அரசின் “பார்வை’ சரியா?
சென்னை, ஜூன் 17: பார்வையற்றவர்களில் ஜாதிப் பிரிவுண்டா? உண்டு என்கிறது இந்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை.
இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை, பார்வையற்றவர்களின் மத்தியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது அதிர்ச்சி தரும் செய்தி.
உடல் ஊனமுற்றோர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது வரவேற்கத் தக்கது. இந்தியாவில் 2.5 கோடி ஊனமுற்றோரில் 12 லட்சம் பேர் கண்பார்வை அற்றவர்கள். இந்தக் கண்பார்வை அற்றோரில் “பிரெய்லி’ மொழி மூலம் படித்தவர்கள் பலர் உள்ளனர். படிக்காதவர்களும் உள்ளனர்.
கடந்த 1982 முதல் அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் பார்வையற்றோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கை மனிதநேயத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு: அரசு வேலைகளில் பார்வையற்ற, உடல் ஊனமுற்றவர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், ஒரு சதவீதம் பார்வையற்றோருக்கும், ஒரு சதவீதம் உடல் ஊனமுற்றோருக்கும், மீதமுள்ள ஒரு சதவீதம் மனவளர்ச்சி குன்றியோருக்கும் வழங்கப்படுகிறது.
இதேபோன்று, அரசு கல்வி நிறுவனங்களில் மொத்தமுள்ள 4 சதவீத இட ஒதுக்கீட்டில், பார்வையற்றோருக்கு 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
பார்வையற்றவருக்கான இட ஒதுக்கீடு பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொதுப் பிரிவு என்ற நிலையில் வழங்கப்படுகிறது. பொதுப் பிரிவில் உயர் வகுப்பைச் சேர்ந்த பார்வையற்றவர்கள் வருகிறார்கள்.
“இட ஒதுக்கீட்டில் பாகுபாடு?’
இதன் மூலம், ஒருவர் பார்வையற்றவராகவும், பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவராகவும் இருந்தால்தான் அவருக்கு இட ஒதுக்கீடு உறுதி. பிற வகுப்பைச் சேர்ந்தவர் என்றால் அவருக்கு இட ஒதுக்கீட்டில் இடம் கிடையாது.
பார்வையற்றவர்கள் எல்லோரையும் ஒரே பிரிவாகக் கருதாமல் அவர்களுக்கு மத்தியிலும் ஜாதிப் பாகுபாட்டை ஏற்படுத்தி பேதப்படுத்துவது மனித நேயமே இல்லாத கண்மூடித்தனம்.
“”பார்வையற்றவர்களை உயர் வகுப்பினர், பின்தங்கிய வகுப்பினர் எனப் பிரித்து ஜாதி அடிப்படையில் கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிர்ணயிப்பது நியாயம் இல்லை என்கிறார் “நந்தினி வாய்ஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர் எஸ்.என். வெங்கட்ராமன்.
இது குறித்து, தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியும் எந்த பதிலும் வரவில்லை என்றார் வெங்கட்ராமன்.
இட ஒதுக்கீட்டில் மாற்றம் வருமா?
ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதால், திறமையிருந்தும் வேலை கிடைக்காத நிலையில் பார்வையற்றோர் பலர் உள்ளனர். இதனால், ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. பார்வையற்றோரில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் என வகைப்படுத்தாமல் தகுதியும் திறமையும் உள்ள அனைவருக்கும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது என்னங்க நியாயம்?
தொலைபேசி பேசுவதற்காக வருவோரிடம் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார் சென்னை தி. நகரில் பிசிஓ நடத்தும் பார்வையற்றவரான மீனாட்சி சுந்தரி.
அந்தப் பேச்சில் தன்னம்பிக்கை மிளிர்கிறது. ஆனால், அருகே சென்று பேசினால், இந்த நம்பிக்கை பல சமயங்களில் உடைக்கப்படுவதாக சோகத்துடன் கூறுகிறார் மீனாட்சிசுந்தரி. அதுவும் அரசின் இட ஒதுக்கீட்டால் என்கிறார்.
மீனாட்சிசுந்தரி பிறந்த 6 மாதங்களுக்குள் காய்ச்சல் காரணமாக கண் பார்வை இழந்தார். தூத்துக்குடியில் பிறந்த அவர், தனது பள்ளிப் படிப்பை பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் படித்தார்.
தொடர்ந்து விடாமுயற்சியுடன் கல்வியைத் தொடர்ந்த அவர் பட்டப்படிப்பு வரை படித்தார். “”கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் உயர் கல்வி நிறுவனத்தில் இளங்கலை ஆங்கிலம் படித்தேன். இதன்பின், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் படித்தேன்.
1989-ல் பட்டப்படிப்பை முடித்த பின்பு, சென்னை வந்தேன். சுருக்கெழுத்து மற்றும் தொலைபேசி ஆபரேட்டர் பயிற்சியில் சேர்ந்தேன். இரு பயிற்சிகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்” எனக் கூறும் மீனாட்சி சுந்தரி, தொலைபேசி ஆபரேட்டராக 2 வருடங்கள் அனுபவம் பெற்றுள்ளார்.
“”இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தொலைபேசி ஆபரேட்டர் வேலைக்கு விண்ணப்பித்தேன். தகுதியிருந்தும் மறுக்கப்பட்டது. ரயில்வே துறை ஏராளமான எழுத்தர் வேலைகளுக்கு விண்ணப்பித்தேன். அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்குள் நான் வரவில்லை. காரணம், உயர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதுதான்” என்றார் மீனாட்சி சுந்தரி.
இவரைப் போன்று இன்னும் எத்தனை பேர் இருக்கின்றனரோ? பார்வையற்றவர் மீதான அரசின் இந்தப் பார்வை சரியா?