பஞ்சாப் சட்டசபை தேர்தல்: நடிகர்-நடிகைகளுடன் களம் இறங்கும் பா.ஜனதா
சண்டிகார், ஜன.21-
பஞ்சாப் மாநில சட்ட சபைக்கு வருகிற பிப்ரவரி மாதம் 13-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. வருகிற 25-ந் தேதி மனுதாக்கல் முடிகிறது. 27-ந் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ்பெற கடைசி நாள்.
அங்கு மனு தாக்கல் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ்-பாரதீய ஜனதா அணிகளிடையே கடும் மோதல் நிலவுகிறது. பாரதீய ஜனதாவுடன் சிரோன் மணி அகாலிதளம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
சிரோன் மணி அகாலிதளம் கட்சி தான் போட்டியிடும் 94 தொகுதிகளுக்கு வேட் பாளர்களை அறிவித்துள்ளது. பாரதீய ஜனதாவிடம் 15 வேட் பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆளும் காங்கிரஸ் கட்சி பலத்த திட்டங்களுடன் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங் தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் 3 கட்ட சுற்றுப் பயணத்தை தொடங்கி யுள்ளார்.
சென்ற முறை காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டி யிட்ட இந்திய கம்ïனிஸ்டு கட்சி இப்போது தனித்து போட்டியிடுகிறது.
காங்கிரஸ் ஆட்சி மீது கூறப்பட்ட ஊழல் குற்றச் சாட்டுகளை முன்வைத்து பிரசாரம் செய்ய பாரதீய ஜனதா திட்டமிட்டுள்ளது.
மேலும் பிரசாரத்திற்காக நட்சத்திர பட்டாளத்தையும் களம் இறக்குகிறது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரும் இந்திப்பட உலகின் முன்னாள் சூப்பர் ஸ்டாருமான தர்மேந்திரா, அவரது மனைவி நடிகை ஹேமமாலினி, பிரபல நடிகர்கள் வினோத்கன்னா, சத்ருகன் சின்கா ஆகியோர் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதேபோல் காங்கிரஸ் கட்சி ராஜேஷ்கன்னா, கோவிந்தா, ஒம்புரி உள்ளிட்ட நடிகர்-நடிகைகளை களம் குதிக்க திட்டமிட்டு உள்ளது.