புதுமுகங்கள் படையெடுப்பு: முன்னணி நடிகைகள் `மார்க்கெட்’ சரிகிறது
சென்னை, ஜன. 22- தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகள் ஒருசில வருடங்களே தாக்கு பிடிக்கிறார்கள். பிறகு மார்க்கெட் சரிய டி.வி. பக்கம் ஒதுங்குகிறார்கள். சிலர் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போடுகிறார்கள்.
உச்ச நடிகைகளாக வலம் வந்த சிம்ரன், ஜோதிகா, லைலா, ரோஜா, ரம்பா, தேவயானி, மீனா, சோனியா அகர்வால், ஷாலினி உள்ளிட்ட பலர் தற்போது மார்க்கெட்டில் இல்லை. சிலர் திருமணம் செய்து ஒதுங்கி விட்டனர்.
அவர்களுக்கு பிறகு திரிஷா, சினேகா, அசின், நயன்தாரா, சதா, பாவனா, பூஜா, நவ்யா நாயர், கோபிகா, சந்தியா, மாளவிகா என பலர் திரையுலகை கலக்கினர்.
இவர்களில் சிலர் மார்க்கெட் இழந்து உள்ளனர். இன்னும் சிலருக்கு ஒரு சில படங்களே கைவசம் உள்ளன.
திரிஷா பீமாவுக்கு பிறகு அஜீத்துடன் கிரீடம் படத்தில் நடித்து வருகிறார். விஷாலுடன் சத்யம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சினேகா “பள்ளிக்கூடம்” படத்தில் மட்டும் நடிக்கிறார். நயன்தாரா தெலுங்கு பக்கம் ஒதுங்கியுள்ளார். அசினுக்கு “தசாவதாரம்” படம் மட்டும் கைவசம் உள்ளது. ஸ்ரேயாவுக்கு “சிவாஜி”க்கு பின் `அழகிய தமிழ்மகன்’ படம் இருக்கிறது. பாவனா சில படங்களை வைத்துள்ளார்.
புதுமுக நடிகைகள் படையெடுப்பே முன்னணி நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குறைய காரணம் என்று சொல்லப்படுகிறது.
மம்தா, தமண்ணா, ஜோதிர் மயி, இலியானா, அனுஷ்கா, மல்லிகா கபூர், ஷீலா, வேதிகா, ஸ்ருதி, கீரத், காமினி, அதிசயா, பூர்ணிதா, கீர்த்தி சாவ்லா, கார்த்திகா, பானு, கமாலினி முகர்ஜி, தீபா, ரெஜினா, ஆன்ட்ரீயா, உதயதாரா என முப்பதுக்கும் மேற்பட்ட புது முக நடிகைகள் ஒன்றிரண்டு படங்களை கைவசம் வைத்துள் ளனர். இதனால் முன் னணி நடிகைகளுக்கு வாய்ப்பில்லாமல் போய் உள்ளது.
ஏற்கனவே ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்த ரேணுகாமேனன், மீராவாசு தேவன், நந்திதா, சாயாசிங், குட்டி ராதிகா, பத்மபிரியா, தியா, சிந்துதுலானி, குத்து ரம்யா, கஜாலா, ராதிகா சவுத்ரி, திவ்யா உண்ணி, கனிகா, அபிதா, ஸ்ரீதேவிகா, மோனிகா, ஷெரீன், சூஸன் உள்ளிட்ட பலர் வாய்ப்பின்றி உள்ளனர்.