Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Shivaji’ Category

Chitra Lakshmanan: Kalainjar Karunanidhi & Kaviarasu Kannadasan – Sivaji, MGR, Mu Ka Muthu: Cinema Express

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

உள்ளதை சொல்கிறேன் – சித்ரா லட்சுமணன்

‘வசனக் காதல்’

கலைஞர் அவர்களை நேரில் காணாமலேயே அவர் மீது பெரும் காதல் கொண்டவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். அதற்குக் காரணம் “அபிமன்யூ’ படத்தில் கலைஞர் எழுதியிருந்த அற்புதமான வசனங்கள்.

“அபிமன்யூ’ படத்தின் வசனச் சிறப்பு காரணமாக ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல ஆறு நாட்கள் தொடர்ந்து அந்தப் படத்தைப் பார்த்தார் கவியரசர்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப் போல “அபிமன்யூ’ படத்தின் வசனங்களை கலைஞர் எழுதியிருந்தபோதிலும் திரைப்படத்தில் அவரது பெயர் இடம் பெறவில்லை.

எம்.ஜி.ஆர். அவர்களது சகோதரர் எம்.ஜி.சக்கரபாணிதான் சேலம் அம்பிகா தியேட்டரில் கவியரசு கண்ணதாசன் “அபிமன்யூ’ படத்தைப் பார்க்க போனபோது, அந்தப் படத்தின் வசனங்களை எழுதியவர் கலைஞர் என்ற தகவலை கண்ணதாசன் அவர்களிடம் கூறினார். “அபிமன்யூ’ படம் பார்த்த அனுபவத்தை தனது “வனவாசம்’ நூலில் கீழ்க்கண்டவாறு உணர்ச்சிகரமாக எழுதியுள்ளார் கவியரசர்.

“”அபிமன்யூ’ படத்தில் அவன் கேட்ட தமிழ் என்றும் மறக்கமுடியாத இன்பத் தமிழாகும்.

“ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்’.

“அண்ணன் செய்த முடிவை கண்ணன் மாற்றுவதற்கில்லை’.

“கண்ணன் மனமும் கல் மனமா?’

“அர்ச்சுனனால் கூட துளைக்க முடியாத சக்ரவியூகத்தை அபிமன்யூ துளைத்து விட்டானென்றால் அங்கேதானிருக்கிறது ஆச்சாரியாரின் விபீஷண வேலை.’

இந்த வசனங்கள் இன்றுவரை அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அம்பிகா தியேட்டரின் சுவையான காப்பியும், “அபிமன்யூ’வில் கண்ட கருணாநிதியின் கைவண்ணமும் அவன் நெஞ்சிலே நிலைத்தன.

“”காணாமலே காதல்” என்பார்கள். அந்தக் “காதலே’ பிறந்து விட்டது அவனுக்குக் கருணாநிதியின் மீது.

“”எப்படியாவது கருணாநிதியைக் கூட்டி வாருங்கள்” என்று அவன் சக்கரபாணியைக் கேட்டான்.

“மாடர்ன் தியேட்டர்ஸ்’க்கு அவரை வரவழைக்க வேண்டுமென்று அவரிடம் சொன்னான்.

அன்று அவன் “மாடர்ன் தியேட்டர்ஸ்’க்கு சொல்லியிருந்தால் எடுப்பட்டிருக்காது.

சக்கரபாணி சொன்னார். அவனும் கூட சேர்ந்து பாடினான்.
கருணாநிதியை வரவழைக்க டி.ஆர்.சுந்தரம் முடிவு செய்தார்.
ஒரு நாள் கருணாநிதியும், சக்கரபாணியும் சேலம் வந்து சேர்ந்தார்கள்.

திறமை என்பதை யாரிடம் கண்டாலும் நேருக்கு நேரே பாராட்டிவிடுவது அவனது சுபாவம்.

தன்னை தாழ்த்திக்கொண்டு இன்னொருவரை உயர்த்துவான்.
அதுதான் திறமைக்கு தரும் மியாதை என்றே அவன் கருதினான்.
அன்று கருணாநிதியை அவன் முதன்முதலாக கோயம்பத்தூர் லாட்ஜில் சந்தித்ததும் ஒரு காதலியைக் காணும் உணர்ச்சியே அவனக்கு ஏற்பட்டது.

சக்கரபாணி அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துவைத்தார்.

அன்று முதல் கருணாநிதியும் அவனை உயிருக்குயிராக நேசிக்கத் தொடங்கினார்.

“மாடர்ன் தியேட்டர்’ஸில் மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் அவர் வேலைக்கமர்ந்தார்.

ஒரு நாளாவது ஒருவரை ஒருவர் காணாமலிருந்தால் எதையோ பறி கொடுத்தது போலிருக்கும்.

ஒருவர் கையில் இன்னொருவர் தலை வைத்துத் தூங்குகிற அளவுக்கு பாசம் வளர்த்தது.

அவர்கள் இருவருக்கிடையே ரகசியம் என்பதே இல்லாமலிருந்தது.
அவரைப் பற்றி யாராவது தவறாகப் பேசிவிட்டால் அவனால் பொறுக்க முடியாது. அவருக்கும் அப்படியே”.

இவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் கவியரசு. தன்னைப் பற்றி எழுதும்போது “அவன்’ என்று தன்னடக்கத்தோடு இந்த நூலில் குறிப்பிட்டிருந்தார் கவியரசர்.

இப்படி நெருக்கமான நட்போடு பழகிய அவர்களுக்கு நடுவே பயங்கரமான விரிசல் ஏற்பட்டதும், பின்னர் அந்த இடைவெளி முழுவதுமாக மறைந்து இருவரும் இணைந்ததும் தமிழகம் அறிந்த வரலாறு.

“மணமகள்’ படத்தைத் தொடர்ந்து கலைஞரின் எழுத்தாற்றலில் திரை உலகில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய படமாக “பராசக்தி’ அமைந்தது.

புரட்சிகரமான கருத்துக்களோடு அடுக்கு மொழியில் கலைஞர் அவர்கள் எழுதியிருந்த வசனங்கள் பின்னாளில் தமிழ்த் திரைப் படங்களின் வசன பாணியையே மாற்றி அமைத்தது என்றால் அது மிகையில்லை.

கலைஞர் அவர்களது வசனத்திற்கு தனது அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பால் உயிர் கொடுத்தார் சிவாஜி. ஏற்ற இறக்கங்களோடு அவர் கலைஞரின் தமிழை உச்சரித்தது கண்டு தமிழ்நாடே பரவசப்பட்டது.

சிவாஜி தனது முதல் படத்திலேயே தமிழ் நாட்டு திரைப்பட ரசிகர்கள் மனதை ஒட்டுமொத்தமாகக் கொள்ளை கொண்டார் என்றால் அதில் கலைஞர் அவர்களுக்கு கணிசமான பங்கு உண்டு என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

1952-ல் வெளியான “பராசக்தி’க்குப் பிறகு இந்த 55 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் படங்கள் வெளியாகியிருந்தாலும் இன்றும் “பராசக்தி’ தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பெற்றிருக்கிறது என்றால் அதற்கு கலைஞர் -நடிகர் திலகம் ஆகிய இருவரின் கூட்டணியே முக்கிய காரணம்.

“பராசக்தி’ படத்தைத் தொடர்ந்து “பணம்’, “திரும்பிப்பார்’, “நாம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தமிழ்த் திரை உலகை திசை திருப்பிய படமான “மனோகரா’ வெளியானது.

சிவாஜியின் நவரச நடிப்பு, கண்ணாம்பாவின் உணர்ச்சி மிக்க நடிப்பாற்றல், கலைஞர் அவர்களின் வீர வசனங்கள் எல்லாம் சேர்ந்து அப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கியது.

நடிப்புப் பயிற்சி பெற விரும்பிய எவரும் “பராசக்தி’, “மனோகரா’ போன்ற படங்களின் வசனத்தை விலக்கிவிட்டு அந்தப் பயிற்சிகளில் ஈடுபட முடியாத சூழ்நிலை உருவாகியது.

தமிழில் வசனங்கள் என்றால் கலைஞர் அவர்கள் மட்டுமே என்ற நிலை உருவானது. இந்த நிலைக்கு இவர் உயரக் காரணம் தமிழ்த்தாய் அவரிடம் கொஞ்சி விளையாடினாள் என்பது மட்டுமல்ல, எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முழு ஈடுபாட்டோடு நிறைவேற்றக் கூடிய அவரது ஆற்றலுக்கும் அதில் உரிய பங்குண்டு.

கலைஞரின் எழுத்தாற்றல் குறித்து தனது “வியப்பூட்டும் ஆளுமைகள்’ புத்தகத்தில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார் நூலாசிரியர் வெங்கட் சாமிநாதன்.

“”பராசக்தி’ படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் ஒரு குற்றவாளி கோர்ட்டில் சொல்லும் பதில் அல்ல. கோர்ட்டை நோக்கிய பதிலும் அல்ல. தமிழ் மக்கள் பல கோடிகள் அனைவரையும் நோக்கிவிடும் அறை கூவல். அது ஏதோ திருப்புமுனை, புதிய அத்தியாயம் என்றெல்லாம் பேசப்பட்டது.

அவர் எழுதிய நாடகங்கள் திரைப்படமானதும், திரைப்படமாகவே எழுதப்பட்டதுமான ஒரு பட்டியல் மாத்திரம் நமக்கு கிடைத்துள்ளது.

அதிலும் 1948-லிருந்து 1990 வரையிலான ஒரு பட்டியலை 1990-ல் பிரசுரமான ஒரு புத்தகம் தருகிறது. இந்த எண்ணிக்கை மொத்தம் 57. 1990-க்குப் பின் எழுதியவை எல்லாம் தொலைக்காட்சிப் படைப்புகள். அவை பற்றிய குறிப்புகள் இதில் இல்லை.

1947-லோ எப்போதோ “ராஜகுமாரி’ படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுத ஏ.எஸ்.ஏ.சாமி அழைத்தபோது (அப்போது கருணாநிதிக்கு வயது 23) “”என் கழக வேலைகளுக்கு இடையூறு இல்லாது முடியுமானால் எழுத ஒப்புக் கொள்கிறேன்” என்று நிபந்தனை விதித்து எழுதுகிறார்

-இத்தனையையும் வைத்துக்கொண்டு நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்று வேறு -இவற்றிற்குப் பிறகுதான் 40 வருடங்களில் 57 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் சிலவற்றிற்குப் பாடல் எழுதுவதும் என்றால் -இது அலிபாபாவின் அற்புத விளக்கும் விளக்கை உரசினால் “ஹூகும் ஆக்கா’ என்று எதிர் நிற்கும் பூதமும் பணி செய்யக் காத்திருந்தால்தான் சாத்தியம்.

திரைக்கதை, வசனம் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தப் போவதில்லை என்று அதிலேயே முழு மூச்சாக ஆழ்ந்தால்கூட 40 வருடங்களில் 57 படங்கள் சாத்தியமா? தெரியவில்லை. நான் என் ஆயுசில் எழுதிய ஒரே ஒரு திரை நாடகத்திற்கு எழுத உட்காரும் முன் அதைப் பற்றி யோசித்து உள்வாங்கிக் கொள்ள இரண்டு மாதங்கள் பிடித்தன.

பின் எழுத உட்கார்ந்து 15 நாட்களுக்கும் மேல் எதுவும் எழுது ஓடவில்லை. பின்னர் ஒன்றிரண்டு மாதங்கள் ஒதுங்கியிருந்து பின் உட்கார்ந்தால் 15 நாட்கள் ஆயின எழுதி முடிக்க. இந்த மாதிரியெல்லாம் யோசித்திருக்க, மனம் ஆழ்ந்திருக்க, ஓடவில்லை” என்றெல்லாம் கருணாநிதிக்கு சாத்தியப்பட்டு வராது, கட்டி வராது.

ஸ்விட்சைத் தட்டிவிட்டால் ஓடும் யந்திரம் போலத்தான் அவர் உட்கார்ந்தால் எழுதிய காகிதங்கள் மடியிலிருந்து விழுந்துகொண்டே இருக்கவேண்டும். உதவியாளர் பொறுக்கி அடுக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

“ஓர் இரவு’, “வேலைக்காரி’க்குப் பிறகு சினிமாவுக்குக் கதை வசனம் எழுதாத தி.மு.க. தலைவர் யாரும் உண்டா? தெரியவில்லை. தேடிப் பார்த்தால் ஓரிருவர் கிடைக்கலாம். ஆனால் அண்ணாவையும், கருணாநிதியையும் தவிர வேறு யாரும் நிலைக்கவும் இல்லை, வெற்றி பெறவும் இல்லை.

மற்ற எல்லோரையும் பின்தள்ளி கருணாநிதியைத்தான் அண்ணாவுக்கு அடுத்த பெருந்தலைவராக காலம் முன் வைத்துள்ளது என்றால் அதில் கணிசமான பங்கு கருணாநிதியின் நாடகம், சினிமா, கற்பனைத் திறன் தந்த எழுத்து இவற்றிலிருந்து பெற்றதாகச் சொல்ல வேண்டும்.”

இவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் சாமிநாதன்.

——————————————————————————————————————————————————–

தி.மு.கழகத்தில் உறுப்பினராக இருந்த சிவாஜி கணேசன் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக தி.மு.க.வை விட்டு விலக வேண்டி வந்தது என்றாலும், அதனால் அறிஞர் அண்ணா மீது கொண்ட பாசத்தில் இம்மியளவு கூட சிவாஜி அவர்களிடம் குறையவில்லை.

அதே போன்று கலைஞர் மீதும் மாறாத பற்று கொண்டிருந்தார் சிவாஜி. அதன் காரணமாகத்தான் தனது ஆரூயிர் நண்பன் நடிகர் திலகத்திற்கு கடற்கரையில் பல எதிர்ப்புகளுக்கு இடையிலேயும் சிலை எடுத்து பெருமைப் படுத்தினார் கலைஞர்.

தனது சுயசரிதையில் பல இடங்களில் கலைஞர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் சிவாஜி. “திரும்பிப் பார்’ படத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “”திரும்பிப் பார்’ படத்திற்கு எழுதிய வசனங்களைப் போல கலைஞர் கருணாநிதி அவர்கள் மற்ற எந்தப் படங்களிலும் எழுதவில்லை என்று நான் நினைக்கிறேன்.

அவ்வளவு அருமையான வசனங்களையெல்லாம் அந்தப் படத்தில் எழுதியிருந்தார். அந்தப் படம் ஒரு அருமையான திரைக்காவியம்” என்று தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கும் நடிகர் திலகம், “மனோகரா’ பட அனுபவத்தைப் பற்றி விவரிக்கும்போது, “”எனக்கு “மனோகரா’ படம் புது அனுபவமாகத் தெரியவில்லை.

நாடகத்தின்போது நான் சம்பந்த முதலியாரின் வசனத்தைப் பேசினேன். அது படமாக எடுக்கும்போது கலைஞர் அவர்களின் வசனத்தைப் பேசினேன். அருமையான வசனங்கள். அது வசனம் பேசும் காலம். “மனேகரா’வில் வசனங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். இப்போது கூட அப்பட வசனங்கள் ஞாபகத்திற்கு வருகிறது.

பொன்னும் மணியும்
மின்னும் வைரமும்
பூட்டி மகிழ்ந்து
கண்ணே! முத்தே!
தமிழ்ப் பண்ணே!
என்றெல்லாம் குலவிக் கொஞ்சி
தங்கத்தில் ஆன கட்டிலிலே
சந்தனத் தொட்டினிலே

என்றெல்லாம் வசனம் இடம் பெற்ற அந்தப் படம் அந்தக் காலத்தில் ஒரு மாபெரும் வெற்றிப் படமாகியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் திலகம் அவர்களது சுயசரிதையைப் போலவே கலைஞர் அவர்களின் சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி’ நூலிலும் பல இடங்களில் சிவாஜி அவர்களைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

கலையுலகில் தனது வளமான வசனங்களால் சிவாஜி அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த கலைஞர் அவர்களின் வாழ்க்கையை நடிகர் திலகம் காப்பாற்றிய ஒரு சம்பவத்தை உணர்ச்சி பொங்க தனது “நெஞ்சுக்கு நீதி’ நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் கலைஞர்.

“”ஒரு முறை நானும், கருணானந்தமும், சிவாஜி கணேசனும் காஞ்சிபுரம் சென்று அண்ணாவைப் பார்த்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறோம். அப்போதுதான் “பராசக்தி’ படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரும் வழியில் நல்ல மழை பெய்யத் தொடங்கியது.

காரின் வெளிச்சம் வேறு மங்கலாகி விட்டது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகே வந்து கொண்டிருக்கும்போது அந்தப் பகுதியில் ஒரு பாலம் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்ததால் மாற்று வழிக்கு குறிப்புப் பலகை வைத்து சிவப்புத் துணி கட்டியிருந்தார்கள்.

விளக்கு வெளிச்சம் போதாதால் கார் டிரைவர் அதைக் கவனிக்காமல் மாற்று வழியில் செல்வதற்குப் பதிலாக நேராகச் சென்று விட்டார். உடனே நண்பர் கணேசன் கூச்சல் போடவே கார் டிரைவர் திடீரென்று பிரேக்கை அழுத்திவிட்டார். பிரேக் போடப்பட்ட வேகத்தில் மழைத் தண்ணீர் தேங்கியிருந்த சாலையில் காரின் சக்கரங்கள் வழுக்கி ஒரு சுற்றுச் சுற்றி நின்றது.

கார் எப்படியிருக்கிறது என்பதைக் காருக்குள்ளிருந்த நாங்கள் கவனித்தோம். கார் சக்கரம் ஒரு அங்குலம் நகர்ந்தால் நாங்கள் செங்குத்தான ஒரு பள்ளத்தாக்கில் காரோடு விழுந்து நொறுங்கிப் போய்விடுவோம்.

அப்படிப்பட்ட ஆபத்தான விளிம்பில் கார் நின்று கொண்டிருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார் கலைஞர். தனக்கும் சிவாஜிக்கும் இடையே நிலவி வந்த பாசப் பிணைப்பு எத்தகையது என்பதற்கு எடுத்துக் காட்டாக சிவாஜி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையை தனது “நெஞ்சுக்கு நீதி’ நூலின் இரண்டாம் பாகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“”எனக்கும் சிவாஜிக்கும் இருந்த நட்பு யாராலும் விலக்க முடியாத பாசமாக உருவெடுத்தது. அந்தப் பாசம் எப்படிப்பட்டது என்பதை 1963-ஆம் ஆண்டு என் தாய் அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது வெளியிடப்பட்ட ஒரு மலரில் சிவாஜியே வெளிப்படுத்தியிருக்கிறார்.

“”சிறு வயது முதல் எங்களுக்குள் நெருக்கமான பழக்கம் உண்டு. இதற்கு எத்தனையோ காரணம். கலையோ, அன்போ, கொள்கையோ, குணமோ, எதுவோ எங்களை உயிராக இணைத்து வைத்திருந்தது. நாளடைவில் அது வளர்ந்து வலுப்பெற்றது. அவர்! அது யார்? வாய் நிறைய “மூனா கானா’ என்று நான் இனிமையோடு அழை க்கும் அவர்தான்.

அந்தக் காலத்தில் இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் அஞ்சுகம் அம்மையார் அநேக நாட்கள் ஒன்றாகவே உணவு படைப்பது உண்டு. அப்போதெல்லாம் அவர்கள் பரிமாறுவதில் கொஞ்சம் பாரபட்சமாக நடந்து கொண்டதை நான் கவனிப்பதும் உண்டு. நல்ல பண்டங்களை ஒருவருக்கு அதிகமாகவும், ஒருவருக்கு குறைவாகவும் போடுவார்கள்.

“”இப்படிச் செய்யலாமா? இது நீதியா?” என்று நான் கேட்பேன்.
“”நீ செல்லப்பிள்ளை. உனக்கு அதிகம்தான்” என்பார்கள் அந்தத் தாய்.

அந்தச் செல்லத்தை மறந்து விட்டுப் போய்விட்டார்கள். நான் என்றும் அந்த அன்புச் செல்லத்தை மறக்க முடியாது. எனக்கு அஞ்சுகம் அம்மையாரும் ஒரு தாய்”.

இது அந்த மலரில் சிவாஜி எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி” என்று குறிப்பிட்டுள்ளார் கலைஞர்.

“மனோகரா’வைத் தொடர்ந்து “ரங்கூன் ராதா’, “ராஜாராணி’, “புதையல்’ என்று கலைஞர் அவர்களும் சிவாஜியும் இணைந்து பணியாற்றிய பல படைப்புகள் வெளிவந்தன.

ஆரம்பக் கட்டங்களில் சிவாஜி கணேசன் அவர்களோடு இருந்த அளவு நெருங்கிய நட்பு எம்.ஜி.ஆர்.அவர்களுக்கும் கலைஞர் அவர்களுக்கும் இருந்தது குறித்தும், “ராஜகுமாரி’ படத்தில் எம்.ஜி.ஆர்.தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதில் கலைஞர் மிகவும் பிடிவாதமாக இருந்து ஜெயித்தது குறித்தும் ஏற்கனவே இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

“ராஜகுமாரி’யைத் தொடர்ந்து “மந்திரிகுமாரி’, “மருதநாட்டு இளவரசி’, “நாம்’, “மலைக்கள்ளன்’, “புதுமைப்பித்தன்’, “காஞ்சித் தலைவன்’ என்று பல படங்களில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் இணைந்து பணியாற்றினர்.

எம்.ஜி.ஆருக்கு கலைஞர் கதை வசனம் எழுதிய கடைசிப் படமாக “காஞ்சித் தலைவன்’ அமைந்தது. இவர்கள் இருவர் உறவு மற்றும் பிரிவு குறித்து பின்னர் விரிவாக பார்ப்போம்.

கலைஞர் அவர்களின் கைவண்ணத்தில் வெளியான படங்களில் “பூம்புகார்’ மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பு. இந்தக் கதையை கலைஞரின் “மேகலா பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

ஆனால் முதலில் “பூம்புகார்’ படத்தைத் தயாரிக்க திட்டமிட்டவர் ஏவி.எம்.அவர்கள் ஆவார்கள். ஏவி.எம்.அவர்கள் அப்படத்தை ஏன் கைவிட்டார் என்பது குறித்து தனது “தமிழ் சினிமாவின் கதை’ என்ற நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் அறந்தை நாராயாணன்.

“”கல்லக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி மு.கருணாநிதி மத்திய சிறைச் சாலையில் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக டைரக்டர் கிருஷ்ணன் போயிருந்தபோது, “”என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“”சிலப்பதிகாரம் படித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் கருணாநிதி.
சிறையில் கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வந்த கிருஷ்ணன் தன் சகா பஞ்சுவிடம் சொன்னார். “”கண்ணகி படம் வந்து ரொம்ப நாட்களாகின்றன. மு.க. சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து படித்து வருகிறார். அந்தக் காவியத்தை மீண்டும் சினிமாவாக்கினால் நன்றாக இருக்கும்”.

இருவரும் புறப்பட்டுச் சென்று ஏவி.எம்.செட்டியாரிடம் சொன்னார்கள்.

“”அவர் இப்பொழுது அரசியலில் ரொம்பவும் பிஸியாக இருக்கிறாரே! எப்படி வசனம் எழுதித் தருவார்?” மேனா கேட்டார்.

அந்தப் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஒரே சமயத்தில் அவரிடமிருந்து ஒட்டு மொத்தமாக எழுதி வாங்கி வந்து விடுகிறோம்.”

மு.கருணாநிதி விடுதலையாகி வந்தார். அவரிடம் நடந்த விஷயங்களைச் சொன்னார்கள் கிருஷ்ணனும், பஞ்சுவும்.
“”எழுதித் தருகிறேன். இதோ படத்தின் தலைப்பு. “பூம்புகார்”.
அன்றைய தினம் நள்ளிரவிலேயே “முரசொலி’ அலுவலகத்திற்கு மெய்யப்பச் செட்டியார் கிருஷ்ணன் பஞ்சுவுடன் வந்தார்.

பேசினார். முன் பணம் கொடுத்தார். 1959-ல் “தங்கப் பதுமை’ படம் வெளி வந்ததும் “பூம்புகார்’ திட்டத்தைச் செட்டியார் கைவிட்டு விட்டார். காரணம் “கண்ணகி’ கதை மாதிரியே “தங்கப் பதுமை’ திரைக்கதை அமைந்திருந்ததுதான்.

இவ்வாறு அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் அறந்தை நாராயணன்.

——————————————————————————————————————————————————–
பண்பிற்கரசோன்

“பூம்புகார்’ திரைப்படத்தில் சிவாஜிகணேசனை கோவலனாகவும், சாவித்திரியை கண்ணகியாகவும், பத்மினியை மாதவியாகவும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் ஏவி.எம். “தங்கப்பதுமை’ காரணமாக அவர் “பூம்புகார்’ படத்தைத் தயாரிக்கத் தயங்கியதும், தன் சொந்தத் தயாரிப்பில் “பூம்புகார்’ திரைப்படத்தை எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, ராஜஸ்ரீ ஆகியோர் நடிக்க தயாரித்தார் கலைஞர். கெüந்தி அடிகள் வேடத்தில் கே.பி.சுந்தராம்பாள் நடித்தார்.

படம் முடிந்தவுடன் ஏவி.எம்.செட்டியார் அவர்களுக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டினார் கலைஞர். படத்தை வெகுவாக ரசித்தாலும் பட வெளியீட்டுத் தேதியைத் தள்ளி வைக்குமாறு கலைஞரிடம் கேட்டுக் கொண்டார் ஏவி.எம். அதற்கு அவர் கூறிய காரணம் இதுதான்.

“”இந்தக் கதையை சிறு மாறுதல்களுடன் டைரக்டர் ஸ்ரீதர், “கலைக்கோயில்’ என்ற பெயரில் மிகப் பிரமாதமாக எடுத்திருக்கிறார். நான் கூட படத்தைப் பார்த்து விட்டு அவரைப் பாராட்டினேன். தங்களது “பூம்புகார்’ படமும் மிகச் சிறப்பாக இருக்கிறது, என்றாலும் இப்போது வெளியிட வேண்டாம்” என்றார் ஏவி.எம். “கலைக்கோயில்’ படத்தோடு வெளியானால் “பூம்புகார்’ திரைப்படத்தின் வெற்றி பாதிக்கப்படும் என்பது எவி.எம். அவர்களின் கருத்தாக இருந்தது.

“பூம்புகார்’ திரைப்படத்தைப் பற்றியும், அதன் வெற்றி குறித்தும் கலைஞர் அவர்களுக்கு மிகச் சிறந்த அபிப்ராயம் இருந்தாலும் அனுபவசாலியான ஏவி.எம்.அவர்களது பேச்சு கலைஞரை சோர்வடையச் செய்தது. அந்த மனந்தளர்ச்சியோடு வந்த கலைஞர் முரசொலி மாறனிடம் செட்டியார் சொன்னதையெல்லாம் சொல்லியிருக்கிறார்.

மாறன் கொஞ்சம் கூட நம்பிக்கை இழக்காமல் “பூம்புகார்’ படத்தைப் பொறுத்தவரை கதை சொல்லப்பட்டிருக்கிற முறைக்காகவும், உங்கள் வசனத்திற்காகவும் கண்டிப்பாக அது வெற்றி பெறும். நாம் தைரியமாக படத்தை வெளியிடுவோம். அதுவும் “கலைக்கோயில்’ படம் வெளியாகின்ற நாளன்றே வெளியிடுவோம்” என்று கூறியதோடு மட்டுமின்றி அதே தேதியில் படத்தை வெளியிடவும் செய்தார்.

“கலைக்கோயில்’ மிகப் பெரிய தோல்வியைக் கண்டது. ஆனால் “பூம்புகார்’ படமோ நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

“பூம்புகார்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் கலைஞருக்கு ஃபோன் செய்த ஏவி.எம், “”என்னுடைய கணக்கு தவறு என்பதை உங்கள் படத்தின் வெற்றி நிரூபித்துவிட்டது. உங்களையும், மாறனையும் நான் மனமாரப் பாராட்டுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதே போன்று ஒரு சம்பவம் கலைஞர் வாழ்க்கையில் எல்.வி.பிரசாத் அவர்களாலும் நடைபெற்றிருக்கிறது. அது குறித்து “கலை உலகச் சூரியன் கலைஞர்’ என்ற பாராட்டு விழாச் சிறப்பு மலரில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் அமிர்தம்.

“”மாபெரும் இயக்குனர் எல்.வி.பிரசாத் கலைஞரின் கதை வசனத்தில் “இருவர் உள்ளம்’ என்றொரு படத்தைத் தயாரித்தார். சிவாஜிகணேசன், சரோஜாதேவி ஜோடியாக நடித்த இப்படத்தின் தனிக்காட்சி முக்கியமான கலை உலகப் பிரமுகர்களுக்காக ரேவதி ஸ்டூடியோவில் நடைபெற்றது.

படம் முடிந்ததும் இயக்குனர் பிரசாத், “”படம் நிறைவாக இல்லாதது போன்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?” என்று கலைஞரிடம் கேட்டார். அதற்கு கலைஞர், “”இந்தப் படம் நிச்சயமாக 100 நாட்கள் ஓடும். மக்கள் பேசக் கூடிய படமாக இது அமையும்” என்றார்.

உறுதியாகத்தான் சொல்கிறீர்களா என்று கேட்ட பிரசாத், “”இந்தப் படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றால் உங்களுக்கு சன்மானமாக பத்தாயிரம் ரூபாய் வழங்குகிறேன்” என்றார்.
படம் சென்னை வெல்லிங்டன் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களைத் தொட்டது. நூறாவது நாள் முடிந்த மறுநாள் இயக்குனர் பிரசாத், கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து கலைஞரைச் சந்தித்தார்.

“”நீங்கள் சொன்னபடி படம் நூறு நாட்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. உங்கள் கணிப்பு எதிலும் சரியாக இருப்பது போல் “இருவர் உள்ளமும்’ வெற்றி பெற்றுள்ளது. என் வாக்குப்படி இதாங்க ரூபாய் பத்தாயிரம் என்று சொல்லி பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தார்” என்று அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள இயக்குனர் அமிர்தம், “மலைக்கள்ளன்’ படத் தயாரிப்பின்போது நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவத்தையும் அந்த மலரில் கீழ்க் கண்டவாறு வர்ணித்துள்ளார்.

“”மலைக்கள்ளன்’ படம். கலைஞரின் உயிரோட்டமான வசனங்கள். எம்.ஜி.ஆர். கதாநாயகன். படம் முடிந்த நிலையில் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலுவுக்கும் கலைஞருக்கும் இடையில் ஏற்பட்ட மனத்தாங்கலில் இந்தப் படத்தில் திரைக்கதை, வசனம் கருணாநிதி” என்று என் பெயரைப் போடக் கூடாது என்று கடுமையாகக் கூறிவிட்டு கலைஞர் திருவாரூர் போய் விட்டார்.

எம்.ஜி.ஆருக்குப் பெரிய கவலை வந்து விட்டது. இன்றைய நிலையில் கலைஞர் பெயரில்லை என்றால் படம் வெற்றி பெறாது. ஏற்பட்டிருக்கிற இந்த ஊடலை எப்படித் தீர்ப்பது என சிந்தித்த எம்.ஜி.ஆர். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியை அழைத்துக் கொண்டு திருவாரூருக்குச் சென்றார்.

திருவாரூரில் கலைஞரின் இல்லத்தில் அவரைச் சந்தித்த கே.ஆர்.ஆர். கலைஞரிடம் நீண்ட நேரம் பேசி அவரைச் சமாதானப்படுத்தினார். எம்.ஜி.ஆரோ, “”உங்கள் பெயர் படத்தின் டைட்டிலில் வரும்போதே கைதட்டல் அரங்கை அதிர வைக்கிறது. உங்கள் பெயர் இல்லை என்றால் படம் வெற்றி பெறுவது சந்தேகமே. நான் நடித்த படங்கள் எல்லாம் உங்கள் வசனச் சிறப்புகளாலேயே வெற்றி பெறுகின்றன.

இந்தப் படமும் வெற்றி பெற வேண்டும். அதற்குத் திரையில் உங்கள் பெயர் வந்தே ஆக வேண்டும்” என்று உருக்கமுடன் வேண்டினார். கலைஞர் ஒருவாறு சம்மதிக்க, கலைஞர், கே.கே.ஆர்., எம்.ஜி.ஆர். மூவரும் சென்னை வந்தனர். மகிழ்ச்சியான சூழலில் ஸ்ரீராமுலு அவர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது ஸ்ரீராமுலு, “”எத்தனை மாதங்கள் ஆனாலும் சரி! மன நிறைவான உங்கள் ஒப்புதல் இல்லாமல் “மலைக்கள்ளன்’ படத்தை நான் வெளியிடுவதில்லை என்ற முடிவோடு இருந்தேன்” என்றார்.

அதைக் கேட்டதும் எம்.ஜி.ஆர். அவர்கள் நெகிழ்வோடு கண் கலங்கிய நிலையில் ஸ்ரீராமுலு -கலைஞர் இருவரது கரங்களையும் ஒன்றாக இணைத்து முத்தமிட்டார்.
பின்னாளில் கலை உலகில் கொடிகட்டிப் பறந்த கண்ணதாசன், சிவாஜி, எம்.ஜி.ஆர். ஆகிய மூவருடனும் ஆரம்ப காலம் முதலே நெருங்கிய நட்பு கொண்டிருந்த கலைஞர் அவர்களுக்கு காலச் சூழ்நிலை காரணமாக கண்ணதாசன், எம்.ஜி.ஆர். ஆகிய இருவரோடும் பலமான கருத்து வேற்றுமை ஏற்பட்டது.

கண்ணதாசன், எம்.ஜி.ஆர். ஆகிய இருவரோடும் அவர் கொண்ட கருத்து வேற்றுமை அளவிற்கு சிவாஜி அவர்களோடு அவர் மாறுபடவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அதன் காரணமாகத்தான் கலைஞர் அவர்களது பவள விழாவையொட்டி கலை உலகம் நடத்திய பாராட்டு விழாவில் கலைஞர் அவர்களைப் பாராட்டி நடிகர் திலகம் பேசிய பேச்சு அத்தனை உணர்ச்சிப் பூர்வமாக அமைந்தது. சிவாஜி, கலைஞர் ஆகிய இருவருடைய கண்களும் அந்தப் பாராட்டு விழாவின்போது கலங்கியதைக் கண்ட அனைவரும் அவர்கள் நட்பின் ஆழத்தை அன்று உணர்ந்தனர்.

அரசியல் காரணமாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், கலைஞருக்கும் இடையே இருந்த உறவில் எத்தனை பெரிய விரிசல் ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். ஆனாலும் எம்.ஜி.ஆர். இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் அன்று காலை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய கலைஞர் செய்த முதல் காரியம் எம்.ஜி.ஆருக்கு இறுதி மரியாதை செலுத்த ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றதுதான்.

ஸ்ரீராமுலு நாயுடு அவர்களுடன் ஏற்பட்ட வருத்தத்தைக் களைந்தது போல தனது நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதை மறந்து அவர்களுக்கு நேசக்கரம் நீட்டுகின்ற மாபெரும் பண்புக்குச் சொந்தக்காரராக கலைஞர் இன்றளவும் விளங்கி வருகிறார். அதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.

மலையளவு நெஞ்சுறுதி
வானளவு சொற்பெருக்கு
கடலளவு கற்பனைகள்
கனிந்துருகும் கவிக்கனிகள்

இலை தலையாய் ஏற்றமுற்று
இளந்தலைகள் வாழ்த்தொலிக்க
அவைத்தலைமை ஏற்றிருக்கும்
அன்புமிகு என் தோழ!

கூட்டத்தைக் கூட்டுவதில்
கூட்டியதோர் கூட்டத்தின்
நாட்டத்தை நாட்டுவதில்
நற்கலைஞன் நீயிலையோ

அந்தச் சிரிப்பலவோ
ஆளையெல்லாம் கூட்டி வரும்
அந்தச் சிறு மீசை
அப்படியே சிறைப்படுத்தும்!

சந்திரனைப்போலத்
தக தகவென்று ஒளிரும்
அந்த வழுக்கையில்தான்
அரசியலே உருவாகும்.

எந்தத் துயரினிலும்
இதயம் கலங்காதோய்!
முத்தமிழ்த் தோழ!
முனை மழுங்கா எழுத்தாள!

திருவாரூர்த் தேரினையே
சீராக்கி ஓட விட்டுப்
பரிசாகப் பெற்றவனே!
கருணாநிதித் தலைவ!
கவிதை வணக்கமிது

என்று கலைஞரைப் பாராட்டி கவிதை பாடிய கண்ணதாசனுக்கும் கலைஞருக்கும் இடையே எழுந்த விரிசல் பலமானது என்றாலும், அந்த விரிசலை மீறி ஒருவர் மீது ஒருவர் மாறா நட்பு கொண்டிருந்தனர்.
——————————————————————————————————————————————————–
கவிஞருக்கு கலைஞரின் கவிதை

“இல்லற ஜோதி’ படத்திற்காக எழுதப்பட்ட “அனார்க்கலி’ நாடகம்தான் கலைஞருக்கும் கவியரசருக்குமிடையே முதல் விரிசலை ஏற்படுத்தியது. அந்த விரிசலை ஒரு அகழி அளவுக்கு விரிவாக்கியதில் இரு தரப்பிலுமிருந்த “நல்ல’ நண்பர்களின் பங்கு அதிகமாக இருந்தது.

பத்திரிகைகளில் பத்து கவிதைகளும், சினிமா படங்களுக்காக 5 பாடல்களும் மட்டுமே எழுதியிருந்த நிலையில் கண்ணதாசனை “கவிஞர்’ என்று மேடயில் அழைத்து பெருமைப்படுத்தியவர் கலைஞர்தான் என்பதை நான் ஏற்கனவே இக்கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.

கலைஞர் அவர்களோடு கருத்து வேற்றுமை வந்த காலங்களில் கூட அதை மறக்காமல் பல பத்திரிகைகளில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர். “”கருணாநிதியும் நானும் எழுதத் தொடங்கியது ஏறக்குறைய ஒரே காலத்தில்தான்.

நான் அவரது எழுத்தைத்தான் முதலில் காதலித்தேன். என்னுடைய எழுத்துக்களில் அவருக்குள்ள ஈடுபாடுகள் போலவே அவரது எழுத்துக்களில் எனக்கு ஈடுபாடு உண்டு.

அரசியலில் பதவிகள் வரலாம். போகலாம். ஆனால் நிலையான இடத்தைப் பெற்றுத் தரும் “ரிக்கார்டு’ எழுத்துதான். எழுத்துத் துறையில் கருணாநிதியை மிஞ்சக் கூடியவர் எவரும் இல்லை. பதவி போய் விட்டாலும் அவர் நிலைத்து நிற்கப் போவது அவரது எழுத்துக்களில்தான்.

முதல் முதலாக பொள்ளாச்சி கூட்டத்தில்தான் என்னைப் பேச வைத்து பேச்சாளனாக அரங்கேற்றினார் கருணாநிதி. பேசத் தெரியாத நான் பேசப் பழகிக் கொண்டேன். ஆமாம். என்னை அரசியல் மேடையில் பேச “ஆதிமுதலாய்’ அரங்கேற்றி வைத்தவரே அவர்தான்.

அவரோடு பல சுற்றுப் பயணங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அவரோடு போகும் நான் ஆரம்பத்தில் மேடைகளில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பேச மாட்டேன். அப்படிக் குறுகிய நேரம் நான் பேசுவதற்கே கலைஞர் என்னைக் கேலி செய்வார் ஆனால் அதற்கடுத்தக் கூட்டத்திலும் என்னைக் கட்டாயம் பேச வைப்பார்.

அப்படி வற்புறுத்தி பேச வைத்தே என்னை அவர் அரை மணி நேரம், முக்கால்மணி நேரம், சில நேரங்களில் ஒரு மணி நேரம்கூடத் தயங்காமல் பேசும் ஒரு வழக்கமான கழகப் பேச்சாளராக்கி விட்டார்.

நான் அரசியலுக்கு வந்தது, பேச்சாளரானது இதெல்லாம் பாவமோ, புண்ணியமோ அவரைத்தான் சேரும்” என்று பல கால கட்டங்களில் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்.

கண்ணதாசனது இந்தத் திறந்த மனதை கலைஞர் பல முறை பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். “”எனக்கும் அவருக்கும் ஆயிரம் மனவேறுபாடுகள், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் வந்த பிறகும்கூட எந்த ஒரு இடத்திலும் முதன்முறையாக நான்தான் அவரை “கவிஞர்’ என்று அடைமொழியிட்டு அழைத்தேன் என்பதை கண்ணதாசன் என்றைக்கும் சொல்ல மறந்ததில்லை. அப்படி நன்றி உள்ளவர் கண்ணதாசன்.

பல பேர் நன்றியை மறந்துவிடுவார்கள். அதுவும் என்னுடைய வாழ்க்கையில் நன்றி மறந்தவர்கள் ஏராளமானவர்கள். ஆனால் அரசியலில் தனிப்பட்ட முறையில் சில நேரங்களில் அவர் எனக்குப் பகையாக மாறியும்கூட அந்த நன்றியைக் கடைசி வரை மறக்காமல் “என்னை முதன்முதலில் கவிஞர் என்று அழைத்தவர் கருணாநிதிதான்’ என்று கூறுவார் கண்ணதாசன்.

அதை மகிழ்ச்சியான நேரத்தில் மட்டுமல்ல! என்னைத் திட்டி எழுதிய புத்தகத்தில் கூட அதை மூடி மறைக்காமல் மனம் திறந்து அவர் எழுதியிருக்கிறார்” என்று பலமுறை கலைஞர் பரவசப்பட்டதுண்டு.

கவிஞர் மறைந்தபோது கலங்கிய கண்களுடன் அவருக்கு அஞ்சலி செலுத்திய கலைஞர் அவர்கள் எழுதிய இரங்கற்பா அந்த இருவரின் நட்பின் ஆழத்துக்கு சாட்சியாக இன்றும் விளங்குகிறது.

“”என் இனிய நண்பா
இளவேனிற் கவிதைகளால்
இதய சுகம் தந்தவனே! உன்
இதயத் துடிப்பை, ஏன் நிறுத்திக் கொண்டாய்!

தென்றலாக வீசியவன் நீ- என் நெஞ்சில்
தீயாகச் சுட்டவனும் நீ! -அப்போதும்
அன்றிலாக நம் நட்பு திகழ்ந்ததேயன்றி
அணைந்த தீபமாக ஆனதேயில்லை நண்பா!

கண்ணதாசா! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!
கவிதை மலர்த் தோட்டம் நீ -உன்னைக்
காலமென்னும் பூகம்பம் தகர்த்துத்
தரை மட்டம் ஆக்கி விட்டதே!

கை நீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ!
கல்லறைப் பெண்ணின் மடியினிலும்
அப்படித்தான் தாவி விட்டாயோ;
அமைதிப் பால் அருந்தித் தூங்கிவிட!

இயக்க இசைபாடி களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முள்ளை
தாக்குதல் கணை எத்தனைதான் நீ தொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என் நெஞ்சே உன் அன்னை

திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால்- சுவைப்
பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை;
தித்திக்கும் கவித்தமிழா! பிரிவின்
மத்தியிலே ஏன் விட்டுச் சென்றுவிட்டாய்?

அடடா! அந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்!
ஆயிரங் காலத்துப் பயிர் நம் தோழமையென
ஆயிரங் கோடிக் கனவுகள் கண்டோம்!

அறுவடைக்கு யாரோ வந்தார்!
உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்!
நிலையில்லா மனம் உனக்கு! ஆனால்
நிலை பெற்ற புகழ் உனக்கு!

இந்த அதிசயத்தை விளைவிக்க -உன்பால்
இனிய தமிழ் அன்னை துணை நின்றாள்
என் நண்பா! இனிய தோழா!

எத்தனையோ தாலாட்டுப் பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள்!
எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு
இயற்கைத் தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா?

எனை மறந்தாய்! எமை மறந்தாய்! உனை
மறக்க முடியாமல் உள்ளமெல்லாம் நிறைந்தாய்!”

என்று கலைஞர் எழுதிய கவிதாஞ்சலி கவிஞரின் பிரிவு எந்த அளவு கலைஞர் அவர்களைப் பாதித்தது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

“”தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் பெயர்களுக்கு இணையாக சுவரொட்டிகளில் வசனகர்த்தாவின் பெயரும் இடம்பெற முன்னோடியாக இருந்தவர் கருணாநிதி.

கதை – வசனம் மு.கருணாநிதி என்று ஒரு படத்தின் விளம்பரம் வந்தாலே அதன் வெற்றிக்கு உத்திரவாத முத்திரை குத்தப்பட்டது” என்று தனது “திரை வளர்த்த தமிழ்’ நூலின் முதல் தொகுதியில் “பேசும் படம்’ ஆசிரியர் ஆசிரியர் திரு. ராம்நாத் அவர்களால் பாராட்டப்பட்ட கலைஞர், “பூம்புகார்’ திரைப் படத்தைத் தொடர்ந்து “மணிமகுடம்’, “மறக்க முடியுமா’, “அவன் பித்தனா’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார்.

அவரது வாழ்க்கையில் அரசியல் -சினிமா என்று வரும்போது அரசியலுக்கே முதலிடம் என்ற திடமான சிந்தனையோடு திரை உலகில் அடி எடுத்து வைத்தவர் என்பதால் 1967-ல் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அவரது கலை உலகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது என்பது உண்மை.

1967-ல் வெளியான “தங்கத் தம்பி’ “வாலிப விருந்து’ ஆகிய படங்களைத் தொடர்ந்து 1970-ல் “எங்கள் தங்கம்’ திரைப்படம் வெளிவந்தது.

மாடர்ன் தியேட்டர்ஸில் இணைந்த அந்த இரு மாபெரும் கலைஞர்களும் இணைந்து பணியாற்றிய கடைசி திரைப்படம் “எங்கள் தங்கம்’தான். எம்.ஆர். ராதா எம்.ஜி.ஆரைத் துப்பாக்கியால் சுட்டதையும், அதில் அவர் உயிர் மீண்டதையும் குறிக்கும் வகையில்,

“நான் செத்துப் பொழச்சவன்டா-எமனைப்
பார்த்துச் சிரிச்சவன்டா
வாழை போல வெட்ட வெட்ட முளைச்சு
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா’

என்று தொடங்கும் அப்பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
1972-ல் தனது மகன் மு.க.முத்துவை “பிள்ளையோ பிள்ளை’ திரைப்படத்தின் மூலம் கலையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் கலைஞர். “அஞ்சுகம் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் உருவான இப்படத்தின் சிறப்புக் காட்சியில் பங்கு பெற எம்.ஜி.ஆர் வந்திருந்தார்.

“”புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்தான் என் ஆசான்” என்று மு.க.முத்து பேசியதைப் பற்றி தனது உரையில் குறிப்பிடும்போது, “”துரோணாச்சாரியாரை ஆசானாகக் கொண்டு ஏகலைவன் வில் வித்தையிலே தேர்ச்சிப் பெற்றதைப் போல இங்கே எம்.ஜி.ஆரை ஆசான் என்று கூறிய முத்து அப்படிப்பட்ட புகழையும் சிறப்பையும் பெற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டார் கலைஞர்.

இறுதியாக மு.க.முத்துவை வாழ்த்திப் பேச வந்த எம்.ஜி.ஆர், “”என்னை ஆசானாக ஏற்றுக் கொண்டிருப்பதாக தம்பி மு.க. முத்து பேசினார். அதைக் கேட்டுப் பெருமைப்படுகிறேன்.

ஆனால் முத்து ஒரு நாள் கூட என்னிடம் நடிப்புக்காக வந்ததில்லை. ஏகலைவன் மானசீகமாகக் குருவை எண்ணி வித்தையில் தேர்ந்தான் என்பது போல என் படங்களைப் பார்த்து அதன்படி நடிக்க விரும்புகிறார் முத்து என்று எண்ணுகிறேன்.

ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்தன்மை- நடிப்பு இருக்கிறது. அதில்தான் செல்ல வேண்டும். முத்து தனக்கென்று தனி வழியை நடிப்பதற்கு வகுத்துக் கொண்டு நடிகராக வளர வேண்டும்” என்று வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

தி.மு.கழகத்தில் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எல்லாம் இணைந்து செயலாற்றி பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய வல்லமை படைத்த இரு ஆற்றல் மிகுந்த சக்திகளான கலைஞர் அவர்களுக்கும், எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவிற்கு குறுக்கே முதல் கோட்டை இழுத்தது மு.க.முத்துவின் திரையுலகப் பிரவேசம்.

Posted in ADMK, Anna, AVM, Biosketch, Chettiyar, Cinema, dialogues, DMK, Express, Faces, Films, Ganesan, History, Incidents, Kalainjar, Kannadasan, Kannadhasan, Kannathasan, Karunanidhi, Kaviarasu, Kavidhai, Kavithai, Life, MGR, Movies, Muthu, people, Poems, Shivaji, Sivaji, Sridhar, Tidbits, Trivia | 1 Comment »

‘Sivaji – The Boss’ celebrations – 175th Day Event Coverage: Rajni speech

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2008

“சிலபேருக்கு கடவுளை பிடிக்காது; ஆனால் அவர்களை கடவுளுக்கு பிடிக்கும்”
கருணாநிதி முன்னிலையில் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை, ஜன.12-

“சிலபேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால் அவர்களை கடவுளுக்கு பிடிக்கும்” என்று ரஜினிகாந்த் பேசினார்.

வெள்ளி விழா

ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் சார்பில் எம்.சரவணன், எம்.எஸ்.குகன் ஆகிய இருவரும் தயாரித்த `சிவாஜி’ படம் 175 நாட்களை தாண்டி ஓடி வெள்ளி விழா கண்டது. இதையொட்டி அந்த படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பரிசளிக்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு `சிவாஜி’ படத்தில் நடித்த நடிகர்-நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார்.

ரஜினிகாந்த்

விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

“சிவாஜி படத்தில், சில அரசியல் விஷயங்கள் இருக்கிறது என்று தெரிந்திருந்தும், அந்த படத்தை பார்த்து பாராட்டிய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பெருமைக்குரிய படத்தில் நான் இருந்தது, பாக்கியம். ஏவி.எம்.சரவணன், ஷங்கர், படத்தில் வேலை செய்த தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பணம்

பணம் இருந்தால், உன்னையே உனக்கு தெரியாது. பணம் இல்லையென்றால் யாருக்கும் நீ தெரியமாட்டாய் என்று சொல்வார்கள். அந்த பணம் இருந்தபோதும், அது தலைக்கு போகாமல் தொழில்தான் முக்கியம் என்று அப்பா ஸ்தாபித்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்காக சரவணன் படும் சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் தலைவணங்குகிறேன்.

அவருடைய மிகப்பெரிய சொத்து, அவருடைய மகன் குகன். தாத்தா மாதிரி நீங்களும் பெரிய பட அதிபர் ஆக, என் மனமார்ந்த வாழ்த்துகள்.

கே.பாலசந்தர்

`சிவாஜி’ படம் பார்த்துவிட்டு என் குருநாதர் கே.பாலசந்தர் எப்படி இப்படி எல்லாம் நடித்தாய்? என்று கேட்டபோது, அவர்கள், மூன்று முடிச்சு, அபூர்வ ராகங்கள் ஆகிய படங்களில் நடித்தபோது, உங்களிடம் எப்படி நான் கேள்வி கேட்காமல் நடித்தேனோ, அதேபோல்தான் ஷங்கர் என்ன சொன்னாரோ, அதைத்தான் செய்தேன் என்று சொன்னேன்.

பாலசந்தர் சாருக்கு பின்னால், நான் புளோரில் ஒரு டைரக்டரை பார்த்தேன் என்றால், அது ஷங்கர்தான். இப்படி சொல்வதால் நான் மற்ற டைரக்டர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டதாக அர்த்தம் அல்ல. ஷங்கர், ஏகலைவன் மாதிரி. அது, பூர்வஜென்ம புண்ணியம்.

கபிலமுனி

நான் செய்யும் `சாங்கியோகா’வை கண்டுபிடித்த கபிலமுனி, “ஆசைப்படு…ஆசைப்பட்டதை அடைவதற்கு விஷயத்தை சேர்த்து வை…அப்படி சேர்த்து வைத்த விஷயத்தை சரியாக செயல்படுத்து…அது கொடுக்கும் பலனை முதலில் நீ அனுபவி… அதில் கொஞ்சம் நீ வைத்துக்கொள். மீதியை மற்றவர்களுக்கு கொடுத்து விடு” என்று கூறியிருக்கிறார்.

சாப்பிட்டதை எல்லாம் உடம்பில் வைத்துக்கொண்டால், உடம்பு கெட்டுப்போய்விடும். சம்பாதித்ததை எல்லாம் நாமே வைத்துக்கொண்டால், வாழ்க்கை கெட்டுப்போய்விடும்.

ஆசைப்படுவதற்கு நமக்கு தகுதி இருக்கிறதா? என்று முதலில் பார்க்கணும். சைக்கிள் வாங்குவதற்கே கஷ்டப்படுகிற ஒருவன், கார் வாங்க ஆசைப்பட்டால் எப்படி? ஆசைப்பட்டதை அடைய வேண்டும் என்றால், சரியான ஆட்களை சேர்த்துக்கொள். அதன்பிறகு ஆகாயமே கீழே விழுந்தாலும், `காம்ப்ரமைஸ்’ ஆகாதே. நினைத்ததை செயல்படுத்திவிடு… இதைத்தான் ஷங்கர் செய்துகொண்டிருக்கிறார்.

`ரோபோ’

அடுத்து, நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யப்போகிற படம், `ரோபோ.’ மிகப்பெரிய படம்.

`ரோபோ’ படம், கடவுள் ஆசீர்வாதத்தில், சிவாஜி அளவுக்கு வெற்றிபெறவேண்டும்.

அடுத்து கே.பாலசந்தர் சாருக்காக ஒரு படம் நடிக்கிறேன். அதையடுத்து சவுந்தர்யா டைரக்ஷனில், `சுல்தான் தி வாரியர்’ படத்தில் நடிக்கிறேன். அதையடுத்து, `ரோபோ’ வரும்.

சாய் பாபா

சாய்பாபாவை நேரில் பார்க்க, நான் நான்கு முறை முயற்சி செய்தேன். பெங்களூரில் இரண்டு தடவை. புட்டபர்த்தியில் ஒரு தடவை. இங்கே சென்னையில் ஒரு தடவை. இங்கே வந்தபோது, அவரை நான் சந்தித்தேன். வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடுங்க, வருவார் என்று சொன்னார்கள். நானும் வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட்டேன். அவர், பெருந்தலைவர் காமராஜர் `டயலாக்’க்கை சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

கடவுளுக்கு பிடிக்கும்

ஆனால், அதே சாய்பாபா கலைஞர் வீட்டுக்கு வந்து, அவரை சந்தித்தார். நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். சில பேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால், கடவுளுக்கு அவர்களை பிடிக்கும்.

வேண்டுகோள்

இந்த சமயத்தில், கலைஞர் அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். கலையுலக விழாவாக இருந்தாலும் சரி, இலக்கிய விழாவாக இருந்தாலும் சரி, உங்களை தவிர யாரும் கண்ணுக்கு தெரியவில்லை. யாரும் கிடையாது. நீங்கதான் கலந்துகொள்ள வேண்டும்.

அதற்காக, உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்.”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

ஷங்கர்

டைரக்டர் ஷங்கர் பேசும்போது, “ரோபோ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டியிருக்கும். அதற்கு தமிழ் பட பட்ஜெட் தாங்காது என்பதால்தான், இந்தியில் படமாக்க முயன்றேன். சில காரணங்களால், அந்த திட்டம் நின்றுபோனது. `சிவாஜி’ படத்தின் வெற்றியும், வசூலும் `ரோபோ’ படத்தை தமிழில் எடுக்கலாம் என்ற நம்பிக்கையை எனக்கு தந்தது. ரஜினி, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப்பெரிய சக்திகள் ஒன்றாக சேர்ந்துள்ளதால், ரோபோவை மிக சிறந்த படமாக கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

வைரமுத்து

கவிஞர் வைரமுத்து பேசும்போது, “ஏவி.எம். நிறுவனத்தின் மகுடம், `சிவாஜி’ படம். நான் ரஜினியை பற்றி ஒரு விஷயம் பேசவேண்டும். ஒரு மனிதன் பேசுவதில்லை. ஆனால் பேசப்படுகிறார். அவர் விளம்பரத்தை விரும்புவதில்லை. ஆனால், அவர் இல்லாமல் விளம்பரம் இல்லை. அவருக்கு அரசியல் இல்லை. ஆனால், அவரை சுற்றி அரசியல் இல்லாமல் இல்லை. தமிழ்நாட்டுக்கு ரஜினி கொடுத்த உற்சாகம் கொஞ்சம் அல்ல. அவர் நினைத்தால், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விதம்விதமாக செய்திகள் சொல்லலாம்” என்றார்.

நடிகை ஸ்ரேயா பேசும்போது, “சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்தது என் அதிர்ஷ்டம். மீண்டும் அவருடன் நான் நடிக்க விரும்புகிறேன். மீண்டும் மீண்டும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்” என்றார்.

ஏவி.எம்.சரவணன்

நடிகர்கள் சுமன், விவேக், வி.எம்.சி.அனீபா, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, பேச்சாளர் ராஜா, கவிஞர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார், எழுத்தாளர் சுஜாதா, ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் ஆகியோரும் பேசினார்கள்.

ஏவி.எம்.சரவணன் வரவேற்று பேசினார். படத்தின் இணை தயாரிப்பாளரான டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் நன்றி கூறினார்.

Posted in 175, Actors, Actress, AVM, Baba, Celebrations, Cinema, Coverage, Events, Films, Functions, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KB, Loss, Movies, Profit, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Robo, Robot, Saibaba, Sankar, Shankar, Shivaji, Shreya, Shriya, Sivaji, Speech, Sreya, Sriya, Tax, The Boss, Vairamuthu | 1 Comment »

AVM, Rajni & Shankar: ‘Sivaji – The Boss’ – Profit & Loss, Distribution woes, Balance Sheet, Income

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

சிவாஜி’ த லாஸ்!: சர்ச்சைகளுக்கிடையே ஒரு சாதனை விழா – தினமணி

ஏவி.எம். தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ படத்தின் வெள்ளி விழா (ஜன.11) சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. விழா கொண்டாடும் இந்த நேரத்தில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் இந்தப் படத்தால் தாங்கள் நஷ்டமடைந்துள்ளதாகவும் அதனால் தங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

ஒரு படத்தின் வெற்றியில் எப்படி விநியோகஸ்தர்களுக்குப் பங்கு உண்டோ அதேபோல தோல்வியிலும் உண்டு என்பது திரையுலகில் அனைவரும் அறிந்ததே. அதையும் மீறி சிலர் நஷ்ட ஈடு கேட்பது ஏன் என்பதுதான் கேள்வி.

தமிழகம் முழுவதும் “சிவாஜி’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவருக்கும் நஷ்டம் என்றே கூறப்படுகிறது. அதேபோல நான்கைந்து மாதங்கள் ஓ(ட்)டிய இந்தப் படத்தின் மூலம் சில திரையரங்கள் தவிர எஞ்சிய அனைவருக்கும் நஷ்டமே ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மற்றும் புதுவை உரிமையை டிஸ்ட்ரிபியூஷன் கேரண்டி முறையில் ரூ.4 கோடியே 65 லட்சத்துக்கு வாங்கினோம். ஆனால் படம் ரூ.3 கோடியே 30 லட்சம்தான் வசூல் செய்தது. டிஸ்ட்ரிபியூஷன் கேரண்டி முறையில் வாங்கியதால் இழப்பு ஏற்பட்டால் அதைச் சரிக்கட்டுவார்கள் என நம்பினேன். ஆனால் ஏவி.எம். நிறுவனம் மறுத்துவிட்டது என்கிறார் இந்தப் பகுதி விநியோக உரிமையை வாங்கிய நாக் ரவி.

சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட உரிமையை ரூ.5 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கினோம். படம் வசூலாகாவிட்டால் பார்த்துக்கொள்கிறோம் என்றனர். 4 மாவட்டங்களில் 33 திரையரங்குகளில் வெளியிட்டோம். ஆனால் படத்தின் மூலம் கிடைத்தது ரூ.4 கோடியே 30 லட்சம்தான். இதுபற்றி ஏவி.எம்.நிறுவனத்திடம் தெரிவித்தோம். ஆனால் இதுவரை பதிலே இல்லை என்கிறார் இந்தப் பகுதி உரிமையை வாங்கிய விகாஷ் பிக்சர்ஸ் சி.பிரகாஷ்.

திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 22 சென்டர்களில் வெளியிட ரூ.6 கோடி கொடுத்தோம். ஆனால் படத்தால் ரூ.1 கோடிக்கு மேல் நஷ்டம் என்கிறார் இந்தப் பகுதிகளின் உரிமையை வாங்கிய ஆடிட்டர் ரமேஷ்குமார்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உரிமையை பொன்கனகவல்லி கம்பைன்ஸ் நிறுவனத்தினர் ரூ.3 கோடிக்கு வாங்கி 11 திரையரங்குகளில் திரையிட்டுள்ளனர். நூறு நாள்களைத் தாண்டினாலும் இரண்டு திரையரங்குகளைத் தவிர மற்ற அனைத்துத் திரையரங்குகளுக்கும் நஷ்டமே ஏற்பட்டுள்ளது.

ஒரு திரையரங்கில் ஒரு திரைப்படம் 100 நாள்கள் ஓடி ரூ.90 லட்சம் வசூலானால் அதில் எல்லா செலவுகளும் நீக்கி ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைக்கும். ஆனால் “சிவாஜி’ படம் 150 நாள்கள் ஓடியும் அந்த அளவுக்கு லாபம் ஈட்டவில்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெருத்த நஷ்டம் என்கிறார் ஒரு திரையரங்க மேலாளர்.

இந்த நஷ்டத்தை ஈடுசெய்யுமாறு ஏவி.எம்.நிறுவனத்திடம் ஏற்கெனவே இந்தப் பகுதி விநியோகஸ்தர்கள் தரப்பில் கேட்கப்பட்டதாகவும் அதற்கு அவர்களிடமிருந்து சரியான பதில் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

கோவையைப் பொருத்தவரை பெரிய லாபம் இல்லை என்று கூறப்படுகிறது. “சிவாஜி’யின் தயாரிப்பு செலவு அதிகம். அதனால் படத்தை இதுவரையில்லாத அளவில் அதிக விலைக்கு விற்றுள்ளனர். அதனால் மிகப் பெரிய லாபம் என்று சொல்வதற்கில்லை.

இன்னும் சொல்லப்போனால் கொடுத்த பணத்துக்கும் எதிர்பார்த்ததற்கும் தொடர்பில்லை. “சந்திரமுகி’ திரைப்படம் ரூ.3 கோடிக்கு வாங்கப்பட்டு ரூ.4.5 கோடி லாபம் ஈட்டித் தந்தது. அது எதிர்பார்த்ததற்கும் மேல். அதனுடன் ஒப்பிடுகையில் சிவாஜியால் லாபம் இல்லை என கோவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பகுதிகளில் “சிவாஜி’ படத்தை வாங்கியவர்களிடம் பட வசூல் நிலவரம் குறித்து விசாரித்தபோது, “அப்படி இப்படி என எப்படியோ படத்தின் வெள்ளி விழா வரை வந்துவிட்டார்கள்.

அந்த விழாவிலாவது எங்களுக்கு ஏதாவது நல்ல செய்தி கிடைக்கிறதா என்று பார்ப்போம். அதுவரை எந்தக் கருத்தையும் சொல்லவிரும்பவில்லை” என ஒதுங்கிக்கொண்டனர்.

ஆக… படத்தைப் பற்றி மீடியாக்கள் ஆஹோ ஓஹோ என்று ஒரு மாயத் திரையை உருவாக்கியிருப்பதை அறிய முடிகிறது. “பாபா’ படத்தை ரஜினிகாந்தே தயாரித்ததால் அந்தப் படம் மூலம் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்குகளுக்கும் ஏற்பட்ட நஷ்டத்தை அவரை ஈடுகட்டினார். ஆனால் “சிவாஜி’ படத்தை ஏவி.எம். நிறுவனம் தயாரிததுள்ளது. அந்த நிறுவனம் நஷ்டத்தை ஈடு செய்ய வாய்ப்பில்லை. வேண்டுமானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாங்கள் அடுத்து தயாரிக்கும் திரைப்படங்களின் விற்பனையில் சலுகை காட்டலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் ரஜினிகாந்தின் அடுத்த பிரமாண்டப் படமான “ரோபோ’வின் வியாபாரம் எந்த வகையிலும் பாதிக்காது; “சிவாஜி’ படத்தால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் அந்தப் படத்தை வாங்கத் தயங்கினால் பன்னாட்டு நிறுவனங்களோ அல்லது அந்தப் படத்தைத் தயாரிக்கும் நிறுவனங்களோ நேரடியாகவே “ரோபோ’ படத்தைத் திரையிடும் நிலை ஏற்படலாம்.

திரையுலகுக்கு பல சலுகைகளை வழங்கிய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் “சிவாஜி’ வெள்ளி விழாவில் படத்தால் நஷ்டமடைந்தவர்களுக்கு ஆதரவாக சம்பந்தப்பட்டவர்கள் “வாய்ஸ்’ கொடுப்பார்களா?

இப்படி சர்ச்சைகளுக்கிடையே நடைபெறுகிறது ஒரு சாதனை விழா!

முந்தைய சற்றுமுன்:
1. ஒரு படத்தால் 3 மாதம் பீதி : ‘சிவாஜி’ குறித்து நாசர்

2. சிவாஜி’ (இந்தி) படத்துக்காக ரஜினிகாந்த் நடிக்கிறார்

3. உலகமெங்கும் வசூல் மழையில் சிவாஜி: ரூ.100 கோடியை நெருங்குகிறது

நன்றி: தினமணி

Posted in 4053051, AVM, Baba, Balance, Chandramukhi, Chandramuki, Chanthiramuki, Chanthramukhi, Chanthramuki, Cinema, Distribution, Distributors, Economy, Films, Finance, Income, Kollywood, Loss, Movies, Profit, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Return, Risk, Shankar, Shivaji, Sivaji, Sivaji the Boss, The Boss | 1 Comment »

Tamil Cinema 2007 – Top Films, Notable Movies, Flashback, Star Actors: Dinamani Manoj Krishna

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

சண்டே சினிமா

ஃப்ளாஷ் பேக் 2007

மனோஜ்கிருஷ்ணா


தமிழ் சினிமாவைப் பொருத்தவரை 2007-ம் வருடம், ஒரு கொண்டாட்ட வருடம். ஒரு மினி ஃப்ளாஷ்பேக்…     

2007-ம் ஆண்டில் 10 மொழி மாற்றுப் படங்கள் உள்பட சுமார் 107 தமிழ்ப் படங்கள் வெளியாகின. அவற்றில் 100 நாள்களைத் தாண்டிய 11 படங்களில் சில, ரசிகர்களாலும் சில, சம்பந்தப்பட்ட நடிகர்களாலும் திரையரங்குகளாலும் ஓட்டப்பட்டுள்ளன. 50 க்கும் மேற்பட்ட படங்கள் 50 நாள்களைக் கடந்து தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் மினிமம் கியாரண்டி தந்தன.

உச்ச நட்சத்திரம்!

2007-ம் ஆண்டில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய படம் ரஜினிகாந்தின் “சிவாஜி’. காஸ்ட்யூம், ஸ்டைல் என பல அம்சங்களில் ரஜினிகாந்த் மிக அழகாகத் தோற்றமளித்தப் படங்களில் இதுவும் ஒன்று. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளிவந்த இந்தப் படம், இதுவரை தமிழ் சினிமாவில் மிக அதிக விலைக்கு விற்பனையான திரைப்படம் என்ற புகழைப் பெற்றது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட படமும் இதுதான். “சிவாஜி’க்கு வெற்றியா அல்லது வீரமரணமா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

உலக நட்சத்திரம்!

2007-ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இன்னொரு படம் கமல்ஹாசனின் “தசாவதாரம்’. தமிழ் சினிமாவின் மிகப் பெரிய பட்ஜெட் படமும் இதுவே (சுமார் 70 கோடி). ஆனால் உலகத் தரத்திலான “பெர்ஃபெக்ஷன்’ இருக்க வேண்டும் என்பதற்காக படத்தின் வேலைகள் நீடித்து படம் வெளியாகவில்லை. ஒரு தமிழ் நடிகர் முதல்முறையாக 10 வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு இன்னும் நீடிக்கிறது. 14 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

சிறப்பு நட்சத்திரம்!

“அடாவடி’, “பெரியார்’, “கண்ணாமூச்சி ஏனடா’, “ஒன்பது ரூபாய் நோட்டு’ என நான்கு படங்களிலும் வித்தியாசமாக நடித்து 2007-ம் ஆண்டில் அதிகப் படங்களில் கதாநாயகனாக நடித்தவர் என்ற பெயரைப் பெறுகிறார் சத்யராஜ். குறிப்பாக, “பெரியார்’, “ஒன்பது ரூபாய் நோட்டு’ படங்களுக்காக விருது பெற்றால் அது செய்தியல்ல; பெறாவிட்டால்தான் அது செய்தி.

சிரிப்பு நட்சத்திரம்!

கடந்த சில ஆண்டுகள் போலவே 2007-ம் ஆண்டும் அதிகப் படங்களில் நடித்த நகைச்சுவை நாயகன் வடிவேலு. எப்படிப்பட்டக் கதையாக இருந்தாலும் இவருடைய காமெடி தங்களது படத்தில் இடம்பெற்றால் போதும் படம் தப்பித்து விடும் என்று பல முன்னணி நடிகர்களும் தயாரிப்பாளர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். இவருடைய கால்ஷீட் கிடைக்காததால் பல படங்களின் படப்பிடிப்பையே தள்ளி வைக்கும் அளவுக்கு 2007-ல் பிஸியாக இருந்தவர்.

நம்பிக்கை நட்சத்திரம்!

கணேசனுக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற ஓர் அறிமுக நடிகர் இவராகத்தான் இருக்கும். இவர் கார்த்தி. அமீரின் இயக்கத்தில் இவர் அறிமுகமான “பருத்தி வீரன்’ படத்தின் விஸ்வரூப வெற்றி இவருடைய அடுத்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 375 நாள்களை நோக்கி (சென்னையில்) ஓடிக்கொண்டிருக்கும் “பருத்தி வீரன்’ மெகா ஹிட்டுக்குப் பிறகு அவருக்கு வந்த பல பட வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் உரிய கதையைத் தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருப்பது தமிழ் சினிமாவில் அவருக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடிப்பார் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

தொடர் நட்சத்திரம்!

2007-ம் ஆண்டு “ஆழ்வார்;, “கிரீடம்’, “பில்லா’ என மூன்று படங்களில் நடித்துள்ளார் அஜித். முதலாவது தோல்வியையும் இரண்டாவது மினிமம் கியாரண்டியையும் மூன்றாவது அவருக்குரிய மார்க்கெட்டையும் ஓபனிங்கையும் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளுமளவுக்கான வெற்றியையும் அடைந்துள்ளது.

சுடர் நட்சத்திரம்!

“போக்கிரி’, “அழகிய தமிழ்மகன்’ என 2007-ல் இரண்டு படங்களில் நடித்துள்ளார் விஜய். முதலாவது வெற்றியையும் இரண்டாவது ஓரளவே வரவேற்பையும் பெற்றுள்ளன. தயாரிப்பாளர்கள் விரும்பும் கமர்ஷியல் ஹீரோவாகத் திரையுலகில் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருப்பது அவருடைய பலம்.

துருவ நட்சத்திரம்!

“கற்றது தமிழ்’, “ராமேஸ்வரம்’ படங்களில் வித்தியாசமாக நடித்து பலருடைய பாராட்டுகளைப் பெற்றுள்ள ஜீவா, புதிய முயற்சிகளுக்கு அளிக்கும் ஆதரவைப் பாராட்டலாம். கமர்ஷியல் ஹீரோவாக வரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்களின் பாணியைப் பின்பற்றாமல் தனக்கென ஒரு பாணியைத் தேர்ந்தெடுத்து வித்தியாசமான இளம் நடிகராகத் திகழ்கிறார்.

ஒளிர் நட்சத்திரம்!’

வில்லன், குணச்சிர நாயகன் என 2007-ல் ஏழு படங்களில் நடித்துள்ள பிரகாஷ்ராஜ், தான் தயாரிக்கும் படங்களின் மூலமாகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரியவராக இருக்கிறார். பெரும்பாலான படங்களின் வெற்றிக்கு இவருடைய பங்களிப்பும் ஒரு காரணம். சினிமாவை நேசிக்கும் இவர், கமல்ஹாசன் போலவே தான் சம்பாதிக்கும் பணத்தைத் திரைப்படத் துறையில் முதலீடு செய்வது வரவேற்கத்தக்க சிறப்பான விஷயம்.

பெண் நட்சத்திரம்!

2007-ம் ஆண்டின் மிகச் சிறந்த நடிகை என்று ஜோதிகாவைக் குறிப்பிடலாம். “மொழி’ படத்தில் வாய் பேச இயலாத காது கேட்கும் திறன் அற்ற பெண்ணாக வந்து தன்னுடைய கண்களாலும் முகபாவனைகளாலும் அபாரமான நடிப்புத் திறனை வெளிக்காட்டியவர். திருமணத்துக்குப் பிறகு நடிக்காதது அவருடைய சொந்த விருப்பம் என்றாலும் அவரை என்றும் ஆதரிக்க ரசிகர்கள் தயாராக இருக்கும் அளவுக்கு தன்னுடைய கடைசிப் படத்தில் கலைக்கு மரியாதை செய்திருக்கிறார்.

வெள்ளி நட்சத்திரங்கள்!

விஷால் “தாமிரபரணி’, “மலைக்கோட்டை’ என இரண்டு வெற்றிப் படங்களில் நடித்து கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் ஒரே பாணியிலான நடிப்பு, இன்னொருவரைப் போல காப்பியடிக்கும் காட்சிகள் போன்றவற்றைத் தவிர்க்காவிட்டால் திரைத்துறையில் தனித்துவம் காட்ட முடியாது.

சரத்குமார் “பச்சைக்கிளி முத்துச்சரம்’, “நம் நாடு’ அர்ஜுன் “மணிகண்டா’, “மருதமலை’, தனுஷ் “பரட்டை என்கிற அழகுசுந்தரம்’, “பொல்லாதவன்’, பரத் “கூடல் நகர்’, “சென்னைக் காதல்’ என தலா இரண்டு படங்களில் நடித்துள்ளனர்.

சூர்யா “வேல்’ படத்திலும் ஜெயம்ரவி “தீபாவளி’ படத்திலும் நடித்துள்ளனர்.

விக்ரம், சிம்பு ஆகியோர் படங்கள் எதுவும் வெளிவரவில்லை.

கடந்த ஆண்டு “தீபாவளி’, “கூடல்நகர்’, “ஆர்யா’, “ராமேஸ்வரம்’ என நான்கு படங்களில் நடித்து அதிகப் படங்களில் நடித்த கதாநாயகி என்ற பெயரைப் பெறுகிறார் பாவனா. அனைத்துப் படங்களிலும் வழக்கமான நடிப்புதான்.

“போக்கிரி’, “ஆழ்வார்’, “வேல்’ என மூன்று படங்களில் நடித்துள்ளார் அஸின். “வேல்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

“சிவாஜி’க்குப் பிறகு ஸ்ரேயாவின் மார்க்கெட் அதிகமாகி, அவரைத் தங்களுடைய படங்களில் நடிக்க வைப்பதற்கு முன்னணி நடிகர்களும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் விரட்டிக்கொண்டிருக்கின்றன. அவர் பாலிவுட், ஹாலிவுட் அதிக சம்பளம் தந்தால் கோலிவுட் என்ற கொள்கையில் இருக்கிறார்.

நமீதா வழக்கம் போல அழகு காட்டி தன்னுடைய மார்க்கெட்டைத் தக்க வைத்திருக்கிறார். “பருத்தி வீரன்’ படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ப்ரியாமணிக்கு விருதுகள் காத்திருக்கின்றன. நல்ல கதையை விட்டுவிட்டு நளினமான காஸ்ட்யூம் பக்கம் இவருடைய பார்வை திரும்பியிருக்கிறது. இயக்குநரைப் பொருத்து நடிப்பாற்றலை உயர்த்திக்கொள்ளலாம். “பில்லா’வில் ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ஹாலே பெர்ரி ஆகியோரைப் போல காஸ்ட்யூமில் முதல்முறையாக அளவுக்கு அதிகமாக க்ளாமர் காட்டியிருக்கிறார் நயன்தாரா. ஒரு சாரார் ரசித்ததை மட்டும் கணக்கில் கொள்ளாமல் இன்னொரு சாரார் முகம் சுளித்தைதயும் கருத்தில் கொள்ளலாம்.

இசை நட்சத்திரங்கள்!

2007-ம் ஆண்டில் 11 படங்களுக்கு இசையமைத்து முன்னணியில் இருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. அனைத்துப் படங்களிலும் ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தாலும் மண்வாசனையுடன் கூடிய “பருத்தி வீரன்’ முதலிடத்தைப் பிடிக்கிறது. இவரையடுத்து ஸ்ரீகாந்த் தேவா 9 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தேவா 8 படங்களிலும் பரத்வாஜ், இமான், சபேஷ்முரளி ஆகியோர் தலா நான்கு படங்களிலும் இசையமைத்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று படங்களுக்கு ஹிட் பாடல்களைத் தந்துள்ளார். மேடைகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் பார்வையற்ற இசைக் கலைஞர் கோமகன் “முதல்முதலாய்’ என்ற படத்துக்கு முதல்முறையாக இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. பிரபல கர்நாடக இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமன் “சிருங்காரம்’ படத்துக்கு முதல்முறையாக இசையமைத்ததும் குறிப்பிடத்தக்கது.

நட்சத்திரத் திருமணங்கள்

பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் -வந்தனா ஆகியோரின் திருமணம் மட்டுமல்லாமல், திரையுலகை மகிழ்வித்த இன்னும் சில நட்சத்திரத் திருமணங்கள்…

நடிகர் ஜீவா-சுப்ரியா, நடிகை மாளவிகா-சுமேஷ், நடிகை பூமிகா-பரத் தாகூர், பாடகர் விஜய் யேசுதாஸ்-தட்சணா, நடிகர், நடன இயக்குநர் நாகேந்திரபிரசாத்-ஹேமலதா, நடிகர் நரேன்-மஞ்சு ஹரிதாஸ்

உதிர்ந்த நட்சத்திரங்கள்!

2007 உண்மையிலேயே திரையுலகில் மிகப் பெரிய இழப்புகளையும் சந்தித்தது. நடிகர் விஜயன், நடிகை ஸ்ரீவித்யா,நடிகை ஜோதி, நடிகர் குட்டி, இயக்குநர் ஜீவா, நடிகர் ஏ.கே.சுந்தர், இசையமைப்பாளர் எல்.சுப்பிரமணியம், வீன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனர் கோவிந்தராஜன், விஜயம் கம்பைன்ஸ் பழனிச்சாமி, தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ்.கண்ணப்பன், நடிகை லட்சுமியின் தாயாரும் பழம்பெரும் நடிகையுமான ருக்மணி, நடன இயக்குநர் வாமன் என்று பல வருடங்கள் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் கோலோச்சிய பலர் உதிர்ந்தனர். திரையுலகம் வருந்தியது.

வால் நட்சத்திரம்…

ஒரு சினிமாவைப் பற்றிய முறையான மதிப்பீட்டைக் காட்டிலும் சினிமாவே மிக முக்கியமானது. சினிமாவின் தலைவிதி, மக்கள் ரசனையைப் பொருத்தே அமைகிறது. அதற்குப் பொறுப்பானவர்கள் நாம்தான்.

மக்களின் ரசனையைக் கலை வளர்க்கிறது. வளர்ந்துவிட்ட அந்த மக்கள் ரசனை, கலையின் வளர்ச்சியைக் கோருகிறது. மற்ற எந்தக் கலையைக் காட்டிலும் சினிமாவுக்கு இந்த விஷயம் பல மடங்கு பொருந்தும்.

சினிமா ஒரு கூட்டுப் படைப்பாக இருப்பதால் எவ்வளவு பெரிய மேதைகளாக இருந்தாலும் தங்களுடைய காலகட்டத்தில் நிலவும் ரசனை மற்றும் முக்கிய விஷயங்களைத் தங்களுடைய படைப்புகளில் பதிவு செய்தல் அவசியம். இல்லாவிட்டால் அந்தக் கலைஞனும் கலைப் படைப்பும் அழிந்துவிடக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்.

“மக்கள் விரும்புகிறார்கள் நாங்கள் என்ன செய்ய’ என்று சப்பைக் காரணம் கட்டி மலிவான படங்களைத் தராமல் மக்களின் ரசனையை உயர்த்தும் படங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சம்பந்தப்பட்ட கலைஞர்களும் தயாரிப்பாளர்களும் முன்வர வேண்டும்.

அதேபோல திரைத்துறையில் கடும் முயற்சிக்குப் பிறகு வாய்ப்பு கிடைக்கப் பெறும் புதியவர்கள், சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய வலிமைதான் தங்களுக்கு வாய்ப்பாகக் கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்து தங்களது படைப்பில் கவனம் செலுத்தினால் “உலகத் தரம், உலகத் தரம்’ என்ற பதம் மறைந்து “தமிழ்த் தரம்’ என்ற வரம் வாய்க்கப் பெறும்.

மனோஜ்கிருஷ்ணா

Posted in 2007, Actors, Ajith, Cinema, Dinamani, EVR, Films, Flashback, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, ManojKrishna, Movies, Periyaar, Periyar, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajnikanth, Shivaji, Sivaji, Stars, Vadivel, Vadivelu, Vijai, Vijay | Leave a Comment »

Tamil Actor Sathyaraj – Biosketch in Dhinathanthi

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(811)
சத்யராஜ் சினிமா தயாரிப்பு நிர்வாகி ஆனார்

நாடகத்தில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடினார் சத்யராஜ். ஆனால் கிடைத்ததோ தயாரிப்புத் துறையில் நிர்வாகம் பார்க்கும் வாய்ப்பு!

இதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-

“கோமல் சுவாமிநாதன் இயக்கிய “ஆட்சி மாற்றம்”, “சுல்தான் ஏகாதசி”, “கோடுகள் இல்லாத கோலங்கள்” என்ற மூன்று நாடகங்களிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த மூன்று நாடகத்திலும் நடித்ததற்காக எனக்கு நாடகம் ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் 30 ரூபாய் தந்தார்கள்.

இந்த 30 ரூபாயில் 10 ரூபாய்க்கு சுவீட் வாங்கினேன். என்னை நாடகத்தில் சேர்த்துவிட்ட நடிகர் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போனேன். நடிப்புக்கு கிடைத்த என் முதல் சம்பளத்தில் அவர் வீட்டுக்கு சுவீட் வாங்கிப்போக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படிச் செய்தேன்.

நான் எம்.ஜி.ஆர். ரசிகன் அல்லவா! எம்.ஜி.ஆர். கொடுத்து கொடுத்து சிவந்த கரம் கொண்டவர். அதனால் 5 ரூபாயை, தர்மத்துக்கு கொடுத்தேன். மீதி பணத்தில் நண்பர்களுடன் சினிமாவுக்கு போனேன்.

சூர்யா, கார்த்தி

நான் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போன காலகட்டத்தில் சூர்யா, கார்த்தி இருவருமே குழந்தைகள். இந்தக் குழந்தைகளும் வளர்ந்து இன்றைக்கு நடிக்க வந்துவிட்டார்கள்! கார்த்தி நடிக்க வரும் முன்பாக ஒரு வேலையில் சேர்ந்திருக்கிறார். முதல் மாத சம்பளத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு `சுவீட்’ வாங்கிக்கொண்டு வந்தார்! அப்போதுதான் என் முதல் சம்பளத்தில் நான் அவர்கள் வீட்டுக்கு `சுவீட்’வாங்கிப்போனதை சிவகுமார் அண்ணன் தனது பிள்ளைகளிடம் சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

நாடகத்தில் அவ்வப்போது 10 ரூபாய் சம்பளம் வந்து கொண்டிருந்தது. பணம் குறைவாக இருக்கிறதே என்று நான் கவலைப்படவில்லை. அண்ணன் மாதம்பட்டி சிவகுமார் கொடுத்த பணம்தான் இருக்கிறதே. அதை முழுவதுமாக செலவழிக்க நாளாகும். அந்த அளவுக்கு, சிக்கனமாகவே என் செலவுப் பட்டியலை வைத்துக்கொண்டேன்.

விவேகானந்தா பிக்சர்ஸ் என்ற கம்பெனி சார்பில் “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” போன்ற படங்களை தயாரித்த திருப்பூர் மணி, அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் நண்பர். அவரது மைத்துனர் கே.பாலு, அந்த நாட்களில் என் நண்பராகி விட்டார். பின்னாளில் இவர் பிரபு நடிக்க மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த “சின்னத்தம்பி” படத்தை தயாரித்தார். பாலு என்னிடம் சினிமா வாய்ப்பு வரும்போது நிச்சயம் நடிக்க வைப்பதாக சொன்னார்.

வாடகை அறை

அப்போது நான் சென்னை தி.நகர் உஸ்மான் ரோட்டில் மாதம் 85 ரூபாய் வாடகையில் ஒரு அறையில் இருந்தேன். என் சைசுக்குதான் அந்த அறை இருக்கும். காலை முழுசாக நீட்டி படுக்க முடியாத அளவுக்கு இருந்தது அந்த அறை.

ஒருநாள் என்னைப் பார்ப்பதற்காக என் தங்கை கல்பனாவும், தங்கை கணவர் அர்ஜ×ன் மன்றாடியாரும் அங்கே வந்துவிட்டார்கள். என் அறையை பார்த்த இருவருமே கண் கலங்கிவிட்டார்கள்.

அவர்கள் அப்படி கலங்கியதற்கு காரணம் இருக்கிறது. கோயமுத்தூரில் உள்ள எங்கள் வீடு 5 கிரவுண்டு கொண்டது. ஊரில் இருந்த செல்வாக்குக்கு தொழில் துறையில் ஈடுபடலாம். உறவு முறையில் யாரைக் கேட்டாலும் தொழில் தொடங்க உதவுவார்கள். இப்படி செல்வமும் செல்வாக்குமாய் இருக்க வேண்டியவன் இப்படி எங்கோ ஆறு அடி ரூமுக்குள் அரைகுறையாக முடங்கிக் கிடக்கவேண்டுமா என்ற கவலை அவர்களுக்கு.

என் சித்தி இந்திராணி (அம்மாவின் தங்கை) சித்தப்பா துரைராஜ். ஊரில் சித்தி குடும்பமும் எங்களுடன்தான் இருந்தது. அம்மா மாதிரியே என் மேல் அன்பு காட்டி வளர்த்தவர் சித்தி. நான் சென்னையில் சரியான இருப்பிடம்கூட இல்லாமல் சிரமப்படுவதாக சித்தப்பாவுக்கு சொல்லப்பட்டதும், அவர் உடனே சென்னைக்கு வந்து விட்டார். “கோவைக்கு வா! உனக்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்கிறேன்” என்று அழைத்தார். நான்தான் சித்தப்பாவிடம் பிடிவாதமாக, “நிச்சயம் சினிமாவில் எனக்கு வாய்ப்பு வரும். அதுவரை முயற்சி செய்கிறேன்” என்று சொல்லிவிட்டேன்.

ஓவியப்போட்டி

நாடகத்திலும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் எழுத்தாளர் மணியன் நடத்திய பத்திரிகையில் சிறுகதைக்கு முக ஓவியப்போட்டி அறிவித்தார்கள். ஓரளவு நல்ல முகவெட்டு கொண்டவர்களை மாடலாக ஏற்றுக்கொண்டு அந்த முகங்களை தொடர் கதைக்குள் கொண்டு வருவார்கள். இப்படி பத்திரிகை மூலம் பிரபலமாகும் முகம், நாளடைவில் சினிமா வாய்ப்புக்கும் உரியதாகி விடும்.

சரி, இதாவது நடக்கட்டும் என்று என் மாதிரியே நல்ல வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்த நண்பர் ராஜ்மதனும் நானும் அந்த `ஓவிய முகத் தேர்வுக்கு போனோம். (இந்த ராஜ்மதன் ரஜினிக்கும் மிகச்சிறந்த நண்பர்) ஏராளமான பேர் திரண்டு வந்திருந்த இந்த போட்டியில் நாங்கள் முதல் ரவுண்டிலேயே ஓரம் கட்டப்பட்டோம்.

வெறுத்துப்போயிற்று எனக்கு. ஒரு பத்திரிகையில் படம் வரையக்கூட உதவாத நம் முகத்தை வைத்து சினிமாவில் எப்படி நடிக்கப்போகிறோம் என்றுகூட தோன்றியது. என்றாலும் சினிமா முயற்சியில் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை. முயன்று பார்ப்போம். ஆனது ஆகட்டும் என்ற மனநிலையில் சினிமா வாய்ப்புக்கு முயன்று கொண்டிருந்தேன்.

தயாரிப்பு நிர்வாகி

திருப்பூர் மணி விவேகானந்தா பிக்சர்ஸ் பட நிறுவனம் தொடங்கி சிவகுமாரை கதாநாயகனாக்கி “கண்ணன் ஒரு கைக்குழந்தை” படம் எடுக்க இருந்தார். படத்தில் அவருக்கு ஜோடி சுமித்ரா. சுருளிராஜன் – மனோரமாவும் படத்தில் இருந்தார்கள்.

இந்த படத்துக்கு என்னை புரொடக்ஷன் வேலை பார்க்கச் சொன்னார், திருப்பூர் மணி. சினிமாவுக்கும் எனக்கும் அதுவரை இருந்த இடைவெளியை இந்த வேலை குறைக்கும் என்ற நம்பிக்கையில் வேலையை ஒப்புக்கொண்டேன்.

இந்த சமயத்தில் பிரபல கேமிரா மேனாக இருந்த என்.கே.விஸ்வநாதனிடம் கே.பாலு உதவியாளராகச் சேர்ந்தார். பாலு மூலம் எனக்கு என்.கே.விஸ்வநாதன் சாரின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகம், பிறகு நட்பாகியது. அவரிடம், “நீங்க ஒர்க் பண்ற படங்களில் ஏதாவது ரோல் இருந்தா சொல்லுங்க” என்று கேட்டுக்கொண்டேன். `சரி’ என்றவர், “எதற்கும் உங்களை பல கோணங்களில் படம் எடுத்து போட்டோ ஆல்பம் ரெடி செய்து கொள்ளுங்கள். டைரக்டர் யாராவது அழைக்கும்போது உங்களை வெளிப்படுத்த இந்த ஆல்பம் உதவும்” என்றார்.

பிரபல கேமிராமேன் இப்படி சொன்னால் போதாதா? உடனே “ஸ்டில்ஸ்” ரவியிடம் விஷயத்தை சொல்லி, படங்கள் எடுத்தேன். அவர் போட்டுக்கொடுத்த படங்களை பார்த்ததும் நொந்துபோனேன். புகைப்பட கோணத்தில் என் படம் படுகேவலமாக இருந்தது. இந்த படங்களை சினிமா கம்பெனியில் கொண்டு போய் காட்டினால் கிடைக்கிற வாய்ப்பும் கிடைக்காது என்பது தெளிவாக புரிந்தது. அதனால் அந்தப் படங்களை தூர எறிந்துவிட்டு, பட சான்ஸ் தேடுவதை தொடர்ந்தேன். ஒருவேளை என் உயரம், அதற்கான பர்சனாலிட்டியை பார்த்துகூட ஒரு வாய்ப்பு வரலாம். போட்டோவைக் கொடுத்து, அதை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்!

சட்டம் என் கையில்

டைரக்டர் டி.என்.பாலு அப்போது “சட்டம் என் கையில்” என்ற படத்தை இயக்கினார். கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம். அந்த படத்தில் ஒரு சின்ன ரோல் இருப்பதாக கேமராமேன் என்.கே.விஸ்வநாதன் சார் என்னை அழைத்துப் போனார்.

அப்போது ஏவி.எம். ஐந்தாவது புளோரில் “சட்டம் என் கையில்” படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கமல் – ஸ்ரீபிரியா நடிக்க ஒரு பாடல் காட்சியை எடுத்துக் கொண்டிருந்தார், டைரக்டர்.

பாடல் காட்சியை முடித்து விட்டு என்னை அழைத்தார், டி.என்.பாலு. அப்போதுதான் கமலஹாசனை முதன் முதலாக நேரில் பார்த்தேன். “இவ்வளவு அழகாய் இருக்கிறாரே. இவரெல்லாம் நடிக்கும்போது நாமும் ஊரில் இருந்து நடிக்க வந்திருக்கிறோமே!” என்று எனக்குத் தோன்றியது.

என்னைப் பார்த்த டைரக்டர், போட்டோ எடுத்துப் பார்க்கவில்லை (பார்த்திருந்தால் அவ்வளவுதான்) என்னிடம், “கார் ஓட்டத்தெரியுமா?” என்று கேட்டார். ஊரில் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்ததால் “தெரியும் சார்” என்றேன்.

அப்போதே மனசுக்குள் ஒரு பயம். “நடிக்கத் தெரியுமா?” என்று கேட்காமல், “கார் ஓட்டத் தெரியுமா?” என்று கேட்கிறாரே, என்ன அர்த்தம்? ஒருவேளை படக்கம்பெனிகளுக்கு கார் ஓட்டும் டிரைவராக தேர்வு செய்யப் போகிறாரோ என்னவோ என்று உள் மனதில் உதறல் ஆரம்பித்தது.

ஆனால் டைரக்டர் அடுத்த கேள்வியாக “பைட் (சண்டை) தெரியுமா?” என்று கேட்டு உடனடியாக என் டென்ஷனை குறைத்தார். உடனே நான் “நான் `கராத்தே’யில் பிளாக் பெல்ட் சார்” என்றேன்.

உண்மையில் புரூஸ்லி நடித்து அப்போது வெளிவந்திருந்த “எண்டர் தி டிராகன்” படத்தை பார்த்த பிறகு, எல்லாருக்கும் வருகிற `கராத்தே’ ஆசை எனக்கும் வந்தது. அதனால் ஒரு ஆறு மாத காலம் கராத்தே கற்றுக்கொண்டேன். ஆனால் `பெல்ட்’ எல்லாம் வாங்கவில்லை. அந்த வகையில் டைரக்டரிடம் சொன்னது மட்டும் பொய்.

“டயலாக் பேசுவியா?” டைரக்டரின் அடுத்த கேள்வி.

“பேசுவேன் சார்!”

“சின்னதாய் ஒரு வில்லன் வேஷம் இருக்கு. நாளைக்கு காலையில் வந்துரு” என்றார், டைரக்டர்.

நாளை முதல் சினிமாவில் நடிகனாகப் போகும் சந்தோஷத்தில் அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

—————————————————————————————————–

திரைப்பட வரலாறு 812
கமல் நடித்த “சட்டம் என் கையில்”:
வில்லனாக சத்யராஜ் அறிமுகம்

டி.என்.பாலு டைரக்ட் செய்த “சட்டம் என் கையில்” படத்தில் கமலஹாசனுக்கு வில்லன் ஆனார், சத்யராஜ். இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்தார்.

முதல் படத்தில் அறிமுகமானது குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

“டைரக்டர் டி.என்.பாலு என்னைப் பார்த்த பார்வையில் நான் வில்லனாக தெரிந்திருக்கிறேன். மறுநாள் நான் அவரை சந்தித்தபோது, ”விக்கி என்றொரு வில்லன் கேரக்டர் இருக்கிறது. சின்ன கேரக்டர்தான். பண்ணுங்கள்” என்றார்.

நானும் நடிக்கும் நேரத்துக்காக காத்திருந்தேன். முதல் நாள் எனக்கு டயலாக் எதுவும் இல்லை. மலையில் இருந்து ஓடிவருகிற மாதிரி எடுத்தார்கள்.

முதல் வசனம்

இந்தப்படத்தில் டைரக்டர் எனக்கு கொடுத்த முதல் வசனம் “எனக்கு இப்ப நேரம் நல்லா இருக்கு.”

வில்லனுக்குப் போய் இப்படியொரு டயலாக்கா என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். கதைப்படி, நான் செய்கிற கொலைக்கு கதாநாயகன் மாட்டிக் கொள்வார். அதனால், “இப்ப எனக்கு நேரம் நல்லா இருக்கு. அதனால்தான் நான் செய்த கொலைக்கு அவன் மாட்டிக்கிட்டான்” என்ற வசனத்தை தந்து பேசச் சொன்னார்கள்.

ஏற்கனவே டைரக்டர் டி.என்.பாலு என்னிடம், “பைட் தெரியுமா?” என்று கேட்டபோது, “தெரியும்” என்று சொல்லிவிட்டேன். நடிக்க வந்த மூன்றாவது நாளே சென்னை வளசரவாக்கத்தில் இருந்த `ஜெய்’ தோட்டத்தில் சண்டைக்காட்சி எடுப்பதாகச் சொன்னார்கள். அப்போதே எனக்கு உள்ளுக்குள் உதறல் ஆரம்பித்து விட்டது. நமக்குத்தான் `சினிமா பைட்’ தெரியாதே!

அதனால், ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா சங்கரை சந்தித்து உண்மையை சொல்லி விட்டேன். அவரும் பெருந்தன்மையுடன் தனது அசிஸ்டெண்டை என்னுடன் மெரினா பீச்சுக்கு அனுப்பி வைத்தார். அந்த உதவியாளர் எனக்கு பீச் மணலில் `சினிமா பைட்’ கற்றுக் கொடுத்தார். அதாவது கதாநாயகனிடம் அடிவாங்குவது போல் நடிக்கும்போது அடிவாங்காமல் எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார்! அப்போதுதான், ஸ்டண்ட் காட்சியில் `டைமிங்’ எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

கமலுடன் சண்டைக்காட்சி

மறுநாள் படப்பிடிப்பில் கமல் சாருடன் சண்டைக்காட்சி. முந்தின நாள் பெற்ற பயிற்சி உதவியாக இருந்தது.

பொதுவாக, சண்டைக் காட்சியின்போது `வாட்ச்’ போட்டு நடிக்க மாட்டார்களாம். அது எனக்குத் தெரியாது. சண்டைக்காட்சி முடிந்த நேரத்தில், நான் போட்டிருந்த 600 ரூபாய் வாட்ச் உடைந்து போய்விட்டது! கமல் சார் இதைப் பார்த்ததும் `அடடா! உங்களிடம் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். கம்பெனி வாட்சை போட்டுக்கொண்டு சண்டைக்காட்சியில் நடித்திருக்கலாமே” என்றார்.

இப்படி 600 ரூபாய் வாட்சை உடைத்துவிட்டு, நடிப்புக்கு 500 ரூபாய் `செக்’ வாங்கினேன். 1975 வாக்கில் 500 ரூபாய் என்பது பெரிய தொகை. அந்த செக்குக்காக பாங்கியில் கணக்கு ஆரம்பித்தேன். முதல் சம்பளத்தில் அம்மா, சின்னம்மாவுடன் என் 5 தங்கைகளான கல்பனா, ரூபா, நந்தினி, அகிலா, அபராஜிதா ஆகியோருக்கும் புடவைகள் எடுத்துக் கொடுத்தேன்.

100-வது நாள்

முதல் படமே நூறாவது நாள் கண்டதில் எனக்கும் மகிழ்ச்சி. இந்த விழாவை சென்னை நிïஉட்லண்ட்ஸ் ஓட்டலில் கொண்டாடினார்கள். கலைஞர் தலைமை தாங்கி விருதுகள் வழங்கினார். எனக்கும் கேடயம் கிடைத்தது.

இதற்கிடையே, தயாரிப்புத் துறையில் நான் பணியாற்றிய “கண்ணன் ஒரு கைக்குழந்தை” படம் ரிலீஸ் ஆயிற்று. இந்தப் படத்தில் சிறு வேடத்தில் நடித்தும் இருந்தேன். அதனால் டைட்டில் கார்டில் நடிகர்கள் பட்டியலில் `நடிகர் சத்யராஜ்’ என்று வரும். டெக்னிஷியன் பட்டியலில் அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ரெங்கராஜ் பி.எஸ்.சி. என்று வரும்.

பெயர் மாற்றம்

பெற்றோர் எனக்கு வைத்த பெயர் ரெங்கராஜ்தான். சினிமாவில் அறிமுகமாகும் போது, எனக்கு நானாக வைத்துக்கொண்ட பெயர்தான் சத்யராஜ். அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் மகன் பெயர் சத்யன். (இப்போது சத்யனும் நடிகராகி விட்டார்) அந்த `சத்ய’னில் இருந்து `சத்ய’வையும் ரெங்கராஜில் இருந்து `ராஜை’யும் எடுத்துக்கொண்டு சத்யராஜ் ஆகிவிட்டேன்!

நடிகனாக சத்யராஜ் என்றிருந்தாலும், அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ஒரிஜினல் பெயரை கல்வித் தகுதியுடன் போட விரும்பினேன்.

இப்படி ஒரு படத்தில் 2 பெயரில் தனித்தனி பிரிவில் பெயர் வந்தது அனேகமாக எனக்கு மட்டும்தான் இருக்கும்.

“சட்டம் என் கையில்” படம் நன்றாக ஓடியும், தொடர்ந்து எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. நடிகர் சிவகுமார் சிபாரிசில் “முதல் இரவு”, “ஏணிப்படிகள்” போன்ற படங்கள் கிடைத்தன. டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் தனது “காதலித்துப்பார்” என்ற படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

“முதல் இரவு” படத்தை தயாரித்த கோவை செழியன் எனக்கு தூரத்து உறவினர். ஆனாலும் நடிகர் சிவகுமார் அண்ணன்தான் என்னை படக்கம்பெனிக்கு அழைத்துச் சென்று வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இதெல்லாம், திருப்பூர் மணி ஆபீசில் தங்கிக்கொண்டு, தயாரிப்பு வேலையையும் பார்த்துக் கொண்டிருந்தபோது நடந்தது.

டைரக்டர் பி.மாதவன் அப்போது “தங்கப்பதக்கம்”, “வியட்நாம் வீடு” என்று சிவாஜி படங்களை இயக்கி, பெரிய பெயரோடு இருந்தார். அவர் சிவகுமார் – ஷோபா நடித்த “ஏணிப்படிகள்” படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் நடிகர் சிவகுமார் அண்ணன் உபயத்தில் ஷோபாவின் அண்ணன் வேடம் எனக்கு கிடைத்தது. அதுவரை நான் நடித்த படங்களில், என்னை `பளிச்’சென்று வெளிப்படுத்திய படம் இதுதான்.

என்றாலும், இந்தப்படத்தில் நடித்த போது இன்னொரு காரியமும் செய்தேன். படத்தின் வில்லன் ஜெய்கணேஷின் “பைக்” சேஸிங் காட்சியில், அவருக்கு நான் `டூப்’ ஆக நடித்தேன். ஏற்கனவே கார் ஓட்டிய அனுபவம் எனக்கு இருந்ததால், இந்த `பைக்’ சேஸிங் சிறப்பாக அமைந்தது.

போராட்டம்

நான் பல போராட்டங்களைக் கடந்துதான் நடிகனானேன். வந்த பிறகும் கிடைத்ததோ வில்லத்தனமான வேடங்களே. அதிலும் `கொஞ்ச நேர’ வில்லன்தான் அதிகம்.

`இப்படியான கேரக்டர்களில் நடிக்கத்தான் சினிமா சினிமா என்று அலைந்தாயா!’ என்று என்னிடம் உறவினர்கள் வருத்தத்துடன் கூறினார்கள். அவர்களின் `அப்செட்’டுக்கு மத்தியிலும், தொடர்ந்து சினிமாவில் நான் நீடிக்கக் காரணம், அண்ணன் மாதம்பட்டி சிவகுமார்தான். என் வளர்ச்சியில் என் அளவுக்கு அவருக்கும் நம்பிக்கை இருந்தது.

திருமண ஏற்பாடு

சினிமாவில் சின்னதாய் ஒரு வளர்ச்சி நிலையில் நான் இருந்த சமயத்தில், வீட்டில் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். பெண் பார்க்க அவசியமில்லை. மாதம்பட்டி சிவகுமார் அண்ணனின் அக்கா மகள்தான் எனக்கு மணப்பெண் என்று, ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தார்கள்.

பெண்ணும் பிறந்தது முதலே எனக்குத் தெரிந்தவர். குழந்தை பிறந்து தொட்டிலில் போட்டிருந்தபோது, நான் போய் எட்டிப் பார்த்தேன். அப்போது பெண்ணின் அப்பா (என் மாமா சண்முகசுந்தரம்) என்னிடம், “மாப்பிள்ளை இப்போதே பெண்ணைப் பார்க்க வந்துவிட்டார்” என்று கிண்டல் செய்திருக்கிறார்.

இப்படி உறவு முறையில் பெண் இருந்தாலும், சினிமாவில் சொந்தக் காலில் நின்ற பிறகுதான் திருமணம் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

திரைப்பட வரலாறு 814
மொட்டைத் தலையுடன் சத்யராஜ் நடித்த
“நூறாவது நாள்” மகத்தான வெற்றி
ஒரே ஆண்டில் 27 படங்களில் நடித்தார்

டைரக்டர் மணிவண்ணன் இயக்கிய “நூறாவது நாள்” படத்தில் மொட்டைத் தலை வில்லனாக நடித்து பிரபலமானார் சத்யராஜ். இதைத் தொடர்ந்து, அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. ஒரே ஆண்டில் 27 படங்களில் நடித்தார்.

தனது கலைப்பயணத்தின் வளர்ச்சி குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

“வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக இருந்த நேரம். அப்படிக் கிடைத்தாலும், திறமையை வெளிப்படுத்த முடியாத சின்ன ரோல்கள்தான் வந்து கொண்டிருந்தன.

சுந்தர்ராஜன் அறிமுகம்

இப்படி உள்ளும் புறமுமாய் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜனின் அறிமுகம் கிடைத்தது.

ஆர்.சுந்தர்ராஜன் அப்போது “பயணங்கள் முடிவதில்லை” என்ற பெரிய வெற்றிப்படம் கொடுத்திருந்தார். என்னை ஒரு நடிகனாக மட்டுமின்றி ஒரே ஊர்க்காரன் (கோவை) என்ற அளவிலும் என்னை அவர் தெரிந்து வைத்திருந்தார். ஒருமுறை கோவைக்கு ரெயிலில் போனபோது, மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் என்னிடம், அடுத்து எடுக்கப்போகும் படத்தின் கதையைக் கூறினார். நான் அந்தக் கதை தொடர்பாக எனது கருத்துக்களைக் கூறினேன். அப்போது அவர், `உங்களுக்கும் நல்ல கதை ஞானம் இருக்கிறதே’ என்று சொல்லி வியந்தார். அதோடு, `நீங்கள் ஏன் கதை விவாதத்தில் கலந்து கொள்ளக்கூடாது’ என்றும் கேட்டார்.

கதை விவாதத்தில் கலந்து கொண்டால், அதற்கென்று தனி சன்மானம் எதுவும் கிடையாது. என்றாலும் டைரக்டர் சொன்னது என்னை உற்சாகப்படுத்தி விட்டது. என்னாலும் கதையை உருவாக்க முடியும் என்று அவர் கருதியதால், மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

சினிமா கதை

இந்த சந்தோஷ வேகத்தில், சினிமாவுக்கான ஒரு கதையை நானே தயார் செய்தேன். கிரைம் – ஆக்ஷன் கதை. இதே காலகட்டத்தில் எனக்கு நண்பராகி இருந்த டைரக்டர் மணிவண்ணனிடம் இந்தக் கதையை சொன்னேன்.

அவர் என்னிடம் `நன்றாகத்தான் இருக்கிறது. இதை பிறகு திரைக்கதையாக தயார் செய்யலாம். என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அதை கேளுங்கள்’ என்று கூறி, ஒரு கதையை சொன்னார்.

ஆர்.சுந்தர்ராஜன் என்னிடம் ரெயிலில் சொன்ன கதை மோகன், நளினி, விஜயகாந்த் நடிக்க “சரணாலயம்” என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருந்தது. மணிவண்ணன் சொன்ன கதையை படமாக்க எஸ்.என்.திருமால் முன்வந்தார்.

இப்போது, எனக்குள் நடிப்பைவிட டைரக்ஷன் ஆர்வம் அதிகமாகி விட்டது. ஒரு கதை தயார் செய்யும் அளவுக்கு வந்துவிட்டேனே! இந்தக் கதையை டைரக்ட் செய்து, டைரக்ஷன் பக்கம் போய்விடலாம் என்று நினைத்தேன்.

நூறாவது நாள்

நண்பர் மணிவண்ணன் சொன்ன கிரைம் சப்ஜெக்ட்தான் “நூறாவது நாள்” என்ற பெயரில் படமானது. இந்தப்படத்தின் கதை விவாதத்துக்கு மணிவண்ணன் என்னையும் அழைத்திருந்தார். படத்தின் கிளைமாக்சில் ஒரு மொட்டை வில்லன் வருவதாக காட்சி வைத்திருந்தார். இந்த கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்ற பேச்சு வந்தபோது, அந்த வேடத்தில் நான் நடிப்பது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

நான்தான் டைரக்ஷன் கனவில் இருக்கிறேனே! அதனால் கொஞ்சம் தயங்கவே செய்தேன். விஜயகாந்த் “சரணாலயம்” படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரிடமும் நான் உருவாக்கிய கதையை சொன்னேன். அவருக்கும் கதை பிடித்துப்போய், அதைப் படமாக்கலாம் என்று சொல்லி விட்டார்.

இந்த நேரத்தில்தான் நூறாவது நாள் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தது.

நான் தயங்கினாலும் மணிவண்ணன் விடவில்லை. எனக்கு மேக்கப் போட்டுப் பார்த்தார். “ஆலிவுட் நடிகர் மாதிரி இருக்கீங்க, தலைவா!” என்றார்.

இதனால் நம்பிக்கை வந்தது, சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஒரு சலூனில் மொட்டை அடித்துக் கொண்டேன். மொட்டை கெட்டப்பில் என் கேரக்டர் படமாக்கப்பட்டபோதே, அந்த கேரக்டர் பேசப்படும் என்பது தெரிந்தது.

படம் வெளியானது. பெரிய வெற்றி. என் மொட்டை கேரக்டரும் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்தப்படம் வெளிவந்த சமயத்தில், ஜெயப்பிரகாஷ் என்பவர் 7 கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர், “நூறாவது நாள் படத்தைப் பார்த்த பிறகே இப்படி கொலை செய்யும் எண்ணம் வந்தது” என்று சொல்லப்போக, படத்துக்கு இன்னும் `பப்ளிசிட்டி’ ஆகிவிட்டது! இந்தப்படம் வெளியான சமயத்தில் குழந்தைகள் என்னை நெருங்கவே பயப்பட்டார்கள்!

24 மணி நேரம்

இந்த வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் மணிவண்ணன் சூட்டோடு சூடாக அதே நிறுவனத்துக்கு, “24 மணி நேரம்” என்று ஒரு படம் பண்ணினார். இதிலும் மோகன் – நளினிதான் ஜோடி. ஆனால் இதன் கதையமைப்பு வில்லனுக்காகவே உருவான கதை மாதிரி அமைந்திருந்தது.

இந்தக் கதையில் வரும் வில்லன் கேரக்டரில் முதலில் நான் நடிப்பதாகவே இல்லை. நான் மணிவண்ணன் சாரிடம், “படத்தின் ஜீவனே இந்த வில்லன் கேரக்டர்தான். `வீணை’ பாலச்சந்தர் நடித்தால் நல்லா இருக்கும்” என்றேன்.

மணி சார் என்னைப் பார்த்தார். அவர் என்ன நினைக்கிறார் என்பது புரியாமல், “வீணை பாலச்சந்தர் இல்லாவிட்டால் நம்ம நம்பியார்சாமி நடிக்கட்டும்” என்றேன்.

அந்த கேரக்டரின் முக்கியத்துவம் தெரிந்து நான் இப்படி சொல்லிக் கொண்டிருக்க, அவரோ, `நீங்களே நடிச்சிருங்க தலைவா’ என்றார்.

அந்த கேரக்டரில் நான் நடித்தால் சரியாக இருக்கும் என்று அவர் எண்ணினாலும், அவர் என் மீதான அக்கறையில்தான் அப்படிச் சொல்கிறார் என்று நான் நினைத்தேன். அதனால் அவரது விருப்பத்தை மறுக்கும்விதமாக, `தயாரிப்பாளர் திருமால் சார் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். அந்த அளவுக்கு இது ஹீரோவுக்கு இணையான கேரக்டர்’என்றேன்.

அப்போதும் டைரக்டர் மணிவண்ணன் என்னை விடவில்லை. நேராக தயாரிப்பாளரை போய்ப் பார்த்தவர், `படத்தில் வரும் வில்லன் கேரக்டரில் சத்யராஜை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்’ என்று சொன்னார். தயாரிப்பாளரும், `தாராளமாக நடிக்கட்டும்’ என்று பச்சைக்கொடி காட்டினார்.

வில்லனுக்கு புது இலக்கணம் வகுத்த அந்த கேரக்டர்தான் என்னை ரசிகர்களிடம் முழுமையாக கொண்டு சேர்த்தது. இந்தப் படத்தில் நான் அடிக்கடி பேசும், “என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே” என்ற வசனம், பட்டித்தொட்டிவரை கூட பிரபலம் ஆனது.

ஒரே ஆண்டில் 27 படங்கள்

இந்த படத்துக்குப் பிறகு நான் பிஸி நடிகனாகி விட்டேன். காலை 7 மணி தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை தினமும் 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கும் அளவுக்கு பிஸியாகி விட்டேன். 1985-ம் ஆண்டில் மட்டும், நான் நடித்து 27 படங்கள் ரிலீஸ் ஆயின.

இப்படி பிஸியாக இருந்தாலும் நான் உருவாக்கி வைத்திருந்த கதையை `அம்போ’ என்று விட்டுவிட முடியவில்லை. டைரக்டர் மணிவண்ணன் தெலுங்கில் படம் இயக்கப்போன நேரத்தில் என் கதையை இயக்கினார். `தர்ஜா தொங்கா’ என்ற பெயரில் (தமிழில் `கவுரவத் திருடன்’) உருவான அந்தப் படத்தில் சுமன் – விஜயசாந்தி நடித்தார்கள். இந்தப் படத்தில் நான் கதாசிரியர் மட்டுமே. படம் வெளியாகி 6 சென்டர்களில் நூறு நாட்களை தாண்டி ஓடியது.

இந்த வகையில், ஒரு சினிமா கதாசிரியராகவும் ஜெயித்த சந்தோஷம் எனக்கு.

இந்தப்படத்தின் கதைக்காக டைரக்டர் மணிவண்ணன் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தார். தமிழில் `மர்ம மனிதன்’ என்ற பெயரில் `டப்’ செய்யப்பட்டு வெளியானது.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

திரைப்பட வரலாறு 819
பாலாஜி தயாரித்த “காவல்”
சிறிய வேடத்தில் விரும்பி நடித்தார், சத்யராஜ்

சத்யராஜ் பிசியாக இருந்த நேரத்திலும், பாலாஜி தயாரித்த ஒரு படத்தில், சிறிய வேடத்தை கேட்டு வாங்கி நடித்தார். படத்தில் ஐந்து நிமிடமே வந்து போகிற வேடம் அது.

வெற்றிகரமான ஹீரோ என்ற நிலைக்கு வந்து விட்ட சத்யராஜ், நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜியின் படங்களிலும் நடித்தார். பாலாஜி தயாரித்த “மங்கம்மா சபதம்”, “அண்ணி” ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர், “விடுதலை” படத்தில் மட்டும் வில்லனாக நடிக்க மறுத்துவிட்டார்.

அதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-

“ஹீரோவாக வளர்ந்து விட்டேன். என்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள் வந்துவிட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் இனி `வில்லன்’ வேடத்தையும் செய்தால், என்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கள் வியாபார ரீதியாக பாதிக்கப்படலாம் என்பதை உணர்ந்தேன். அதனால்தான் பாலாஜி சாரின் மங்கம்மா சபதம், அண்ணி படங்களில் வில்லனாக நடித்த நான், அடுத்து அவர் தயாரித்த `விடுதலை’ படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தபோது, அந்த வாய்ப்பை தவிர்த்து விட்டேன்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு

இத்தனைக்கும் அந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை லண்டனில்தான் எடுத்தார்கள். நான் அதுவரை லண்டனை பார்த்ததில்லை. “எந்த வேடமாக இருந்தால் என்ன! லண்டன் பயணத்தை அனுபவித்து விடுவோம்” என்று எண்ணியிருந்தால் ஒருவேளை அந்த வில்லன் வேடத்தை ஒப்புக் கொண்டிருந்திருப்பேன். ஆனால் நான் பாலாஜி சாரிடம், “நான் ஹீரோவாக நடித்த படங்கள் வரத் தொடங்கிவிட்ட இந்த நேரத்தில் வில்லனாக நடித்தால் சரியாக இருக்காது” என்று சொன்னேன்.

பாலாஜி சார் என்னை கூர்மையாகப் பார்த்தார். “இனி வில்லனாக நடிப்பதில்லை என்பதில் அவ்வளவு நம்பிக்கை வந்துவிட்டதா?” என்று கேட்டார்.

“ஆமாம் சார்! அதில் நான் தெளிவாக இருக்கிறேன்” என்றேன்.

“உங்கள் தன்னம்பிக்கை வெற்றி பெறட்டும்” என்று வாழ்த்தியவர், என் தன்னம்பிக்கைக்கு அவரும் கைகொடுக்கும் விதமாய் எனக்குத் தந்த படம்தான் “மக்கள் என் பக்கம்.” மலையாளத்தில் பாலாஜி சாரின் மருமகன் மோகன்லால் நடித்த “ராஜா வின்டெ மகன்” படத்தைத்தான் இந்தப் பெயரில் தமிழில் `ரீமேக்’ செய்தார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அந்தப்படம், தமிழிலும் பெரிய வெற்றி பெற்றது.

பாலாஜி சார், மற்ற எந்த நிறுவனத்திலும் செய்திராத ஒரு ஏற்பாட்டை தனது நிறுவனத்தில் கலைஞர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் செய்தார். நடிகர் – நடிகைகள், டைரக்டர் ஆகியோர், படப்பிடிப்பின்போது உட்காரும் நாற்காலியில், அவர்களின் பெயரை குறிப்பிட ஏற்பாடுசெய்தார். இதனால், ஒருவர் நாற்காலியில் பிறர் உட்கார்ந்து கொள்ள முடியாது.

கூடுதல் சம்பளம்

“மங்கம்மா சபதம்” படத்தில் நடித்தபோது என் வில்லன் நடிப்புக்கு பேசிய சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். ஆனால் எனக்கு வந்து சேர்ந்ததோ 40 ஆயிரம் ரூபாய்! கணக்கில் ஏதோ தவறு நடந்து விட்டது என்று நினைத்த நான், பாலாஜி சாரை பார்த்து மீதி 15 ஆயிரத்தை கொடுக்கப்போனேன். அவரோ, “நன்றாக நடித்திருந்தீர்கள். அதனால், பேசினதைவிட அதிகமாகக் கொடுக்கத் தோன்றியது. கொடுத்தேன்” என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட்டார்.

படத்தின் தரத்துக்காக செலவை பொருட்படுத்தாதவர் இவர். “மக்கள் என்பக்கம்” படத்தின் ஒரு காட்சியில் ஆட்டோக்கள் தேவை என்று டைரக்டர் கேட்டபோது, 100 ஆட்டோக்களை உடனடியாக ஏற்பாடு செய்து விட்டார். நான்கூட அவரிடம், “சார்! 20 ஆட்டோ போதுமே” என்றேன். “கதைக்கு தேவையான பிரமாண்டத்துக்கு 100 ஆட்டோக்கள் இருக்கட்டுமே” என்று சொல்லிவிட்டார். 28 நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிந்து இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

பாலாஜி சாரின் “திராவிடன்” படத்திலும் ஹீரோவாக நடித்தேன்.

ஐந்து நிமிட வேடம்

நடிக்க வந்த பிறகு, இந்தக் கேரக்டரில் நடிக்கிறேன் என்று நானாக கேட்டு வாங்கி நடித்தது “காவல்” படம் மட்டும்தான். பாலாஜி சாரின் தயாரிப்பான இந்தப்படம், ஒரு இந்திப்படத்தின் ரீமேக். அந்த இந்திப்படத்தில் ஹீரோவாக ஓம்புரியும், ஐந்து நிமிடமே வந்து போகிற போலீஸ்காரர் கேரக்டரில் நசுருதீன்ஷாவும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை நான் பார்த்தபோது, நசுருதீன்ஷா நடித்த அந்த கேரக்டர் என்னை மிகவும் கவர்ந்தது. அதே படம் தமிழில் ரீமேக் ஆகிறது என்று தெரிந்ததும், பாலாஜி சாரை நானே போய் சந்தித்தேன். “சார்! எனக்கு சம்பளம் வேண்டாம். இந்தியில் நசுருதீன் ஷா நடித்த அந்த கவுரவ கேரக்டரை தமிழில் எனக்கு கொடுத்து விடுங்கள்” என்றேன். அவரும், “தாராளமாய் நடியுங்கள்” என்றார்.

படத்தில் என் போர்ஷனை இரண்டே நாளில் எடுத்து முடித்தார்கள். நான் பாலாஜி சாரை சந்தித்து, என் `நடிப்பு விருப்பம்’ நிறைவேற்றியதற்காக நன்றி சொல்லி புறப்பட்டபோது, தடுத்து நிறுத்தி, என் கையில் 3 பவுன்களைத் திணித்தார். நான், “சார்! எனக்கு சம்பளமே வேண்டாம்” என்று கூற, அவரோ, “இது என் அன்பளிப்பு. சம்பளம் அல்ல. நீங்கள் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்” என்று கூறிவிட்டார். எனது 2 நாள் நடிப்புக்கு கிடைத்த 3 பவுனை கணக்கில் கொண்டால் அப்போது நான் படங்களுக்கு வாங்கிய சம்பள அடிப்படையில் அதிக சம்பளம் வாங்கியது இந்த படத்துக்குத்தான்!

டைரக்டர் பாசில்

தமிழ் சினிமாவில் அப்போது மலையாளத் திரையுலகில் இருந்து வந்து புரட்சி ஏற்படுத்தியவர் டைரக்டர் பாசில். தமிழில், ஜெய்சங்கர், பத்மினி, நதியா, எஸ்.வி.சேகர் நடித்த “பூவே பூச்சூடவா” படம் மூலம் ரொம்பவே பாப்புலராகி விட்டார். வித்தியாசமான கதைப் பின்னணிக்காக அந்தப்படம் பேசப்பட்டதோடு வெற்றியும் பெற்றது.

நான் அப்போது படங்களில் இரவு, பகலாக ஓய்வின்றி நடித்த நேரம். தனது அடுத்த படத்தில் நடிக்கும்படி பாசில் என்னிடம் கேட்டுக்கொண்டார். பாம்குரோவ் ஓட்டலில், ஒரு இரவில் கதையைச் சொன்னார். ஓய்வே இல்லாததால், களைப்பு அடைந்திருந்த நான், கதையுடன் ஒன்ற முடியவில்லை. கதை சொல்லி முடித்த பாசில், “கதை எப்படி இருக்கிறது” என்று கேட்டபோது கூட, உடனே நான் பதில் சொல்லவில்லை. பாசில் புறப்பட்டுப்போனதும் எனது மானேஜர் ராமநாதனிடம் “அவர் கதை சொன்னார். நான் களைப்பாக இருந்ததால், கதையுடன் என்னால் ஒன்ற முடியவில்லை. இந்தக் கதையில் நடிக்கவில்லை என்று கூறிவிடலாமா?” என்று கேட்டேன்.

அவரோ, “சார்! பாசில் மலையாளத்தில் பெரிய டைரக்டர். தமிழிலும் அவர் பெரிய அளவில் வருவார். நிச்சயம் அவர் வித்தியாசமான கதைக்குத்தான் உங்களைத் தேடி வந்திருக்கிறார். பேசாமல் `சரி’ என்று சொல்லிவிடுங்கள்” என்றார்.

அப்படி நான் ஒப்புக்கொண்ட படம்தான் “பூவிழி வாசலிலே.”

கேரள உணவு

இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ஆலப்புழையில் நடந்தது. எந்த மாநிலத்தில் படப்பிடிப்பு நடந்தாலும் எனக்கு சாப்பாட்டுப் பிரச்சினை கிடையாது. அந்தந்த ஊரில் உள்ள உணவுக்கு என்னை பழக்கப்படுத்திக் கொள்வேன். ஆனால் ஆலப்புழையில் மட்டும் எனக்கு கேரள உணவுக்குப் பதிலாக தமிழ்நாட்டு உணவு வகைகளையே தந்தார்கள். இரண்டொரு நாள் பொறுத்துப் பார்த்த பிறகு நானே தயாரிப்பாளரிடம் “உங்க ஊர் உணவையே எனக்கு கொடுங்கள்” என்று கேட்டு வாங்கி சாப்பிட்டேன். பிரவுன் கலர் அரிசி சாப்பாடு, புட்டு, மீன் குழம்பு, நேந்திரம் பழம் என்று படப்பிடிப்பு நடந்த நாட்களில் கேரள ஸ்பெஷல் உணவுகளுடனேயே ஐக்கியமாகிவிட்டேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை பார்க்க மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் வருவார்கள். செட்டே கலகலப்பாக இருக்கும். இந்தப் படத்தில் சிறுவனாக முக்கிய கேரக்டரில் நடித்த சுஜிதா, பெண் குழந்தை என்று முதலில் எனக்குத் தெரியாது. படப்பிடிப்பு தொடங்கி 10 நாட்களுக்குப் பிறகே தெரியும். குழந்தை என்றாலும் சுஜிதா நடிப்பில் மிரட்டியிருந்தாள். படம் “சூப்பர்ஹிட்” ஆனது.

சமீபத்தில் ஒரு டப்பிங் தியேட்டரில் டப்பிங் பேசப்போனபோது ஒரு அம்மா என்னிடம் ஒரு இளம் பெண்ணை அறிமுகப்படுத்தினார். “சார்! இது என் பெண் சுஜிதா. நீங்கள் நடித்த “பூவிழி வாசலிலே” படத்தில் சிறுவனாக நடித்தது இவள்தான்” என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. குட்டிப்பெண் வளர்ந்து பெரியவளாக நிற்கும்போதுதான், நமக்கும் வயதாகியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது!

“பூவிழி வாசலிலே” படத்தில் நடித்த பிறகு, மறுபடியும் பாசில் டைரக்ஷனில் “பொம்முகுட்டி அம்மாவுக்கு” படத்திலும் நடித்தேன். இந்தப் படத்தில்தான் சுஹாசினி எனக்கு முதன் முதலாக ஜோடியானார். ஒரு சாதாரண குடும்பத் தலைவனாக என்னை நடிக்க வைத்து இந்தப் படத்தையும் வெற்றி பெறச்செய்தார், பாசில்.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(821)
சத்யராஜ் சிவாஜியுடன் இணைந்து நடித்த “ஜல்லிக்கட்டு”

சிவாஜிகணேசன் நடித்த “ஜல்லிக்கட்டு” படத்தில் இன்னொரு ஹீரோவாக சத்யராஜ் நடித்தார். இந்தப்படமும் வெற்றி பெற்றது.

சிவாஜியுடன் “ஜல்லிக்கட்டு” படத்தில் நடித்த சத்யராஜ×க்கு, படத்தில் முக்கியமான கேரக்டர். நீதிபதி ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை ஒரு அதிரடி இளைஞன் மூலம் சரி செய்து கொள்ளும் கதை. இதில் பாதிக்கப்பட்ட நீதிபதியாக சிவாஜியும், அவருக்கு உதவும் இளைஞராக சத்யராஜ×ம் நடித்தார்கள். வித்தியாசமான கதைக்கருவைக் கொண்ட இந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆர்.

இந்தப் படத்தின் வெற்றி விழாவில், அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களை வாழ்த்தினார்.

எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கடைசி சினிமா விழா இதுதான்.

சிவாஜியுடன் நடித்த “ஜல்லிக்கட்டு” அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

“ஜல்லிக்கட்டு படத்தை நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். சித்ரா லட்சுமணன் தயாரித்தார்.

கதையைக் கேட்கும்போதே இது நன்றாக ஓடும் என்று தோன்றியது. சில கதைகளை கேட்டதுமே, அது வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியும். ஜல்லிக்கட்டு அப்படியொரு கதை.

தலைவா…!

அப்போதெல்லாம் நானும் மணிவண்ணனும் செட்டிலே ஒருவரை ஒருவர் `தலைவா!’ என்று கூப்பிட்டுக் கொள்வோம். இந்த `தலைவா’ பழக்கம் செட்டில் இருந்த மற்ற டெக்னீஷியன்களையும் தொற்றிக் கொண்டது.

இது எதில் போய் முடிந்தது தெரியுமா? செட்டில் சிவாஜி சாரிடம் போன டான்ஸ் மாஸ்டர் பாபு அவரிடம், “தலைவா! ஷாட் ரெடி” என்று சொல்லப்போக, பதிலுக்கு சிவாஜி சார் அவரை கேலி செய்யும் அளவுக்குப் போய்விட்டது. “ஏண்டா! உங்க `தலைவா’ என் வரைக்கும் வந்தாச்சா?” என்று கேட்க, மாஸ்டர் அவசரமாய் `எஸ்கேப்’ ஆகியிருக்கிறார்.

நானும் பிரபுவும் `தலைவரே’ என்று அழைத்துக் கொள்வதும் சிவாஜிசாருக்கு தெரிந்திருக்கிறது. இப்போது ëஅவரே செட்டில் “தலைவா” என்று அழைக்கப்பட்டு விட்டதால், அன்று படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போனவர், பிரபு வரும் வரை காத்திருந்திருக்கிறார். பிரபு வீட்டுக்குப் போனதும் “வாங்க தலைவரே!” என்று அழைத்து அவரை வெலவெலக்க வைத்திருக்கிறார்.

மறுநாள் இதுபற்றி பிரபு என்னிடம் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு.

நேரத்தை மதிப்பவர்

நேரத்துக்கு மதிப்பு கொடுப்பதில் சிவாஜி சாருக்கு நிகர் அவரேதான். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 7 மணிக்கு செட்டில் இருப்பேன். ஆனால் அதற்கு முன்பே சிவாஜி சார் செட்டில் இருப்பார்.

ஒருநாளாவது அவரை முந்திவிடவேண்டும் என்று இன்னும் சீக்கிரம் வரத்தொடங்கினேன். அப்போதும் சிவாஜி சார் எனக்கு முந்தி வந்திருந்தார். நடிப்பில் மட்டுமின்றி, `பங்ச்சுவாலிட்டி’யிலும் சிவாஜி சாருக்கு இணையாக யாருமில்லை என்பதை நானும் இந்த நாட்களில் கண்கூடாக உணர்ந்தேன்.

“ஜல்லிக்கட்டு” படப்பிடிப்புக்காக பெங்களூரில் இருந்து மங்களூருக்கு விமானத்தில் போனோம். நான், மணிவண்ணன், கேமராமேன் சபாபதி, சித்ரா லட்சுமணன் எல்லோரும் ஒரே ரூமில் தங்கினோம். சிவாஜி சார் பக்கத்து ரூமில் தங்கினார்.

படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள். காலை 6 மணிக்கு விமானம் ஏறவேண்டும். சிவாஜி சார் அதிகாலை 4 மணிக்கு விழித்தவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார். நாங்கள் முந்தின நாள் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கியிருக்கிறோம். அதிகாலையில் எங்களை வந்து பார்த்தவர், நாங்கள் படுத்திருந்த இடத்துக்கு அருகில் சிக்கன் எலும்புகள் கிடந்ததை பார்த்திருக்கிறார். அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் போனவர், நாங்கள் புறப்பட்டு தயாராகி வந்தபோது பிடித்துக்கொண்டார். “ஏண்டா! காலையிலேயே எழுப்பலாம்னு வந்தால் செத்துப்போன கோழியோட ஒண்ணா படுத்திருக்கீங்களே” என்று கிண்டல் செய்தார். அந்த கிண்டலில் ஒரு தந்தைக்கே உரிய அக்கறை இருந்தது.

அவசரப்பயணம்

விமான நிலையத்துக்கு புறப்பட சிவாஜி சார் அவசரப்படுத்தின தால், ஆளாளுக்கு சீக்கிரமே கிளம்பி விட்டோம். கமலா அம்மாளும் சிவாஜி சாருடன் வந்திருந்தார்கள். “மாமா இப்படித்தான் அவசரப்படுத்துவாங்க. நாமபோறப்போ விமான நிலைய கேட்டை திறந்திருக்க மாட்டாங்க” என்றார்.

கமலா அம்மாள் சொன்னதுபோலவே ஆயிற்று. நாங்கள் போய்ச் சேர்ந்த பிறகுதான் விமான நிலைய பயணிகள் கேட்டையே திறந்தார்கள்! அப்போது மங்களூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஒரு விமானம்தான். எனவே விமானத்தை தவறவிட்டால் தேவையில்லாமல் ஒருநாள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த வகையில் சிவாஜி சாரின் `அவசரம்’ நியாயமானதுதான்.

பார்த்ததுமே “வாங்க கவுண்டரே!” என்பார். படப்பிடிப்பின்போது கிடைக்கிற இடைவெளி நேரத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவார். எங்கள் சித்தப்பா அவரது நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பம் பற்றி ஆர்வமாய் விசாரிப்பார். என் சிறுவயதிலேயே விவசாய நிலங்கள் விற்கப்பட்டதை தெரிந்து கொண்டவர், “நீ சம்பாதிச்சு சொந்த ஊர்லயே நிறைய தென்னந்தோப்பு வாங்கணும்” என்று சொன்னார். அவர் சொன்னதுபோலவே பொள்ளாச்சி பகுதியில் வாழவாடி ஊரில் 95 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கியிருக்கிறேன்.

“ஜல்லிக்கட்டு” படம் எதிர்பார்த்த மாதிரியே நன்றாக ஓடி, வெற்றி பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகே பாரதிராஜாவுடன் “வேதம் புதிது” படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(822)
நடிகர் சத்யராஜ் பாலுத்தேவராக வாழ்ந்த “வேதம் புதிது”
6 விருதுகளை வாங்கித்தந்த படம்

“வேதம் புதிது” படத்தில் பாலுத்தேவராக வாழ்ந்து காட்டினார், சத்யராஜ். பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான “வேதம் புதிது” படம் சத்யராஜை மிகச்சிறந்த குணசித்ர நடிகராகவும் வெளிப்படுத்தியது. அவருக்கு 6 விருதுகள் கிடைத்தன.

“முதல் மரியாதை” படத்தில் சிறு வேடத்தில் மட்டும் நடித்த சத்யராஜை, தனது கிராமத்துக் காதல் கதையான “கடலோரக் கவிதைகள்” படத்தில் கதாநாயகன் ஆக்கினார், பாரதிராஜா. “கடலோரக் கவிதைகள்” படத்தின் வெற்றிக்குப் பிறகு, “மதங்களை கடந்தது மனிதநேயம்” என்ற கருத்தை வெளிப்படுத்தும் “வேதம் புதிது” படத்திலும் சத்யராஜையே நடிக்க வைத்தார். பாலுத்தேவர் என்ற கம்பீரமான குணச்சித்திர வேடத்தில் சத்யராஜ் வாழ்ந்து, ரசிகர்களை பிரமிக்க வைத்தார். படமும் வெற்றி பெற்றது.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-

மைல்கல்

“என் நடிப்பு வரலாற்றில் நிச்சயம் ஒரு மைல்கல் `பாலுத்தேவர்’ கேரக்டர்.

பாரதிராஜாவின் “வேதம் புதிது” கதையை என்னிடம் சொல்லும்படி சித்ரா லட்சுமணனிடம் பாரதிராஜா கூறியிருக்கிறார். அவர் என்னிடம், “கதையின் அவுட்லைனை கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.

“நான் டைரக்டர் பாரதிராஜா சாரிடம் முதல் மரியாதை படத்தில் என் கேரக்டர் என்ன என்பது பற்றி கேட்கவில்லை. கடலோரக் கவிதைகள் படத்திலும் கதை கேட்கவில்லை. இந்தப் படத்திலும் கதை கேட்கப்போவதில்லை. நான் கதை கேட்டு முடிவு செய்கிற நிலையை கடந்தவர் அவர்” என்று சித்ரா லட்சுமணனிடம் கூறி, கதை கேட்க மறுத்துவிட்டேன்.

இந்தப் படத்தில் நடித்த பிறகு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மத்தியிலும், எனக்கு பெரிய அளவில் மரியாதை கிடைத்தது.

நான் அப்போது பெரியார் கொள்கைகளுக்குள் வந்திருந்த நேரம். படத்தில் வரும் பாலுத்தேவர் கேரக்டர் `நாத்திகர்’ என்பது எனக்கு மிகவும் வசதியாகி விட்டது.

அருமையான வசனம்

படத்துக்கு கண்ணன் என்பவர் வசனம் எழுதியிருந்தார். இந்தப்படத்துக்கு அவர் வசனம் எழுதிய பிறகு, `வேதம் புதிது கண்ணன்’ என்று அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு படத்துக்கு வசனங்களும் உயிர் நாடியாக அமைந்தன.

“பராசக்தி”, “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “மனோகரா” போன்ற படங்கள் வசனங்களுக்காகவும் பேசப்பட்டவை. “காக்கி சட்டை” படத்தில் நான் இரண்டு தடவை சொன்ன `தகடு தகடு’ வசனம் சினிமாவில் என் நடிப்புக்கு புதிய பாதையை உருவாக்கித் தந்தது.

இப்படி வசனங்கள் மூலம் கிடைக்கும் பெருமை, இந்தப் படத்தில் கண்ணன் வசனத்துக்கும் கிடைத்தது. கதைப்படி, என் மகன் தாமிரபரணி ஆற்றில் விழுந்து இறந்திருப்பான். அது தெரியாத உறவினர்கள், அவனைக் காணோம் என்று தேடிப்போயிருப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்ததும் நான் பதட்டத்திலும் பரபரப்பிலும் “கிடைச்சிட்டானா?” என்று கேட்பேன். அவர்கள் பதிலோ, “கிடைச்சிட்டுது” என்பதாக இருக்கும்.

மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த வசனம் நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி உணர்த்தி விட்டது.

ஆளுக்குத்தானே மரியாதை!

மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த ஒரு வரி வசனத்தில் சொல்லி, கதைக்கே ஒரு ஜீவன் கொடுத்திருந்தார், கண்ணன். படத்தில் இந்தக் காட்சிக்கு, காட்சியின் சோகம் தாண்டியும் கைதட்டிய ரசிகர்கள் அதிகம். என் படங்களில் நான் பேசிய வசனங்களிலேயே சிறந்த வசனமாக இதைக் கருதுகிறேன்.

ரஜினி புகழாரம்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்தபோது, ஊர்க்காவலன் படப்பிடிப்புக்காக ரஜினி சாரும் அங்கே வந்திருந்தார். அவர் நடித்த படப்பிடிப்பு முடிந்ததும் எங்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார். 2 மணி நேரம் எங்களுடன் இருந்தார். என் `பாலுத்தேவர்’ கெட்டப் அவரை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. அதுபற்றிப் பேசி பாராட்டினார்.

படத்தில் நடிகை அமலா என் மருமகளாக நடித்திருந்தார். இதே அமலா என் அடுத்த படமான “ஜீவா”வில் என் ஜோடியாக நடித்தார்! அதுமாதிரி, `மிஸ்டர் பாரத்’ படத்தில் அம்பிகா எனக்கு மருமகள். அடுத்து வந்த “மக்கள் என் பக்கம்” படத்தில் என் ஜோடி! இரண்டு விதமான வேறுபாட்டையும், ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

6 விருதுகள்

“வேதம் புதிது” படத்தில் பாலுத்தேவராக நடித்த என் நடிப்புக்கு `பிலிம்பேர்’ பத்திரிகை உள்பட 6 பத்திரிகைகள் விருது கொடுத்து சிறப்பித்தன.

மத்திய அரசின் விருது கமிட்டியில் அப்போது ஜுரியாக இருந்தவர்களில் நடிகை லட்சுமியும் ஒருவர். இந்தப்படத்தில் என் நடிப்புக்கு விருது கொடுப்பதற்கான பரிசீலனையில், சின்ன விஷயத்துக்காக `விருது’ வாய்ப்பு தவறி விட்டதாக லட்சுமி என்னிடம் சொன்னார். அதாவது என் கேரக்டருக்கு `விக்’ பயன்படுத்தியிருந்தது விருதுக்கு தடையாக அமைந்திருந்ததை தெரிந்து கொண்டேன். ஆனாலும் ரசிகர்களின் பாராட்டை எனக்கு கிடைத்த பெரிய விருதாக ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தேன்.

ஜெயலலிதா மேடம் முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரு தடவை அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது நான் பல படங்களில் நடித்திருந்தாலும் `பாலுத்தேவர்’ கேரக்டர் பற்றியே அதிகம் பாராட்டிப் பேசினார்கள்.

படத்தில் ஒரு காட்சியில் நானே ஆடிப்போய்விட்டேன். என் வளர்ப்பு மகனாக வரும் சிறுவனை நான் தோளில் தூக்கி வைத்தபடி கதை சொல்லிக்கொண்டே வருவேன். ஆற்றைக்கடக்கும்போது அந்த சிறுவன் என்னிடம், “உங்க பெயர் என்ன?” என்று கேட்க, “நான் பாலுத்தேவர்” என்பேன். “பாலு உங்கள் பெயர். தேவர் என்பது நீங்கள் படிச்சு வாங்கின பட்டமா?” என்று அந்த சிறுவன் கேட்பான்.

இந்தக் காட்சியை, தனக்கே உரிய ஆற்றலில் மிகத் திறமையாக இயக்கினார், பாரதிராஜா. இந்தக் கேள்வியால் அந்தச் சிறுவன் என்னை கன்னத்தில் அறைவதாக உணர்வேன். `ஜாதிய சமூகத்தை தாண்டியது மனித நேயம்’ என்பதை சொல்லாமல் சொல்கிற அந்தக் காட்சி, என் நடிப்பிலும் மறக்க முடியாத காட்சியாகி விட்டது.

எம்.ஜி.ஆர். பார்த்தார்

படம் தயாரான பிறகு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துவதாக ஒரு தகவல் உலாவந்து படத்துக்கு பிரச்சினையாக அமைந்தது. இதுபற்றி முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டபோது அவர் படத்தை பார்க்க விரும்பினார். ஏவி.எம். தியேட்டரில் படம் பார்த்தபோது என்னையும் அவர் அருகே அமர வைத்துக்கொண்டார். முழுப்படத்தையும் ரசித்துப் பார்த்தவர், “இந்தப்படத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் எதுவும் இல்லையே!” என்றார். என் நடிப்பையும் பாராட்டினார்.

முதல்-அமைச்சர் பாராட்டிய பிறகு, படத்தின் வெளியீட்டுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ரசிகர்கள் உணர்ச்சி மயமாய் ரசித்ததோடு, படத்தையும் வெற்றி பெறச்செய்தார்கள்.

“வேதம் புதிது” பாலுத்தேவர் கேரக்டர் என்னை ரசிகர்களிடம் பெரிய அளவில் வெளிப்படுத்தியதால்தான் இன்றைக்கு “பெரியார்”, “ஒன்பது ரூபாய் நோட்டு” போன்ற படங்களிலும் நடிப்பில் என்னை நிலைநிறுத்த முடிந்தது.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

திரைப்பட வரலாறு 823
சத்யராஜ×க்கு எம்.ஜி.ஆர். அழைப்பு
“எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படத்தில் நடியுங்கள்”

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவரை சத்யராஜ் சந்தித்தார். அப்போது, “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடியுங்கள்” என்று எம்.ஜி.ஆர். அழைப்பு விடுத்தார்.

சினிமாவில் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்த சத்யராஜ×க்கு, கொஞ்சநாள் குடும்பத்துடன் ஓய்வெடுக்கலாமே என்று தோன்றியது.

அமெரிக்கா பயணம்

அவரது சகோதரிகளில் ஒருவரான ரூபா, தனது கணவர் சேனாதிபதியுடன் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் இருந்தார். இதனால், ஒரு மாதம் நடிப்புக்கு `லீவு’ கொடுத்துவிட்டு, குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு பறந்தார், சத்யராஜ்.

இந்த அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் சத்யராஜ் மிகவும் நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு வந்தது.

அந்த அனுபவம் பற்றி, சத்யராஜ் கூறியதாவது:-

“தங்கை வீட்டுக்கு அமெரிக்காவுக்கு போக முடிவு செய்து புறப்பட்ட நாளில் என் நண்பர் டைரக்டர் மணிவண்ணன், “தினத்தந்தி”யில் என்னை வாழ்த்தி முழுப்பக்க விளம்பரம் கொடுத்துவிட்டார். இது, என் மீதான அவரது அதிகபட்ச அன்பு என்றாலும், இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. “என் நண்பன் சத்யராஜின் அமெரிக்கப் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்ற அந்த ஒருபக்க வாழ்த்துதான் எனக்கும், எம்.ஜி.ஆர். சாருக்குமான நட்புக்கான அடித்தளம் அமைக்கப்போகிறது என்பது, அப்போது எனக்குத் தெரியாது.

எம்.ஜி.ஆர். தந்தி

அப்போதுநாங்கள் சென்னை வாலஸ் கார்டனில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தோம்.

ஒரு மாதம் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் கதவைத் திறந்ததுமே கண்ணில் பட்டது ஒரு தந்தி. பிரித்த மாத்திரத்தில் அது என் அமெரிக்க பயணத்தை வாழ்த்தி அனுப்பப்பட்ட தந்தி என்பதும், அதை எனக்கு அனுப்பியது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். என்பதும் தெரிந்தது!

அதிர்ந்து போனேன். தந்தி வந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. நாங்கள் அமெரிக்காவுக்கு புறப்பட்டுப் போன கொஞ்ச நேரத்தில், அந்த தந்தி எங்கள் வீட்டுக்குள் போடப்பட்டிருக்கிறது. ஒரு மாதம் கழித்து அப்படியொரு தந்தி வந்திருப்பது தெரிந்ததும் மகிழ்ச்சியையும் தாண்டி அதிர்ச்சியே எனக்குள் ஏற்பட்டது.

பின்னே! என்னை வாழ்த்தி தந்தி அனுப்பியிருப்பது மதிப்பிற்குரிய முதல்வர். ஒரு மாதம் வரை அதற்கு பதில் நன்றிகூட சொல்லாமல் இருததால், தவறாக நினைத்துக் கொள்ளமாட்டாரா?

உடனே அவரை சந்தித்து, வாழ்த்துக்கு நன்றி சொல்வதுதான் பண்பாடு. ஆனால் அவர் அழைப்பில்லாமல் எப்படிப் போவது? அப்படிப் போனாலும் அவரை சந்தித்துப் பேசமுடியுமா?

இப்படியான குழப்பம் என்னை ஆட்கொண்டபோது, டைரக்டர் பாரதிராஜாவிடம் யோசனை கேட்டேன். அவரோ, “யாரிடமும் முன்கூட்டியே அனுமதி பெறத் தேவையில்லை. நேராக தோட்டம் (எம்.ஜி.ஆரின் ராமாவரம் இருப்பிடம்) போங்க! போய், வாழ்த்துக்கு நன்றி சொல்லிட்டு வந்துடுங்க” என்றார்.

எம்.ஜி.ஆர். வீட்டில்

அவர் சொன்னது நல்ல யோசனையாகப்பட்டது. மறுநாளே மனைவியுடன் தோட்டத்துக்கு கிளம்பினேன். காலை 8 மணிக்கு தோட்டத்தை நெருங்கும்போது இன்னொரு சந்தேகம். `ஒருவேளை கேட்டில் நிற்கும் காவலாளி தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விட்டால்?’

நான் சராசரி மனிதன் என்றால் பரவாயில்லை. என்னோடு அந்த விஷயம் முடிந்து விடும். நான் இப்போது நடிகன். பார்க்கிற எல்லோருக்குமே என்னைத் தெரியும். ஒருவேளை அப்படி திருப்பி அனுப்பிவிட்டால், “எம்.ஜி.ஆரை பார்க்கப்போன நடிகர் சத்யராஜ் திருப்பி அனுப்பப்பட்டார்” என்றல்லவா செய்தி வரும்!

ஆனால் அப்படியெல்லாம் எந்தத் தடையும் இருக்கவில்லை. கேட்டில் என் வருகைக்கு வரவேற்புதான் இருந்தது. அங்கிருந்தவர்கள் எங்களை வரவேற்பு அறைக்கு அழைத்துப்போய் உட்கார வைத்தார்கள். தோட்டத்தில் நிறைய குழந்தைகளை எம்.ஜி.ஆர். படிக்க வைத்துக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தைகள் என்னைப் பார்த்ததும் உற்சாகமாய் ஓடிவந்து `ஆட்டோகிராப்’ வாங்கினார்கள்.

கொஞ்ச நேரத்தில் நாங்கள் வந்திருந்த தகவல் எம்.ஜி.ஆர். சாருக்கு சொல்லப்பட்டு, எங்களை இன்னொரு வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது அங்கிருந்த ஒருவர் எங்களை நெருங்கி வந்து, “என்ன சாப்பிடறீங்க?” என்று கேட்டார்.”

நான், “வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு வந்து விட்டோம் என்றேன். “இந்த இடத்துக்கு வந்து அப்படியெல்லாம் சொல்லக்கூடாது” என்றார், அவர்.

எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு போகிறவர்களுக்கு முதலில் வயிறார சாப்பாடு. அதன்பிறகுதான் அவருடன் சந்திப்பு என்பதாக நானும் ஏற்கனவே அறிந்திருந்தேன். என்றாலும் காலை டிபன் முடித்துவிட்டுப் போனபிறகு, உடனே மறுபடி டிபன் சாப்பிட முடியுமா? எனவே `டீ` கொடுங்க போதும்” என்றேன்.

`டீ’ வந்த கொஞ்ச நேரத்தில் ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். சார் நாங்கள் இருந்த அறைக்கே வந்துவிட்டார். இருவருக்கும் கையோடு கொண்டு போயிருந்த மாலைகளை அணிவித்து ஆசி பெற்றுக்கொண்டோம்.

எங்களைப் பார்த்ததுமே எம்.ஜி.ஆர். சார் கேட்ட முதல் கேள்வி, “ஏன் குழந்தைகளை அழைத்து வரவில்லை?” என்பதுதான்! நான் விழிக்க, என் மனைவியை பார்த்த எம்.ஜி.ஆர், “உங்க வீட்டுக்காரருக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்காது. நீங்கதாம்மா குழந்தைகளையும் அழைச்சிட்டு வந்திருக்கணும்” என்றார்.

குழந்தைகளையும் நேசிக்கும் அவர் அன்பு புரிந்தது. பேச வார்த்தை வராமல் நின்றோம். அவரே, “அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா குழந்தைகளையும் அழைச்சிட்டு வரணும். சரியா?” என்று எங்கள் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அடுத்து அவர் கேட்ட கேள்வி இன்னும் பாசப்பிணைப்பானது.

“ஏன் இத்தனை நாளா வரலை?” என்பதே அவர் கேள்வி.

“அண்ணே! எப்படி திடீர்னு வர்றது? ஒருவேளை நான் வந்து கேட்டைத்தாண்டி உள்ளே விடமாட்டேன்னுட்டாங்கன்னா தமிழ்நாடு முழுக்க தெரிஞ்சிடுமே” என்றேன்.

நான் இப்படிச் சொன்னதை எம்.ஜி.ஆர். சார் ரொம்பவே ரசித்தார். என் தோளில் தட்டி சிரித்தார். பிறகு அவரே, “அப்படியெல்லாம் பண்ணமாட்டாங்க” என்றார்.

அமெரிக்கா அனுபவம்

பிறகு என் குடும்பம் பற்றியெல்லாம் ஆர்வமாக விசாரித்தார். வாஷிங்டனில் இருக்கும் தமிழர்கள் எனக்கு கொடுத்த சிறப்பான வரவேற்பு பற்றி அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.

“தொடர்ந்து படப்பிடிப்பு படப்பிடிப்புன்னு இருந்ததுக்கு ஒரு மாத ஓய்வு பயனுள்ளதாக இருந்திருக்குமே” என்றார், ஜானகி அம்மாள்.

உடனே எம்.ஜி.ஆர், “எங்கே ஓய்வெடுக்கிறது! அமெரிக்காவிலும் தமிழ்ச்சங்கம் வரவேற்பு அது இதுன்னு போய் வந்ததுல ஓய்வு எப்படி எடுக்க முடியும்?” என்று என் சார்பில் ஜானகி அம்மாளுக்கு பதில் கூறினார்.

தொடர்ந்து என் படங்களையெல்லாம் பார்த்ததாகவும், சிறப்பாக நடிக்கிறேன் என்றும் சொன்னபோது சந்தோஷத்தில் இறக்கையில்லாமல் பறந்தேன்.

நடிக்க அழைப்பு

திடீரென்று, “சத்யராஜ்! நீங்க எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படத்தில் நடிக்கிறீங்களா?” என்று கேட்டார், எம்.ஜி.ஆர்.

“நீங்க இப்படி கேட்டிருக்க கூடாதுண்ணே! உத்தரவே போட்டிருக்கணும். அப்படி உங்க எம்.ஜி.ஆர். பிக்சர்சில் நடிக்கிற வாய்ப்பு அமைந்தால் அது என் பாக்கியம்” என்றேன்.

இப்போது ஜானகி அம்மாள், “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மூலமா நாலைந்து படம் எடுத்திருக்கிறோம்” என்றார்கள்.

நான் உடனே, “3 படம்தான் எடுத்திருக்கீங்க. 1958-ல் “நாடோடி மன்னன்”, 1969-ல் “அடிமைப்பெண்”, 1973-ல் “உலகம் சுற்றும் வாலிபன்” என 3 படம்தான் எடுத்திருக்கீங்க” என்றேன்.

நான் இப்படி புள்ளி விவரங்களுடன் சொன்னது எம்.ஜி.ஆர் சாரை ஆச்சரியப்படுத்தி விட்டது. “சரி! எங்க கம்பெனிக்கு எப்ப நடிக்கிறே?” என்று கேட்டார்.

“நாளையில் இருந்தே ஷூட்டிங் வைத்தாலும் நான் ரெடி” என்றேன்.

உடனே எம்.ஜி.ஆர். சார் என் வார்த்தையை பிடித்துக்கொண்டார். “அப்ப, இப்போது உன்னை வெச்சு படம் எடுக்கிறவங்க கதி? அவங்க படத்தை முடிச்சிட்டு அப்புறமா நடி” என்றார்.

தயாரிப்பாளர்களை `முதலாளி ஸ்தானத்தில்’ வைத்து மரியாதை செய்யும் அவரது வார்த்தைகளில் தயாரிப்பாளர்கள் மீது எத்தனை கரிசனம் என்று எண்ணி வியந்தேன்.

“கண்டிப்பாக நடிக்கிறேன். ஆனால் நீங்களே டைரக்ட் பண்ணணும்” என்றேன்.

பதிலுக்கு அவர், “எனக்கும் விருப்பம்தான். ஆனால் `சி.எம்’ ஆயிட்டேனே!” என்றார். பிறகு அவரே, “படத்துக்கு நல்ல டைரக்டராக போட்டு விடுவோம். நான் எடிட்டிங் சமயத்தில் வந்து விடுகிறேன்” என்றார். சினிமாவை அப்போதும் அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது.

முத்தம்

விடைபெறும் நேரம் வந்தபோது கன்னத்தில் முத்தமிட்டு என்னை வாழ்த்தினார். அடுத்த தடவை குழந்தைகளோடுதான் வரணும் என்று அன்புக் கட்டளையிட்டு அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு வந்த பிறகும் கூட எனக்கு எம்.ஜி.ஆர். சாரின் அந்த அன்பே கண்ணுக்குள் நின்றது. என் மனைவி என்னிடம், எம்.ஜி.ஆர். சார் கொடுத்த முத்தத்தை நினைவுபடுத்தி, “10 நாள் நீங்கள் உடம்புக்கு மட்டும்தான் குளிப்பீங்க. முத்தம் கிடைச்ச சந்தோஷத்துல முகம் கழுவப் போறதில்லை” என்று கிண்டல் செய்தார்.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

திரைப்பட வரலாறு 824
சத்யராஜ் தங்கைகள் திருமணம்
“எம்.ஜி.ஆர். நேரில் சென்று வாழ்த்து”

நடிகர் சத்யராஜின் 2 தங்கைகள் திருமணம் கோவையில் நடந்த போது,முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்.

எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சத்யராஜ் சந்தித்த பிறகு, அவர் எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவராகி விட்டார். இந்த சமயத்தில் சத்யராஜின் இரண்டு தங்கைகளுக்கு நடந்த திருமணத்திலும் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதுகுறித்து சத்யராஜ் கூறிய தாவது:-

தங்கைகள் திருமணம்

“எனது தங்கைகள் நந்தினி, அகிலா இருவருக்கும் கோவையில் திருமணம் நிச்சயமானது. “மலைக் கள்ளன்” “சிவகவி” போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த பட்சிராஜா ஸ்டூடியோ கோவையில் இருந்தது. பின்னாளில் இந்த ஸ்டூடியோ கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டது.

இந்த திருமண மண்டபத்தில்தான் தங்கைகள் திருமணம் நடந்தது. தங்கைகளின் திருமண பத்திரிகையை எம்.ஜி.ஆரிடம் கொடுக்க நான் ராமாவரம் தோட்டத்துக்கு போயிருந்தபோது அவர் கோட்டைக்கு போயிருந்தார். ஜானகி அம்மாள் மட்டும் வீட்டில் இருந்தார். நான் ஜானகி அம்மாவிடம் திருமண பத்திரிகையை கொடுத்து, “அம்மா! இது அழைப்பிதழ் அல்ல. கோவையில் திருமணம் நடக்கிறது என்பதை சொல்லும் தகவல் மட்டும்தான். ஒரு சாதாரண நடிகனின் தங்கைகள் திருமணத்துக்காக 600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. கோவையில் திருமணம் முடிந்ததும், நானே மணமக்களை இங்கே அழைத்து வருகிறேன்” என்றேன்.

இதற்குப் பிறகு நான் கல்யாண வேலைகளில் பிசியாகி விட்டேன். சித்தப்பா வகையில் சிவாஜி எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் நிச்சயம் வந்து விடுவார். நாமே வர வேண்டாம் என்று சொன்னதால், எம்.ஜி.ஆர். வரமாட்டார் என்றே எண்ணினேன்.

திருமணத்திற்கு முந்தின நாள், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். எனது தங்கைகள் திருமணத்துக்காக கோவை வருகிறார் என்ற தகவல் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் கோவை மாவட்ட கலெக்டர் எனக்கு போன் செய்தார். “ஏன் சார்! சி.எம். வரப்போறார் என்பதை முதலிலேயே எனக்கு தெரிவித்திருக்கலாமே” என்றார்.

நாம் வரவேண்டாம் என்று சொல்லியும் முதல்வர் வருகிறாரே என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனை அன்பு இருந்தால் அவராகவே வர முடிவு செய்வார்!

“எப்படி?”

மறுநாள் மதியம் கோவை விமான நிலையத்தில் காத்திருந்தேன். விமானத்தில் இருந்து முதல்வரும் ஜானகி அம்மாளும் இறங்கி வந்தார்கள். நான் பரவசமாய் வணங்கி நின்றபோது, என்னிடம் “எப்படி?” என்று குதூகலமாகக் கேட்டார், முதல்வர்.

அவர் “எப்படி?” என்று கேட்பதே தனி அழகு. அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு அந்த “எப்படி” வார்த்தையின் வல்லமை தெரியும். என்னிடம் சொன்ன “எப்படி”க்கு அர்த்தம், “நீ வரவேண்டாம் என்று சொல்லியும் வந்துவிட்டேன் பார்த்தாயா!” என்கிற அர்த்தம்.

நேராக சர்க்ïட் அவுசில் தங்கியவர், மறுநாள் காலை 5 மணிக்கு முகூர்த்தம் என்பதால் ஜானகி அம்மாளுடன் 4.45 மணிக்கே வந்து விட்டார்.

எம்.ஜி.ஆர். வரும் அதே நேரத்தில் சிவாஜியும் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தார்! இப்போது யாரை வரவேற்பது என்பதில் எனக்கே சிறு தடுமாற்றம். நிலைமையை `சட்’டென்று புரிந்து கொண்ட சிவாஜி, என்னிடம், “டேய்! இது என் வீட்டுக் கல்யாணம். நீ அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கூடப் போ” என்றார். இந்த ஒரு வார்த்தையில் நான் ரிலாக்ஸ் ஆனேன்.

அம்மா எங்கே?

திருமண மேடையை நெருங்கிய எம்.ஜி.ஆர். என்னிடம், “உங்கம்மா எங்கே?” என்று கேட்டார். நான் பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் இருந்த அம்மாவிடம் அழைத்துப்போனேன். அம்மாவை பார்த்து “வணக்கம்மா” என்று கைகூப்பினார். அம்மா எழுந்து பதிலுக்கு கைகூப்ப, ஒட்டுமொத்த கூட்டமும் அம்மாவுடன் சேர்ந்து எழுந்து எம்.ஜி.ஆருக்கு வணக்கம் செய்தார்கள். இந்த வகையில் எம்.ஜி.ஆர். சாரால் என் தாய்க்கு மிகப் பெரிய மரியாதை கிடைத்தது.

திருமணம் நல்லபடியாக முடிந்து முதல்வர் சென்னை புறப்பட இருந்தார். விமான நிலையத்துக்கு சென்று அவரை வழியனுப்பினேன்.

என்ன வேண்டும்?

சிவாஜி சாருடன் நான் நடித்த “ஜல்லிக்கட்டு” பட விழாவுக்கு அவரை அழைக்க தோட்டத்துக்கு போன போதுதான், “உனக்கு ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டார்.

நான், “வேணாங்க! எந்தவித அப்பாயின்மெண்ட்டும் இல்லாம உங்களை வந்து பார்த்துப் போக முடியுதே! இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?” என்றேன்.

“நான் உனக்கு ஏதாவது பண்ணணுமா?” என்று மறுபடியும் கேட்டார்.

இதற்கும் “வேண்டாம்” என்றேன்.

“எதையாவது இப்ப நீ என்கிட்ட கேளு” என்றார், உறுதியான குரலில்.

அவர் கொடுக்க நினைப்பதும் நான் தவிர்ப்பதுமாய் ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்போது எதையாவது கேட்டே ஆக வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டு விட்டார்.

எனவே, “நீங்க உடற்பயிற்சி பண்ணுகிற கர்லாக்கட்டை வேண்டும்” என்றேன்.

நான் இப்படிக் கேட்டதும் தலையில் அடித்து சிரித்தார். உடற்பயிற்சியின் போது அவர் பயன்படுத்தி வந்த கர்லாக் கட்டையை எனக்கு வழங்கினார். இப்போதும் அவர் தந்த கர்லாக் கட்டையைக் கொண்டுதான் பயிற்சி செய்து வருகிறேன்.

“ஜல்லிக்கட்டு” நூறாவது நாள்

1987 டிசம்பர் 5-ந் தேதி “ஜல்லிக்கட்டு” படத்தின் நூறாவது நாள் விழா வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. படத்தின் விழாவுக்கு முதலில் வருவதாகச் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில், நிகழ்ச்சி நாளன்று `வரவில்லை’ என்பதாக தகவல் அனுப்பி விட்டார். தோட்டத்தில் இருந்து வந்த போன் இந்த தகவலை உறுதி செய்ததும் அதிர்ந்துபோய் விட்டேன்.

இப்போது போல் அப்போது செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. அவர் வரவில்லை என்று சொன்னாலும் அவரை போய் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.

ஆனால் அவர் எப்படிப்பட்டவர்? எங்கே நான் போய் அவரை சந்தித்து மனதை மாற்றி விடுவேனோ என்று யோசித்தவர், மறுபடியும் வீட்டுக்கு போனில் தகவல் சொல்லச் சொல்லியிருக்கிறார். “முதல்வர் வரவில்லை என்பதற்காக, அவரை பார்க்க சத்யராஜ் வரவேண்டாம்” என்பதுதான் அந்த தகவல்.

ஆனால் வீட்டில் நான் ஏற்கனவே சொல்லி வைத்தபடி, “அவர் அப்பவே உங்களை பார்க்க வர்றதா சொல்லிட்டுப் போயிட்டாரே” என்று சொல்லி விட்டார்கள்.

நான் தோட்டம் போயிருந்தபோது என் வருகை தெரிவிக்கப்பட்டதும், மாடியில் இருந்த அவரது தனியறைக்கு அழைத்துப் போனார்கள். எம்.ஜி.ஆர். சட்டை, லுங்கியில் 10 நாள் ஷேவ் பண்ணாத முகமாய் தெரிந்தார். அவருடன் 5 அதிகாரிகள் இருந்தார்கள். பக்கத்தில் பைல்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததும் அவருக்கிருந்த வேலைப்பளுவும் தெரிந்தது; அவரது உடல் சோர்வும் புரிந்தது. என்னைப் பார்த்ததும், “இன்னிக்கு மழை வர்ற மாதிரி இருக்குல்ல!” என்றார்.

நான் என்ன பதில் சொல்வது? விழாவை தவிர்க்கப் பார்க்கிறார் என்பது புரிந்தது. “ஆமாண்ணே” என்றேன்.

இதற்குள் அவருக்கு பால் வருகிறது. எனக்கும் வருகிறது. சாப்பிடும்போது, “நான் வரலைன்னா வருத்தப்படுவியா?” என்று கேட்டார்.

“வருத்தமாகத் தான் இருக்கும். ஆனாலும் நாங்களே நடத்திக்கிறோம் அண்ணே!” என்றேன்.

ஒரு கணம் என்னையே கூர்மையாகப் பார்த்தார். என் ஏமாற்றத்தை முகத்தில் கண்டவர், “உனக்காக வர்றேன்” என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.

சொன்னது போலவே மிகச் சரியாக விழா தொடங்கும் மாலை 6 மணிக்கு காரில் வள்ளுவர் கோட்டத்தில் வந்திறங்கினார். அவரை வரவேற்றபோது, என்னை அருகில் அழைத்தவர் “எப்படி?” என்றார், உற்சாகமாக அதாவது சொன்னபடி வந்ததற்காக இந்த `எப்படி’ என்பது புரிந்து எனக்கும் மகிழ்ச்சி.

முத்தம்

இந்த விழாவில் அவருக்கு உற்சாகம் என்றால் அப்படி ஒரு உற்சாகம். சிவாஜியை கட்டிப் பிடித்து முத்தமிட்டார். விருது வாங்க வந்த எம்.என்.நம்பியார் தனக்கும் முத்தம் வேண்டும் என்றார். “முத்தமா? தர முடியாது. குத்துவேன்” என்றார், ஜாலியாக.

நம்பியாரோ, “அப்படியென்றால் எனக்கு ஷீல்டு வேண்டாம்” என்றார்.

இதனால் எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அவரை அழைத்து, ஒரு முத்தம் கொடுத்து விட்டு, ஷீல்டை கொடுத்தார்.

நடிகர் திலகம் சிவாஜி பட வெற்றி விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்றார்கள். அதுவே முதலும் கடைசியுமாகி விட்டது. அவர் கலந்து கொண்ட கடைசி சினிமா விழாவும் அதுதான்.

டிசம்பர் 5-ந் தேதி இந்த விழா நடந்தது. அதற்கு 19 நாள் கழித்து, அதாவது டிசம்பர் 24-ந் தேதி எம்.ஜி.ஆர். அமரர் ஆனார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அவரது பொன்னுடலுக்கு `உப்பு’ போடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த `உப்பு’ வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஒரே நடிகன் நான்தான்.

ஒரு ரசிகனாக அவரை வியந்தவன், நடிகனான போது அவரது நேசத்துக்குரியவனானேன். இப்போதும் என்னுடைய உணர்வுகளில் கலந்து போயிருப்பவர் அவர்”.

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

————————————————————————————————————–

திரைப்பட வரலாறு :(835)
“பெரியார்” படம் உருவானது எப்படி?
சத்யராஜ் வெளியிட்ட ருசிகர தகவல்கள்

பெரியார் வேடத்தில் நடித்தது பற்றியும், படப்பிடிப்பின்போது நடந்த சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும் நடிகர் சத்யராஜ் விவரித்தார்.

பல்வேறு கேரக்டர்களில் நடித்திருந்தாலும் சத்யராஜ் நடிப்பில் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்தது `பெரியார்’ படம். இந்த படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

ஞானராஜசேகரன் அழைப்பு

`பாரதி’ டைரக்டர் ஞானராஜசேகரன் என்னை சந்தித்தார். எடுத்த எடுப்பிலேயே, “சார்! பெரியாரின் வாழ்க்கைச் சம்பவங்களை படமாக எடுக்கலாம். நீங்கள் பெரியாராக நடிக்கிறீர்கள்” என்றார்.

எப்போதோ சொன்னது இப்போது நடந்துவிடும் போலிருக்கிறதே என்று உள்ளுணர்வு சொன்னாலும், பெரியார் வேடத்துக்கு நான் எந்த அளவுக்கு பொருத்தமாக இருப்பேன் என்பது தெரியவில்லையே! எனவே, என் சந்தேகத்தை கேள்வியாக்கி, “நீங்கள் பெரியார் படம் பண்றது நல்ல விஷயம். ஆனால் நான் பெரியார் தோற்றத்துக்கு எந்த அளவுக்கு பொருத்தமாக இருப்பேன் என்று தெரியவில்லையே” என்றேன்.

நான் இப்படிச் சொல்வேன் என்று எதிர்பார்த்தோ என்னவோ, சட்டென ஒரு புகைப்படத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார், ஞானராஜசேகரன்.

கம்பீரத் தோற்றத்தில் காணப்பட்ட ஒரு இளைஞரின் படம் அது. படத்தை பார்த்ததும், “யார் இந்த இளைஞர்? காக்கி சட்டை படத்தில் நான் இருந்த தோற்றத்தையொட்டி காணப்படுகிறாரே?” என்றேன், ஆச்சரியமாய்!

ஞானராஜசேகரனோ, “சார்! பெரியாரின் 25 வயதில் எடுத்த படம் அது. பெரியாரின் சாயல் உங்களிடமும் இருப்பதால், படத்துக்கு தாடி, மீசை வைத்து கிராபிக்ஸ் செய்து பார்த்தேன். உங்களுக்கு அச்சாகப் பொருந்துகிற மாதிரி அமைந்திருக்கிறது” என்றார். “எனக்கும் தந்தை பெரியார் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் உண்டு. அதைத்தான் மேடையிலும் வெளிப்படுத்தினேன். உங்கள் டைரக்ஷனில் நான் நடிக்கிறேன். தயாரிப்பாளரை தயார் செய்துவிடுங்கள்” என்றேன்.

தயாரிப்பாளர் யார்?

ஆனால் தயாரிப்பாளர்தான் கிடைத்தபாடில்லை. பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக தயாரித்தால் `சாமி கண்ணைக் குத்திவிடும்’ என்று தவறாக எண்ணிக் கொண்டு ஒதுங்கினார்களோ என்னவோ!

இதற்கிடையே நானும் மற்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் ஒருமுறை கி.வீரமணியை சந்தித்தேன். அவரை `ஆசிரியர் ஐயா’ என்றே அழைப்பேன். நான் அவரிடம் “பெரியார்” படம் தொடர்பாக டைரக்டர் ஞானராஜசேகரன் என்னை சந்தித்த விவரத்தை சொன்னேன். அதோடு தயாரிப்பாளர் கிடைக்காததால்தான் படம் தொடங்குவதில் தாமதம் என்பதையும் விவரித்தேன்.

“தயாரிப்பாளர் கிடைப்பதுதான் பிரச்சினை என்றால் நாங்களே தயாரிக்கிறோம்” என்று அவர் முன்வந்தார். “பெரியாரின் தொண்டர்கள் தயாரிப்பில் பங்கேற்பார்கள். எனவே பட வேலைகளை தொடங்கச் சொல்லுங்கள்” என்றார்.

ஆசிரியர் வீரமணி பற்றி நான் அவருடன் பழகிய நாட்களில் என் அனுபவத்தை சொல்லியாக வேண்டும். எப்போதுமே அவருடனான உரையாடலில் பெரியார் பற்றியும், திராவிடர் கழக செயல்பாடுகள் பற்றியுமே அதிகம் இடம் பெறும். அவரது ஒரு மகள் அருள் அமெரிக்காவில் குடும்பத்துடன் இருக்கிறார். மகளை பார்க்க அமெரிக்கா போய் வந்த நேரத்தில் அவரை சந்தித்தபோதுகூட, மகள் பற்றியோ மகளின் குடும்பம் பற்றியோ, அமெரிக்கா பற்றியோ அவர் பேசவில்லை. `அமெரிக்காவில் உள்ள இணையதளத்தில் கூட பெரியாரை பார்க்க முடிகிறது’ என்பதையே பரவசமாய் சொல்லிக் கொண்டிருந்தார்.

சிங்கப்பூர் பயணம்

சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் நேசத்துக்குரிய தமிழ்த் தலைவராக இருந்தவர் `தமிழ்வேள்’ கோ.சாரங்கபாணி. அவரது 125-வது ஆண்டு விழா சிங்கப்பூரில் கொண்டாடப்பட்ட நேரத்தில், தந்தை பெரியாரின் நினைவு நாளையும் இணைத்து கொண்டாடினார்கள். இதில் கலந்து கொள்ள ஆசிரியர் வீரமணி தனது மனைவியுடன் புறப்பட்டார். அப்போது என்னையும் குடும்பத்துடன் வருமாறு கேட்டுக்கொண்டதால் என் மனைவியுடன் பயணப்பட்டேன்.

சிங்கப்பூருக்கு போன பிறகுதான் அவருக்கு அங்கே கவிதா என்ற மகள் இருப்பதே எனக்குத் தெரியவந்தது. கவிதாவின் இல்லத்துக்குப் போனபோது அங்கேயும் பெரியார் பற்றிதான் அதிகம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெரியாராக நான் நடிப்பது பற்றி பேச்சு வந்ததும் ஆசிரியர் வீரமணியின் மனைவி என்னிடம், “பெரியார் வேஷத்துக்கு நீங்க பொருத்தமாகவே இருப்பீங்க. ஆனால் பெரியாரைவிட நீங்கள் உயரம் மட்டும் கொஞ்சம் அதிகம்” என்றார். (படத்தில் உயரம் தெரியாதபடி சரிசெய்து கொண்டு விட்டோம்)

படப்பிடிப்பில் பிரச்சினை

“பெரியார்” படத்தின் படப்பிடிப்பு ஒருவாறு தொடங்கியது. காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் படப்பிடிப்பு நடந்தது.

காஞ்சீபுரம் கோவிலில் காலை 7 மணிக்கே பெரியார் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. ஆனால் `பெரியார்’ படத்துக்கான காட்சிகளை கோவிலில் எடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. இதனால் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிற்பகல் 3 மணி வரை இதே நிலை நீடித்ததில் ரொம்பவே வருத்தமாகி விட்டது.

அப்போது படப்பிடிப்புக்கு உதவியாக வந்த பெரியார் தொண்டர்களில் சிலர் என்னிடம் வந்து, “கண்டிப்பாகப் படப்பிடிப்பு நடக்கும் `அன்பு’ பார்த்துக்குவார்” என்றார்கள்.

எட்டு மணி நேரம் முயன்றும் முடியாத ஒரு விஷயத்தை, `அன்பு’ என்பவர் வந்து முடித்து விடுவார் என்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டேன்.

அதுமாதிரியே அன்பு வந்தார். பேசவேண்டியவர்களிடம் பேசினார். அடுத்த ஒரு சில நிமிடங்களில் படப்பிடிப்பு தடையின்றி நடந்தது. என் ஆச்சரியம் இப்போது எல்லை தாண்டிவிட்டது. “யார் அந்த அன்பு” என்று விசாரித்தபோது என் ஆச்சரியம் இன்னும் பல மடங்கானது. ஆசிரியர் வீரமணியின் மகன்தான் அந்த அன்பு!

சமீபத்தில் ஆசிரியரின் 75-வது ஆண்டையொட்டி நடந்த விழாவின்போது முதல்-அமைச்சர் கலைஞர் கலந்து கொண்டார். அந்த விழாவுக்கு போயிருந்தபோது தான் அவருக்கு அசோக் என்றொரு மகன் இருப்பதும் தெரியவந்தது!

இப்படி தங்களை மறைத்து பெரியாரின் கொள்கைக்காகவே வாழுகிற ஒரு குடும்பம் “பெரியார்” படம் தயாரிக்க முன்வந்தது பொருத்தம்தானே.

5 வருட ஆராய்ச்சி

பெரியாரை டைரக்ட் செய்த ஞானராஜசேகரன் ஐ.ஏ.எஸ். முடித்தவர். `பாரதி’ படத்தின் மூலம் ஒரு `மகாகவி’யின் வாழ்க்கையை கவிதையாக திரைக்குத் தந்தவர் என்ற முறையில் அவர் மீது என் மரியாதை கூடியிருந்தது. இப்போது அவரே பெரியார் படத்தை உருவாக்கவும், தயாராகி இருந்தது வரலாற்றுத் தலைவர்கள் மீதான அவரது ஈடுபாட்டை உணர்த்தியது. அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பெரியார் படம் எடுக்கும் ஆர்வத்தில் பெரியார் பற்றி ஐந்தாறு வருடமாக பல்வேறு ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டதும் தெரியவந்தது. பெரியார் பற்றிய புத்தகம் எங்கே கிடைத்தாலும், அதை வாங்கி பெரியாரின் வாழ்க்கை தொடர்பான விஷயங்களை சேகரித்திருக்கிறார். அதுமாதிரி பெரியாருடன் பழகியவர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்திருக்கிறார்.

இப்படியெல்லாம் அவர் முழுமையாக தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் நான் பெரியாராக நடிக்கும் என் ஆர்வத்தை வெளியிட்டு இருக்கிறேன். இருவரின் ஒருமித்த சிந்தனையும் எங்களை `பெரியாருக்குள்’ இணைத்துவிட்டது.

இந்த நேரத்தில்கூட எனக்கு பெரியாராக நடிப்பதில் ஒரு சின்ன தயக்கம் ஓடிக்கொண்டிருந்தது. பெரியாருடன் பழகியவர்கள் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். `பெரியார் நடிப்பில்’ அவர்களை நான் திருப்திபடுத்தியாக வேண்டும். அதோடு பெரியார் வேடத்தில் நடிப்பதை நடிகர் திலகம் தனது லட்சியமாக வைத்திருந்தார். காலம் அந்த வாய்ப்பை அவருக்கு வழங்காமலே போய்விட்டது. இப்படி நடிகர் திலகம் விரும்பிய ஒரு கேரக்டரை நான் செய்யும்போது, ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் என் நடிப்பு அமையவேண்டும். இப்படி இரு தரப்பிலும் விரும்பும் விதத்தில் `பெரியாரை’ சரியாக நடிப்பில் பிரதிபலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

“சந்தோசங்க…”

பெரியார் இளைஞராக இருந்த காலகட்டம் பற்றி யாரும் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் முதிய தோற்றத்தில் அவரைப் பார்த்து உணர்ந்தவர்களுக்கு, என் நடிப்பு கொஞ்சம் மாறிப்போனால்கூட ஏமாற்றமாகி விடும். இப்படி நினைத்த நேரத்தில் 75 வயதில் பெரியார் நிகழ்ச்சி அடங்கிய கேசட்டை என்னிடம் தந்தார்கள். அதைப் போட்டுப் பார்த்தபோது பெரியாரின் குரல் நடுக்கம், அவர் உட்கார்ந்து பேசும் விதம் பற்றி கவனித்துக் கொண்டேன்.

அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது “சந்தோசங்க! ரொம்ப சந்தோசங்க!” என்று சொல்வார் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். பெரியாருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற கலைஞரிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் பெரியார் உச்சரிக்கும் விதமாகவே இந்த `சந்தோசங்க’ வார்த்தையை சொல்லிக் காட்டினார்.

1967-ம் ஆண்டில் அறிஞர் அண்ணாவை தலைவராகக் கொண்ட தி.மு.கழகம் முதன் முதலாக தமிழகத்தில் ஆட்சி பீடம் ஏறியது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்-அமைச்சர் அண்ணா தலைமையில் நாவலர், கலைஞர் உள்ளிட்ட அமைச்சர்கள் திருச்சியில் உள்ள பெரியார் மாளிகைக்குப் போய் பெரியாரை சந்தித்து அவரது வாழ்த்தைப் பெறுகிறார்கள்.

தன்னால் அரசியலில் உருவாக்கப்பட்டவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், மறக்காமல் தன்னைத் தேடி ஆசி பெற வந்ததை பார்த்தபோது பெரியார் மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். அதே உணர்வில் “சந்தோசங்க! ரொம்ப சந்தோசங்க” என்று சொல்லி வாழ்த்தியிருக்கிறார்.

இதை கலைஞர் என்னிடம் நடித்தே காட்டியபோது, பெரியார் அவருக்குள்ளும் எப்படி உள்வாங்கியிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன்.

கலைஞர் சொன்ன இதே சம்பவத்தை முன்பு பெரியார் இருந்த அதே திருச்சி `பெரியார் மாளிகை’யில் படமாக்கியபோது, என்னையும் மீறி ஒரு பரவசம் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது பெரியாராக நடிப்பது நானல்லவா?”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

Posted in Actor, Actors, Biography, Biosketch, Cinema, Dhinathanthi, EVR, Faces, Films, Kalainjar, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Karunanidhi, Life, MGR, Movies, names, people, Periyar, Rajini, Rajni, Sathiaraj, Sathiyaraj, Sathyaraj, Satyaraj, Shivaji, Sivaji, Sivakumar | Leave a Comment »

Famous People & Tidbits – Life Incidents: Sunday Dinamani

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

துணுக்குத் தோரணம்

பொறுமையாளன்

“”சின்ன வயதில் எனக்குப் பெரிதும் பொறுமை கிடையாது. திருமணத்திற்குப் பின்தான் நான் பொறுமையாளன் என்று பலராலும் பாராட்டப்பெற்றேன். பொறுமை பொலிவது உண்மையானால், அது இயற்கையில் அரும்பியதாகாது. அது கமலாம்பிகையினின்று இறங்கிக் கால் கொண்டது என்றே சொல்வேன்”- என்று சுயவிமர்சனம் செய்துகொண்டவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க., அமைதிக் கொள்ள வைத்த கமலாம்பிகை யார் தெரியுமா? அவர் மனைவி.

மதிநுட்பம் இல்லாத மாநிலம்?

எஃப்.ஏ. தேர்வில் முதல் மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பீகாரைச் சேர்ந்த அந்த மாணவர். இதற்கு மாதம் இருபத்தைந்து ரூபாய் உபகாரச் சம்பளமாக வழங்கியது கல்லூரி. இந்த உதவித் தொகை தொடர்ந்து பல ஆண்டுகள் அவருக்குக் கிடைத்து வந்தது. பின்னர் பி.ஏ. தேர்விலும் முதல் மாணவராகத் தேர்வானார். உபகாரச் சம்பளம் மாதம் தொண்ணூறு ரூபாயாக உயர்த்தித் தரப்பட்டது.

இவ்வாறு முதல் மாணவராகவே படிப்பில் தேர்ச்சி பெற்றுக் கொண்டே அந்த மாணவர் வந்ததில் ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காலகட்டத்தில் பீகார் மாநிலம் வங்காள மாநிலத்தில் சேர்ந்திருந்தது. பீகார் மாநில மாணவர்கள் எல்லோரும் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில்தான் சேர்ந்து படிக்க வேண்டும்.

வங்க மொழி பேசுவோர் பீகாரிகளைப் படிப்பறிவு இல்லாதவர்கள், மதிநுட்பம் இல்லாதவர்கள் எனப் பேசுவார்கள். இப்படி கேவலமாய்ப் பார்ப்பதை மாற்றியமைக்க வேண்டும் என்ற வெறியோடுதான் அந்த மாணவர் படித்து முதல் மாணவராக வந்திருக்கிறார்.

அந்த மாணவர் யார் என்றுதானே கேட்கிறீர்கள்? இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத்.

கோர்ட்டுக்குப் போன குதிரை!

நீதிமன்றத்திற்கு தினமும் இராஜாஜி தனது குதிரை வண்டியில் செல்வது வழக்கம். ஒருநாள் நீதிமன்றத்திற்குப் புறப்படும்போது வண்டியில் பூட்டிய குதிரையின் மீது புழுதியும் சாணமும் படிந்திருப்பதைக் கண்டார். குதிரையைக் குளிப்பாட்டி வரும்படி கூறினார்.

வண்டிக்காரன் குதிரையைக் குளிப்பாட்டி வண்டியில் பூட்டினான். இராஜாஜி ஏறி அமர்ந்தார். குதிரைக்காரன் ஏறி உட்கார்வதற்குள் குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது. இராஜாஜியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏதாவது ஓர் இடத்தில் குதிரை களைப்படைந்து நிற்கத்தானே போகிறது என்ற நம்பிக்கையில் அமைதியாக உட்கார்ந்துவிட்டார்.

குதிரை ஓடி கடைசியாக ஓரிடத்தில் போய் நின்றது. அது எந்த இடம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அது இராஜாஜி வழக்கமாகச் செல்லும் நீதிமன்றம்.

பிரதமரைச் சந்திக்க மறுத்த ஜனாதிபதி?

மும்பை நேரு விஞ்ஞான மையத்தில் அப்துல்கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்.எல்.வி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நேரம். “”பிரதமர் இந்திரா காந்தி தங்களைச் சந்திக்க விரும்புகிறார். நாம் இருவரும் சேர்ந்து சென்று சந்திக்கலாம்” என்று இஸ்ரோ தலைவர் தவான், அப்துல்கலாமை அழைத்தார்.

கலாம் செல்வதற்குத் தயங்கினார். தவான் காரணம் கேட்டதற்கு கலாம் சொன்னார்: “”நான் எப்போதும்போல் சாதாரண நீலவண்ணச் சட்டையே அணிந்திருக்கிறேன். கால்களுக்குப் பூட்சுகள் இல்லை. செருப்புகள்தான் அணிந்துள்ளேன். இந்தக் கோலத்தில் பிரதமரைச் சந்திக்கத் தயக்கமாக இருக்கிறது” என்றார்.

அதற்கு தவான், “”உடையைப் பற்றி கவலைப்படாதீர்கள். வெற்றி என்கிற பேரழகான ஆடையை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்” என்று கூறி பிரதமரிடம் அழைத்துச் சென்றார்.

பற்று அற!

“”என்ன செய்கிறாய்?” என்று வேதனையோடு கேட்ட தாய்க்கு சாதாரணமாகச் சொன்னான் சிறுவன் “”வேறொன்றுமில்லை, என்னுடைய மெட்ரிகுலேஷன் சான்றிதழ்களை எரிக்கிறேன்”

“”ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்று கேட்ட தாய்க்குச் சொன்னான்: “”இவற்றால் ஒன்றும் பயனில்லை. அம்மா, சூர்யாஜி போன்று பந்தக் கயிறுகளை அறுக்கவேண்டும். ஆசைகளை வேரிலேயே களைய வேண்டும். எனது அகங்காரம் ஒழிய வேண்டும்” என்றான் சிறுவன்.

சரி.. யார் அந்த சூர்யாஜி?

மராட்டிய சிவாஜியின் தளபதியான தானாஜி தம்பி.

சிம்மகட் என்ற பகுதியில் நடந்த யுத்தத்தில் தொடர்புடையவன். போரின் போது உறுதியான கயிற்றைக் கோட்டைமேல் கட்டிவிட்டு, அக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு போர் வீரர்கள் கோட்டை மேல் ஏறிக் கடந்துகொண்டிருந்தனர். கடுமையாகப் போரிட்ட தானாஜியின் வீரர்கள் களைப்பு அடைந்தனர். தன் வீரர்கள் பின்வாங்கிவிடுவார்களோ என்று தானாஜி பயந்தார். அப்போது தானாஜியின் தம்பியான சூர்யா, “”அஞ்ச வேண்டாம். கயிற்றை முன்பே அறுத்து விட்டேன். இனி வீரர்கள் திரும்பிச் செல்லமுடியாது. போரிட்டுத்தான் தீரவேண்டும்” என்றார்.

சரி… இந்தக் கதையைத் தன் தாயிடம் சொன்ன அந்த சிறுவன் யார் என்று தெரியுமா? வினோபா பாவே.

Posted in APJ, Bave, Bengal, Bhave, Bihar, Dinamani, Education, Faces, Famous, Freedom, Horse, Incidents, Independence, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Kalam, Kalyanasundaram, Kalyanasundaranar, Kalyanasuntharam, Kalyanasuntharanar, Life, Maharasthra, Marathi, people, President, Rajaji, Rejendra Prasad, Shivaji, Sivaji, State, ThiruViKa, Vinoba, Vinobha, Vinobha Bhave, War, WB | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

Cheating the state – Income Tax, Black Money, Business folks

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

வாட்டுது வருமான வரி!

“”வருமானமே போதவில்லை, அதற்கு வரி வேறா?” என்ற அங்கலாய்ப்பு மத்தியதர வர்க்கத்திடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் கேட்டவண்ணம் இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களோ இதையெல்லாம் காதில் வாங்காமல் கருமமே கண்ணாக இருந்து வரி வசூலிப்பைத் தீவிரப்படுத்துகின்றனர்.

மாதச் சம்பளக்காரர்கள், அரசு ஊழியர்களானாலும் தனியார் நிறுவன ஊழியர்களானாலும் அவர்களுடைய அலுவலகத்தாராலேயே பிடிக்கப்பட்டு வரி செலுத்தப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு அதில் சலுகைக்குரிய இனம் ஏதும் இருந்தால் அதை வருமான வரி செலுத்தியவரே கணக்கு கொடுத்து திரும்பப்பெற வேண்டும். இந்த வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவார்கள் என்று ஆண்டுதோறும் நிதியமைச்சரின் பட்ஜெட்டை ஆவலோடு எதிர்பார்த்து, கடைசியில் இலவுகாத்த கிளியாக ஏமாந்து வேறு போவார்கள் மாதச் சம்பளக்காரர்கள். இவர்கள் மீது நிதியமைச்சருக்குக் கரிசனம் வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரி வசூல் அதிகமாகிக் கொண்டே வருகிறது, கிட்டத்தட்ட 3 மடங்காகிவிட்டது என்று தலைமை வருமானவரி ஆணையர் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.

அதாவது ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ரூ.5,336 கோடியாக இருந்த வருமான வரி வசூல் கடந்த ஆண்டு ரூ.17,400 கோடியாக உயர்ந்துவிட்டது. தமிழ் நாட்டில் மட்டும் கடந்த ஆண்டு 3.13 லட்சம் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி செலுத்துகிறவர்களாக இருந்து “ரிடர்ன்’ எனப்படும் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.

உள்நாட்டிலேயே

  • வியாபாரிகள்,
  • தரகர்கள்,
  • சொந்தமாகத் தொழில் செய்யும் டாக்டர்கள்,
  • என்ஜினீயர்கள்,
  • வக்கீல்கள்,
  • ஆடிட்டர்கள்,
  • விமானம், கப்பல் ஆகியவற்றுக்கான டிராவல் ஏஜெண்டுகள்,
  • லாரி உரிமையாளர்கள்,
  • சொந்தத் தொழில் செய்பவர்கள்,
  • வியாபாரிகள்,
  • சேவைத்துறையில் இருப்பவர்கள்

என்று பலதரப்பட்டவர்களும் வரி செலுத்துகின்றனர். ஆனால் அவர்களுடைய வருவாய்க்கும், செலுத்தும் வரிக்கும் பெரும் இடைவெளி இருப்பது நமக்கே தெரிகிறது, ஆனால் என்ன காரணத்தாலோ அரசும் அதிகாரிகளும் அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள்.
இந் நிலையில் சமீபத்தில் கூடிய வருமானவரித்துறை தலைமை ஆணையர்களின் மாநாட்டில் வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்கவும், வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காணவும் புதிய உத்திகளை வகுத்திருப்பதாகத் தெரிகிறது. இவை மனப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டால் வரி வருவாய் பலமடங்கு பெருகும், அரசின் செலவுகளுக்கு அதிக நிதியும் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

“”ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு அல்லது அடுக்குமனை வாங்குகிறவர்களின் ஆண்டு வருமானம் ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்களுடைய வருமான வரி கணக்கைத் தீவிரமாக ஆராய வேண்டும், வீட்டை ரூ.30 லட்சத்துக்கு மேல் விற்பவர்கள் கணக்கில் காட்டும் மூலதன ஆதாயத் தொகையைச் சரிபார்க்க வேண்டும், சொத்துகளை விற்ற வகையில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் நஷ்டம் என்று கணக்கு காட்டினாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று ஆணையர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பங்குச்சந்தைத் தரகர்கள், பலசரக்குத் தரகர்கள் ஆகியோரையும் கண்காணிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தையில் 12 மாதங்களுக்குள் மூலதன ஆதாயம் ரூ.25 லட்சம் பெற்றதாக கணக்கு காட்டுகிறவர்களின் வருமான வரி “ரிடர்ன்கள்’ இனி தீவிரமாக ஆராயப்படும்.

விவசாய வருமானத்துக்கு வரி போடுவதில்லை என்ற முடிவை அரசு எடுத்திருந்தாலும், சிலருடைய விவசாயக் கழனிகளிலும், தோட்டங்களிலும் மட்டும் -மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் -“”அமோக மகசூல்” ஆகி, அற்புதமாகப் பணம் கொழிக்கும் “”அபூர்வ பசுமைப் புரட்சி” எப்படி சாத்தியம் என்றும் ஆராய முடிவு செய்திருக்கிறார்கள்.

வருமானத்தைக் கணக்கிடுவது மட்டும் அல்ல, அது முறையாக ஈட்டப்படுகிறதா என்பதையும் வருமானவரித்துறை அறிய வேண்டும். இல்லையென்றால் உரிய துறைகளுக்குத் தெரிவித்து தடுக்க வேண்டும். அப்போதுதான் அதன் கடமை முழுமை பெறும்.

———————————————————————————————————

தமிழகத்தில் வருமான வரி மூலம் வருமானம் அதிகரிப்பு: மாநிலப் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஓர் அடையாளம்

சென்னை, ஜூலை 27- கடந்த ஏழு ஆண்டுகளாகப் படிப்-படியாக, வருமான வரி மூலம் மத்திய அரசு பெறும் வருவாய் அதிகரிக்கிறது என்றும், இது தமிழ் நாட்டின் ஒட்டு மொத்-தப் பொருளாதார முன்-னேற்றத்தைக் குறிக்கிறது என்றும், சென்னை வருமான வரித் தலைமை ஆணையர் சி.ஆர். ரவிச்சந்திரன் ஜுன் 25+இல் கூறினார்.

2000+2001+இல் இருந்து அதிகரித்து வரும் வரிமான வரி வசூல், கடந்த ஆண்டு மட்டும் 37 விழுக்காடு அதிகரித்-திருக்கிறது.

தமிழ்நாட்டில்

  • 2000+2001+இல் வசூலிக்கப்-பட்ட வருமான வரி ரூ.4,519 கோடி,
  • 2004+05+இல் ரூ.8,344 கோடி,
  • 2005+06+இல் ரூ.10,861 கோடி,
  • 2006+07+இல் ரூ.14,891 கோடி.

இந்த நிதியாண்டான 2007+08+இல் ரூ.17,402 கோடி வசூல் ஆகும் என மதிப்பிடப்-பட்டிருக்கிறது.

செய்தித் தொழில் நுட்பம், மற்றும் பிற தொழில் துறை-களில் முன்னேற்றமும், வரி வசூல் முறைச் சீர்படுத்தமும் வரி வசூல் அதிகரிப்பிற்குக் காரணங்கள் ஆகும்.

———————————————————————————————————

 

Posted in Biz, Bonds, Bribery, Bribes, Budget, Bureaucracy, Business, Cheats, Chidamabram, Chidambaram, Chidhambaram, Commerce, Compensation, Corruption, Economy, Employment, Finance, Govt, Homes, Houses, Incentives, Income, Income Tax, Industry, IT, Jobs, Money, NCC, NSS, PC, Personal, Private, Rajini, Rajni, Sankar, Savings, Shankar, Shivaji, Sivaji, Small scale, SSI, Tariffs, Tax, Work, Worker | Leave a Comment »

Shankar, Rajni & AVM’s Sivaji release details in Puthuseri & Karnataka

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

சினிமா டிக்கெட் வெளியிட்ட புதுவை முதல்வர்

ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி’ திரைப்படத்தின் டிக்கெட்டை புதன்கிழமை வெளியிடுகிறார் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி (வலது). உடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

புதுச்சேரி, ஜூன் 14: புதுச்சேரியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இரு கோஷ்டிகளாகப் பிரிந்து தனித்தனியாக ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான சிவாஜி பட டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இந்த இரு கோஷ்டியினரின் டிக்கெட்டுகளையும் புதுவை முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் பிரபலமான நடிகர்களின் படங்கள் திரையிடப்படும்போதும் ரசிகர் மன்றக் காட்சியின்போதும் பல்வேறு விதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

இதனை அடுத்து புதுச்சேரி திரையரங்குகளில் ரசிகர் மன்றக் காட்சிகளைத் தடை செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்தது.

ஆனால் பெரும் வரவேற்புடன் வரும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் புதுச்சேரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை ஏற்று சிவாஜி படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று திரையரங்குகளில் சிவாஜி படம் வெளியாவதால் ஆங்காங்கே கட்-அவுட்கள், பேனர்கள் என்று வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் புதுச்சேரியில் புதுச்சேரி மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு கோஷ்டியாகவும், புதுவை மாநில அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகின்றனர்.

நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று புதுச்சேரி மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கூறுகின்றனர். நாங்கள்தான் முறையாகத் தலைமையின் உத்தரவுப்படி செயல்படும் அமைப்பு என்று புதுவை மாநில அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை சிவாஜி படம் திரையிடப்படும் மூன்று திரையரங்குகளிலும் ரசிகர் மன்றக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ரஜினிசங்கர் உள்ளிட்டோர் வந்து ஒரு திரையரங்குக்கான ரசிகர் மன்றக் காட்சிக்கான டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இதனை புதுவை முதல்வர் என். ரங்கசாமி வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து புதுவை மாநில அனைத்து ரஜினிகாந்த் மன்றங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஞானேவேல், கோபி, காமராஜ் உள்ளிட்டோர் மற்றொரு குழுவாக வந்து மற்ற இரு திரையரங்குகளின் ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இதனையும் புதுவை முதல்வர் என். ரங்கசாமியே வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

இரு தரப்பினரும் ரஜினிகாந்த் திரைடப்படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிகள் நடத்திக்கொள்ள அனுமதி அளித்ததற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ரங்கசாமிக்கு மாலை அணிவித்தனர்.

ரஜினிகாந்த் ரசிகர்கர்கள் திரையரங்கில் சேர்களை உடைத்தல், திரைகளை கிழித்தல், குறிப்பிட்ட காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்ப திரையரங்கு ஊழியர்களை வற்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று ரசிகர் மன்றங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் ரசிகர் மன்றக் காட்சி டிக்கெட்டுகளின் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளன.

——————————————————————————
சிவாஜி திரைப்படத்தை கர்நாடகத்தில் நான்கு தியேட்டர்களுக்கு மேல் திரையிட அனுமதிக்க மாட்டோம்: கன்னட சங்கத் தலைவர் அறிவிப்பு

பெங்களூர், ஜூன் 14: நடிகர் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி’ திரைப்படத்தை கர்நாடகத்தில் 4 தியேட்டர்களுக்கு மேல் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட ரக்ஷணா வேதிகே அறிவித்துள்ளது.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ~ ஷ்ரேயா நடித்த “சிவாஜி’ தமிழ் திரைப்படம் வெள்ளிக்கிழமை முதல் உலகம் முதல் திரையிடப்படுகிறது.

சங்கர் இயக்கத்தில் இப்படம் பல கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருப்பதால் இப் படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி நீர்ப் பிரச்சினை காரணமாக கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவதை கன்னட சங்கங்கள் சில மாதங்களாக தடுத்து வந்தன.

இதையும் மீறி தமிழ் படம் திரையிட்ட திரையரங்குகள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

அண்மையில்தான் தமிழ்ப்படங்கள் கர்நாடகத்தில் மீண்டும் திரையிடப்பட்டு வருகிறது.

இந் நிலையில் சிவாஜி படத்தை திரையிட கர்நாடகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் போன்ற பெரிய நடிகர்கள் படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படும்போது பெங்களூரில் 10-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இவர்களது படங்கள் திரையிடப்படும்.

ஆனால் சிவாஜி படத்தை கர்நாடகம் முழுவதும் நான்கு தியேட்டர்களிலேயே திரையிட வேண்டும் என்று கன்னட ரக்ஷணா வேதிகே கூறி வருகிறது.

இதுகுறித்து ரக்ஷணா வேதிகேயின் தலைவர் நாராயண கெüடா கூறியதாவது:

பிறமொழிப்படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படும்போது சில கட்டுப்பாடுகளை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை விதித்துள்ளது.

இதன்படி கர்நாடகத்தில் திரையிடப்படும் கன்னடம் அல்லாத பிற மொழிப்படங்களை நான்கு தியேட்டர்களில் மட்டுமே திரையிட வேண்டும்.

மேலும் சுவரொட்டிகள் கன்னடத்தில் மட்டுமே அச்சிடப்பட்டு ஒட்டப்பட வேண்டும். இதுபோல் பிற விளம்பரங்கள் அனைத்தும் கர்நாடகத்தில் கன்னடத்திலேயே வெளியிடப்பட வேண்டும்.

இந்த நிபந்தனைகள்படி ரஜினிகாந்த் படத்தை திரையிட நாங்கள் எதிர்க்கவில்லை.

இதை மீறி பல தியேட்டர்களில் திரையிட்டால் அந்த தியேட்டர்களில் படச்சுருளை கன்னட ரக்ஷணா வேதிகே தொண்டர்கள் பறிமுதல் செய்வர்.

இயக்குநர் சங்கரின் 23-வது புலிகேசி திரைப்படம் கர்நாடகத்தைச் சேர்ந்த புலிகேசி மன்னனை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டிருந்தது.

இதனால் இப்படத்தை கர்நாடகத்தில் திரையிட நாங்கள் அனுமதிக்கவில்லை.

அதுபோல் சிவாஜி திரைப்படத்திலும் ஏதாவது ஆட்சேபகரமான காட்சிகள் இருந்தால் அதற்கு எங்களது எதிர்ப்புகளைத் தெரிவிப்போம்.

இதற்காக ரக்ஷணா வேதிகே தொண்டர்கள் டிக்கெட் எடுத்து தியேட்டருக்குச் சென்று கண்காணிப்பார்கள் என்றார் அவர்.

13 தியேட்டர்களில் திரையிட நடவடிக்கை: இதற்கிடையே சிவாஜி படத்தை பெங்களூரில் 13 தியேட்டர்களில் திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 13 தியேட்டர்களிலும் வியாழக்கிழமை முன்பதிவு செய்யப்படுகிறது.

Posted in ARR, AVM, Bangalore, Cauvery, Cinema, Fans, Films, Kannada, Karnataka, Kaviri, Movies, Mysore, Pondicherry, pondichery, Pondy, Pondycherry, Previews, Pudhucherry, Puducherry, Puthucehrry, Puthucherry, Puthuchery, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Rehman, release, River, Shankar, Shivaji, Shreya, Shriya, Sivaji, Sivaji Fans, Sivaji Story, Sivaji the Boss, Sreya, Sriya, State, Theaters, Theatres | 2 Comments »

Sivaji – The Boss: Theater Reports; Reservation Details; Fan Celebrations

Posted by Snapjudge மேல் ஜூன் 10, 2007

சிவாஜி டிக்கெட் முன்பதிவு: தியேட்டர்களில் அலை மோதிய கூட்டம்

சென்னை, ஜுன். 10-

உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரஜினி நடித்த “சிவாஜி” படம் வருகிற 15-ந்தேதி திரையிடப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார். ஏ.வி.எம். தயாரிப்பில் ஷங்கர் இயக்கியுள்ளதால் “சிவாஜி” படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஊர்களில் திரையிடப்படுகிறது. சிறிய ஊர்களில் கூட இரண்டு, மூன்று தியேட்டர்களில் ரிலீசாகிறது. சென்னை நகரிலும், புற நகரிலும் 30 தியேட்டர்களில் சிவாஜி படம் திரையிடப்படுகிறது.

சென்னை நகரில்

  • சத்யம்,
  • சாந்தம்,
  • ஆல்பட்,
  • தேவி,
  • மெலோடி அபிராமி,
  • அன்னை அபிராமி,
  • பாலஅபிராமி,
  • உதயம்,
  • சூரியன்,
  • மினி உதயம்,
  • ஏவி.எம்.ராஜேஸ்வரி,
  • கமலா,
  • பாரத்,
  • மகாராணி ஆகிய 15 தியேட்டர்களில் தினமும் 4 காட்சிகளாக திரை யிடப்படுகிறது.

இதே போல் புறநகர்ப் பகுதியில்

  • மாயாஜால்,
  • பிருந்தா,
  • ஈஞ்சம்பாக்கம் பிரார்த்தனா,
  • ஆராதான,
  • தாம்பரம் ஸ்ரீவித்யா,
  • குரோம்பேட்டை வெற்றி,
  • ராக்கேஷ்,
  • நங்கநல் லூர் வேலன்,
  • வெற்றிவேல்,
  • திருவான்மிïர் தியாகராஜா,
  • கணபதிராம்,
  • ரெட்ஹில்ஸ் ஸ்ரீலட்சுமி,
  • அம்பத்தூர் ராக்கி சினிமாஸ்,
  • முருகன்,
  • திருமுரு கன் ஆகிய 15 தியேட்டர்களிலும் ரிலீசாகிறது.

சிவாஜி படத்துக்கு தமிழ்நாடு முழுவதும் முன்பதிவு இன்று தொடங்கியது. இதையடுத்து சென்னை நகரில் உள்ள தியேட்டர்களில் முன்பதிவு செய்ய அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.

ஒவ்வொரு தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. அவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.

சத்யம் தியேட்டரில் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆயிரக் கணக்கில் முன் பதிவு செய்ய காத்து இருந்தனர். `சாப்ட்வேர்’ கம்பெனி ஊழியர்களும் வந்து இருந்தனர்.

உதயம் தியேட்டரில் தியேட் டருக்கு வெளியே ரோட்டிலும் ஏராளமான ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று இருந்தனர்.

அபிராமி காம்ப்ளக்சில் 3 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்படுவதால் அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.

அதிகாலை 3 மணிக்கே ரசிகர்கள் வந்து தியேட்டர் வாசல்களில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தனர். 4 மணிக்கு கூட்டம் மேலும் குவியத் தொடங்கியது. சாரை சாரையாக தொடர்ந்து ரசிகர் கள் குவியத் தொடங்கி னார்கள்.

தியேட்டர்களில் ரஜினி கட்-அவுட் வைக்கப்பட்டு கொடி- தோரணங்கள் கட்டப் பட்டு இருந்தன. தியேட்டர் கள் அனைத்தும் திருவிழாக் கோலம் பூண்டு இருந்தது. டிக் கெட் கொடுக்க ஆரம்பித்த தும் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.

சென்னை மாவட்ட ரஜினி மன்ற தலைவர் ஓம்சேகர் ரசிகர்களை ஒழுங்கு படுத்தி னார். பொதுமக்களுக்கு இடைïறு ஏற்படுத்தாமல் டிக்கெட் வாங்கிச் செல்லுமாறு கூறினார்.

கூட்டம் அதிகம் திரண்டு இருந்ததால் காலை 6 மணிக்கே முன்பதிவு தொடங்கியது. சில மணி நேரங்களிலேயே ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இதனால் முன்பதிவு செய்ய முடியாத ரசிகர்கள் ஏமாற்றம் அடைந் தனர்.

ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதை தொடர்ந்து அனைத்து தியேட்டர்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சிவாஜி முன்பதிவு பெண்கள் ஆர்வம்

சிவாஜி படத்துக்கு முன்பதிவு செய்ய மாணவிகளும், பெண்களும் அதிக ஆர்வத்துடன் வந்திருந்தனர். மற்ற தியேட்டர்களை விட சத்யம் தியேட்டரில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களுக்கு தனி `கிï’ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முன்பதிவு டிக்கெட் வாங்கியதும் மகிழ்ச்சியுடன் டிக்கெட்டை காண் பித்தபடி சென்றனர். ஊனமுற்ற ரசிகர்களும் தவழ்ந்து தவழ்ந்து வந்து கிïவில் நின்றனர்.

சத்யம் தியேட்டரில் டிக்கெட் கவுண்டரில் தொடங்கிய கூட்டம் தியேட்டரைச் சுற்றி வளையம் போல் வந்து அதே டிக்கெட் கவுண்டர் வரை நின்று இருந்தது. அங்கு கூட்டம் முண்டியடித்த தால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசாக தடியை சுழற்றினார்கள்.

Posted in Cinema, Film, Movies, Previews, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Reports, Shivaji, Shivaji the boss, Sivaji, Sivaji Fans, Sivaji Story, Sivaji the Boss, Theater, Theatre, Theatres | Leave a Comment »

AVM & Shankar’s ‘Sivaji The Boss’ – Rajni’s 100th Movie

Posted by Snapjudge மேல் மே 21, 2007

திரைக்கதிர்: ரஜினியின் 100 வது படம்!

மனோஜ் கிருஷ்ணா

ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதற்கு பல விஷயங்களைப் பயன்படுத்துவார்கள். ரஜினி படத்துக்கு அது தேவையே இல்லை. அவர் நடிக்கிறார் என்றவுடன் அதுவே செய்தியாகி, விளம்பரமாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பைக் கூட்டிவிடும். விளம்பரமே தேவைப்படாத ‘சிவாஜி’ படத்தின் விளம்பரத்துக்கும் ஒரு புதிய விஷயம் கிடைத்திருக்கிறது.

அது…

ரஜினிகாந்த் நடிக்கும் 100 வது தமிழ்ப் படம் என்பதுதான். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் என இதுவரை ரஜினி 173 படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் ‘சிவாஜி’ படம் ரஜினியின் 100 வது தமிழ்ப் படம் என்பது அவருடைய ரசிகர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தைத் தரும்.

பிலிம் நியூஸ் ஆனந்தன், இந்தத் தகவலைப் புள்ளி விவரத்தோடு ரஜினியிடம் கூறியபோது அவருக்கே இது புதிய விஷயமாகத் தோன்றியதாம். அதனால் ‘சிவாஜி’ பட விளம்பரத்தின்போது இந்தத் தகவலைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்திருக்கிறது ஏவி.எம்.நிறுவனம்.

Posted in 100, AVM, Cinema, Film News, Movie, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Sankar, Shankar, Shivaji, Shivaji the boss, Sivaji, Sivaji Fans, Sivaji Story, Sivaji the Boss | 1 Comment »

PMK Ramadas, Gemini Labs, AR Rehman – Why ‘Sivaji’ is delayed?

Posted by Snapjudge மேல் மே 8, 2007

ஜூன் மாதம்தான் ‘சிவாஜி’ ரிலீஸ்: சில எதிர்பார்ப்புகளும் எதிர்ப்புகளும்…?

ரஜினியின் ‘சிவாஜி’ படம் வெளிவருவதற்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும் எதிர்ப்புகளையும் உண்டாக்கியிருக்கிறது.

எதிர்பார்ப்புகள்:

* தமிழகத்தில் சிவாஜியை ரிலீஸ் செய்யும் உரிமையை ஜெமினி லேப் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. 65 கோடிக்குதான் படத்தை விற்பனை செய்வோம் என்று கூறி வந்த ஏ.வி.எம் நிறுவனம் 55 கோடிக்கு ஜெமினி லேப் நிறுவனத்திடம் விற்றுள்ளது

* மே 17}ல் ரிலீஸôகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவாஜி, ஜூன் மாதம் தான் திரைக்கு வருகிறாராம். இதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

காரணம் 1: ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இருவரும் நடிக்க, ஒரு காட்சி எடுத்து இணைக்கப்பட இருக்கிறது.

காரணம் 2: ஏ.ஆர். ரஹ்மான் படத்தின் பிண்ணனி இசைக்கு கால தாமதம் செய்கிறார்.

எதிர்ப்புகள்:

* படத்தின் டிக்கெட்டுகள் ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து வியாபாரம் செய்யப்பட்டது சட்டப்படி தவறு. தியேட்டர்களில் வைத்துதான் சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும். கல்யாண மண்டபத்தில் வைத்து விற்பனை செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தை நாடி பிரச்சினையை கிளப்ப ஒரு குழு தயராகி வருகிறதாம்.

* பாமக நிறுவனர் ராமதாஸ், தனது தொண்டர்களிடம் ரகசிய கட்டளை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி சிவாஜி படம் ரிலீஸôகும் தியேட்டர்களில் எங்கெங்கெல்லாம் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால், உடனே தனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளாராம்.

சிவாஜி என்றாலே போராட்டம்தான் போல…

Posted in Amitabh, Anbumani, ARR, Audio, AVM, Bachan, Chiranchivi, Chiranjeevi, Director, Fans, Gemini, Kollywood, May, music, PMK, Ragavendira, Ragavendra, Ragaventhra, Rahman, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Ramadas, Ramadoss, Rehman, Sankar, SC, Shankar, Shivaji, Shivaji the boss, Shreya, Shriya, Sirancheevi, Siranjeevi, Sivaji, Sivaji Fans, Sivaji Story, Sivaji the Boss, Sriya, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Telugu, Tollywood | 1 Comment »

“Sify gives wrong details on Rajni & Shankar with AR Rehman’s ‘Sivaji’ The Boss” – AVM

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

‘சிவாஜி’ படம் பற்றி வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை: ஏவி.எம்.சரவணன்

சென்னை, மார்ச். 13 ஏவி.எம்.நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படமான “சிவாஜி’ பற்றி வெளிவரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “சிவாஜி’ படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வருடம் துவங்கியது. படத்தைப் பற்றிய செய்திகளையோ, புகைப்படங்களையோ வெளியிடாமல் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.

ஆனாலும் படத்தைப் பற்றிய செய்திகளும், ரஜினிகாந்தின் வித்தியாசமான சில “கெட்-அப்’களும் அவ்வப்போது இன்டர்நெட் வாயிலாக வெளிவந்துகொண்டிருந்தன. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் “சிவாஜி’ படம் இத்தனை கோடிக்கு விற்பனை; அத்தனை கோடிக்கு விற்பனை என பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இதனால் படத்தின் உண்மையான வியாபார விஷயங்களைப் பற்றி எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

“சிவாஜி’ படத்தின் விற்பனை பற்றி இதுவரை வந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை. இத்தகவல்கள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, சிஃபி டாட் காம் என்ற இணையதளத்தில் படத்தைப் பற்றி வெளியான தவறான தகவல்களால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, கேரள உரிமையை ரூ.2.6 கோடிக்குத்தான் கொடுத்துள்ளோம். ஆனால் நாங்கள் மறுத்த பின்னரும் ரூ.3.1 கோடி என செய்தி வெளியாகிறது.

இதேபோல் ஆந்திர தியேட்டர் உரிமையை ரூ.8 கோடிக்கு விற்றுள்ளோம். ஆனால் ரூ.16 கோடி என செய்திகள் வெளியாகின்றன. இதனால் சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருக்கிறோம்.

ஓவர்சீஸ் உரிமையைப் பொருத்தவரை, இம்முறை வழக்கம்போல் ஒருவருக்கே கொடுப்பதாக இல்லை. தனித்தனியேதான் கொடுக்கவுள்ளோம்.

எங்களது வழக்கமான விநியோகஸ்தரான ஐங்கரன் கருணாமூர்த்திக்கு ஐரோப்பா, கனடா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் திரையரங்குகளில் திரையிடும் உரிமை, ஆடியோ, விடியோ மற்றும் டி.வி.டி. உரிமை இவற்றை மட்டும் கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதேபோல் மற்ற நாடுகளுக்கும், தமிழ்நாட்டுக்கும் அதற்குரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த வியாபார விஷயமும் முடிவாகவில்லை.

ஆனால் தவறாக வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினருக்கு நாங்கள் விளக்கம் அளிக்கவேண்டியுள்ளது. எனவே இனி உண்மைத் தகவல்களை மட்டும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

“சிவாஜி’ படம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக வந்துள்ளது. இயக்குநர் ஷங்கரும் அவருடைய குழுவினரும் படத்தை தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட முயற்சி எடுத்து வருகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted in Abroad, Aingaran, Andhra, Andhra Pradesh, AP, ARR, Audio, AVM, AVM Sarvanan, Ayngaran, Aynkaran, Canada, Distributor, DVD, Europe, Iyngaran, Iynkaran, Karunamoorthy, Karunamurthy, Kerala, Kolywood, Market, NRI, Overseas, Rahman, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rehman, Rumour, Sale, Sarvanan, Shankar, Shivaji, Shivaji the boss, Sify, Singapore, Sivaji, Sivaji Story, Sivaji the Boss, Sri lanka, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Pictures, Tamil Stars, Telugu, Tollywood, VCD, video | Leave a Comment »

‘Sivaji’ the boss – Audio Launch details

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

`சிவாஜி’ படம் மே 8-ல் ரிலீஸ்: பாடல் கேசட் அடுத்த மாதம் வெளியீடு

சென்னை, பிப். 20-

ரஜினியின் `சிவாஜி’ படம் மெகா பட்ஜெட்டில் தயாராகி யுள்ளது. படப்பிடிப்பு 2005 டிசம்பர் 13-ந்தேதி தொடங் கியது. இறுதி கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. அமெரிக்க இந்தியர்கள் பலர் ரஜினியுடன் நடித்தனர். படப் பிடிப்பு முடிந்துள்ளது. டப்பிங் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

சிவாஜி படம் தமிழ் புத் தாண்டு தினமான ஏப்ரல் 14-ல் ரிலீசாகும் என எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் மற்றும் பரீட்சை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் மார்ச் 13-ல் தொடங்கி ஏப்ரல் 28-ல் முடிகிறது. பள்ளி தேர்வுகளும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. அவை முடிந்த பிறகு `சிவாஜி’யை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

`சிவாஜி’ பாடல் கேசட் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்படுகிறது.

`சிவாஜி’ படம் அதிக தியேட்டர்களில் ரிலீசாகும் என்பதால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் போகலாம் என்ற தவிப்பு பட அதிபர்களுக்கு இருக்கிறது. எனவே சிவாஜி ரிலீசுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவோ அல்லது ரிலீசாகி சில மாதங் கள் கழித்தோ இதர படங்களை ரிலீஸ் செய்ய சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் திட்டமிட் டுள்ளனர்.

`சிவாஜி’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் ஒரே நாளில் ரிசீலாகிறது. இதற் காக 500 பிரிண்ட்கள் போடப் படுகின்றன.

மலையாள முன்னணி நடிகர்களின் படங்கள் `சிவாஜி’ யால் பாதிக்கும் என்பதால் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யும் அதே தேதியில் கேரளாவில் ரிலீஸ் செய்யக்கூடாது என்று அங்குள்ள விநியோகஸ்தர் சங்கங்கள் வற்புறுத்தியுள்ளன. கேரளாவில் `சிவாஜி’ படம் ரூ. 3.10 கோடிக்கு விற் பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாநில சூப்பர் ஸ்டார் களான மம்முட்டி, மோகன் லால், படங்கள் விலைபோகும் தொகையை விட இது அதிகம்.

Posted in AR Rehman, ARR, Audio, Malayalam, music, Rahman, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rehman, Shankar, Shivaji, Shivaji the boss, Sivaji, Sivaji the Boss, Songs, Tamil Films, Tamil Movies, Telugu | Leave a Comment »

Rajini – ‘I thought Vivek was Brahmin!’

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2006

அறிவுக்கும் ஜாதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: பாடல் கேசட் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற “சொல்லி அடிப்பேன்‘ பட பாடல் கேசட் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) இசையமைப்பாளர் தேவா, இயக்குநர்கள் ஷங்கர், கே.பாலசந்தர், ரஜினிகாந்த், நடிகர் விவேக், பட இயக்குநர் ராம்கி ராமகிருஷ்ணன், நடிகை சாயாசிங், தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த்

சென்னை, டிச. 3: ஒரு மனிதனுடைய அறிவுத் திறனுக்கும் அவருடைய ஜாதிக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

நகைச்சுவை நடிகர் விவேக் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் படம் “சொல்லி அடிப்பேன்’. இந்தப் படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் தலைமையேற்ற இவ்விழாவில் படப் பாடலின் முதல் கேசட்டை இயக்குநர் கே.பாலசந்தர் வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். அதேபோல் முதல் ஆடியோ சி.டி.யை ரஜினிகாந்த் வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:

நான் “சிவாஜி’ படம் ரிலீஸôன பிறகுதான் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் விவேக் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனால் இவ்விழாவில் கலந்துகொண்டேன்.

ஜாதியும், அறிவுத்திறனும்:

விவேக் பெரிய அறிவாளி. அவருக்குத் தெரியாத விஷயங்களே இல்லை. அனைத்துத் துறைகளைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார். எனக்கு ஜாதி மீது என்றைக்கும் நம்பிக்கை கிடையாது. பணம், புகழ் இருந்தால்தான் சொந்த ஜாதியினர்கூட மதிப்பார்கள். அதேபோல இந்த இந்த ஜாதிக்காரர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற ஒரு தவறான நம்பிக்கை நிலவுகிறது. அது தவறு.

விவேக்கின் அறிவுத்திறன், செயல்பாடுகளைப் பார்த்து அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்றுதான் நினைத்தேன். பிறகுதான் அவர் வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. அதனால் ஒருவருடைய அறிவுத் திறனுக்கும் அவர் சார்ந்திருக்கும் ஜாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

புகழ் ஒரு சுமை:

புகழ் என்பது நம்முடைய தலையில் வைக்கப்பட்டிருக்கும் 1000 கிலோ எடையுள்ள பாறை போன்றது. அதைச் சரியாக பேலன்ஸ் செய்தால்தான் நீடிக்கும். இல்லாவிட்டால் கீழே சரிந்து நமக்கு பாதிப்பை உண்டாக்கி விடும். அதை விவேக் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் காமெடியனாகவும் நடித்தால்தான் எங்கள் வண்டியும் ஓடும். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

விழாவில் இயக்குநர்கள் கே.பாலசந்தர், ஷங்கர், தரணி, ராம்கி ராமகிருஷ்ணன், நடிகர் தனுஷ், நடிகை சாயாசிங், இசையமைப்பாளர் தேவா, தயாரிப்பாளர்கள் கிருஷ்ணகாந்த், கேயார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

From Maalaimalar.com:

விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

டைரக்டர் பாலசந்தர் படத்தில் நடித்தபோது பயந்தேன். ஷாட் ஓ.கே. ஆகுமா என்கிற தவிப்பு எனக்குள் இருக்கும். அவர் படங்களில் நடித்து 30 வருடங்கள் ஆகி விட்டன. இப்போது சிவாஜியில் நடிக்கும்போதும் அதே பயம் இருக்கிறது. ஷாட் ஓ.கே. ஆகுமா, ஷங்கர் ஏத்துக்கிட்டாரா என்றெல்லாம் யோசிக்கிறேன்.

இதில் விவேக்கும் என்னோடு நடிக்கிறார். சிவாஜி ரிலீசுக்கு பிறகுதான் விழாக்களில் கலந்துக்கணும் என்று முடிவு எடுத்திருந்தேன். விவேக் இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தார். சில விஷயங்களுக்கு விதிவிலக்கு உண்டு. இந்த விழாவையும் விதிவிலக்கா கருதி கலந்துக்க சம்மதித்தேன்.

`வீரா‘ படத்தில் விவேக் என்னோடு நடித்தார். அப்ப அவர் சின்ன பையன் மாதிரி இருந்தார். வசனம் நல்லா பேசினார். திறமைசாலி. அதன் பிறகு இப்போது `சிவாஜி’யில் முழு படத்திலும் விவேக்குடன் நடிக்கிறேன். எனக்கு ஷாட் முடிந்ததும் விவேக்குக்கிட்டே போய் உட்கார்ந்து பேசிக்கிட்டே இருப்பேன். அவர் மிகப்பெரிய அறிவாளி. விஞ்ஞானம், கம்ப்ïட்டர், வரலாறு, புவியியல் என்று எல்லாவற்றையும் தெரிஞ்சி வச்சிருக்கார்.

எனக்கு ஜாதி மீது நம்பிக்கை கிடையாது. பணம், புகழ் இருந்தா தான் மதிப்பாëங்க. இல்லாட்டி ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடுவாங்க.

இந்தந்த ஜாதிக்காரங்க இப்படி இடிப்பத்தான் இருப்பாங்கன்னும் சொல்லி வச்சிருக்காங்க. தலித்துகள் இப்படித்தான் இருப்பார் கள். ரெட்டியார்கள், பிராம ணர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. பாலசந்தர் ஒரு சமூகத்தை சேர்ந்தவர். எல்லார்கிட்டேயும் நல்லா பழகுவார்.

விவேக்குடன் சூட்டிங் போகும்போது அறிவாளியா பேசுவார். லைப்ரரி, புத்தகங்கள் என்றுதான் இருப்பார். சிந்தனையாளர். நடை, உடை, பாவனைகள் பிராமணர் மாதிரி தெரிந்தது. அதன் பிறகுதான் தேவர் என்று புரிந்தது.

புகழின் உச்சியில் இருந்தாலும் ஒரே மாதிரி இருக்கணும். புகழ் ஆயிரம் கிலோ பாறை மாதிரி. அதை `பேலன்ஸ்’ ஆக வச்சிக்கணும். கொஞ்சம் ஆடினால் காலில் விழுந்து விடும். விவேக் கதாநாயகனாக நடித்த இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் டைரக்டர் ஷங்கர் பேசியதாவது:-

விவேக்கை வைத்து காமெடி படம் எடுக்க நீண்ட நான் முயன்றேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது சிவாஜியில் முழு நீள காமெடியனாக வருகிறார். காமெடியில் அவர் கலக்கி உள்ளார். அவரோடு இன் னொருத்தரும் காமெடியில் கலக்கி உள்ளார்.

அவர்தான் ரஜினி. சினிமாவுக்கு காமெடி முக்கியம். அது இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்து விடும்.

டைரக்டர் பாலசந்தர் பேசியதாவது:-

விவேக்கை முக்கிய கேரக்டராக வைத்து படமெடுக்க திட்டமிட்டு இருந்தேன். அதற்குள் `சொல்லி அடிப்பேன்’ படத்தில் கதாநாயகனாகி விட்டார். ஹீரோ ஆனதால் காலரை தூக்கி விட்டுக் கொண்டு போகக்கூடாது. எல்லாவற்றையும் சமமாக பாவிக்க வேண்டும். விவேக் சிறந்த அறிவாளி.

இவ்வாறு அவர் பேசினார்.

Posted in Assumption, Balachander, Caste, Chaaya Singh, KB, Quote, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Shivaji, Sivaji, Sivaji the Boss, Solli Adippen, Speech, Superstar, Talk, Veera, Vivek | 12 Comments »

Sivaji movie shooting in Forest gets reprimand – Rajni & Shankar fined

Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2006

சிவாஜி படப்பிடிப்பில் பரபரப்பு: வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து படப்பிடிப்பு நடத்தியதாக வழக்கு

சென்னை, நவ. 23: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் சிவாஜி படப்பிடிப்பின் போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறைக்கு சொந்தமான பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து படப்பிடிப்பு நடத்தியதாக படக்குழுவினர் மீது வழக்கு தொடரப்பட்டது.

திருப்போரூர் அருகே உள்ளது ஆழத்தூர். இங்கு சிப்காட் தொழில்பேட்டை அமைந்துள்ளது. மேலும், வனத்துறைக்கு சொந்தமான பகுதியும் இங்கு உள்ளது.

சிவாஜி படப்பிடிப்பு:இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் சிவாஜி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான படப்பிடிப்பு திருப்போரூர் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அதிகாரி லீமா தோஷி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். வனத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்துவதாக படக்குழுவினரிடம் தெரிவித்தனர்.

ஆனால், நெடுஞ்சாலைத் துறையிடம் உரிய அனுமதி பெற்று இருப்பதாக படக்குழுவினர் பதில் அளித்தனர். இதை ஏற்காத வனத்துறை அதிகாரிகள்,””நீங்கள் படப்படிப்பு நடத்திய இடம் வனத்துறைக்கு சொந்தமானது,” எனத் தெரிவித்தனர்.

உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதற்காக படக்குழுவினருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் நடிகர் ரஜினியும், இயக்குநர் சங்கரும் இருந்தனர்.

Posted in Location, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Shankar, Shivaji, Shooting, Sivaji, Sivaji the Boss, Tamil, Tamil Cinema, Tamil Film, Tamil Movies | Leave a Comment »