ஆதரவற்றோர் இல்லத்துக்கு உதவ ரஜினி பெயரில் சிறப்பு தபால் உறை
பா. ஜெகதீசன்
சென்னை, ஜன. 4: ரஜினிகாந்த் பெயரைச் சொன்னால் திரை உலகில் மட்டும் அல்ல, அறப் பணிகளுக்கும் பணம் வந்து கொட்டும்.
இதை நிரூபிக்கும் சம்பவம் குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே உள்ள அம்பவாடி பகுதியில் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் ஆதரவற்றோருக்கான இல்லத்தை அம்பவாடி அறக்கட்டளை நடத்தி வருகிறது.
ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி இந்த இல்லத்துக்குத் தேவைப்படும் நிதியை அம்பவாடி அறக்கட்டளை திரட்டி வருகிறது. இவ்வாண்டு நிதியைத் திரட்ட புதுமையான முறையை அந்த அறக்கட்டளை கடைப்பிடித்துள்ளது. ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி, 200 சிறப்புத் தபால் உறைகளை அஞ்சல் துறையின் அனுமதியுடன் அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அதன் விலை தலா ரூ.250.
உறையின் பின் பக்கத்தில் அகில இந்திய அளவில் நம்பர்-1 நடிகராகவும், எல்லா நடிகரைக் காட்டிலும் அதிக சம்பளம் பெறுபவராகவும் ரஜினி திகழ்வதாக அச்சிடப்பட்டுள்ளது.
இந்த உறைகளில் 50-ஐ சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த நீல்கமல் மகேஸ்வரி என்கிற ஆயத்த ஆடைத் தொழில் அதிபருக்கு அம்பவாடி அறக்கட்டளை அனுப்பி உள்ளது. ஏராளமான பிரமுகர்களின் ஆட்டோகிராபுகளைச் சேகரித்து தொகுத்து வைத்துள்ளார் நீல்கமல்.