கமல் மகள் கதாநாயகி!
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி சினிமாவில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இசைத்துறையில் ஆர்வம் கொண்ட ஸ்ருதி அமெரிக்காவில் இசை குறித்து பயின்று வந்தார். தனி இசை ஆல்பம் ஒன்றை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஸ்ருதி, “தசாவதாரம்’ படத்தில் மல்லிகா ஷெராவத்துக்காக ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். ஸ்ருதியை சினிமாவில் நடிக்க வைக்கப் பல இந்தியப் பிரபலங்கள் முயற்சித்தும் அவர் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் மாதவன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதி கதாநாயகியாக நடிப்பார் என்று தெரிகிறது.
இதுகுறித்து விசாரித்தபோது… “”மராட்டிய மொழியில் வெளியாகி 27 க்கும் அதிகமான சர்வதேச விருதுகளைப் பெற்ற “டோம்பிவிலி ஃபாஸ்ட்’ படத்தை இயக்கியவர் நிஷிகாந்த் காமத். இந்தப் படத்தைத் தமிழில் “எவனோ ஒருவன்’ என்ற பெயரில் மாதவன் தயாரித்துள்ளார். இதையடுத்து மீண்டும் நிஷிகாந்த் காமத் -மாதவன் கூட்டணியில் புதிய படம் ஒன்று தயாராகிறது. இந்தப் படத்தில் ஸ்ருதி கதாநாயகியாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று இயக்குநர் தரப்பு விரும்பியது. கதாநாயகியாக நடிக்க ஸ்ருதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஸ்ருதி சம்மதிக்கும்பட்சத்தில் ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும்” என்றது கமல் வட்டாரம்.