Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Shoulder’ Category

Q&A with Doctor on Shoulder Pain – Medical Options (Dinamani Kathir)

Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007

இது புதுசு: முதுகு வலிக்கு இனி முற்றுப்புள்ளி!

ந.ஜீவா

மூக்குள்ளவரை சளி இருக்கும் என்பார்கள்.

இனி முதுகு இருக்கும் வரை முதுகு வலி இருக்கும் என்று சொல்வார்கள் போலிருக்கிறது.

அந்த அளவுக்கு முதுகுவலி இன்றைய நவீன உலகில் பரவலான நோயாகிவிட்டது. அதுவும் நாள் முழுக்க நாற்காலியைத் தேய்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு முதுகுவலி உடன்பிறவா சகோதரன் போல ஆகிவிட்டது. அலுவலகத்திற்கு லீவு எடுப்பவர்கள் பலமுறை பாட்டியைச் சாகடித்த பின்னால் இப்போது சொல்லக் கண்டுபிடித்திருக்கும் லேட்டஸ்ட் காரணம், “”பேக் பெயின் தாங்க முடியலை சார். டாக்டர்ட்ட போகணும்.”

முதுகுவலி பிரச்சினையை ஆப்ரேஷன் இல்லாமல், ஊசி, மருந்து, மாத்திரை இல்லாமல் தீர்க்க வந்திருக்கிறது ஓர் அதிசய இயந்திரம். ஆசியாவிலேயே… அதுவும் இந்தியாவிலேயே… முதன்முறையாக ஹைதராபாதிலும் இப்போது சென்னையிலும் வந்திருக்கிறது. முதுகுவலி பற்றியும் அந்த இயந்திரத்தின் “மகிமை’ பற்றியும் நம்மிடம் விரிவாகப் பேசினார் சென்னை அண்ணாநகர் தி பேக் அன்ட் நெக் கிளினிக்கைச் சேர்ந்த டாக்டர் ஹரிஹரன்.

முதுகு வலி இன்று பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு என்ன காரணம்?

இன்றைக்கு 13 வயது குழந்தை முதல் 60 வயது தாத்தா வரை முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். இதற்குக் காரணம் உடலுழைப்பு இல்லாததே.

என்னுடைய தாத்தா 10 மைல் 15 மைல் என்றாலும் நடந்தேதான் பள்ளிக்குப் போய் படித்தார். வேலைக்கும் போய்வந்தார். என்னுடைய அப்பா சைக்கிளில்தான் எப்போதும் சென்றார். நான் ஒரு கி.மீ. தூரம் என்றாலும் நடந்து செல்லாமல் வாகனங்களில்தான் சென்றேன். உடல் உழைப்பு இவ்வாறு படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது.

கிராமப்புறங்களில் நாள் முழுக்க குனிந்து நடவு செய்யும் பெண்களுக்கு முதுகுவலி வருவது கிடையாது. அரிசி குத்துவதும், ஆட்டுரலில் மாவு அரைப்பதும், ஏன் அம்மியில் மிளகாய் அரைப்பதுமே இல்லாமற் போய்விட்டது. இவ்வாறு உடல் உழைப்பு இல்லாததே முதுகுவலி வர முக்கியக் காரணம்.

உடல் உழைப்பு எதுவும் செய்யாமல் நாம் முதுகை இன்சல்ட் பண்ணுகிறோம். பதிலுக்கு முதுகு நமக்குத் தொல்லை கொடுக்கிறது.

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி வராமல் இருக்க அதற்கெனச் சேர்கள் தயாரிக்கப்படுகின்றன. இருந்தாலும் இதனால் பெரிய அளவுக்குப் பயனில்லை. ஏனெனில் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் எப்போதும் முதுகைப் பொருத்தமாகச் சாய்த்து வைத்திருப்பது கிடையாது. பல நேரங்களில் சீட்டின் நுனியில் உட்கார்ந்துதான் வேலை செய்கிறார்கள். இதனால் முதுகு வலி மட்டுமல்ல, கழுத்து வலியும் சேர்ந்து வரும்.

நமது மூளையில் இருந்து வரும் நரம்புகள் தண்டுவடம் என்கிற பெயருடன் முதுகெலும்பின் உள்ளே இருக்கின்றன. இந்த முதுகு எலும்பு 33 சிறிய எலும்புகளால் ஆனது. இந்த எலும்புகள் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். இரண்டு எலும்புகளுக்கு இடையே மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் இருக்கிறது. தண்டுவடம் முதுகு எலும்பின் நடுவில் பாதுகாப்பாக இருக்கிறது. இந்த நரம்புகள் இரண்டு குட்டி எலும்புகளுக்கு நடுவில் இருந்து வெளியேறுகின்றன. இந்த நரம்புகள்தான் தோள்பட்டை முதல் கால்கள் வரை உள்ள அனைத்துத் தசைகளையும் இயக்குகின்றன.

30 – 40 வயதுள்ளவர்களுக்கு ஜவ்வில் நரம்புகள் உராயும். அதனால் கழுத்தின் பின்பக்கத்தில் தாங்க முடியாத வலி ஏற்படும். கால்களில் வலி ஏற்படும். கால்கள் மரத்துப் போகும்.

50 – 60 வயதுள்ளவர்களுக்கு முதுகு எலும்புகள் ஒரு எலும்பிற்கு மேல் இன்னொரு எலும்பு ஏறிக் கொள்ளும். இதனால் இந்த இரண்டு எலும்புகளையும் இணைக்கும் ஊஹஸ்ரீங்ற் த்ர்ண்ய்ற் லூஸ் ஆகி உடைந்து போய்விடும். இதனால் நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு, கடுமையான வலி உண்டாகும்.

சிலருக்கு வேறு ஏதாவது ஆப்ரேஷன் செய்வதற்காக மயக்க ஊசியை முதுகில் போடுவார்கள். இந்த ஊசி முதுகில் உள்ள டிஸ்க்கில் பட்டுவிட்டால், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு வலி இருக்கும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்குக் குழந்தையின் வெயிட் அதிகமாவதால் முகுகெலும்பில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் முதுகெலும்பு ஜவ்வில் நரம்பு அழுந்தும். வலி ஏற்படும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நிறைய ரத்த இழப்பு ஏற்படும். இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. ரத்தம் செல்வது குறைவாக இருப்பதால் முதுகில் வலி ஏற்படும். இப்படி முதுகுவலிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

முதுகுவலிக்கு என்ன சிகிச்சை?

பல்வேறு காரணங்களால் முதுகு வலி வந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் சென்றால், முதலில் பெட் ரெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். பிஸியோதெரபி வைத்துக் கொள்ளலாம் என்பார்கள். இடுப்பில் பெல்ட் (ட்ரேக்ஷன்) போட்டுக் கொள்ளலாம் என்பார்கள். வலி தெரியாமல் இருக்கவும் உடலுக்கு ஊக்கம் தரவும் ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடச் சொல்வார்கள். கடைசிக்கும் கடைசியாக ஆப்ரேஷன் பண்ணச் சொல்வார்கள். ஸ்டீராய்டு மாத்திரைகள் அந்த நேரத்தில் வலியைக் குறைத்தாலும் மீண்டும் வலி வந்துவிடும். தவிர இந்த மாத்திரைகள் உடலுக்கு மிகவும் தீங்கானவை.

ஆனால் இம்மாதிரி ஊசி, மருந்து, மாத்திரை, ஆபரேஷன் என்ற வழக்கமான மருத்துவம் எதுவுமில்லாமல் முதுகுவலியை இப்போது தீர்க்க முடியும்.

அது எப்படி?

முதுகு வலி பிரச்னையைத் தீர்க்க வந்திருப்பதுதான் ஈதல9000 என்ற இயந்திரம். சுமார் எண்பத்து ஐந்து லட்சம் மதிப்புள்ள இந்த இயந்திரத்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறோம்.

இந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதின் பின்னணி சுவையானது. இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர்கள் அமெரிக்காவில் உள்ள நாசா விஞ்ஞானிகள்தாம்.

விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆறுமாதம் ஒரு வருடம் என்று போகிற விண்வெளி வீரர்களை அவர்கள் திரும்பி வந்ததும் பரிசோதித்துப் பார்த்தார்கள். அப்போது அவர்களுடைய முதுகு எலும்பு ஓர் அங்குலம் வரை வளர்ந்திருப்பது தெரிய வந்தது. இதற்குக் காரணம் புவியீர்ப்பு விசை விண்வெளியில் இல்லாததும், அங்கு நிலவும் குறை மண்டல அழுத்தமும்( Negative Pressure)தான். இந்தக் குறை மண்டல அழுத்தமானது முதுகின் மேல் உள்ள தசைநார்களை விரிவடையச் செய்கிறது. காய்ந்து சுருங்கிய நிலையில் உள்ள டிஸ்க்குகளைப் பதப்படுத்தி விரிவடையச் செய்கிறது. இதை அடிப்படையாக வைத்து இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் எவ்வளவு நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்?

டிஆர்எக்ஸ் 9000 இயந்திரத்தில் 20 நாட்களில் இருந்து ஒரு மாதம் வரை சில நிமிடங்கள் ஒருவர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஜவ்வுப் பகுதி விரிவடைகிறது. ஜவ்வுப் பகுதியில் அழுத்திக் கொண்டு இருக்கும் வலிக்குக் காரணமான நரம்புகள் விடுபடுகின்றன. இதனால் முதுகு வலி அடியோடு போய்விடுகிறது.

இந்த சிகிச்சை செய்ததற்குப் பின் திரும்பவும் ஜவ்வு, தசைகள் சுருங்கி மீண்டும் முதுகு வலி வராதா?

இந்தச் சிகிச்சையின் போது நாங்கள் தசைகள் இறுகவும் மீண்டும் பழைய நிலையை அடையாமல் இருக்கவும் உடற்பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்கிறோம். அந்த உடற்பயிற்சியைத் தினமும் தவறாமல் செய்வதால் முதுகு வலி திரும்பவும் வரவே வராது.

முதுகு வலிக்காக ஏற்கனவே ஆபரேஷன் செய்தும் வலி தீராதவர்கள் எங்களிடம் சிகிச்சைக்காக வருகிறார்கள். அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிற இந்த இயந்திரம் இந்தியா உட்பட 16 நாடுகளில்தான் உள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் சென்னையில் முதன்முதலாக எங்களிடம்தான் இருக்கிறது.

Posted in Auto, Backpain, Bed, Bike, Bodyache, Chat, Comfort, Computer, Deskjob, Diet, Doc, Doctor, Driver, Exercise, Injury, Interview, Long distance, medical, Medicine, Options, Pain, Pillow, Posture, Seating, Shoulder, Sleep, Sofa, Software, Spinal, Traction, TV, Two-wheeler, Tylenol, Yoga | 2 Comments »

Kreedam – Ajith hurts his back: Shooting gets affected

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 7, 2007

முதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை

சென்னை, பிப். 6-

நடிகர் அஜீத்குமார் “கிரீடம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக நடந்தது. நேற்று சண்டைக்காட்சி படமாக்கினார்கள். அப்போது அஜீத்குமார் டூப் போடாமல் நடித்தார்.

காரின் மேல் இருந்து குதித்தபோது முதுகு பகுதியில் வலி ஏற்பட்டது. அவரால் அசைய முடியவில்லை. வலி தாஙக முடியாமல் அலறினார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் பதட்டமடைந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் வலி தீரவில்லை.

இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அஜீத்குமாரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். இன்று மாலை சென்னை திரும்புகிறார்.

பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு முதுகு பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற போது விபத்தில் சிக்கினார். முதுகுதண்டில் பாதிப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்தார்.

அதன்பிறகு படப்பிடிப்பில் பங்கேற்றார். ஒரு சண்டைக்காட்சியில் நடித்த போது விபத்துக்குள்ளானார். முதுகுதண்டு வலித்தது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் முதுகில் 9 இடங்களில் ஆபரேஷன் நடந்தது. தீவிரசிகிச்சைக்குப்பின் குண மடைந்தார். அதன்பிறகு சண்டைக்காட்சிகளில் `டூப்’ போடால் நடிப்பதை தவிர்த்தார். தற்போது கிரீடம் படத்தில் `டூப்’ வேண்டாம் என்று கூறி காரில் இருந்து குதித்து விபத்தில் சிக்கிக் கொண்டார்.

அஜீத்துடன் கிரீடம் படக் குழுவினரும் சென்னை திரும்புகிறார்கள். ஏற்கனவே இதே படத்தில் ஒருமுறை விபத்து ஏற்பட்டு அஜீத்குமார் சிகிச்சை பெற்றார். விலை உயர்ந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டது. இப்போது மறுபடியும் முதுகுவலி ஏற்பட்டுள்ளது.

Posted in Accident, Ajeethkumar, Ajith, Ajitkumar, Fight, Greedam, Hurt, Kreedam, Location, Movie Spot, Shooting, Shoulder, Sick, Tamil Actor, Tamil Actress | 4 Comments »