லெபனான் தொழில் துறை அமைச்சர் சுட்டுக் கொலை
லெபனான் தொழில்துறை அமைச்சர், பியர் கமாயெல், பெய்ரூட் அருகே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நகரின் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு கிறித்தவமக்கள் வாழும் பகுதியில் அவரது வாகனத்தொடரணி சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிதாரிகள் சுட்டார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.
அமைச்சர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு அவர் இறந்தார். தாக்கியவர்கள் அடையாளம் இன்னும் தெரியவில்லை. முன்னாள் லெபனான் அதிபர், அமின் கமாயெல் அவர்களின் மகனான, பியர் கமாயெல், ஒருமுன்னோடி சிரியா-எதிர்ப்பு கிறித்தவ அரசியல்வாதி ஆவார்.
முன்னர் படுகொலை செய்யப்பட்ட லெபனான் பிரதமர், ரபீக் ஹரிரியின் மகன் சிரியாதான் தனது தந்தையின் படுகொலைக்கும், இந்த கமாயெல்லின் படுகொலைக்கும் பின்னணியில் இருந்திருக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். சிரியாவிடமிருந்து உடனடியாக எந்த ஒரு கருத்தும் வெளிவரவில்லை.
சிரியாவிற்கு ஆதரவான ஆறு அமைச்சர்கள் லெபனான் அரசிலிருந்து சமீபத்தில் பதவி விலகியுள்ள ஒரு நெருக்கடியான கட்டத்தில் கமாயெல்லின் கொலை வருகிறது.
இராக், சிரியா இடையே மீண்டும் ராஜதந்திர உறவுகள்
இராக்கும் சிரியாவும் தங்களுக்கு இடையேயான ராஜீய உறவுகளை இருபது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. சதாம் ஹூசேனின் ஆட்சிக் காலத்தின் துவக்கத்தில் இந்த உறவுகள் முறிந்தன.
![]() |
![]() |
சிரியா, இராக் இடையில் உடன்பாடு |
பாக்தாத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிரியாவின் வெளிநாட்டு அமைச்சர் இந்த முடிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இராக்கில் நடைபெறும் வன்செயல்களைத் தடுக்க சிரியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.
சிரியா, இராக் அரசுக்கு உதவ தனது உறுதிப்பாட்டினை காண்பிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் புஷ் அவர்களின் நிர்வாகம் கூறியுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் எல்லைப் பகுதிகள் மூலம் இராக்குக்குள் ஊடுருவதை தடுக்க சிரியா முன்வர வேண்டுமெனவும் அமெரிக்கா கோரியுள்ளது.
இராக்கில் அமெரிக்காவின் ஈடுபாடு எதிர்காலத்தில் குறையக் கூடிய சூழலுக்கு இராக்கும், சிரியாவும் தங்களைத் தயார் படுத்திக் கொள்வதாக பி பி சியின் ராஜாங்க விவகார செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இராக்குக்கும் இரானுக்கும் இடையேயான ஒரு உச்சிமாநாடு இந்த வார இறுதி நாட்களில் நடைபெறவுள்ளது. இதற்கு சிரியா அழைக்கப்பட்டுள்ளது.