சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில்
ஆகஸ்டு 6-ந் தேதி ஆலயப் பிரவேச போராட்டம்
திருமாவளவன் அறிவிப்பு
சென்னை, ஜுலை.18-
சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி தடைகளை தாண்டி உள்ளே நுழையும் ஆலயப் பிரவேச போராட்டம் செய்ய போவதாக திருமாவளவன் கூறினார்.
ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் கிராமப்புற கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களிலும் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கும், வழிபாடு செய்வதற்கும் உரிமை வழங்கி தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுசெயலாளர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான கோவில்கள் இந்து அற நிலையத்துறைக்கு சொந்தமானவை. ஆனால் அந்த கோவில்களில் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத நிலை உள்ளது.
சாமிக்கும் ஜாதி
காந்தியடிகள் காலத்தில் அனைத்து சாதியினரும் கோவிலில் நுழைந்து வழிபடுவதற்கு கோவில்களை திறந்து விட சொன்னது வரலாறு. அப்போது, தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எ.எஸ்.வைத்தியநாத அய்யர் தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம் செய்தனர்.
ஆனால் 60, 70 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் கூட, கிராமப்புறங்களில் உள்ள அம்மன், சிவன், அய்யனார், முருகன் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை. சாதீய வன்கொடுமை இன்னும் தலைவிரித்தாடுகிறது.
சேலம் மாநகரத்தில், கந்தம்பட்டியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை தன் வசம் எடுத்துக் கொண்டது. ஆனால் அந்த கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைந்து வழிபாடு செய்ய அனுமதி இல்லை. இந்து மதத்தில் மட்டும்தான் சாமிக்கும் ஜாதி சாயம் பூசுகின்ற கொடுமை நடக்கிறது.
புதிய சட்டம்
சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி என்னுடைய தலைமையில் தடைகளை தாண்டி கோவிலுக்குள் நுழைய இருக்கிறோம். ஆயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் இந்த ஆலய பிரவேச போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் அந்த நிலைமை ஏற்படாதவாறு அதற்கு முன்னதாக, அனைத்து சாதியினரும் அனைத்து கோவில்களிலும் நுழைந்து வழிபடுவதற்காக புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.
சிதம்பரம் கோவில்
கோவில்களுக்கு சொந்தமான 12 லட்சம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி, நிலமற்ற விவசாயிக்கு 2 ஏக்கர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வழங்கவேண்டும்.
சிதம்பரம் நடராஜர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் தமிழில் வழிபாடு செய்ய முடிவதில்லை. தேவாரம் போன்ற திருமறைகள் பாடுவது தடுக்கப்படுகிறது. அனைத்து கோவில்களிலும் தமிழில் வழிபடும் கட்டாயத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.
கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள், பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.