பட்டாசுத் தயாரிப்பில் இயந்திரமயம் காலத்தின் கட்டாயம்
சிவகாசி, நவ. 5: பட்டாசுத் தயாரிப்புத் தொழிலில் தொழிலாளர் பற்றாக்குறையால் ஏற்படும் இழப்பைத் தடுக்க அந்தத் தொழிலில் இயந்திரமயமாக்குவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முழுவதும் தனிநபர்களின் முதலீடுதான் உண்டு. சிறுசிறு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வர்த்தகத்தின் அளவு ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.
சிவகாசியில் தொடக்க காலத்தில் கலர் மத்தாப்பு தயாரிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தொழில் வளர்ச்சி அடைந்து இப்போது ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.
சுமார் 600-க்கும் மேல் பட்டாசு ஆலைகள் இங்கு உள்ளன. இந்தத் தொழிலில் நேரடியாக சுமார் 1.30 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 1 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த 25 சதவீத தொழிலாளர்கள் வேறு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தொழிலில் சுமார் 70 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஆலைகளில் 18 வயது முதல் 22 வயது வரை உள்ள பெண்களை பணியில் அமர்த்தி 3 ஆண்டு கழித்து ரூ. 1.50 லட்சம் வரை பணம் கொடுப்பதால் இங்கிருந்து பலர் அங்கு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
தொழிலாளர் பற்றாக்குறையால் பட்டாசு ஆலைகளில் தயாரிப்பு இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு பட்டாசு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலையும் அதிகரித்துவிட்டது.
பட்டாசு முழுக்க கையினால் தயாரிக்கப்படுகிறது. தீப்பெட்டித் தொழிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இது போன்ற தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து பல ஆலைகள் பகுதி இயந்திரமயமாக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி பெருகியதுடன் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. எனவே இப்போது தொழில் நலிவடைவதைத் தடுக்க பட்டாசு ஆலையில் இயந்திரமயமாக்கல் காலத்தின் கட்டாயம் என்றாகிவிட்டது.
சரவெடி பின்னுவதற்கு தொழிலாளர் கிடைக்காததால் இப்போது சரவெடி பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. சீனாவில் பட்டாசு தயாரிப்பில் இயந்திரம் புகுத்தப்பட்டு தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
சிவகாசியில் கடந்த 3 ஆண்டுகளாக சீனத் தொழில்நுட்பத்தில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதே போல பட்டாசு ஆலைகளிலும் ஒரு சில பணிகளுக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தினால் தொழில் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் திப்பெட்டி தொழிலாளர் சிஐடியு சங்கத் தலைவர் ஜே.லாசர் கூறியது:
பல தொழிலாளர்கள் வேறுபணிக்கு சென்றுவிட்டனர் என்பது உண்மைதான். பட்டாசு தொழிலாளர்களுக்கு கூலி குறைவாகக் கிடைக்கிறது. ஆண்களுக்கு தினசரி சம்பளமாக ரூ. 40, பெண்களுக்கு ரூ.30 தான் கிடைக்கிறது.
பட்டாசு தயாரிப்பில் ஒப்பந்தமுறை உள்ளது. பணிப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே தொழிலாளர் தங்கள் தேவையை நிறைவேற்றும் பணிக்கு செல்லத் தொடங்கிவிட்டனர் என்றார்.
பட்டாசு ஆலை அதிபர் சீனிவாசன் கூறியது:
தீப்பெட்டி ஆலைகளில் இயந்திரம் வைக்க சட்டதிட்டங்கள் கடுமையாக இல்லை. பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது.
எனவே நினைத்தவுடன் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என்றால் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த இயந்திரத்தை அமைக்க ஆலையின் உள்கட்டமைப்பை மாற்ற வேண்டும். இது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோருக்கு முடியாத காரியம். எனினும் படிப்படியாக இயந்திரமயமாக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார்.