சபாஷ், சரியான முடிவு!
பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இடதுசாரிகளின் வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்து விட்டார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிடப்பில்போட முடிவெடுத்திருப்பது, இந்த அரசின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது; அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறாமல் போவதால் தேசநலன் பாதிக்கப்படுகிறது~ இவையெல்லாம் கடந்த இரண்டு நாள்களாக வெளியிடப்படும் கருத்துகள்.
ஏதோ இப்போதாவது பிரதமருக்கும் இந்த அரசுக்கும் நல்ல புத்தி வந்து நல்ல முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதே என்று சந்தோஷப்படுவதை விட்டுவிட்டு, ஒப்பந்தம் ரத்தாகிவிட்டதே என்று ஓலமிடுவது ஏன் என்பது நமக்குப் புரியவில்லை. இன்னொரு விஷயம். மன்மோகன் சிங்கின் “மைனாரிட்டி’ அரசு மிகவும் பலமாக இருந்ததுபோலவும், இப்போது திடீரென்று பிரதமரும் அரசும் பலவீனமாகிவிட்டது போலவும் சிலர் விமர்சிப்பது அதைவிட வேடிக்கையாக இருக்கிறது.
இடதுசாரிகளின் ஆதரவில் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் அரசு, அவர்களின் ஒப்புதல் கிடைக்காது என்று தெரிந்தும், அவர்களைக் கலந்தாலோசிக்காமல் இப்படியோர் ஒப்பந்தத்துக்குத் தயாரானதுதான் தவறே தவிர, அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிடப்பில்போட ஒத்துக்கொள்வதில் எந்தத் தவறுமில்லை என்பதுதான் நமது கருத்து.
காலாகாலத்துக்கும், அன்னிய சக்திகள் நமது இந்திய அணுசக்தி நிலையங்களைச் சோதனையிடும் அதிகாரத்தை அளிக்கும் இதுபோன்ற ஓர் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் தார்மிக அதிகாரம், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையைப் பெறாத இந்த “மைனாரிட்டி’ அரசுக்குக் கிடையாது என்பதுதான் ஆரம்பம் முதலே நமது கருத்தாக இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில் தவறு திருத்தப்பட்டிருக்கிறது. அதுதான் சரியான முடிவும்கூட.
அமெரிக்காவுடனான நல்லுறவு என்பது இன்றைய உலகச் சூழலில் தவிர்க்க முடியாதது என்பதைவிட இன்றியமையாதது என்றேகூடக் கூறலாம். அமெரிக்காவுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வது என்பது வேறு, அமெரிக்காவின் நட்பு வட்டத்தில் இணைந்து, கைகோர்த்து அமெரிக்க ஆதரவு நாடாகச் செயல்படுவது என்பது வேறு. இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் அப்படியொரு நிர்பந்தத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய ஆபத்து. அந்த ஆபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது என்கிற வகையில் சற்று ஆறுதல்.
அணிசாரா நாடுகளுக்குத் தலைமையேற்கும் தார்மிகப் பொறுப்பும், பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளின் உரிமைகளுக்குக் குரலெழுப்பும் கடமையும் உலக சமாதானத்துக்கும் அகிம்சைக்கும் வழிகோலும் சக்திகளுக்கு ஆதரவளிக்கும் கட்டாயமும் இந்தியாவுக்கு உண்டு. அமெரிக்காவுடனோ, வேறு எந்த வளர்ச்சி அடைந்த நாடுகளுடனோ இந்தியா தன்னை இணைத்துக் கொள்ளுமேயானால், பாதிக்கப்பட்ட பின்தங்கிய நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.
இந்திய மக்கள் மிகவும் புத்திசாலிகள். முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் சரி, இப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் சரி, தன்னிச்சையாகச் செயல்பட முடியாத அளவுக்குக் கூட்டணிக் கட்சிகள் மற்றும் இடதுசாரிகளைக் கடிவாளம் பிடிக்க வைத்திருக்கிறார்கள். இதனால் ஆட்சியாளர்கள் பல தவறான முடிவுகளை அவசரப்பட்டு எடுத்துவிட முடியாமல் தடுக்க முடிகிறது. இதனால் வளர்ச்சி பாதிக்கப்படாதா என்று கேட்கலாம். வளர்ச்சி தாமதப்படுவதில் தவறில்லை. விபத்து தவிர்க்கப்படுகிறதே, அதுதான் முக்கியம்.
பிரதமர் மன்மோகன் சிங் அன்றும் இன்றும் ஒரு பலவீனமான பிரதமர்தான். அவரது அரசு அன்றும் இன்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் பதவியில் இருக்கும் ஒரு “மைனாரிட்டி’ அரசுதான். சிலவேளைகளில் அதை அவர் உணராமல் போய்விடுகிறார் என்பதுதான் நமது கருத்து. தற்போது அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிடுவதன் மூலம், தனது ஆட்சியின் உண்மையான பலத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் அவ்வளவே.
தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் பிரதமர் மன்மோகன் சிங் இடதுசாரிகளின் வற்புறுத்தலுக்குப் பணிந்து விட்டார் என்கிற குற்றச்சாட்டில் அர்த்தமே இல்லை. எல்லா பிரதமர்களும் எல்லா அரசியல்வாதிகளும் எதைச் செய்வார்களோ அதை அவரும் செய்திருக்கிறார். இப்போதாவது நமது பிரதமர் மன்மோகன் சிங் ஓர் அரசியல்வாதியாக சிந்திக்கத் தொடங்கியிருக்கிறாரே, அந்த வரையில் மகிழ்ச்சி!
————————————————————————————————-
ஏனிந்தத் தடுமாற்றம்?
October 18, Thursday
ஒரு வழியாக அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது என்று நினைத்தால், அப்படியொரு நல்ல காரியம் நடப்பதற்கு அமெரிக்கா அனுமதிக்காது என்று தோன்றுகிறது. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்குடன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தொலைபேசியில் தொடர்புகொண்டு உலக வர்த்தக நிறுவனத்தின் உடன்பாடு பற்றி சர்ச்சை செய்ததாகவும், அப்போது அவரிடம் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை “உடனடியாக’ நிறைவேற்றுவதில் அரசியல் சிக்கல் இருப்பதாகத் தெரிவித்ததாகவும் அரசின் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலிருந்து ஜார்ஜ் புஷ்ஷுடன் தொலைபேசியில் பேசினால், இடதுசாரித் தலைவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்துதான் தென்னாப்பிரிக்காவிலிருந்து பிரதமர் பேசினார் என்று கேலி பேசுபவர்கள் இருக்கட்டும். எங்கிருந்து பேசினால்தான் என்ன, விஷயம் என்னவோ இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்தானே? இந்த ஒப்பந்தம் ஒத்தி போடப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்களே தவிர, கைவிடப்பட்டது என்று ஏன் அரசு திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை என்பதுதான் நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைப் பொருத்தவரை இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது என்பது அவருக்கு இருக்கும் அரசியல் நிர்பந்தம். இராக்கின் மீது புஷ் நிர்வாகம் தொடுத்த படையெடுப்பின் பின்விளைவுகளை அவரது குடியரசுக் கட்சி எதிர்கொள்ள வேண்டிய நிலைமை. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை அந்தக் கட்சி சந்திக்கும் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பு.
இந்த சூழ்நிலையில், இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளும் அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம், ஒரு மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியிருப்பதாக விளம்பரம் செய்துகொள்ள நினைத்த புஷ் நிர்வாகத்திற்கு, ஒப்பந்தம் ஒத்திபோடப்பட்டதில் ஏக வருத்தம். இந்தியாவைத் தனது துணை நாடாக்கிக் கொள்வதன் மூலம், மீண்டும் பலமடைந்து வரும் ரஷியாவையும், பொருளாதார ரீதியாகப் பெரிய அளவில் தனக்குப் போட்டியாக உருவாகி இருக்கும் சீனாவையும் எதிர்கொள்ள முடியும் என்பது அமெரிக்க வெளியுறவுத் துறையின் கணிப்பு.
இப்படி ஏகப்பட்ட கனவுகள் அமெரிக்காவுக்கு என்றால், அணு ஆயுத சக்தியைப் பெற்றிருக்கும் நாடுகளைப் பொருத்தவரை இந்தியா மேலும் தன்னிச்சையாக அணு ஆராய்ச்சியில் ஈடுபடுவது தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இப்போதைய ஒரே குறிக்கோள். அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில், தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை அந்த நாடுகள் அழிக்காத வரையில், மற்ற நாடுகள் அணு ஆயுதச் சோதனை நடத்துவதைத் தடுக்கும் உரிமை அவர்களுக்குக் கிடையாது என்பதுதான் இந்திரா காந்தி காலத்திலிருந்து இதுவரை இருந்த அத்தனை பிரதமர்களின் கருத்தும். அதனால்தான் நாம் அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை.
இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின் மூலம், அந்த நாடுகளின் நேரடிச் சோதனைக்கு இந்தியா உட்படுத்தப்படும் என்பதால், ஏறக்குறைய அணு ஆயுதத் தடுப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டாற் போன்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். இதுதான், அந்த நாடுகளின் எதிர்பார்ப்பு. அணுசக்தி ஒப்பந்தம் ஒத்திபோடப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றமடைய வைத்திருக்கிறது.
அமெரிக்காவும், இந்த அணுஆயுத வல்லரசுகளும் என்ன நினைப்பார்களோ என்று பயந்து நம் பிரதமர் செயல்படுவதைவிட, அவரைப் பதவியில் அமர்த்தி அழகு பார்க்கும் இடதுசாரிகள் என்ன செய்வார்களோ என்று அவர் பயப்படுவதுதான் நியாயம். இந்தப் பிரச்னைக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்து, இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு கிடையாது என்று பிரதமரும் அரசும் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் அல்லது இடதுசாரிகளின் ஆதரவு தேவையில்லை என்று தீர்மானித்துத் தனது பதவியைத் தியாகம் செய்துவிட வேண்டும்.
இந்த விஷயத்தைப் பிரதமர் மேலும் ஒத்திபோடக்கூடாது. தைரியமாக ஒப்பந்தத்தைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போடவேண்டும்! அதுதான் நமது வேண்டுகோள்.
——————————————————————————————————————————–
குளறுபடியான செயல்பாடே மேல்!
டி.ஜே.எஸ். ஜார்ஜ்
இந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு தொடர்பான விவாதங்கள், உண்மையிலேயே இந்திய ~ அமெரிக்க உடன்பாடு பற்றியவையல்ல. அவை தத்துவார்த்தப் பிரச்னைகள் சம்பந்தப்பட்டவை. அதனால்தான் அந்த விவாதங்களில் வெளிச்சத்துக்குப் பதில், வெப்பம் அதிகமாக இருக்கிறது; அதனால்தான் அறிவார்ந்த முறையில் அதற்குத் தீர்வுகாண வழியில்லாமல் போய்விட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அண்மையில் அறிவார்ந்த அணுகுமுறை ஒன்றை முன்வைத்துள்ளார். இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைக்கக்கூடிய கதிரியக்கக் கனிமமான தோரியத்தைப் பயன்படுத்தும் அணு மின்னுற்பத்தி நிலையங்களை நிறுவுவதன் மூலம் நமது விசைத் தேவையில் நாம் தன்னிறைவை எட்ட முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பான ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் முன்னேறிய கட்டத்தில் இருக்கின்றனர்; இன்னும் ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் தோரியத்தை அடிப்படையாகக் கொண்ட அணு மின்னுற்பத்தி உலைகளை நாம் தயாரித்துவிடுவோம் என்று கூறுகிறார் அப்துல் கலாம்.
அதாவது, நமது சொந்த இயற்கை வளங்களைக் கொண்டே, நமது சொந்த முயற்சியாலேயே இந்தியாவுக்குத் தேவையான பெருமளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வது சாத்தியமானதே என்பது அதன் பொருள். விசைத் துறையில் சுயசார்பை எட்ட வேண்டும் என்று கூறிக்கொண்டு அந்த உடன்பாட்டுக்கு வக்காலத்து வாங்குவோரையும், ராணுவத் திட்டங்கள் தொடர்பான நமது சுதந்திரம் பறிபோய்விடும் என்று கூறி அந்த உடன்பாட்டை எதிர்ப்போரையும் திருப்திப்படுத்துவதாக, விசைத்துறையில் தன்னிறைவு அளிக்கும் அத் திட்டம் இருக்கும்.
பிறகு எதற்காக அனல் பறக்கும் இந்த வாக்குவாதங்கள்? அங்குதான் தத்துவார்த்தப் பிரச்னை வருகிறது. முதலாளித்துவத்துக்கு எதிராக கம்யூனிசம் என்னும் வழக்கமான பிரச்னை அல்ல இது. ஏனென்றால், பிரச்னை அதுவாக இருந்திருந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து அந்த உடன்பாட்டை பாரதிய ஜனதா கட்சியும் எதிர்த்துக்கொண்டு இருந்திருக்காது.
அதோடு, இந்தியாவில் எப்பொழுதோ கம்யூனிசமெல்லாம் “ஃபைவ்-ஸ்டார்’ கலாசாரத்தால் கடத்திச் செல்லப்பட்டுவிட்டது; பிரகாஷ் காரத் போன்ற சிலரின் சிந்தனைகளில்தான் கலப்படமில்லாத கம்யூனிசம் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறது.
முதலாளித்துவமும் கம்யூனிசமும் கடந்த காலக் கருத்துகளாகிவிட்டன; இன்றைய மோதல், மேலாதிக்கத்துக்கும் இறையாண்மைக்கும் இடையே நடந்துகொண்டு இருக்கிறது. ஒருபுறம், உலக நாடுகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தத் துடித்துக்கொண்டு இருக்கும் அமெரிக்கா.
சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச உடன்பாட்டில் கையெழுத்திட மறுப்பது, நியூயார்க் நகரக் குப்பைகளையும் மருத்துவமனைக் கழிவுகளையும் சரக்குப் பெட்டகங்களில் போட்டு கொச்சிக்கு அனுப்பி வைத்திருப்பது போன்ற அறிவீனமான செயல்களெல்லாம், அதன் விளைவுகள்தான்.
மறுபுறம், உலகெங்கிலும் வாழும் மக்களின் சுதந்திரத் தாகம். இருப்பினும், உலக வங்கி போன்ற பல அமைப்புகளின் நடவடிக்கைகளால், ஏராளமான இந்தியர்கள் அமெரிக்க வாழ்க்கை முறைக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் மனநிலைக்கு ஆளாகிவிட்டனர்.
மன்மோகன் சிங் அரசு, தான் அமெரிக்க நிர்வாகத்துக்கு கடமைப்பட்டிருப்பது போன்றதொரு எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. அணுசக்தி உடன்பாட்டு விவகாரத்தில் அது மேற்கொண்ட மிரட்டல் பாணி அணுகுமுறையானது, மக்களின் அந்த எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்திவிட்டது. இந்தியாவின் இறையாண்மைக்கு அந்த உடன்பாட்டால் குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என்று மக்கள் மனத்தில் ஏற்பட்டுவிட்ட ஐயத்தைப் போக்குவதில் மன்மோகன் சிங் அரசு வெற்றிபெறவே இல்லை.
கடைசியாக அந்த உடன்பாட்டைக் கைவிட்டுவிடுவது என்ற முடிவுக்கு வந்த பொழுது, அறிவுபூர்வமான நிலையை மேற்கொண்டார் பிரதமர். “அதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால், பயணம் அதோடுமுடிந்துபோய்விடாது’ என்றார் அவர். ஆனால், அதீத ஆர்வத்தால் அதற்கு ஆதரவு தேடிக்கொண்டிருப்பவர்கள், “இனி இந்தியாவை ஒருவரும் நம்ப மாட்டார்கள்’ என்றும், தமது வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாத பிரதமர், பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் கூறத் தொடங்கிவிட்டனர்.
இது ஒருதரப்பான, நகைப்புக்குரிய வாதமாகும். உண்மையில் சொல்வதானால், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைக் கருத்துக்குச் செவிமடுத்ததன் மூலம் இந்திய ஜனநாயகத்தின் பலத்தை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறார் பிரதமர். “இந்தியாவில் மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் உண்டு; இந்திய ஆட்சியாளர்கள் உணர்ச்சியற்ற பாறையல்ல’ என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.
அமெரிக்காவைப் பற்றி யாரும் அவ்வாறு கூற முடியாது. தன்னிச்சையாக யுத்தத்தில் ஈடுபட்டுவரும் புஷ் அரசாங்கத்தின் நடவடிக்கையை அமெரிக்க மக்கள் மீண்டும் மீண்டும் நிராகரித்துக்கொண்டே இருக்கின்றனர். இருந்தபோதிலும் ஈரான்மீது புதிதாகப் போரைத் தொடுப்பது குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் அந்த மனிதர்.
நமது அரசின் செயல்பாடுகள் குளறுபடியாக இருக்கலாம்; ஆனால், செயல்படாத ஜனநாயகத்தைவிட அது எவ்வளவோ மேல்.
(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)