Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Siddha’ Category

Experienced Intelligence – Basis, Facts, Research, Analysis, Observations

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007

அறிவுத்திறனுக்கு எது அடிப்படை?

ஜி.எஸ். பூர்ண சந்திரக்குமார்


எப்போது பார்த்தாலும் ஏதாவது ஏடாகூடமாகச் செய்யும் ஆசாமிகளைப் பார்த்து, “”உனக்கு மூளையில மசாலா ஏதாவது இருக்கா, இல்லையா?” என்று நாம் கிண்டலாகக் கேட்பது வழக்கம். சுமார் 1.5 கிலோகிராம் எடையுள்ள நம் மூளையில் மசாலா இருக்கிறதோ, இல்லையோ, நிறைய சாம்பல் இருக்க வேண்டும் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

சாம்பல் என்றதும் பயப்பட வேண்டாம். மூளையிலுள்ள சாம்பல்நிறத் திட்டுகளைதான். நமது மூளையில் உள்ள நரம்பு செல்கள் அனைத்தும் நூடுல்ஸ் மாதிரி கொத்து கொத்தாகக் காணப்படும். அவற்றின் எண்ணிக்கை ஏறக்குறைய 100 பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி அளவு. அதன் துணைத் திசுக்களையும் சேர்த்தால் எண்ணிக்கை ஒரு லட்சம் கோடியையும் தொட்டுவிடும். இவைகளே சாம்பல்நிறத் திட்டுகள் என்றழைக்கப்படுகின்றன.

நினைவுகளை ஒருமுகப்படுத்தி மூளையில் நன்கு பதிய வைக்கவும், அந்நினைவுகளைப் பயன்படுத்தி வேலையை ஒழுங்காகச் செய்யவும் மேற்சொன்ன சாம்பல் நிறப்பகுதிகள் மூளையில் நிறைய வேண்டும். அப்படிப்பட்ட சாம்பல்நிறப் பகுதிகளை அதிகம் பெற்றிருப்பவர்கள்தான் கிராண்ட் மாஸ்டர்களாக எல்லா இடங்களிலும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். எப்படி?

பொதுவாக ஐம்புலன்களின் மூலமாக ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான தகவல்கள் நரம்புத்தூண்டல் வடிவில் நமது மூளையை அடைந்து பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் புதுப்புதுத் தகவல்களைக் கிரகித்துக் கொள்ளும்போதும் மூளையானது அதற்கேற்றாற்போல் புதுப்புது நரம்புச் சந்திகளை உருவாக்கி, அந்நரம்புச் சந்திகள் மூலமாக தாம் பெற்ற தகவல்களை அனுபவங்களாகப் பதிவு செய்து கொள்கிறது. அவ்வனுபவங்களைக் கொண்டுதான் ஒவ்வொரு மனிதனும் வெற்றிகரமான மனிதனாக உலகில் பவனி வருகிறான்.

பிரிட்டிஷ் மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நம்முடைய மூளையை ஸ்கேன் செய்து மேலும் பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளைச் சொன்னபோது மூளையில் அம்மொழிக்கான நரம்புப் பகுதிக்குள் மட்டும் ரத்த ஓட்டம் பாய்ந்து அப்பகுதி வெளிச்சமானதைக் கண்டார்கள். புதிய செய்திகள், செயல்கள் முதலியவற்றை விரைவில் நினைவு வைத்துக் கொண்டு தேவைப்படும் போது விரைவில் பிரதிபலிக்கவும் கூடியதான சிறப்பு நியூரான்கள் நமது மூளையில் இருப்பதே இதற்குக் காரணம் என்று கண்டறிந்துள்ளனர். சரி. மூளையில் நினைவு எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது?

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல அறிவியல் அறிஞர்கள் மூளையின் இயல்பு பற்றியும், பட்டறிவும் படிப்பறிவும் மூளையில் எவ்வாறு நினைவாகப் பதிவு செய்யப்படுகிறது என்பது பற்றியும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.

யூரி ஒவ்சினிகோவ் எனும் அறிவியல் அறிஞர் 1965-ம் ஆண்டு ஒரு விளக்கத்தை வெளியிட்டார். பெப்டைடுகள் தான் நினைவிற்கு அடிப்படையாக விளங்குகின்றன என்பதே இவருடைய கருத்து. இந்த பெப்டைடுகள் அமினோ அமிலங்களால் ஆனவை. சுமார் 20 அமினோ அமிலங்கள் பல்வேறு விதங்களில் இணைந்து பல்வேறு வகைப் புரதங்களை உண்டாக்குகின்றன. இவற்றின் 15 அமினோ அமிலங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். இந்த 15 அமினோ அமிலங்களும் பல்வேறு விகிதங்களில் இணைந்து உருவாகும் புரதங்கள் எத்தனை மனிதர்களின் நினைவாற்றலுக்கு போதுமானதாய் இருக்கும் தெரியுமா? சுமார் 10 ஆயிரம் மனிதர்கள்.

அதாவது நம் வாழ்நாளில் நாம் இன்னும் எத்தனை கோடி புதிய தகவல்களைப் பெற்றுக் கொண்டாலும் அவற்றை மூளையில் பதிவு செய்வதற்குத் தேவையான புரதங்கள் தீர்ந்து போகாது. அத்தகைய சிறப்பு வாய்ந்த பெப்டைடுகளை சில ரசாயன மாற்றங்களால் மூளையில் சிதையாமல் பார்த்துக் கொண்டால் போதும், நம் வாழ்நாளில் நினைவுப்பஞ்சமே இராது.

மேற்சொன்ன பெப்டைடுகளைப் பற்றி ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானிகள் மேற்கொண்ட சில ஆய்வு முறைகளைப் பார்த்தால் “”இப்படியும் இருக்குமா” என்று நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும். ஒரு பரிசோதனையில் ஒரு குறிப்பிட்ட அனுபவமுடைய ஒரு பிராணியின் மூளைச்சாற்றை எடுத்து அதை அந்த அனுபவம் துளியுமில்லாத வேறொரு பிராணியின் மூளையில் செலுத்திப் பார்த்தனர். விளைவு என்ன தெரியுமா? மூளைச்சாறு செலுத்தப்பட்ட பிராணியானது, அம்மூளைச்சாறுக்குச் சொந்தமான முந்தைய பிராணியின் அனுபவம் முழுமையும் பெற்று அதைப்போலவே செயல்பட ஆரம்பித்துவிட்டது.

இப்போது நமக்கு ஒன்று தெளிவாகிவிட்டது. மூளையில் நினைவாகப் பதிவாகும் தகவல்கள் அனைத்தும் பெப்டைடுகளாகவே பதிவாகின்றன என்பதே அது. இந்தத் தகவல்களை ஒத்துப்பார்ப்பதில்தான் விலங்குகளுக்கும் நமக்கும், நமக்கும் கிராண்ட் மாஸ்டர்கள் போன்ற அறிவுஜீவிகளுக்கும் வித்தியாசம் ஏற்படக் காரணமாய் அமைந்து விடுகிறது. அறிவுஜீவிகளின் அறிவிற்குக் காரணம் இந்த பெப்டைடுகளை நிரம்பப் பெற்றிருக்கும் அவர்களின் மூளையிலுள்ள சாம்பல்நிறப் பகுதியானது அதிக அடர்த்தியைப் பெற்றிருப்பதே.

ஆக, அறிவுத்திறன் என்பது தனிப்பட்ட ஓர் இனத்திற்கோ, ஒரு குழுவிற்கோ சொந்தமில்லை என்பது உறுதியாகிவிட்டது. சரிவிகித உணவும், முறையான பயிற்சியும், வள்ளுவர் கூறும் அசைவிலா ஊக்கமும் இருந்தால் வாழ்வில் வெற்றிக்குத் தடையேதுமில்லை.

(கட்டுரையாளர்: சித்த மருத்துவர், எஸ்.கே. சித்த மருத்துவமனை, கோபி).

Posted in Analysis, Ayurveda, Ayurvedha, Brain, Doctor, EQ, Experience, Intellectual, Intelligence, Intelligent, Medicine, Research, Science, Siddha, Social | Leave a Comment »