கருணாநிதியுடன் ரங்கசாமி சந்திப்பு: புதுவை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு தமிழக பகுதியில் இடம் கேட்டு கடிதம்
புதுச்சேரி, மார்ச். 7-
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று காலை சென்னை சென்றார். கோபாலபுரத்தில் உள்ள தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார்.
அப்போது அவரிடம் ஒரு கடிதம் கொடுத்தார்.அதில் கூறி இருப்பதாவது:-
புதுவையில் விமானத்தளம் விரிவாக்கப்பணி நடைபெற உள்ளது. இதற்கு போதுமான பகுதிகளை தமிழக அரசு அளிக்க கேட்டுக்கொள்கிறேன்.
கோட்டக்குப்பம் பகுதி யில் இணைப்பு சாலை பணிகள் நடந்து வருகிறது. இந்தப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
சென்னையில் புதுவை விடுதி கட்ட, உரிய இடம் ஒதுக்கித்தர வேண்டுகிறோம். திருக்கனூர் பகுதியில் தமிழகப்பகுதி சாலைகள் குறுகலாக உள்ளன. அவற்றை தமிழக அரசு அகலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தை பெற்றுக் கொண்ட கருணாநிதி, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி காரில் புதுவை திரும்பினார்.