ஆவணம்: அது இருண்ட காலம்!
ரவிக்குமார்
இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துவங்கி அறுபது ஆண்டுகள் ஆகின்றது. மாபெரும் ஜனநாயகக் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு ஐம்பத்தேழு ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் நாட்டில் எல்லோரின் சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் இருக்கின்றதா? இரட்டைக் குவளை முறை ஒழிந்துவிட்டதா? உத்தரப்பிரதேசத்திலிருந்து அசாமிற்குச் செல்லும் மக்களைக் கொன்று குவிக்கும் உல்ஃபா தீவிரவாதம் மறைந்துவிட்டதா? ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் சாதியின் பெயராலும், இனத்தின் பெயராலும் அவர்களால் விதைக்கப்பட்ட வேற்றுமைகள் இன்றுவரையிலும் அப்படியேதான் இருக்கின்றன” என்னும் ஆதங்கத்தை சற்று உரக்கவே சொல்கிறது ஜெகமதி கலைக்கூடம் வெளியிட்டிருக்கும் “ரேகை’ என்னும் ஆவணப்படம்.
“”பிரிட்டிஷ் ஆட்சி செய்த நாடுகளில் அதற்கு எதிராகச் செயல்பட்ட இனக்குழுக்களையும், சமூகங்களையும் அடக்குவதற்கு பலவிதமான வழிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் கடைப்பிடித்தது. அதில் முக்கியமான ஒன்றுதான் “குற்றப் பழங்குடிகள் சட்டம்.’ இந்தச் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்ட குழுக்களில் இருக்கும் ஆண்கள் அத்தனை பேரும், அவர்கள் பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் உள்ள பதிவேட்டில் தங்களின் கைவிரல் ரேகையைப் பதித்துவிட்டு, இரவு முழுவதும் தங்கியிருக்கவேண்டும். இந்த அடக்குமுறைச் சட்டத்தை உலகம் முழுவதும் தான் ஆட்சி செய்த நாடுகளில் பிரயோகித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். இந்தியாவில் முதல் சுதந்திரப் போர் முடிவடைந்ததும், ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடும் குழுக்கள் எவையெவை என நாடு முழுவதும் சர்வே எடுக்கப்பட்டது. விவசாய நாடான இந்தியாவில், விவசாயம் செய்வதற்குப் பயன்படும் மண்வெட்டி, கதிர் அறுக்கும் அருவா வைத்திருந்த விவசாயிகள் கூட பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். இந்தியா முழுவதும் 200 க்கும் அதிகமான சாதிக் குழுக்களை இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் 90-க்கும் அதிகமான சாதிகளைப் பதிவு செய்திருக்கின்றனர். ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பிடியில் நாம் அனைவருமே குற்றப்பரம்பரைகளாக இருந்தவர்கள் தான். அப்போது ஒற்றுமை என்ற ஒன்று இருந்ததால்தான், ஆசியாவிலேயே இந்தச் சட்டத்தை நம்மவர்களால் முதன்முதலாக எதிர்க்கமுடிந்தது. ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு, அன்றைக்கு ஒற்றுமையாக இருந்த சாதிகளுக்குள் இன்று பகைமையை வளர்த்துக் கொண்டிருப்பது சரியா? என்ற கேள்வி, ரேகை ஆவணப்படத்தைப் பார்ப்பவர்களின் மனதில் எழும்ப வேண்டும். இதுதான் இந்தப் படத்தின் நோக்கம்” என்றனர் தயாரிப்பாளர் தீனதயாள பாண்டியனும், இயக்குனர் தினகரன் ஜெய்யும்.
ரேகை ஆவணப்படமாக இருந்தாலும், அதில் முழுக்க முழுக்க ஆவணங்களுக்கும், குறிப்புகளுக்கும் மட்டுமே இடம் தராமல், தேவையான இடங்களில் போராட்டக் காலத்தை நம் கண்முன்னே நிறுத்தும் வகையில் சிறந்த நடிகர்களைப் பயன்படுத்தி “டாக்கு-டிராமா’ யுக்தியில் படம்பிடித்துள்ளனர். நிறைய காட்சிகளுக்கு தெய்வாவின் ஓவியங்களையும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
“”இந்தக் குற்றப் பழங்குடி சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த சாமான்ய மக்களிடமும் இருந்தது. சுபாஷ் சந்திர போஸ் பிறந்த சாதியையும் இந்தச் சட்டத்தை எதிர்த்ததற்காக குற்றப் பழங்குடியினர் லிஸ்ட்டில் சேர்த்திருந்தனர். ஆந்திராவில் உச்சாலியா என்னும் தாழ்த்தப்பட்ட இனத்தின் வேரையே இந்தச் சட்டம் நிர்மூலமாக்கியிருக்கிறது.” என்றார் இயக்குனர் தினகரன் ஜெய்.
மதுரைக்கு அருகிலிருக்கும் பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பதினேழு பேர்கள்தான், ஆசியா கண்டத்திலேயே இந்தச் சட்டத்தை எதிர்த்து முதன்முதலாகக் களப்பலி ஆனவர்கள். இவர்களில் மாயக்காள் என்னும் பெண்ணும் ஒருவர். மாயக்காளாக “விருமாண்டி’ படத்தில் நடித்த சுகுணா பாத்திரத்தின் தன்மை உணர்ந்து மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இந்த வரலாற்றுச் சம்பவத்தை நம் கண்முன்னே நேர்த்தியான ஆவணமாக்கியிருக்கிறது-“ரேகை’