Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Shells’ Category

Longest-Lived Animal Found — Clam, 405

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

நானூறு வயதான சிப்பி

மிங் எனப் பெயரிடப்பட்டுள்ள சிப்பி
மிங் எனப் பெயரிடப்பட்டுள்ள சிப்பி

சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டின் வடக்கு அத்திலாந்திக் பெருங் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒருவகையான சிப்பி, சுமார் 405 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

உலக வரலாற்றில், மிக அதிக நாள் உயிர் வாழ்ந்த உயிரினமாக இந்த கடற் சிப்பி கருதப்படுகிறது. இத்தனை நாள் இந்த சிப்பி உயிர்வாழ்ந்தது எப்படி என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள்.

இந்த ஆராய்ச்சியின் பயனாக மனிதன் உள்ளிட்ட மற்ற உயிரினங்களின் வாழ்நாளை நீட்டிப்பதற்கு வழி வகைகளை கண்டுபிடிக்க முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

இந்த கடற்சிப்பிக்கு விஞ்ஞானிகள் ‘மிங்’ பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது, 1602 ஆம் ஆண்டு இந்த சிப்பி கடலில் பிறந்த போது, சீனாவில் ஆட்சியில் இருந்த அரச பரம்பரையின் பெயரை விஞ்ஞானிகள் இந்த சிப்பிக்கு சூட்டியிருக்கிறார்கள்.

இந்த சிப்பி பிறந்தபோது இங்கிலாந்தில் முதலாம் எலிசபெத் பேரரசி ஆட்சி செய்துகொண்டிருந்தார். இலக்கியவாதியான ஷேக்ஸ்பியர் தனது படைப்புகளை எழுதிக்கொண்டிருந்தார். இந்த சிப்பி பிறந்து 40 ஆண்டுகள் கழித்து தான் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் பிறந்தார்.

இப்படி உலக வரலாற்றின் பல முக்கிய நிகழ்வுகளை தனது வாழ்நாளில் கண்ட இந்த அதிசய சிப்பி, சுமார் எட்டரை சென்டிமீட்டர் நீளமுள்ள ஓட்டிற்குள் முடங்கியிருந்தது. இந்த சின்னஞ்சிறிய ஓட்டில் இருக்கும் வளையங்களை வைத்து இதன் வயது கணக்கிடப்பட்டிருப்பதாக கூறுகிறார் கடலியல் பேராசிரியர் கிரிஸ் ரிச்சர்ட்சன்.

சிப்பியின் ஓட்டின் மேலிருக்கும் இந்த வருடாந்த வளையங்கள், இதன் வளர்ச்சி பற்றியும், அதற்கு கடலில் கிடைத்த உணவு, கடல் சார் தட்ப வெப்பம் ஆகியவை எப்படி இதன் வளர்ச்சியை பாதித்தது என்பது பற்றியும் அறிவதற்கு உதவியாக இருக்கிறது.

கடலின் கடந்த கால தட்ப வெப்பத்தை மட்டுமல்லாமல், விலங்குகள் நீண்ட காலம் உயிர் வாழ்வது குறித்த ஆராய்ச்சிக்கும் இந்த சிப்பிகள் பயன்படும் என்கிறார் ரிச்சர்ட்சன்.

405 ஆண்டுகள் ஆழ்கடலில் அமைதியாக உயிர்வாழ்ந்த இந்த கடற்சிப்பி, கடந்த வாரம் கடலை விட்டு வெளியில் எடுக்கப்பட்டு ஆராய்ச்சியாளர்களின் விஞ்ஞானக்கூடத்தில் உயிர்விட்டது.

Posted in 405, ageing, Animal, Arctica islandica, Atlantic, Clam, Discover, Discovery, Eat, Fish, Food, Iceland, Live, Longest, Longevity, Ming, mollusk, News, Ocean, quahog, quahog clam, Research, Science, Scientific, Sea, seabed, Seafood, Shells, Tech, Technology, Water | Leave a Comment »

Conch, shell Collections from the seashore – Hobbyist

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2007

காலத்தால் மறைந்து வரும் கடல்சார் அறிவு களஞ்சியங்கள்

வி. கிருஷ்ணமூர்த்தி

இந்திய கடலோரப் பகுதியில் அதிக அளவில் கிடைக்கும் தாவரஉண்ணி வகை சங்குகளில் சில.

சென்னை, டிச. 18: கடல்சார் உயிரினங்கள் குறித்த அறிவுக் களஞ்சியமாக கருதப்படும் சங்குகளைச் சேகரிக்கும் பழக்கம் தற்போது வெகுவாகக் குறைந்து வருகிறது.

பள்ளி மாணவர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை பல்வேறு தரப்பினரிடமும் பரவி இருந்த இப்பழக்கம் தற்போது மறைந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக இதில் ஈடுபட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் குருசாமி.

சென்னையைச் சேர்ந்த இவர் தனது 14-வது வயதில் தொடங்கி இன்றுவரை சுமார் 200-க்கும் அதிகமான வகை வகையான சங்குகளைச் சேகரித்து வைத்துள்ளார்.

மலேசியா, மாலத்தீவுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களும் தங்களுக்கு கிடைக்கும் அரிய வகை சங்குகளை தமக்கு அனுப்பி வைத்து உதவினார்கள் என்றும் அவர் கூறினார்.

கடல் சார்ந்த பகுதிகளில் உயிரினங்கள் குறித்த ஆய்வு தொடங்கியது முதல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சங்கு மற்றும் கிளிஞ்சல்களை சேகரிக்கும் பழக்கம் உருவானது.

தொடக்கத்தில் ஆராய்ச்சியாளர்களிடம் மட்டும் இருந்த இப் பழக்கம் பின்னர் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடமும் பரவியது.

சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இதற்காக ஏற்படுத்தப்பட்ட குழுக்கள் தற்போது செயல்படாத நிலையில் உள்ளன.

ஆயிரம் ஆயிரம் வகைகள்: கடற்கரை மணலில் காலாற நடக்கும் போது நமது கால்களின் இடுக்குகளில் சிக்கும் சிறிய கிளிஞ்சல்களை சாதாரணமாக நினைத்துவிட முடியாது.

இவைகளில் தாவர உண்ணி மற்றும் மாமிச உண்ணி என உண்பதில் தொடங்கி அதன் அமைப்பு, செயல்பாடுகள் அடிப்படையில் சங்குகள் பல்வேறு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

  • லாம்பிஸ்,
  • ஒலிமா,
  • டர்புனில்லா,
  • டிபியா குர்டா,
  • சைபேர் டிக்ரிஸ்,
  • சைபேர் மாரிடியஸ்,
  • பாலியும்,
  • டோனா,
  • கானூஸ்,
  • பிபிலெக்ஸ்,
  • புர்ஷா,
  • புசிகான்,
  • ஃபாஸியோலாரியா,
  • அக்கர் உள்பட பல ஆயிரம் வகை சங்குகள் மற்றும் கிளிஞல்கள் இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் கிடைக்கின்றன.

இவற்றில் சில வகைகள் மட்டும் ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மற்ற அனைத்து வகைகளும் ஆழம் குறைவான கடலோரப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன.

இவற்றைப் பிடித்து இதில் உள்ள பூச்சியைப் கொன்று பின்னர் அமிலத்தால் சுத்தம் செய்வது மிக கடினமானப் பணியாக இருப்பதால் ஆர்வத்துடன் வரும் பலரும் பாதியிலேயே திரும்பி விடுகின்றனர்.

அழிவின் விளிம்பில் சங்குகள்: சங்குகள் மற்றும் கிளிஞ்சல்களைப் போலவே சங்குகளின் அடிப்படையான நத்தை உள்ளிட்ட கடல்சார் உயிரிகளும் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன.

அனல் மின் நிலையங்களில் இருந்து அதிக வெப்பத்துடன் வெளியேற்றப்படும் நீர், கடலை ஆழப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களாலும் இவ்வகை உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நேச்சர் டிரஸ்ட் அமைப்பினர் தெரிவித்தனர்.

தமிழகத்தில் அரியவகை சங்குகள் தொடர்பான தகவல்களை மக்களிடம் பரப்புவதற்காக அருங்காட்சியகம் அமைப்பது உள்ளிட்ட உதவிகளை அரசு செய்ய வேண்டும் என்றும் இந்த அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலம்புரி சங்கு வாங்கும்போது…

ஆயிரக்கணக்கான வகைகளில் சங்குகள் கிடைத்தாலும் இவற்றைச் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளவர்களில் பலருக்கும் வலம்புரிச் சங்கு கிடைக்குமா என்ற ஆவல் நிச்சயம் இருக்கும்.

அந்த அளவுக்கு மிக அரிய வகையான வலம்புரிச் சங்கு லட்சத்தில் ஒன்றாகத்தான் எப்போதாவதுதான் உருவாகும்.

கடிகாரச் சுற்றுக்கு எதிர் திசையில் உடற்சுற்று அமைப்புடன் இருக்கும் டர்பிநெல்லா ஃபைரம் வகை சங்குகளே புனிதம் நிறைந்த வலம்புரிச் சங்குகளாகக் கருதப்படுகின்றன.

ஆனால், இது குறித்த விழிப்புணர்வு இல்லாமையைப் பயன்படுத்தி காசுபார்க்க நினைக்கும் வணிகர்கள் கடிகாரச்சுற்றுக்கு இணையாக இருக்கும் உடல் அமைப்பை பெற்றிருக்கும் சாதாரண வகை சங்குகளைக் தலைகீழாக வைத்து வலம்புரிச் சங்குகள் என விற்று வருவதாக பரவலாக புகார் கூறப்படுகின்றன.

இதற்கான தேடுதல் வேட்டையால் பல அரிய வகை சங்குகள் அழிக்கப்படுவதாக “நேச்சர் டிரஸ்ட்‘ அமைப்பினர் புகார் தெரிவித்தனர்.

Posted in Collector, conch-shell, cornet, Hobby, Hobbyist, Nature Trust, Sangu, Sanku, Sea, Shells, Valamburi Sangu, Valamburi Sanku, Valampuri Sangu | 2 Comments »