Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Situation’ Category

Dinamani Editorial on Eezham – Sri Lanka Situation

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

மற்றொரு முயற்சி

இலங்கையில் மீண்டும் லேசான நம்பிக்கைக் கீற்று தென்படுகிறது. அண்மைக்காலத்தில் நிகழ்ந்து வரும் ரத்தக்களரி ஓய்வதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

இலங்கையில் அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஜூலை 22 லிருந்து செப்டம்பர் 26 வரை நடந்த சண்டையில் 200க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர். இது, இலங்கைத் தீவில் மனிதாபிமானத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் சோதனையை வெளிப்படுத்துகிறது என்று அங்கு போர் நிறுத்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நார்வே தலைமையிலான கண்காணிப்புக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள பாசனக் கால்வாயை மூடியதால் ஆத்திரமடைந்த இலங்கை ராணுவம் கடும் தாக்குதல் தொடுத்தது. புலிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். அதே சமயம், திரிகோணமலை மாவட்டத்தில் ஏற்கெனவே புலிகள் வசம் இருந்த பகுதியை ராணுவம் கைப்பற்றியதால் சண்டை தொடர்ந்தது. இதன் மூலம் இரு தரப்பினருமே சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரலிலிருந்து அவ்வப்போது நடைபெறும் மோதல்களால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளைக் காலி செய்து விட்டு, பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்று விட்டனர். இது நாட்டின் கிழக்கு வடக்குப் பகுதிகளில் புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய நெடுஞ்சாலை ஒன்று கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் நாட்டின் இதர பகுதிகளிலிருந்து யாழ். நகரும், யாழ்ப்பாண தீபகற்பப் பகுதியும் ஏறக்குறைய துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளன. உணவுப்பொருள், மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ். நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல், இலங்கை செலாவணிப்படி ரூ. 500க்கு உயர்ந்து விட்டது. 10,000 பேர் கொழும்பு வழியாக திரிகோணமலை செல்ல அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். மேலும் நிதி நிறுவனங்களிலிருந்து பணம் எடுக்க அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதால் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வன்னி பகுதியில் பெரும்பாலான பொருளாதார, உற்பத்தி நடவடிக்கைகள் முடங்கியுள்ளன என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2002 ல் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை நிறுத்த உடன்பாடு அர்த்தமில்லாததாகி விட்டது. எனவே, இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை முலம் தீர்வு காண இரு தரப்பினரும் முன்வர வேண்டும் என்று கண்காணிப்புக் குழுவினர் யோசனை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அமைதிப் பேச்சைத் தொடங்குவது குறித்து விவாதிக்க நார்வே தூதர் ஜான் ஹான்சன் பாயர் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வருகிறார். அமைதிப் பேச்சைத் தொடங்க புலிகள் தலைவர் பிரபாகரன் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் முதலில் அரசுத் தலைவர்களையும் பின்னர் கிளிநொச்சி சென்று பிரபாகரனையும் சந்தித்துப்பேச திட்டமிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரியில் பிரபாகரனை நார்வே தூதர் சோல்ஹைம் சந்தித்துப் பேசினார். இதையடுத்து வன்முறை ஓய்ந்து அமைதிப் பேச்சு தொடங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இரு தரப்பினரும் சந்தித்துப் பேச கடந்த 7 மாதங்களாக மேற்கொண்ட முயற்சி ஏதாவது ஒரு காரணத்தால் தள்ளிப்போடப்பட்டது. இப்போது அக்டோபர் 2 வது வாரத்துக்குள் பேச்சு தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை இரு தரப்பினரும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார நிலை, மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான அடிப்படையை உருவாக்க வேண்டும்.

Posted in Dinamani, Editorial, Eezham, Ilanagai, Kilinochi, LTTE, Negotiation, Norway, Peace, Situation, Sri lanka, Tamil, Triconamalee, War | Leave a Comment »