இந்தியாவில் மற்றொரு தற்கொலை தாக்குதல் நடத்த புலிகள் திட்டமா?
சென்னை, பிப். 15:கோடியக்கரை கடல் பகுதியில் 5 பேருடன் பிடிபட்ட இலங்கைப் படகிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் விடுதலைப் புலிகள் மற்றொரு தாக்குதல் திட்டத்தை இந்தியாவில் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளனரா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அந்தப் படகில் இருந்த தற்கொலைப் படை பெல்ட் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்திய ஐஜி ராஜேந்தர் சிங் தெரிவித்தார்.
இந்த பெல்ட் எடை மற்றும் அது தயாரிக்கப்பட்ட விதம், ஒருவரை மட்டுமே அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது போலத் தெரியவில்லை. மிகப் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தும் நோக்கில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கடல் எல்லையில் இதுவரை பிடிபட்ட ஆயுதக் கடத்தலில் இது மிகப் பெரிய கடத்தலாகும். பிடிபட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் பிடிபட்டவர்கள் பற்றிய முழுவிவரமும் தெரிய வரும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.
பிடிபட்ட படகிற்கு எவ்வித பதிவுச் சான்றிதழ் விவரமும் இல்லை. இந்தப் படகு தமிழகத்தில் பதிவு செய்யப்படவில்லை. பொதுவாக படகுகள் அனைத்தும் மண்டபம் அல்லது தூத்துக்குடி பகுதியில்தான் பதிவு செய்யப்படும்.
படகில் உள்ள பதிவு எண், தமிழக பதிவு எண்ணுடன் ஒத்துப் போவதாக அமையவில்லை என்றும் ராஜேந்தர் சிங் தெரிவித்தார்.
 |
 |
பிடிப்பட்ட படகுடன் இந்திய கடற்படையினர் |
தமிழகத்தின் கோடியக்கரை கடற்பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட படகு விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது – தமிழக காவல்துறைத்தலைவர்
கடந்த செவ்வாய்க்கிழமை தமிழகத்தை ஒட்டிய கோடியக்கரை கடற்பிரதேசத்தில் இந்திய கடலோர காவல் படையால் கைப்பற்றப்பட்ட ஆயுதம் தாங்கிய படகு இலங்கையைச் சேர்ந்தது என்றும், அது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவின் படகு என்றும், தமிழக காவல்துறைத்தலைவர் டி.முகர்ஜி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தப் படகிலிருந்த ஐந்துபேரில் அருமைநாயகம் புருஷோத்தமன், சகாயம், ஆறுமுகம், சிவபத்மனாபன் ஆகிய நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் இராமச்சந்திரன் என்பவர் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் கூறினார்.
இவர்களில் அருமைநாயகம் புருஷோத்தமன் என்பவர் கடற்புலி பிரிவைச்சேர்ந்தவர் என்றும், சிவ பத்மனாபன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வாகன ஓட்டுனராக பணியாற்றுபவர் என்றும் தெரிய வந்திருப்பதாகவும் தெரிவித்த முகர்ஜி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஏற்கனவே இலங்கைக்கு ஆயுதங்களை கடத்தியதான வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் என்றும் கூறினார்.
இந்தப் படகு இரணை தீவிலிருந்து யாழ்ப்பாணத்தின் வடக்கு பகுதியை நோக்கி செல்கின்ற வழியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரை தவிர்த்து வரும்போது இந்தியக் கடலோர காவல் படையினரிடம் பிடிபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்தப் படகோ, படகில் இருந்த நபர்களோ, பொருட்களோ, ஆயுதங்களோ தமிழ்நாட்டுக்குள் கொண்டுவருவதற்காக வரவில்லை என்று தமது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் முகர்ஜி கூறினார்.
தேவை எச்சரிக்கைதமிழகக் கடலோரப் பகுதிகளில் 2 நாள்களில் அடுத்தடுத்து படகுகளில் ஆயுதங்களும் வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது, பாதுகாப்புக்கு கடும் சவால் ஏற்படுத்துவதாக உள்ளது.ஒரு படகு கோடியக்கரைப் பகுதியில் சிக்கியுள்ளது. அது மீன்பிடி படகுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் படையினர் சந்தேகத்தின்பேரில் அப் படகை மறித்து சோதனையிட்டதில் அதில் மனித வெடிகுண்டுக்குப் பயன்படுத்தும் ஜாக்கெட்டுகள், ஏகே 56 ரக துப்பாக்கிகள், குண்டுகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. படகில் இருந்த இலங்கைத் தமிழர்கள் மூவரும், தமிழகத்தைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரித்தபோது அப்பொருள்களைக் கடலூரில் ஒப்படைக்க வந்ததாகக் கூறியுள்ளனர்.இதேபோல் தனுஷ்கோடி பகுதியில் ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் அலுமினியக் கட்டிகள், வெடிமருந்து தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள், இரும்புக் கம்பிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துச் செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சில வாரங்களுக்கு முன்தான் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த இரும்பு குண்டுகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டன. அவை மும்பையிலிருந்து தமிழகம் வழியே இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படவிருந்தன. இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கையில் இனப் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து சண்டை நடந்து வரும் சூழ்நிலையில் போராளிகளுக்காக இவை கடத்தப்படுகின்றன. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்திப் பகுதியில்தான் கடத்தல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன.
பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைக்குப் பேச்சு வார்த்தை மூலம்தான் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தாக்குதல் சம்பவங்கள் அவ்வப்போது மக்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும்போதும், இலங்கை அமைச்சர்கள் இந்தியா வரும்போதும், இந்திய அதிகாரிகள் இலங்கை செல்லும்போதும் இது தொடர்பான கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ஆனால் அது தொடர்பான தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை.
இது ஒருபுறம் இருக்க, சண்டைக்குப் பயந்து நாள்தோறும் இலங்கையிலிருந்து மக்கள் அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனர். அவர்களுக்குச் சரியான உணவு, தங்குமிட வசதி செய்துதர வேண்டியுள்ளது. இச் சூழ்நிலையில் ஆயுதக் கடத்தல் நடவடிக்கைகள் தமிழகத்துக்கு மேலும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் அமைதி நிலவ சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதற்காக வன்முறைக்கு வித்திடும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் எவரும் துணை நிற்க முடியாது. இந்த நிலையில் தமிழகக் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். கைப்பற்றப்பட்ட ஒரு பொருள் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்துவதற்கான சாதனம் என்பதால் அது குறித்தும் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.
ஒரு படகில் இருந்த வெடிபொருள்கள் கடலூருக்குக் கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் கள்ளத்தனமாக ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். கடந்த காலச் சம்பவங்களை மனத்தில்கொண்டு, இப்போதைய சூழ்நிலையை போராளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாதவாறு மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதுவரை பறிமுதலான வெடிபொருள் எவை? “வெடிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்’
சென்னை, பிப். 16: தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் வெடிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர் என்றார் டிஜிபி டி.முகர்ஜி.2006-ல் இருந்து மாநில போலீஸ் மற்றும் கியூ பிரிவு போலீஸôரால் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்களின் பட்டியல் விவரம்:2006 நவம்பர் 29-ல் மானாமதுரை அருகே விபத்துக்குள்ளான காரில் இருந்து 30 மூட்டைகளில் வெடிமருந்து பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கைது செய்யப்பட்ட 4 பேரில் மூன்று பேர் தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஹைதராபாத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது.அதைத்தொடர்ந்து பெரியமேட்டில் (சென்னை) 5 ஆயிரம் கிலோ இரும்பு குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 7,500 கிலோ இரும்பு குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மும்பை, சென்னை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இலங்கைத் தமிழர்கள் 5 பேர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து இரும்பு குண்டு கடத்தியது தெரியவந்தது.2007 பிப்ரவரி 12-ல் தனுஷ்கோடிக்கும் இலங்கைக்கும் இடையில் சென்ற நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இருந்து 92 சாக்கு மூட்டைகளில் 2,800 கிலோ அலுமினிய உலோக கட்டிகள், உலோக வளையங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த முருகேசன், கணேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2007 பிப்ரவரி 14-ம் தேதி அதே பகுதியில் 126 சாக்கு மூட்டைகளில் மொத்தம் 3,200 கிலோ அலுமினிய உலோகக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயகரன், சுகுமார், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 3 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
“”மும்பை, ஹைதராபாத், குஜராத்தில் இருந்து வெடிபொருள்கள் தமிழகத்தின் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுகிறது. புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் இது போன்ற வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்” என்றார் டிஜிபி டி.முகர்ஜி.
தமிழ்நாட்டில் இருந்து ஆயுதங்கள் கடத்தும் விடுதலைப்புலி தளபதி: கைதானவர்கள் பரபரப்பு தகவல்சென்னை, பிப். 16-கோடியக்கரை கடல் பகுதியில் கடந்த செவ் வாய்க்கிழமை இரவு விடுதலைப்புலிகளின் படகை இந்தியக் கட லோரக் காவல் படையினர் மடக்கிப் பிடித்தனர்.அதில் இருந்த2 விடு தலைப்புலிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3,700 கிலோ வெடிப் பொருட்கள் மற்றும் மனித வெடி குண்டு பயன்படுத்தும் வெடிகுண்டு பெல்ட் கைப்பற்றப்பட்டன.
முதல் கட்ட விசாரணையில் இரனைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்ற இந்த படகு சிங்கள கடற்படையிடம் சிக்காமல் இருப் பதற்காக இந்திய கடல் பகுதிக்குள் சுற்றி வந்த போது இந்தியக் கடலோரக் காவல் படையிடம் சிக்கியது தெரிய வந்தது. அந்த படகில் இருந்த 2 விடுதலைப்புலிகளில் அருமைநாயகம் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர். சிவபத்ம நாபன் புலிகள் அமைப்பு டிரைவர் ஆவார். இவர்கள் இருவரிடம் இருந்தும் 2 சயனைடு குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த 2 சயனைடு குப்பிகளில் கொடிய விஷம் நிரப்பப்பட்டிருந்தது. பொது வாக சிங்கள ராணுவத்திடம் சிக்கனால் சயனைடு குப்பிகளை தின்று விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொள்வார்கள். இந்திய கடற்படையிடம் சிக்கிய போது 2 விடுதலைப்புலிகளும் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை.
சென்னை கொண்டு வரப்பட்ட அவர்களிடம் புதன்கிழமை இரவு முழுக்க மத்திய-மாநில உளவுத் துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினார்கள். “வெடிகுண்டு பெல்டு” யாரை கொல்ல தயாரிக்கப்பட்டது என்று கேட்டனர். அதற்கு கைதான விடுதலைப்புலிகளால் சரியான தகவலை சொல்லத் தெரியவில்லை.
ஆனால் தமிழ்நாட்டில் இருந்து விடுதலைப்புலிகளுக்காக கடத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதம் தொடர்பாக அவர்கள் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகள் விடு தலைப்புலிகளின் ஆயுதக் கடத்தல் மையங்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக குந்துகல், பாம்பன், மண்டபம், வேதலை ஆகிய கடலோரப் பகுதிகள் வழியாக விடுதலைப்புலிகளுக்கு வெடி பொருட்கள், மருந்து வகைகள் மற்றும் தேவையான பொருட்கள் செல்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து தினமும் டன் கணக்கில் விடு தலைப்புலிகளுக்கு பல்வேறு வகை பொருட்கள் செல்கிறது. இந்த பொருள்களை வாங்கி, கடலோரப் பகுதிகளுக்கு கொண்டு வந்து படகுகளில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான சிறு குழுக் கள் உள்ளன. இவர்களை ஏஜெண்டு போல இருக்கும் சிலர் இயக்குகின்றனர்.
இந்த ஏஜெண்டுகளுக்கு தலைவன் போல ஒருவர் இருப்பது கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிந்தது. அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவர் ஆவார். அவர் பெயர் கண்ணன் என்று தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோர பகுதி யில் இவர் வசித்து வருவதாக தெரிகிறது.
கண்ணனின் முக்கிய வேலையே விடுதலைப்புலி களுக்கு தேவைப்படும் வெடி பொருட்கள், மருந்துகள், உணவுகள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து வாங்கி அனுப்புவதுதான்.
விடுதலைப்புலிகளின் தலைமையிடம் இருந்து வரும் தகவல்களுக்கு ஏற்ப செயல்படும் கண்ணன் தமிழ்நாட்டில் ஏராளமான சிறு குழுக்களை ஏற்படுத்தி உள்ளார். ஒவ்வொரு குழுவிலும் 2 அல்லது 3 பேர் இருப்பார்கள். இந்த குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான வேலையை கண்ணன் கொடுப்பார்.
எந்த குழு என்ன மாதிரி வேலை செய்கிறது என்பது யாருக்குமே தெரியாது. குறிப் பாக ஒரு குழு வேலை மற்ற குழுவுக்கே தெரியாது. இதன் மூலம் ரகசியங்கள்ë கசியாமல் வெடிபொருள் கடத்தலை கண்ணன் திறமையாக செய்து வந்துள்ளார்.
வெடிபொருள், உணவுக் கடத்தலுக்கு கண்ணன் விடுதலைப்புலிகளையோ, புலிகளின் படகையோ பயன் படுத்துவதில்லை. தமிழக மீனவர்களையே பயன்படுத்தி உள்ளார். தமிழக மீன்பிடி படகுகளை விலைக்கு வாங்கி அவர் ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி வேறு சில மாநிலங்களிலும் கண்ணன் ஆட்களை வைத்து இருப்பதாக தெரிகிறது. வெடி பொருட்களை சேகரிக்க மராட்டியம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அவர் ஏஜெண்டுகளை வைத்துள்ளார். சில சமயம் இந்த வெடி பொருள்களை கண்ணனே நேரிடையாக யாழ்ப்பாணத் துக்கு கொண்டு சென்று கொடுத்து விட்டு வருவார்.
கைதான விடுதலைப்புலிகள் மூலம் கண்ணன் பற்றிய அனைத்து தகவல்களும் கிடைத்து விட்டன. புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கண்ணன் தமிழ்நாட்டில் 10 ஆண்டுக்கும் மேலாக ரகசியமாக தங்கி இருந்து ஆயுதம் கடத்தி வந்திருப்பது உளவுத்துறையினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அவரை பிடிக்க தமிழகம் முழுக்க கிïபிராஞ்ச் போலீசார் நேற்றிரவே அதிரடி வேட்டையை தொடங்கி உள்ளனர்.
அகதிகள் முகாம்களிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. புலிகளின் படகு பிடிபட்டதுமே கண்ணன் தலைமறைவாகி விட்டதாக தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் தளபதி கண்ணன் எந்த ஊரில் தங்கி இருந்தார் என்ற தகவலை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். கண்ணனை போலவே அவருக்கு உதவியாக இருந்த ஏஜெண்டுகளும் தப்பி ஓடி விட்டனர். அண்டை மாநிலங்களுக்கு இவர்கள் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கைதான விடுதலைப்புலிகளிடம் சென்னை போலீசார் இன்னும் விசாரணையை தொடங்கவில்லை. 2 விடு தலைப்புலிகளையும் 2 வாரம் காவலில் எடுத்து முழுமையான விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக போலீசார் இன்று ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் மனு செய்தனர்.
கிïபிராஞ்ச் போலீசார் 2 விடுதலைப்புலிகளையும் கடலோர மாவட்டங்களுக்கு அழைத்து செல்ல உள்ளனர். இந்த விசாரணை மூலம் விடுதலைப்புலிகளுக்கு தமிழ கத்தில் இருந்து யார்- யாரெல்லாம் பொருட்கள் சேகரித்து கொடுத்து உதவினார்கள் என்பது தெரிய வரும்.
வெடிகுண்டு `பெல்ட்’டுடன் வந்தவர்கள் தற்கொலை படை தீவிரவாதிகளா? சென்னை, பிப். 15-கோடியக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு வெடி பொருட்களுடன் பைபர் படகு ஒன்று பிடிபட்டது.இந்தியக் கடலோரக் காவல்படையினர் அந்த படகை மடக்கிப் பிடித்தனர். படகில் இருந்த 3 இலங்கை தமிழர்கள், 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
படகை சோதனையிட்டபோது ஏ.கே.56 ரக துப்பாக்கி, 124 தோட்டாக்கள், 5 கையெறி குண்டுகள், 7 கிலோ வெடி பொருட்களுடன் கூடிய தற்கொலை படை இடுப்பு பெல்டு, 5 டெட்டனேட்டர்கள், 7 கிலோ ரசாயன பவுடர், மற்றும் 8 டிரம்கள் நிறைய திரவ ரசாயனப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதோடு ஒரு சாடிலைட் போன் மற்றும் தேவையான அளவு உணவு பொருட்கள் இருந்தன. அரிசி, பருப்பு மூட்டைகள், தேங்காய் களும் சில நாள் சமையலுக்கு போதுமான அளவுக்கு இருந்தன.
சாதாரண மீன்பிடி படகு போல 22 அடி நீளத்தில் இருந்த அந்த பைபர் படகுக்குள் மின்னல் வேகத்தில் செல்ல உதவும் நவீன என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. சமீபத்தில்தான் அந்த படகு கட்டப்பட்டது போல இருந்தது.
பொதுவாக தமிழ் நாட் டில் கட்டப்படும் மீன் பிடி படகுகள் தூத்துக்குடி அல்லது மண்டபம் பகுதியில் பதிவு செய்யப்படும். ஆனால் பிடிபட்ட படகு எங்கும் பதிவு செய்யப்படவில்லை. ஸ்ரீராமஜெயம் என்ற பெயரில் தமிழக மீன்பிடி படகு போல ஊடுருவி இருந்த அந்த படகுக்குள் உலகின் எந்த பகுதிக்கும் செல்ல வழி காட்டும் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தப்பட்டு இருந்தது.
இவை அனைத்தையும் பார்த்த கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு சந்தே கம் ஏற்பட்டது. வெறும் ஆயுதக் கடத்தலுக்காக இந்த நவீன படகு தமிழக கடலோரத்துக்கு வரவில்லை என்பதை உணர்ந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மாலை அந்த படகும், அதில் இருந்த 5 பேரும் சென்னை கொண்டு வரப்பட்டனர்.
பிடிபட்ட 5 பேரும் சகாயம் (44), ஆறுமுகம் (53), அருமைநாயகம் (28), ராமச்சந்திரன் (42), சிவபத்ம நாபன் (31), என்று தெரிய வந்தது. அவர்களிடம் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள், கடற்படையினர், மற்றும் கடலோர காவல்படையினர் கூட்டாக விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், 5 பேரும் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தது தெரிய வந்தது.
கோடியக்கரைக்கு 22 கடல் மைல் தொலைவில் பாக்.ஜலசந்தி பகுதியில் அவர்கள் யாரோ ஒருவரது சிக்ன லுக்காக காத்து இருந்தபோது பிடிபட்டுள்ளனர். பிடிபட்ட 5 பேரும் ஒரே மாதிரி பேசுகிறார்கள். அவர்கள் கோடியக்கரை வழியாக தமிழ்நாட்டுக்குள் வர திட்டமிட்டிருந்தது தெரிகிறது.
இந்தியாவுக்குள் மற்றொரு பயங்கர தற்கொலை தாக்குதல் திட்டத்தை நிறைவேற்ற இவர்கள் வந்து இருக்கலாம் என்று உளவுத் துறையினர் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து உளவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிடிபட்டுள்ள வெடிகுண்டு பெல்ட் தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுவதுதான். முக்கியப்பிரமுகர்களை குறி வைத்து இந்த பெல்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த முக்கிய பிரமுகர் யார் என்று எங்களுக்கு இதுவரை தெரியவில்லை” என்றார்.
அந்த உளவுத் துறை அதிகாரி மேலும் கூறுகையில், “தற்கொலை பெல்ட்டை வடிவமைத்து அனுப்பியது விடு தலைப்புலிகள் தான் என்பதில் சந்தேகமே கிடையாது என்றாலும் கோடியக்கரை பகுதிக்கு இதை வரவழைத்த பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை” என்றார். தனிப்பட்ட நபரை மட்டுமின்றி பலரை தீர்த்து கட்டும் வகையில் வெடிகுண்டு பெல்ட் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
விடுதலைப்புலிகள் தமிழ் நாட்டுக்குள் ஊடுருவி பத்ம நாபா, ராஜீவ் காந்தி ஆகி யோரை கொன்ற போது இதே கோடியக்கரை வழியாகத்தான் வந்து சென்றனர். அதே பகுதியில் தற்கொலை படை வெடிகுண்டு பெல்ட் பிடிபட்டுள்ளதால் உளவுத்துறையினர் மிகவும் உஷாராகி உள்ளனர். விடுதலைப்புலிகள் அடுத்து ஏதோ ஒரு பெரிய தற்கொலை தாக்குதலுக்கு முயற்சிப்பதாக நினைக்கிறார்கள்.
ராஜீவை கொல்ல விடுதலைப்புலிகளின் தற்கொலை படையினர் 2 கிலோ வெடி பொருள் பெல்ட்டைத் தான் பயன்படுத்தினார்கள். தற்போது பிடிபட்டுள்ள வெடி குண்டு பெல்ட்டில் 7 கிலோ வெடிபொருள் உள்ளது. எனவே சிவராத்திரி விழாவை சீர்குலைக்க அல்லது தேர்தலில் வன்முறையை ஏற்படுத்த அது கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
வெடிகுண்டு பெல்டு இருந்த படகை பிடிக்கும் முன்பு நிறைய வயர்லஸ் சிக்னல்களை கடலோரக் காவல் படையினர் இடைமறித்து கேட்டுள்ளனர். அந்த வயர்லஸ் பேச்சு என்ன என்பது அதிகாரிகளுக்கு புரிய வில்லை. வயர்லஸ் பேசியவர்கள் ஈழத்தில் இருந்து ஏதோ தகவல் கொடுத்து இருக் கலாம் என்ற சந்தேகம் எழுந் துள்ளது.
7 கிலோ வெடிகுண்டு பெல்டு 5 பிரிவுகளாக பிரித்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்தது. இது நூற்றுக்கணக்காணவர்களை கொன்று குவித்து விடும் சக்தி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏதோ ஒரு பெரிய சதி திட்டத்துக்கு இந்த பெல்டு தயாரிக்கப்பட்டுள்ளதை உளவுத்துறையினர் ஒத்துக்கொண்டனர்.
விடுதலைப்புலிகளின்தற் கொலை படைதாக்குதலுக்கு பயன்படும் பெல்டு பிடிபட்டுள்ளதால் பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
பிடிபட்ட 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் “தமிழக கடலோரத்தில் வெடிபொருள் மற்று வெடிகுண்டு பெல்ட்டை கொடுத்து விட்டு இலங்கைக்கு திரும்பி வந்து விட தங்களுக்கு உத்தரவிடப்பட்டது” என்று கூறி உள்ளதாக தெரிகிறது.
அவர்களிடம் இருந்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெடிகுண்டு பெல்ட்டு பிடிபட்டுள்ளதால் கடலோர பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
கோடியக்கரை கடல் பகுதியில் விமானப்படை ரோந்து கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் சப்ளை: வெடிபொருள் கடத்தல் கும்பல் தலைவன் அடையாளம் தெரிந்ததுராமநாதபுரம், பிப். 15-ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடந்த 3 நாட்களில் 3 படகுகளில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டன.
ஏ.கே.56 துப்பாக்கி, கண்ணி வெடிகுண்டுகள், மனித வெடிகுண்டு அணியும் ஜாக்கெட், அலுமினிய தகடுகள், பயங்கர அழிவை ஏற்ப டுத்தும் வெடி குண்டு கள் தயாரிக்கும் மூலப் பொருட்கள் போன்றவை பிடிபட்டன.
ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு இவற்றை கடத்தி சென்றதாக இது வரை 10 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களிடம் இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தியபின் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டனர்.
பின்னர் அவர்களிடம் தமிழக போலீசாரும், உளவு பிரிவு, கிï பிரிவு அதிகாரி களும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
ஆயுதக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மீன்பிடி படகு போன்ற தோற்றம் கொண்ட அதிநவீன விரைவு படகு என்பதும் அதில் பொருத்தப்பட்டிருந்த என்ஜின்கள் உயர்சக்தி கொண்டவை என்றும் கண்டு பிடிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் வாங் கப்பட்ட இந்த படகு பின்னர் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு கடத்தலுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டுள் ளது. தூரத்திலிருந்து பார்க்கும் போது மீன்பிடி படகு போல வும் அதேநேரம் ரோந்து கப்பல்களை ஏமாற்றி காற்றை கிழித்து செல்லும் வேகத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. கடற்படை அதிகாரிகள் இதை கண்டுபிடித்து கரை யோர போலீசாருக்கு தெரிவித்த னர்.
இதையடுத்து போலீசார் தூத்துக்குடியிலிருந்து படகை வாங்கியவர் யார்? என்று விசாரித்தனர். இதில் தனுஷ் கோடியைச் சேர்ந்த கோமாளி என்பவரின் மகன் முத்தீஸ்வரன் (வயது 25) என்பது தெரிய வந்தது. படகை வாங்கிய இவர் அதை சீரமைத்து இலங்கைக்கு ஆயுதங்கள் கடத்தி செல்ல பயன்படுத்தியுள்ளார்.
போலீசாரின் விசார ணையில் தெரிய வந்த இந்த விவரங்கள் உயர் அதிகாரி களுக்கு சொல்லப்பட்டன.
இதையடுத்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு திருஞானம் உத்தரவுப்படி படகை வாங்கியவர், அதை சீரமைத்தவர், கடத்தலுக்கு துணை போனவர்கள் ஆகியோரை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட் டன. அவர்கள் உள்ளூர் போலீசார் மற்றும் உளவுப் பிரிவு, கிï பிரிவு போலீசாரு டன் இணைந்து முத்தீஸ்வரன் பற்றிய தகவலை சேகரித்த னர்.
இதில் முத்தீஸ்வரனும் அவரது கும்பலும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமானது. தமிழ் நாட்டின் சில பகுதிகளிலிருந்து ஆயுதங்களையும், வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட் களையும் ரகசியமாக சேகரித்து ராமேசுவரம் பகுதிகளுக்கு ஒரு கும்பல் கொண்டு வந்து சேர்க்கும்.
பின்னர் முத்தீஸ்வரன் தலைமையிலான கும்பல் படகு மூலம் இதனை இலங்கைக்கு கொண்டு சென்று சேர்க்கும். இவற்றை ஒருங்கிணைக்கும் பணியில் முத்தீஸ்வரன் மூளையாக செயல்பட்டுள்ளார்.
ஆயுதக்கடத்தலின் ஆணி வேரை மோப்பம் பிடித்த போலீசார் இதற்கு தலையாக செயல்பட்ட முத்தீஸ்வரனை பிடிக்க வலை விரித்தனர். இதை உணர்ந்து கொண்ட முத்தீஸ்வரன் தலைமறைவாகி விட்டார். பல இடங்களிலும் தேடி பார்த்த போலீசார் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே முத்தீஸ்வரன் இலங்கைக்கு ஓட்டம் பிடித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
எனவே முத்தீஸ்வரனின் கூட்டாளிகளை வளைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இன்னும் 2, 3 நாட்களில் அவர்கள் போலீஸ் வலையில் சிக்குவார்கள் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து விட்டதாகவும் வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே இலங்கைக்கு தொடர்ந்து ஆயுதக் கடத்தல் நடந்து வருவதால் அந்த ஆயுதங்கள் எங்கிருந்துப யாரால்ப சேகரித்து அனுப்பப் படுகிறது என்பது பற்றியும் இன்னொரு தனிப்படை போலீசார் ரகசியமாக விசா ரணை நடத்தி வருகிறார் கள்.
மேலும் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் ராமேசுவரம் கடற்கரையை ஒட்டியுள்ள முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி, மண்டபம் மற்றும் இயற்கை அரண்களான கடற்கரை காட்டுப்பகுதிக்குள் எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேக மும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே ராமேசுவரம் பகுதியில் எங்காவது ஆயுதக்குவியல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதாப என்பதை கண்டுபிடிக்க உளவுப் பிரிவு போலீசார் ரகசிய மாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆயுதக்குவியல் கண்டு பிடிக்கப்பட்டாலோ அல்லது முத்தீஸ்வரன் கும்பலை சேர்ந்தவர்கள் யாராவது பிடிபட்டாலோ இதுபற்றிய முழு விவரம் தெரிய வரும். இதற்காக அனைத்து பிரிவு போலீசாரும் அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
கடலோரக் காவல் படைக்கு “உளவு’ சொன்ன விடுதலைப் புலிகள்?
சென்னை, பிப். 17: இந்தியக் கடலோரக் காவல் படைக்கு, விடுதலைப் புலிகள் “உளவு’ கூறியது அம்பலமாகியுள்ளது.அது, இலங்கை ராணுவத்தினர் ரேடாரில் தங்களது படகை நெருங்கி விட்டதை அறிந்த விடுதலைப் புலிகள், அவர்களிடம் சிக்கி விடாமல் இருக்கவே இந்தியக் கடலோரக் காவல் படைக்கு “உளவு’ கூறியதாகக் கூறப்படுகிறது.இதன் அடிப்படையிலேயே இந்தியக் கடலோரக் காவல் படையினர் “ரமாதேவி’ என்ற படகின் மூலம், இந்தியப் பெருங்கடலின் பாக் நீரிணை பகுதியில் நின்று கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகைப் பறிமுதல் செய்துள்ளதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அச்சமயத்தில், விடுதலைப் புலிகள் படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று மாநில உளவுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
“இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வெடிபொருள்கள் கடத்துவதற்கு, தமிழகத்தை ஒரு வழித்தடமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இதற்கு அகதிகளாக வரும் இலங்கைத் தமிழர்கள் உதவியாக உள்ளனர்’ என்று உளவுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவினர் மிகவும் அதிநவீன படகுகளை வைத்துள்ளனர். அவர்களின் படகு 100 கடல் மைல் வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது. ஆனால், இந்தியக் கடலோரக் காவல் படையிடம் உள்ள படகின் வேகம் 60 கடல் மைல் கொண்டது. மேலும் தங்களை யாராவது நெருங்கும் பட்சத்தில் எதிரியை அழித்து விட நினைப்பார்கள். அல்லது தாங்களே உயிரை மாய்த்துக் கொள்வர்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஒரு படகை இழப்பது என்பது மிகுந்த பொருட் செலவை ஏற்படுத்தும். அந்தக் காரணத்தினால் தான் இந்தியக் கடலோரக் காவல் படைக்கு உளவு சொன்னதாகத் தெரிகிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதே சமயத்தில் இந்தியாவில் உள்ள நக்சலைட், மாவோயிஸ்டுகள் தீவிரவாதத்தை விட்டு மெல்ல விலகி ஜனநாயகப் பாதையில் கவனம் செலுத்த முன்வந்துள்ளனர். எனவே, அவர்களிடம் உள்ள ஆயுதங்கள், விடுதலைப் புலிகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றனவா என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
காவலில் வைத்து விசாரிக்க முடிவு: விடுதலைப் புலிகள் கைது வழக்கு, கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்களைக் காவலில் வைத்து விசாரிக்க “கியூ’ பிரிவு போலீஸôர் முடிவு செய்துள்ளனர்.
Dinamani Editorial – Feb 23 2007தன்னைத்தான் காக்க
ஆயுதம் தயாரிக்க உதவும் பொருள்களை இலங்கைக்குக் கடத்தியதாக ஒரு சிலரை தமிழகக் காவல்துறை கைது செய்துள்ளது.
இவை விடுதலைப் புலிகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டவை என்பதும் உறுதியாகியுள்ளது. சிலதினங்களுக்கு முன்பு தமிழகக் கடலோரப் பகுதியில் பயங்கர வெடிபொருள்களுடன் கடற்புலிகளின் படகு பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகளின் உதவியும் புலிகளுக்கு இருக்கிறது என்பதை ராக்கெட் லாஞ்சர்கள் விவகாரம் உறுதிப்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுக்கான ஆயுதம் கடத்தும் பூமியாகத் தமிழகத்தை மாற்றிவிட்டனர் என்று எதிர்க்கட்சிகளும் சில பத்திரிகைகளும் குறை கூறியுள்ளன.
இந்நிலையில், பிப்ரவரி 18-ம் தேதி கடற்படை நிகழ்ச்சியொன்றில் பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, “தெரியவந்திருப்பது பனிப்பாறையின் முனை மட்டுமே. தெரியவராத இதுபோன்ற ஆயுதக் கடத்தல்கள் அதிகமானவை’ என்று கூறியுள்ளார். இது தமிழகத்தின் மீதான மறைமுகக் குற்றச்சாட்டு என்றே கருதப்படுகிறது.
இலங்கையில் விடுதலைப் புலிகளின் வசமிருந்த பல பகுதிகள் தற்போது இலங்கை ராணுவத்தின் கைக்கு வந்துள்ளன. புலிகள் தங்கள் பலத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர முயற்சி செய்கின்றனர். அதற்கான போர் ஆயத்தம்தான் இந்த ஆயுதக் கடத்தல்கள்.
புவியியல் ரீதியாக, விடுதலைப் புலிகளால் ஆயுதம் கடத்தக்கூடிய வழி- தரைவழி என்றால் தமிழகம்; கடல்வழி என்றால் தமிழகக் கடற்கரை. இதைத் தவிர வேறு வழியே இல்லை.
இந்தக் கடத்தலில் ஈடுபடுவோரைக் காட்டிலும், இவர்களை பின் நின்று இயக்கும் முக்கிய நபர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான். புலிகளின் ஊடுருவல் உள்ளதா என்பதைக் கண்டறிய கடலோரக் கிராமங்களில் சோதனை நடத்துவதாகத் தமிழகக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் இல்லை.
இலங்கைத் தமிழர்கள் மீது தமிழர்கள் என்ற முறையில் தமிழ்நாடு காட்டும் கருணை வேறு; விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு என்பதைப் புரிந்துகொண்டு அவற்றின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் கடமை வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.
எந்தப் பிரச்சினைக்கும் ஆயுதப் போராட்டம் மட்டுமே தீர்வாக அமைய முடியாது. பேச்சுவார்த்தை மூலம் எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. மேலும் எந்த நடவடிக்கையும் அப்பாவி மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்.
அதேநேரத்தில், “தமிழக மண்ணில் உங்கள் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி தமிழகத்தைக் குற்றவாளி ஆக்காதீர்கள்’ என்று இங்குள்ள அரசும், தமிழக மக்களும் புலிகளைக் கேட்டுக்கொண்டால் அது யாரும் மறுக்க முடியாத நியாயமாக இருக்கும்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டமே இல்லை என்றே வைத்துக் கொண்டாலும், இன்று ஆயுதக் கடத்தல் உதவிகளைச் செய்து கொண்டிருப்போர், நாளை வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும் உதவுகின்ற ஆயுத வியாபாரிகளாக மாறும் ஆபத்து உள்ளது.
மேலும், 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையினால் தமிழகம் தேவையில்லாமல் ஒரு பழியை ஏற்க நேரிட்டது. மீண்டும் அதே சூழல் உருவாகக் கூடாது என்பதே தமிழகத் தமிழர்களின் விருப்பமாக இருக்க முடியும்.
அரசியல்வாதிகளுக்கு கருணாநிதி எச்சரிக்கை: புலிகளுடன் தொடர்பிருந்தால் கடுமையான நடவடிக்கை
சென்னை, பிப். 24: விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைப் புலிகளின் ஆயுதங்களுக்குத் தேவையான அலுமினியத்தை வழங்கும் தொழிற்சாலை ஒன்றை மதுரையில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் காரணமாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் சிங்கள ராணுவத்தால் கொடுமைப் படுத்தப்படுகிற அல்லது கொல்லப்படுகிற அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் குறிப்பாக திராவிடர் கழகம் போன்றவை கேட்டுக் கொள்கின்றன.
இவ்வாறு கேட்டுக்கொள்வதற்கும் விடுதலைப் புலியினருக்கு ஆயுத விநியோக இடமாக தமிழகத்தைப் பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை இன்றைய தமிழக அரசு உணராமல் இல்லை. ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், கண்காணிக்கப்படுகிறார்கள்.
அத்தகைய ஆயுதங்களை தாங்கி வரும் படகுகளும் கைப்பற்றப்படுகின்றன. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டும் உள்ளன. தமிழகத்து அரசியல்வாதிகளுடைய ரகசிய கூட்டு இருக்குமேயானால் அவைகளும் கண்டுபிடிக்கப்பட்டு தயவு தாட்சண்யமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டு மக்களும் தமிழக அரசும் இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு விடுக்கின்ற வேண்டுகோள்களையும் எடுக்கும் நடவடிக்கைகளையும் இந்தியாவில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள இதுபோன்ற காரியங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி என்று எவரும் தவறாகக் கருதிக் கொண்டு செயல்படக் கூடாது.
நாட்டு நலனையும் பாதுகாப்பையும் அதற்காக மத்திய அரசு எடுக்கின்ற தேவையான நடவடிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் தலையிடும் என்று யாரும் கனவு காண வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கடத்தவில்லை – த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்
 |
 |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் |
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்களையும், ஆயுதம் தயாரிக்கும் பொருட்களையும் விடுதலைப் புலிகள் கடத்தவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சென்னையில் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்காக தமிழகத்தில் இருந்து ஆயுதங்களைத் தயாரிக்கக் கூடிய மூலப் பொருட்களை கடத்தும் முயற்சிகள் சிலவற்றை தாம் முறியடித்துள்ளதாக, இந்திய கடற்படையும், கடலோறக் காவற் படையும் கூறிவருகின்றன. இலங்கைக்கு கடத்தப்பட விருந்த மூலப் பொருட்கள் பல கைப்பற்றப்பட்டன.
ஆனால் இந்த சம்பவங்களுக்கு விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதை விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு ப தமிழ்ச்செல்வன் தன்னிடம் நேரடியாகத் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் பல பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், பல ஆண்டுகளாக கடத்தல் நடைபெற்றுவருவதாகத் தெரிவித்த சிவாஜிலிங்கம், இப்பொருட்கள் தென் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவித்தார்.