மருந்துகளில்கூட போலியா?
மருந்துகளில்கூட போலியா என்று, விவரம் தெரிந்தவர்கள் கேட்க மாட்டார்கள்; ஆனால் எந்த அளவுக்குப் போலி என்று யாருக்கும் தெரியாது.
உலக சுகாதார ஸ்தாபனம் என்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு (டபிள்யு.எச்.ஓ.) இந்தியாவில் புழங்கும் மருந்துகளில் 35% போலி என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது. இது உண்மைதானா என்று ஆராய மத்திய அரசு தீவிர முடிவெடுத்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருப்பது வயிற்றில் பாலை வார்க்கிறது.
இத்தகைய குற்றச்சாட்டுகளை ஆராயாமல் விடக்கூடாது என்று தீர்மானித்துள்ள அன்புமணி, அதற்காக 5 கோடி ரூபாயைத் தனியே ஒதுக்கியிருக்கிறார். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் தயாரிக்கப்படும், விற்கப்படும் மருந்துகளின் 3 லட்சம் மாதிரிகளை எடுத்து மத்திய, மாநில ஆய்வுக்கூடங்களில் சோதித்துப் பார்க்க உத்தரவிட்டிருக்கிறார்.
மருந்துகளின் தரம், விலை ஆகியவற்றை நிர்ணயிக்கவும் கண்காணிக்கவும், “மத்திய மருந்து ஆணையம்’ என்ற அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற மசோதா தயாராகிவிட்டது. இது இப்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் இருக்கிறது. இதை நாடாளுமன்றம் ஏற்று சட்டமாகிவிட்டால், எல்லா மருந்து, மாத்திரைகளும் மத்திய, மாநில அரசுகளின் ஆய்வகங்களில் தொடர்ந்து சோதிக்கப்படும்.
கலப்படமோ, தரக்குறைவோ கண்டுபிடிக்கப்பட்டால் மருந்து உற்பத்தியாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். புகாரின்பேரில் போலீஸ்காரரே வழக்குப் பதிவு செய்து மருந்து உற்பத்தியாளர் மீது நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றங்களை நிறுவவும் அரசு உத்தேசித்துள்ளது.
இதற்காக மத்திய, மாநில அரசுகளின் ஆய்வகங்களை நவீனப்படுத்தி விரிவுபடுத்தவும், ஆய்வக ஊழியர்களுக்கு நவீன பயிற்சிகளை அளித்து, அதிக எண்ணிக்கையில் பணியில் அமர்த்தவும், மருந்து-மாத்திரைகளைக் கடைகளில் சோதிக்க அதிக எண்ணிக்கையில் மருந்து ஆய்வாளர்களை நியமிக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆர்.ஏ. மஷேல்கர் தலைமையிலான நிபுணர் குழு ஏற்கெனவே இந்த விஷயத்தை ஆராய்ந்தது. இந்தியாவில் உற்பத்தியாகும் மருந்து-மாத்திரைகளில் 10% தரக்குறைவானவை, 1% கலப்படமானவை என்று அந்தக்குழு அறிக்கை அளித்திருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.3,500 கோடிக்கு மருந்து மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
டாக்டர்கள், நுகர்வோர், அதிகாரிகள், மருந்து விற்பனையாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் இணைந்து அக்கறையுடன் செயல்பட்டால், வெறும் லாப நோக்கத்துக்காக மருந்து தயாரிப்பில் ஈடுபடும் போலி நிறுவனங்களை விரட்டி விடலாம்.
விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கையின் கீழ் இப்போது 74 மருந்துகள் உள்ளன. இந்த வகையில் மேலும் 354 மருந்துகளைக் கொண்டுவர உரம், ரசாயனங்கள் துறை அமைச்சகம் உத்தேசித்துள்ளது. ஆனால் இதை மத்திய திட்டக்குழுவின் ஓர் பிரிவு எதிர்க்கிறது. இப்படிச் செய்தால் தொழில்முனைவோர் இத்துறையில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள் என்று எச்சரிக்கிறது. எந்த வியாபாரியும் சமுதாய நோக்கிலோ, சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவோ மருந்துகளைத் தயாரிப்பதில்லை என்பது உண்மைதான் என்றாலும், வெறும் லாப நோக்கு மட்டுமே உள்ளவர்களை இந்தத் துறையில் அனுமதிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.
எந்தக் காலத்திலும் ஏழைகளால் வைத்தியச் செலவைத் தாங்க முடியாது என்பதைக் குறிக்க, “”ஏழைக் குடும்பம்-ராஜ வைத்தியம்” என்ற பழமொழியே உண்டு. எனவே தரம், விலை ஆகியவை தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைள் வரவேற்கத்தக்கவை. அதற்கு மக்களுடைய ஆதரவு என்றும் உண்டு.