பாதியில் முடங்கிய 3 மேம்பாலங்கள்: ரூ. 42 கோடி வீணாகும் அவலம்
சென்னை, ஆக. 2: சென்னை தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை காரணமாக ரூ. 42 கோடியில் தொடங்கப்பட்ட 3 மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
- தாம்பரம் சானடோரியம்,
- பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை,
- பல்லாவரம் திரிசூலம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்படவில்லை.
தகவல் பெறும் உரிமைச் சட்டம்: இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து இங்குள்ள குரோம்பேட்டை நியூகாலனி குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் வி. சந்தானத்துக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறையினர் அளித்துள்ள பதில் விவரம்:
சானடோரியம் மேம்பாலம்:
ரூ. 14.40 கோடி திட்ட மதிப்பீட்டில் 2003 டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்த மேம்பாலப் பணிகள் திட்டமிட்டபடி 2005 ஜூனில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
70 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவது, கிழக்குத் தாம்பரம் பகுதியில் இறங்குதளம் அமைக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு ஆகியவற்றால் இந்த மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி 2008 டிசம்பருக்குள் இந்த மேம்பாலப் பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.
பல்லாவரம் -துரைப்பாக்கம் ரேடியல் சாலை மேம்பாலம்:
ரூ. 22 கோடி திட்ட மதிப்பீட்டில் 2004 பிப்ரவரியில் இந்த திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன.
திட்ட மதிப்பீட்டில் ரூ. 20 கோடி, நிலம் கையகப்படுத்தவே செலவிடப்பட்ட நிலையில் இதுவரை 53 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 723 சதுர மீட்டர் நிலம் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 2006 பிப்ரவரியில் முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி 2008 ஜூனில் இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிக்கப்படும் என தெரிகிறது.
பல்லாவரம்- திரிசூலம் மேம்பாலம்:
ரூ. 5.75 கோடி திட்ட மதிப்பீட்டில் 2003 நவம்பரில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
இதுவரை 40.55 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்புத்துறை நிலத்தை ஒப்படைக்காததால் திட்டமிட்டபடி 2005-ல் இந்த மேம்பாலப் பணிகள் முடிக்கப்படவில்லை.
பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலம் கிடைத்த நாளில் இருந்து 12 மாதங்களுக்குள் இதன் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமதம் ஏன்?:
இந்த மூன்று மேம்பாலங்களும் பாதியில் முடங்கியதற்கு இவற்றுக்கு தேவையான நிலத்தை பெறுவதில் ஏற்பட்ட பிரச்னையே காரணம்.
பல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டங்களுக்கு முக்கியத் தேவை நிலம். ஆனால், இந்த திட்டங்களை உருவாக்கிய அரசு அதிகாரிகள் தேவையான நிலத்தை பெறுவதற்கான வழிமுறைகளை தெளிவாக வகுக்கவில்லை.
தனியார் பயன்பாட்டுக்கான பெரிய திட்டங்களுக்கு சாதாரண மக்களின் நிலங்கள் தேவை என்றால் விரைந்து செயல்பட்டு நிலத்தை கையகப்படுத்தும் அரசு நிர்வாகம், மக்களின் திட்டங்களுக்காக சில தனியாரிடம் இருந்து நிலத்தை பெறுவதில் மட்டும் ஆமை வேகத்தில் உரிய அக்கறை இன்றி செயல்படுவதே இத்தகைய திட்டங்கள் முடங்க முக்கிய காரணம் என இப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.