புதுப்பிக்கப்பட்ட நாள்: 18 மார்ச், 2008
மட்டக்களப்பு உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் ஜனாதிபதி ராஜபக்ஷ முன் பதவியேற்பு
![]() |
மட்டக்களப்பு நகர மேயராக பதவியேற்ற சிவகீதா |
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக நடாத்தப்பட்ட தேர்தலில் வெற்றிபெற்று தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரச அதிகாரிகள், அரசியல் தலைவர்களெனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இந்த வைபவத்தின்போது உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்த வெற்றிக்கு அடுத்தப்படியாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றி அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளதோடு, விரைவில் வடபகுதி மக்களுக்கும் ஜனநாயக உரிமை, அபிவிருத்தி மற்றும் சுதந்திரம் போன்றவற்றைப் பெற்றுக்கொடுக்க தனது அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகர மேயராகப் பதவியேற்ற சிவகீதா பிரபாகரன் அவர்கள் கிழக்கில் இடம்பெற்ற தேர்தலின்போது கிடைக்கப்பெற்ற வெற்றியானது, தமது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குக் கிடைத்த வெற்றி என்பதனைவிட, கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களுக்குக் கிடைத்த ஒட்டுமொத்த வெற்றி என்று கூறினார்.
அத்துடன் இந்த வெற்றியினூடாக அப்பகுதி மக்களுக்குச் சேவையாற்றுவதற்கு தமக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்றைய இந்த வைபவத்தின்போது, இந்த ஒன்பது உள்ளூராட்சிசபைகளின் உடனடி நடவடிக்கைத் தேவைகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலா சுமார் 25 லட்சம் ரூபாயையும், ஒவ்வொரு உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும், அவர்கள் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக தலா ஒரு லட்சம் ரூபாய்களும் சன்மானமாக வழங்கியதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 14 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற இந்த ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், எட்டு உள்ளூராட்சி சபைகளில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும், மட்டக்களப்பு மாநகர சபையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டு முன்னணியும் வெற்றிபெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மீண்டும் சிவில் நிர்வாகத்திடம் மட்டக்களப்பு மாநகரசபைக் கட்டிடம்
![]() |
![]() |
மட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடம் |
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்ததையடுத்து, கடந்த 17 வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு மாநகர சபைக் கட்டிடத் தொகுதி இன்று மாநகர சபை நிர்வாகத்திடம் அதிகாரபூர்வமாக மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.
மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை 1990இல் முறிவடைந்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மாநகர சபைக் கட்டிடத்தொகுதி உட்பட சில கட்டிடங்கள் இராணுவத் தேவைகளுக்காக எடுக்கப்பட்டிருந்தன.
இதன் காரணமாக மாநகரசபை, பிரதேச செயலக கட்டிடத் தொகுதிக்கு மாற்றப்பட்டு தொடர்ந்தும் அக் கட்டிடத்திலேயே தற்காலிகமாக இயங்கி வந்தது.
1990 ம் ஆண்டு முதல் 3 வது படைப்பிரிவு இராணுவ தலைமையகத்தின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இக் கட்டிடத் தொகுதி கடந்த ஆண்டு முற்பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.
மன்னாரில் தொடரும் கடும் மோதல்கள்
![]() |
![]() |
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற, விடுதலைப் புலிகளின் இருவேறு தாக்குதல் சம்பவங்களில், இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 13 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மன்னார் அருவியாற்றுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டிருந்த படையினர் மீது, இன்று காலை 7.10 மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
இந்தச் சம்பவத்தில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டிருக்கின்றது.
இதேவேளை, மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இராணுவ முன்னரங்க பிரதேசத்தில் நேற்றிரவு 8 மணிமுதல் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது, விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை தாக்குதலில் 11 இராணுவத்தினர் காயமடைந்ததாக மன்னாரிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த படையினர் மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது பெய்து வரும் அடை மழைக்கு மத்தியிலும் இந்த பகுதியில் நேற்றிரவு முதல் இன்று காலை வரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
—————————————————————————————————————-
புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 மார்ச், 2008
இலங்கை அரச தொலைக்காட்சி ஊழியர்கள் தாக்கப்பட்ட சர்ச்சை: தொழிற்சங்கத்தினரைச் சந்தித்துள்ளார் ஜனாதிபதி
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் சிலர் அண்மையில் தாக்கப்பட்டது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அந்நிறுவனத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இலங்கை ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது சர்ச்சைக்கு சுமூகமான தீர்வு ஒன்று காணப்பட்டிருப்பதாகவும், தேசிய தொலைக்காட்சி சேவை முழுமையாக இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் சந்திரபால லியனகே தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாகவும், தேசியத் தொலைக்காட்சி சேவைகளை பாதிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு துணைபோக வேண்டாம் என்று ஊழியர் சங்கத்தினரிடம் அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் சந்திரபால லியனகே கூறினார்.
திங்கட்கிழமை முன்னதாக, தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் பலர் தத்தமது கருமங்களிற்காக நிறுவனக் கட்டிடத் தொகுதிக்குள் செல்லமுடியாதவாறு பொலிசாரினால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தங்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அணித்தாகவுள்ள இந்தக் கட்டிடத்தொகுதியினைச் சுற்றி வழமைக்கும் அதிகமான பொலிசாரும், இராணுவத்தினரும், கலகம் அடக்கும் பொலிசாரும் நிறுத்தப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது.
போக்குவரத்துத் தடைகளால் பாதிப்பு: வவுனியா வழக்கறிஞர்கள் புகார்
![]() |
![]() |
ஏ9 வீதியில் போக்குவரத்துத் தடைகள் நீடிக்கின்றன |
இலங்கையின் வடக்கே ஏ9 வீதியின் மதவாச்சி சோதனைச் சாவடியில் தொடரும் வாகனப் போக்குவரத்துத் தடை காரணமாக வவுனியா மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணிகள் இயல்பாக வெளி மாவட்ட நீதிமன்றங்களுக்குச் சென்றுவர முடியாதிருப்பதாகவும் வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தப் பிரயாணக் கஷ்டங்கள் குறித்து உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சட்டத்தரணிகள் தமது வாகனங்களில் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகப் பிரயாணம் செய்வதற்கு உரிய அனுமதியைப் பெற்றுத் தருமாறு பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்களிடம் கடிதம் மூலமாகக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக வாகனப் போக்குவரத்துக்கான தடை தொடர்வதனால், முக்கிய வழக்கு விசாரணைகளுக்காக கொழும்பில் இருந்து சிரேஷ்ட சட்டத்தரணிகள் வவுனியாவுக்கு வருவதற்குத் தயக்கம் காட்டுவதாகவும், இதனால் பல வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டு நீதிமன்றச் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், வவுனியா சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் முருகேசு சிற்றம்பலம் தெரிவித்தார்.
இவை குறித்த மேலதிக விபரங்களை வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் வழங்கக் கேட்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 மார்ச், 2008
அனுரா பண்டாரநாயக காலமானார்
![]() |
![]() |
இலங்கையின் மிக முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் அனுரா |
இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவருமான அனுரா பண்டாரநாயக ஞாயிறன்று கொழும்பில் காலமானார்.
அண்மைக் காலமாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த இவருக்கு வயது 59.
1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த இவர், பலதடவை பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துவந்துள்ளார்.
1983-89 காலப் பகுதியில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய இவர், 2000ஆம் ஆண்டில் நாடாளுமன்ற சபாநாயகராகவும் பதவி வகித்தார்.
இவரது தந்தை எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக, தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் பிரதமர்களாக விளங்கினர். பின்னர் இவரது சகோதரியான சந்திரிகா குமாரதுங்க சுமார் 11 வருடங்கள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக விளங்கினார். ஆனாலும் பண்டாரநாயக குடும்பத்தின் ஒரேயொரு புதல்வரான அனுர பண்டாரநாயகவின் அரசியல் வாழ்க்கை என்பது பலத்த சிக்கல்கள் நிறைந்ததாகவே இருந்துவந்தது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
மன்னார் மோதல் விபரங்கள்
இலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் நகரிலும், வவுனியாவிலும் ஞாயிறன்று நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் இராணுவச் சிப்பாய் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கொல்லப்பட்டனர். இதில் இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
மன்னார் புறநகர்ப் பகுதியில், தலைமன்னார் வீதியில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஞாயிறு காலை சுட்டுக் கொல்லப்பட்டதாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்தவர்கள், இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தைச் செய்துள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
இதேவேளை, வவுனியா, தாண்டிக்குளம் – கல்மடு வீதியில், மருக்காரம்பலை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 3 படையினர் காயமடைந்ததாக இராணுவத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 14 மார்ச், 2008
இலங்கையில் ஐரோப்பிய வெளியுறவு அதிகாரிகள்
![]() |
![]() |
மனோ கணேசன் |
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு இயக்குநரக அதிகாரிகள் ஹெலென் கேம்பெல் அவர்களும், ஆண்ட்ரியா நிகோலஜ் அவர்களும் தற்போது இலங்கை வந்திருக்கிறர்கள்.
மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் இவர்களை சந்தித்து பேசியிருகிறார்.
இந்த சந்திப்பின்போது விவாதிக்கபட்ட விடயங்கள் குறித்து தமிழோசையிடம் பேசிய மனோ கணேசன், இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராய்வதற்காக இந்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வந்திருப்பதாகக் கூறினார்.
இலங்கையின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த விசாரணைகளைக் கண்காணித்துவந்த சுயாதீன மாண்புமிக்கோர் குழுவினர் தமது பணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவை ஏற்பாடு செய்து விசாரணைகளைக் கண்காணிக்கச் செய்வது குறித்து இலங்கை அரசு மாற்று யோசனை தெரிவித்திருப்பது பற்றி ஐரோப்பிய அதிகாரிகள் தன்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதாகவும் மனோ கணேசன் கூறினார்.
அவர் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கை மனித உரிமை நிலவரம்: அமெரிக்கக் குற்றச்சாட்டு அவதூறு என்கிறது இலங்கை அரசு
![]() |
![]() |
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஒ பிளேக் |
இலங்கையின் மனித உரிமைகள் சூழலை விமர்சிப்பதிருப்பதன் மூலம், அமெரிக்கா, விடுதலைப் புலிகளுக்கு ஒரு வாழ்க்கைச் சந்தர்ப்பத்தை கொடுக்கிறது என்று இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்க அரசுத்துறையின் வருடாந்திர அறிக்கையில், இலங்கையின் மனித உரிமை நிலவரம் 2007ல் மோசமடைந்துள்ளது என்று கூறப்பட்டிருப்பது இலங்கை அமைச்சர்களுக்கு எரிச்சலைத் தந்துள்ளது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய அவதூறு, குத்தல் பேச்சு, மிகையான விமர்சனம் என்றெல்லாம் அமெரிக்க அரசுத்துறையின் அறிக்கையை இலங்கை வருணித்துள்ளது.
அரசாங்க தரப்பினர் செய்த சட்டவிரோத ஆட்கொலைகள், அவர்களின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் சிறார்களைப் படையில் சேர்த்தது போன்றவற்றை அமெரிக்க அரசுத்துறை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசின் பதிலடிக்குப் பின்னரும், தமது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே தமது நிலைப்பாடு, அதிலிருந்து தாங்கள் பின்வாங்கவில்லை என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாணவர்கள் கொலை: மாணவரின் தந்தை வீடியோ வாக்குமூலம்
2006ல் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டது தொடர்பான மரண விசாரணையில், ராஜீஹர் என்ற மாணவனின் தந்தையான டாக்டர் மனோகரன் வீடியோ மூலம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அந்தத் தமிழ் மாணவர்களை விடுதலைப் புலிகள் என்று சந்தேகித்து இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் தன்னிடம் ஒப்புக்கொண்டதாக, இலங்கையை விட்டு தற்போது வெளியேறிவிட்ட மனோகரன் கூறியுள்ளார்.
கொழும்பில் வீடு தருகிறோம், இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று தன்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திருகோணமலை சம்பவம் மற்றும் பிற பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைக் கண்காணித்துவரும் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு, அரசாங்கம் விசாரணைகளில் தலையிடுவதாகவும், சாட்சிகளைப் பாதுகாக்கத் தவறுவதாகவும் கூறி, தமது பணியிலிருந்து விலகுகின்றனர்.
அடைமழை அல்லலில் மன்னார் அகதிகள்
![]() |
![]() |
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் வழமைக்கு மாறாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அங்குள்ள தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள முசலி பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியதை அடுத்து, அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800 குடும்பங்கள் நானாட்டான் பகுதியில் பல இடங்களில் கொட்டில்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அத்துடன், மன்னார் மாவட்டத்தின் விடுதலைப் புலிகளுடைய பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு அண்மையில் அவ்வப்போது வந்துள்ள சுமார் 18 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் களிமோட்டை என்னுமிடத்தில் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் குடும்பங்கள் தாழ் நிலப்பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதனால், இவர்கள் தங்கியுள்ள கொட்டில்கள், கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்திருப்பதாகவும், இதன் காரணமாக அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரச அதிகாரிகள் தொண்டு நிறுவனங்கள இவர்களுக்குத் தேவையான அவசர நிவாரண உணவு உதவிகளை வழங்கிவருகின்ற போதிலும், இவர்களுக்கான மாற்று இருப்பிட வசதிகளைச் செய்வதில் சிக்கல்கள் எழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இடம்பெயர்ந்தவர்கள் அவர்கள் விரும்பிய இடத்தில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச முறைமை இங்கு கைக்கொள்ளப்படாததன் காரணமாக சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கான மாற்று இருப்பிட வசதிகளைச் செய்ய முடியாதிருப்பதாக மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் தெரிவிக்கின்றது.
இது குறித்து அந்த ஒன்றியத்தின் தலைவர் அருட்தந்தை விக்டர் சோசை தெரிவிக்கும் மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
—————————————————————————————————————————————————————-
புதுப்பிக்கப்பட்ட நாள்: 14 மார்ச், 2008
இலங்கை மனித உரிமைகள் நிலவரம்: அமெரிக்க கருத்துக்கு இலங்கை அதிருப்தி
இலங்கை மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அண்மையில் அமெரிக்க அரசுத்துறையால் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஓ பிளேக் அவர்களை, இன்று அழைத்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அவர்கள், அவரிடம் இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த விடயம் குறித்து அமெரிக்கத் தூதுவருடன் தான் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தமிழோசைக்கு கூறிய இலங்கை வெளியுறவு அமைச்சர், அமெரிக்க அரசுத்துறையின் அந்த அறிக்கை, ஆதரம் எதுவும் அற்றது என்றும், இராணுவ ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் தடுமாறிப்போயிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, அது புத்துயிர் அளிப்பதாக அமைந்து விட்டது என்றும் அமெரிக்கத் தூதுவரிடம் தான் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த விவகாரம் குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இலங்கை வெளியுறவு அமைச்சருடனான, அமெரிக்கத் தூதுவரின் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், ஆயினும் தமது நிலைப்பாட்டில் அமெரிக்க அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை கிழக்கு மாகாண சபை தேர்தல்: வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன
![]() |
![]() |
இலங்கையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இலங்கை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.
இது தொடர்பில் மார்ச் மாதம் 13ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவித்தலில், மார்ச் மாதம் திகதி 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த கிழக்கு மாகாணத்துக்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று அந்த அறிவித்தலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
1987ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து உருவாக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணம், கடந்த வருடம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை அடுத்து இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.
அவற்றில் கிழக்கு மாகாணத்துக்கு தற்போது தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் வேட்பு மனுக்களைக் கோரியுள்ளது.
இந்தத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, கடந்த வெள்ளிக்கிழமை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேர்தல் ஆணையர் தயானந்த திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்ததாக முன்னர் செய்திகள் வந்திருந்தன.
கிழக்கு மாகாண சபைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 14 உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 17 உறுப்பினர்களும் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.
இந்தத் தேர்தல் அறிவிப்புக் குறித்து சில தமிழ் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை நேயர்கள் செய்திரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கை அரச தொலைக்காட்சி உதவிப் பணிப்பாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி
![]() |
![]() |
தாக்கப்பட்ட அனுரசிறி ஹெட்டிகே |
இலங்கை அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினி நிறுவனத்தின் ஊழியர்கள் அண்மைக்காலமாகத் தாக்கப்பட்டுவருவதன் தொடர்ச்சியாக அதன் பிரதிப்பணிப்பாளரொருவர் இன்று காலை அலுவலகத்திற்கு செல்லும் வழியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் மிகமோசமாகத் தாக்கப்பட்டு, காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வழங்கல்சேவையின் உதவிப் பணிப்பாளர் அனுரசிறி ஹெட்டிகே வெள்ளிக்கிழமை காலை கொட்டிகாவத்த பகுதியில் அலுவலகம் செல்வதற்காக பஸ் நிலையத்தில் நின்றிருந்த சமயம் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் இவரை இரும்பு கம்பிகளாலும், கூரிய ஆயுதங்களினாலும் தாக்கியிருக்கின்றனர்.
இவர் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதங்களினால் ஏற்பட்ட வெட்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் மீது உடனடியாக விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷ, பாதுகாப்பு ஆமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
——————————————————————————————————————————————————–
புதுப்பிக்கப்பட்ட நாள்: 11 மார்ச், 2008
மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்த்து ஐ.தே.க ஆர்ப்பாட்டம்
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக இவ்வார முற்பகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தல்களை எதிர்த்து இலங்கையின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு, இராஜகிரிய தேர்தல் செயலகத்துக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றினை நடத்தியிருக்கிறது.
புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தினை நிலைநாட்டும் அரசு கொள்கையின் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட தேர்தலை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உதவிய சகலருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் என்றாலும், இந்தத் தேர்தல் முடிவுகளை முற்றாகப் புறக்கணிக்கும்படி கோரி ஜக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளரிடம் புதன்கிழமை மனு சமர்ப்பித்திருக்கிறது.
பிரதான எதிர்க்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், முக்கியஸ்தர்களும், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் கலந்துகொண்டு இந்தத் தேர்தலுக்கு எதிராகவும், மஹிந்த ராகபக்ஷ அரசிற்கு எதிராகவும் கோஷங்களை இட்டனர்.
இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் பின்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் கருத்துவெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் திரு. ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்பில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்தல்கள் ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டியதோடு, படையினரால் ஒரு ஆயுதக் குழுவிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அரசு இன்னொரு ஆயுதக் குழுவிடம் கையளிக்க முற்படுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு கிழக்கில் இடம்பெற்ற தேர்தலின் முக்கியத்துவம், அதன் வெற்றி குறித்து வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தனது அமைச்சில் விரிவாக விளக்கமளித்திருக்கிறார்.
இதன் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மிகவும் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது என்றும், எதிர்வரும் மே மாதம் அளவில் கிழக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு சித்தமாக இருப்பதாகவும் தெரிவித்ததோடு, அரசின் இந்தத் திட்டம் குறித்து தேர்தல் ஆணையாளரிடம் தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் வெறும் கண்துடைப்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
![]() |
![]() |
கிழக்கு மாகாணத்தில், மீள்குடியேற்றம் போன்ற மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் அங்கு உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தி, அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற விளைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் வாக்களிக்குமாறு மக்கள் மிரட்டப்பட்டதாகக் கூறிய அவர், மக்கள் சுயாதீனமாக வாக்களித்திருந்தால் 10 வீதமான வாக்குகளே பதிவாகியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகமான வகையில் அனைத்துக் கட்சிகளும் போட்டியிடக் கூடிய ஒரு சூழ்நிலை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்திருந்தால், அங்கு தேர்தல் நிலைமைகள் வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை மாகாணசபைகளை 1987 ஆம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டதாகக் கூறும் ஜெயானந்தமூர்த்தி, ஆகவே, கிழக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல்கள் நடக்கும் பட்சத்தில், அது குறித்து மக்களின் கருத்துக்களை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் தமது கட்சி முடிவுகளை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
இவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
வட இலங்கை மோதல்கள்: செவ்வாய்க்கிழமை அன்று 28 புலிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது இராணுவம்
![]() |
![]() |
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுக்கோவிலுக்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் 3 தளங்கள் மீது புதன்கிழமை காலை விமானப் படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.
இந்தத் தாக்குதலின்போது, அந்த முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மன்னார் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் வவுனியா, மன்னார், வெலிஓயா, மற்றும் முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதல்களில் 28 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. இந்தத் தாக்குதல்கள் குறித்தும் விடுதலைப் புலிகள் தரப்பில் தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
மன்னார் மாவட்டத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக இடம்பெயர்ந்து முருங்கன் பிரதேசத்தில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கூடாரங்கள் அமைத்து தங்கவைக்கப்பட்டவர்கள் மழை நீர் கூடாரங்களுக்குள் புகுந்திருப்பதனால் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 11 மார்ச், 2008
கதிர்காமர் கொலை வழக்கில் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் மீது குற்றச்சாட்டு
![]() |
![]() |
கொலை செய்யப்பட்ட கதிர்காமர் |
இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேர் மீதான குற்றப்பத்திரங்களை, சட்ட மா அதிபர் இன்று தாக்கல் செய்துள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், சார்ள்ஸ் மாஸ்ட்டர் ஆகியோர் உட்பட 6 பேரின் பெயர்கள், குற்றப்பத்திரத்தில் குற்றவாளிகளாகக் கூறப்பட்டுள்ளன.
2005 ஆம் ஆண்டின் ஜனவரி 5 ஆம் திகதிக்கும், 12 திகதிக்கும் இடையில், கொலைச் சதித்திட்டங்களைத் தீட்டியமை, கொலை செய்த விஜயன் என்பவருக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றங்களும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
சாட்சிகளின் பாதுகாப்புக்காக அவர்கள் ரகசியமாகவே நீதிமன்றத்தில் சாட்சி வழங்குவார்கள் என்றும் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் பெரும் வெற்றி
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வருடங்களின் பின்பு நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு கைப்பற்றியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஏனைய 8 பிரதேச சபைகளையும் தமது கட்சிப்பட்டியலின் மூலம் கைப்பற்றியுள்ளனர்.
101 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற இந்தத் தேர்தலின், முடிவுகளின்படி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது கட்சி சார்பில் 61 உறுப்பினர்களையும், மக்கள் சுதந்திர முன்னனியின் வெற்றிலைச் சின்னத்தில் கீழ் 11 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.
![]() |
![]() |
பிரச்சாரச் சுவரொட்டிகள் |
ஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் ( பத்மநாபா அணி) ஆகிய தமிழ் கட்சிகளைக் கொண்ட சுயேச்சைக் குழுக்கள் இத் தேர்தலில் 17 உறுப்பினர்களை வென்றிருக்கின்றன.
அதேவேளை ஈழவர் ஜனநாயக முன்னனி மட்டக்களப்பு மாநகர சபையில் மட்டும் ஒரு அங்கத்துவத்தை பெற்றுள்ளது.
இதனைத் தவிர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 7 பேரும், ஐக்கிய மக்கள் முன்னணி சார்பில் மாநகரசபையைத் தவிர மேலும் 4 பேரும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்த அரசியல் கட்சிகளின் கருத்துக்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இந்தியா மீது விடுதலைப்புலிகள் கண்டனம்
![]() |
![]() |
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் |
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை வரவேற்று உயர் கௌரவத்தை வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்தை விடுதலைப் புலிகள் அறிக்கையொன்றின் மூலம் கண்டித்திருக்கின்றார்கள்.
போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறியுள்ள இலங்கை அரசு, தமிழர் பிரதேசங்களில் போரை விரிவாக்கியுள்ள இன்றைய காலச் சூழலில், தமிழின அழிப்பிற்குத் தலைமையேற்றுள்ள இராணுவத்தின் தளபதிக்கு இந்திய அரசு வழங்கியுள்ள கௌரவம் ஈழத்தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியிருப்பதாகவும், இந்தச் செயலுக்காக இந்திய அரசை விடுதலைப் புலிகள் வன்மையாகக் கண்டிப்பதாகவும், விடுதலைப் புலிகள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
இராணுவ வழியில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முற்பட்டுள்ளமைக்காகவும், அதிகரித்துள்ள மனித உரிமை மீறல்களுக்காகவும், அனைத்துலக நாடுகள் வெளிப்படுத்திவரும் கண்டனங்கள் மற்றும் எச்சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, அதிக அளவிலான ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இனரீதியான கைதுகள் என்பவற்றை அரச படைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.
இவற்றை மூடிமறைத்து, நாட்டில் யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் இலங்கை அரசாங்கத்திற்கான உதவிகளை பல ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்கள்.
![]() |
![]() |
பெண் விடுதலைப்புலிகள் |
இந்தச் சூழலில் உண்மையான நிலைமையை இந்திய அரசாங்கம் புரிந்து கொண்டிருந்தாலும், தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு காணவேண்டும் என கூறிக்கொண்டு, அதற்கு மாறாக, இராணுவ ரீதியாக இலங்கை அரசாங்கத்திற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஈழத்தமிழர்களை பாரிய இன அழிப்பிற்குள் தள்ளிவிடும் என்று இந்திய அரசுக்குச் சுட்டிக்காட்டுவதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் கூறியிருக்கின்றார்கள்.
இந்த நிலைமையைத் தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொண்டு இந்திய அரசிற்குத் தமது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் எனவும் விடுதலைப் புலிகள் கோரியிருக்கின்றார்கள்.
நோர்வேயின் அமைதிவழி முயற்சியிலிருந்தும், போரிநிறுத்தத்திலிருந்தும் இன்னும் விலகவில்லை என தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள் நோர்வே அரசின் தலைமையில் மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சிகளில் பங்கேற்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு
![]() |
![]() |
முன்னைய பணிப்புறக்கணிப்பு ஒன்றின் போது வவுனியா மருத்துவமனை ஊழியர்கள்( ஆவணப்படம்) |
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண மாவட்டங்களைச் சேர்ந்த அரச மருத்துவர்கள் இன்று மேற்கொண்ட ஒருநாள் அடையாள பணிப் புறக்கணிப்பு காரணமாக அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியசாலைகளின் பணிகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கென அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுவந்த விசேட வருடாந்த இடமாற்றப் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளராகிய டாக்டர் எஸ்.சிவப்பிரியன் தெரிவிக்கின்றார்.
இன்றைய பணிபுறக்கணிப்பு காரணமாக வடக்கில் வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியசாலைகளிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை மாவட்டங்களின் வைத்தியசாலைகளிலும் அரச வைத்தியர்கள் கடமைக்குச் செல்லவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிய டாக்டர் எம்.பள்ளியகுருகே தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை வரையிலும் சுகாதார அமைச்சிடமிருந்து தங்களுக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை என்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளதாகவும் அந்தச் சங்கத்தின் பேச்சாளராகிய டாக்டர் சிவப்பிரியன் கூறினார்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 மார்ச், 2008
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தல்களில் சுமூக வாக்களிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாநகரசபை உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு இன்று நடந்த வாக்களிப்பில் 56 வீத வாக்குகள் பதிவானதுடன், பெரும்பாலும் சுமூகமான வகையில் வாக்களிப்பு இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் கிழக்கு மாகாணம் தமது கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பின், மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வருடங்களின் பின்பு ஒரு மாநகர சபை உட்பட 9 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ள இந்தத் தேர்தலில், 101 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றார்கள். 6 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.
![]() |
![]() |
வாக்களிக்கக் காத்திருக்கும் வாக்காளர்கள் |
தேர்தலையொட்டி இம் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக மக்களின் வழமை நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக வாக்காளர்கள் கூட பாதுகாப்பு கெடுபிடிகளை எதிர்நோக்கியதாகவும் உள்ளுர்வாசிகள் கூறுகின்றனர்.
வாழைச்சேனை பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரொருவரின் வீட்டின் மீது திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலைத் தவிர குறிப்பிடத்தக்க வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை அந்தப் பிரதேசத்தில், அரச பின்புலத்தில் சில தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்கானிப்பபு அமைப்பான பப்ரல் கூறுகின்றது.
இந்தத் தேர்தலில் 56 சத வீதமான வாக்குககள் பதிவாகியுள்ளதாகக் கூறும் மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலர், முதலாவது தேர்தல் முடிவு நள்ளிரவிற்கு பின்பு வெளியாகும் என்றும் கூறுகின்றார்.
கொழும்பு வெள்ளவத்தை குண்டுவெடிப்பில் ஒரு சிவிலியன் பலி, 4 மாணவர்கள் காயம்
![]() |
![]() |
குண்டுவெடித்த இடம் |
திங்கட்கிழமை காலை கொழும்பு காலிவீதி வெள்ளவத்தையில் அமைந்துள்ள ரொக்சி சினிமா திரையரங்கிற்கு அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் சிவிலியன் ஒருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார், மேலும் நான்கு பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்துவெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கொழும்பு காலிவீதி வெள்ளவத்தைப் பகுதியில் வீதியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பூச்சாடியொன்றினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டொன்றே வெடித்திருப்பதாகத் தெரிவித்தார்.
![]() |
![]() |
ஆரம்ப விசாரணைகளின்படி இந்தப் மர்மப்பொதியை பிரித்துப்பார்க்க முயன்ற நபரே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டதாகத் தெரியவந்திருப்பதாகப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
கொழும்பு களுபோவில அரச வைத்தியசாலை வட்டாரங்களின் தகவல்களின்படி, இன்றைய இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தினைத் தொடர்ந்து இரண்டு பாடசாலை மாணவர்கள், இரண்டு மாணவிகள் என நான்கு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களின் ஒருவரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தன.
இந்தக் குண்டுவெடிப்புத் தொடர்பாக விசாரணைகளையும், புலன்விசாரணைகளையும் பொலிசாரும் இராணுவத்தினரும் தற்போது மேற்கொண்டுவருகின்றனர்.
மன்னார் மாவட்ட சண்டைகள்: புலிகள் தரப்பிலும் இராணுவத்தினர் தரப்பிலும் சேதம்
![]() |
![]() |
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில், இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே தொடரும் சண்டைகளில், திங்கட்கிழமை அதிகாலை நடந்த மோதல்களில் 10 விடுதலைப்புலிகளும், 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மோதலில் 10 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் அது கூறியுள்ளது.
இது குறித்து விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மன்னாரில், மாந்தை மேற்குப் பகுதியில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாந்தை –அடம்பன் வீதியில் ஒரு பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகதத்தகவல் மையம் தெரிவித்துள்ளது.
எனினும், பரப்புக்கடந்தான், பண்டிவிரிச்சான், பாலைக்குழி சேத்தான்குளம் ஆகிய பகுதிகளில் பல முனைகளில் விடுதலைப்புலிகளின் பிரதேசத்துக்குள் முன்னேறுவதற்கு ஞாயிறன்று இராணுவம் மேற்கொண்ட முயற்சி தமது எதிர்த்தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சண்டைகளில்போது 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 09 மார்ச், 2008்.
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல் பணிகள் நிறைவு
![]() |
![]() |
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாநகர சபை உட்பட 9 உள்ளுராட்சி சபைகளுக்கு திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் கடமைக்குரிய அதிகாரிகளும் ஊழியர்களும் பாதுகாப்பிற்குரிய பொலிசாரும் தற்போது உரிய வாக்களிப்பு நிலையங்களை சென்றடைந்துள்ளதாகக் கூறும் அவர், கடந்த கால யுத்த அனர்த்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இத்தேர்தலின்போது வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அடையாளத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணமொன்றை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் ஆள்-மாறாட்டத்திற்கு வாயப்பு இராது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் பாதுகாப்பு கடமைகளைப் பொறுத்தவரை, வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியே பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் இராணுவுத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தேர்தல் செயலகத்தைச் சேர்ந்த உதவி காவல்துறை அத்தியட்சகர் யு.எஸ்.ஐ.பெரேரா கூறினார்.
101 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் 6 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 831 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.
சிவனேசன் பூத உடலுக்கு பிரபாகரன் அஞ்சலி
![]() |
![]() |
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய கிட்டிணன் சிவநேசனின் இறுதிக் கிரியைகள் இன்று காலை 11 மணியளவில் மல்லாவி அனிஞ்சியன்குளம் என்ற இடத்தில் நடைபெற்றதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இவரது இறுதிக் கிரியைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள், பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பொதுமக்களின் அஞ்சலிக்காக வன்னிப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் உடலுக்கு விசேடமான ஓரிடத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது அஞ்சலியைச் செலுத்தினார். புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் உட்பட்ட முக்கியஸ்தர்களும் அஞ்சலி செலுத்தி இரங்கலுரைகள் ஆற்றியதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.
இதனிடையில் மன்னார் மாந்தை பிரதேசத்தில் சனிக்கிழமை விமானப்படையினருடன் ஒன்றிணைந்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. இந்தத் தாக்குதலில் 10 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.
இதேவேளை, மன்னார் பரப்பாங்கண்டல், மடு பிரதேசத்தில் உள்ள பண்டிவிரிச்சான் ஆகிய பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு சனிக்கிழமை இராணுவத்தினர் எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். பல மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த மோதல்களில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
——————————————————————————————————————————————————-
புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 மார்ச், 2008
இலங்கை வன்முறை: புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் இராணுவத் தரப்பில் சேதம்
![]() |
![]() |
இலங்கையின் மொனராகலை மாவட்டத்திலுள்ள புத்தல-கதிர்காமம் வீதியில் சென்றுகொண்டிருந்த இராணுவ உழவுஇயந்திரமொன்றின் மீது விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள கிளேமோர் கண்ணிவெடித்தாக்குதலில் ஒரு இராணுவச்சிப்பாய் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.
இதுகுறித்து தகவல் வெளியிட்டிருக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு, புத்தல பழைய வீதியில் கல்கே காட்டுப் பகுதியூடாக இந்த இராணுவ உழவு இயந்திரம் சென்றுகொண்டிருக்கும்போது புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், தாக்குதலில் காயமடைந்து ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்ட படைவீரர் ஒருவர் சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில் உயிரிழந்ததாகவும் தெரிவித்திருக்கிறது.
இந்தப் பகுதியில் முப்படையினரும் பொலிசாரும் இப்போது தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கிறது.
இதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து மின்னஞ்சல்மூலமாக ஊடகங்களிற்குச் செய்தியனுப்பியுள்ள விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், இன்றுகாலை விடுதலைப் புலிகள் அமைப்பினரே இந்தத் இந்தத்தாக்குதலை மேற்கொண்டதாக உரிமை கோரியுள்ளதோடு, இந்தச் சம்பவத்தில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் இரண்டு படைவீரர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் இந்தத் தாக்குதலின்போது, தமது உறுப்பினர்களிற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆனாலும் விடுதலைப்புலிகளின் இந்தக் கூற்றை மறுத்துள்ள இலங்கை இராணுவத்தினர் இதன்போது ஒரு இராணுவவீரர் மட்டுமே கொல்லப்பட்டதாக உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனிடையே இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இன்று காலை எறிகணை வீச்சு மோதல்கள் இடம்பெற்றதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை சுமார் 10 மணிமுதல் இரண்டு மணித்தியாலங்கள் இந்த மோதல்கள் இடம்பெற்றதாகவும், இதன்போது மன்னார் – வவுனியா, செட்டிகுளம் வீதி பொது கோப்புவரத்திற்காக மூடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நண்பகலின் பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த எரிகணை வீச்சுக்களால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை. இதனிடையில், நேற்று முன்தினம் கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டிணன் சிவநேசனுக்கு விடுதலைப் புலிகளின் தலைவரினால், மாமனிதர் பட்டமளித்து கௌரவம் அளிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்
![]() |
![]() |
இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 59 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தாகவும், இதனாலேயே இவர்களை கைது செய்ததாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், இவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் செல்ல வில்லை என்றும், தமிழக கடற்பரப்பிலேயே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும் கூறுகிறார், தமிழ்நாட்டின் கன்யாகுமரியைச் சேர்ந்த தமிழ்நாடு மீன் தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் பீட்டர் தாஸ் அவர்கள்.
இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் குறித்து, தமிழக முதல்வர் மு கருணாநிதி அவர்கள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
தமிழ்நாடு மீன் தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் பீட்டர் தாஸ் அவர்களின் செவ்வியையும், முதல்வர் கருணாநிதியின் கடித விவரங்கள் குறித்த செய்திகளையும், நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்
இலங்கையில் தடுப்புக் காவலில் ஊடகவியலாளர்கள்
இலங்கை தலைநகர் கொழும்பில் பயங்கரவாத புலன் விசாரணை காவல்துறையினர், சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரி யரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்ல வருமான சிவகுமார் அவர்கள் உள்ளிட்ட ஆறு ஊடகவியலாளர்களை தடுத்து வைத்திருக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்று, இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணைச்செயலாளர் அமிர்தநாயகம் நிக்சன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
——————————————————————————————————————————————————————
இலங்கையில் ஊடவியலாளர்கள் கைது
இலங்கை தலைநகர் கொழும்பில், பயங்கரவாத புலன் விசாரணை காவல் துறையினர் இரண்டு தமிழ் ஊடக வியலாளர்களையும், ஒரு சிங்கள ஊடகவியலாளரையும் தடுத்துவைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்லவருமான சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, காவல்துறையினர் தன்னையும் விசாரணைக்கு வரும்படி அழைத்திருப்பதாகக் கூறினார்.
காவல்துறையின் விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் சிவகுமார் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது
![]() |
![]() |
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபை தேர்தல் பதாகை |
இலங்கையின் கிழக்கே எதிர்வரும் திங்கள் கிழமை உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகின்றன.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு நாளும் இறுதிக் கட்டப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். வீடு வீடாகச் சென்று தமக்குரிய வாக்குககளை திரட்டுவதில் வேட்பாளர்கள் பரவலாக ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தேர்தலின்போது வாக்குச் சாவடிக்கு ஒருவர் என கண்கானிப்பாளர்கள் நியமிக்கப்படவிருப்பதாக பப்ரல் எனப்படும் சுதந்திரமான நியாயமான தேர்தலை கண்காணிக்கும் மக்கள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருட் தந்தை சில்வெஸ்டர் ஸ்ரீதரன் கூறுகின்றார்.
கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத் தக்க வன்முறைகள் இல்லை என்று சுட்டிக் காட்டும் அவர், சில கிராமங்களுக்கும் வாக்குச்சாவடிகளுக்கும் இடையலான தூரம் மக்களின் வாக்களிக்கும் ஆர்வத்திற்கு தடையாக இருக்கும் என்பதால், தேர்தல் திணைக்களமோ அல்லது போட்டியிடும் வேட்பாளர்களோ, அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.
கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசனின் இறுதிச் சடங்குகள் கிளிநொச்சியில் நடக்கவுள்ளது
![]() |
![]() |
கொல்லப்பட்ட சிவனேசன் |
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய கனராயன்குளம் பகுதியில் ஏ -9 வீதியில் கடந்த வியாழனன்று இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.சிவநேசனின் இறுதிக்கிரியைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்காகவும் இறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு அஞ்சலி செலுத்துவதற்குமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சிக்குச் சென்றுள்ளனர்.
காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் உடல் இன்று உறவினர்களின் அஞ்சலிக்காக மல்லாவியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இவரது உடல் நாளை கிளிநொச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனுடன் உயிரிழந்த அவருடைய வாகன சாரதியாகிய 27 வயதுடைய பெரியண்ணன் மகேஸ்வரராஜாவின் உடலை அவரது சொந்த ஊராகிய செட்டிகுளம் வீரபுரத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள்.
மட்டக்களப்பின் மேயராக பெண்ணொருவர் தெரிவாகும் வாய்ப்பு
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக முதல் தடவையாக பெண் ஒருவர் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
மட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் வேட்பாளரான பத்மினி என்று அழைக்கப்படும் சிவகீதா பிரபாகரன் அவர்கள், அங்கு அந்தக் கட்சியின் சார்பில் அதிகப்படியான விருப்ப வாக்குகளைப் பெற்றதால், மாநகரசபையின் மேயராக பொறுப்பேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இறுதியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்ட போது, வாக்களிப்புக்கு இரு தினங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட ராஜன் சத்தியமூர்த்தியின் மகளே இவர்.
தான் மேயராக பொறுப்பேற்கவுள்ளது குறித்து பத்மினி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
கிழக்கு மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்த இலங்கை அரசு நடவடிக்கை
![]() |
![]() |
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன |
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரசபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்காக இவ்வார முற்பகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தல்களை அடுத்து, கிழக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசு, அதில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான ஒழுங்குகளை கவனிப்பதற்காக இரு உயரிய குழுக்களை அமைத்திருப்பதாகவும் இன்று அறிவித்திருக்கிறது.
இது குறித்து கொழும்பில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய மகாவலி அபிவிருத்தி மற்றும் விவசாயத்துறை அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமாகிய மைத்திரிபால சிறிசேன தற்போது ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒரே குடையின்கீழ் போட்டியிட்டு வெற்றியீட்ட முன்வருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்த உத்தேச கிழக்கு மாகாணத்துக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசு எடுத்துள்ள முடிவானது தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது என்றும் இதற்காக திகதி விபரங்களை அவர் இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பாரெனத் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
இவை குறித்த மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 மார்ச், 2008
ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய மற்றும் தமிழக அரசின் நிலை குறித்து பா.ம.க. அதிருப்தி
![]() |
![]() |
டாக்டர் ராமதாஸ் |
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இலங்கைக்கு இந்திய அரசு வழங்கி வரும் இராணுவ உதவியினையை நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவன், திரைப்பட இயககுநர் சீமான் உள்ளிட்ட இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஆர்வங்காட்டும் சிலருடன் ஆலோசனை செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
அண்மைககாலமாக இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை அந்நாட்டு அரசு உககிரப்படுத்தியுள்ளது எனவும் ராமதாஸ் புகார் கூறினார்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படவேண்டும் என வற்புறுத்தியும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் அல்லலுக்கு உள்ளாவதற்கு முற்றுப்புள்ளிவைககவேண்டும் எனக்கோரியும் தொடர்முழக்கப் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் ராமதாஸ் தெரிவித்தார்.
கடந்த சிலமாதங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ராமதாஸ் மௌனமே காத்துவந்தார் என்பதையும், இந்திய அரசைக் கண்டித்து விடுதலைப்புலிகள் அறிக்கை விட்டபோதுகூட அவர் கருத்தெதனையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் கைது நடவடிக்கைக்கு எதிராக ஆர்.எஸ்.எஃப். ஊடகச் சுதந்திரக் குழு கண்டனம்
![]() |
![]() |
இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 செய்தியாளர்களின் கதி குறித்து, பாரிஸைத் தளமாகக் கொண்டு செயற்படும் ஆர்.எஸ்.எஃப். என்று அழைக்கப்படும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
அவர்களை தடுத்து வைத்திருப்பதற்கான காரணத்தை கூறவேண்டும் என அது அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
ஒரு இணையத் தளத்துக்காக பணியாற்றும் இந்த செய்தியாளர்கள் விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சில செய்திகள் கூறுகின்றன.
இந்த செய்தியாளர்களின் நிலை குறித்து இரு தினங்களுக்கு முன்னர் கவலை வெளியிட்டிருந்த சர்வதேச செய்தியாளர் சம்மேளனமான ஐ.எஃப். ஜே. அமைப்பும், ஆசிய மனித உரிமைகள் ஆணையமும், இந்தச் செய்தியாளர்களின் சட்ட உரிமைகளை இலங்கை அரசாங்கம் நிலை நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தன.