சமச்சீர் கல்வி முறையைச் செயல்படுத்தல்
எஸ்.எஸ். இராஜகோபாலன்
“”தற்போது செயல்பாட்டிலுள்ள பல்வேறு கல்விமுறைகளான – நர்சரி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல் மற்றும் மாநில வாரியக் கல்வி முறைகளை ஆய்வு செய்து அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கும் சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த “”அறிக்கை வேண்டி முனைவர் ச. முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழுவினைத் தமிழக அரசு நியமித்துள்ளது குழந்தைகளின் நலனைப் பேணும் ஒரு சீரிய நடவடிக்கையாகும்.
வேறுபாடுகளுக்கான காரணிகள்:
- பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முறை,
- பள்ளி வயது,
- பாடத்திட்டம்,
- பாட நூல்கள்,
- ஆசிரியர்கள்,
- தேர்வுமுறை,
- பள்ளிச்சூழல்,
- உட்கட்டமைப்பு வசதி,
- வகுப்பறைக் கற்றல் – கற்பித்தல் முறைகள்,
- பள்ளி மேலாண்மை,
- பள்ளி ஆய்வு,
- பயிற்று மொழி போன்றவை கல்வி முறைகளில் வேறுபாடுகளை உருவாக்கியுள்ளன.
அவ் வேறுபாடுகளை அகற்றியோ, குறைத்தோ சமச்சீர் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த முற்படுவதுதான் அரசின் நோக்கம். கோத்தாரி கல்விக்குழு, தேசியக் கல்விக் கொள்கை ஆகியவை வலியுறுத்திய ஒரு திட்டம் பல்வகைப் பள்ளிகளின் தனித்தன்மைகளை அறிதல் வேண்டும்.
ஓரியண்டல் பள்ளிகள்:
28 அரேபிக், 8 வடமொழி கற்பிக்கும் பள்ளிகள் ஓரியண்டல் பள்ளிகளாகும். இம் மொழிகளைத் தவிர, ஆங்கிலம் மொழியல்லாப் பாடங்கள் அனைத்தும் மாநில வாரியப் பாடத்திட்டத்தின்படி கற்பிக்கப்பட்டு மாநில வாரியத் தேர்விற்கு மாணவர்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. தமிழில் ஒரு தாள் மட்டுமே உண்டு. மற்றொரு மொழித்தாள் அரேபிக் அல்லது வடமொழி, சமூக இயல் தேர்வை மாணாக்கர் எதிர்கொண்டாலும் அதில் பெறும் மதிப்பெண் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க எடுத்துக் கொள்ளப்படாது.
ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகள்:
ஆங்கில ஆட்சியில் ரயில்வே, தபால்தந்தித்துறை, செவிலியர் போன்ற பணிகளில் ஆங்கிலோ-இந்தியர் அதிகம் பணி புரிந்தனர். இத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் அவற்றின் பாடத்திட்டம் வகுக்கப்பட்டது.
ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த வேளையில் பிற பாடங்களின் பாடத்திட்டங்கள் சுமையற்றதாக இருந்தது. சமீபகாலத்தில் இப் பாடத்திட்டங்களையும் மாநில வாரியப் பாடத்திட்டத்திற்கு இணையாகக் கொணர மாற்றங்கள் படிப்படியாகச் செய்யப்பட்டுள்ளன. இப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளன. புதிய பள்ளிகள் ஏதும் தொடங்கப்பெறாததால் அவற்றின் எண்ணிக்கை 41-லேயே நிற்கின்றது. ஓரியண்டல், ஆங்கிலோ-இந்தியப் பள்ளிகளில் சமச்சீர் கல்வி கொண்டு வருவது எளிது. அக் கல்வி முறைகளின் சிறப்பான மொழிப்பாடங்களில் ஒரு தனித்தாள் கொடுப்பது ஒரு தீர்வாக அமையும்.
மெட்ரிக் பள்ளிகளின் சிறப்பு அம்சங்கள்:
1978-ஆம் ஆண்டில் 40-க்கும் குறைவாக இருந்த மெட்ரிக் பள்ளிகள் இன்று ஏறக்குறைய 4000 பள்ளிகளாகியும் மேலும் இவ் வகைப் பள்ளிகள் தொடங்கப் பலரும் முன்வருகின்றனர்.
எல்லா மெட்ரிக் பள்ளிகளிலும் நர்சரி வகுப்புகள் உண்டு. எனவே கல்வி 3 வயதிலேயே தொடங்குகின்றது. ஒவ்வொரு பிரிவிற்கும் ஓர் ஆசிரியர் இருப்பதால் கற்பித்தல் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. குழந்தைகளுக்கும் தனிக்கவனம் செலுத்த வாய்ப்பு உண்டு. தேர்வை மையப்படுத்திய கற்றல் – கற்பித்தல் முறை பெற்றோர்க்கு விருப்பமாக உள்ளது. மாதந்தோறும் பெற்றோர் கூட்டம் நடைபெறுவதும் அவற்றில் தவறாது பெற்றோர் பங்கேற்பதை உறுதி செய்வதும் ஆசிரியர் – பெற்றோர் உறவை வளர்க்க உதவும். பள்ளி நிர்வாகியோ அல்லது அவரால் நியமிக்கப் பெற்ற கல்வி ஆலோசகரோ பள்ளியில் இருந்து பள்ளி செயல்பாட்டினை நேரடியாகக் கண்காணித்து வருவது ஒரு சிறப்பு. பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதமே பள்ளியின் நிலைத்த தன்மைக்கு அடிப்படை என்பதால் சிறப்பான தேர்ச்சியைக் காட்ட முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
பொதுப்பள்ளிகளின் சிறப்பம்சங்கள்:
மாநில வாரியத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இவை. சமீபகாலமாக அரசு உதவி பெறாமல் மாநில வாரியத்தோடு இணைந்த பள்ளிகள் சில உண்டு.
இவற்றில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் முழுமையான தகுதி பெற்றவர்கள். தொடர்ந்து அரசுச் செலவில் புத்தறிவு பயிற்சியும் ஆசிரியர்கள் பெறுகின்றனர். அரசு ஊழியர்க்குரிய அனைத்து உரிமைகளையும் இவ்வாசிரியர்கள் பெறுகின்றனர். பதவி உயர்வு வாய்ப்புகளும் உண்டு. கல்வித் துறையின் நேரடிக் கண்காணிப்பில் இயங்குகின்ற இப் பள்ளிகள் ஆண்டுதோறும் தணிக்கைக்குட்படுத்தப்படுகின்றன. பள்ளிச் சேர்க்கை முதல் வகுப்புத் தேர்ச்சி முடியவும், ஒவ்வோர் ஆசிரியரது கற்பித்தல் திறனும் ஆண்டாய்வில் மேற்பார்வை செய்யப்படுகின்றன. மக்களின் வரிப்பணத்தால் இவை இயங்குவதால் இவற்றை மக்கள் பள்ளிகளெனலாம். அரசின் நலத்திட்டங்கள் பலவற்றையும் செயல்படுத்தும் பொறுப்பும் இப் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு. மாணவரைப் பொறுத்தவரையில் இலவச பாடநூல்கள் வழங்கப் பெறுவதுடன், சீருடை, இலவசப் பேருந்து, அரசு உதவித்தொகை போன்றவையும் மாணவர் பெற இயலும்.
பாடத்திட்ட வேறுபாடு:
ஓரியண்டல் பள்ளிகள் மாநில வாரியப் பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்களில் பெரிய வேறுபாடு எக் கல்வி முறையிலும் இல்லை. சிறிய மாற்றங்களே காணப்படும். தொடக்கக் கல்வியில் மட்டும் மெட்ரிக் பள்ளிகளில் சுமைமிக்கப் பாடத்திட்டம் உள்ளது. நர்சரி வகுப்புகளிலேயே முறையான கல்வி தொடங்கப் பெறுவதன் விளைவே இது. ஆனால் எல்லாக் கல்வி முறைக்கும் வேறுபாடற்ற மாநில மேல்நிலைப் படிப்பிற்கு ஆயத்தப்படுத்துகின்றன. தேர்வு முறைகளில் ஆங்கிலோ – இந்தியன், மெட்ரிக் பள்ளிகளில் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு உண்டு. மற்ற இரு வகைப்பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வு கிடையாது.
பொதுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தல்:
மாநில வாரியப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அடிப்படையில் சில மாற்றங்கள் செய்வது அவசியம்.
அங்கன்வாடி மையங்கள் அனைத்தையும் முன்பருவக் கல்வி மையங்களாக மாற்றி அமைப்பது நல்ல பயனைத் தரும். சில ஆண்டுகளுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வட்டாரங்களில் யுனிசெப் ஆதரவில் அங்கன்வாடி ஊழியர்க்கு முன்பருவக்கல்விப் பயிற்சி அளித்த திட்டம் மிகுந்த பயனைத் தந்துள்ளது என ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. அனைத்து அங்கன்வாடி ஊழியர்க்கும் மிகக் குறைந்த செலவில் இப் பயிற்சியினை அளிக்க இயலும்.
ஆசிரியர் பணியிடங்களை அதிகரிப்பது மற்றொரு செயல்பாடாக இருக்க வேண்டும். பிரிவிற்கு ஓர் ஆசிரியர் என்ற இலக்கை நோக்கி படிப்படியாகச் செல்லத் திட்டம் வகுக்கப்பட வேண்டும். உயர்நிலைப் பகுதியில் கணிதம், அறிவியல், சமூகஇயல் ஆகிய பாடங்களைக் கற்பிக்க அப் பாடங்களில் தகுதி பெற்றவரை நியமிக்க வேண்டும். தற்பொழுது அப் பாடங்களைக் கல்லாதவரும் கற்பிக்கும் நிலையை மாற்றிடுதல் அவசியம்.
மூன்றாவதாக, அறிவியல் பாடத்தில் செய்முறைப் பயிற்சியை அமலாக்க வேண்டும். மேல்நிலைக் கல்வி வகுப்புகள் பள்ளிகளில் அமைந்ததால் எல்லாப் பள்ளிகளுக்கும் அறிவியல் பாடங்கள் அமைந்தன. அதுபோலவே, செய்முறைத் தேர்வுகள் கொணரப்பட்டால் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் அறிவியல் கூடங்கள் உருவாகிடும்.
இம் மூன்றும் அடிப்படை மாற்றங்கள். மற்றவை எளிதானவையே.
மெட்ரிக் பள்ளிகளைச் சீரமைத்தல்:
மெட்ரிக் பள்ளிகளில் நர்சரி வகுப்பு முதல் அனைத்தாசிரியரும் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மறுபயிற்சி வகுப்புகள் நடத்தப் பெற்று ஆசிரியர் திறன்கள் வளர்க்கப்பட வேண்டும். ஆண்டாய்வு நடைபெற வேண்டும். முனைவர் சிட்டிபாபு குழு அளித்துள்ள பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.
சமச்சீர் கல்வி ஜனநாயகத் தேவை:
நால்வகைப் பள்ளிகளிலும் காணப்படும் குறைகள் களையப்பெற்று, நிறைகளை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவதே சமச்சீர் கல்வியின் நோக்கமும் செயல்பாடும் ஆகும். எல்லாப் பள்ளிகளும் மேலோங்கச் சிறப்புற செயல்படத் துணை செய்யும் ஒரு கருவியே சமச்சீர் கல்வி முறை. இதனைச் செயல்படுத்துவது அரசின் கடமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொறுப்பாகும். சமச்சீர் கல்வி முறை அமலாக்கப்பட்டால் தமிழகத்தில் பிறந்து வளரும் ஒவ்வொரு குழந்தையும் தரமிக்க நல்ல கல்வி பெற இயலுமென்பதால் அனைத்து மக்களும் தங்கள் முழுமையான ஆதரவினை இத் திட்டத்திற்கு அளிக்க வேண்டும்.