அரசியலில் கண்ணியம் மறைந்து வருகிறது: ராமதாஸ் வருத்தம்
சென்னை, ஜன. 8: அரசியலில் முன்பிருந்த கண்ணியம் தற்போது மறைந்து வருகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
சென்னையில் தமிழ்மண் பதிப்பகம் சார்பில் திரு.வி.க.வின் 54 நூல்கள் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. திரு.வி.க.வின் நூல்களை வெளியிட்டு அவர் பேசியது:
சர் பிட்டி தியாகராயரையும், பனகல் அரசரையும் எதிர்த்து அரசியல் நடத்தியவர் திரு.வி.க.
தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பாக திரு.வி.க.வை நாடு கடத்த சென்னை மாகாண ஆளுநர் ஆலோசித்தபோது, “அவரை நாடு கடத்தினால் நாங்கள் ராஜிநாமா செய்வோம்’ என்று அப்போதைய சென்னை மாகாண பிரதமர் பனகல் அரசர், ஆளுநரிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து திரு.வி.க.வை நாடு கடத்தும் முடிவு கைவிடப்பட்டது.
அரசியலில் எதிர் முகாமிலிருந்தாலும், அவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும்போது அதை எதிர்த்த அரசியல் கண்ணியம் தற்போது எங்கே போயிற்று?
இதுகுறித்து அரசியல் தொடர்பான (பொலிட்டிகல் சயின்ஸ்) படிப்பை படிக்கும் மாணவர்கள் ஆராய வேண்டும்.
தமிழ்நாட்டுத் தலைவர்களிலேயே பன்முகத் தன்மை கொண்ட தலைவர் திரு.வி.க., நல்ல தமிழிலேயே பத்திரிகையிலும் எழுதி தமிழ்த் தென்றல் என்று பாராட்டுப் பெற்றவர்.
திரு.வி.க.வை நினைவுகூரும் வேளையில் நம்மால் முடிந்த அளவு தமிழை வளர்க்க உறுதி எடுத்துக் கொள்வோம் என்றார் ராமதாஸ்.
“”திரு.வி.க.வின் நூல்களை தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் வைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தமிழ்மண் பதிப்பகத்தின் இளவழகன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.