உல்ஃபா கொலைவெறித் தாக்குதல் எதிரொலி அச்சத்தில் அசாமிலிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறுகின்றனர்: பிகார் மாநில மக்கள்
குவாஹாட்டி, ஜன. 9: அசாமில் குடியிருந்துவரும் பிற மாநில மக்கள் மீது உல்ஃபா (ஐக்கிய அசாம் விடுதலை முன்னணி) பயங்கரவாதிகள் கடந்த சில நாள்களாக அடுத்தடுத்து கொலைவெறித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதை அடுத்து பிகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அச்சத்தில் அசாமை விட்டு குடும்பம் குடும்பமாக வெளியேறி வருகின்றனர்.
“”எங்கள் மக்களையும் உடைமைகளையும் பாதுகாக்க மாநில அரசு தவறிவிட்டது. எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாததால், எமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, அசாமை விட்டு வெளியேற முடிவு செய்துவிட்டோம்” என்று கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் பிகாரைச் சேர்ந்த மக்கள் நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறினர்.
மேல் அசாமில் உள்ள திப்ரூகர், தின்சுகியா, சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அடுத்தடுத்து உல்ஃபா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் செங்கல்சூளையில் பணியாற்றும் பிகாரிகள், பால் வியாபாரம் செய்துவரும் அப்பாவிகள் உள்ளிட்ட 64 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்; 40-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இத் தாக்குதல்களை அடுத்து, மத்திய உள் துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தலைமையில் மத்தியக் குழுவினர் அசாம் வந்தனர். முதல்வர் தருண் கோகோய், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். அசாமில் வாழும் இந்தி பேசும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று ஜெய்ஸ்வால் ஞாயிற்றுக்கிழமை உறுதி அளித்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை இரவிலேயே மீண்டும் உல்ஃபா பயங்கரவாதிகள் திப்ரூகர், சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் வசித்துவந்த 17 பிகாரிகளைக் கொன்று குவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் உறுதி அளித்த பிறகும் உல்ஃபாவின் கொலைவெறித் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்காததால் தின்சுகியா, திப்ரூகர், சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் பிகாரிகள் வீடு வாசல்களைக் காலிசெய்துவிட்டு சொந்த மாநிலத்தை நோக்கி திங்கள்கிழமை புறப்பட்டுவிட்டனர். பெண்களும் குழந்தைகளும் முதியோரும் சாரி சாரியாக ரயில் நிலையங்களை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தனர். அசாமில் செங்கல்சூளை வேலை, பால் விற்பனை, சிறு சிறு கூலிவேலைகள் போன்றவற்றைச் செய்துவந்தவர்கள் அவர்கள்.
“”தின்சுகியா மாவட்டத்தில், நாங்கள் வசிக்கும் லாங்ஸ்வால் கிராமத்துக்குள் இரவில் புகுந்த முகமூடி அணிந்த பயங்கரவாதிகள் எங்களுக்கு அடுத்த வீட்டுக்காரர்களை வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொன்ற சம்பவம் எனது நினைவில் வந்து அச்சமூட்டிக்கொண்டிருக்கிறது. அதனால், உறக்கம்கூட வரவில்லை” என்று அச்சத்துடன் கூறினாள் 12 வயதுச் சிறுமி ராதா.
“”எங்களது பாதுகாப்பு குறித்து எங்கள் சொந்த ஊரில் உள்ள முதியோர் கவலை அடைந்துள்ளனர். அசாமிலிருந்து பிகாருக்குத் திரும்பி வந்துவிடுமாறு அவர்கள் கூறினர்; அதனால்தான் புறப்பட்டுவிட்டோம்” என்று குவாஹாட்டி ரயில் நிலையத்தில் காத்திருந்த ஹரி யாதவ் என்பவர் கூறினார். ஆனால், வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் யாரும் அச்சத்தில் அசாமைவிட்டு வெளியேறவில்லை என்று மாநில அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.