பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப்உல்மர் சாவில் மர்மம் நீடிப்பு
கிங்ஸ்டன், மார்ச். 19-
உலககோப்பை போட்டி யில் அயர்லாந்திடம் தோல்வி அடைந்ததன் மூலம் பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. இது பாகிஸ்தான் அணிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. கேப்டன் இன்சமாமும், பயிற்சியாளர் பாப்உல்மரும் வேதனையுடன் காணப் பட்டனர்.
இரவு அனைவரும் தூங்க சென்றனர். பாப்உல்மர் அவரது அறையில் தனியாக தங்கினார். அங்கு அவர் வாந்தி எடுத்த நிலையில் தரையில் மயங்கி கிடந்தார். முக்கில் ரத்தம் வடிந்தது. உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் தோல்வியுடன் வேதனையில் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில் பாப்உல்மர் மரணம் அடைந்தது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர் சாவு இயற்கையானதா? அல்லது வேறு காரணமாக இருக்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அணி தோற்றால் முழு பொறுப்பும் பயிற்சியாளர் தலையில்தான் விழும். எனவே மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாகிஸ்தான் அணி இந்தியா வந்த போது பாகிஸ்தான் வீரர் அக்தர், பாப்உல்மரை தாக்கியதாக புகார் எழுந்தது. அதே போல நேற்று பாப் உல்மருக்கும் வீரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வீரர்கள் அவரை தாக்கி இருக்கலாம். இது மரணத்தில் முடிந்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
பாப்உல்மர் மரணத்திற்கு அவருக்கு ஏற்கனவே இருந்த நோய்தான் காரணமாக இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் நாசிம் அஷரப் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:- பாப் உல்மர் தனது உடல் நிலை குறித்து என்னிடம் கூறிஇருந்தார். அவர் நீரழிவு நோயுடன் பல்வேறு உடல் உபாதை நோயினாலும் அவதிபட்டு வந்தார். தூங்கும் போது மூச்சுவிடுவதில் பிரச்சினை இருந்தது. எனவே முகத்தில் துணியை கட்டி தூங்கும் பழக்கத்தை வைத்து இருந்தார். எனவே இது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம்.
அவரது மறைவு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பால்உல்மர் உடல் ஐமைக்கா வில் உள்ள கிங்ஸ்டன் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. மரணத் திற்கான இறுதியான காரணம் குறித்து இன்னும் டாக்டர்கள் தெரிவிக்கவில்லை. நீரழிவு மற்றும் மூச்சுதிணறல் காரண மாக இறந்து இருக்கலாம் என்று மட்டும் டாக்டர்கள் கூறினார்கள்.
எனவே உண்மையான காரணத்தை முழுமையாக கண்டறிய இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் பின்புதான் உண்மை தெரியும்.
பாப்உல்மருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மனைவி தற்போது தென்ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் இருக்கிறார். அவர் ஜமைக்காவுக்கு புறப்பட்டுள்ளார். அவரிடம் உடல் ஒப்படைக்கப்படும்.
மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எந்த புகாரும் இதுவரை வரவில்லை. மனைவி தரப்பில் இருந்தும் தகவல் எதுவும் வரவில்லை. அவரை வந்து பார்த்த பிறகு ஏதாவது கருத்து கூற வாய்ப்பு உள்ளது.
பாப்உல்மர் மரணத்திற்கு பாகிஸ்தான் அதிபர் முஷரப், பிரதமர் சவுகத் அஜீஷ் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
அவருடன் அடிக்கடி மோதிக்கொண்டிருந்த பாகிஸ்தான் வீரர் அக்தரும் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “பாப்உல்மர் என்னை மகன் போல் பாவித்தார் அணிக்காக தீவிரமாக உழைத்தார்” என்று கூறியுள்ளார்.
முன்னாள் கேப்டன் இம்ரான்கான் கூறும்போது, தோல்விக்கு பால்உல்மர் பொறுக்கு ஏற்க முடியாது. கேப்டன்தான் முழுபொறுப்பு ஏற்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் மோசமாக ஆடியதன் மூலம் பால்உல்மரை கொன்று விட்டனர்” என்றார்.
வீரர்கள் அனைவரும் ஓட்டல் அறைக்கு திரும்பிய பிறகு ஏதோ ஒரு சம்பவம் நடந்து உள்ளது. அது என்ன என்பது மர்மமாக உள்ளது.
===============================================
தோல்வி விரக்தியால் ஊல்மர் தற்கொலை?: கிரிக்கெட் உலகமே துயரத்தில் மூழ்கியது
கராச்சி, மார்ச் 20: ஜமைக்காவில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் ஊல்மர் திடீரென உயிரிழந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“”அவருடைய மரணம் சந்தேகத்துக்குரியது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறியதால் விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார்” என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கராச்சியில் திங்கள்கிழமை வெளியான “ஜேங்’ பத்திரிகை, “ஊல்மர் தற்கொலை செய்துகொண்டிருக்கக் கூடும்’ என்று மே.இ.தீவுகளின் கிங்ஸ்டனில் உள்ள தங்கள் பத்திரிகையின் செய்தியாளர்கள் கூறியிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
“”இருப்பினும் இவ்விஷயம் தொடர்பாக இப்போதே எந்தவித முடிவுக்கும் வர முடியாது. விசாரணைகள் ஆரம்பக் கட்ட நிலையிலேயே உள்ளன” என்று பாகிஸ்தான் அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
துக்கத்தில் பாக். அணியினர்: ஊல்மரின் மரணம், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஒரு குடும்ப உறுப்பினர் போல் ஊல்மர் தங்களுடன் பழகிவந்ததாக அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
“”வீரர்கள் தங்களது அனுபவத்தை பயன்படுத்தி ஆட்டத்தில் வெற்றிக்கனியைப் பறிக்க முடியவில்லை என்றால் அதற்கு பயிற்சியாளர் காரணமில்லை. அவர் மீது குறைகூற முடியாது” என டிவி சேனல் ஒன்றிடம் பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸீம் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
“டான்’, “நியூஸ்’ போன்ற பத்திரிகைகள் ஊல்மரின் மறைவுக்கும், பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்துக்கும் முடிச்சுப் போட்டு செய்திகளை வெளியிட்டன.
“விரக்தி அடைந்த உல்மர் சாவைத் தழுவினார்’ என்று “டான்’ பத்திரிகையும், “அதிர்ச்சித் தோல்விக்குப் பின்னர் ஊல்மர் மரணம்’ என்று “நியூஸ்’ பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளன.
பாக். அணியின் தோல்விக்கு காரணமானவர்கள் என முக்கிய பொறுப்பில் உள்ள பலரையும் குறிப்பிட்டு சில பத்திரிகைகள் தலையங்கமே வெளியிட்டன.
பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் அஷ்ரபின் பெயரும் நிந்தனைக்கு உள்ளாகியுள்ளது.
ஊல்மரின் திடீர் மறைவு பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் கிரிக்கெட் உலகையே துயரத்தில் ஆழ்த்தியது.
பாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப், பிரதமர் ஷெüகத் அஜீஸ் உள்ளிட்ட தலைவர்கள் ஊல்மர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
உலக கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்களும் ஊல்மர் மறைவால் பெரிதும் துயரமடைவதாக தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் மைதானத்தில் ஊல்மர் பயிற்சி அளித்த காட்சிகளை திங்கள்கிழமை பல டிவி சேனல்களும் தொடர்ந்து ஒளிபரப்பின.