தரநிர்ணய அளவுகோல்
மக்கள் சீக்கிரத்தில் மறந்து போகிறார்கள். அரசியல் என்று மட்டுமல்ல. எல்லா விஷயங்களிலும் இதே நிலைதான்!
கோக-கோலா, பெப்ஸி பானங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் நச்சுப்பொருள் எச்சம் உள்ளது என்று 2003-ல் அறிவியல்-சுற்றுச்சூழல் மையம் அறிக்கை வெளியிட்டது. அப்போது அந்த மென்பானங்களுக்கு எதிராகப் பலத்த போராட்டங்கள் நடந்தன; எல்லாரும் மென்பானங்களை உடைத்தனர். பின்னர் மீண்டும் நினைவுபடுத்தியது. மீண்டும் உடைத்தார்கள். மீண்டும் மறந்தார்கள்.
கோக-கோலா பானத்துக்கு கேரள அரசு விதித்த தடையை நீக்கிய கேரள உயர்நீதிமன்றம்,””தயாரித்து விற்பனைக்குத் தயாராக உள்ள பொருள்களில் (ஃபினீஷ்டு புராடக்ட்) நச்சுப்பொருள் எச்சத்தைச் சோதிக்கும் தரநிர்ணய அளவுகோல்களை இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (பி.ஐ.எஸ்.) சொல்லியிருக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.
2003-ல், இப்பிரச்சினை எழுந்தபோது, மென்பானங்கள், ஜூஸ் மற்றும் இதர பானங்களில் நச்சுப்பொருள் மற்றும் பாதுகாப்புத் தரநிர்ணயம் குறித்து பரிந்துரைக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பரிந்துரையின்படியே அறிவியலாளர் குழுவும் பி.ஐ.எஸ் அதிகாரிகளும் பங்கேற்ற பல அமர்வுகளுக்குப்பின் அக்டோபர் 2005-ல் மைசூரில் நடந்த கூட்டத்தில் மென்பானங்களுக்கான (கார்பனேட்டட் பீவரேஜ்) தரநிர்ணயம் இறுதிவடிவம் பெற்றது. ஆனால், “வேறுபல தகவல்களையும் சேகரிக்க வேண்டும் என்பதால் முடிவைத் தள்ளிப்போடுங்கள்’ என மத்திய அரசு கூறியதால் தரநிர்ணயம் தீர்மானிக்கப்படவில்லை.
முடிவுகளை ஏன் தள்ளிப்போட வேண்டும்? இது மக்களின் உடல்நலன் குறித்தது அல்லவா! இதைப் போராட்டம் நடத்திய எவரும் கேட்டதாகத் தெரியவில்லை. மக்களுக்கு விஷயங்களை நுட்பமாகப் பார்க்கத் தெரிவதில்லை. இந்த வரிசையில், நம் உணவுப் பொருள்களில் உள்ள நச்சு பற்றியும்கூட யாரும் கவனிப்பதில்லை.
வெண்ணெய் நீக்கப்பட்ட பால் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பால் நிறுவனங்கள் கலக்கும் ரசாயனப் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது என்று ஆய்வுத் தகவல்கள் எச்சரித்தன. ஆனால் அதுபற்றி யாரும் பேசுவதில்லை.
அரிசி, பருப்பு, காய்கறிகளிலும் பூச்சிமருந்து எச்சங்கள் இருக்கின்றன. அதற்காக ஒரே நாளில் இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப முடியாது என்று வாதிடலாம். ஆனால் அதை நோக்கிய முயற்சிகளில் முனைப்பும் ஊக்கமும் நிச்சயம் வேண்டும். இடையில், பூச்சி மருந்துகளைக் கட்டுப்படுத்தவும், நஞ்சின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் முடியும்.
தமிழகத்தில் பவானியிலும் பாலாற்றிலும் சாயப்பட்டறை மற்றும் தோல் தொழிற்கூடங்களால் நீரே நஞ்சாகிக் கிடக்கிறது. மென்பானங்களைவிட அதிக நச்சுப்பொருள் இந்த ஆற்று நீரில் உள்ளது. இதைத்தான் குளோரின் கலந்து குடிநீராகத் தருகிறது நம் அரசு.
குடிநீர், அரிசி, பருப்பு, பால் ஆகிய இன்றியமையா உணவுப் பொருள்களில் அனுமதிக்கப்பட்ட நச்சுப்பொருள் எச்சம் எவ்வளவு இருக்கலாம் என்கிற தரநிர்ணயம் இன்றைய அவசியத் தேவை. இத்தகைய தர நிர்ணயத்தால் விலை அல்லது வரி கூடுதலாகலாம். ஆனால் நச்சுப்பொருள் எச்சத்தால் ஏற்படும் நோய்களுக்காக நாம் செலவிடுவதைக் காட்டிலும் குறைவாகத்தான் இருக்கும்.
மென்பானங்களை எப்போதும் எந்நேரமும் நாம் குடித்துக் கொண்டிருப்பதில்லை என்று சமாதானம் கூறிக் கொள்வோர் இருக்கலாம். ஆனால், குடிநீர், அரிசி, பால், பருப்பு இவை நம் அன்றாட வாழ்வாதாரம் என்பதை மறந்துவிடக் கூடாது.