரப் பயன்பாடு ஆகியவற்றில் தேசிய சராசரியைவிட அதிகமாக இருப்பது புலனாகிறது. அத்துடன் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்களின் எண்ணிக்கையும் இந்த மாநிலங்களில், வட இந்திய மாநிலங்களைவிடக் குறைவாக இருக்கிறது.

கல்வி, சுகாதாரம், தொழில், விவசாயம் ஆகியவற்றில் பாரம்பரியமாகவே தென் மாநிலங்கள் உயர்ந்த இடத்தில் இருந்து வருகின்றன. அதிலும் அரசு நிர்வாகம் என்பது தென் மாநிலங்களில் வட இந்திய மாநிலங்களைவிடச் சிறப்பாகவே இருக்கின்றன.

தகவல் தொழில்நுட்பத் தொழில்களில் அடுத்த தலைமுறைத் தொழில்களை ஊக்குவிக்கவும், சென்னை தவிர மதுரை, கோவை, திருச்சி, நெல்லை போன்ற இரண்டாவது நிலை நகரங்களுக்கு அவற்றைக் கொண்டு செல்லவும் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

வேளாண் தொழிலிலும் வேளாண்மை சார்ந்த தொழில்களிலும் முதலீட்டை ஊக்குவிக்க ஆந்திரம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடகமும் கேரளமும் தங்கள் மாநிலங்களில் ஏற்கெனவே உள்ள தொழில்களை வலுப்படுத்துவதுடன் சுகாதாரம் சார்ந்த சுற்றுலாவை வலுப்படுத்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. புதுச்சேரியும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சிறு தொழில்களை வளப்படுத்தவும் முதலீடுகளுக்கு ஊக்குவிப்பை அளிக்கிறது.

மோட்டார்வாகனத் தொழிற்சாலைகள், கணினிசார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உணவுப் பதப்படுத்தல்-தின்பண்ட தயாரிப்பு ஆலைகள், மருந்து-மாத்திரை தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றைத் தங்கள் மாநிலங்களுக்கு ஈர்த்துவிட வேண்டும் என்ற ஆரோக்கியமான போட்டி தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகியவற்றிடையே தீவிரம் அடைந்திருக்கிறது.

இதையொட்டியே விமான நிலைய விரிவாக்கம், துறைமுக மேம்பாடு, மேம்பாலங்கள், நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகள், புதிய மின்னுற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றைத் தங்கள் மாநிலங்களுக்கென்று பெற இவை போட்டிபோடுகின்றன.

மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், பஞ்சாப்-ஹரியாணா-புதுதில்லி ஆகிய பாரம்பரியமான வளர்ச்சிப் பிரதேசங்களும் தொழில் முதலீட்டுக்கான பந்தயத்தில் பின்தங்க விரும்பாமல் அந்நிய நேரடி முதலீட்டையும் உள்நாட்டு முதலீடுகளையும் சலுகைகளையும், வரிவிலக்குகளையும் அளித்து ஈர்த்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) அதன் தென்னிந்தியக் கிளை மூலம், தென்னிந்தியாவிலேயே இதுவரை தொழில் வளர்ச்சியில் அதிகம் வளர்ச்சி காணாத பகுதிகளுக்கு முக்கியத்துவம் தர தனித்திட்டம் வகுத்து வருகிறது.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், வடக்கு கேரளம், ஆந்திரத்தின் அனந்தப்பூர்-சித்தூர்-கடப்பை மண்டலம், கர்நாடகத்தின் வடக்குப் பகுதி ஆகியவற்றுக்கு ஏற்ற தொழில்பிரிவுகளையும் முதலீட்டு வசதிகளையும் அடையாளம் காணும் பணியைத் தென் மண்டல இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு தொடங்கியிருக்கிறது. இதற்கு மாநில அரசுகள் மட்டும் அல்லாமல், சம்பந்தப்பட்ட பகுதியின் தொழில்-வர்த்தக சபைகளும், தன்னார்வக் குழுக்களும் உதவிக்கரம் நீட்டினால் தொழில்வளம் என்பது சமச்சீராகப் பரவி வளத்தை ஏற்படுத்தும்.

எப்போதும் இல்லாத வகையில் தென் மாநிலங்களுக்கு அரசியல் ரீதியாகவும் இப்போது அதிக முக்கியத்துவம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால் வரலாறு நம்மை வாழ்த்தும்.

Posted in Agriculture, Auto, Commerce, Compensation, Consumer, Customer, Development, Economy, Econpmy, Education, Employment, family, Finance, GDP, Globalization, Govt, Growth, Income, Index, Indicators, Industry, Infrtastructure, Jobs, Malls, Motor, North, Power, Ranks, Region, Roads, South, States, Statistics, Statz, Tour, Tourism, Tourist, Transport, Zones | Leave a Comment »

iRama Srinvasan – Economic Improvements does not guarantee Poverty Abolishment: Statistics, Analysis

Posted by Snapjudge மேல் ஜூன் 8, 2007

பொருளாதார முன்னேற்றமும் வறுமை ஒழிப்பும்

இராம. சீனுவாசன்

அரசின் தலையீடு, பங்களிப்பு ஆகியவற்றைக் குறைத்து சந்தையின் செயல்பாட்டை விரிவுபடுத்துவது புதிய பொருளாதாரக் கொள்கையின் மையக் கரு.

இப் புதிய பொருளாதாரக் கொள்கை செயல்பாட்டின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சி அடைந்து வறுமையும் குறைந்துள்ளதாக அரசும், இக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அறிஞர்களும் கூறுகின்றனர்.

இதற்குச் சான்றாகக் குறிப்பிடப்படுவது வறுமை விழுக்காடு

  • 1993 – 94ல் 36 சதவீதம் இருந்தது,
  • 2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.

வறுமைக் கோட்டை நிர்ணயிக்கும் முறையும், வறுமை விழுக்காட்டை அளவிடும் முறையும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. “வறுமைப் புள்ளிவிவரங்களை’ அறிந்துகொள்வது பொருளியல் கூறுகளை ஆய்ந்தறிய உதவும்.

வறுமைக் கோட்டை அளவிடும் முறையை அறிவது அவசியமாகும். வறுமை என்பதற்கு எளிய இலக்கணம் ஒன்றை வரையறை செய்ய முடியாது. இதுபோல் வறுமையை அளவிடும் முறையும் மிகக் கடினமானது.

தனிநபர் அல்லது குடும்ப வருமானத்தின் அடிப்படையில் வறுமையை அளவிடும் முறை எல்லோரும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

வருமானப் பகிர்வு அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் 40 சதவீத மக்கள் வறுமையில் இருப்பவர்கள் என்று 1970-களில் உலக வங்கி கூறியது. இதே காலகட்டத்தில் தான்டேக்கர்-ரத் என்ற இரண்டு இந்தியப் பொருளியல் அறிஞர்கள் மக்களின் நுகர்வு-செலவின் அடிப்படையில் “வறுமைக்கோட்டை’ நிர்ணயம் செய்யலாம் என்று ஆய்ந்து கூறினர். இதனை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகள் இந்தியாவிலும் மற்ற வளரும் நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன.

1993ல், மத்தியத் திட்டக் குழு வறுமைக் கோட்டைக் கணக்கிடும் முறையை வரையறை செய்தது. இந்தியாவில் தனி நபர் வருமானத்தை அளவிடுவது மிகக் கடினம். ஏனெனில், பல வழிகளில் வருமானம் பெறுவது, வருமானத்தின் ஒரு பகுதியை பொருளாகப் பெறுவது, உண்மை வருமானத்தைக் கூற மறுப்பது என பல காரணங்களைக் கூறலாம். இதனால், தனி நபர் நுகர்வுச் செலவு அடிப்படையில் “வறுமைக் கோடு’ நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஒருவர் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஒரு மாதத்திற்குச் செய்ய வேண்டிய நுகர்வுச் செலவைக் கண்டறிந்து அதனை “வறுமைக் கோடு’ எனலாம்.

  • 1973 – 74ல் நகர்ப்புற வறுமைக் கோடு ரூ.56, இதனை நகர்ப்புறத் தொழிலாளர் பணவீக்கக் குறியீடு கொண்டு ஆண்டுக்காண்டு அதிகரித்து
  • 2004 – 05ல் வறுமைக்கோடு ரூ.538 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வறுமைக்கோட்டை வரையறை செய்வதில் உள்ள சிக்கல்களை பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் நுகர்வுச்செலவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மக்களின் மொத்த நுகர்வுச் செலவில் உணவுச் செலவு குறைந்து மற்ற உணவு அல்லாத (கல்வி, சுகாதாரம்) நுகர்வுச் செலவு உயர்ந்துள்ளது.

ஆனால், 1973ல் இருந்து நுகர்வுச் செலவு கணக்கெடுப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. உணவுப் பொருள்களின் விலைகளும், மற்ற பொருள்களின் விலைகளும் வெவ்வேறு அளவில் உயர்ந்துள்ளன. ஆனால், ஒட்டுமொத்த பணவீக்கம் மட்டுமே “வறுமைக்கோட்டை’ அளவிடுவதில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

வறுமை என்பது சொந்த நுகர்வுச்செலவு அளவை மட்டுமே பொருத்தது அல்ல. பொதுச் சொத்துகளை மக்களின் ஒரு பகுதியினர் பயன்படுத்த முடியாது (உதாரணமாக நீர், விறகு) என்ற நிலை ஏற்படும்போது அவர்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனையும் வறுமைக்கோடு வரையறை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

இப்போது உள்ள “வறுமைக்கோடு’ செலவு மனிதனுக்கு எல்லா சக்திகளையும் அளிக்கக்கூடிய முழுமையான உணவுச் செலவுக்கு போதுமானதா என்ற ஐயப்பாட்டையும் பலர் முன்வைக்கின்றனர். இக் குறைகளை எல்லாம் நீக்கி புதிய அணுகுமுறையில் வறுமைக்கோட்டை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை பலரால் முன்வைக்கப்படுகிறது.

வறுமை விழுக்காடு கணக்கிடும் முறையையும் அறிந்துகொள்வது அவசியமாகும். மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தில் செயல்படும் ஒரு துறை “தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையம்’ ஆகும்.

இந்த மையம் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நுகர்வுச் செலவினங்களைத் துல்லியமாக அளவிட வேண்டுமெனில், நீண்ட கேள்விப் பட்டியல் தேவை. இதை புள்ளியல் துறை தயாரிக்கிறது.

1973 – 74, 1977 – 78, 1983, 1987 – 88, 1993 – 94, 1999 – 2000, 2004 – 05 ஆகிய ஆண்டுகளில் மக்களின் நுகர்வுச் செலவு மாதிரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.

கணக்கெடுப்பு நடத்தும்போது, ஒருவர் உணவுக்காக கடந்த 30 நாள்களில் எவ்வளவு செலவு செய்தார்; கல்வி, சுகாதாரம், துணி, படுக்கை, காலணி, மற்ற பொருள்களுக்குக் கடந்த ஓர் ஆண்டில் எவ்வளவு செலவு செய்தார் என்றும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் ஒருவரின் ஒரு மாத நுகர்வுச் செலவு கணக்கிடப்படுகிறது.

மாத நுகர்வுச் செலவை பல தொகுதிகளாகப் பிரித்து (உதாரணம் 0- 225, ரூ. 225 – 255) ஒவ்வொரு தொகுதியில் எவ்வளவு மக்கள் உள்ளனர் என்று பகுக்கப்படுகிறது. இந்த பகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதிலும் கிராமப்பகுதி, நகரப்பகுதி எனத் தனித்தனியாகக் கொடுக்கப்படுகின்றன. இதனைக் கொண்டு வறுமைக் கோட்டின் கீழ் எவ்வளவு பேர் உள்ளனர் என்று கணக்கிடப்படுகிறது.

வறுமை விழுக்காடு குறைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். வறுமை விழுக்காடு 2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.

1993 முதல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கு அதிகமாக இருந்ததால் வறுமை விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா 9 சதவீத வருடாந்திர வளர்ச்சியை அடைந்தால் வறுமை விழுக்காடு 10 சதவீதத்தைவிடக் குறைவாக இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

மகேந்திரதேவ் என்ற பொருளியல் அறிஞர்

  • 1983 – 93 ஆகிய பத்தாண்டுகளில் வறுமை 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் அதிகப் பொருளாதார வளர்ச்சி அடைந்த
  • 1994 – 2004 ஆகிய பத்து ஆண்டுகளில் வறுமை 7.8 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.

எனவே பொருளாதார வளர்ச்சி எல்லோருக்கும் குறிப்பாக ஏழைகளுக்குச் சமமாகச் சென்றடையவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார். மேலும் 1994 – 2004 காலத்தில் உணவுப்பொருள்களின் விலையேற்றம் குறைவாக இருந்ததுதான் வறுமை விழுக்காடு குறைந்ததற்கு முக்கியக் காரணம் என்றும் பலர் கூறுகின்றனர்.

  • 2004 – 05ல் கிராம வறுமை விழுக்காடு 28 சதவீதமாகவும்,
  • நகர வறுமை விழுக்காடு 25 சதவீதமாகவும் உள்ளது.
  • மொத்தம் 30 கோடி பேர் வறுமையில் வாடுகின்றனர்.
  • இதில் 22 கோடி நபர்கள் கிராமங்களிலும்
  • 8 கோடி பேர் நகரங்களிலும் உள்ளனர்.

தேசிய வறுமை விழுக்காட்டை விட அதிக வறுமை விழுக்காடு உள்ள மாநிலங்கள் –

  • பிகார்,
  • சத்தீஸ்கர்,
  • ஜார்க்கண்ட்,
  • உத்தரப் பிரதேசம்,
  • உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களாகும். இந்தியாவின் ஏழைகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் இம் மாநிலங்களில் உள்ளனர். இவற்றில் மகாராஷ்டிரத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் அதிகப் பொருளாதார வளர்ச்சியை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எல்லா மாநிலங்களிலும் சமமாகச் சென்றடையவில்லை. எனவே வறுமை ஒழிப்பும் எல்லா மாநிலங்களிலும் சம அளவில் ஏற்படவில்லை.

வறுமையை முழுமையாக வரையறை செய்ய, எவ்விதமான புள்ளிவிவரங்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும்? பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு பரவலாக்கி வறுமையைக் குறைக்க வேண்டும் ஆகியவை நம்முன் பல ஆண்டுகளாக உள்ள அறைகூவல்கள்.

(கட்டுரையாளர்: மாநில திட்டக்குழு உறுப்பினர்.)

———————————————————————————————-

ஏன் இந்த மௌனம்?

மத்திய அரசு 36 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இத்துடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 339 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான முறையான அனுமதி வழங்கப்பட்டு, அவற்றில் 126 மண்டலங்களை அட்டவணைப்படுத்தியும் இருக்கிறது. இவற்றில் தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் ஆறு மண்டலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்துவரும் மத்திய அரசு, இன்னொருபுறம், இந்த மண்டலங்களுக்கான நிலத்தைக் கையகப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி எந்தவித அரசாணையோ, வழிகாட்டுதலோ, சட்டமோ இயற்றாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை.

சொல்லப்போனால், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (Rural Development Ministry்) நில ஆர்ஜிதச் சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து, அதை மத்திய அமைச்சரவை விவாதித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அமைச்சரவையின் முடிவுகள் அறிவிக்கப்படாமல், மத்திய அரசு மௌனம் சாதிப்பதுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பிரச்னைக்குரிய விஷயமாக மாற்றி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். மேற்கு வங்காளத்தையும், மகாராஷ்டிரத்தையும் தொடர்ந்து விவசாயிகள் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது விரைவிலேயே எல்லா மாநிலங்களுக்கும் பரவ இருக்கும் ஆபத்து என்பது நிதர்சன உண்மை.

தரிசு நிலங்களில், இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து அந்த இடங்களில் தொழில்வளம் பெருக்கவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் பயன்படுத்தலாம். ஆனால், விளை நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு ஆர்ஜிதம் செய்வது என்ன நியாயம்?

ஒரு தேசத்தின் இறையாண்மையும், பாதுகாப்பும் அந்த நாட்டின் உணவு உற்பத்தியில் இருக்கும் தன்னிறைவைப் பொருத்துத்தான் அமையும் என்பது சரித்திரம் நமக்குச் சொல்லித் தந்திருக்கும் பாடம். தொழில்மயமாக்குகிறோம் என்கிற பெயரில் விவசாயம் புறக்கணிக்கப்படுவதும், வேண்டுமென்றே அழிக்கப்படுவதும் தெரிந்தே படுகுழியில் விழுவதற்கு ஒப்பான செயல். இதை மத்திய அரசில் இருப்பவர்கள் உணர்வது அவசியம்.

எந்த நில ஆர்ஜிதத்திலும் அரசு தலையிடாமல், லாப நோக்கில் நிறுவப்படும் சிறப்புப் பொருளாதார மண்டல அமைப்பாளர்கள், விவசாயிகளிடம் நேரடியாகப் பேசி அவர்கள் கேட்கும் விலையைக் கொடுப்பதுதான் நியாயமாகத் தெரிகிறது. விவசாயிகளிடம் நிலத்தை வாங்கித் தனியாருக்குக் குறைந்த விலையில் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு என்ன இருக்கிறது என்பது புரியாத விஷயமாக இருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அரசின் கருவூலத்துக்கு எந்தவிதப் பங்களிப்பும் செய்யப்போவதில்லை என்பது மட்டுமல்ல, இங்கிருந்து உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் மத்திய அரசுக்கு நிதியிழப்பும் ஏற்படும் என்பதை நிதியமைச்சரே சுட்டிக்காட்டி இருக்கிறார். எந்தவித தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாத, அரசின் வரிகள் எதுவும் பாதிக்காத, ஒரு தனி சாம்ராஜ்யமாக இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவது வருங்காலத்திற்கு நல்லதுதானா என்பதே விவாதத்துக்குரிய விஷயமாகத் தெரிகிறது.

லாபகரமாக இல்லாத விவசாய நிலங்களும், தரிசு நிலங்களும் தொழில்வளத்தைப் பெருக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், லாபகரமாக விவசாயம் நடக்கும் இடங்களைத் தொழிற்சாலைகள் அமைக்கப் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும். நில ஆர்ஜிதம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட விவசாயிக்கோ, உரிமையாளருக்கோ நியாயமான விலை கொடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வேலைவாய்ப்பு முன்னுரிமையும், சொல்லப்போனால் அந்த நிறுவனங்களில் பங்கும் (Shares) தரப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் இயற்றியபோதே இதையெல்லாம் சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும். இத்தனை எதிர்ப்புக்குப் பிறகும் எந்தவித வரைமுறையும் விதிக்காமல், முறையான அறிவிப்பும் இல்லாமல் மத்திய அரசு மௌனம் சாதிப்பது அரசின் நோக்கத்தையே சந்தேகப்பட வைக்கிறது.

————————————————————————————————–

சரியான நேரத்தில் சரியான யோசனை

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நடைபெறும் கேலிக்கூத்துகளுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஆளும்கட்சி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.

அதைத்தான், சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றிய ஆய்வு நடத்தி, சமீபத்தில் அறிக்கையும் சமர்ப்பித்திருக்கும் நாடாளுமன்றக் குழுவும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தக் குழுவின் அறிக்கை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற ஆலோசனையையும் கூறியிருக்கிறது என்பதுதான் குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.

இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிற யோசனை சீனாவைப் பார்த்து ஏற்பட்ட விஷயம். கம்யூனிச நாடான சீனாவில், நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்பதால் நிலத்தைப் கையகப்படுத்துவம் சிரமமில்லை; இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பது என்பதும் கடினமான விஷயமல்ல. மேலும், அந்நிய கலாசாரத்தின் தாக்கம் பொதுவுடைமை நாடான சீனா முழுவதிலும் பரவிவிடக் கூடாது என்கிற எண்ணத்தின் அடிப்படையில் ஏற்பட்டதுதான் இந்தத் திட்டம். இந்தியாவின் அரசியல் அமைப்புக்கும் நமது கொள்கைகளுக்கும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பொருந்துமா என்பதே சந்தேகம்.

நாடாளுமன்ற கமிட்டி சொல்லியிருப்பது போல் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதன் மூலம், விவசாயத் துறையின் அழிவில் நாம் தொழில் வளத்தைப் பெருக்க முயலுகிறோம் என்பதுதான் உண்மை நிலை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்கள் குறைந்த விலைக்கு அரசால் பெறப்பட்டு, தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றன. அப்படிப் பெறப்பட்ட இடத்தில், தொழிற்சாலைகள் 40% மட்டும்தான் இருக்கும். 20% இடத்தில் உணவகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவை அமையும். மீதி 40% இடமும் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு அதிக லாபத்துக்குப் பொதுமக்களுக்கு விற்கப்படும். மொத்தத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அடிப்படை நோக்கம் “ரியல் எஸ்டேட்’ என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

விவசாய நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யப்போகும் தனியாருக்கு அரசும் அதிகாரிகளும் ஏன் உதவ வேண்டும் என்பதுதான் பரவலான கேள்வி. அதுமட்டுமல்ல, இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் லாபம் ஈட்டித் தரும் பகுதிகளில்தான் நிறுவப்படுகின்றவே தவிர, பின்தங்கிய மாவட்டங்களில் நிறுவப்படுவதில்லை என்பதையும் நாடாளுமன்ற கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்த அறிக்கையில் குறிப்பிடும்படியான இன்னொரு விஷயம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு பற்றியது. அந்நியச் செலாவணி ஈட்டித்தரப்போகிறார்கள் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, அரசு தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய எல்லா வருமானங்களையும் இழக்க வேண்டுமா என்பதுதான் அது. தனிநபர் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்க, அரசு தனக்கு வரவேண்டிய வரி வசூலை நஷ்டப்படுத்திக்கொள்வது மட்டுமல்ல, ஏழை விவசாயிகளையும் நஷ்டப்படவைக்க வேண்டிய அவசியம் என்ன என்கிறது அந்த அறிக்கை.

சமச்சீரான பொருளாதார, தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் அரசு நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனை முன்னிறுத்தி மட்டும்தான் அரசின் செயல்பாடுகள் இருத்தல் வேண்டும் என்று கூறியிருக்கும் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சரியான நேரத்தில் சரியான ஆலோசனை. அரசு இப்போதாவது விழித்துக்கொண்டால் நல்லது!
————————————————————————————————–

Posted in Analysis, Backgrounder, Banks, Bihar, Calculations, Changes, Chattisgar, Chattisgarh, City, Consumer, Customer, Disparity, Divide, Economy, Education, Employment, Expenses, Finance, Food, GDP, Globalization, Govt, Healthcare, Hygiene, IMF, Improvements, Income, Industry, Inflation, Insights, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jobs, Luxury, maharashtra, Manufacturing, Metro, Mumbai, Necessity, Need, Needy, Numbers, Op-Ed, Percentages, Policy, Poor, Poverty, Power, Pune, Purchasing, Recession, Rich, Rural, Schemes, service, SEZ, Society, Stagflation, States, Statistics, Stats, Suburban, Survey, UP, Utharkhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, Village, WB, Wealthy, Welfare | Leave a Comment »

Mullai Periyar Dam Controversy – History & Backgrounder

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2006

காவிரி போல விசுவரூபம் எடுக்கும் பெரியாறு அணைப் பிரச்சினை

பா. ஜெகதீசன்

சென்னை, நவ. 24: தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையே கடந்த 27 ஆண்டுகளாக இருந்து வரும் “முல்லைப் பெரியாறு அணைப்’ பிரச்சினை தற்போது பூதாகரமாக விசுவரூபம் எடுத்துள்ளது.

“காவிரி பிரச்சினையில் கர்நாடகம் கையாளுவதைப் போன்ற அணுகுமுறையை கேரளமும் பின்பற்றத் தொடங்கி உள்ளதோ? இதுவும் தீராத பிரச்சினையாக உருமாறி விடுமோ?’ என்கிற அச்சம் தமிழகத்தின் தென் மாவட்ட விவசாயிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் எழுந்துள்ளது.

1979-ல் இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பாக சில அச்சங்களை கேரள அரசு எழுப்பியது. இதையடுத்து, அணையை மத்திய நீர்வளக் குழுமம் ஆய்வு செய்து, அணையைப் பலப்படுத்த 3 வகையான பணிகளைத் தமிழகத்துக்குப் பரிந்துரைத்தது.

தாற்காலிக ஏற்பாடு: அதன்பேரில் அணையின் நீர்மட்டம் அதன் முழு அளவான 152 அடியில் இருந்து தாற்காலிகமாக 136 அடியாகக் குறைக்கப்பட்டது. தக்க பாதுகாப்பு -பலப்படுத்தும் நடவடிக்கைகளைச் செய்து முடித்த பிறகு, நீர்மட்டத்தை 145 அடிக்கு உயர்த்தலாம் எனவும் குழுமம் பரிந்துரைத்தது.

பேபி டேம் எனப்படும் சிற்றணையைப் பலப்படுத்துதல், கைப்பிடிச் சுவற்றை 2 அடி உயர்த்துவது ஆகிய பணிகளைக் கேரள அரசு எதிர்த்ததால், முடிக்க இயலவில்லை.

வழக்குகள் வந்தன: இதர பலப்படுத்தும் பணிகள் அனைத்தும் முடிவு அடைந்தாலும், அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலேயே வைத்திருக்க வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தி வருகிறது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி கேரளத்தைச் சேர்ந்த சிலரும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் (கேரளம் மற்றும் சென்னை) உயர் நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். பின்னர் இம்மனுக்கள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.

முதல்வர்கள் பேச்சு வார்த்தை: உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின்பேரில், 19.5.2000-ல் தமிழக -கேரள முதல்வர்களின் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது. அக்கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அணையின் பாதுகாப்பு குறித்து ஆராயவும், தக்க பரிந்துரைகளை அளிக்கவும், வல்லுநர் குழுவை மத்திய அரசு நியமித்தது.

அக்குழு 2001 மார்ச்சில் அரசுக்கு அறிக்கை அளித்தது. “சிற்றணையைப் பலப்படுத்தும் பணி முடிந்த பிறகு, பெரியாறு அணையின் முழுக் கொள்ளளவான 152 அடி உயரத்துக்கு நீர் மட்டத்தை உயர்த்துவது பற்றி ஆய்வு செய்யலாம். அதற்கு முதற்கட்டமாக நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என அக்குழு பரிந்துரை செய்தது.

இப்பரிந்துரையை ஏற்பதாக மத்திய அரசிடம் அப்போதே தமிழகம் தெரிவித்தது.

இந்நிலையில், அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ள அனுமதித்து 27.2.2006-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இத்தீர்ப்பு உதவும் என பாசனத் துறை வல்லுநர்களும், விவசாயிகளும் நம்பினர்.

முரண்பட்ட கருத்து: ஆனால், அந்நம்பிக்கை பொய்த்துப் போகும் வகையில் கேரளத்தின் செயல்கள் தொடர்ந்தன.

“பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன்பாகவே கேரள முதல்வர் அச்சுதானந்தன் முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, பேச்சு வார்த்தை நடத்த தில்லி செல்கிறோம்’ என முதல்வர் கருணாநிதி தெரிவித்து, தமிழகத்தின் நிலையை வெளிப்படுத்தி உள்ளார்.

அச்சுதானந்தனும், அவரது அமைச்சரவை சகாக்களும் அணையைப் பார்வையிட்டு, நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பேச்சுக்கே இடம் இல்லை என அறிவித்தனர்.

அணையைப் பார்வையிட தமிழகப் பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் சென்றபோது அவருக்கு எதிராக கேரளத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்களுக்கு கேரள காவல் துறை பாதுகாப்பு அளித்தது.

காலம் தாழ்த்தும் நடவடிக்கை: புதிய அணை கட்டுவதே பிரச்சினைக்குத் தீர்வு ஆகும் என அச்சுதானந்தன் கூறி உள்ளார். இது பிரச்சினையை மேலும் காலம் தாழ்த்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்று தமிழக விவசாயிகளும், பாசனத் துறை வல்லுநர்களும் கருதுகின்றனர்.

ஜெ., காங். கருத்து: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தான் இப்பிரச்சினைக்கு சரியான தீர்வு என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

“மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கேரள அரசு செயல்படுகிறது’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி, சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் டி. சுதர்சனம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரச்சினைக்குத் தீர்வு காண தில்லியில் அடுத்த சில நாள்களில் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில், இரு மாநிலங்களிலும் எழுந்துள்ள சூழ்நிலைகள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விடுமோ என்கிற அச்சம் இந்த அணையின் பாசன நீரை நம்பி உள்ள விவசாயிகள், குடிநீரை எதிர்நோக்கி உள்ள மக்கள் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ளது.

Posted in Dam, Interlinking, Irrigation, Kerala, Mullai Periyar, Periyaar, Periyar, Periyar River, River water, Rivers, States, Tamil Nadu, Water Issues | 8 Comments »

Mu Mariyappan – Language based State Formation’s Golden Anniversary

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

மாநிலங்களின் பொன்னாள்!

மு. மாரியப்பன்

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் நாளை வழக்கம்போல் இந்த ஆண்டும் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள் வெகு சிறப்புடன் கொண்டாடுகின்றன. மாநிலங்கள் உருவான பொன் விழா ஆண்டாகவும் இவ்வாண்டு அமைந்திருக்கின்ற காரணத்தால், மேற்கண்ட மாநிலங்களில் இன உணர்வுடன் கூடிய நிகழ்ச்சிகள் களைகட்டும் என்பது உறுதி.

இந் நாளை “ராஜ்யோத்சவ தினமாக‘க் கொண்டாடும் கர்நாடக அரசு, இந்த ஆண்டு கூடுதலாக, மாநில உருவாக்கத்திற்குத் துணை நின்ற எஸ்.ஆர். பொம்மை, ரங்கநாத் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் 36 பேருக்கு கட்சி வேறுபாடுகளுக்கு இடமின்றி மரியாதை செலுத்துகிறது.

மலையாள மொழிக்கும், கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பாடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மரியாதை செலுத்துவதோடு, நவம்பர் மாதம் முழுவதும் பல்வேறு விழாக்களுக்கு கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதுவரை இந்த நாளை, சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த பிற மாநிலங்கள் மட்டுமே விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தன. பொன் விழா ஆண்டான இந்த ஆண்டுதான் தமிழகத்தில் இந்தநாள் அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியாக தற்போது இருந்து வரும் பெல்காம் மாவட்டத்தை மராட்டிய மாநிலத்தோடு சேர்க்க வேண்டும் என்ற கிளர்ச்சி, மொழிவாரி மாகாணங்கள் தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் அது கர்நாடகத்தின் ஒரு பகுதி எனக் கூறி, அதனை ஒருபோதும் மராட்டியத்தோடு இணைக்க விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் கர்நாடக அரசு, மிகச் சமீபத்தில் மாநிலம் முழுவதும் கடையடைப்பினை நடத்தியதோடு, பெல்காமை கர்நாடகத்தின் மற்றுமொரு தலைநகராக மாற்றுவதற்குத் திட்டமிட்டும் வருகிறது.

மராட்டியத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பெல்காம் வாழ் மக்களோடு இணைந்து, மராட்டிய மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உள்ளிட்ட அங்குள்ள அரசியல் தலைவர்கள் பெரும் ஆதரவு காட்டி வருகின்றனர். பெல்காம் மாவட்டத்தின் மராட்டிய அமைப்பான “ஏக் கிரண் சமிதி‘க்குத் தற்போது கர்நாடக சட்டசபையில் இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர் என்பதும், பெல்காம் மாநகராட்சியின் மேயராக இவ்வமைப்பைச் சேர்ந்த மராட்டியரே இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொழிவாரி மாகாணங்கள் தோற்றுவிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆன பின்னரும் கூட, கர்நாடக மாநிலத்தின் வடக்கெல்லையாய்த் திகழும் பெல்காமிலுள்ள மராட்டியர்கள் மொழி வழி இன உணர்ச்சியின் அடிப்படையில், கன்னடர்களுக்குச் சற்றும் குறையாமல் போராடி வருகிறார்கள். ஒவ்வொரு மாநில மக்களின் அடி மனத்தில் கனன்று கொண்டிருக்கும் மொழி வழி இன உணர்வினையே இது காட்டுகிறது.

பிரிவினைக்கு முன்னதாக, சென்னை ராஜதானி என்றழைக்கப்பட்ட இன்றைய தமிழகம் உருவான வரலாற்றைச் சற்றே பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டும்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்ப் பகுதிகளைத் தவிர சென்னைக்கு வடக்கே விசாகப்பட்டினம் வரையில் ஆந்திரப் பகுதியும், மேற்குக் கடற்கரையில் கோகர்நாத்திலிருந்து காசர்கோடு வரையிலுள்ள கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்ட தென் கன்னடமும், அதோடு காசர்கோட்டிலிருந்து பாலக்காடு வரை மலையாளம் பேசும் பகுதியும் அன்றைய சென்னை ராஜதானியில் தான் இருந்தன.

இவையனைத்திற்கும் மேலாக விசாகப்பட்டினத்திற்கு வடக்கே ஒரிய மொழி பேசும் கஞ்சம் மாவட்டமும்கூட சென்னையோடு இணைந்திருந்தது.

பிரிவினைக் கிளர்ச்சி எழுந்த நேரத்தில் நீதிபதி பசல்அலி தலைமையில் உருவான “ராஜ்ய புனர் அமைப்பு கமிஷன்‘, மாநிலங்களுக்கான எல்லைகளை வரையறை செய்தது. அவ்வமைப்பு, ஹைதராபாத் சமஸ்தானத்திலுள்ள கன்னட மொழி பேசும் மாவட்டத்தையும், சென்னை மாநிலத்திலுள்ள தென் கன்னட மாவட்டத்தையும், மன்னர் ஆட்சியிலிருந்த மைசூரையும் சேர்த்து கர்நாடக மாநிலம் அமையப் பரிந்துரை செய்தது.

அதோடு தமிழகத்தோடு இணைந்திருந்த மலபார் மாவட்டத்தையும், மன்னர் ஆட்சியின் கீழிருந்த திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்தையும் சேர்த்து கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. ஹைதராபாத் சமஸ்தானத்தில் தெலுங்கு மொழி பேசும் ஜில்லாக்களைப் பிரித்து ஹைதராபாத் ராஜ்யம் அமைக்கவும், பின்னர் தமிழகத்திலிருந்த தெலுங்கு மொழி பேசும் பகுதியை இணைத்து பரந்து விரிந்த ஆந்திரப்பிரதேசம் அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.

இதற்குப் பிறகு எஞ்சியிருந்த நிலப்பகுதி சென்னை ராஜ்யம் என்று அழைக்கப்பட்டது.

தமிழகத்தின் வடக்கெல்லையும், தெற்கெல்லையும் சரியான முறையில் வரையறுக்கப்படாத காரணத்தால், தமிழ் மொழி பேசும் மக்கள் மிகுதியாக வாழ்ந்த திருப்பதி, ஆந்திரத்தோடு இணைந்துவிட்டது.

அதேபோல் தெற்கே தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய பகுதிகளையும் செங்கோட்டை தாலுகாவையும் தமிழகத்தோடு இணைக்க ராஜ்ய புனரமைப்புக் கமிஷன் பரிந்துரை செய்தது. ஆனால் தமிழ்நாட்டோடு இப்பகுதிகளை இணைப்பதற்கு அன்றைய திருவாங்கூர், கொச்சி அரசுகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தன.

அன்றைக்கு தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் தெற்கு மற்றும் வடக்கு எல்லைகளைக் காப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. திராவிடர் கழகத் தலைவராக இருந்த பெரியாரும்கூட,

“ஆந்திரத்தில் இருந்தாலென்ன, தமிழ்நாட்டில் இருந்தாலென்ன மொத்தத்தில் திராவிடத்தில் தானே இருக்கின்றன’ என்று குடியரசில் எழுதினார்.

தமிழரசுக் கழகத்தின் தலைவர் ம.பொ.சி., தமிழகத்து எல்லைகளை மீட்க மாபெரும் இயக்கத்தை நடத்தினார். தமிழகத்திலுள்ள எந்தக் கட்சியும் இதற்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில் மக்களை நம்பிக் களத்தில் இறங்கியது தமிழரசுக் கழகம். தமிழக மக்களும் பெரும் ஆதரவை நல்கினர். தலைநகரான சென்னையைக் காத்து, தமிழகத்தின் எல்லைகளையும் மீட்டு தமிழரசுக் கழகம் பெரும் வெற்றி கண்டது.

வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளை மீட்பதற்காக தமிழகம் கொடுத்த விலை மிகவும் நெகிழ்ச்சிக்குரியது. இது குறித்து ம.பொ.சி. தனது “புதிய தமிழகம் படைத்த வரலாறு’ எனும் நூலில், 1946 தொடங்கி பத்து ஆண்டுகள் நடைபெற்ற எல்லைப் போராட்டங்களைப் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார். தொடர்ச்சியான, அதேசமயத்தில் இடைவிடாத போராட்டத்தின் விளைவாக திருவாங்கூர் ராஜ்யத்தின் தென்பகுதியிலுள்ள ஐந்து தாலுகாக்களும், வடபகுதியில் திருத்தணி தாலுகா முழுவதும் தமிழகத்தோடு இணைக்கப்பெற்றன. மேலும், ஆந்திரத்திலிருந்து 394 கிராமங்கள் தமிழகத்தோடு இணைந்தன. 1960ஆம் ஆண்டு திருத்தணியின் இணைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டது.

தமிழக எல்லைப்புறங்களில் இணைப்புக் குறித்த வெற்றி விழாக் கூட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன. அந்தச் சமயத்தில் தமிழரசுக் கழகத்தின் போராட்டம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அண்ணா,

“தமிழர்கள் முயன்றால் குன்றத்தை மட்டுமல்ல, திராவிட நாடு என்ற பெரும் நிலப்பரப்பையே மீட்க முடியும்’ என்று கூறியதோடு, “அவர்கள் (தமிழரசுக் கழகத்தார்) ஏன் நம் பக்கம் வரவில்லை என்ற எண்ணம் எனக்குப் பிறக்கிறது. சிறிய குன்றோடு நின்றுவிடாமல் மலை போன்ற அந்தக் கட்சி, நம்மோடு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று மனதாரப் பாராட்டி மகிழ்ந்தார்.

அந்த நேரத்தில் தி.மு.க., திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையைக் கைவிடவில்லை என்பதையும் நினைவிலிருத்த வேண்டும்.

தமிழக எல்லைகளைக் காப்பாற்ற நடைபெற்ற போராட்டங்களில் பல உயிர்களை இழந்துதான் இன்றைய தமிழகம் உருவாகியிருக்கிறது. பிற மாநிலங்களைக் காட்டிலும் எல்லைப் போர்த் தியாகிகள் தமிழகத்திலே அதிகம். ஆனால் அவர்களுக்காகத் தமிழகம் என்ன செய்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால், வேதனைதான் மிஞ்சும்.

(இன்று மொழிவாரி மாநிலங்கள் அமைந்த நாள்)

Posted in 50, Anna, Anniversary, EV Ramasamy, EVR, India, Karnataka, Kerala, Language, Malayalam, Periyar, States, Tamil Nadu | Leave a Comment »

Mullai Periyar Dam Issue – PMK Ramadoss Condemns Kerala Attitude

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

முல்லைப் பெரியாறு விவகாரம்: ராமதாஸ் கண்டனம்

சென்னை, செப். 27: முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய நிபுணர் குழுவினர் அளித்த அறிக்கைக்கு ஏற்ப முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த பிப்ரவரி மாதத்தில் தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மதிக்காமலும் அதை எதிர்த்தும் சண்டித்தனம் செய்தது முந்தைய கேரள காங்கிரஸ் அரசு. மாநிலத்தில் உள்ள அணைகளை எல்லாம் ஓர் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதன் அனுமதியில்லாமல் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்று சட்டம் இயற்றியது.

இந் நிலையில் ஆட்சி மாறி மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு அங்கே பதவிக்கு வந்தது. இவர்களாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பார்கள். அதை நடைமுறைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், முந்தைய காங்கிரஸ் அரசுக்கு எந்தவிதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி அரசு நடந்து கொள்கிறது. அவர்களே பரவாயில்லை என்று கருத வைத்துவிடுவார்களோ என்ற அளவுக்கு முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் இடதுசாரி அரசு நடந்து கொள்வது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில் தான் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாமல் மீண்டும் பேச்சுவார்த்தை என்ற ஒரு கபட நாடகத்தை இடதுசாரி அரசு அரங்கேற்றத் தொடங்கி இருக்கிறது. இப்போது உச்ச நீதிமன்றத்தையும் நம்ப வைத்திருக்கிறது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று முதலில் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுங்கள் என்ற அறிவுரை கூறியிருப்பது வியப்பாக இருக்கிறது. முதலில் உத்தரவை அமல்படுத்துங்கள் என்று உத்தரவிட வேண்டிய உச்ச நீதிமன்றம், மீண்டும் பேச்சுவார்த்தை என்று புதிதாக அறிவுரை வழங்கியிருப்பது சரிதானா என்பது குறித்து சட்ட நிபுணர்கள் விளக்க வேண்டும்.

நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று மாநில அரசுகளே பகிரங்கமாக அறிவிப்பதும் நீதிமன்ற உத்தரவை செல்லாததாக்கும் வகையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

இத்தகைய போக்கை மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். அத்துடன் ஆண்டுக் கணக்கில் தீர்வு காணப்படாமல் இருக்கும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சட்டப்பூர்வ அமைப்பு முறையை ஏற்படுத்துவது குறித்தும் மத்திய அரசு சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் அளித்த உத்தரவை மதித்து முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை முதலில் 142 அடியாக உயர்த்த அனுமதிக்கும்படி கேரள அரசுக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அறிவுறுத்த வேண்டும். அதன் மூலம் தனித்தன்மை படைத்தவர்கள் என்பதையும் நீதிமன்றத்தை மதிப்பவர்கள் என்பதையும் அவர்கள் நிலைநாட்ட வேண்டும்.

இனி பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை என்ற நிலையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண முடியவில்லை என்ற நிலையில்தான் மூன்றாவது நபர் என்ற வகையில் உச்ச நீதிமன்றத்தை அணுகினோம். முதலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவர்கள் அமல்படுத்த வேண்டும். அதன் பிறகு உச்ச நீதிமன்ற அறிவுரை பற்றி நாங்கள் சிந்திக்கிறோம் என்ற நிலையை பகிரங்கமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அத்துடன் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி இது குறித்து அவசரமாக விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

Posted in Contempt, Dam, High Court, Kerala, Mullai Periyar, PMK, Ramadoss, River, Sharing, States, Supreme Court, Tamil, Tamil Nadu, TN, Water | 1 Comment »

Chief Ministers of Congress (I) Congregate in UP

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

காங்கிரஸ் முதல்வர்கள் மாநாடு

காங்கிரஸ் கட்சியால் ஆளப்படுகிற மாநில முதல்வர்களின் மாநாடு அடிக்கடி நடப்பதாகிவிட்டது. இப்போது உத்தராஞ்சல் மாநிலத்தில் நைனிதால் நகரில் காங்கிரஸ் முதல்வர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. நாட்டில் மொத்தம் உள்ள மாநிலங்களுள் கிட்டத்தட்ட பாதி மாநிலங்களில், அதாவது 14 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் முதல்வர்களின் ஆட்சி நடைபெறுகிறது. இவற்றில் ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்தும் சிறிய மாநிலங்களே. அதிலும் மகாராஷ்டிரம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் பிற கட்சிகளின் ஆதரவுடன்தான் காங்கிரஸ் ஆட்சிபீடத்தில் உள்ளது. காங்கிரஸ் தனது பலத்தைக் காட்டிக்கொள்ள இப்படியான மாநாடுகளை நடத்துவதைத் தவறு எனச் சொல்ல முடியாது. ஒருங்கிணைந்த கொள்கைகளைப் பின்பற்றும்படிச் செய்வதற்கு இது ஓரளவில் உதவலாம்.

நைனிதால் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில் பயங்கரவாதம் பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலை நாடுகளில் பயங்கரவாதம் குறிப்பிட்ட மதத்துடன் பிணைத்துப் பேசப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலை நாடுகள் விஷயம் வேறு, இந்திய நிலைமை வேறு என்பதை அவர் மறந்துவிட்டார். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற, அத்துடன் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் காஷ்மீர் மாநிலத்தில் பல ஆண்டுகளாக அப்பாவி மக்களைக் கொன்று வந்துள்ளனர். இந்த அமைப்புகள் அண்மைக் காலமாகத்தான் பிற மாநிலங்களிலும் கைவரிசையைக் காட்ட முற்பட்டுள்ளன. ஆனால் நாட்டில் எந்தப் பொறுப்புள்ள கட்சியும் பயங்கரவாதத்தைக் குறிப்பிட்ட மதத்துடன் பிணைத்துப் பேசியது கிடையாது. அதுமட்டுமல்ல, கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாட்டில் பல மாநிலங்களில் ஆங்காங்கு வகுப்புக் கலவரங்கள் நடந்தது உண்டு. இவையெல்லாமே அந்த வட்டாரத்துடன் முடிந்துவிடுகிற சம்பவங்களாகவே இருந்துள்ளன. அந்த மாநிலத்திற்குள்ளாக அல்லது பிற மாநிலத்திற்கு அவை பரவியது கிடையாது. இந்திய மக்கள் பாரம்பரியமாக மத நல்லிணக்கத்தைக் காத்து வருபவர்கள். எங்காவது எப்போதாவது மொழி அடிப்படையில் நடந்துள்ள மோதல்களும் மக்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவித்தது கிடையாது. இது பற்றி நாம் பெருமைப்படலாம்.

மாநாட்டில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஒருபடி மேலே போய் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரானவை என்ற எண்ணத்தை உண்டாக்கி விடக் கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் அவர் அப்படிக் கூறாமல், பயங்கரவாதத்துக்கு எதிரான எந்த நடவடிக்கையும் அத்துமீறிப் போய்விடாமல் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும். ஏனெனில் காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பல சமயங்களில் அப்பாவி மக்களைத் துன்புறுத்துகிற செயல்களாக அமைந்துள்ளன. மணிப்பூரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அத்துமீறிப் போய் அது “மனித உரிமை மீறல்’ விவகாரமாக மாறியது. அசாமிலும் உல்பா இயக்கத்தினருக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து புகார்கள் உண்டு.

மணிப்பூர், அசாம் மட்டுமன்றி ஜார்க்கண்ட், பிகார், ஆந்திரம் ஆகியவற்றிலும் நக்சலைட் பிரச்சினைகளை நாம் எதிர்ப்பட்டுள்ளோம். இவ்விஷயத்தில் நாட்டில் உள்ள அடிப்படைப் பிரச்சினை, பயங்கரவாதிகள் அல்லது பல்வேறு வகையான தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எப்படிக் கையாளப்பட வேண்டும் என்பதில் போலீஸ் படையினருக்குத் தகுந்த பயிற்சி கிடையாது என்பதுதான். மத்திய அரசின் அல்லது மாநில அரசுகளின் குறிப்பிட்ட நடவடிக்கைகளை எதிர்த்து நடத்தப்படும் ஊர்வலங்களைச் சமாளிப்பதிலும் கூட பல நேரங்களில் முரட்டுத்தனம் காட்டப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க நைனிதால் மாநாட்டு உரைகள் அடுத்த ஆண்டில் உ.பி. மாநிலத்தில் நடக்க இருக்கும் தேர்தலை மனத்தில்கொண்டு அமைந்துள்ளன என்று குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

Posted in Andhra Pradesh, AP, Assam, Chief Ministers, Congregation, Congress (I), Elections, India, Indira Congress, Kashmir, maharashtra, Manipur, Manmohan Singh, Meet, Meeting, Nanital, Naxals, Pakistan, Sonia Gandhi, States, Strategy, Tamil, Terrorism, ULFA, Uttar Pradesh, Vacation | Leave a Comment »

Technology & Electronics Trach – Recycle

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 28, 2006

குப்பையோ குப்பை… மின்னணுக் குப்பை!

வைகைச் செல்வி

தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணுச் சந்தையின் வளர்ச்சி அதீத வேகத்தில் நடைபெறுகையில், இன்றைக்குப் புதியதாக வாங்கும் ஒரு பொருள், நாளையே அரதப் பழசாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரே பொருளின் புதுப் புது மாடல்கள் புற்றீசல் போல நுகர்வோரை மொய்க்கின்றன. மின்னணுச் சந்தையில் புதிய பொருள்கள் உருவாக உருவாக, பழைய பொருள்களின் கழிவும் மின்னல் வேகத்தில் அதிகரிக்கிறது.

பல்வேறு மின்னணு மற்றும் மின் கருவிகள் அவற்றின் உடைமையாளர்களுக்குப் பயன்படாமல் போகும் பட்சத்தில் அவை மின்னணு குப்பையாக உரு மாறுகின்றன. ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டத் துறை 2005-ல் நடத்திய ஆய்வானது, உலகில் ஒவ்வோர் ஆண்டும் 20 முதல் 50 மில்லியன் டன்கள் மின் குப்பை உருவாகிறது எனத் தெரிவிக்கிறது. மின்னணுக் கருவிகளின் ஆயுள்காலம் அவ்வளவு அதிகமில்லை. உதாரணத்திற்கு ஒரு கம்ப்யூட்டரின் ஆயுள் 5 முதல் 6 ஆண்டுகள்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் மின்னணுக் கருவிகள் கம்ப்யூட்டர், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் ஆகும். இவற்றிலிருந்து உருவாகும் கழிவுகள் 2004-2005ல் 1,46,180 டன்கள் எனக் கணக்கிடப்பட்டு, 2012ஆம் ஆண்டில் இது 16,00,000 டன்களாக உயரும் எனக் கணிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், தில்லி, கர்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து உருவாகிறது.

நகரங்கள் என்று பார்க்கையில் மும்பை, தில்லி, பெங்களூர், சென்னை, கோல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத், புனே, சூரத் மற்றும் நாக்பூராகும். சமீபகாலமாக அதிகரித்து வருவது செல்பேசிக் குப்பையாகும். ஓர் ஆய்வின்படி 2005ல் மட்டும் உலகில் 130 மில்லியின் செல்பேசிகள் கழித்துப் போடப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் கழிவுகள், அதாவது பாட்டரிகள் மற்றும் சார்ஜர்களையும் சேர்த்து, ஆண்டொன்றிற்கு 65,000 டன்கள் ஆகும்.

மின் குப்பையில் அபாயகர வேதிப்பொருள்கள் இருப்பதாலேயே அவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதாயிருக்கிறது. இக் கழிவுகளைச் சரியான முறையில் கையாளாவிட்டால், சுற்றுச்சூழல் கேடுகளும் சுகாதாரக் கேடுகளும் பின்னிப் பிணைந்துவிடும். அது மட்டுமல்லாது, வீடுகளில் இருந்து உருவாகும் மின் குப்பையும் எல்லாக் குப்பையோடும் சேர்ந்து, பெரும்பாலும் சாக்கடைக்கோ அல்லது நகராட்சிக் கழிவிற்கோ செல்லுகிறது. தாமிரம் போன்ற உலோகங்களை மீட்டெடுக்க கேபிள் மற்றும் வயர்களைத் திறந்த வெளியில் மனம் போன போக்கில் எரிக்கையில் நச்சு வாயுக்களால் காற்று மண்டலம் மாசுபடும். இக்குப்பையை யாரோ உருவாக்க, யாரோ பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

இவற்றில் மிகவும் அக்கறை செலுத்தப்பட வேண்டிய கழிவுகள் என்னவெனில், கம்ப்யூட்டர் கழிவுகளே. இவற்றின் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டர்களின் விலை குறைந்து கொண்டே வருவதாலும், கடன் வசதிகள் பெருகியுள்ளதாலும், நடுத்தரக் குடும்பத்தினரால்கூட எளிதில் கம்ப்யூட்டர் வாங்க இயலுகிறது. தகவல் தொழில் நுட்பத்தில் அசுர வேகத்தில் பயணிக்கும் நம் நாட்டில் ஓர் ஆண்டிற்கு சுமார் 40 மில்லியன் கம்ப்யூட்டர் பாகங்கள் கழிக்கப்படுகின்றன. இதே வேகத்தில் கழிக்கப்பட்டால் 2010 ஆம் ஆண்டிற்குள் இது 100 மில்லியனாக உயரும் எனக் கணிக்கப்படுகிறது.

பெங்களூர் மட்டும் ஒரு வருடத்திற்கு 8000 டன்கள் கம்ப்யூட்டர் கழிவுகளை உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. இங்கு தகவல் தொழில்நுட்பத் தொழிற்சாலைகளிலிருந்து மட்டும் ஒரு வருடத்தில் 30,000 கம்ப்யூட்டர்கள் பயனற்றதாகக் கழிக்கப்படுகின்றன.

ஒரு கணினியில் உள்ள நச்சுப் பொருள்களின் பட்டியலைப் பார்த்தால் அசந்து போக நேரிடும். தற்சமயம் பிரபலமாயுள்ள தட்டை ஸ்கிரீன் கம்ப்யூட்டரில் பாதரசம் உள்ளது. பொதுவாக கணினி உதிரி பாகங்களில் காரீயம் மற்றும் காட்மியம் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த கன உலோகங்கள் உள்ளன. மேலும் டயாக்சின் மற்றும் ஃப்யூரான் ஆகிய நச்சு வாயுக்களை வெளிப்படுத்தும் பாலி வினைல் குளோரைடு கேபிள் இன்சுலேஷன்களில் உள்ளது. ஓசோன் படலத்தை மெலிவடையச் செய்யும் ரசாயன நச்சுப்பொருள்கள் உள்ளன. ஒரு கம்ப்யூட்டரில் 20 சதவிகிதம் பிளாஸ்டிக் உள்ளது. இத்தகு நச்சுப் பொருள்கள் எல்லாம், பயனற்ற கம்ப்யூட்டர்கள் தவறான முறையில் கழிக்கப்படுகையில் வெளியாகின்றன.

தகவல் தொழில் நுட்பத்துறை எவ்வளவு வேகமாக வளர்கிறதோ, அவ்வளவு வேகமாய் மின்னணுக் குப்பை விகிதமும் அதிகரிக்கிறது. எனினும், இக் குப்பைக்கு சந்தையில் ஒரு மதிப்பு உள்ளது. ஒரு விலை உள்ளது. மின் குப்பையில் நச்சுத்தன்மை வாய்ந்த உலோகங்களோடு தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்களும் கிடைக்கின்றன. “குப்பையே செல்வம்’ என்ற கோட்பாட்டிற்கு உதாரணமாக மின் குப்பையைச் சொல்லலாம். பல கழிவுப் பிரச்சினைகளுக்கு ஆதாரமாக விளங்கும் அதே மின் குப்பை மறுசுழற்சி செய்கையில் ஒரு லாபகரமான தொழிலாகவும் மாறலாம். ஆனால் விஞ்ஞானபூர்வமற்ற முறையில் மறுசுழற்சி செய்கையில், தொழிலாளர்களுக்கு சுகாதாரக் கேட்டை விளைவிப்பதோடு, சுற்றுச்சூழலையும் நச்சாக்குகிறது.

வளர்ந்த நாடுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மின்னணுக் குப்பையை “பின் வாசல்’ வழியாகக் கொட்டுகின்றன. அதாவது ஏற்கெனவே பயன்படுத்திய கம்ப்யூட்டர்களை “டொனேஷன்’ என்ற பெயரில் மறுபயன்பாட்டிற்காகத் தொண்டு நிறுவனங்களுக்கோ அல்லது பள்ளிகளுக்கோ தானமாக இங்கு அனுப்புகின்றன. சிறிது காலத்திற்குப் பின் இவை குப்பைகளே. வளர்ச்சியடைந்த நாடுகளில் இக்கழிவை மறு சுழற்சி செய்ய அதிகச் செலவாகும். ஆனால் இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் குறைந்த செலவில் மறு சுழற்சி நடைபெறுவதால் இக்கழிவுகள் இங்கே தள்ளிவிடப்படுகின்றன. எனவே, இந்நாடுகளில் சுற்றுச்சூழலும் சுகாதாரமும் கெடுகிறது.

அபாயகரக் கழிவுகளை உலகின் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்புவதை முறைப்படுத்த உலக நாடுகளிடையே பேசல் ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பேசல் செயல் திட்டத்தின் (Basel Action Network) அறிக்கையின்படி, அமெரிக்காவில் உருவாகும் மின்னணுக் குப்பையில் 50 முதல் 80 சதவிகிதம் வளரும் நாடுகளுக்கு, மறுசுழற்சி செய்வதற்காகத் தள்ளிவிடப்படுகிறது. மின் குப்பைக்கென நம் நாட்டில் தனியே சட்டம் இல்லாத நிலையில் மத்திய அரசு ஜூலை 2004-ல் தேசிய மின்னணு மற்றும் மின் கழிவிற்கான பணிக்குழுவை (National Waste of Electronic and Electrical Equipment Task Force) நியமித்துள்ளது.

நகராட்சிக் கழிவுகளையே இன்னும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்துப் போடும் மனநிலையில் இல்லாத பொது மக்கள் மின்னணுக் குப்பையைச் சரியான முறையில் கையாளுவது சிரமம். எனவே “சுற்றுச்சூழல் சீர்கேட்டினை உண்டுபண்ணுபவரே, அதற்கான இழப்பை ஈடு செய்ய வேண்டும்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இச்சாதனங்களின் உற்பத்தியாளரே இக்கழிவுகளை விஞ்ஞான முறையில் சுத்திகரித்து இறுதி நிலைக்குத் தள்ள வேண்டும் என்பதையும் பரிசீலனை செய்யலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் தற்சமயம் காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர மற்றும் உயர் நிலைத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளன. சென்னையிலுள்ள தரமணி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் போன்ற இடங்களில் பல தொழில்நுட்பப் பூங்காக்கள் அமையவுள்ளன. மின்னணுக் கழிவுகளை முறையாகக் கையாள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் உருவாகும் மின்னணுக் கழிவுகளின் அளவைக் கண்டறிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒரு குழுவை அமைத்துள்ளது. பொதுவாக இக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு எளிதான, செலவு குறைந்த தொழில் நுட்பமே இந்தியாவைப் போன்ற வளரும் நாடு களுக்குத் தேவை.

Posted in Analysis, Anti-dumping, cell phones, Cities, computers, Dumping, Electronics, Environment, Global Warming, India, Laws, Op-Ed, Recycle, States, Statistics, Tamil, Technology, Trash, Vaigai Chelvi, Vaigai Selvi, Waste Management | Leave a Comment »

Indian States Performance – 2004

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 28, 2006

Posted in 2004, Chief Ministers, CM, Comparison, Economic Analysis, India, Ranking, States, Survey, Tamil, Tamil Nadu | Leave a Comment »