Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Sleep’ Category

Q&A with Doctor on Shoulder Pain – Medical Options (Dinamani Kathir)

Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007

இது புதுசு: முதுகு வலிக்கு இனி முற்றுப்புள்ளி!

ந.ஜீவா

மூக்குள்ளவரை சளி இருக்கும் என்பார்கள்.

இனி முதுகு இருக்கும் வரை முதுகு வலி இருக்கும் என்று சொல்வார்கள் போலிருக்கிறது.

அந்த அளவுக்கு முதுகுவலி இன்றைய நவீன உலகில் பரவலான நோயாகிவிட்டது. அதுவும் நாள் முழுக்க நாற்காலியைத் தேய்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு முதுகுவலி உடன்பிறவா சகோதரன் போல ஆகிவிட்டது. அலுவலகத்திற்கு லீவு எடுப்பவர்கள் பலமுறை பாட்டியைச் சாகடித்த பின்னால் இப்போது சொல்லக் கண்டுபிடித்திருக்கும் லேட்டஸ்ட் காரணம், “”பேக் பெயின் தாங்க முடியலை சார். டாக்டர்ட்ட போகணும்.”

முதுகுவலி பிரச்சினையை ஆப்ரேஷன் இல்லாமல், ஊசி, மருந்து, மாத்திரை இல்லாமல் தீர்க்க வந்திருக்கிறது ஓர் அதிசய இயந்திரம். ஆசியாவிலேயே… அதுவும் இந்தியாவிலேயே… முதன்முறையாக ஹைதராபாதிலும் இப்போது சென்னையிலும் வந்திருக்கிறது. முதுகுவலி பற்றியும் அந்த இயந்திரத்தின் “மகிமை’ பற்றியும் நம்மிடம் விரிவாகப் பேசினார் சென்னை அண்ணாநகர் தி பேக் அன்ட் நெக் கிளினிக்கைச் சேர்ந்த டாக்டர் ஹரிஹரன்.

முதுகு வலி இன்று பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு என்ன காரணம்?

இன்றைக்கு 13 வயது குழந்தை முதல் 60 வயது தாத்தா வரை முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். இதற்குக் காரணம் உடலுழைப்பு இல்லாததே.

என்னுடைய தாத்தா 10 மைல் 15 மைல் என்றாலும் நடந்தேதான் பள்ளிக்குப் போய் படித்தார். வேலைக்கும் போய்வந்தார். என்னுடைய அப்பா சைக்கிளில்தான் எப்போதும் சென்றார். நான் ஒரு கி.மீ. தூரம் என்றாலும் நடந்து செல்லாமல் வாகனங்களில்தான் சென்றேன். உடல் உழைப்பு இவ்வாறு படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது.

கிராமப்புறங்களில் நாள் முழுக்க குனிந்து நடவு செய்யும் பெண்களுக்கு முதுகுவலி வருவது கிடையாது. அரிசி குத்துவதும், ஆட்டுரலில் மாவு அரைப்பதும், ஏன் அம்மியில் மிளகாய் அரைப்பதுமே இல்லாமற் போய்விட்டது. இவ்வாறு உடல் உழைப்பு இல்லாததே முதுகுவலி வர முக்கியக் காரணம்.

உடல் உழைப்பு எதுவும் செய்யாமல் நாம் முதுகை இன்சல்ட் பண்ணுகிறோம். பதிலுக்கு முதுகு நமக்குத் தொல்லை கொடுக்கிறது.

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி வராமல் இருக்க அதற்கெனச் சேர்கள் தயாரிக்கப்படுகின்றன. இருந்தாலும் இதனால் பெரிய அளவுக்குப் பயனில்லை. ஏனெனில் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் எப்போதும் முதுகைப் பொருத்தமாகச் சாய்த்து வைத்திருப்பது கிடையாது. பல நேரங்களில் சீட்டின் நுனியில் உட்கார்ந்துதான் வேலை செய்கிறார்கள். இதனால் முதுகு வலி மட்டுமல்ல, கழுத்து வலியும் சேர்ந்து வரும்.

நமது மூளையில் இருந்து வரும் நரம்புகள் தண்டுவடம் என்கிற பெயருடன் முதுகெலும்பின் உள்ளே இருக்கின்றன. இந்த முதுகு எலும்பு 33 சிறிய எலும்புகளால் ஆனது. இந்த எலும்புகள் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். இரண்டு எலும்புகளுக்கு இடையே மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் இருக்கிறது. தண்டுவடம் முதுகு எலும்பின் நடுவில் பாதுகாப்பாக இருக்கிறது. இந்த நரம்புகள் இரண்டு குட்டி எலும்புகளுக்கு நடுவில் இருந்து வெளியேறுகின்றன. இந்த நரம்புகள்தான் தோள்பட்டை முதல் கால்கள் வரை உள்ள அனைத்துத் தசைகளையும் இயக்குகின்றன.

30 – 40 வயதுள்ளவர்களுக்கு ஜவ்வில் நரம்புகள் உராயும். அதனால் கழுத்தின் பின்பக்கத்தில் தாங்க முடியாத வலி ஏற்படும். கால்களில் வலி ஏற்படும். கால்கள் மரத்துப் போகும்.

50 – 60 வயதுள்ளவர்களுக்கு முதுகு எலும்புகள் ஒரு எலும்பிற்கு மேல் இன்னொரு எலும்பு ஏறிக் கொள்ளும். இதனால் இந்த இரண்டு எலும்புகளையும் இணைக்கும் ஊஹஸ்ரீங்ற் த்ர்ண்ய்ற் லூஸ் ஆகி உடைந்து போய்விடும். இதனால் நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு, கடுமையான வலி உண்டாகும்.

சிலருக்கு வேறு ஏதாவது ஆப்ரேஷன் செய்வதற்காக மயக்க ஊசியை முதுகில் போடுவார்கள். இந்த ஊசி முதுகில் உள்ள டிஸ்க்கில் பட்டுவிட்டால், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு வலி இருக்கும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்குக் குழந்தையின் வெயிட் அதிகமாவதால் முகுகெலும்பில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் முதுகெலும்பு ஜவ்வில் நரம்பு அழுந்தும். வலி ஏற்படும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நிறைய ரத்த இழப்பு ஏற்படும். இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. ரத்தம் செல்வது குறைவாக இருப்பதால் முதுகில் வலி ஏற்படும். இப்படி முதுகுவலிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

முதுகுவலிக்கு என்ன சிகிச்சை?

பல்வேறு காரணங்களால் முதுகு வலி வந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் சென்றால், முதலில் பெட் ரெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். பிஸியோதெரபி வைத்துக் கொள்ளலாம் என்பார்கள். இடுப்பில் பெல்ட் (ட்ரேக்ஷன்) போட்டுக் கொள்ளலாம் என்பார்கள். வலி தெரியாமல் இருக்கவும் உடலுக்கு ஊக்கம் தரவும் ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடச் சொல்வார்கள். கடைசிக்கும் கடைசியாக ஆப்ரேஷன் பண்ணச் சொல்வார்கள். ஸ்டீராய்டு மாத்திரைகள் அந்த நேரத்தில் வலியைக் குறைத்தாலும் மீண்டும் வலி வந்துவிடும். தவிர இந்த மாத்திரைகள் உடலுக்கு மிகவும் தீங்கானவை.

ஆனால் இம்மாதிரி ஊசி, மருந்து, மாத்திரை, ஆபரேஷன் என்ற வழக்கமான மருத்துவம் எதுவுமில்லாமல் முதுகுவலியை இப்போது தீர்க்க முடியும்.

அது எப்படி?

முதுகு வலி பிரச்னையைத் தீர்க்க வந்திருப்பதுதான் ஈதல9000 என்ற இயந்திரம். சுமார் எண்பத்து ஐந்து லட்சம் மதிப்புள்ள இந்த இயந்திரத்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறோம்.

இந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதின் பின்னணி சுவையானது. இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர்கள் அமெரிக்காவில் உள்ள நாசா விஞ்ஞானிகள்தாம்.

விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆறுமாதம் ஒரு வருடம் என்று போகிற விண்வெளி வீரர்களை அவர்கள் திரும்பி வந்ததும் பரிசோதித்துப் பார்த்தார்கள். அப்போது அவர்களுடைய முதுகு எலும்பு ஓர் அங்குலம் வரை வளர்ந்திருப்பது தெரிய வந்தது. இதற்குக் காரணம் புவியீர்ப்பு விசை விண்வெளியில் இல்லாததும், அங்கு நிலவும் குறை மண்டல அழுத்தமும்( Negative Pressure)தான். இந்தக் குறை மண்டல அழுத்தமானது முதுகின் மேல் உள்ள தசைநார்களை விரிவடையச் செய்கிறது. காய்ந்து சுருங்கிய நிலையில் உள்ள டிஸ்க்குகளைப் பதப்படுத்தி விரிவடையச் செய்கிறது. இதை அடிப்படையாக வைத்து இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் எவ்வளவு நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்?

டிஆர்எக்ஸ் 9000 இயந்திரத்தில் 20 நாட்களில் இருந்து ஒரு மாதம் வரை சில நிமிடங்கள் ஒருவர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஜவ்வுப் பகுதி விரிவடைகிறது. ஜவ்வுப் பகுதியில் அழுத்திக் கொண்டு இருக்கும் வலிக்குக் காரணமான நரம்புகள் விடுபடுகின்றன. இதனால் முதுகு வலி அடியோடு போய்விடுகிறது.

இந்த சிகிச்சை செய்ததற்குப் பின் திரும்பவும் ஜவ்வு, தசைகள் சுருங்கி மீண்டும் முதுகு வலி வராதா?

இந்தச் சிகிச்சையின் போது நாங்கள் தசைகள் இறுகவும் மீண்டும் பழைய நிலையை அடையாமல் இருக்கவும் உடற்பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்கிறோம். அந்த உடற்பயிற்சியைத் தினமும் தவறாமல் செய்வதால் முதுகு வலி திரும்பவும் வரவே வராது.

முதுகு வலிக்காக ஏற்கனவே ஆபரேஷன் செய்தும் வலி தீராதவர்கள் எங்களிடம் சிகிச்சைக்காக வருகிறார்கள். அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிற இந்த இயந்திரம் இந்தியா உட்பட 16 நாடுகளில்தான் உள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் சென்னையில் முதன்முதலாக எங்களிடம்தான் இருக்கிறது.

Posted in Auto, Backpain, Bed, Bike, Bodyache, Chat, Comfort, Computer, Deskjob, Diet, Doc, Doctor, Driver, Exercise, Injury, Interview, Long distance, medical, Medicine, Options, Pain, Pillow, Posture, Seating, Shoulder, Sleep, Sofa, Software, Spinal, Traction, TV, Two-wheeler, Tylenol, Yoga | 2 Comments »

Raman Raja – Circadian rhythm: Sleeping Patterns

Posted by Snapjudge மேல் ஜூன் 8, 2007

நெட்டில் சுட்டதடா…: கொக்கரக்கோவின் கொடுங்கோல் ஆட்சி

ராமன் ராஜா

எஸ்.வி.வி. வாத்தியாருக்கு எங்கள் பள்ளிக் கூடத்தில் “கொடுங்கோல் மன்னன்’ என்று பட்டப் பெயர் உண்டு. படிக்காத பையன்களுக்கு அவர் வழங்கும் பயங்கர அடி உதை, யாவரும் அறிந்ததே. படிக்கிற பையன்களுக்கோ, பள்ளிக் கூடத்துக்கு அப்பாலும் அவருடைய டார்ச்சர் தொடரும். காலை நாலரை மணிக்கெல்லாம் எழுந்து எங்கள் தெரு வழியாகத்தான் ஆற்றங்கரைக்குப் போவார். நான் வீட்டுத் திண்ணையில் பாரசீகப் பூனைக் குட்டி மாதிரி சுருண்டு தூங்கிக் கொண்டிருப்பேன். “”உம், உம். தூங்கினது போதும். எழுந்து படிடா” என்று வாக்கிங் ஸ்டிக்கினால் விலாவில் குத்தி, நான் பாயைச் சுருட்டிக் கொண்டு எழுந்து போகிறேனா கண்காணித்துவிட்டுத்தான் நகர்வார். அவர் குளித்துவிட்டு வரும்போது நான் எட்டு வீட்டுக்குக் கேட்கிற மாதிரி சத்தமாகப் படித்துக் கொண்டிருக்காவிட்டால், அன்றைய தினம் நான் உயில் எழுதி வைத்துவிட்டுத்தான் பள்ளிக்கூடம் போக வேண்டும்.

அதிகாலையில் கோழிகூவும் முன் எழுந்து சுறுசுறுப்பாக வேலை செய்பவர்கள் உலகில் சுமார் பத்துப் பதினைந்து சதவிகிதம். லேட்டாக எழுந்திருந்தாலும் லேட்டஸ்ட்டாக எழுந்திருப்பவர்கள் பதினைந்து முதல் இருபத்தைந்து சதவிகிதம். மற்றவர்களெல்லாம் இரண்டும் கெட்டான் ரகம். சீக்கிரம் எழுந்திருக்கும் சேவற்கோழி டைப் ஆசாமிகளுக்கு ஏ- சமுதாயம் என்று பெயர். நடுநிசி தாண்டின பிறகும் தூங்காமல் ராக்கூத்தடிக்கும் ஆந்தை மனிதர்களுக்கு பி- சமுதாயம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். லாஸ் வெகாஸ், பாரீஸ் போன்ற நகரங்கள் இவர்களுக்காகவே ஏற்பட்டவை. அங்கெல்லாம் காபி கடைகள் முதல் முடிவெட்டும் சலூன் வரை நள்ளிரவு தாண்டியும் கூட்டம் இருக்கும். நான்கூட மாலைச் சூரியன் மேற்கே விழுந்தவுடன்தான் உற்சாகமாக உணர்கிறேன். ராத்திரி மனைவி மக்களையெல்லாம் தூங்க வைத்துவிட்டு வேலை செய்ய உட்காருகிறேன். மின் அஞ்சல்களுக்குப் பதில் “அஞ்சி’ விட்டு பாட்டு கேட்டபடியே புத்தகம் படித்துவிட்டு ராத்திரி ஒரு மணிக்கு நான் தன்னந்தனியே தட்டைச் சீடை சாப்பிடும் ஓசை, இரவின் நிசப்தத்தில் வீடெங்கும் எதிரொலிக்கும்.

பி- சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர் கார்த்திக்குக்கு ஒரு பிரச்சினை: “”என்னுடைய தாத்தா ஒரு விவசாயி. ராத்திரி எட்டு மணியானால் தூங்கிவிடுவார். காலை நாலு மணிக்கு எழுந்து விடுவார். கதிர் அறுத்துப் பரம்படிக்கிற தொழிலுக்கு அதுதான் சரி; சூரியனுக்கு முன்னால் வெள்ளென எழுந்து வேலையைத் துவங்கினால்தான் வெய்யில் ஏறுவதற்கு முன் கரையேறலாம். ஆனால் நானோ, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நவீனப் பொருளாதாரத்தில் வேலை செய்பவன். குழல் விளக்கின் அடியில் கம்ப்யூட்டர் உத்தியோகம் பார்ப்பவனுக்கு ராத்திரியும் ஒன்றுதான், பகலும் ஒன்றுதான். இன்னும் எதற்காக நாம் காலைச் சேவல்களுடன் போட்டி போட வேண்டும்? இருந்தும் பண்டைய ஏ- சமுதாயம் எற்படுத்தி வைத்த பழக்கங்கள், விதிமுறைகள் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. நானும் வேறு வழியில்லாமல் அலாரம் கடிகாரத்தின் ஆணைக்குக் கட்டுப்பட்டு என் வாழ்க்கையை வாழ்கிறேன். கனக்கும் இமைகளும் கண்ணுக்குக் கீழே கரு வளையங்களுமாக, ஸ்டீரிங் வீல் பிடித்திருக்கும் பிரேதம் போல் கார் ஓட்டுகிறேன்” என்று பொருமுகிறார்.

“”சரி என்னதான் செய்ய வேண்டுமென்கிறீர்கள்?” என்று கேட்டால், காலையில் ஒன்பது மணிக்கு மெல்லக் கண் திறந்து, நுரை ரப்பர் மெத்தையின் கதகதப்பை அனுபவித்தவாறே நிதானமாகக் காபியை அனுபவித்து உறிஞ்சி, மனதுக்குள் புதுக்கவிதை புனைந்தபடியே மெல்ல ஸ்லோ மோஷனில் பல் தேய்த்து, அவசரமே இல்லாமல் பேப்பர் படித்து நம் காஷ்மீர் சகோதரர்களுக்காகக் கவலைப்பட்டு, தேங்காய் சட்டினியுடன் டிபனை ரசித்துச் சாப்பிட்டுவிட்டு, உடலும் மனமும் முழுவதும் தயாரானவுடன் ஆபிசுக்குக் கிளம்ப முடிந்தால் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்கும்!”

ஒன்பதாம் நூற்றாண்டிலேயே வில்லிபுத்தூர் ஆண்டாள், “புள்ளும் சிலம்பின காண்’ என்று பறவைக் கூட்டங்கள் சிலம்பும் வேளையில் கண்ணனைத் தரிசிக்கத் தோழிகளை எழுப்பி ஓட்டிக் கொண்டு போயிருக்கிறார். கதவைத் திறக்காமல் வீட்டுக்கு உள்ளிருந்தே “”ஹா…வ்! எல்லாரும் வந்தாச்சா?” என்று சுருண்டு படுக்கும் சோம்பேறிப் பெண்ணும், “”நீயே வந்து எண்ணிப் பாத்துக்கோ” என்று அதட்டும் ஆண்டாளும், பி மற்றும் ஏ சொûஸட்டிகளுக்குக் கவிதையாகப் பதிவான உதாரணங்கள்.

சர்க்காடியன் தாளம் என்று நம் உடலுக்குள் சீராக ஒரு ஜாஸ்ரா ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தூங்க வேண்டிய நேரம் எது, படுக்கையைவிட்டு எழுந்திருக்க வேண்டிய நேரம் எது, சன் டி.வி.யில் சீரியல் பார்க்க வேண்டிய நேரம் எது என்பதை இந்தத் தாளம்தான் நமக்குச் சொல்கிறது. பிராணிகள், செடி கொடிகள், காளான், பாக்டீரியா எல்லாவற்றுக்குமே இந்த உயிரியல் கடிகாரம் உண்டு. பாட்டரி செலவில்லாமல் இருபத்து நாலுமணி நேரமும் இயங்கும் கடிகாரம். இந்த கடிகாரத்தைக் கட்டுப்படுத்துவது நமக்குள்ளிருக்கும் சில மரபீனிகள் (ஜீன்கள்) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஏ- வகை மனிதர்களுக்கு உச்சிப் பகல் வரை உடல் வெப்பம் தணிவாகவே இருக்கும். அவர்களுடைய உயிரியல் கடிகாரத்தைப் பொறுத்தவரை, பொழுது இன்னும் விடியவில்லை.

அமெரிக்காவுக்குப் போய் வந்தவர்களுக்கு ஜெட் லாக் பற்றித் தெரிந்திருக்கும். அதிவேக விமானத்தில் ஏறி சட்டென்று உலகத்தின் வெளிச்சப் பாதியிலிருந்து இருட்டுப் பாதிக்குப் போய்விடுவதால், நம் சர்க்காடியன் சதிராட்டம் குழம்பிப் போய்விடும். ராவெல்லாம் தூக்கம் வராது; பகல் முழுவதும் கொட்டாவி. இரண்டு மூன்று நாள் இது இரவா, பகலா, நிலவா, கதிரா என்று புரியாமல் அவஸ்தையாக இருக்கும். பிறகு மெல்ல மெல்ல உடல் கடிகாரம் புதிய தாளத்துக்குப் பழகிக் கொள்ளும். (அப்போது லீவு முடிந்து மறுபடி அமெரிக்க நேரத்துக்குத் திரும்பும் நாள் வந்துவிடும்.)

டென்மார்க் நாட்டில் கமீலா க்ரிங் என்பவர் ஆந்தையர்களுக்காக பி- சொûஸட்டி என்று ஒரு இணைய தளம் ஆரம்பித்திருக்கிறார். ஆயிரக்கணக்கில் உறுப்பினர் சேர்ந்தார்கள். “”நாம் நம்முடைய சர்க்காடியன் ரிதத்தின்படி வாழ்க்கையை நடத்த முயன்றால், சோம்பேறி என்றும் தூங்கு மூஞ்சி என்றும் கிண்டல் செய்கிறார்கள். பள்ளிக் கூடங்கள், அலுவகங்கள், கடைகள் எல்லாவற்றையுமே ஏ- சமுதாய மக்கள் தங்களுடைய சுய நல வசதிப்படி அமைத்துக் கொண்டுவிட்டார்கள். இந்தச் சேவல் கோழிகளின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து நமக்கு எப்போது விடுதலை? அவர்கள் வேலை செய்கிறபடி செய்யட்டும்; நாங்கள் மற்றொரு ஷிப்டில் 11 மணிக்கு ஆரம்பித்து இரவு எட்டு மணி வரை வேலை செய்ய விடுங்கள்” என்பதுதான் இவர்கள் கோரிக்கை. படைப்புத் திறனும் புத்திக் கூர்மையும் தேவைப்படும் இன்றைய தொழில்களுக்கு இதுதான் சரியான அணுகுமுறை. அவரவர் உயிரியல் கடிகாரத்தைப் பொறுத்து வெவ்வேறு பொழுதுகளில் வேலையில் கவனமும் உற்பத்தித் திறனும் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் வேலை செய்ய அனுமதிப்பதுதான் அவர்களுக்கும் நல்லது. முதலாளிக்கும் நல்லது. காலையில் எழுந்து படித்தால்தான் படிப்பு ஏறும் என்பது பொதுவான மற்றொரு மூட நம்பிக்கை. அது ஏ- சமுதாயத்துக்கு மட்டும்தான் பொருந்தும். வேலை கொடுப்பவர்களும் இப்போது விழித்தெழுந்து பி- சமுதாயத்தினரை ஆதரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். டெக்னிகல் வேலைகளுக்குத் திறமையான ஆட்கள் கிடைப்பதே கஷ்டமாக இருக்கும் நிலையில் “”எங்களுக்குத் திட்டவட்டமான ஆபிஸ் நேரம் கிடையாது- மெதுவாக எழுந்து மெதுவாக வரலாம்” என்றே விளம்பரம் செய்யப்படுகிறது.

சென்னையில்கூட பல சாஃப்ட்வேர் கம்பெனிகளில் ஃப்ளெக்ஸி டைம் என்று ஒரு முறை இருக்கிறது. ஒரு நாளின் இருபத்து நாலு மணியில் அவரவர் வசதிப்படி எந்த எட்டு மணி நேரம் வேண்டுமானாலும் வந்து வேலை செய்யலாம். ஒவ்வொரு ஊழியரும் வரும், போகும் நேரத்தைக் கதவைத் திறக்கும் காந்த அட்டைகள் பதிவு செய்து கொள்ளும். சம்பள தினத்தன்றுதான் சித்ரகுப்தன் மாதிரி கணக்குப் பார்ப்பார்கள். பகுதி நேர வகுப்பில் மேற்படிப்பு படிப்பவர்கள் முதல், காலைக் காட்சியில் ஷகிலா படம் பார்த்துவிட்டு வருபவர்கள் வரை பலருக்கு இது உபயோகமாக இருக்கிறது.

அதிகாலை வேளைகளில் நம் உடலில் கார்டிஸôல் என்ற ஹாராமோன் அதிகமாகச் சுரக்கும். நாம் மன அழுத்தம், பயம், உளைச்சல் போன்ற அவல நிலைகளில் இருக்கும்போது சுரக்கும் வேதிப் பொருள் இது. உடம்புக்கு நல்லதே அல்ல! எனவே அதிகாலை வேளைகளை ரோக விஞ்ஞானிகள், ஜெர்மன் மருத்துவப் பேராசிரியர்கள் இருவர் “சோம்பேறித் தனத்தின் சந்தோஷம்’ என்ற புத்தகத்தில் தாமதமாகத் துயில் எழுந்து பதவிசாக நடந்து கொள்பவர்கள்தான் நீண்டநாள் வாழ முடியும் என்று ஆதாரத்துடன் விவரிக்கிறார்கள். கார்டிஸôல் அதிகரித்தால் விரைவாக முதுமை வந்துவிடுமாம். (நான் நாளை முதல் இன்னும் ஒரு மணி நேரம் அதிகம் தூங்குவதாக முடிவு செய்துவிட்டேன்.)

“”காலையில் சீக்கிரம் எழுந்து இரை தேடப் புறப்படும் பறவைக்குத்தான் சாப்பிடுவதற்குப் புழு கிடைக்கும்” என்ற ஆங்கிலப் பழமொழியை பப்லுவிடம் சொன்னேன். “”இதிலிருந்து என்ன தெரிகிறது?”

“”நாம் ஒரு புழுவாக இருந்தால், சீக்கிரம் எழுந்து வெளியே தலைகாட்டக் கூடாது; ஆபத்து!” என்றான் பப்லு.

Posted in Awake, circadian, circadian rhythm, Clock, Day, Insomina, Jetlag, Kathir, Night, Patterns, Productivity, Raman, Raman Raja, Ramanraja, Sleep, Work | Leave a Comment »

Slum Clearance Board housing collapses – Daily Routine of the Poor

Posted by Snapjudge மேல் மே 30, 2007

விழுந்து நொறுங்கும் வீடுகள்: அலறும் குடும்பங்கள்

சென்னை, மே 30: 5-ம் வகுப்பு படிக்கும் மீனா, நண்பர்களுடன் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்து நொறுங்கியது. சாப்பாட்டில் மண். அலறியடித்து, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்தச் சம்பவம் சென்னை சாந்தோம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மேற்கூரை விழுந்து நொறுங்கும் சம்பவம் அந்தப் பகுதியில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாகி விட்டது என்பதால் யாரும் அவ்வளவு கவலைப்படவில்லை. காரணம், மேற்கூரை இடிந்து விழும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

6 மாதங்களுக்கு முன்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் மாதவராஜ் என்பவர் உயிரிழந்தார்.

“”சென்னையில் குடிசைகளை அகற்றி அப்பகுதியில் குடியிருப்புகளை கட்டும் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது நொச்சிக்குப்பத்தில் தான். 786 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், கடந்த 1972-ல் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கால மாற்றங்களால் தற்போது கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன” என்றார் 75 வயதான ஆர்.எஸ்.மணி.

வசதி படைத்தவர்கள் தங்களின் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொள்கின்றனர்.

“”கடந்த 6 ஆண்டுகளாக எங்களின் வீடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. வீடுகளை முற்றிலும் இடித்து விட்டு புதிதாக கட்டித் தருவதாக அரசு அறிவித்துள்ளது. பயனாளிகள் பட்டியலை எடுத்தார்கள். அதன்பின்பு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார் ஜெயசீலி.

குடிசைப் பகுதி தடையா? நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பை ஒட்டி, நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிப்போரின் வாரிசுகள், குடிசை வீடுகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

“”புதிதாக கட்டித் தருவதாக அரசு உறுதி அளித்துள்ள வீடுகளில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என குடிசைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், அவர்களிடம் ரேஷன் அட்டை உள்ளிட்ட சான்றுகள் இல்லை. இதனால், வருவாய்த் துறை சார்பில் இரண்டு முறை பயனாளிகள் பட்டியல் வெளியிட்ட போதும், அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்” என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சேகர்.

மாற்று இடம் வழங்கப்படவில்லை: “”நொச்சிக்குப்பத்தில் உள்ள சேதமடைந்த வீடுகளை இடிப்பதற்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், அங்கு இருப்பவர்களை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான மாற்று இடம் வழங்கப்படவில்லை என்பதால், அப்பகுதி மக்கள் அங்கேயே குடியிருந்து வருகின்றனர்” என்கிறார் தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பாரதி.

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது,””சேதமடைந்த கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்களை கட்டுவதற்கான வரைபடம் தயாராக உள்ளது. விரைவில் குடியிருப்புகள் கட்டப்படும்” என்றனர். எப்போது என்பதை தெளிவுபடுத்தவில்லை.

——————————————————————————————————————-

குறட்டை விடும் குடிசை மாற்று வாரியம்

எம். மார்க் நெல்சன்

Kalainjar DMK Slum Clearance board abuse power Karunanidhi banner

சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்கள்.

சென்னை, ஜூலை 15: சென்னையில் குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சுவர்கள் வருமானம் ஈட்டித் தருபவையாக மாறி வருகின்றன.

ஆனால், வருமானம் தொடர்பான வரவு -செலவு கணக்குகளைப் பராமரிப்பதில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் இருந்தாலும், கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அங்குள்ள பிளாக் ஹெச்-8 முதல் ஹெச்-15 வரையுள்ள குடியிருப்புச் சுவர்களில் தனியார் விளம்பரங்களும், ஹெச்-5, 6, 7, 16 மற்றும் பிளாக் ஆர் -18, 19 ஆகிய குடியிருப்புச் சுவர்களில் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களும் இடம்பெற்றுள்ளன.

சுவர் விளம்பரங்களுக்கு ஆண்டுக்கு, சதுர அடிக்கு அதிகபட்சமாக ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விளம்பரப் பலகைகளை வைக்க ஆண்டுக்கு, சதுர அடிக்கு ரூ. 26 வசூலிக்கப்படுகிறது.

இந்தக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. பெரும்பாலும், இந்த விளம்பரங்கள் அனைத்தும் 1,200 சதுர அடி அளவில் அமைக்கப்படுகின்றன.

இதன்படி, கோட்டூர்புரம் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆறு விளம்பரப் பலகைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சமும், எட்டு சுவர் விளம்பரங்கள் மூலம் ரூ. 1 லட்சமும் அரசுக்கு வருமானம் வருகிறது.

இதே பகுதியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 60 முதல் 70 வரை வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் 1200 சதுர அடி கொண்ட ஒரு விளம்பரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 84 ஆயிரம் வருமானம் தனியாருக்குக் கிடைக்கிறது.

ஆனால், குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

பராமரிக்கப்படாத கணக்குகள்: இந்நிலையில் குடிசைப் பகுதி மாற்று வாரிய அலுவலகக் கணக்குப் பதிவேட்டில் இந்த விளம்பரங்கள் குறித்த சில கணக்குகள் 1-4-2003 வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

விளம்பரக் கட்டணங்கள் வசூலிப்பது, விளம்பரக் காலம் முடிந்ததும், அந்த விளம்பரங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளை கே.கே. நகரில் அமைந்துள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தினரும், எஸ்டேட் அலுவலரும் (ஈ.ஓ.7) செய்து வருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்த கணக்குகளையும், விவரங்களையும் அவர்கள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு சரிவர தெரிவிக்காததால் கணக்குப் பதிவேட்டில் சரிவர இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதனால் விளம்பரங்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறதா அல்லது வசூலிக்கப்படும் பணம் வேறு வகையில் செலவழிக்கப்படுகிறதா என்பது மர்மமாக உள்ளது.

ஆளுங்கட்சி என்பதால்… அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை எனத் தெரிகிறது.

பொன்விழா முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், அந்த இடங்களில் தனியார் விளம்பர பலகைகளுக்கு அனுமதி அளித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது அதிகாரிகளின் கருத்து.

ஆனால், ஆளுங்கட்சி என்பதால் அந்த விளம்பரங்களை அகற்றுவதற்கு பயந்து அப்படியே விட்டுவைத்துள்ளனர் அதிகாரிகள்.

ஏற்கெனவே குறைந்த விலைக்கு விளம்பரங்களை வைக்க அனுமதிக்கும் நிலையில், வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களுக்கு முறையாக பணத்தை வசூலிக்காமலும், வசூலித்த பணத்தை சேர்க்கவேண்டிய இடத்தில் சரிவர சேர்க்காமலும் அரசுக்கும், குடிசை மாற்று வாரியத்துக்கும் இழப்பை ஏற்படுத்துவது ஏன் என்பதுதான் கேள்வி.

Posted in 50, Ad, Advt, Affordability, Area, Banner, Board, Celebrations, City, Civil, Clearance, collapses, Construction, Cost, Daily, Disabled, DMK, Dwelling, Education, eligibility, encroachments, Engineering, Eviction, facilities, facility, Flats, Floods, Free, Functions, Government, Govt, Handicapped, Hoardings, Home, Houses, Housing, Huts, Hygiene, improvement, Income, infrastructure, Issues, Jobs, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kottoor, Kottur, Kotturpuram, kutcha, Labor, Labour, Lands, Loss, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maintenance, migration, Mu Ka, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, multistorey, Necessity, NGO, Party, Plots, Politics, Poor, Poster, Power, Problems, Rain, Rehabilitation, Rent, revenue, Routine, Rural, sanitation, Santhome, settlements, shelter, Sleep, Slum, Society, Structure, Tenements, TN, TNSCB, TV, unhygienic, Worker, Youth | 1 Comment »

Sleep disorder – Nighttime bed routines, Snoring, pills: Healthcare

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

நலம்: குறட்டையா? ஆபத்தாச்சே!

ந. ஜீவா

என். ராமகிருஷ்ணன்

சிலர் அடித்துப் போட்டது போலத் தூங்குவார்கள். சிலரோ கும்பகர்ணன் போல இரவு பகல் எந்நேரமும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். சிலர் கோழித் தூக்கம் போடுவார்கள். சிலரோ தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து மறுநாள் ஆபிஸில் தூங்கிவழிவார்கள். தூக்கம் என்பது சகல ஜீவராசிகளுக்கும் பொதுவானது. மனிதர்களுக்குத்தான் அது பிரச்சினையாகிவிடுகிறது. தூக்கமின்மைப் பிரச்சினைக்கு மருத்துவமும் ஆலோசனையும் தருகிறார் சென்னையில் “நித்ரா‘ என்கிற ஆலோசனை அமைப்பை நடத்திவரும் டாக்டர் என்.ராமகிருஷ்ணன். அவரிடம் தூக்கமின்மைப் பிரச்சினையைப் பற்றிப் பேசிய போது…,

“”ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம்தான் தூங்க வேண்டும் என்ற வரையறையெல்லாம் கிடையாது. சிலருக்கு ஒரு நாளைக்கு 3 – 4 மணி நேரத் தூக்கமே போதுமானது. சிலருக்கோ 10 மணி நேரத்துக்கு மேல் தூங்க வேண்டும். சராசரியாக ஒருவர் 6 – 8 மணி நேரம் வரை தூங்கினால் போதுமானது.

சிலர் சுவிட்ச் போடும் சப்தம் கேட்டாலே விழித்துவிடுவார்கள். சிலரோ இடியே விழுந்தாலும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருப்பார்கள். பொதுவாக நல்ல தூக்கம் என்பது தூங்கி எழுந்தவுடன் ஃபிரஷ்ஷா இருப்பதுதான்.

இரவில் நல்ல தூக்கம் இல்லாமற் போவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. உடல்ரீதியான காரணங்களைவிட மனரீதியான காரணங்களே தூக்கத்தை அதிகம் பாதிக்கின்றன. மனதில் தோன்றும் எண்ணங்களே தூக்கம் வராததற்குக் காரணம். ஏதேனும் குறிப்பிட்ட நிகழ்ச்சி காரணமாக ஓரிரு நாட்கள் தூக்கம் வராமல் இருப்பது சகஜம். இதுவே தொடர்ந்து இருந்தால் அது தூக்கமின்மை வியாதியாகிறது.

வயதானவர்களுக்கு அவர்களுடைய வயது காரணமாகத் தூக்கம் வராமல் போகலாம். அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்கச் செல்வார்கள்.

பல வயதானவர்கள் தங்களுடைய தனிமையின் காரணமாக தூக்கமில்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் தொழில் காரணமாக வேறு ஊர்களுக்குச் சென்றிருப்பார்கள். எவ்வளவு வசதியிருந்தாலும் இந்தத் தனிமையுணர்வு அவர்களுக்கு தூக்கம் வராமல் தடுத்துவிடும்.

சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வராது. அடிக்கடி எழுந்து பாத்ரூம் போவார்கள். சில மாத்திரைகள் சாப்பிட்டால் தூக்கம் வராது. சில உடல்ரீதியான பிரச்சினைகளின் காரணமாக சிலருக்குத் தூக்கம் வராது. அவர்களுக்குப் படுக்கையை விட்டு எழுந்து நடந்தால் பெட்டர்ன்னு தோன்றும். இதை ஆங்கிலத்தில் தங்ள்ற்ப்ங்ள்ள் ப்ங்ஞ் என்பார்கள். அவர்களுக்குத் தூக்கம் வராது. எழுந்து நடந்து கொண்டிருப்பார்கள்.

சிலருடைய ஹேபிட்டே அவர்களுடைய தூக்கத்தைக் கெடுத்துவிடும். அவர்கள் தூக்கத்திற்கு உரிய மரியாதையைக் கொடுக்கமாட்டார்கள். கண்ட நேரத்தில் தூங்குவார்கள். கண்ட நேரத்தில் விழிப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்குத் தூக்கமின்மைப் பிரச்சினை வரக்கூடும். கரெக்டா தூங்கி ஃபிட்டா எழ முயற்சிக்கமாட்டார்கள்.

உடலில் வலி பல்வேறு காரணங்களினால் ஏற்படுகிறது. இந்த உடல் வலி காரணமாக ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் போய் விடுகிறது.

நல்ல தூக்கத்திற்கு சுற்றுப்புறச் சூழ்நிலையும் அவசியம். ரூம் டெம்பரேச்சர் அதிகமாக இருக்கக் கூடாது. நல்ல காற்றோட்டமும், உறுத்தாத, வசதியான படுக்கையும் அவசியம். வெளிச்சம், சப்தம் இருக்கக் கூடாது.

இரவில் ஆழ்ந்த தூக்கம் இருக்கும் போதுதான் உடலுக்குத் தேவையான ஹார்மோன்கள் சுரக்கின்றன.

சிலர் குறட்டைவிட்டுத் தூங்கினால் அது நல்ல தூக்கம் என்று நினைப்பார்கள். உண்மையில் குறட்டை விடுபவர்கள் நன்றாகத் தூங்குவதில்லை. அவர்களுக்கு மூச்சுக் குழலில் உள்ள அடைப்பின் காரணமாகவே குறட்டை வருகிறது. மூச்சுவிடுவது ஸ்லோ ஆகிவிடுகிறது. அவர்களுடைய மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் காலையில் எழுந்ததும் சோர்வாக உணர்வார்கள். குறட்டைப் பிரச்சினை உள்ளவர்கள் டாக்டரை உடனே அணுகவேண்டும். ஏன் என்றால் அவர்களுக்கு தூங்கும் போது மூச்சுவிடமுடியாமல் போய் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

தொழில், வேலை காரணமாகப் பலருக்கு உரிய நேரத்தில் தூங்க முடிவதில்லை. உதாரணமாக பிபிஓ வில் வேலை செய்பவர்கள் ராத்திரி விழித்துப் பகலில் தூங்க வேண்டும். என்னதான் பகலில் தூங்கினாலும் ராத்திரி தூங்குவது போல இல்லை. பிபிஓ, கால்சென்டரில் இரவில் தூக்கம் வராமல் இருப்பதற்காக அடிக்கடி டீ, காபி சாப்பிடுவார்கள். கொழுப்புச் சத்து நிறைந்த சிப்ஸ், பீட்ஸô போன்றவற்றைச் சாப்பிடுவார்கள்.

பிபிஓ நடத்துபவர்கள் அவர்களுடைய அலுவலகங்களில் நல்ல பிரகாசமான விளக்குகளைப் போட வேண்டும். அப்போதுதான் அங்கு வேலை செய்பவர்களின் கண்களுக்கு பாதிப்பு இருக்காது.

இப்படி இரவில் வேலை செய்துவிட்டு வந்து பகலில் தூங்குபவர்கள் தலைமாட்டில் செல்போனை வைத்துக் கொண்டு தூங்குவார்கள். இதனால் பகலில் தூங்கும் அந்தத் தூக்கமும் கெட்டுவிடும்.

இப்படித் தூக்கமின்மைப் பிரச்சினை வந்தால் அதற்குரிய ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் போகவேண்டும். பலருக்கு தூக்கத்திற்கென்றே ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் இருக்கின்றனர் என்று தெரியாது.

தூக்கமின்மைப் பிரச்சினைக்கு எல்லாருக்கும் பொருந்தும்படியான பொதுவான தீர்வுகளைச் சொல்ல முடியாது. ஒவ்வொரு தனிநபருக்கும் தனிப்பட்ட முறையில் அவர்களுடைய பிரச்சினைக்கேற்பத்தான் தீர்வு சொல்ல முடியும். சிலருடைய பழக்க வழக்கங்களே அவர்களுடைய தூக்கமின்மைப் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம். ஒருவர் பல ஆண்டுகளாக இரவுப் பணி செய்யாதவர். அவருக்கு இரவுப் பணி போட்டுவிட்டார்கள். அவருக்குக் காலையில் வீட்டுக்கு வந்து படுத்தால் தூக்கம் வராமல் போனது. என்னிடம் ஆலோசனை பெற வந்தார். மூன்று மாதங்களுக்கு மேல் மருந்து மாத்திரைகள் கொடுத்துப் பார்த்தும் அவருடைய பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை. கடைசியில்தான் தெரிந்தது, அவர் பகல்நேரப் பணி செய்த காலத்தில் இரவு படுக்கப் போகும் முன் என்டிடிவி செய்தியைப் பார்த்துவிட்டுத்தான் படுக்கப் போவார் என்பது. இப்போது அந்தப் பழக்கம் இல்லாததால் தூக்கம் வரவில்லை. இப்போது அவருடைய மனைவி முதல் நாள் இரவில் என்டிடிவி செய்தியை ரிக்கார்ட் செய்து விடுவார். மறுநாள் காலையில் வேலை முடிந்து வந்த அவருடைய கணவர் அந்த செய்தியைப் பார்த்துவிட்டு அருமையாகத் தூங்கிவிடுவார். எனவே தூக்கமின்மைப் பிரச்சினைக்குத் தனிப்பட்ட முறையில்தான் ஆலோசனை, தீர்வு சொல்லமுடியும்.

“தூக்கத்திற்கு என டாக்டரிடம் போனால் என்ன, தூக்கமாத்திரை கொடுப்பார்கள். இதை நாமே நேரடியாக மருந்துக் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்ளலாமே?’ எனப் பலர் நினைக்கிறார்கள். இது தவறு. டாக்டர்கள் மாத்திரை மட்டும் கொடுப்பதில்லை.

தூக்க வராமல் இருப்பதற்கு முக்கியக் காரணமான மன இறுக்கத்தைத் தவிர்க்கும் வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கிறோம். அதுவும் கூட தனிநபர்களைப் பொறுத்த விஷயம்தான். சிலருக்கு மெல்லிதான பாட்டைக் கேட்டால் தூக்கம் வந்துவிடும். சிலருக்கோ பாட்டைக் கேட்டவுடன் தூக்கம் போய்விடும். எனவே ஒவ்வொருவருக்கும் அவருடைய மனநிலை, பழக்க வழக்கம், உடல் நிலை ஆகியவற்றிற்கேற்பத் தனித்தனியான ஆலோசனைகளைக் கொடுக்கிறோம். கடையில் தூக்க மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதால் ஆரம்பத்தில் தூக்கம் வரும். பின் அதே பழக்கமாகி தூக்க மாத்திரை சாப்பிடாவிட்டால் தூக்கம் வராத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இன்னும் கொஞ்ச நாள் கழித்து வழக்கமாகச் சாப்பிடும் தூக்க மாத்திரையின் அளவு போதாமல் போய்விடும். இது பல உடல்நலக் கேடுகளை உருவாக்கிவிடும்.

உடம்பின் ஏதாவது ஒரு பகுதியில் ஏற்படும் வலி காரணமாகத் தூக்கம் இல்லையென்றால், வலி எதனால் ஏற்படுகிறது என்று பார்த்து அந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.

படுக்கும் போது எப்படிப் படுக்க வேண்டும்? என்பது பலருக்குச் சந்தேகம். மல்லாந்து படுப்பதே போதுமானது. கர்ப்பிணிப் பெண்கள் இடதுபுறம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். குறட்டை விடுபவர்கள் மல்லாக்கப் படுக்கக் கூடாது.

மதிய உணவுக்குப் பின் பலருக்குத் தூக்கம் வருவது இயற்கை. மதிய உணவுக்குப் பின் ஒரு மணிநேரம் தூங்கினால் உடல் ஃபிரஷ்ஷாக இருக்கும். ஆனால் பிராக்டிகலாக இது சாத்தியப்படாது. மேலும் மதியத்தில் ஒரு மணி நேரம் தூங்கினால் ராத்திரி தூக்கத்தை இது பாதிக்கும்.

சில லாரி டிரைவர்கள் தொடர்ந்து இரண்டுநாள் மூன்றுநாள் கண்விழித்து ஓட்டுவார்கள். இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. அப்படிப்பட்ட தொலைதூரப் பயணங்களில் இரண்டு டிரைவர்கள் இருப்பது நல்லது.

மனதில் அமைதியில்லாமல் தூக்கத்தை இழந்தவர்கள் அதிகம். இதில் இன்னொரு உண்மையென்னவென்றால் நன்றாகத் தூங்கினால் மனதில் அமைதி பிறக்கும். உடலில் புத்துணர்வு ஏற்படும்.

மனம் இறுக்கமில்லாமல், உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருப்பவர்களுக்கும், தூக்கத்தை ஒரு பொருட்டாக மதித்து குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் விழிக்கும் பழக்கம் உடையவர்களுக்கும் தூக்கமின்மைப் பிரச்சினை வர வாய்ப்பே இல்லை.”

Posted in Alcohol, Disorder, Dr. N Ramakrishnan, Healthcare, Medicine, N Ramakrishnan, nausea, Nithra, Sleep, Sleep walking, Sleeping pills, Snore, Snoring, Tiredness | 1 Comment »