தென் சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரூ.58 கோடியில் 4 புதிய மேம்பாலங்கள்: ஸ்டாலின் அறிவிப்பு
|
|
The project is expected to ease congestion at the junctions of Turnbulls Road and Chamiers Road, North Usman Road and Kodambakkam High Road, G.N. Chetty Road and Thirumalai Road and Usman Road and Duraisamy Road with two-way flyovers.
சென்னை, மார்ச் 5: சென்னையில் ரூ. 58.5 கோடியில் கட்டப்பட உள்ள நான்கு புதிய மேம்பாலங்களுக்கு பத்து நாளில் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்ட உள்ளதாக உள்ளாட்சி அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
மேம்பாலம் கட்டப்பட உள்ள தி.நகர் உஸ்மான் சாலை -துரைசாமி சாலை சந்திப்பு, கோபதி நாராயணா சாலை -திருமலை சாலை சந்திப்பு, வடக்கு உஸ்மான் சாலை -எம்.ஜி.ஆர். சாலை சந்திப்பு, முத்துராமலிங்கம் சாலை -டர்ன்புல் சாலை சந்திப்பு ஆகிய இடங்களை தமிழக உள்ளாட்சி அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியது:
இந்த நான்கு மேம்பாலங்களையும் கட்டுவதற்கு கேமன் இந்தியா என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலங்கள் 15 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். இவை அனைத்தும் இருவழிப் பாதையாக அமையும். நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் மேம்பாலம் கட்டும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாது.
பனகல் பூங்காவில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தைக் கட்டுவது குறித்து சி.எம்.டி.ஏ. வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பசும்பொன் முத்துராமலிங்கம் சாலை -டர்ன்புல் சாலை சந்திப்பில் கட்டப்படும் மேம்பாலம் 646 மீட்டர் நீளமும் 7 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். மதிப்பீட்டுத் தொகை ரூ. 12.5 கோடி. இதன் மூலம் ஆழ்வார்பேட்டை, கோட்டூர்புரம், சி.ஐ.டி. நகர், நந்தனம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.
வடக்கு உஸ்மான் சாலை -டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை சந்திப்பில் கட்டப்படும் மேம்பாலம் 464 மீட்டர் நீளமும் 7 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். மதிப்பீட்டுத் தொகை ரூ. 9.72 கோடி. இதன் மூலம் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம், தி.நகர் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.
தி.நகர் வாணிமஹால் அருகே கோபதி நாராயணா சாலை -திருமலை சாலை சந்திப்பில் கட்டப்படும் மேம்பாலம் 505 மீட்டர் நீளமும் 14 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். இதன் மதிப்பீட்டுத் தொகை ரூ. 16.5 கோடி. இதன் மூலம் தி.நகர், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.
உஸ்மான் சாலை -துரைசாமி சாலை சந்திப்பில் கட்டப்படும் மேம்பாலம் 789 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். இதன் மதிப்பீட்டுத் தொகை ரூ. 19.8 கோடி. இதன் மூலம் தி.நகர், கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என்றார் அவர்.